வைஜயந்திமாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைஜயந்திமாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 13, 2022

ஹைதராபாத்தில் வைஜயந்திமாலா (நேற்றைய தொடர்ச்சி)

 ஹைதராபாத்தில் வைஜயந்திமாலா (நேற்றைய தொடர்ச்சி)

(நான்கு தூண்கள் நகரம்-9)

அமெரிக்காவில் 61 ஆவது நாள் 


நேற்றைய பதிவின் இறுதியில் இப்படி முடித்திருந்தேன்:


அப்போதுதான் வைஜயந்திமாலா அங்கு வந்தார். இல்லையில்லை, நாங்கள் அவரை நெருங்கினோம். எங்களை விட சுமார் ஐந்து வயதுதான் அதிகம் இருக்கலாம். என்ன அழகு, என்ன நளினம், என்ன கவர்ச்சி, என்ன துடிதுடிப்பு!  


இந்தப் பத்தியில் இரண்டு பிழைகள் இருப்பது தெரிந்தது:


(1) ‘ஐந்து வயது’ என்பது பிழை. ‘பதினைந்து வயது’ என்று இருக்கவேண்டும். (அவர் பிறந்த வருடத்தைச் சொல்லமாட்டேன்- எங்கள் வயதைக் கண்டுபிடித்துவிடுவீர்களே!).


(2) ‘அவரை நெருங்கினோம்’ என்பது பிழை. ‘அவரை நெருங்க விடவில்லை’ என்பதே சரி. 


ஹைதராபாத்தில் ‘நவரங்’ என்ற திரையரங்கம் இருந்தது. (பழைய ஜாம்பாக் என்று ஞாபகம்). இப்போது இருக்கிறதா, இல்லை, வணிக வளாகமாகி விட்டதா என்று தெரியவில்லை. அவ்வரங்கில்,  வெளியாகி இருபது வருடங்களான பழைய இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். நானும் அறை நண்பர் அன்புவும் மாதத்தில் மூன்று முறையாவது அங்கு சென்றுவிடுவோம். (அதே சமயம் அபீட்ஸில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட  யாஹீன், பர்ஹீன் என்ற கலையழகுமிக்க இரட்டை தியேட்டர்களில் புதிய இந்திப் படங்கள் பார்ப்பதையும் விடவில்லை என்பதை அறிக).


இரவு சாப்பாடு முடிந்தபிறகு கால்நடையாகவே போய் நவரங்கில் எந்தப் படம் ஓடினாலும் அதைப் பார்த்துவிடும் தாராளமயமான கொள்கை எங்களிடம் இருந்தது. அப்படித்தான் எனக்கு வைஜயந்திமாலா (மறு) அறிமுகமானார். திலீப்குமாருடன் அவர் நடித்த -மிகவும் வெற்றிகரமாக ஓடிய - தமிழில்  கல்யாண்குமார், தேவிகா நடித்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று வெளியான படமான-  ‘மதுமதி’ தான்  நவ்ரங்கில் நான் பார்த்த முதல் இந்திப்படம்.  “என்ன அழகு, என்ன நளினம், என்ன கவர்ச்சி, என்ன துடிதுடிப்பு’ என்று வியந்துபோனது அப்போதுதான்.  “வாருங்கள், வெளியூர் ஆசாமியே” என்று அவர் பாடும் பாடல் காட்சியில் மனதைப்



பறிகொடுக்காதவன் ஆண்பிள்ளை இல்லை என்று பம்பாயில் கூறுவார்களாம். (ஐயம் இருப்பவர்கள் யூடியூபில் -
’ஆ ஜாரே  ..பரு..தேஸி’   கேட்டு, பாருங்களேன்!)     


தொடர்ந்து, அவர் நடித்த பல இந்திப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அம்ரபாலி(1966), துனியா (1968), கங்கா ஜமுனா (1961), சங்கம் (1964), நாகின் (1954), தேவதாஸ் (1955), அஞ்சான் (1956), சாதனா (1958) போன்ற சில படங்கள் நினைவுக்கு வருகின்றன. 



அநேகமாக, ‘நாகின்’ படத்தின் மறுவெளியீட்டை மிகவும் ஆடம்பரமாக அங்கு நடத்தியதாக நினைவு. அதற்கு வைஜயந்திமாலா வந்ததாகவும், இடைவேளையின்போது அவருக்கு மேடையில் வரவேற்பு கொடுத்ததாகவும் நினைவு. தரைடிக்கட்டுகள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறியதால், அவரை நெருங்க முடியாமல் (என்னைப்போன்ற) பின்வரிசைக்காரர்கள் ஏமாற்றமடைந்தோம் என்பது உண்மை. 


இராணிப்பேட்டையில் ‘எவரெஸ்ட்’ தியேட்டரில் நான் சிறுவனாக இருந்தபோது ‘நாகின்’ பார்த்திருக்கிறேன். படத்தில் நாக கன்னியாக வைஜயந்திமாலா வருவார். மகுடி ஊதும் காட்சிகள் நிறைய வரும். அந்த மகுடி ஓசையைக் கேட்டு பாம்புகள் தியேட்டருக்குள் வருவதாகவும் அதைத் தடுத்து அப்பாம்புகளைப் பிடிப்பதற்காகப் பாம்பாட்டிகளை தியேட்டர் நிர்வாகம் தயாராக வைத்திருந்ததாகவும் சிறுவர்களிடையே வதந்தி சுற்றிக்கொண்டிருந்ததால், படம் பார்க்கும்போது அடிக்கடி எங்காவது பாம்பு வருகிறதா என்று நடுங்கியபடியே இருந்தேனாம்.  ஆனால் நவ்ரங்கில் பயமின்றிப் படம் பார்த்தேன். வைஜயந்திமாலா என்றால் வைஜயந்திமாலா தான்! 


ஆனால், ‘பெண்’ என்ற தமிழ்ப்படத்தில் வைஜயந்திமாலா, ‘அகில பாரதப் பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே’ என்று பாடிக்கொண்டு வருவாரே, அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை. எங்கள் இராணிப்பேட்டைக்கு அருகில், பொன்னை/திருவலம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ரயில்வேக்காக அப்போதுதான் புதிதாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தில், குதிரை சவாரி செய்துகொண்டே அப் பாட்டைப் பாடுவார்.  (அப்பாலம் பழுதடைந்ததால் இந்த ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம்).


பொன்னை/திருவலம் பாலம் -அப்போது!

பாலத்தின்மீது குதிரையில் பாடிவரும் வை-மாலா

ஆனால்  வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் அவரும் பத்மினியும்  ஆடும் போட்டி நடனத்தை யாரால் மறக்கமுடியும்? பார்த்திபன் கனவு படத்தில் அவரிடம் ‘அழகிய மேனி சுகமா’ என்று ஜெமினிகணேசன் ஆசையோடு கேட்கும்போது அவர் காட்டும் பாவம் இன்றும் நம் கண்முன்னால் நிற்கிறதல்லவா? இரும்புத்திரை, பாக்தாத் திருடன்,  மர்ம வீரன், சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மற்றும் அவரது முதல் தோற்றமான ‘வாழ்க்கை’ ஆகிய படங்களை இன்றும் நடிப்புப் பள்ளிகளில் பாடங்களாகக் காண்பிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். அதற்குத் தகுதி உடையவர்தான் அவர்.   


இன்றும் நம்மிடையே வாழ்ந்திருக்கும் உயர் கலைஞர் வைஜயந்திமாலா. இன்னும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துவோம்.


அமெரிக்காவில் ஆரம்பித்து ஹைதராபாத் சென்று இராணிப்பேட்டை வழியாக இப்போது வைஜயந்திமாலாவில் நிற்கிறோம். கொஞ்ச நேரம் சென்னைக்கும் சென்று அங்கு இருக்கும் ‘தரமணி’ என்ற பகுதிக்கும் சென்று வருவோமா? 


வைஜயந்திமாலா இரண்டு முறை (1984-89, 1989-93) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தென்சென்னை தொகுதியில் உள்ள பகுதி அது. அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை “தரமணியில் ஒரு நவமணி” என்ற பதிவாக 2017இல் இதே வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறேன். முடியும்போது படியுங்கள்.


முடியாதவர்கள்,

>இந்தப் பாடலையாவது கேட்டு வைக்கலாம் அல்லவா?


-இராய செல்லப்பா  நியூ ஜெர்சியில் இருந்து