(அமெரிக்காவில் 98 ஆவது நாள்: 18-7-2022)
வங்கிக்கிளைகளில் சில முக்கிய விஷயங்கள் அங்கு பணியாற்றும் டிரைவர்கள் பியூன்களுக்குத் தான் முதலில் தெரியவரும். அதிலும் தனியார் வங்கியென்றால் சொல்லவே வேண்டாம்.
நியூயார்க் -டைம் ஸ்கொயர்- குதிரைவண்டி |
உதாரணமாக மணிகர்ணிகா இன்று வங்கிக்கு வரமாட்டாள் என்பது பியூன் ராஜாவுக்கு மட்டும்தான் தெரியும். கிளை மேலாளர் சண்முகத்துக்குத் தெரியாது. மண்டல மேலாளர் ஜான் நாயுடுவுக்குத் தெரியாது. ஏன், மணிகர்ணிகாவின் அடுத்த நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் திலகாவுக்கும் மயூரிக்கும் கூடத் தெரியாது.
பத்து மணிக்குத் திறக்கும் வங்கிக்கு ஒன்பதே முக்காலுக்கே வந்து, இண்டேன் கேஸ் கம்பெனிக்கு ஓசியில் போன்செய்து, கேஸ் புக்கிங் செய்யும் கோபால்சாமிதான் இதில் மிகவும் வருத்தப்பட்டவர். எப்போது வந்தாலும் கையில் குடும்ப உறுப்பினர்களின் பத்து, பன்னிரண்டு பாஸ் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருவார். ஏழெட்டு செலான்களில் அக்கவுண்ட் நம்பரும் தொகையும் மட்டும் எழுதியிருப்பார். ஒரு மஞ்சப்பையில் ரூபாய் நோட்டுக்கள் இருக்கும். செலான் வாரியாகப் பணத்தை எண்ணி மீதியை அவரிடம் கொடுக்கவேண்டும். அதெல்லாம் மணிகர்ணிகா பார்த்துக் கொள்வாள். அவள் வராத நாட்களில் கோபால்சாமி தன் மஞ்சப்பையைத் திறக்காமலே திரும்பிப்போய் விடுவார்.
அன்று பத்தரை மணிவரை காத்திருந்தும் மணிகர்ணிகா வரவில்லை. யாரிடம் கேட்டாலும் பதில் இல்லை. வீட்டில் மருமகளிடம் ஒரு புன்னகையைக்கூட தரிசிக்க முடியாத கொடுமையில் தினமும் மணிகர்ணிகாவின் அகலமான புன்னகையை எதிர்பார்த்து வங்கிக்கு வருவது அவருடைய வாடிக்கை. இன்று என்ன ஆயிற்று அவளுக்கு? ஒருவேளை ஸ்கூட்டரில் வரும்போது விபத்து ஏற்பட்டிருக்குமோ என்று கவலைப்பட்டார். கிளை மேலாளர் சண்முகத்தின் கேபினுக்குள் நுழைந்து விசாரித்தபோது அங்கிருந்த ராஜா ஒரு வெற்றிப் புன்னகையுடன் “மணிக்கா இன்று வரமாட்டாள் சார்” என்றான்.
‘மணிக்கா’ என்றதும் சண்முகத்துக்கு திக்கென்றது. அது வங்கியின் சேர்மன் மணிகர்ணிகாவைச் செல்லமாக அழைக்கும் பெயரல்லவா? இவனுக்கு எப்படித் தெரிந்தது? அந்தப் பெயரை இவன் உச்சரித்ததாகத் தெரிந்தாலே சேர்மன் இவனை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவாரே?
“ஏன் வரமாட்டாள்? லீவு லெட்டர் அனுப்பவில்லை, போன் கூட இல்லை, என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் மணிகர்ணிகா?” என்று சற்றே கோபமாக அவனைப் பார்த்தார் சண்முகம். சும்மா ஒரு ‘உதார்’ தான்! வாடிக்கையாளர் முன்பு தன் மேலாண்மையை வெளியிடவேண்டுமென்ற அவசரம்.
அவள் எப்போது முன்கூட்டி லீவ்லெட்டர் கொடுத்திருக்கிறாள்? ஒருமாதம் வராமலே இருந்துவிட்டு, வந்த பிறகு மெடிக்கல் லீவ் போட்டவள் ஆயிற்றே! தன் ஆண் நண்பருடன் துபாய் போய்விட்டு வந்ததாக ரீஜினல் ஆபீஸ் மாலினிதான் இரகசியத்தைப் போட்டு உடைத்தாள். ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்டில் இருப்பவள். ஆனால் அதை மணிகர்ணிகாவிடம் விவாதிக்க யாருக்கும் தைரியமில்லை. சேர்மனுடன் அந்த அளவுக்கு செல்வாக்குடையவள். நளினி, கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொடுத்தவள் அல்லவா மணிகர்ணிகா!
“இல்லை சார்! மணிக்கா இன்று லீவில் போகவில்லை. ஆன்-டியூட்டியில் போயிருக்கிறாள்” என்று புதிர்போட்டான் ராஜா.
அதற்குள், காசாளரிடமிருந்து “டோக்கன் பதினெட்டு” என்று இயந்திரக்குரல் முழங்கவே, கோபால்சாமி தனது மஞ்சப்பையில் வைத்த டோக்கனை எடுத்துக்கொண்டு கேபினைவிட்டு வெளியேறினார். அதுதான் சமயம் என்று சண்முகத்தை நெருங்கிக் காதைக் கடித்தான் ராஜா. என்ன சொன்னான் என்பது அவர்கள் இருவருக்கும்தான் தெரியும்.
“ஓ அப்படியா! சரி, இந்த விஷயம் நம்மோடு இருக்கட்டும். வேறு யாருக்கும் சொல்லிவிடாதே. சேர்மனுக்குத் தெரிந்தால் உனக்குத்தான் ஆபத்து” என்றார் சண்முகம்.
ராஜா ஆஹாவென்று சிரித்தான். “முதலில் உங்களுக்குத்தான் சார் ஆபத்து! அதனால் மணிக்காவிடம் இனிமேல் எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறிவிட்டு கிளியரிங் ஹவுசுக்குப் புறப்பட்டான்.
ஏசி அறையிலும் வியர்த்தது சண்முகத்திற்கு. எவ்வளவு ‘தில்’லாக அவளை வாய்க்கு வாய் ‘மணிக்கா’ என்கிறான்! இவனிடம் நிச்சயமாக அவளைப் பற்றிய ஏதோ ஒரு இரகசியம் இருக்கவேண்டும். நைசாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் மாலினிக்கு போன் செய்யலாம். ராஜா சொன்னது உண்மையா என்று தெரிந்துகொள்ளலாம். அதைவிட முக்கியம், ஒருவேளை மணிகர்ணிகா நாளையும் மட்டம் போட்டு விட்டால், சேவிங்க்ஸ் கௌண்ட்டருக்கு ஆள்வேண்டுமே! பதிலுக்கு ஒரு சப்ஸ்டிட்யூட் கிளார்க்கை அவள்தானே அனுப்பவேண்டும்!
லேண்ட்லைனில் ரீஜினல் ஆபீஸ் நம்பரை டயல் செய்த அதே நேரத்தில் அவருடைய மொபைல் போனில் "வாழ்க வளமுடன்" என்று ரிங்க்டோன் வந்தது. மாலினிதான் அழைக்கிறாள்! காதைத் தீட்டிக்கொண்டு தயாரானார் சண்முகம்.
(தொடரும்)
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
சொல்லாளதே யாரும் கேட்டால் என்று தலைப்பிட்டிருக்கலாம். ஒரே நாளில் மூன்று தனித்தனிப் பதிவு?
பதிலளிநீக்கு//சொல்லாளதே யாரும் கேட்டால்//
நீக்குமன்னிக்கவும்.. 'சொல்லாதே' என்று படிக்கவும்.
முகநூல் பக்கம் போய் நாளாச்சேன்னு அதுல மூணு நாளா போட்டு வச்சேன். போணியாகலே. அதான் இங்கே மூணும் ஒரே நாள்ல போட்டிருக்கேன். அங்கேருந்து டெலீட பண்ணிட்டேன்!
பதிலளிநீக்குDUFTRY / DUFFADAR நிலையில் இருக்கும் SUB STAFF வெச்சது தான் சட்டம் என்பதை அழகாகச் சொன்னீர்கள் . வீட்டு கார் டிரைவருக்கும் இது பொருந்தும். நன்றி.
பதிலளிநீக்குகாதைத் தீட்டிக்கொண்டு கேட்க அடுத்த பகுதிக்கு செல்கிறேன்...
பதிலளிநீக்குஆஹா ஆரம்பமே பிரமாதம்
பதிலளிநீக்குமணிகர்ணிகா என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ஜான்சிராணியும், காசியில் உள்ள மணிகர்ணிகா GHAT ம் தான்.
பதிலளிநீக்குபம்பாயில் உங்கள் எதிர்வீட்டில் இருந்த மணிகர்ணிகாவை மறந்துவிட்டீர்களே!
நீக்குமணிகர்ணிகா என்பது ஒரு புனிதமான பெயர். அதை இந்த கேரக்டருக்கு சூட்டி விட்டீர்களே ?
பதிலளிநீக்குகண்களைத் தீட்டிக்கொண்டு அடுத்த பகுதிக்கு...
பதிலளிநீக்குவணக்கம் சார்,
நீக்குஉங்களுடைய தொலைபேசி எண்ணைக்கொண்டு WhatsApp ல் தொடர்புகொள்ள முடியவில்லை. WhatsApp எண் தந்துதவும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. என்னுடைய தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும் என்று எண்ணுகின்றேன்.