செவ்வாய், மே 31, 2022

பக்தியில் அமெரிக்காவும் இந்தியாவும்

 பக்தியில் அமெரிக்காவும் இந்தியாவும்

(இன்று கிழமை திங்கள்-7)

அமெரிக்காவில் 49ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)

பலமுறை நான் அமெரிக்கா வந்திருக்கிறேன்.  பல கோயில்களுக்குச் சென்று இருக்கிறேன்.  ஆனால் கோயில்களைப் பற்றி அதிகம் எழுத முடியவில்லை.  அதற்குக் காரணங்கள் பல.  முக்கியமானது நேரமின்மை. அதாவது அந்தக் கோயில்களை ஓரளவுக்காவது முழுமையாக சுற்றிப்பார்த்து, அங்கு இருக்கும் சிற்பங்களையும் மற்ற சிறப்புகளையும் புரிந்துகொண்டு, ஐயம் இருப்பின் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித் தெரிந்துகொண்டு, சரியான வெளிச்சத்தில் தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அதன் பிறகல்லவா எழுதவேண்டும்? அதற்கான நேரம் இல்லாமலே போகிறது.

உள்ளூர்க் கோயில்களே யானாலும், முன்கூட்டியே நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டு போக முடிவதில்லை. காரணம் நம் பிள்ளைகள், பெண்களின் ஓய்வுநேரத்தையும், பேரக் குழந்தைகளின் உணவு மற்றும் உறங்கும்  நேரம், விளையாட்டு மற்றும் வீட்டுப்பாட நேரம், குறிப்பாக அவர்களின் உடல்நலம்  ஆகியவற்றையும் பொறுத்தே நமது பயணங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். (இந்தியாவிலும் இதே போன்ற தளைகள் உண்டு).  ஆகவே கிடைக்கின்ற சிறிதளவு நேரத்தில் தெய்வ தரிசனமே முக்கியத்துவம் பெறுகிறது. அது பெரும்பாலும் இரவு நேரமாகவே இருப்பதால் நல்ல புகைப்படங்களும் வாய்ப்பதில்லை.

இன்னொரு அயர்ச்சி யூட்டும் விஷயம், பெரும்பாலான கோயில்களுக்கு தனிப்பட்ட இணையதளம் இருக்கிறது. அதில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள செய்திகளில், வரலாற்றில், புகைப்படங்களில் இல்லாத ஒன்றையா நாம் புதிதாகச் சொல்லிவிடப் போகிறோம் என்று மனம் சமாளித்துக் கொள்கிறது.

ஆகவே இன்றைய பதிவில் பக்தி சம்பந்தப்பட்ட சில அனுபவங்களைத்தான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

அண்மையில் தமிழ் இந்துவில் படித்த இந்தச் செய்திதான் என்னை இதற்குத் தூண்டிவிட்டது:

திண்டுக்கல்லில் திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘தமிழகத்தில் தேவையின்றி கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசுவாரானால் அவரை எப்படி அடக்க வேண்டும் என திமுக தொண்டனுக்குத் தெரியும்.

1969-ல் அண்ணா மறைந்தபோது நெய்வேலியில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி தனக்கே உரிய கிண்டலான பாணியில் பேசினார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கிருபானந்த வாரியாருக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அண்ணாவை பற்றி பேசிய கிருபானந்த வாரியாருக்கு என்ன கதி ஏற்பட்டதோ, கருணாநிதியை பற்றி கேவலமாக பேசினாலும் அதே கதிதான் ஏற்படும். பழைய திமுகக்காரன் வந்துவிடுவான் என்பதை எச்சரிக்கையாக அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எங்குமே கூட்டம் பேசமுடியாது’ என பேசினார். Last Updated : 19 May, 2022 07:31 AM)

அப்போது நான் கல்லூரி மாணவன். நெய்வேலி நிகழ்ச்சியில் திருமுருக கிருபானந்த வாரியார் 'விதி வலியது' என்றும் கருத்தை விளக்கும் விதமாக, 'மில்லர் வந்தாலும் மரணத்தை நிறுத்த முடியாது' என்று பேசியதாகப் பத்திரிக்கைகள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன.

படம்: நன்றி -இணையம்

1967இல் தமிழ்நாட்டில் முதல்முறையாகப் பதவியேற்ற திமுக அரசின் முதல்வராக இருந்த ‘காஞ்சிபுரம் நடராச முதலியார் அண்ணாதுரை’ என்னும் அறிஞர் அண்ணா அவர்கள், இரண்டு ஆண்டுகள் கூடப் பதவியில் இருக்க இயலாதபடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969 பிப்ரவர் 3ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இறுதி நாட்களில் மில்லர் என்ற வெளிநாட்டு மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை யளித்தும் பலனில்லாமல் போனது.

தன் சொல்லாற்றலாலும், நாடகங்கள், திரைப்படங்கள், இதழ்ப்பணி ஆகியவற்றாலும் தமிழ் மொழிக்கு அழகு சேர்த்தவர் அறிஞர் அண்ணா. அதனால் தான் 'எந்தச் சுயமரியாதைக்காரனும் ஏற முடியாத மேடைகளிலும் அவருக்கு இடம் கிடைத்தது' என்று கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கை  வரலாறான 'வனவாச'த்தில் கூறுகிறார். ‘பட்டுத் துண்டைத்  தலையில் போர்த்திவிட்டு தான் மோதிரக் கையால் குட்டுவார் அண்ணா’ என்று எங்கள் தமிழாசிரியர் அலிப்பூர் ரஹீம் (மேல்விஷாரம் - அப்துல் ஹக்கீம் கல்லூரி- 1967-70 பிஎஸ்சி  வகுப்பு) கூறுவதுண்டு. அந்த அளவுக்கு மக்களில் ஒருசாராரின் மனதில் நிறைந்தவராக இருந்தார் அண்ணா. அவருடைய மரணத்தின்போது சென்னையே மக்கள் கடலால் குலுங்கிய காட்சி கின்னஸ் புத்தகத்திலும்  பதிவானதாகக் கூறுவார்கள்.

அத்தகைய சூழ்நிலையில் அண்ணாவைப் போன்றே சொல்வன்மையும், அரசியல்வாதிகளிடம் இல்லாத ஒழுக்கமும் உண்மைத்தன்மையும் கொண்டிருந்த வாரியார் அவர்கள் எந்த உள்நோக்கமும் இல்லாமல், பொதுமக்கள் அனைவருக்கும் பழக்கமான ஒரு ஆன்மீகக் கருத்தின் விளக்கமாகச் சொல்லிய வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு அவர்மீது வன்முறையைத் தூண்டினார்கள்.

பொதுவாக, அரசியல்வாதிகளிடம் ஒரு உத்தி உண்டு. தங்களைப் பற்றிய ஏதேனும் ஒரு எதிர்மறையான கருத்து மக்கள் மத்தியில் உருவாகிவிட்டால், உடனே மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு அதே போன்ற இன்னொரு கருத்தை மக்கள் மன்றத்தில் புழங்கவிடுவார்கள். இது ஏற்படுத்தும் சலனத்தில் அது ஏற்படுத்திய சலனம் மறைந்துவிடும்.

அண்ணாவுக்குப் பிறகு யார் முதல்வராவது என்று அப்போது பெருத்த சர்ச்சை எழுந்தது. பொதுவாகவே திமுகவில் அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இரா நெடுஞ்செழியன் தான் இருந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனபதும் ஒரு காரணம். மு கருணாநிதி அப்போது நான்காம் அல்லது ஐந்தாம் நிலையில்தான் இருந்தார் என்பார்கள். ஆனால் நெடுஞ்செழியனை விட, கருணாநிதிக்கு முன்னேறவேண்டும் என்ற தணியாத ஆசை அதிகம் இருந்தது. திரைப்படத் துறையில் அறிஞர் அண்ணாவை மிக எளிதாகத் தன்னால் வென்றுவிட முடிந்த பெருமிதமும் இருந்தது. எனவே கருணாநிதியிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தார் அண்ணா என்பார்கள்.

முதல்வர் பதவிக்கு நெடுஞ்செழியனுக்கு ஆதரவு கொடுத்தார் பெரியார். ஆனால் அவரது குரலுக்கு அக்கட்சி எம்எல்ஏக்கள் எந்த அளவு மரியாதையைக்  கொடுப்பார்கள் என்று தெரியாமல் இருந்தது. அப்போது கட்சியின் மக்கள் முகமாக இருந்தவர், புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களே. பத்திரிகை துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த சி பா ஆதித்தனார் அவர்களும் அரசியலில் தனக்கொரு பதவியைத் தேடிக்கொண்டிருந்த நேரம் அது. இந்த இருவரையும் வசப்படுத்திக்கொண்டதால் கருணாநிதியால் முதலமைச்சர் பதவியை எளிதாக அடைய  முடிந்தது. (பதவிக்கு வந்தபிறகு அதற்கேற்பத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் கலைஞர் என்பதில் இரண்டு கருத்து இல்லை).      

இதனால் வேதனை யடைந்தவர்கள், அறிஞர் அண்ணாவுக்கு  வேண்டுமென்றே சரியான சிகிச்சை  அளிக்காமல் அவரது மரணம் விரைவுபடுத்தப்பட்டு விட்டதோ என்ற ஐயத்தை  எழுப்பியதாக அப்போது பேசப்பட்டது. அந்த விஷயம் பெரிதாகக் கிளம்பிச்  சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் வாரியார் விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, ஆன்மீகவாதியான வாரியார் மீது கல்லெறிந்ததும், அவருடைய நிகழ்ச்சிகள் நடைபெறாமல் செய்ததும் நடைபெற்றிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

மற்றவர்கள் ஆன்மிகத்தைப் புராணங்கள் வழியாகப் பரப்பிக்கொண்டிருந்தபோது, வாரியார் அவர்கள் அதை இனிய தமிழால் பரப்பிக் கொண்டிருந்தார். ஆகவே அவர்மீதான தாக்குதல் மக்கள் மனதில் முள்ளாகத் தைத்ததில் வியப்பில்லை. சரியான நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்வந்து பிரச்சினையின் சூட்டைத் தணித்தார். ‘பொன்மனச் செம்மல்’ என்று அவருக்கு வாரியார் பட்டம் வழங்கியது நியாயமானதே.

நேர மேலாண்மை என்பது வாரியார் அவர்களின் சிறப்பான பண்பாகும். 20 நிமிடம் என்றாலும் சரி, நாற்பது நிமிடம் என்றாலும் சரி, அதற்கு அரை நிமிடம் முன்பாகவே ‘உருவாய், அருவாய், உளதாய், இலதாய் …’ என்று தொடங்கி, ‘....அருள்வாய் குகனே’ என்ற கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலோடு (51) தன்  உரையை அவர் முடித்துவிடுவார். கூட்டத்தின் நடுவே குழந்தைகளிடம் விடுகதை மாதிரி கேள்விகள் கேட்டு அவர்கள் மனதில் பதியும்வகையில் பக்திக் கருத்துக்களை விதைப்பார். எந்தக் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) என்றாலும் தன்னை நாடிவந்தால் தலைமையேற்று, நிதியுதவி திரட்டி, நிகழ்ச்சியை முடித்துத் தரும் செயலாண்மை அவரிடம் இருந்தது.

நெருப்பைக் களங்கப்படுத்த முடியுமா? வாரியாரும் அப்படித்தான். 

 -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

கந்தர் அநுபூதி (51): 

உருவாய், அருவாய், உளதாய், இலதாய்

மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்,

கருவாய், உயிராய், கதியாய், விதியாய்,

குருவாய் வருவாய், அருள்வாய், குகனே!

9 கருத்துகள்:

  1. சொல்ல வந்த கருத்து முழுமை அடையவில்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. வாரியாரின் கதாகாலட்சேபங்ஙள் தனித்துவம் பெற்றவை. நான் நிறைய கேட்டு இருக்கிறேன்.சிந்தாதரிப்பேட்டையில் இருந்த அவர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாரியாரின் உரைகள் மிக நன்றாக இருக்கும் அதுவும் நகைச்சுவை உணர்வோடு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாரியார் அவர்களின் பேச்சை என்றும் கேட்கலாம்...! அந்தளவு ஈர்க்கும் தன்மையுடையது...

    பதிலளிநீக்கு
  5. வாரியாரை தாக்கிய நிகழ்ச்சி நடந்த பொழுது நான் சிறுமி, இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ்வாணன் தன்னுடைய 'கல்கண்டு' பத்திரிகையில் "காக்க வேண்டிய வாரியாரை தாக்கலாமா?" என்று அட்டைப்படத்தில் வாரியாரின் புகைப்படத்தை வெளியிட்டு கட்டுரை எழுதியிருந்தது நினைவில் இருக்கிறது. அப்போதுதான் வாரியார் என்று ஒருவர் உண்டு என்று தெரிந்தது.

    அவர் சேலத்தில் நடத்திய கதாகாலட்சேபத்தில் "அமெரிக்கா சென்றோமே? என்ன நடந்தது? காப்பாற்ற முடிந்ததா?" என்று அண்ணாதுரை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதை குறிப்பிட்டார் என்று கேள்வி பட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. தமிழ்வாணன் கட்டுரை எனக்கும் நினைவுக்கு வருகிறது. தங்கள் நினைவாற்றல் அபாரம்!

    பதிலளிநீக்கு
  7. அவர்பேச்சுக்கிடையில் பால் அருந்தும் சிறிது நேரத்தில் அனைவரும் யோசிக்கும்படியாகச் சொல்லும் சிறு விடுகதைகள் சுவாரஸ்யமானவை..சுவாரஸ்யமான பதிவு...

    பதிலளிநீக்கு
  8. வாரியார் நாணயஸ்தர்.நல்லாசிரியர்.நகைச்சுவை மிகுந்தவர். அவரின் பிரபலத்தை நன்கு தெரிந்து கொண்டு வாரியார் விருந்து என்று கேள்வி பதில் பகுதியை வாராவாரம் குமுதம் இதழில் எஸ்.ஏ.பி வெளியிட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.அபூர்வ சந்திப்பு என்ற பெயரில் M R Radha மற்றும் வாரியார் சந்திப்பை குமுதம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கான பிரதிகள் அதிகமாக விற்றுப் போயின. நான் சிறுவயதில் படபடப்போடு அதை படித்தேன் ஏனென்றால் ராதா ஏதாவது தரக்குறைவாக வாரியாரிடன் பேசினால் என் மனம் புண்பட்டு விடுமே! .

    பதிலளிநீக்கு