ஞாயிறு, ஜூன் 12, 2022

ஹைதராபாத்தில் வைஜயந்திமாலா (நேற்றைய தொடர்ச்சி)

 ஹைதராபாத்தில் வைஜயந்திமாலா (நேற்றைய தொடர்ச்சி)

(நான்கு தூண்கள் நகரம்-9)

அமெரிக்காவில் 61 ஆவது நாள் 


நேற்றைய பதிவின் இறுதியில் இப்படி முடித்திருந்தேன்:


அப்போதுதான் வைஜயந்திமாலா அங்கு வந்தார். இல்லையில்லை, நாங்கள் அவரை நெருங்கினோம். எங்களை விட சுமார் ஐந்து வயதுதான் அதிகம் இருக்கலாம். என்ன அழகு, என்ன நளினம், என்ன கவர்ச்சி, என்ன துடிதுடிப்பு!  


இந்தப் பத்தியில் இரண்டு பிழைகள் இருப்பது தெரிந்தது:


(1) ‘ஐந்து வயது’ என்பது பிழை. ‘பதினைந்து வயது’ என்று இருக்கவேண்டும். (அவர் பிறந்த வருடத்தைச் சொல்லமாட்டேன்- எங்கள் வயதைக் கண்டுபிடித்துவிடுவீர்களே!).


(2) ‘அவரை நெருங்கினோம்’ என்பது பிழை. ‘அவரை நெருங்க விடவில்லை’ என்பதே சரி. 


ஹைதராபாத்தில் ‘நவரங்’ என்ற திரையரங்கம் இருந்தது. (பழைய ஜாம்பாக் என்று ஞாபகம்). இப்போது இருக்கிறதா, இல்லை, வணிக வளாகமாகி விட்டதா என்று தெரியவில்லை. அவ்வரங்கில்,  வெளியாகி இருபது வருடங்களான பழைய இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். நானும் அறை நண்பர் அன்புவும் மாதத்தில் மூன்று முறையாவது அங்கு சென்றுவிடுவோம். (அதே சமயம் அபீட்ஸில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட  யாஹீன், பர்ஹீன் என்ற கலையழகுமிக்க இரட்டை தியேட்டர்களில் புதிய இந்திப் படங்கள் பார்ப்பதையும் விடவில்லை என்பதை அறிக).


இரவு சாப்பாடு முடிந்தபிறகு கால்நடையாகவே போய் நவரங்கில் எந்தப் படம் ஓடினாலும் அதைப் பார்த்துவிடும் தாராளமயமான கொள்கை எங்களிடம் இருந்தது. அப்படித்தான் எனக்கு வைஜயந்திமாலா (மறு) அறிமுகமானார். திலீப்குமாருடன் அவர் நடித்த -மிகவும் வெற்றிகரமாக ஓடிய - தமிழில்  கல்யாண்குமார், தேவிகா நடித்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று வெளியான படமான-  ‘மதுமதி’ தான்  நவ்ரங்கில் நான் பார்த்த முதல் இந்திப்படம்.  “என்ன அழகு, என்ன நளினம், என்ன கவர்ச்சி, என்ன துடிதுடிப்பு’ என்று வியந்துபோனது அப்போதுதான்.  “வாருங்கள், வெளியூர் ஆசாமியே” என்று அவர் பாடும் பாடல் காட்சியில் மனதைப்பறிகொடுக்காதவன் ஆண்பிள்ளை இல்லை என்று பம்பாயில் கூறுவார்களாம். (ஐயம் இருப்பவர்கள் யூடியூபில் -
’ஆ ஜாரே  ..பரு..தேஸி’   கேட்டு, பாருங்களேன்!)     


தொடர்ந்து, அவர் நடித்த பல இந்திப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அம்ரபாலி(1966), துனியா (1968), கங்கா ஜமுனா (1961), சங்கம் (1964), நாகின் (1954), தேவதாஸ் (1955), அஞ்சான் (1956), சாதனா (1958) போன்ற சில படங்கள் நினைவுக்கு வருகின்றன. அநேகமாக, ‘நாகின்’ படத்தின் மறுவெளியீட்டை மிகவும் ஆடம்பரமாக அங்கு நடத்தியதாக நினைவு. அதற்கு வைஜயந்திமாலா வந்ததாகவும், இடைவேளையின்போது அவருக்கு மேடையில் வரவேற்பு கொடுத்ததாகவும் நினைவு. தரைடிக்கட்டுகள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறியதால், அவரை நெருங்க முடியாமல் (என்னைப்போன்ற) பின்வரிசைக்காரர்கள் ஏமாற்றமடைந்தோம் என்பது உண்மை. 


இராணிப்பேட்டையில் ‘எவரெஸ்ட்’ தியேட்டரில் நான் சிறுவனாக இருந்தபோது ‘நாகின்’ பார்த்திருக்கிறேன். படத்தில் நாக கன்னியாக வைஜயந்திமாலா வருவார். மகுடி ஊதும் காட்சிகள் நிறைய வரும். அந்த மகுடி ஓசையைக் கேட்டு பாம்புகள் தியேட்டருக்குள் வருவதாகவும் அதைத் தடுத்து அப்பாம்புகளைப் பிடிப்பதற்காகப் பாம்பாட்டிகளை தியேட்டர் நிர்வாகம் தயாராக வைத்திருந்ததாகவும் சிறுவர்களிடையே வதந்தி சுற்றிக்கொண்டிருந்ததால், படம் பார்க்கும்போது அடிக்கடி எங்காவது பாம்பு வருகிறதா என்று நடுங்கியபடியே இருந்தேனாம்.  ஆனால் நவ்ரங்கில் பயமின்றிப் படம் பார்த்தேன். வைஜயந்திமாலா என்றால் வைஜயந்திமாலா தான்! 


ஆனால், ‘பெண்’ என்ற தமிழ்ப்படத்தில் வைஜயந்திமாலா, ‘அகில பாரதப் பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே’ என்று பாடிக்கொண்டு வருவாரே, அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை. எங்கள் இராணிப்பேட்டைக்கு அருகில், பொன்னை/திருவலம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ரயில்வேக்காக அப்போதுதான் புதிதாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தில், குதிரை சவாரி செய்துகொண்டே அப் பாட்டைப் பாடுவார்.  (அப்பாலம் பழுதடைந்ததால் இந்த ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம்).


பொன்னை/திருவலம் பாலம் -அப்போது!

பாலத்தின்மீது குதிரையில் பாடிவரும் வை-மாலா

ஆனால்  வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் அவரும் பத்மினியும்  ஆடும் போட்டி நடனத்தை யாரால் மறக்கமுடியும்? பார்த்திபன் கனவு படத்தில் அவரிடம் ‘அழகிய மேனி சுகமா’ என்று ஜெமினிகணேசன் ஆசையோடு கேட்கும்போது அவர் காட்டும் பாவம் இன்றும் நம் கண்முன்னால் நிற்கிறதல்லவா? இரும்புத்திரை, பாக்தாத் திருடன்,  மர்ம வீரன், சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மற்றும் அவரது முதல் தோற்றமான ‘வாழ்க்கை’ ஆகிய படங்களை இன்றும் நடிப்புப் பள்ளிகளில் பாடங்களாகக் காண்பிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். அதற்குத் தகுதி உடையவர்தான் அவர்.   


இன்றும் நம்மிடையே வாழ்ந்திருக்கும் உயர் கலைஞர் வைஜயந்திமாலா. இன்னும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துவோம்.


அமெரிக்காவில் ஆரம்பித்து ஹைதராபாத் சென்று இராணிப்பேட்டை வழியாக இப்போது வைஜயந்திமாலாவில் நிற்கிறோம். கொஞ்ச நேரம் சென்னைக்கும் சென்று அங்கு இருக்கும் ‘தரமணி’ என்ற பகுதிக்கும் சென்று வருவோமா? 


வைஜயந்திமாலா இரண்டு முறை (1984-89, 1989-93) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தென்சென்னை தொகுதியில் உள்ள பகுதி அது. அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை “தரமணியில் ஒரு நவமணி” என்ற பதிவாக 2017இல் இதே வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறேன். முடியும்போது படியுங்கள்.


முடியாதவர்கள்,

>இந்தப் பாடலையாவது கேட்டு வைக்கலாம் அல்லவா?


-இராய செல்லப்பா  நியூ ஜெர்சியில் இருந்து 

16 கருத்துகள்:

 1. நாராயணன்,SFO
  எவ்வளவு நாட்களாக காத்திருந்தீர்களோ வைஜயந்திமாலா பற்றி எழுத.என் மனதில் அவரைப் பற்றி என்ன கருத்தோ அதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிரீர்கள்.என்னை பொருத்தவரை நடிப்பில் அவரை மிஞ்ச இனிமேல் ஒருவர் பிறக்க வேண்டும்.மிகவும் உயர் ரகம்.பார்த்திபன்கனவில் கண் அசைவிலேயே நரசிம்ம பல்லவனை நடிப்பில் மிஞ்சி விடுவார்.
  முஸ்லிம் ஹோட்டல் டைமன்ட் சமோசா அடையார் RUNS இல் பிரமாதமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நல்ல நடிகைகளை எல்லாம் வடக்கே கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். வைஜயந்திமாலா அதற்குப் பின்னால் தமிழ்த்திரைப்படம் எதிலும் நடிக்க விரும்பாத அளவுக்கு இந்தியில் அவருக்கு மார்க்கெட் சூடுபிடித்துவிட்டது! 1991இல் டில்லியில் அவரது நடனத்தைப் பார்த்தேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல, "Age could not wither her, nor custom stale her infinite variety".

   நீக்கு
 2. 1. பிறந்த வருடத்தைச் சொல்லமாட்டேன் என்று சொல்லி துல்லியமாகக் கணிக்க துப்புக் கொடுத்துவிட்டீர்களே சார் :)

  2. பதிவு இயல்பாகவே தனி ரகம், மேலும் தொடர்புடைய படங்களையும் காணும்பொழுது சுவாரசியம் மிகுகின்றது.

  ... மீ.மணிகண்டன்

  பதிலளிநீக்கு
 3. வஞ்சிக்கோட்டை வாலிபன் பாட்டை மறக்கவே முடியாது...

  பதிலளிநீக்கு
 4. எங்கள் காலத்தில் ஸ்ரீதேவி,ஜெயப்ரதா இருவரில் யார் அழகு? என்னும் பட்டிமன்றம் நடந்தது போல, அந்தக் காலத்தில் வைஜெயந்தி மாலா, பத்மினி இருவரில் யார் அழகு என்னும் பட்டிமன்றம் நடந்திருக்கலாம். பத்மினிக்கு கிளாமர் கோஷன்ட் குறைவு என்று தோன்றும். அதனால்தான் என்னதான் ராஜ் கபூரின் அபிமான நடிகையாக இருந்தாலும் அவரால் ஹிந்தியில் வெற்றிக் கொடி நாட்ட முடியவில்லையோ? நானும் ஒரு முறை நல்லியில் வைஜெயந்திமாலாவை மிக அருகில் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. இவர்கள் எல்லாம் என்னதான் மேக்கப் செய்து கொண்டு முகத்தை இளமையாக காட்டிக் கொண்டாலும் கைகள் வயதை சொல்லி விடுகின்றன.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகும் திறமையும் சுறுசுறுப்பும் உடைய நடிகைகளுக்கும் வயதானால் முதுமை வந்துவிடுவது இறைவன் செய்யும் துரோகம் என்று சொல்லலாமா?

   நீக்கு
 5. எங்கள் காலத்தில் நஸ்ரியாவா, நயன்தாராவா என்று நாங்கள் போட்டி வைப்பது போல்...  தேனிலவு படத்தில் அடிக்கும்போது வைஜயந்திமாலாவுடன் அவர் அம்மா கூடவே வருவாராம்.  ஒவ்வொன்றிலும் குறுக்கிடுவாராம்.  கவனமாக அவரைத் தவிர்த்து விட்டு வைஜயந்தியை வைத்து படம் எடுத்தார்களாம்.

  பதிலளிநீக்கு
 6. வைஜயந்தி மாலாவின் அம்மாவும் ஒரு காலத்தில் பெரிய நடிகையாக இருந்தவரல்லவா? எங்கே என்ன மாதிரி விஷமங்கள் நடக்கும் என்று அவருக்குத் தெரியாதா? அதனால் தான் மகளுக்கு மெய்க்காப்பாளராக இருந்தாராம் அவர். அது சரி, 'நஸ்', 'நய' இருவரில் நீங்கள் யார் பக்கம் என்று சொல்லவில்லையே!

  பதிலளிநீக்கு
 7. ஒரு வாரம் முன்பு தான் வைஜந்தி மாலாவின் அம்மா நடித்த " மங்கம்மா சபதம் " படம் பார்த்தேன். ரன்ஜன் கதாநாயகன் . என்ன அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைஜயந்தி மாலா வின் அம்மாவின் ரசிகரா நீங்கள்? உங்கள் வயது தெரிந்துவிட்டது!

   நீக்கு
  2. அம்மாவே அவ்வளவு அழகு என்றால்... பெண்ணுக்கு கேட்பானேன்....அதற்காக இதை சொன்னேன்.

   நான் "டாக்டர் ", எதற்கும் துணிந்தவன் ","DON" பட கதாநாயகி ப்ரியங்கா அருள் மோகன் ரசிகன். பார்த்தாலே பரவசமூட்டும் முகம்.

   நீக்கு
 8. மங்கம்மா சபதம் படம் பார்க்க இங்கே சொடுக்கவும்.

  https://youtu.be/fGC9HQ61O_A

  பதிலளிநீக்கு
 9. திருவலம் இரும்பு பாலம் ஜெய்சங்கர் படங்களில் சண்டைக் காட்சிகளில் வரும் .

  பதிலளிநீக்கு