திங்கள், ஜூலை 11, 2022

நயாகராவில் நான் (2022) - 3 (நிறைவு)

நயாகராவில் நான் (2022) - 3 (நிறைவுப்பகுதி)

(அட்லாண்டிக் கடலோரம் )

அமெரிக்காவில் 87ஆவது நாள் (07-7-2022)


‘இரண்டு இரவுகள் + ஒரு பகல்’ என்று ஹோட்டலில் முன்பதிவு  செய்திருந்தோம். இன்று காலை உணவை முடித்துக்கொண்டு பகல் பன்னிரண்டு மணிக்குள் ‘செக்-அவுட்’ செய்யவேண்டும்.


வெட்டி முறித்தது ஒன்றுமில்லை என்றாலும் வெளியூர்ப் பயணம் என்றாலே உடல்  களைத்துப் போகிறது. அறையில் டிவி இருந்தாலும் அமெரிக்க டிவியில் வரும் நிகழ்ச்சிகள் நமது தமிழ் டிவி நிகழ்ச்சிகளுக்குச் சற்றும் குறையாத தரத்தில், ரசிக்க முடியாதவையாகத்தான் இருக்கின்றன. தவறிப்போய் டிவியை ஆன் செய்துவிட்டால், நிகழ்ச்சி நேரத்தைவிட அதில் வரும் விளம்பரங்களின் நேரமே அதிகம். எனவே மூன்று நாளும் டிவி பெட்டியைத் தொடவே இல்லை. 

கப்பலில் நாங்கள் 


நிதானமாக எழுந்தோம். காலை உணவாக, முதல்நாள் இரவில் வாங்கிவந்து, மீந்துவிட்ட, பாசுமதி அரிசியிலான வெஜ் பிரியாணியை பனீர் சேர்த்த பாலக், சன்னா, அல்லது ஏதோ ஒன்றுடன் கலந்து சாப்பிட்டேன். அரிசியை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது.


ஆலப்பாக்கம் என்ற (கடலூர் அருகில் இருந்த) கிராமத்தில் வங்கிக்கிளையைத் திறந்து மேலாளராகப் பணியாற்றியபோது, அரிசியின் முக்கியத்துவத்தை அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான திரு…..பிள்ளை அவர்கள் தன் செயலின் மூலம் எனக்கு உணர்த்தினார்கள்.     


கப்பல் பயணம் -நேற்று விடுபட்டுப்போன படம்

அவருக்கு சுமார் பதினைந்து இருபது ஏக்கர் நன்செய் நிலம் இருந்தது. எல்லாம் அரிசிதான் விளையும். பெருமாள் ஏரிப் பாசனம். வீடும் பெரிய வீடு. நெல் மூட்டைகளும் அரிசி மூட்டைகளும் தனித்தனி அறைகளில் ஆண்டு முழுவதும் இருக்கும். வடலூரில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச ஜோதி தரிசனத்தின்போது இரண்டு மூட்டை அரிசி அன்னதானத்திற்காகக்  கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். எப்போது அவர் வீட்டில் இருந்தாலும் கையில் ஒரு சிறிய துடைப்பத்துடன்தான் காட்சியளிப்பார். குனிந்து பெருக்கிக்கொண்டிருப்பார். தரையில் சிதறிக்கிடக்கும் கடைசி நெல்மணியையும் பொறுக்கியெடுக்கும்வரை அவர் பெருக்கிக்கொண்டே இருப்பார். “ஒவ்வொரு நெல் மணிக்குள்ளும் இருப்பது வெறும் அரிசியில்லை, அது ஓர் உயிர், ஓர் ஆன்மா! எனவே, நெல்லை உருவாக்கும் உழவன், அதில் ஒரு மணியைக்கூட வீணாக்கிவிடக்கூடாது” என்பார்.  (அவர் இப்போது இல்லை. இயற்கை எய்திவிட்டார்). 


அன்றுமுதல் நான் எதை வீணாக்கினாலும் அரிசிச் சோற்றை வீணாக்குவதில்லை. அதிலும் பாசம் மிகுந்த பாசுமதி அரிசியை வீணாக்கலாமா? 


மற்றவர்கள் எழுந்துபோய் ஹோட்டலின் தரைத்தளத்தில் இருந்த காலை உணவுக்கூடத்தில் ரொட்டி, சீரியல், ஜூஸ், காப்பி என்று முடித்துக்கொண்டார்கள். 


பதினோரு மணி ஆகிவிட்டது எங்கள் கார் அங்கிருந்து கிளம்ப. மரங்களுக்கு நடுநடுவே தெரிந்த வெள்ளை நீர்ப்பரப்பில் நயாகராவின் உயிர்த்துடிப்பு தோன்றி மறைந்தது. 


அமெரிக்காவில் எந்தச் சுற்றுலா ஊருக்குப் போனாலும் மியூஸியம், அக்வேரியம் இரண்டும் இருப்பதுண்டு. நயாகரா நகரிலும் இருந்தன. நேரம் கருதி அருகில் இருந்த அக்வேரியத்திற்குச் சென்றோம்.


கடோதத்கஜன் கையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக் எப்படிச் சிறியதாகத் தோன்றுமோ, அதேபோல், நயாகராவின் ஆளுமைக்குச் சற்றும் பொருத்தமில்லாத சிறிய அக்வேரியம் அது.  நுழைந்தவுடன் தரையில் இருந்த தொட்டியில் மூன்று ஸீல்கள்  குதித்துக் கொண்டிருந்தன.    பக்கத்தில், மண்ணில் படுத்து  வெயிலில் குளிர் காய்ந்துகொண்டிருந்தது ஒரு ஸீல். கடலில் மட்டுமே வாழும், குட்டி போட்டுப் பால்கொடுக்கும் பிராணி. இப்படியும் அப்படியுமாகப் புரண்டு படுத்ததே தவிர, எழுந்து தொட்டிக்குள் குதிக்குமா என்று பார்த்தால், கடைசி பரீட்சை எழுதிவிட்டு அசதியோடு படுத்திருக்கும்  பிளஸ் டூ மாணவன் போலவே அது கிடந்தது.


கடல் சிங்கம் -பயிற்சியாளருடன் -1

உள்ளே போனால் அழகழகான நீர்த் தொட்டிகளில் நீர்வாழ் உயிரினங்கள் - குறிப்பாக மீன் இனங்கள், கடற்பாசிகள், ஜெல்லிமீன்கள், பவளப்பாறைகளை உருவாக்கும் பவளப்பூச்சிகள் …இவைதான் இருந்தன. பாம்புகள், ஆமைகள் இல்லை.


ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட பிராணியைப் பற்றி விசேஷமான செய்முறைக் காட்சி நடத்தப்படுகிறது. நாங்கள் பார்த்த அன்று, SEA LION - கடல் சிங்கம் - பற்றிய காட்சி இருந்தது. அக்வேரியத்தின் இரண்டாம் தளத்தில் நடுப்புறமாக அமைந்த பெரிய நீர்த்தொட்டியில் இது நடைபெறுகிறது. 


நன்கு பயிற்சி தரப்பட்ட இரன்டு கடல் சிங்கங்களை  அவற்றின் பயிற்சியாளரான இளம்பெண் ஒருவர், காட்சிப்படுத்தினார். அவரது கை  அசைவுக்கேற்ப  இவை எழுகின்றன, நடக்கின்றன, ஓடுகின்றன, நடனம் ஆடுகின்றன, ஓவென்று ஓசையிடுகின்றன, தொட்டியில் திடுமென்று குதித்து வட்டமாகச் சுழல்கின்றன….. குழந்தைகளுக்குப் பார்க்கப்பார்க்கக் கண்கொள்ளாத காட்சி அது.

கடல் சிங்கம் -பயிற்சியாளருடன் -2


தரைத்தளத்தில் உள்ள கடையில் பஞ்சடைத்த பொம்மைகள், மற்றும் பரிசுப்பொருட்கள் கிடைக்கின்றன. சிலவற்றை வாங்கிக்கொண்டோம்.


பகல் உணவுக்கு மீண்டும் ‘ஜய்க்கா’ விற்கே சென்றோம். சுவையான பஃப்பே  உணவு. பாயசமும் பழக்கூழும் அற்புதம். அவற்றின் சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கொஞ்சம் அதிகப்படியாகவே சாப்பிட்டோம். கொடுத்த காசுக்கு நியாயம் செய்யவேண்டாமா? அத்துடன் மறுபடி எப்போது நயாகராவுக்கு வரப்போகிறோமோ!


நியூ ஜெர்சியை நோக்கிக் கார் புறப்பட்டது. 


இரண்டு நாள் முன்பு நயாகராவை நோக்கிச் சென்றபோது இரவுநேர பயணம் என்பதால் வழியில் எதையும் பார்க்க முடியவில்லை. இப்போது, பகல் நேரப்  பயணம் என்பதால் சூரிய வெளிச்சம் எங்களுக்குப் பல உண்மைகளை எடுத்துக்காட்டியது. 


கடல் சிங்கம் -பயிற்சியாளருடன் -3

நாங்கள் பலமுறை அமெரிக்காவில் பயணம் செய்திருந்தாலும், விவசாய நிலங்களை பார்த்ததில்லை. பால் பண்ணைகளை பார்த்ததில்லை. பயிர்கள் அறுவடை செய்யப்படுவதைப் பார்த்ததில்லை. இப்போது அதெல்லாம் காணக் கிடைத்தன.  நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என்று பச்சைப்பசேல் என்ற சோளப்பயிர் விளையும் பெரிய நிலப்பரப்புகளைக் கண்டோம். கூடவே சிறு சிறு விவசாயமும் நடப்பதைக் கண்டோம். நெடுஞ்சாலையில் இருந்து தங்கள் நிலங்களின் உள்பகுதியில் வீடுகளைக் கட்டிக்கொண்டு விவசாயிகள் வாழ்கிறார்கள். “புதிய விளைபொருட்கள் கிடைக்கும்” - “Fresh produce available”  என்ற பதாகைகள் ஒவ்வொரு வயலின் அருகிலும் காண முடிந்தது. (திராட்சை தோட்டங்கள் இருப்பதை முன்பே சொன்னேன் அல்லவா? அங்குபோய் இலவசமாகவே பழங்களை சுவைபார்க்க முடியும். மதுவையும் சுவை பார்த்து வாங்க முடியும் என்கிறார்கள்).அதேபோல், ஒரு சில பால்பண்ணைகளையும் காண முடிந்தது. அங்கும் ‘பால் கிடைக்கும்’ பதாகை இருந்தது. ஊருக்குப் பொதுவாக ஒரு பால் சேகரிப்பு வண்டி இருந்தது. மாட்டின் சாணத்தைப் பெரிய குவியலாகக் கொட்டி அதன் மீது தார்ப்பாலின் போட்டு, அது காற்றில் நகர்ந்துவிடாமல் இருக்க நூற்றுக்கணக்கான் பழைய டயர்களை அதன்மீது பரப்பியிருந்தார்கள். ஒரு மைல்தூரம் வரை சாண வாசனை மூக்கைத் தடவிக்கொண்டிருந்தது.   சோளப்பயிர்கள்- பல்வேறு உயரங்களில் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் காணப்பட்டன. நீர்வளம் இருப்பதால் பயிரிடும் பருவகாலம் என்று இல்லாமல் எல்லா காலங்களிலும் பயிர்செய்திருக்கவேண்டும். பயிர்களில் பூச்சி பொட்டுகள் அரித்ததுபோல் காணமுடியவில்லை. எங்கும் செழுமைதான். எல்லாமே பசுமைதான். சோளம் என்றால் சாதாரண சோளமா அல்லது மக்காச் சோளமா என்று பயிரை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை. இளம் பயிர்கள். பல இடங்களில் கோதுமைப் பயிரையும் கண்டோம். பஞ்சாபில் காண்பதுபோல மஞ்சள் பூக்கள் திரளாக மலர்ந்திருக்கும் கடுகுச் செடிகள் ஒரு வயலில் கண்ணைக் கவர்ந்தன. எள்ளுச்செடிகளும் சில இடங்களில் தெரிந்தன. அறுவடை செய்யப்பட்ட  சோளத்தை உயரமான உருளைவடிவ சேமிப்புக் கலன்களில் பாதுகாப்பாக வைக்கிறார்கள். இயந்திரத்தின் மூலமே அறுவடை செய்வதால் அதனுடைய வைக்கோல் பெரிய உருளை வடிவத்தில் சுருட்டப்பட்டு, அந்த உருளைகள் மழைபடாமல் இருக்க வெண்மையான பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டு அழகான வரிசையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. 


இந்தியாவை விவசாய நாடு என்போம். ஆனால் அமெரிக்கா தான் இன்று விவசாய நாடு. ஏனென்றால் இங்கு தொழில்துறை என்ற ஒன்று அநேகமாக அழிந்துபோய்விட்டது. அமெரிக்காவின் பயன்பாட்டுப் பொருட்கள் எல்லாமே சீனா, கொரியா, ஜப்பான், இந்தியா, வியட்நாம், பங்களாதேஷ், மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்தே வருகின்றன. அதிலும் 75 சதம் சீனாவிலிருந்துதான். ஆகவே, அமெரிக்காவின் லோக்கல் தொழில் என்றால் அது கார் தயாரிப்போ, கணினித் தயாரிப்போ, ஆயுதத் தயாரிப்போ அல்ல, அது விவசாயம் மட்டுமே என்று தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் விவசாயத்திற்கு ஏராளமான சலுகை வழங்கப்படுகிறது. 


ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கிராமங்களில் கூட, தெருவோரத்தில் குப்பைகள் இல்லை. சாக்கடைகள், சேறு, சகதி இல்லை. கிராமத்துச் சாலைகளிலும் வாகனங்கள் சாலை விதிகளை மதித்தே ஓடுகின்றன. 


குதிரைகளைப்  பல வயல்களில் பார்த்தோம். ஓரிடத்தில் கழுதையைக் கூடப் பார்த்தோம்! (சென்னையில் பார்ப்பது அரிது). ஆனால் பன்றிகளைப்  பார்க்கவில்லை. வளர்ப்பவர்களுக்கு அதிக இலாபம் தரும் உயிரினம். பெரும்பாலும் வெள்ளைப் பன்றிகள்தானாம். 


திரும்பிவரும் வழியில் மீண்டும் இ(த்)தா(க்)காவைக் கடந்தோம். மேடு பள்ளமான பூமி என்பதால் கார்னல் பல்கலைக் கழகம் கண்ணில்படவில்லை.   


இரவு பன்னிரண்டு மணிக்கு நியூ ஜெர்சியை வந்தடைந்தோம். பிறகென்ன, உறக்கம்தான்!


(பயிற்சியாளருடன் கடல் சிங்கம் விளையாடும் வீடியோவைக் கீழே இணைத்துள்ளேன்.)   
    - இராய  செல்லப்பா  -நியூ ஜெர்சியில் இருந்து 

17 கருத்துகள்:

 1. விவசாயத்தில் இந்தியாவை அமெரிக்கா முந்துகிறது என்கிற தகவலுக்கு சந்தோஷப்படவேண்டுமா, பொறாமைப்பட வேண்டுமா தெரியவில்லை~!

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அருமையாக உள்ளன.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. அமெரிக்காவில் விவசாயம் குறித்த தகவல்கள் சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து

  ஏர் முனைக்கு நேர் அங்கே எதுவுமே இல்லே...
  என்றும் அவங்க வாழ்விலே பஞ்சமே இல்லே...

  ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், வள்ளுவர் வாக்கு எந்த நாட்டுக்குப் போனாலும் பொய்ப்பதில்லை!

   நீக்கு
 5. சோளப் பயிர்களையும், சோள கொல்லைகளையும் பற்றி தாங்கள் விவரித்து எழுதி இருந்தது மிகவும் நன்றாக இருந்தது.

  இசைஞானி இளையராஜா அவர்களை தங்களோடு அழைத்துச் சென்று இருந்தால் காரை விட்டு இறங்கி நின்று இந்தப் பாடலைப் பாடியிருப்பார்.


  "சோளம் வெதைக்கையிலே
  சொல்லி புட்டு போன புள்ளே
  சோளம் வெதைக்கையிலே
  சொல்லி புட்டு போன புள்ளே

  சோளம் வெளஞ்சு
  காத்துகிடக்கு
  சோடிக்கிளி இங்கே இருக்கு

  சொன்ன சொல்லு என்ன
  ஆச்சு தங்கமே கட்டழகி
  எனக்கு நல்லதொரு பதில
  சொல்லு குங்கும பொட்டழகி"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, ஆனால் தமிழில் இளையராஜா இப்படிப் பாடினால் இங்குள்ள பெண்களுக்குப் புரியவேண்டுமே!

   நீக்கு
 6. அமெரிக்காவின் விவசாயம் குறித்தத் தகவல்கள் வியப்பினைத் தருகின்றன ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், நண்பரே! அமெரிக்கா என்றால் நாம் நகர்ப்புறங்களை மட்டுமே அறிந்திருக்கிறோம். இங்குள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு நம் கணினிசார் இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆக்வே அமெரிக்காவின் விவசாய வளர்ச்சி நம்க்குத் தெரிவதில்லை.

   நீக்கு
 7. அமெரிக்காவின் கிராமப்புற விவரங்கள் அருமை.

  அமெரிக்காவிலும் சரி கனடாவிலும் சரி விவசாயத்திற்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் கனடாவில் பனி போர்த்தாத மாநிலங்களின் கிராமப்புறங்கள் அத்தனை அழகாக இருக்கும் விளைநிலங்களாகத்தான் இருக்கும். கனடாவில் விவசாயத்திற்கு முக்குயத்துவம் அதிகம்.

  அங்கு விவசாயிகள் சும்மா தம்மாத்துண்டு நிலமா வைத்திருக்கிறார்கள்!!? ஏக்கர் ஏக்கராகப் பெரியதாக வைத்திருக்கிறார்கள்.

  மகன், பெரும்பாலும், கடைகளில் பால், காய், பழங்கள் வாங்குவதில்லை. நேரடியாக உழவர் சந்தைக்குச் சென்று வாங்குகிறான். அங்கு அப்படி பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஊர்களுக்கு அருகில் இருக்கும். கால்நடை மருத்துவர்களே கூட - மாடுகள், வயல்களுக்கான கால்நடைகள் இவற்றிற்கு மருத்துவம் பார்ப்பவர்கள் சிலர் விவசாயமும் செய்கிறார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சைனா பொருட்கள் அமெரிக்காவில் மட்டுமா? இங்கும்தான் புகுந்திருக்கின்றன. அதிகமாகவே.

   கீதா

   நீக்கு
  2. விரைவில் அவர் சொந்தமாகப் பால் பண்ணை, குதிரைப் பண்ணை இன்னும் பலவும் வைத்து அமெரிக்காவின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வருவதற்கு எனது வாழ்த்துகள்!

   நீக்கு
 8. அமெரிக்க கிராமப்புறங்கள் மிக அழகாக இருக்கின்றன. பசுமையாகவும் இருக்கின்றன. அமெரிக்கா என்றால் கணினி என்றுதான் நினைப்போம் ஆனால் அங்கு விவசாயத் துறையும் நல்ல முறையில் இயங்குவதை சில ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

  பயிற்சியாளருடன் கடல்சிங்கம் - காணொளி மிக நன்று.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 9. நானும் சமீபத்தில் நயாகரா சென்று வந்தேன். உங்கள் பதிவை படித்த பிறகு எனக்கு எழுத தயக்கமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன தயக்கம் வேண்டிக்கிடக்கிறது? நயாகரா என்ன என் மாமன் மகளா? அவள் அனைவருக்கும் சொந்தம்! எழுதுங்கள்! இந்தியா போவதற்குள் எழுதிவிடுங்கள். இல்லையேல் சில விஷயங்கள் மறந்துபோகலாம்!

   நீக்கு
 10. நல்ல நீர் வீழ்ச்சி
  நயாகரா மாட்சி
  கதிர் வயல் காட்சி - யாவும்
  கண்டதில் மகிழ்ச்சி!

  நன்றி

  பதிலளிநீக்கு