மணிகர்ணிகா இன்று வர மாட்டாள் (5) தொடர்கதை
(அமெரிக்காவில் 102 ஆவது நாள்: 22-7-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் இரண்டாம் பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (2)" படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் மூன்றாம் பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (3)" படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் நான்காம் பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (4)" படிக்க இங்கே சொடுக்கவும்.
(அமெரிக்காவில் 102 வது நாள்: 22-7-2022)
மறுநாள் மாலை வங்கி முடிந்து வாசலுக்கு வந்தாள் மயூரி. பெங்களூரில் இருந்து அண்மையில் தான் இந்த ஊருக்கு மாறுதல் கிடைத்திருந்தது. ஸ்கூட்டர் மட்டுமின்றி மோட்டார் பைக்கும் ஓட்டக் கூடியவள் என்பதால் வாரம் ஒரு முறை கணவனுடைய மோட்டார் பைக்கை எடுத்து வேகமாக ஓட்டுவாள். சப்பையான ஸ்கூட்டி, வீகோ போன்ற வண்டிகளை அவள் தொடமாட்டாள். அன்றும் மோட்டார் பைக்கில் தான் வந்திருந்தாள்.
ராயல் என்பீல்டு மோட்டார் பைக் |
கனம் மிகுந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் பைக்கை அவள் அனாயாசமாக ஓட்டுவதைக் கண்டு தெருவே பிரமித்து நிற்கும். அவளுடைய எட்டு வயது மகன், அப்பாவுடன் காரில் போவதை விடவும் அம்மாவுடன் பைக்கில் வேகமாகப் போவதையே மிகவும் விரும்புவான்.
மயூரி தன் என்ஃபீல்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது அங்கு தற்செயலாக வந்தான், கிரீஷ். திலகாவின் கணவன். மயூரியும் திலகாவும் அருகருகே அமர்ந்து பணியாற்றுவதோடு, அவர்கள் வீடுகளும் அதிக தூரத்தில் இல்லை. அடிக்கடி திலகா இவள் வீட்டுக்கு வருவதுண்டு. பேச்சுவாக்கில் தன் கணவன் தொடர்ந்து ஒரு கம்பெனியில் நீடிக்காமல் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதைச் சொல்லி வருத்தப்படுவாள்.
“வணக்கம் மயூரி! நான் வருவது திலகாவுக்குத் தெரியாது. அவள் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள் என்று நினைக்கிறேன். இல்லையா?”
“ஆமாம். திலகா உடம்பு சரியில்லை என்று ஒரு மணி நேரம் முன்பே பர்மிஷனில் சென்று விட்டாளே!”
“அப்படியா?” என்று பதறினான் கிரீஷ். “என்ன விஷயமாம்? என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே” என்றான். மொபைலில் மனைவியைத்
சோனாக்ஷி சின்ஹா பைக் கில் |
தொடர்புகொள்ள முனைந்தான். லைன் போகவில்லை.
"பெரிதாக ஒன்றும் இல்லை. வயிறு சரியில்லை என்றுதான் சொன்னாள். சரி, உங்களை எங்கேயாவது ட்ராப் செய்ய வேண்டுமா? நான் வேளச்சேரி வழியாகப் போகிறேன்."
"அப்படியா, ரொம்ப நல்லதாகப் போயிற்று. நான் குருநானக் காலேஜ் அருகில் இறங்கிக்கொள்கிறேன்" என்றான் கிரீஷ்.
வண்டியை ஸ்டார்ட் செய்தாள் மயூரி. அப்பொழுது எதிர்ப்பக்கமிருந்த சந்திலிருந்து ஒரு பெண்மணி மயூரியை நோக்கித் தன் கையை அசைத்தபடி வேகமாக வந்தாள். அவள் கையில் ஒரு பாஸ்புத்தகமும் இரண்டு செக் புத்தகங்களும் இருந்தன. அவளும் இதே வங்கியின் வாடிக்கையாளர்தான். பரமேஸ்வரி. ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தையல்காரியாக இருந்தாள்.
“நேற்று உங்கள் பேங்க் முன்னால் இதெல்லாம் கிடந்தது மேடம்! யாருடையதோ தெரியவில்லை. காலையிலிருந்து வரணும்னு பார்த்தேன். முடியலை” என்று மயூரியிடம் கொடுத்தாள். “இதை உரியவரிடம் சேர்த்துவிடுங்கள்.”
மயூரியின் கைகள் வண்டியின் இரண்டு கைப்பிடிகளிலும் பதிந்திருந்ததால், கிரீஷ் பக்கம் கைகாட்டினாள். கிரீஷ் அவற்றை வாங்கித் தன் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
நெருக்கடி மிகுந்த சர்தார் பட்டேல் சாலையில் அவள் அயராமல் மிகவும் இயல்பாக வண்டி ஓட்டும் சாதுர்யத்தைக் கண்டு வியந்தான்.
ஃபீனிக்ஸ் மால் நெருங்கியபோது, "மயூரி, இப் யு டோண்ட் மிஸ்டேக் மீ, ஒரு ஐஸ்காபி சாப்பிடலாமா?" கிரீஷ் மெதுவாகக் கேட்டான்.
"நோ இஷ்யூ" என்று வண்டியை நிறுத்தினாள் மயூரி.
மாலின் மூன்றாவது தளத்தில் இருந்த ஐஸ்காபி ஷாப்பில் நுழைந்தார்கள். நல்ல கூட்டம். நின்றுகொள்ளத்தான் இடம் இருந்தது.
காபி சாப்பிடும் நேரம் தானே உரையாடல்களுக்கு உகந்த நேரம்! “நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்?” என்று ஆரம்பித்தாள் மயூரி.
“ஒரு அமெரிக்கன் பார்மா கம்பெனியில் ரீஜினல் மேனேஜராகக் கிடைத்திருக்கிறது. விரைவில் சேரப்போகிறேன்” என்றான் கிரீஷ். காபிக்கு அவனே பணம்கொடுத்தான்.
“லிஃப்ட் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. புதிய கம்பெனியில் சேர்ந்தவுடன் திலகா உங்களுக்கு பார்ட்டி கொடுப்பாள். கட்டாயம் வரவேண்டும்” என்றான் கிரீஷ்.
மால் அருகில் வழக்கம்போலப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதன் நடுவே புகுந்து திறமையாகத் தன் பைக்கைச் செலுத்திச் சென்றாள் மயூரி. அவள் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகுதான் கிரீஷ் தன் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். பாஸ் புத்தகமும் செக் புத்தகமும் பத்திரமாக இருந்ததைக் கையால் தொட்டு உறுதிப்படுத்திக்கொண்டான். வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக இவற்றை திலகாவிடம் கொடுத்துவிடவேண்டும்.
கிழக்கு தாம்பரத்தில் இருந்த தன் வீட்டை மயூரி அடைந்தபோது அவளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. திலகா அவளுக்காகக் காத்திருந்தாள்!
“என்னடி பர்மிஷன் போட்டுவிட்டு முன்னாடியே கிளம்பிவிட்டாய். டாக்டரிடம் போனியா? என்ன சொன்னார்?” என்ற திலகா, “அம்மா எங்க ரெண்டு பேருக்கும் டிகிரி காப்பி கொடுங்க” என்று தன் மாமியாரிடம் கூறிவிட்டு கால் கை கழுவிக்கொண்டு வந்தாள்.
மாமியார் சிரித்தார். “அசட்டுப் பெண்ணே! திலகா சொன்ன விஷயத்துக்கு டிகிரி காப்பி கூடாதும்மா! திரட்டுப்பால் தான் கொடுக்கணும்!” என்றவர், இரண்டு சிறு கிண்ணங்களில் திரட்டுப்பாலும் ஸ்பூனும் கொண்டுவந்து வைத்தார்.
“அப்படியா விஷயம்?” என்று திலகாவை இறுகக் கட்டிக்கொண்டாள் மயூரி. “அதான் லேடி டாக்டரைப் பார்க்கணும்னு சீக்கிரம் கெளம்பினியா? என்னைக் கூப்பிட்டிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?”
“அதில்லடி மயூரி, முதல் தடவை தப்பிவிட்டதில்லையா, அதனால எனக்கே கூச்சமா இருந்தது. டாக்டர் கன்பர்ம் பண்ண பிறகு சொல்லலாம்னு இருந்தேன். இப்பப் பாரேன், ஒனக்கு தான் மொதல்ல சொல்லியிருக்கேன். இன்னும் அவருக்குக் கூட தெரியாது” என்றாள் திலகா நாணத்துடன். உண்மைதான் அந்தக் கருச்சிதைவு ஏற்பட்டதில் இருந்து அவள் சலிப்பும் அவநம்பிக்கையுமாகத் தான் இருந்தாள்.
மாமியார் திலகாவை அன்புடன் அணைத்துக்கொண்டு, ”கவலைப்படாதேம்மா! கடவுள் இனிமே ஒன்ன சோதிக்கமாட்டார். பழசை எல்லாம் மறந்துடு. இனி ஒனக்கு நல்ல காலம்தான்!” என்று ஆறுதல் சொன்னார்.
“ஆமாம் மாமி, இந்தக் கொழந்தையோட ராசியாவது, அவர் ஒரு நல்ல வேலைல நிரந்தரமா சேரணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க. அதுதான் எனக்கு இருக்கும் ஒரே கோரிக்கை” என்று தலையைக் குனிந்து வணங்கினாள். “நல்லதே நடக்கும்” என்று மாமியார் வாழ்த்தினார். “இதை உன் புருஷனுக்குக் குடு” என்று சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் திரட்டுப்பாலையும் கொடுத்தார்.
கிரீஷ் வங்கிக்கு வந்ததையும், இருவரும் மாலில் ஐஸ் காப்பி சாப்பிட்டதையும் மயூரி சொன்னதும் சுருக்கென்றது திலகாவுக்கு. தனக்குத் தெரியாமல் அவர் அந்த ஏரியாவுக்குப் போகவேண்டிய அவசியம் என்ன? டாக்டரின் கிளினிக்கில் இருந்து போன் செய்தபோது ஏன் அவர் எடுக்கவில்லை?
“அவர் ஏதாவது சொன்னாரா?” என்றாள் திலகா.
“நல்ல விஷயம் தாண்டி சொன்னார்! ஏதோ ஒரு அமெரிக்க பார்மா கம்பனியில் ரீஜினல் மேனேஜராகக் கிடைத்திருக்கிறதாம். அதற்காக நீ விரைவில் பார்ட்டி கொடுக்கப்போவதாகவும் சொன்னார்.”
“ஆமாண்டி, அதில் போய்ச் சேர்ந்தவுடன் உங்களுக்கெல்லாம் நிச்சயம் பார்ட்டி கொடுக்கிறேன்” என்று புன்முறுவலுடன் கூறிவிட்டுக் கிளம்பினாள் திலகா.
‘எப்படியெல்லாம் பொய் சொல்லத் தெரிகிறது இந்த மனுஷனுக்கு! நல்ல வேளை, மயூரியிடம் கைமாத்து கேட்காமல் போனாரே’ என்று ஆறுதல் அடைந்தது அவள் மனம்.
ஆட்டோவில் அமர்ந்துகொண்டு, கணவனை மொபைலில் அழைத்தாள். “ஹலோ” என்றான் கிரீஷ். “என்னடா கண்ணு ஆச்சு? ஆபீசிலிருந்து முன்னாடியே கெளம்பிட்டியாமே?” என்று கொஞ்சலாகக் கேட்டான்.
ஆட்டோ டிரைவர் எதிரில் தன் கோபத்தைக் காட்டவிரும்பாமல் அடக்கிக்கொண்ட திலகா, "கங்கிராஜூலேஷன்ஸ்! ரீஜினல் மேனேஜர் ஆகப் போகிறீர்களாமே!” என்று சற்றே கேலியாகக் கேட்டாள்.
அடுத்த நிமிடம் கிரீஷின் போன் துண்டிக்கப்பட்டது. ‘வரட்டும், பார்த்துக் கொள்கிறேன்; இன்னும் எத்தனை காலம்தான் இப்படிப் பொய் சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறாரோ!’ என்று மனதை இறுக்கிக்கொண்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள்.
*****
கிரீஷ் அடிப்படையில் நல்லவன் தான். பட்டப்படிப்பு முடிந்ததும் தகப்பனார் செய்துகொண்டிருந்த குடும்பத் தொழிலான அரிசி மண்டியில் கமிஷன் ஏஜெண்ட் வேலையில் இறங்கினான். அக்கம் பக்கத்து கிராமங்களில் அறுவடைக்குத் தயாராயிருக்கும் நெல் வயல்களைக் குறிவைத்து முன்பணம் கொடுப்பான். அறுவடை ஆன மூட்டைகளை மண்டிக்குக் கொண்டுவரும்போது பாதிப்பணம் கொடுத்துவிடுவான். மார்க்கெட்டில் விலை நிலவரம் சாதகமாக இருப்பதைப் பொறுத்து ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து சிறிது சிறிதாக விற்பனை செய்வான். ஆனால் விவசாயிகளுக்கு மீதிப் பணத்தை உடனே கொடுத்துவிடுவான். அதனால் கிரீஷின் நாணயத்தில் அனைவருக்கும் நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. வியாபாரமும் செழித்தது.
ஆனால் வருடம் முழுவதும் அந்தத் தொழிலில் வேலை இருக்கவில்லை. மேலும் மழையோ புயலோ அறுவடையைப் பாதிக்கும் நேரங்களில் அவனால் இலாபம் பார்க்கமுடியவில்லை. எனவே வருடம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய பொருளாகப் பார்த்துக்கொண்டிருந்தான். நாமக்கல் நண்பன் ஒருவன் மூலம் கோழிப்பண்ணை வைக்கும் திட்டம் அவனுக்கு ஆசை மூட்டியது. சொந்த நிலம் இருந்ததால், அவனுடைய நாணயத்தை மதித்து நண்பர்கள் சிலரும் முதலீடு செய்ய முன்வந்ததால் கோழிப்பண்ணையும் அவனுக்கு இலாபகரமாகவே இருந்தது.
ஆனால் அவனுக்கும் திலகாவுக்கும் திருமணமான வருடம், பறவைக் காய்ச்சல் நோய் பரவி, பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அடுத்த வருடம் கொரோனா பெரும்தொற்று உலகெங்கும் பரவியதில் சத்துணவுக் கூடங்களும் உணவுக்கடைகளும் திறக்க முடியாமல், போக்குவரத்தும் முடங்கிப் போனதால், கோழிமுட்டைகளை நம்பியிருப்பதில் பயனில்லை என்று ஆனது. எனவே இருந்தவற்றைக் குறைந்த இலாபத்திற்கு விற்றுவிட்டு சம்பளக்காரனாகிவிட முன்வந்தான் கிரீஷ். திலகாவுக்கும் தன் கணவன் கோழிமுட்டை விற்பதைவிட மின்விசிறிக்கு அடியில் உட்கார்ந்து வேலைசெய்வதே விருப்பமாக இருந்தது.
அதை முன்னிட்டுச் சென்னைக்குக் குடியேறினார்கள் கிரீஷும் திலகாவும். அதே சமயம் அவள் இரண்டு வருடம் முன்பு எழுதியிருந்த வங்கித் தேர்வில் வெற்றி பெற்று கிளார்க் வேலையும் கிடைத்துவிட்டது. மனைவி நிரந்தரமான வேலையில் இருப்பதால், தான் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்பி ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராகச் சேர்ந்துகொண்டான் கிரீஷ்.
ஆனால், கொரோனா எல்லாத் தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கத் தொடங்கியது. அதனால் அவன் ஆறுமாததுக்கு ஒருமுறை கம்பெனி மாறவேண்டிவந்தது. கடந்த மூன்று மாதங்களாக அவன் எந்த வேலையிலும் இல்லை. வறட்டு கௌரவத்திற்காக ஏதாவதொரு பெரிய கம்பெனியின் பெயரைச் சொல்லி அதில் சேரப்போகிறேன் என்று சொல்வது இப்போது அவனுக்கு வாடிக்கையாகி இருந்தது. மயூரியிடம் அவன் சொன்னதும் அப்படித்தான்.
நாளை வங்கிக்குப் போனதும் மயூரியிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும். அவள் நல்ல பெண். தப்பாக நினைக்கமாட்டாள்.
திலகா எதிர்பார்த்தபடியே இரவு பத்து மணிக்குத்தான் வீடு திரும்பினான் கிரீஷ். அவள் முகத்தைப் பார்க்கவும் தயங்கியபடியே ‘எனக்கு சாப்பாடு வேண்டாம், பசியில்லை’ என்று படுக்கையறைக்குப் போனவனை இழுத்துவந்து சாப்பிடவைத்தாள் திலகா.
படுக்கும் முன்பு அவன் வாயில் திரட்டுப்பாலைத் தடவினாள். அவனுக்குப் புரிந்தது. மகளோ மருமகளோ தாய்மை அடைந்திருப்பது தெரிந்தால் உடனே திரட்டுப்பால் செய்வது அவர்கள் வீட்டு வழக்கம்தான். திலகாவை இழுத்து அணைத்துக்கொண்டான். அவள் இதழோடு இதழ் சேர்த்தான். அவள் கண்களில் இருந்து நீர் ஆறாகப் பெருகியது. “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்” என்றாள். செய்தான்.
“இந்த பாஸ்புக், செக்புக் வழியில் கிடந்ததாம். இதை ஆபீஸில் போய்ப் பார்த்து என்ன செய்யவேண்டுமோ செய். மயூரிக்குத் தெரியும்” என்றான்.
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (6)" படிக்க இங்கே சொடுக்கவும்.
செக்புக் திலகா கைக்கே வராது என்று நினைத்தேன். அதுசரி, மணிகர்ணிகாவிடமிருந்து கதை விலகி துணைக்கதைகளுக்குச் செல்கிறதே...
பதிலளிநீக்குமெயின் கதைக்குத் 'துணை' புரியத் தானோ?
பதிலளிநீக்குஅருமையான வங்கி சூழல் கதை அமைப்பு ஐந்து பதிவுகளும்! நன்றி செல்லப்பா சிடிஎஸ் சார்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்.
நீக்குதேடிப் பிடித்து படங்களை இணைப்பதும் அருமை...
பதிலளிநீக்குதங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி நண்பரே!
நீக்குSuper interesting story giving the effect of a roller coaster ride - moving fast, peaking the suspense and returning to normalcy. More importantly nothing negative, so far. Hope the positivity continues till the end. Waiting eagerly for next part.
பதிலளிநீக்குGreat to know that the narration is found interesting! People like you are the ones who inspire me to write! Thank you!
நீக்குVery interesting.
பதிலளிநீக்குUsha subramanian comment
நீக்குரொம்ப அருமையாக செல்கிறது.
பதிலளிநீக்கு4 பகுதியும் வாசித்துவிட்டேன். மணிகர்ணிகா-பெயரைப் போல் அவளும் வித்தியாசமானவள்தான். பலே கில்லாடி!!
பதிலளிநீக்குகிரிஷின் கையில் செக்புக் திலகா கை வரை வந்துவிட்டது. கிரிஷின் கையில் கிடைத்ததால் இந்தக் கதையோ...அல்லது இதிலும் ஏதேனும்தொடர்பு இருக்கிறது என்றுதோன்றுகிறது. 'பொறு கீதா அடுத்த பகுதியில் தெரிந்துவிடப் போகிறது'
வங்கிகளில் இத்தனை விஷயங்கள் நடக்கிறது அதாவது வாய்ப்பிற்காகவும், இடம்மாற்றத்திற்காகவும், பட்டுப்புடவைகள் எக்செஞ்ச் ஊழலும் என்று...பிரமிப்பாக இருக்கிறது. பட்டுப்புடவை என்று வாசித்ததும், என் அத்தையின் கணவரும் காஞ்சிபுரத்தில் வங்கி ஒன்றின் மேலாளராகப் பொறுப்பேற்றபின் அவரது மன உளைச்சல் இப்படிப் பட்டுப்புடவை சார்ந்ததுதான். இதே போன்று வாரா கடன்....அவர் பட்டுப்புடவைக்கு மயங்காததால் மன உளைச்சல் ஏற்கனவே இருந்த பிபி எகிறி மாரடைப்பில் இறைவனடி சேர்ந்தார். எனக்கு மறக்க முடியாத நிகழ்வு.
கீதா
சஸ்பென்ஸோடு செல்கிறதே கதை. மணிகர்ணிகா கதாபாத்திரத்தினால். இப்பகுதி அடுத்த பகுதியுடன் தொடர்புடையதோ? அடுத்து என்ன என்று அறிய தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
லிங்கா படத்தில் தலைவர் ரஜினியுடன் நடித்த சோனாஷி சின்ஹாவின் அழகான புகைப்படங்கள் எவ்வளவோ இருக்க இந்த புகைப்படம்தான் கிடைத்தது உங்களுக்கு ?
பதிலளிநீக்குஎன்னது, சோனாக்ஷி சின்ஹா என்பவர் நடிகையா? அவர் ரஜினியுடன் நடித்திருக்கிறாரா?
நீக்கு*** கிடைத்ததா உங்களுக்கு ?
பதிலளிநீக்குமணிகர்ணிகாவைச் சுற்றி மர்மம் நிலவுவது ஆர்வத்தைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்