சனி, ஜூலை 16, 2022

சினிமா டிக்கட், ரயில் டிக்கட், விமான டிக்கட்



சினிமா டிக்கட், ரயில் டிக்கட், விமான டிக்கட் 

(இப்படியும் மனிதர்கள்)

அமெரிக்காவில் 78ஆவது நாள் (28-6-2022)

(தாமதமாகப் பதிவேற்றும் நாள் 15-7-2022)



சேலத்தில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது எதிர்காலம் பற்றிய கவலை மனதில் எழுந்தது. ‘ஹிந்து’வில் வரும் எல்லா விளம்பரங்களுக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.  அதேசமயம் உடனே வேலை கிடைத்து விடக்கூடாதே என்றும் இருந்தது.  ஏனென்றால் படிப்பு பாதியில் நின்று விடுமே என்ற அச்சம்.


‘ஏர் இந்தியா’ நிறுவனத்திலிருந்து சென்னைக்கு நேர்முகம் காணலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. இரவு ரயிலில் முன்பதிவில்லாத டிக்கட் வாங்கி, பெட்டியின் தரைத்தளத்தில் படுத்தபடி சென்னைக்குப் பயணமானேன். 


நான் உள்ளே நுழைந்தபோதே உட்கார இடமின்றி இரண்டுபேர் தரையில் படுத்துக்கொண்டு எல்லா இடத்தையும் தங்களுடையதேபோல் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கையில் பழைய ஹிந்து பேப்பருடன் என்னைப் பார்த்ததுமே சற்று நிமிர்ந்து தங்கள் உடம்புகளைக் குறுக்கிக்கொண்டு தாங்கள்  போட்டுப் படுத்திருந்த தினத்தந்தி மாலைமுரசு பேப்பர்களைக் கிழிந்துவிடாதபடி நகர்த்திக்கொண்டு எனக்கு இடம்கொடுத்தார்கள். தரையில் விரித்தாலும் ஆங்கிலப் பேப்பருக்குத் தனி மரியாதை இருப்பது அன்றுதான் புரிந்தது. (பழைய பேப்பர்களை எடைக்கு வாங்குபவர் கூட, தமிழ் பேப்பரை விட ஆங்கிலப் பேப்பருக்கு கிலோவுக்கு ஐம்பது காசு அதிகம் கொடுப்பார்கள்.) 


ரயில் வண்டியின் கடகடா சப்தத்தில் தூக்கம் வரவில்லை - எங்கள் மூவருக்கும். ஆனால் இரவில் பேசி மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பது சரியில்லை என்பதால் நான் பேச்சைத் தொடங்க விரும்பவில்லை. போதுமான வெளிச்சமில்லாதபோதும் தினத்தந்தியில் படுத்தவர் என்னை விடச்  சில ஆண்டுகள் பெரியவர் என்றும் மாலைமுரசுக்காரர் அவரை விடவும் கொஞ்சம் பெரியவராக இருக்கலாம் என்றும் தோன்றியது. முதலில் பேச ஆரம்பித்தவர் மாலைமுரசுக்காரர். “தம்பி, இன்டர்வியூவுக்குப் போறாப்பலே?” என்றார். 


“ஹிந்து பேப்பரை அழுக்கில்லாமல் மடிச்சு வச்சிருந்தாரே, அதிலிருந்தே தெரியலையா?” என்றார் தினத்தந்திக்காரர். 


எப்படி எளிதாக மனிதர்களை எடைபோட முடிகிறது என்று வியந்தேன்.  “ஆமாங்க” என்று பொதுவாகச் சொன்னேன். 


சீட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி தன்  கணவனைப் பார்த்து, “என்ன, உங்களுக்கு நீங்களே பேசுகிறீர்கள்?” என்று கடிந்துகொண்டாள். அரைத் தூக்கத்திலிருந்து கணவன்,” நா ஒண்ணும் பேசல்லியே” என்று முனகிவிட்டுத் தூங்கத் தொடங்கினான்.      


“என்ன இன்டர்வியூன்னு சொன்னாத் தெரிஞ்சிக்குவோம். வேணான்னா வேணாம்” என்றார் மாலைமுரசு. 


“அட, சொல்லாட்டா விட்டிருவமா? சொல்லுவார்.  அவரோட வேலைக்கு நாம்பளா போட்டி?’ என்றார் தினத்தந்தி.       


“ஒரு விமானக் கம்பெனில இண்டர்வியூ” என்றேன். தூங்கும் கணவனுக்கு அந்தப் பெண்ணால் மீண்டும் இடையூறு வரக்கூடாதே என்று மெல்லிய குரலில் பேசினேன். இப்போது அந்தப் பெண்ணுக்குப் புரிந்துவிட்டது தன் காலடிப் பகுதியில்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று. தன்  குற்ற உணர்ச்சியை ஈடுகட்டுவதுபோல் கணவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.  


விமானக்  கம்பெனி என்றதும் இருவரும் உற்சாகத்துடன் உரையாடத்  தொடங்கிவிட்டார்கள். “சம்பளம் ஆயிரத்தைத் தாண்டுமே, நீங்கள் அதிர்ஷ்டசாலி” என்றார் தந்தி.  “சந்தேகமில்லாமல்” என்றார் முரசு.


நான் சொல்வது 1971-72 ஆம் வருடம். பேங்கில் ப்ரொபெஷனரி ஆபீஸருக்கு முதல் இரண்டு வருடத்திற்கு ஸ்டைபெண்ட் நானூறு ரூபாய்தான் அப்போது. 1977இல் தான் - விலைவாசிப் புள்ளிகளின்படி பஞ்சப்படி கொடுக்கும் வழக்கத்தை சரித்திரத்திலேயே முதல்முறையாக இந்தியன் வங்கி ஆரம்பித்தபோதுதான்- பத்துவருடம் அனுபவமுள்ள அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்க ஆரம்பித்தது. எனவே விமானக் கம்பெனியில் அந்நாளில் ஆயிரம் ரூபாய் என்பது மிகமிகப் பெரிய சம்பளம்தான். 


“அட நீங்க ஒண்ணு, இருப்பது பதினைந்து வேக்கன்சி தான். அதுக்கு நானூறு பேரையாவது கூப்பிட்டிருப்பார்கள். கிடைக்கிறவனுக்குத் தான் கிடைக்கும்” என்றேன் சுவாரசியமில்லாமல்.


“அப்படிச் சொல்லாதீங்க தம்பி, நான் எம் ஏ முடிச்சிட்டு நாலு வருஷமா ஜிங்கி அடிக்கிறேன். எதிர்வீட்டுப் பொண்ணு பிஎஸ்சி முடிச்சிட்டு ஆறே மாசத்துல கோஆப்பரேட்டிவ் பேங்க்குல சேர்ந்துட்டா” என்றார் முரசு.      


“நான் மட்டும் என்னவாம், இஞ்சினீரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா அலையறேன். ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது” என்றார் தந்தி. 


அடப்பாவிகளே, நீங்கள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்ட மாளிகை. நானோ கொட்டிக்கிடக்கும் செங்கல்! இன்னும் படிப்பே முடியவில்லை என்று சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.


“பணமெல்லாம் ரெடி பண்ணீட்டிங்க தானே?” என்றார் முரசு.   ஏர் இந்தியாவில் வேலைக்குப் பணம் வாங்குவார்களா? தெரியாது. 


“இப்ப எல்லாம் வட்டம், மாவட்டம் எல்லாருக்கும் ஒரு ‘ரேட்’ உண்டு தம்பி! அதைக் கொடுத்தா மட்டும்தான் வேலை நடக்கும். அந்தப் பொண்ணு 25 ரூபா கொடுத்தாளாம்.”


“அப்படியா, கோ-ஆபரேட்டிவ் பேங்குக்கே இருபத்தஞ்சா?” என்று வாயைப் பிளந்தார் தந்தி. அது உண்மைதான் என்பது எனக்கும் தெரியும். என்னுடைய பிஎஸ்சி முடித்த தோழன் ஒருவன் அதைக் கொடுத்துத்தான் வேலூரில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் இருநூற்று நாற்பதுதான். 


“எங்கிட்ட பணமெல்லாம் கிடையாதுங்க. அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூக்குவுக்குக் கூப்பிட்டிருக்காங்க. ரயில்சார்ஜ் கொடுத்திடுவாங்க. அதனால் போறேன். கெடைக்காட்டி நஷ்டமில்லே. எப்படியும் ஆறுமாசம் இன்னும் படிக்கணுமே” என்றேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள்.


“நல்ல காரியம் பண்ணினீங்க தம்பி, படிக்கிறப்பவே வேலை தேடினா எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள கிடைச்சுடும். எங்களை மாதிரி இருக்காதீங்க” என்றார்கள் ஒரே குரலில். “காட்பாடி வரும்போது ஒங்க பேரைச் சொல்லி எல்லாரும் டீ சாப்பிடலாம், சரியா?” என்று படுத்துக்கொண்டார்கள். எனக்கு இன்னும் சற்று அதிகமாகவே படுக்க இடம் கொடுத்தார்கள்.   


ஆனால் காட்பாடி வந்தபோது மூவருமே நன்றாக உறங்கிவிட்டோம். அதனால் என் டீ காசு தப்பியது. சென்னை சென்டிரலில் நான் இறங்கியபோது பெட்டியே காலியாக இருந்தது. பாதிப்பேர் ஆவடியில், மீதிப்பேர் அம்பத்தூரில் அல்லது பெரம்பூரில் இறங்கிவிட்டிருக்கவேண்டும். அப்போதெல்லாம் எல்லா ரயிலும் பேசின்பிரிட்ஜில் ஒருமணிநேரம் நிற்கும்.    


ரயில் நிலையத்திலேயே உடலையும் முகத்தையும் கழுவிக்கொண்டு ஒரு காப்பி அருந்தினேன். எனக்கு இன்டர்வியூ நடக்கவிருந்த இடம் மவுண்ட் ரோடில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கட்டிடத்தின் தரைத்தளம்.  அந்த இடத்திற்கு எப்படிப் போகவேண்டும் என்று விசாரித்தேன். நான் சென்னைக்கு வருவது அதுதான் இரண்டாவது தடவை. அதிகம் தெரியாது. ஆட்டோவில் போகலாம் என்றார்கள். 


“வேண்டாம் தம்பி, நீங்கள் ஊருக்குப் புதியவர் என்றால் ஆட்டோக்காரர்கள் தீட்டி விடுவார்கள். பஸ்சில் போங்கள்” என்றார் ஒரு நல்லவர். ‘ஜிஎச்’ வாசலில் 11 நம்பர் பஸ் கிடைக்கும் என்றார்.  


சரி, ஜிஎச்-சுக்கு எப்படிப் போகவேண்டும்? 


ரயில் நிலையத்தில் எல்லாருக்கும் வேகம்தானே! சிலர் ரயிலை நோக்கி வேகமாகவும் பிறர், ரயிலை விட்டிறங்கி வேகமாகவும் நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். நிலையத்தின் வாசலுக்கு வந்துவிட்டேன். அப்போது சிகப்பு முண்டாசு கட்டிக்கொண்டிருந்த  ஒரு போர்ட்டரிடம் கேட்டேன்.  அலட்சியமாகப் பார்த்தார்.


“ஜிஎச் சுக்குப் போகவேண்டுமா? நேராக நடந்து போங்கள். மெயின் ரோடில் கார் பஸ் எல்லாம் போய்க்கொண்டே இருக்கும். நடுவில் புகுந்து கண்ணை மூடிக் கொள்ளுங்கள். யாராவது உங்களை ஜிஎச் சில் சேர்த்துவிடுவார்கள்” என்றார். 


அபசகுனம் மாதிரிப் பேசுகிறாரே என்று கோபத்துடன் கண்களை அகல விரித்தேன். எதிரில் தெரிந்தது General Hospital என்ற பெரிய எழுத்துக்கள்! மிகுந்த சிரமப்பட்டு சாலையைக் கடந்தேன். அப்போது ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் கிடையாது. சுரங்கப்பாதை கிடையாது. ஒரே ஒரு போலீஸ்காரர் தன் கைகளால் இயன்றமட்டும் போக்குவரத்தைச் சீர் செய்துகொண்டிருந்தார். 


எட்டரை மணிக்கு ஐஓபி கட்டிடத்தை அடைந்தேன். தரைத் தளத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒரு பக்கமும், ஏர் இந்தியா இன்னொரு பக்கமுமாகத் தங்கள் அலுவலகங்களை வைத்திருந்தார்கள்.  பூங்கொத்து  விற்கும் கடையோ அல்லது  ஜூஸ் கடையோ இருந்ததாகவும்  நினைவு. என்னைப்போலவே இன்னும் நான்கைந்துபேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். வசதியான குடும்பத்தவர்கள் என்று நடை, உடை,பாவனைகளைப்  பார்த்ததும் தெரிந்தது. இவர்களுக்கு மத்தியில் எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது! 


அவர்களில் ஒருவன் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டே என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டினான். “சாரி” என்றேன். அருவருப்பாக என்னைப் பார்த்தபடி, “சிகரெட் கூடப் பிடிக்காதவனுக்கு ஏர் இந்தியாவில் வேலை கிடைக்குமா?” என்று சிரித்தான். மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். அவர்களுக்கும் ஆளுக்கு ஒரு சிகரெட் கிடைத்தது. 


நான் இன்னும் படிப்பையே முடிக்காமல் இன்டர்வியூவிற்கு வந்ததைத் தெரிந்துகொண்டதும் அவர்கள் ஆக்ரோஷமாகிப் போனார்கள். பட்ட மேற்படிப்பு முடித்து மூன்று நான்கு வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காமல் அவர்கள் இருக்கும்போது, எனக்கு ஏன்  இவ்வளவு பேராசை என்றார்கள். “பேசாமல் திரும்பிப் போ. எங்களுக்குப் போட்டியாவது குறையும்” என்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலைச் சொல்லி மாளாது. 


இன்டர்வியூ  ஆரம்பித்தது.


நிலைய மேலாளர் (என்று தான் நினைக்கிறேன்)  நேர்காணல் நடத்தினார். தனியொருவர். மூன்று  பேராவது இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. சிறிது நேரம் கழித்து இரண்டு விமான பணிப்பெண்கள் தங்களுக்குரிய சீருடையில் திடுமென்று  உள்ளே நுழைந்தார்கள்.  நேர்காணலைப்  பற்றிக்  கொஞ்சமும் கவலைப்படாமல் மேலாளருடன் பேசமுற்பட்டார்கள். 


“நான் நேர்காணல் நடத்தவேண்டும்!” என்று  மேலாளர் கெஞ்சினார். 


“ஓகே” என்று அவர்கள் கொஞ்சலாகக் கூறியபடியே இன்னொரு அறைக்குள் சென்று மறைந்தார்கள். 


மேலாளர் என்னுடைய கல்விச் சான்றிதழ்களைப்  பார்த்தார்.  அப்போது இருவருக்கும் பெரிய கண்ணாடி டம்ளர்களில் ஆரஞ்சு ஜூஸ் வந்தது. “ஆப்பிள் ஜூஸ் வேண்டுமானாலும் கிடைக்கும்” என்றார்.  வேண்டாம் என்று ஆரஞ்சு ஜூஸ் குடித்தேன்.


“இதுவரை விமானத்தில் பயணம் செய்தது உண்டா?” என்றார். இல்லை என்றேன்.


“டோன்ட் ஒர்ரி ! நானும் இதுக்கு வேலை கிடைத்த பிறகு தான் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்தேன்”  என்று சிரித்தார்.


அதன் பிறகு, “இந்த வேலைக்கு வரவேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?” என்றார். 


நான் விளக்கினேன்.  சராசரி இந்திய இளைஞனுக்கு தான் விரும்பும் வேலைக்குச் செல்லும் ஆடம்பரம் கிடையாதே!  கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்வதுதானே அவன் முன்னால் உள்ள ஒரே வாய்ப்பு!  இந்த வேலைக்கு விண்ணப்பித்தேன்.  நேர்காணலுக்கு வரச்  சொன்னீர்கள், வந்திருக்கிறேன்.


அவர் எழுந்து என் தோள் மீது கை வைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.               “ஒருவேளை உங்களுக்கு சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை கிடைத்தால் போவீர்களா?” என்றார்.


“அதற்காகவா எம்எஸ்சி படித்தேன்?” என்றேன் எரிச்சலுடன். 


“குட்! ரயில்வேயில் டிக்கெட் கொடுக்கும் வேலை கிடைத்தால் போவீர்களா?”


“நிச்சயம் மாட்டேன்!”


“அப்படியானால் இந்த டிராஃபிக்  அசிஸ்டண்ட் வேலைக்கு மட்டும் ஏன் வந்தீர்கள்?” என்றார். 


அப்போதுதான் புரிந்தது,  நான் விண்ணப்பித்திருந்த வேலை, கவுண்ட்டரில்  அமர்ந்துகொண்டு டிக்கட் கொடுப்பது என்று!  அதற்காகவா இவ்வளவு சம்பளம்? 


"மன்னிக்க வேண்டும் சார்! நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருகிறேன். பேப்பரில் வரும் வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பம் போட்டேன். எப்படியும் வேலை கிடைக்க ஆறு மாதங்களாவது ஆகும். அதற்குள் படிப்பு முடிந்துவிடும். வெளிவந்தவுடனே வேலையில் சேர்ந்துவிட்டால் குடும்பத்தைக் காப்பாற்ற வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். ஏர் இந்தியா என்றவுடன் ஒரு கவர்ச்சி இருந்தது. வேலையின் தன்மை குறித்து  எனக்கு ஒன்றுமே தெரியாது" என்றேன்.


"உங்கள் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டுகிறேன். எங்கள் நிறுவனத்தில் இது ஒரு கிளார்க் வேலை மாதிரிதான். இதில் சேர்ந்தால் முன்னேற வழியில்லை. வேலையிலும் சவால்கள் ஏதுமில்லை. ஆறே மாதங்களில் உங்களைப் போன்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவீர்கள். உங்கள் கல்விச் சான்றிதழ்களைப் பார்த்தேன். நீங்கள் கணிதத்துறையில் முன்னேறும் வாய்ப்பு மிகுதி. எனவே ஒரு கல்லூரியில் லெக்சரராகச் சேருங்கள். பொன்னான எதிர்காலம் இருக்கும்" என்றார் அவர்.  


கல்விச் சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். நன்றி சொன்னேன். "என்னை உங்கள் மூத்த சகோதரனாக எண்ணிக்கொள்ளுங்கள்.  இந்த ஐஓபி கட்டிடத்துக்கு மறுபடியும் வராதீர்கள்!" என்று விடைகொடுத்தார் அவர்.


வெளியில் வந்தவுடன் எனது போட்டியாளர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள். நீண்ட நேரமாக எனக்கு நேர்காணல் நடந்ததால் எனக்குத்தான் வேலை கிடைத்துவிட்டது என்று அவர்கள் நம்பிவிட்டார்கள். விஷயத்தைச் சொன்னதும் அனைவருக்கும் நிம்மதி. கலகலவென்று சிரித்தார்கள். "சபாஷ்! எங்களில் ஒருவர்தான் உங்களுக்கு விமான டிக்கட் கொடுக்கப்போகிறோம்! மீண்டும் சந்திப்போம்" என்றார்கள். 


அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் ஐஓபி கட்டிடத்தை மட்டும் ஆறுமாதம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 


விதியின் விளையாட்டு! 


(நாளை முடியும்)

                                -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து  


இதன் அடுத்த    பகுதி -" மீண்டும் அதே கட்டிடம்" படிக்க இங்கே சொடுக்கவும்.


20 கருத்துகள்:

  1. நல்ல அனுபவம் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. உண்மையை சொன்னால் உண்மை நிலைமையும் தானே வந்து காப்பாற்றுகிறது... அருமை...

    பதிலளிநீக்கு
  3. இதைப் படித்தவுடன் நானும் இந்தியன் ஏர்லைன்ஸ் புரோகிராமர் வேலைக்கு 1972 இல் சென்னை வந்தது ஞாபகம் வந்தது. நான் அப்போது இஸ்ரோவில் திருவனந்தபுரத்தில் ஜூனியர் புரோகிராமர் வேலையில் இருந்தேன். மூன்று கட்ட தேர்வு அது. முதல் தேர்வு மெட்றாஸில் மீனம்பாக்கத்தில். அந்த aptitude டெஸ்ட் பாஸ் செய்தவர்கள் டெல்லி செல்ல வேண்டும். டெல்லியில் IBM கம்பெனி டெஸ்ட் முதலில் . அதில் வடிகட்டப் பட்டவர்களுக்கு அடுத்த நாள் எழுத்து தேர்வு. பாராளுமன்ற தெருவில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் தலைமையகத்தில். அதில் வடிகட்டப் பட்டவர்கள் அடுத்த நாள் நேர்காணலுக்கு அழைக்கப் பட்டனர். நேர்காணலில் நான் வேலை செய்யும் கம்ப்யூட்டர் IBM 360 என்றபோது அதிலேயே இருங்கள் முன்னுக்கு வரலாம் என்று கூறி அனுப்பினர். இங்கே இப்போது தான் IBM 1410 வாங்குகிறோம் என்று அனுப்பினர். உங்கள் அனுபவமும் இதை ஒட்டியே இருக்கிறது. திருவனந்தபுரம் டெல்லி ரயில் பயண கட்டணம் தரப்பட்டது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக எழுதுகிறீர்கள்! உங்களுக்கென்று இணையதளம் / வலைப்பூ அமைத்துக்கொண்டால் உங்களில் ஒளிந்திருக்கும் எழுத்துத் திறமை அனைத்தையும் வெளிக்கொண்டுவர முடியுமே! செய்வீர்களா, செய்வீர்களா?

      நீக்கு
  4. சார் ரயில் பயணம் பற்றி சொன்னது மூன்று பேர் படுக்கும் அளவு தரையில் இடம் இருந்ததா...அப்போது பெட்டிகள் பெரிதாக இருக்குமோ?

    அப்போதே பேங்க் கோ ஆப்பரேட்டிவ் பாங்க பாண்டியன் கிராம வங்கி இதுக்கெல்லாம் பணம் கொடுத்தால் வேலை என்பது தெரிந்திருந்தது ஆனால் 25 அம்மாடியோவ்...நான் வங்கி வேலைக்கான தேர்வுகள் எழுதிய நினைவுகள் எவ்வளவு எழுதியிருப்பேன்!

    உங்களின் ஒவ்வொரு அனுபவமும் வியக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கிறது இப்போது வாசிக்க ஆனால் அப்போதைய உங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும்.

    நானும் பட்டப்படிப்பு மேற்படிப்பு முடித்ததும் எதிர்காலம் குறித்த கவலைகளுடன் அலைந்த காலம் விவரிக்க முடியாத ஒன்று. ஏதேதோ வேலைகள் செய்து அதன் பின் ஆசிரியப் பணி கிடைக்க பணம் கொடுத்துதான் வாங்க வேண்டியதானது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன், 1960 களிலேயே கேரளப் பள்ளிகளில் (குறிப்பாக கிறிஸ்தவர் பள்ளிகளில்) ஆசிரியப் பணி வேண்டுமானால் எக்கச்சக்கமாகப் பணம் கேட்பார்கள் என்று! பாவம், அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு!

      நீக்கு
  6. ஹிந்து வை விட தந்தியும் முரசும் விலை குறைவு!

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போலவே சுவையான கட்டுரை . ஹிந்துவை விட தந்தியும் முரசும் விலை குறைவு . அதற்கு ,அவை அச்சான காகிதத்தின் தரமும் முக்கிய காரணம் . அதுவே பழைய பேப்பர் காரன் கொடுக்கும் விலையில் உள்ள வித்யாசத்துக்கும் காரணம் . அதில் அச்சிடப் பட்ட மொழி காரணமில்லை .

    பதிலளிநீக்கு
  8. அட! என்ன ஒற்றுமை! நானும் பட்டப் படிப்பு படிக்கும் பொழுதே ஏர் இந்தியாவில் ஏர் ஹோஸ்டிங் வேலைக்கு விண்ணப்பித்தேன். இண்டர் வியூவிற்கு அழைப்பு வந்ததும் எங்கள் குடும்பத்தில் பலருக்கு அதிர்ச்சி! எங்கள் உறவினர் ஒருவர் ஏர் ஃபிரான்சில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் அம்மா அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவரும் அவருடைய மகளும்," ஏர் ஹோஸ்டஸ் வேலை என்பது சினிமாவில் நடிப்பது போல்தான்.Coffee, tea or me என்ற புத்தகம் தருகிறேன், படித்துப்பார்" என்றெல்லாம் என்னை மூளைச்சலவை செய்தார்கள். எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. திருமணமாகி என்னுடைய விமான பயணத்தில் என் கணவர், விமான பணிப்பெண்களை காட்டி,"இந்த வேலைக்கா முயற்சித்தாய்? ஹோட்டலில் சர்வர் வேலை செய்வது போன்றதுதான் இது" என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏர் ஹோஸ்டஸ் ஆகியிருந்தால் ஹாலிவுட் சினிமாவில் இல்லாவிடினும் காஞ்சனா மாதிரி இந்திய சினிமாவிலாவது நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும், உலகம் முழுவதும் பெயர் பரவியிருக்கும், நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டீர்களே!

      நீக்கு
  9. அந்தக்கால இளைஞர்கள் அனைவருக்கும் இரயிலில் பேப்பரில் படுத்த அனுபவம் இருக்கும் என்றே தோன்றுகிறது உங்கள் பதிவைப் பார்த்ததும்! - சூப்பர் - சுந்தரராஜன்

    பதிலளிநீக்கு
  10. நானும் , சென்னை , IBM test. எழுதி தேர்வாகி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? பிறகு ஏன் அப்போதே எனக்குத் தகவல் தரவில்லை? நான் உங்களுக்குப் போட்டியாக வந்துவிடுவேன் என்றா? ஏன் வாழக்கையின் போக்கையே மாற்றிவிட்டீர்களே நண்பரே!

      நீக்கு
  11. GH அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய பெரிய குதிரைகளில் காவலர் வலம் வருவார்களே அதுபற்றிய செய்தி இல்லையே, ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்தபொழுது குதிரை காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாம். ஆகவே செயல்பாட்டில் இறங்கவில்லையாம்!

      நீக்கு
  12. கம்பீரமாக பெரிய குதிரைகள் வலம் வரும் ( சில சமயம் இடம் வரம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பீரமாக பெரிய குதிரைகள் வலம் வரும் ( சில சமயம் இடம் வரும்)

      நீக்கு
  13. * மாலை முரசு, தினத்தந்தி என்று அடையாளப் படுத்தி எழுதுவதை ரசித்தேன்.
    * பழைய நாள்களை நினைவுகூரும் உங்கள் எழுத்துகள் பொக்கிஷம்.
    ...மீ.மணிகண்டன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினத்தந்தியும் மாலைமுரசும் தமிழின் மறக்கமுடியாத சின்னங்கள். இந்த இரண்டும் இல்லையென்றால் அடித்தள மக்களில் 50% மக்கள் தமிழ் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்திருப்பார்கள். அந்த வகையில் இவ்விரண்டு பத்திரிகைகளையும் துவக்கி நடத்தி நிலைபெறச்செய்த சி.பா.ஆதித்தனார்தான் 'தமிழர்தந்தை' என்ற அடைமொழிக்குத் தகுதியானவர்!

      நீக்கு