செவ்வாய், ஜூன் 09, 2015

எழுதுகோல் பிடித்தவன், எப்போதுமே ஊருக்கு இளைத்தவன் தானா?

பதிவு 07 / 2015
ஜோ-டி-குரூஸுக்கு வந்த சோதனை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றனர் தமிழ் சான்றோர்கள். மாபெரும் கடற்படை கொண்டு கடாரம் வென்றனாராம், சோழ மன்னர்கள். ரோமாபுரியிலிருந்து குதிரைகளைக் கொண்டுவந்து, பாண்டிய முத்தைக் கொள்முதல் செய்தனராம் அராபிய வணிகர்கள். சங்க இலக்கியம் முதல் இன்றுவரை கடலையும் கடற்கரையையும் காதலின் வளர்ப்பிடங்களாகக் கூறாத கவிஞர்கள் குறைவு.

ஆனால், கடலோடிகளான மீனவர்களின் உண்மையான சரித்திரத்தை எவ்வளவு பேர் இலக்கியத்தில் வடித்திருக்கிறார்கள்?

196௦ களில் 'கடலுக்கு அப்பால்' என்ற நாவலை எழுதினர் ப. சிங்காரம். 'கலைமகள்' மாத இதழில் தொடராக வந்தது. அதன் பிறகு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜோ டி குரூஸ் தான் கடல்சார்ந்த வாழ்க்கையைப் படம்பிடிக்கும் இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். முதலாவது 'ஆழிசூழ் உலகு'. இரண்டாவது 'கொற்கை'.

அவரே அளித்த ஒரு பேட்டியிலிருந்து:

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

'ஆழிசூழ் உலகு' நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில்கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. 

ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். 

கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.


மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. 'ஆழி சூழ் உலகு' நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே 'கொற்கை'யை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”.
*****

நான் வங்கி அதிகாரியாகப் பணியில் இருந்தபோது  கடலூருக்கு அருகாமையில் இருந்த, மீனவக் கிராமங்களைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சிற்றூரில் மேலாளராக இருந்திருக்கிறேன். கடலூர், பரங்கிப்பேட்டை முதல் நாகப்பட்டினம் வரையிலும், பின்னர் காசிமேடு ராயபுரம் போன்ற சென்னையின் மீனவப் பகுதிகளிலும் விரிவாகப் பழகியிருக்கிறேன். அப்போது நான் கண்ட உண்மை ஒன்றுண்டு. அதுதான், மீனவ நண்பர்கள் தங்கள் உடல் உழைப்பை எந்த அளவுக்கு நம்புகிறார்களோ அதே அளவுக்கு  சில வாழ்வியல் கோட்பாடுகளையும் நம்புகிறார்கள் என்பது. இந்துவாக இருந்தாலும், மீனவர்களுக்கு தெய்வம் அன்னை வேளாங்கண்ணி தான். அரசியலைப் பொறுத்தவரை அவர்களுக்கு எம்ஜிஆர் தான் ஒரே தலைவர். வேறு கட்சிகளுக்கு அவர்களிடம் இடமில்லை.  கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த விஷயங்களில் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

*****
தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதிவிட்டதாக இப்போது மீண்டும் ஜோ டி குரூஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'கொற்கை' நாவல்மீதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. இன்றைய  டைம்ஸ் ஆப் இந்தியாவில் (ஜூன் 9, 2015 - சென்னை பதிப்பு - பக்கம் 6 ) வந்துள்ள கட்டுரையைப் பாருங்கள்.
*****

'மாதொருபாகன்' நாவலை எழுதியதற்காகப்  பெருமாள் முருகன் மீது எதிர்ப்புப் போராட்டம் வலுக்கக் காரணமாக இருந்தவர்கள், நாமக்கல் - ராசிபுரம் பகுதியில் ஆண்டுக்கு மூன்று லட்சம் வரை பணம் வசூலிக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் என்பதை மக்கள் அறிவர். இந்தக் கல்வி வியாபாரிகளுக்கு எதிராகப் பெருமாள் முருகன் தொடுத்த போரே, அவர்மீது  முழுவீச்சுடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. திருச்செங்கோட்டிலிருந்து சென்னைக்கு ஊர்கடத்தப்பட்டார் பெருமாள்முருகன்.

இப்போது ஜோ டி குரூஸ் மீது அதே மாதிரியான காரணங்களை சொல்லிப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான காரணம்,  தற்போது ஆர்.கே. நகரில் நடக்கவிருக்கும் இடைதேர்தல்தான். என்று எனக்குத் தோன்றுகிறது.

அதிமுகவின்  தீவிரமான ஆதரவாளர்களான  மீனவர்கள் நிரம்பிய பகுதி, ஆர்.கே. நகர். சாக்கடை நீரும் குழாய் நீரும் ஒன்றுகலந்து பரிணமிக்கும் சுகாதாரம் நிரம்பிய தொகுதி.  ஐந்துமுறை ஒரே கட்சி வெற்றி பெற்றிருந்தபோதும் மக்கள் நலத்திட்டங்கள் போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இப்போது முதல்வரே அங்கு வேட்பாளராக போட்டியிடுவது, அத்தொகுதி மக்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி  இருக்கிறது. எப்படியும் அவரை பெருத்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பதற்க்காக ஆளும்கட்சியின் வலிமைமிக்க ஆசாமிகள் அத்தொகுதியில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்துப் போட்டியிட எந்தக் கட்சிக்குமே இன்று தைரியம் இல்லாதுபோய்விட்ட நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான  திமுக எப்படியாவது ஓட்டுக்களைப் பிரிக்கவேண்டும் என்று பாடுபடுவது கண்கூடு. தனது  பரம எதிரிகளான மீனவர்களை எப்படியாவது கணிசமான அளவில்
தன்பக்கம் இழுத்துவிட வேண்டும், இப்போதில்லாவிடினும் அது 2016 பொதுத்தேர்தலுக்கும் மிகவும் உதவும் - என்று கணக்குப் போட்டுக் காய் நகர்த்துகிறது அக்கட்சி. அதன் வெளிப்பாடுகளுள் ஒன்றுதான் ஜோ டி குரூஸ் மீது  தொடங்கப்பட்டுள்ள  எதிர்ப்பு. ( நரேந்திர மோடியின் செயலாற்றலைப் பாராட்டி ஜோ டி குரூஸ் பேசியதை நினைவில் கொள்க. )

****

டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகிறது. ஜோ டி குரூஸுக்கு ஆதரவாக ஏன் யாரும் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்று. அவரால்  ஆதரிக்கப்பட்ட மோடியின் கட்சியினர் கூட ஏன்  பேசவில்லை என்கிறது.

பெருமாள் முருகன் விஷயத்திலும் அவரை ஆதரித்தவர்கள் பொதுவுடமைக் கட்சியினரும் அதே சார்புள்ள கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களும்தான். அவரது பதிப்பாளரான காலச்சுவடு சம்பந்தப்பட்ட சில எழுத்தாளர்கள் மட்டும் சிறிதுகாலத் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, தாங்கள் காலச்சுவடால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தினால் பிற்பாடு ஆதரவு கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர்.  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர். 'எப்படியும் வழக்கு நீதிமன்றம்வரை போய்விட்டது. தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம்' என்ற மனோபாவத்தின் வெளிப்பாடு.

ஜோ டி குரூஸ் விஷயத்தில் இந்த அளவுக்குக் கூட ஆதரவாளர்கள் திரளமாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன்.  பெருமாள் முருகனை விட பொருளாதார ரீதியிலும் சமுதாய அந்தஸ்திலும் மிக்கவர் குரூஸ். எனவே தன்னைத்  தானே காப்பாற்றிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது. மேலும், இது அரசியல் ரீதியாக ஆளும்கட்சிக்கு எதிரான சக்திகள் ஆடும் விளையாட்டு என்பதும் அனைவருக்கும் புரிந்துவிட்டது.

****
எப்படியோ, ஊருக்கு இளைத்தவன் தமிழ் எழுத்தாளன் தான் என்பது மீண்டும்
மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. நூலகங்களுக்கு நிதி வழங்காமல் ஏமாற்றுகிறது, அரசு.  புத்தங்களை வாங்காமலும், வாங்கிய நூல்களுக்கு உரிய கால அட்டவணைப்படி பணம் தராமலும் ஏமாற்றுகிறது நூலகத்துறை. எழுத்தாளனைப் பகடைக்காயாக்கி ஏமாற்றுகின்றனர் பதிப்பாளர்கள். புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு வருகை தந்தாலும் கை நீட்டிக் காசுகொடுத்துப் புத்தகம் வாங்காமல் (எழுத்தாளன் செலவில்) காப்பி அருந்தி, வாய்நிறைய வாழ்த்து (மட்டும்) சொல்லி ஏமாற்றுகின்றனர்  வாசகர்கள். இதெல்லாம் போதாது என்று அவ்வப்பொழுது எதிர்ப்புக்குரல் கொடுத்து எழுத்தாளனை ஆட்டம் காண வைக்கின்றனர், இன மற்றும்  அரசியல் சதியாளர்கள்.

இதே நிலைமை நீடித்தால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து  இனிமேல்                 'சங்ககாலத்தில் ஊறுகாய்', 'மலேசியாவில்  பிரியாணி வகைகள்', 'கோதுமையோ மைதாவோ இல்லாமல் சப்பாத்தி செய்வது எப்படி?'  போன்ற நூல்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.

விதியே விதியே, தமிழச் சாதியை 
என்செயக் கருதி இருக்கின்றாயடா?
***
(C) Y Chellappa
email: chellappay@yahoo.com

20 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  பலவகைப்பட்ட தகவல் சொல்லியுள்ளீர்கள் படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுகிறது. ஒவ்வொன்றும் புதிய புதிய அத்தியாயங்கள் . எனக்கு. பகிர்வுக்கு நன்றி ஐயா. தொடருகிறேன் த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பதிவு நன்று! தங்கள் ஆதங்கம் புரிகிறது!நலமா

  பதிலளிநீக்கு


 3. இதே நிலைமை நீடித்தால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து  இனிமேல்                 'சங்ககாலத்தில் ஊறுகாய்', 'மலேசியாவில்  பிரியாணி வகைகள்', 'கோதுமையோ மைதாவோ
  இல்லாமல் சப்பாத்தி செய்வது எப்படி?'  போன்ற நூல்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.//

  100% உண்மை சார்.
  அரசியல் நோக்கத்திர்க்காக்அ எழுத்தாளர்கள் தாக்கப்படுவது சமீபத்தில் அதிகரித்திருக்கிரது.
  இந்த நிலை மாரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு சார்! அரசியல் எல்லா இடத்திலும் இறுதியில் சொன்னது நச்!! ஹஹஹ் புத்தகத் தலைப்புகள்...ஏதேனும் அம்மாக்கள் பார்த்தால் இந்தத் தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்தாலும் வரலாம். எதற்கும் ராயல்டி ஃபிக்ஸ் பண்ணிக் கொள்ளுங்கள். ஏற்கனவே பல சானல்களில் பெண்கள் மைதா, கோதுமை இல்லாமல் சப்பாத்தி செய்வது எப்படி என்று தினுசு தினுசாகச் செய்து காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு தினுசு என்பது சப்பாத்தியின் வடிவத்தைச் சொல்லவில்லை என்பதைக் குறிப்பிடுகின்றோம்....??!!

  நீங்கள் பார்த்ததில்லை என்பது தெரிகின்றது..ஹஹ்ஹ.

  பதிலளிநீக்கு
 5. இதே நிலைமை நீடித்தால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து இனிமேல் 'சங்ககாலத்தில் ஊறுகாய்', 'மலேசியாவில் பிரியாணி வகைகள்', 'கோதுமையோ மைதாவோ இல்லாமல் சப்பாத்தி செய்வது எப்படி?' போன்ற நூல்களைத்தான் எதிர்பார்க்க முடியும். என்ற தங்களின் கருத்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். எங்கும் எதிலும் இப்போது அரசியலே வெற்றி பெறுகிறது.

  பதிலளிநீக்கு
 6. அறிஞ்சர் பெருமக்களிடம் பெரும்பலனவர்களிடம் இருப்பது இந்த சோர்வுதான் .... மண்ணின் மைந்தர்கலான் மக்கள் அறியாமையில் ஆழ்த்தி வைக்கப்பட்டு உள்ளனர் . அதைவிடுத்து மக்களின் மேல் வெறுப்பையும் சினத்தியும் காட்டுவது சிந்திக்கத் தக்கது . உண்மை மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் எத்தர்களை அழிக்கத் தொடக்கி விடுவார்கள் எனவேதான் மக்கள் மேல் பசங்க்க்காட்டுவவது போல மக்களை அறியாமையில் வைத்து இருப்பது சிறந்த ஆக்கம் பாராட்டுகள் .

  பதிலளிநீக்கு
 7. ***தனது பரம எதிரிகளான மீனவர்களை ***

  எதிரிகளா? அப்படினா??

  எதிர்கள்னு அகராதியில் உள்ளதை திருத்தி எழுதணும்போல இருக்கு..

  ஒரு குப்பத்தில் 100 குடும்பம் இருந்தால் 100 குட்டும்ப ஓட்டுக்களும் அ தி மு க வுக்கே விழுந்த்துனு எதுதும் டேட்டா இருக்கா?? சும்மா எதையாவது எழுதாதீங்க சார்!

  பதிலளிநீக்கு
 8. இன்னைக்கு தேதிக்கு எழுத்தாளன் என்பவன் தரங்கெட்டுப் ப்போயித்தான் இருக்கான். அவனுக தரததிற்கேற்ப மரியாதை கிடைக்கிது! அவ்வளவுதான். டாஸ்மாக்ல அடிக நேரம் செவழிக்கும் எழுத்தாளர்கள் நிரம்பி இருக்கும் இச்சூழலில் எழுத்தாளன் "கடவுள்" னு நீங்க நெனச்சுக்கிட்டா அது உங்க அறியாமை!

  பதிலளிநீக்கு
 9. உங்க பதிவில் பின்னூட்டமெல்லாம் என்ன தலையாட்டி பொம்மைகளிடம் இருந்ந்து வர்ர மாதிரி இருக்கு. "போர்" அடிக்கவில்லையா உங்களுக்கு?? :)))

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள செல்லப்பா ஐயா

  வணக்கம். உங்களின் வருத்தத்தை ஒரு சொல் மாறாமல் நானும் ஏற்கிறேன். நல்ல சமுகத்தை வடிவமைக்கும் எழுத்துக்களைப் படைக்கும் படைப்பாளனுக்கு அந்த சமுகத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பது சாபம்தான். இனி அந்தந்த அரசியல்வாதிகள் அவரவர் தலைவர்களைப் பற்றி பரணியும், உலாவும் பிள்ளைத்தமிழும் கலம்பகமும் கோவையும் பாடிக் களிக்கும் காலம்தான் நிலைக்கும்போலும்.

  பதிலளிநீக்கு
 11. ஐயா
  வணக்கம்...
  திரு.பெருமாள் முருகன், திரு. குரூஸ் என எதிர்ப்புக்கள் தொடரும் பட்சத்தில் மக்களின் வாழ்க்கையைப் பேசும் எந்த நாவலும், கதைகளும் வராது. தாங்கள் கடைசியில் சொன்னதுதான் நடக்கும்... ஐந்து வருடங்கள் அவர் பட்ட கஷ்டம் எல்லாம் அரசியலால் பாழாகக்கூடாது... எழுத்தாளர்கள் ஒன்று பட்டால் இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு முடிவு கட்டலாம்... ஆனால் தமிழன் செய்வானா?

  பதிலளிநீக்கு
 12. அய்யா...

  நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் தளம் வருகிறேன்...

  படைப்பாளியின் கரங்கள் நசுக்கப்படுவது இந்த மண்ணின் சாபக்கேடு. அதுவும் சமீபகாலமாய் ஜாதி, மத துவேஷத்தில் குளிர் காய்ந்து ஓட்டு பொறுக்க முற்படும் அரசியல் கட்சிகள் படைப்பாளிகளுக்கு எதிரான போராட்டங்களின் தூண்டுகோல்களாய் அமைந்து வருவது கருத்து சுதந்திரத்துக்கு மிக பாதகமாய் அமைந்த விசயம்.

  " மைலாஞ்சி " எழுதிய ஹெச் ஜீ ரசூல் தொடங்கி பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் கண்டிப்புக்கும் தாக்கத்துக்கும் உள்ளான படைப்பாளிகளின் பட்டியல் நீளம் !

  டைம்ஸ் ஆப் இந்தியா பேசும் அளவுக்கு கூட, இந்திய ஜனநாயக தூண்களின் ஒன்று எனவும், கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் எனவும் மார்த்தட்டிக்கொள்ளும் தமிழின் முன்னனி ஊடகங்கள் இந்த அக்கிரமங்களை சரியாக வெளிப்படுத்துவதில்லை.

  பெருமாள் முருகனின் சம்பவத்தில் கூட, இந்தியா டுடே தமிழ் பதிப்பு ஒன்றுதான் பாரபட்சமன்ற முறையில் நிகழ்வில் கண்ணோட்டியது. ( அந்த இதழும் நின்றுவிட்டது சோகம் ! )

  இது போன்ற குருட்டு போராட்டங்களில் இறங்கும் யாருமே இவர்களின் படைப்பை முழுமையாக படித்தவர்கள் அல்ல என்பது வேதனையான வேடிக்கை ! பிரியாணி பொட்டலங்களுக்கு கூப்பாடு போடும் இவர்களை தூண்டிவிடுவது படைப்பின் அட்டை படத்தை பார்த்தும் படைப்பாளியின் பேட்டியை படித்தும் சிலிர்த்து எழும்பும் அரைவேக்காடுகள் !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்

  தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 14. சிறந்த பகிர்வு


  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு புதுகை விழாக்குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது ..நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதா அவர்களே! புதுகையையும் தங்களைப் போன்றவர்களின் புதுமைக் கைவண்ணத்தையும் நேரில் காண நானும் பேராவலுடன் காத்திருக்கிறேன். - இராய செல்லப்பா

   நீக்கு