வெள்ளி, மார்ச் 17, 2017

கனவுகள் பலிக்கும் நேரம்

பதிவு எண் 19/ 2017
கனவுகள் பலிக்கும் நேரம் 

-இராய செல்லப்பா

புலர்ந்தும் புலராத விடியற்காலை நேரம். பத்தடி தூரத்திற்குமேல் தெளிவாகத் தெரியவில்லை. வயல்காட்டின் நீண்ட வரப்புகளின் மீது நடந்துகொண்டிருக்கிறேன். இரண்டு பக்கமும் நிலம் உழுது பண்படுத்தப்பட்டு, நீரும் சேறுமாய் இருந்தது. ஒரு பாத்தியில் நெல் நாற்றுக்கள் பசுமையாய்க் கிடந்தன. இன்றோ நாளையோ நடவு செய்யக்கூடும்.

யாருடைய வயல் என்று தெரியவில்லை. ஏன் அங்குப் போனேன் என்றும் தெரியவில்லை. ஆனால் விரைவாக நடந்து கொண்டிருக்கிறேன். யாரையோ துரத்திப் பிடிக்கப் போவதுபோல் இருக்கிறது. அடிக்கடி ‘நில், நில்’ என்று சொல்லிக்கொண்டே போகிறேன். ஒரு கட்டத்தில் வேகமாக ஓடுகிறேன்.
சற்றே வெளிச்சம் வருகிறது.

எனக்கு முன்னே கடல்போல் ஒரு நீர்ப் பரப்பு. ஆனால் கடல் அல்ல; கரை காண முடியாத குளமாக இருக்கலாம். நீரின் வெண்பரப்பு மட்டுமே தெரிந்தது. இன்னும் பத்து நிமிடம் ஓடினால் குளத்தை அடைந்துவிடலாம் என்று தோன்றியது. வேகத்தைக் கூட்டினேன்.

அப்போதுதான் தெரிந்தது, எனக்கு முன்னே ஒரு பெண் உருவம் ஓடிக்கொண்டிருப்பதை. மெலிந்த உடல். எளிமையான சேலை. இழந்துவிட்ட எதையோ தேடிக்கொண்டு போவதுபோல், ஒரே முனைப்பாக, பின்னால் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தது அவ்வுருவம். குளத்தை நெருங்கிவிட்டது. ஆனால் என் வேகத்திற்கு அதனால் ஈடு கொடுக்க முடியவில்லை. நானும் குளத்தை நெருங்கிவிட்டேன்.

திடுக்கிட்டு அந்த உருவம் என்னைப் பார்ப்பதற்காகத் திரும்புகிறது. சென்னையில் இருக்கும் என் தாய்!

அடுத்த நொடி என்ன நடந்தது என்று தெரியாது. பால் பாக்கெட்டைக் கொடுப்பதற்காக வாசற்கதவை ஒரு சிறுவன் தட்டியபோது கனவு கலைந்துவிட்டது.

முன்பின் தெரியாத ஊரில், குளத்தில் விழுவதுபோல் என் தாய் போகும் கனவுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. பொதுவாகவே கனவுகளை அதிகம் பொருட்படுத்தமாட்டேன் நான். எனவே இக்கனவையும் மறந்துபோனேன்.

அடுத்த வாரம் சென்னை வந்தேன். தற்செயலாகச்   சரியில்லாமல் போனது அம்மாவின் உடல்நலம். அருகிலிருந்த மருத்துவமனைக்கு  அழைத்துப் போனேன். வயதாகிவிட்டதுதான் காரணம், சில நாட்கள் இங்கே அனுமதித்தால் சரிசெய்துவிடலாம் என்றார்கள். ஒருவாரம் அங்கே இருந்தார். உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. நான் பிழைக்க மாட்டேன் என்று தோன்றுகிறது என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். மூன்று இரவுகள் அவருடனேயே இருந்தேன். குழந்தையாக எனக்கு அவர் செய்த பணிவிடைகளை அவருக்கு நான் செய்தேன். நான்காவது நாள் அவர் இயற்கை எய்திவிட்டார்.
****
வீட்டில் ஏதோ விசேஷம். அநேகமாக மறைந்துபோன முன்னோர் ஒருவருக்குத் திதி கொடுக்கும் நாள் (‘சிரார்த்தம்’) என்று நினைக்கிறேன்.

நான் சிறுவனாக  இருந்தபோது வசித்த அதே இராணிப்பேட்டை, வக்கீல் தெரு, வீடு. அதே கிணறு. அருகில் பெரிய சிமெண்ட் தொட்டி. நான் இடுப்பில் ஒரு வெள்ளைத்துண்டு கட்டியிருக்கிறேன். இராட்டினம் சுழல்கிறது. வேகவேகமாகக் கிணற்றிலிருந்து வாளிவாளியாகத் தண்ணீர் சேந்துகிறேன். தொட்டியை நிறைக்கிறேன். பிறகு மேலும் ஒரு வாளி தண்ணீரைச் சேந்திக் குளிக்கிறேன். 

அப்போது என் தாத்தா வருகிறார். அப்பாவின் அப்பா. நீ போடா, போய்ப் பாடத்தைப் படி. நானே சேந்திக் குளிக்கிறேன் என்று  தண்ணீர் இறைத்துக் குளிக்கிறார். மூன்று நான்கு வாளித் தண்ணீர் செலவாகிறது. குளித்துவிட்டு அவர் சென்றதும்,  என் தகப்பனார் வருகிறார்.   நான் அருகில் இருந்தும் அவர் என்னைப் பார்க்கவில்லை. தன்  பாட்டுக்குப் பேசாமல் குளித்துவிட்டுப் போகிறார்.

இவ்வளவுதான் கனவு. ஒரு நாள் காலை ஐந்தேமுக்கால்  மணிக்கு நேர்ந்த கனவு. என் தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆகியிருந்தன. தகப்பனார் சென்னையில் இருந்தார். நோய்நொடி ஏதுமின்றி நலமாக  இருந்தார்.

வழக்கம் போலவே கனவை மறந்துவிட்டேன். ஒரு வாரம் கழிந்திருக்கும். காலை எட்டுமணிக்குக் கலவை சங்கரமடத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தகப்பனார் பெயரைச்சொல்லி, இன்று காலை ஆறு மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்றார்கள்.  சிலநாட்கள் முன்புதான் ஏதோ வேலையாக வந்து தங்கினாராம். இரவு நெடுநேரம் சில வேத மந்திரங்களைப் பற்றி விளக்கமாகப் பேசிக்கொண்டு இருந்தாராம். காலையில் காப்பி சாப்பிட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தவர் எழுந்திருக்கவில்லையாம்.

மங்களூரில் இருந்து மாலை விமானத்தில் கிளம்பினேன். காஞ்சி மகாபெரியவரின் குருநாதரின் பிருந்தாவனம் அமைந்திருந்த புனிதமான இடம், கலவை சங்கரமடம். தற்செயலாகத் தங்கப்போன இடத்தில், என் தகப்பனாரின் ஆவி பிரிந்தது விட்டகுறை தொட்டகுறையோ என்று தோன்றியது. 75 வயது வாழ்கையில் முதல் அறுபது ஆண்டுகளை வறுமையிலேயே கழித்தவர் அவர். எனினும் ஒருநாளாவது வேதத்தை மறந்தவரில்லை. அதற்கு வெகுமதியாக இந்த மரணம் என்று தோன்றியது. அதே ஊரில் இறுதிச்சடங்குகளைச் செய்துவிட்டு வந்தேன்.
****
கனவுகளில், தண்ணீரையும் நமது முன்னோர்களையோ அல்லது உறவினர்களையோ அருகருகே பார்க்க நேர்ந்தால்,  வீட்டில் ஒரு மரணம் நிகழக்கூடும் என்பது மேலும் பல நேரங்களில் நான் அறிந்துகொண்டதாகும். (அப்படித்தான் நடக்கவேண்டும் என்று அறிவியல் விதி ஏதும் இல்லை.)
****
கனவுகளில் பாம்புகளைக் கண்டிருக்கிறேன். வெண்ணிறமான அல்லது தங்கநிறமான பாம்புகள் என்னைச் சுற்றிலும் (அல்லது எனக்கு முன்னால்) ஓடுவதுபோல் கனவு வரும். -துரத்துவதுபோல் அல்ல- அடுத்த சில நாட்களில் ஏதாவதொரு பரிசோ, பாராட்டோ, வெகுமதியோ வந்துசேரும். எனக்கில்லாவிடினும் என் குடும்பத்தினருக்கு.

பாம்புகள்  என்னைத் துரத்துவதுபோல் கனவு வந்தால் துன்பமோ, நோயோ, பொருள் இழப்போ வருவதை நிச்சயமாக அனுபவித்திருக்கிறேன். அதே சமயம் பாம்பு என்னைக் கடிப்பதுபோல் கனவு வந்தால் அடுத்த சில வாரங்களில் எதிர்பாராவிதமாக  என்னுடைய இன்னல்கள், நீண்டநாள் நோய்கள் விலகுவதைக் கண்டேன். குறைந்தபட்சம், பணியிடத்தில் எனக்குத் தொல்லை கொடுத்துவந்தவர்கள் எதிர்பாரா விதமாக வேறிடத்திற்கு மாற்றம் பெற்றுச் செல்வதன்மூலம் எனக்கு மன அமைதி கிட்டியதை உணர்ந்திருக்கிறேன். அலுவலகத்தில், தீராத சில பிரச்சினைகள்  எனது முயற்சியின்றியே தீர்ந்ததையும் அறிந்திருக்கிறேன்.

இப்போதும், தனது  வருடாந்திரத் திதிக்குச் சிலநாள் முன்பாக என் தந்தை என் கனவில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
***
கனவுகளைப் பற்றி அறிவதில் இளம்வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. சிக்மண்ட் பிராய்டு முதல் இன்றுவரும் பல சைக்காலஜி ஜர்னல்கள் வரை அவ்வப்பொழுது படிப்பதுண்டு. ஆனால், கனவுகள் தோன்றுவதற்கான காரணத்தையோ, கனவுகளின் பலன்களையோ அறிவுபூர்வமாக, நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில்,  இன்னும் யாராலும் அறிவிக்க முடியவில்லை. அவரவர் அனுபவத்தில் இருந்து எழும் empirical law -வாகவே கனவுகளின் படிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

© Y Chellappa

19 கருத்துகள்:

 1. கனவுகள்
  நாமே மறந்து போன, நாம் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுக்காத
  பழைய நினைவுகள் கனவுகளாய் வெளிப்படும் என்று படித்ததாக நினைவு ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால், யாருடைய மரணத்தை நாம் எண்ணிப்பார்க்கவே இல்லையோ, அவர்களைப் பற்றி இம்மாதிரி premonition ஆக வரும் கனவுகளின் காரணம் என்ன என்று தெரியவில்லையே!

   நீக்கு
 2. என் வாழ்விலும் இப்படி நேர்ந்திருக்கின்றது..

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கு நடந்த நிகழ்வுகள் வியப்பாக இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவுகளின் அடிப்படையான காரணத்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் யாருக்காவது உதவுமோ என்ற கோணத்தில் தான் எனது அனுபவத்தைப் பதிவு செய்தேன். எனக்கும் வியப்புதான் ஏற்படுகிறது.

   நீக்கு
 4. மங்களூரில் இருந்து மாலை விமானத்தில் கிளம்பினேன். காஞ்சி மகாபெரியவரின் குருநாதரின் பிருந்தாவனம் அமைந்திருந்த புனிதமான இடம், கலவை சங்கரமடம். தற்செயலாகத் தங்கப்போன இடத்தில், என் தகப்பனாரின் ஆவி பிரிந்தது விட்டகுறை தொட்டகுறையோ என்று தோன்றியது. 75 வயது வாழ்கையில் முதல் அறுபது ஆண்டுகளை வறுமையிலேயே கழித்தவர் அவர். எனினும் ஒருநாளாவது வேதத்தை மறந்தவரில்லை. அதற்கு வெகுமதியாக இந்த மரணம் என்று தோன்றியது. அதே ஊரில் இறுதிச்சடங்குகளைச் செய்துவிட்டு வந்தேன்.// இது உங்களின் கதைகளில் ஒன்றில் வரும் இல்லையா.....ஆனால் வேறு ஒரு வடிவத்தில்...நினைவு அப்படி..

  உங்கள் அனுபவம் வியப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் சிலர் இபப்டி நடப்பதாகச் சொல்லுவதுண்டு. தூக்கம் வந்துவிட்டால் கனவுகள் வருவதே இல்லை...வருமோ என்னவோ நினைவிலும் இருப்பதில்லை...

  கீதா: சார் நிலம் முகர்ந்தவுடன் தூக்கம்....அதன் பின் சிறு வயதில் கனவுகள் வந்ததுண்டு...அது சில நிகழ்வுகள், படங்கள் பார்த்ததன் விளைவினால்..ஆனால் சம்பந்தமில்லாமல் வந்தது இல்லை. தொடர்புப் படுத்தியும் பார்த்தது இல்லை இதுவரை. இப்போது கனவுகள்? வருவதே இல்லை...அழந்த உறக்கம்...

  ஆனால் பகலில் மனதில் தோன்றும் சில உள்ளூணர்வுகளின் படி நிகழ்வுகள் நடப்பதுண்டு. பல சமயங்களில் அந்த உள்ளூணர்வுகள் உதவியதுண்டு...

  உங்கள் கனவுகளின் படி பார்த்தால் தற்போது வரும் கனவு பயமுறுத்துகிறதே சார்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா நேரமும் கனவுகள் வருவதில்லை. அவையும் தூங்கி எழும்போது நினைவில் இருப்பதில்லை. நான் குறிப்பிட்ட மாதிரி சில கனவுகள் மட்டுமே பளிச்சென்று நினைவில் இருந்தன. அதிலும் அந்தத் தங்கநிறமான பாம்புகள் வந்த கனவு, அன்று மாலை முழுவதும் காணொளி மாதிரி கண்ணில் நின்றுகொண்டே இருந்தது. என்னடா இது என்று பயந்தே போய்விட்டேன். சில நாட்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக எனக்கு ஒரு வெகுமதி கிடைத்தது.

   நீக்கு
 5. கனவுகள் பெரும்பாலும் மறந்துவிடுகின்றன.அதிசயமாக நினைவுக்கு வந்த கனவையே ஒரு சிறு கதையாக்கினேன் எந்த தலைப்பில் எப்போதுஎன்று நினைவில்லை. தேடுகிறேன் இன்னொரு விஷயம் என் தந்தை மருத்துவமனையில் இருந்தபோது வீட்டிற்கு ஒரு கார்ட் வந்தது மருத்துவமனையில் இருந்து அனுப்பி இருந்தார்களுங்கள் தந்தையார் D I list லிருக்கிறார்கள் என்றது எனக்கு அப்போது இந்த டி ஐ லிஸ்ட் என்றால் என்னவென்று தெரியவில்லை. அப்பா இறந்தபின் மருத்துவமனைக்குச் சென்று அவர் உடல் நலம் பற்றி ஏன் முன்னமே தெரிவிக்க வில்லை என்று கேட்டேன் அப்போது அவர்கள்கார்ட் அனுப்பிய விஷயத்தைச் சொன்னார்கள் என் அறி வீனத்தால் அவரைஉ சரியாகக் கவனிக்க முடியவில்லை என்னும் ஒரு குற்ற உணர்ச்சி என்னுள் இருந்தது. அதையே என் வாழ்வின் விளிம்பில் ஒரு கனவில் எந்தந்தை என்னை அலட்சியப்படுத்துவதுபோல் எழுதி இருந்தேன்
  கனவுகள் என்னும் தலைப்பில் நண்பர் ஜீவி அவர் எழுதிய பதிவுகளின் முகப்பில் எழுதிக்கொண்டிருந்தார்

  பதிலளிநீக்கு
 6. கனவுகளா? - நாம்
  விழிப்பில் எண்ணிப் பார்த்ததை
  தூக்கத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும்
  மூளையின் செயலே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிச் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களே தம்பி! உங்களைப் போலவே நானும் சினேகா, அனுஷ்கா, ஹன்சிகா ...எல்லாரையும் நினைத்ததுண்டு. ஒருநாளும் இவர்கள் என் கனவில் வந்ததில்லையே! உங்கள் அனுபவம் இனிமையானது போலும். வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. //குழந்தையாக அவர் எனக்கு செய்த பணிவிடைகளை நான் அவருக்கு செய்தேன்//

  மனம் நெகிழ்ந்தேன் எனது மனைவிக்கு நான் செய்த பணிவிடைகளும் சமீபத்தில் சகோதரிக்கு செய்த பணிவிடைகளும் என்
  நினைவுக்கு வந்தன நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் சகோதரியைப் பற்றி துளசிதரனின் தளத்தில் புகைப்படத்துடன் வந்ததே! என்ன செய்வது, சில துயரங்களைத் தாங்கிக்கொண்டுதான் நாம் மேலே செல்ல வேண்டியிருக்கிறது.

   நீக்கு
 8. எனக்கு முன்பு ஒரு கனவு அடிக்கடி வரும். யானை ஒன்று என்னை, சமவெளி, மலைகள் என்று எங்கெங்கும் துரத்தும். சிறிய குடிசை அல்லது சாதா வீடு போன்ற இடத்துக்குள் ஒரு முக்கில் தப்பிக்க முடியாதபடி எல்லாம் மாட்டியிருக்கிறேன். ஆனால் அடுத்த கணமே இன்னொரு இடத்தில் யானை துரத்த ஓடிக் கொண்டிருப்பேன். ஏதேதோ காரணம் சொன்னார்கள், குலதெய்வத்தைப் பார், பிள்ளையாருக்கு வேண்டுதல் பாக்கி என்று! இப்போதெல்லாம் அந்தக் கனவு வருவதில்லை. என் அம்மா மறைந்து ஒரு வருடத்துக்குள் கனவில் வந்தார். அவர் சொன்ன ஒரு வார்த்தை முதல் நாள் அப்பாவுக்கு மதுரையில் வேறொருவரால் சொல்லப்பட்டது! இது போல சில சம்பவங்கள் எனக்கும் உண்டு.


  பதிலளிநீக்கு
 9. கனவுகளுக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக யாராவது கண்டுபிடித்தால் நல்லது. இல்லையென்றால் நாம் கனவு கண்டுகொண்டுதான் இருப்போம்...

  பதிலளிநீக்கு
 10. அறிவியல்ரீதியாக இதற்கு முடிவு காண்பது சற்று சிரமமே. நம் ஆழ் மனதில் உள்ளனவற்றில் வெளிப்பாடாகவே இவற்றைக் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து

  பதிலளிநீக்கு
 11. இல்லை. நிறைய கனவுகளுக்கு அர்த்தம் இருக்கும். பூர்வஜென்ம வாசனையாகவும் இருக்கும். எனக்கு நிறைய அர்த்தமுள்ள கனவுகள் வந்துள்ளன. அவை கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாதவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அர்த்தமுள்ள கனவுகள்" என்றால்? கனவுகள் பலித்ததாக எடுத்துக்கொள்ளலாமா? நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும்.

   நீக்கு
 12. இதுகுறித்து என் அனுபவத்தை ஒரு
  சிறுகதைப்போல ஏற்கென்வே ஒன்று
  எழுதிய ஞாபகம்

  சில அமானுஷ்யங்கள் அறிவுக்கு
  புலப்படுவதில்லை

  அதைத் தொடர்ந்துஆராய்வதும்
  ஒரு மாயமான் வேட்டையினைப் போலத்தான்
  என எனக்குப்படுகிறது

  ஒரு சுவாரஸ்யமான விஷயம்
  எனக்கு தினமுமே கனவு வரும்
  பகல் இரவுகூட அதற்கு விதிவிலக்கில்லை
  அது ஆழமான தூக்கமின்மைக்கு அறிகுறி
  என்கிறார்கள்

  மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு சில நாட்கள் கனவுகள் வருவதில்லை. என், தூக்கமே வருவதில்லை.

   நீக்கு