வியாழன், மே 30, 2019

மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்


மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின்
அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்

-இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)

30-5-2019

மணிக்கொடி காலத்து  எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்க ஒருவர் சிட்டி என்னும்  பெ.கோ. சுந்தரராஜன். ஆங்கிலம் பயின்ற அறிஞராகவும் ஆங்கில இலக்கிய விமர்சன நூல்கள் பலவற்றைக் கற்றறிந்தவராகவும் அவர் இருந்தது அவருடைய எழுத்தை மற்ற மணிக்கொடி எழுத்தாளர்களிடமிருந்து   வித்தியாசப்படுத்திக் காட்ட உதவியது.


“பொதுவாக மணிக்கொடியர்கள் கதையம்சத்தைப் பிரதானமாகக் கொண்டு எழுதியவர்கள். ஆனால் சிட்டியோ தனி மனிதனின் உணர்வுகளை படம் பிடித்துக் காட்டும் கதைகளையே பெரும்பாலும் எழுதினார்” என்பது பிரபல எழுத்தாளர் நரசய்யாவின் கருத்து. அதே சமயம் மாறிவரும் சமுதாய உணர்வுகளையும் அவர் பிரதிபலித்தார் என்கிறார்.
****
'அந்தி மந்தாரை' என்ற தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 1947இல் வெளியான இந்த நூல்  சில மாதங்களுக்கு முன்பு சென்னை சந்தியா பதிப்பகத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் பின்வருமாறு: அந்திமந்தாரை,  நிசாசர கணம், ரப்பர் பந்து, சௌந்தர்யமே சத்தியம், உடைந்த வளையல், புரியாத கதை ஆகியவை.
***
இவற்றுள் நிசாசர கணம் கிட்டத்தட்ட ஒரு பேய்க் கதையாகும்.  

விஷயம் என்னவென்றால் இவர் ஒரு சினிமா கதாசிரியர். இன்னும் ஒரு வாரத்தில் அவசரமாக ஒரு கதையை எழுதி சினிமா கம்பெனிக்குக்  கொடுத்தாக வேண்டும். அதற்காகவே முன்பின் தெரியாத ஒரு கிராமத்திற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் தனியே தங்கியிருக்கிறார். தொந்தரவு செய்வதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் கதை வேகமாக ஓடுகிறது. மாலையில் ஆரம்பித்து நீண்ட இரவில்  கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.

கதையில் சுலோச்சனாவின் வாயில் துணி அடைக்கப்பட்டிருக்கிறது அவள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவள் காதலனையும் ஒரு குகையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  அவள் எதிரில் வில்லன் ஒரு தூணின் மேல் சாய்ந்து நின்றபடி  சிரிக்கிறான். தன் கையிலுள்ள துப்பாக்கியால் அவள் உயிரைப் போக்கி விடுவதாக மிரட்டுகிறான்.

“யுத்த ரகசியம் அடங்கியுள்ள காகிதம் இருக்கும் இடத்தை உடனே சொல்லிவிடு” என்று அவளை வலியுறுத்துகிறான். ஆம், அது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அல்லவா!

தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. அதே சமயம் தன் காதலனையும் காப்பாற்றியாக வேண்டும். ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வடித்துக் கொண்டு  கண்களில் ஒளி பொங்க வில்லனைப் பார்த்து சரி என்று தலை அசைக்கிறாள். அப்போது அவள் கண்கள் அவன் தூணுக்கு மேலிருந்த உச்சியை பார்க்கின்றன. ஒரு கரும்பாம்பு மேலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
***

இந்தக் கட்டம் வரை கதை எழுதி முடிக்கும் பொழுது நள்ளிரவு ஆகிவிடுகிறது. அப்போது இருட்டிலிருந்து இரண்டு கண்கள் தன்னை நோக்கி மினுமினுத்துக் கொண்டே நெருங்கி வருவதாக கதாசிரியருக்குத் தோன்றுகிறது. அவர் மனம் பீதியில்  ஆழ்ந்து போகிறது. ஆம் கதையில் அவர் எழுதிய பாம்பு தான் இப்போது அவரை நோக்கி அறையின் மூலையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு பாம்பாட்டியும் தோன்றுகிறான். அவன் மகுடிக்கேற்ப இந்தப் பாம்பு ஆடிக்கொண்டே வருகிறது.

****
கதாசிரியர் தன் கதையில் எழுதிக் கொண்டிருந்த பாம்பு எப்படி உயிர் பெற்று அவரை நோக்கிக் கடிக்க வருகிறது என்பதுதான் கதையின் சுவாரசியமான கட்டம். இம்மாதிரிக்  கதைகளை இன்று பின்நவீனத்துவக் கதைகள் என்று வகைப்படுத்தி விடுவார்கள். ஆனால் எழுபது வருடங்களுக்கு முன்பு இது வெறுமனே சிறுகதை என்றே அறியப்பட்டது. இக்கதையில் மேலும் சில சஸ்பென்ஸ் உண்டு. வாசகர்கள் படித்து அறிய வேண்டும்.
****"

ரப்பர் பந்து என்ற கதையில் ஒரு பெண்ணுக்கும் அவருடைய முறைப்  பையனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இரு குடும்பத்தாருக்கும் அதில் விருப்பமே. சிறுவயதிலிருந்தே இருவரும் ஆடிப்பாடிப் பழகியவர்கள். ஆனால் ஜாதகம் பார்த்தபோது பொருத்தம் இல்லை என்று தெரிகிறது. பெற்றோர்கள் வேறு வரன் தேடுகிறார்கள்.

அப்போதுதான் சீனு வருகிறான். அவனும் அவளோடு சிறுவயதில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே ஊர்க்காரன். ஒரு ரப்பர் பந்து விளையாடும்பொழுது இருவருக்கும் சண்டை வருகிறது. அத்துடன் நட்பு முறிந்து போகிறது. பிறகு அவன் படிக்கப் போய்விடுகிறான். வேலையில் அமர்கிறான். பல வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருகிறான்.

அவனை இவள் பார்க்கும்பொழுது அந்த ரப்பர் பந்து ஞாபகம் வருகிறது. இவன் அல்லவா தன் மனதில் ஒரு புதுமையான உணர்ச்சியைத்  தோற்றுவிக்கிறான் என்று அவளுக்குப் புல்லரிக்கிறது. இவனோடு திருமணம் நடைபெறாதா  என்று மனம் ஏங்குகிறது. அதே ஏக்கம் அவனுக்கும் உண்டாகிறது.

ஆனால் அவளுடைய பெற்றோர்கள் இவனிடம் ஜாதகம் கேட்கும் பொழுது இவன் கொடுக்க மறுத்து விடுகிறான். காரணம் என்ன என்பதுதான் இந்தக் கதையில் சஸ்பென்ஸ்.

வேறொன்றுமில்லை. ஜாதகம் சரியில்லை என்று தங்கள் திருமணம் நின்று விட்டால் என்ன செய்வது என்று இருவருக்குமே அச்சம்.
*****

அந்திமந்தாரை என்பது அந்திப்பொழுதில் பூக்கக்கூடியது. பெரும்பாலும் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். காலைக்குள் வாடி விடும் என்பதால் பல வீடுகளில் இப்பூக்களைப் பறித்து பூஜைக்கு பயன்படுத்தும் வழக்கம் இல்லை. இதைப் பெண்கள் தலையில் அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்ததாகவும்  தெரியவில்லை. எனவே 'அந்திமந்தாரை' என்பது தன்னளவில் அழகானதாகவும் தூய்மையானதாகவும் இருந்தும் பிறரால்  போற்றப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் போய்விடும் ஒன்றின் உருவகம் என்றுதான் தோன்றுகிறது. இக் கதையில் வரும் நாயகி காமாட்சியும் ஓர் 'அந்திமந்தாரை' தான்.

'சிட்டி'யின் கதைகள் என்று பேசும்பொழுது இந்த அந்திமந்தாரை தான் பெரும்பாலும் எடுத்துக் காட்டப்படுகிறது. அந்தப் பெருமைக்கு அது பொருத்தமானதே.

கதை நடக்கும் சூழல் இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பட்டாபி, காமாட்சியைத்   திருமணம் செய்துகொண்டு மதுரை நகருக்கு வந்து  தனிக்குடித்தனம் வைத்து சிறிது காலமே ஆன நிலையில் கதை ஆரம்பிக்கிறது. பட்டாபியின்  நண்பன் சேஷாத்ரி தல்லாகுளத்தில் ஜில்லா போர்டு ஆபீசில் வேலை பார்த்து வந்தான். பட்டாபிக்கு சேதுபதி ஹைஸ்கூலில் ஆசிரியராக உத்தியோகம்.
சிட்டி என்னும் பெ . கோ. சுந்தர ராஜன்  
இருவரும் சந்தித்து ஆறு மாதம்தான் ஆகிறது என்றாலும் நேசம் முற்றிவிட்டது. தினந்தோறும் ஆற்றங்கரையில் சந்திப்பது அவர்கள் வழக்கம். இரவு ஏழு மணி வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். சேஷாத்ரி தல்லாகுளத்தில் ரூம் வைத்துக்கொண்டு ஓட்டலில் சாப்பிட்டு வந்தான். திருமணத்துக்கு முன்புவரை பட்டாபியும் ஓட்டலில்தான் சாப்பிட்டு வந்தான். இருவரும் சேர்ந்துதான் பட்டாபியின் தனிக்குடித்தனத்துக்கு அலைந்து அலைந்து வீடு தேடினார்கள். ஆனால் தனிக்குடித்தனம் வந்த பிறகு ஒரு வாரமாகியும் சேஷாத்ரியை பட்டாபி சந்திக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு வரும்படி அழைப்பு அனுப்பி இருந்தான். அலுவலகத்தில் இருந்த காகிதங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒருவழியாக அன்று பட்டாபியின் வீட்டிற்குக் கிளம்பினான் சேஷாத்ரி.
***

கதவு மூடி இருந்தது ஆனால் ஜன்னல் திறந்திருந்தது. பட்டாபி வந்திருக்கக்கூடும் என்று சேஷாத்ரி அவனைப் பெயரிட்டு அழைத்தான். பதில் இல்லை. எனவே மெல்லக்  கதவைத் திறந்தான். ஆனால் சட்டென்று பின்வாங்கினான். ஏனென்றால் திறந்த கதவின் வழியாக முற்றத்தில் அமர்ந்து கொண்டு காமாட்சி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். இவன் தலை தெரிந்ததும் அவசரமாய் எழுந்து நின்று முழங்கையால் புடவையின் மேல்பாகத்தைச் சரியாய்த் தள்ளி அமைத்துக் கொண்டாள்.

அந்தக் காட்சியை ஆசிரியரின் வார்த்தைகளில் பார்க்கலாம்:

"பட்டாபி வரவில்லையா இன்னும்?" என்றான் சேஷாத்ரி ஒரு வினாடி தயங்கியபின்.

காமாட்சி கையிலிருந்த பாத்திரத்தை பார்த்தாள். அவளுடைய உதடுகள் அசைவது போல் தெரிந்தன ஆனால் பதில் இல்லை.

மறு நிமிஷம் சேஷாத்ரி கீழே இறங்கிப் போய் விட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

எப்பொழுது வருவான் என்று கேட்காமல் போனோமே, வந்தால் ஆற்றங்கரையில் பார்க்கச் சொல்லி இருக்கலாமே என்று நினைத்தான். ஆயினும் பதில் சொல்வதற்கு சங்கோஜப்பட்ட காமாட்சியை இன்னும் கஷ்டப்படுத்த அவன் மனம் இரங்கவில்லை. தான் அவளைக் கேட்டது கூட தப்பு என்று நினைத்தான். பட்டாபியின் மனைவியை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்க்க நேரிட்டதால் புதுமனிதனாகிய தன்னிடம் அவள் பதில் சொல்லத் தயங்கியது இயற்கைதான் என்று அவனுக்குப் புலப்பட்டது.

சேஷாத்திரி போன கால் மணி நேரத்தில் பட்டாபி கடையிலிருந்து நெய்யும் சில சாமான்களையும் வாங்கிக்கொண்டு வந்தான். ஆனால் அவளுக்கு முக்கியமான கடுகை மறந்து விட்டான்.

"கடுகு மறந்து போய்விட்டேளா?"

"கடுகு சொன்னாயா?" என்றான் பட்டாபி சில்லரையைக் கணக்குப் பார்த்துக் கொண்டே.

மூன்றுதரம் சொன்னதாக அவள் சொல்கிறாள். இவனோ அவள் சொல்லவில்லை என்று சாதிக்கிறான். அவள் கோபிக்கிறாள். "சரி அம்மா, நாளைக்கு வாங்கிட்டு வந்துடுறேன். இப்போ காபி உண்டா இல்லையா?" என்று சமாதானம் ஆகிறான்.
***

திருமணமான எல்லா ஆண்களுக்கும் இம்மாதிரி நிகழ்ச்சிகள் தங்கள் வீடுகளிலும் எப்போதாவது  நடந்தது நினைவிருக்கும்.

சரி, சேஷாத்ரியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கவனிக்கலாமா? 

***
காமாட்சி அவ்வளவு கர்நாடகமான பெண்ணாக இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. ஒருவேளை வேண்டும் என்றே பதில் பேசாமல் மௌனமாக இருந்தாளோ  என்று கூட நினைத்தான். அதே சமயம் புதிதாகக் குடித்தனம் வைத்திருக்கும் இளமபெண் தன் கணவன் தன்னோடு தான் அதிக நேரம் கழிக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை தானே என்றும் தோன்றியது.

எனவே சேஷாத்திரி நேராக ஆற்றங்கரைக்குச் செல்கிறான் மனைவி மூலம் கேள்விப்பட்டு பட்டாபி தன்னைத் தேடிக் கொண்டு வருவான் என்று வெகுநேரம் காத்திருக்கிறான். ஆனால் அவன் வரவில்லை.

சேஷாத்திரி வந்ததைக் கணவனிடம் காமாட்சி கூறவில்லை. ஏனென்றால் மறந்துபோய்விட்டாள். சேஷாத்ரியை அவள் அதற்கு முன் பார்த்ததில்லை. அத்துடன், கணவன்  வீட்டிற்கு வந்தவுடன் தன்னை எங்காவது வெளியில் அழைத்துக் கொண்டு போக மாட்டானா என்று ஆவலோடு காத்திருக்கிறாள். அவனும் அவளுக்கு ஏதோ சாக்கு போக்கு செல்வது போல வார்த்தையாடி விட்டுக்  கடைசியில் இருவருமாக சினிமாவுக்குக் கிளம்புகிறார்கள்.

ஆற்றங்கரையில் இவனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போன சேஷாத்திரியும் அதே சினிமாவுக்கு வருகிறான். ஆனால் படம் முடிந்து வெளியில் வந்து ஜட்கா வண்டியில் ஏறும் பொழுதுதான், சேஷாத்ரியின் தலை தெரிவதை பட்டாபி பார்க்கிறான். வண்டியை நிறுத்திக்  கையை அசைத்து சேஷாத்ரியை அழைக்க  முயற்சிக்கிறான். ஆனால் அவன் இவனை கவனிக்காமல் சென்று விடுகிறான். அப்போதுதான் காமாட்சிக்கு  நினைவு வருகிறது. "ஐயையோ மறந்தே போயிட்டேன். நீங்க கடைக்கு போய்ட்டு வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னேதான் அவர் வந்துட்டு போனார்" என்கிறாள்.

அவனுக்குக் கோபம் ஏற்படுகிறது. வீட்டுக்கு வருபவர்களை இப்பொழுதே விரட்ட ஆரம்பித்து விட்டாயா என்கிறான். அந்தக் கோபம், வண்டி வாடகைக்கு மேல்  இனாம் எதிர்பார்க்கும் ஜட்கா வண்டிக்காரன் மேல் பாய்கிறது. இவனுடைய கோபத்தைக் கண்டு பயந்து கொண்டே காமாட்சி வீட்டிற்குள் செல்கிறாள்.
***
அன்று இரவு பட்டாபியும் சாப்பிடவில்லை காமாட்சியும் சாப்பிடவில்லை. அவள் இரண்டு மூன்று முறை அழைத்தும் தனக்குப் பசிக்கவில்லை என்று சீறி விழுந்தான். அவன் சாப்பிடாததால் அவளும் சாப்பிடவில்லை.

மறுநாள் காலையில் அரை மனதாக சாப்பிட்டுவிட்டு பட்டாபி ஆபீசுக்கு கிளம்பினான். ஆனால் பேசவில்லை. அவள் தலை குனிந்தவாறு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். கால் கட்டை விரலில் 2 துளி கண்ணீர் சொட்டின.

அவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். அவள் மீது திடீரென இரக்கம் தோன்றியது. ஆயினும் தன்னுடைய பொய் கவுரவத்தை விட மனம் வரவில்லை.

காமாட்சியின் நிலைமையை ஆசிரியர் விவரிக்கிறார்: நண்பர் வந்ததைப்பற்றி முன்னாலேயே நினைவு வந்திருக்கக் கூடாதா என்று வருந்துகிறாள். இருந்தாலும் புதிதாகப் பார்க்கும் ஒரு ஆண் மகனிடம் தான் எப்படிப்  பேசியிருக்க முடியும் என்ற ஆட்சேபணையும் அவள் மனதில் தோன்றியது. கணவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் நடுவில் தான் நிற்பதாகப் பாவித்து விட்டானே என்றுதான் அவளுக்குச் சகிக்கவில்லை.

சேஷாத்திரியும் நடந்ததை மறுபரிசீலனை செய்கிறான். தான் வந்துவிட்டுப் போனதை எப்படியம் மனைவி சொல்லியிருப்பாள், ஆனாலும் பட்டாபி ஆற்றங்கரைக்கு ஏன் வரவில்லை என்று தோன்றுகிறது. இளம் மனைவியா அல்லது நண்பனா என்ற கேள்வியில் மனைவி முக்கியமாகப் போய்விட்டது போலும் என்று எண்ணுகிறான்.

அதனால் என்ன மறுபடியும் பட்டாபியின் வீட்டுக்கு போய்ப் பார்க்கலாம் என்று இன்னொரு நாள் வருகிறான்.

அதேசமயம் ஆபீஸில் இருந்து நேராக சேஷாத்ரியின் ஆபிசுக்கு போய் அவனை அழைத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிய பின் வெளியில் எங்காவது சாப்பிட்டு விட்டுப் பிறகு வீட்டிற்கு போகலாம் என்று பட்டாபி கிளம்புகிறான். அதுதான் காமாட்சிக்கு சரியான தண்டனை என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால் அங்கு போன பின்தான் தெரிகிறது சேஷாத்ரி முன்னதாகவே கிளம்பி விட்டான் என்று.

ஆக இப்போது சேஷாத்ரி மீண்டும் பட்டாபியின் வீட்டில் வந்து நிற்கிறான். அவனைக் கண்டதும் ரேழிக்கு விரைந்து வந்த காமாட்சி ஏதோ பேச வாய் எடுத்தாள், ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அதற்குள் சேஷாத்ரி 'இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுக்கொண்டே நகர ஆரம்பித்தான்.

காமாட்சியின் நெஞ்சம் பதறிற்று. தைரியமாக வாயைத்திறந்து கதவு மறைவில் இருந்தபடியே "இப்போ வந்து விடுவார், வந்தா இருக்கச் சொன்னார்" இன்று பெரிய பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஏமாற்றத்தை எதிர்பார்த்திருந்த சேஷாத்திரி வியந்து நின்றான். அதற்குள் காமாட்சி ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டு உட்காரச்சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

ஆனால் வீடு திரும்பிய பட்டாபிக்கு நாற்காலியில் அமர்ந்திருக்கும் சேஷாத்ரியை கண்டவுடன் அசடு வழிகிறது. சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நண்பனை வீட்டில் சாப்பிடச் சொல்ல வேண்டும் என்று பட்டாபிக்கு ஆசை. ஆனால் மனைவியுடன் முதல் நாள் ஏற்பட்ட கோபம் இன்னும் அடங்கவில்லையே, எப்படி அவளிடம் கேட்பது?

சேஷாத்ரிக்கு வேறு மாதிரியான சங்கடம். அன்று இரவு பட்டாபி வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் ஏதோ ஒரு எண்ணம். அதற்கேற்ப காமாட்சி நாற்காலி போட்டு உட்கார வைத்து விட்டாள். ஆனால் ஒருமணி நேரம் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லையே! "சரி நான் வரட்டுமா?" என்று ஏமாற்றத்துடன் கிளம்புகிறான்.

ஆனால் அது பட்டாபிக்கு நிம்மதியை உண்டாக்குகிறது. "சரி, சரி, எப்படியும் அடுத்த சனிக்கிழமை சாப்பிடுவதற்கு வந்துவிடு" என்று நண்பனை வேகமாக  ஏறக்கட்டுவதற்கு முற்படுகிறான். அப்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது.

கூடத்தில் இரண்டு இலைகள் போடப்பட்டு அருகில் பலகைகளும் போடப்பட்டிருந்தன. காமாட்சி கூஜாவில் இருந்து 2 வெள்ளி டம்ளரில் வெந்நீர் வார்த்துக்கொண்டு இருந்தாள். பட்டாபி நிற்பதைக் கண்டு தலை நிமிர்த்திய காமாட்சி தன் வெற்றிப் புன்னகையை மறைத்துக்கொண்டு ‘நண்பரை  சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லுங்கள்’ என்றாள்.

***
பட்டாபிக்கு ஏற்பட்ட எதிர்பாராத வியப்பில் ஒன்றும் தோன்றவில்லை அவனுடைய வைராக்கியம் மனதில் மிக ஆழத்திலிருந்து ஈனஸ்வரத்தில்  கத்தியது அவனுக்குக் கேட்கவில்லை. இருந்தாலும் தன் பெருமையை விட்டுக் கொடுக்காமல், "முன்னாலேயே சொல்றதுக்கென்ன, அவன் போகணுமாம்" என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தான்.

"நான்தான் அவரை இருக்கச் சொன்னேன். நீங்க சொன்னதா சொன்னேன். சாப்பிடாது அனுப்பினால் ஏதாவது நினைச்சுக்கப் போறார்" என்றாள் காமாட்சி.

பட்டாபி முகத்தில் முன்னைவிட அதிகமாக அசடு வழிந்தது.வெளியில் போகக்  கிளம்பிவிட்ட சேஷாத்ரியை அழைத்து "வா, வா, சாப்பிட்டு விட்டுப் போகலாம், சமையல் ஆயிடுத்தாம்" என்றான்.

சாப்பாடு சுவையாக இருந்ததாக திருப்தியோடு சேஷாத்ரி கிளம்புகிறான். பட்டாபி அப்போதுதான் உண்மையைப் போட்டு உடைக்கிறான். "ரெண்டு நாளா எங்களுக்குள்ளே சண்டை. இப்போ சாப்பாடு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. நீ வந்த பின்னாலே ஒருவாறாய் சண்டை நின்றுவிட்டது. இனிமேல் சண்டை வந்தால் சொல்லி அனுப்புகிறேன்" என்கிறான்.

காமாட்சி வெற்றியின் பலனான அலட்சியத்துடன் இந்த சம்பாஷணையைக்  கேட்டுக் கொண்டிருந்தாள். பட்டாபி தன்னைப் பார்ப்பதைக் கண்டு பாசாங்குக்  கோபமும் உண்மைப்  புன்னகையும் சேர்ந்து பிரகாசிக்கும் தன் முகத்தைத்  திருப்பிக் கொண்டாள்.

***

இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கக்கூடிய நிகழ்ச்சிதான். கணவனின் மனதைப் புரிந்து கொள்ளாமல் தவறு நேர்ந்து விட்டால் அதைச் சரியான சமயத்தில் சரிசெய்து எவ்வாறு அவனுடைய அன்பை மீண்டும் பெறுவது என்பதை இயற்கையாகவே பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று கதாசிரியர் அழகாக விளக்குகிறார்.

இது உண்மையில் ஒரு ‘ரொமாண்டிக்’ கதைதான். ஆனால், கதையில் எந்த இடத்திலும் காமாட்சியின் அழகை சேஷாத்ரி கவனித்ததாக எழுதவில்லை. கணவனின் நண்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக காமாட்சியின் பார்வையிலும் அவர் ஏற்றிச் சொல்லவில்லை. புதிதாகத் திருமணமான இளம் மனைவியின் வெகுளித்தனத்தையும், அதைப் புரிந்துகொள்ளாமல் செயல்படும் புதுக்  கணவனின் பேதைமையையும் அதேசமயம் அந்த இருவரின் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளத் தெரியாத திருமணமாகாத இளைஞனின் அசட்டுத்தனத்தையம் ஆசிரியர் இக்கதையில் தெளிவாகக்  கொண்டு வந்திருப்பது அக்காலத்தில் மிகவும் பேசப்பட்டது.

சிறுகதை வளர்ச்சியின் ஆரம்பகாலத்தில் வெளியான கதை இது. உண்மையில் கதையம்சத்தை விட, ஏதோ ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்து மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கோப்பிற்குத்தான் சிறுகதை என்று பெயர் என்பதை ஆங்கில மொழியில் எழுத்தாளர்கள் இலக்கணமாக வகுத்திருந்தார்கள். ஆங்கில மொழியறிவின் காரணமாக அம்மாதிரிக் கட்டமைப்பைத் தமிழிலும் கொண்டுவருவது சிட்டிக்குச் சாத்தியமாகியிருக்கிறது. சிட்டியின் எல்லாக் கதைகளையும் மீண்டும் வெளியிட்டால் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றிற்கு அணிசேர்க்கும் என்றே தோன்றுகிறது.

இன்றும் கூட, பெண்களின் நிலைமை யில் அதிக மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. இப்போதும்  பல வீடுகளில் காமாட்சியைப் போன்ற அந்திமந்தாரைகள் பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அல்லது, திருமணம் ஆகி, கணவனுடன் சரியான புரிதல் ஏற்படும்வரையில் அவர்கள் அந்திமந்தாரைகளாகவே இருக்க நேரிடுகிறது என்றும்  சொல்லலாம்.
****

சென்னை அடையாறு அரசினர் நூலகத்தில் 30-5-2019 அன்று நிகழும் நூல் அறிமுக விழாவில் படிப்பதற்காக நான் எழுதி அனுப்பிய விமர்சனம் இது. இதை என் சார்பில் படிப்பித்த மூத்த எழுத்தாளர் திரு. வையவன் அவர்களுக்கு என் நன்றி!      - இராய  செல்லப்பா  (தற்பொழுது நியூ ஜெர்சியில்).
****

4 கருத்துகள்:

  1. அருமையான நூல் விமர்சனம். நூலைப் படிக்கும் ஆவலை மிகுவித்த பதிவு.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விமர்சனம் சார். அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. இது உண்மையில் ஒரு ‘ரொமாண்டிக்’ கதைதான். ஆனால், கதையில் எந்த இடத்திலும் காமாட்சியின் அழகை சேஷாத்ரி கவனித்ததாக எழுதவில்லை. கணவனின் நண்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக காமாட்சியின் பார்வையிலும் அவர் ஏற்றிச் சொல்லவில்லை. //

    சார் ஹையோ நான் உண்மையிலேயே நினைத்த வரிகளை நீங்க சொல்லியிருக்கீங்க. எவ்வளவு அழகாக ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. அவள் பாத்திரம் தேய்க்கும் இடம்...அப்புறம் அவள் தனியாக இருக்கும் போது நண்பர் வருகை எல்லாம் என்னென்னவோ எழுத சான்ஸ் உண்டு...ஆனால் எத்தனை அழகாக எழுதியிருக்கிறார் என்று நான் ரசித்தேன் சார்.

    இவரது கதைகள் பற்றிய உங்கள் விமர்சனம் அட்டகாசம் சார். உங்கள் எழுத்து நிஜமாகவே வசீகரமான எழுத்துகள்.

    சிட்டி அவர்களின் கதைகள் நெட்டில் கிடைக்குமா? பார்க்கிறேன்....பல சமயங்களில் எனக்குத் தோன்றும் ஆசிரியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுகிறார்கள். அதை வெளியிட எத்தனை மெனக்கிட வேண்டும்.நாம் இப்படி ஓசியில் வாசிக்க நினைக்கிறோமே என்ற குற்ற உணர்வு எனக்கு ஏற்படும்தான். ஆனால் வேறு வழியில்லையே ....என்பதால் இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    அருமை சார்.

    அமெரிக்கா போனதும் நேரம் கிடைக்கிறது போலும். ஹா ஹா ஹா எழுதுங்கள் இப்படி நிறைய அறிமுகப்படுத்துங்கள் சார். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் கதையம்சத்தை விட, ஏதோ ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்து மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கோப்பிற்குத்தான் சிறுகதை என்று பெயர் என்பதை ஆங்கில மொழியில் எழுத்தாளர்கள் இலக்கணமாக வகுத்திருந்தார்கள்.//

    இதை மனதில் குறித்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு