ஞாயிறு, ஜூலை 03, 2022

அன்னை இழந்தது ஆயிரம்!

அன்னை இழந்தது ஆயிரம்! 

(இப்படியும் மனிதர்கள்-2)

அமெரிக்காவில் 76 ஆவது நாள் (26-6-2022)


பாண்டிச்சேரியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கோட்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டது 1986ஆம் ஆண்டு. 


கர்மயோகி என்ற ஞானகுரு அப்போது ‘அமுதசுரபி’ மாத இதழில் அரவிந்தரின் தத்துவங்களைப்  பற்றி எழுதிவந்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை அமுதசுரபி அலுவலகத்தினர் தமிழில் மொழிபெயர்த்து வாசவன் என்ற எழுத்தாளருக்கு அனுப்புவார்கள். அவர் அதைத் தன்னுடைய அருமையான உணர்ச்சிமிக்க தமிழ்நடையில் திருத்திக் கொடுப்பார். அதுவே மாதாமாதம் கட்டுரைத் தொடராக அமுதசுரபியில் வெளியாகும்.


கடலூரில் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராக இருந்த கர்மயோகி அவர்கள் ஸ்ரீ அன்னை மீது கொண்ட பக்தியின் காரணமாகப் பள்ளிப் பணியிலிருந்து வெளியேறி, பாண்டிச்சேரி வந்து அரவிந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னை அவர்களின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக, அவரது நேரடி வழிகாட்டுதலில் தியானம் பயின்றவர். தமது இறுதிநாட்களில் ஸ்ரீ அன்னை தம்முடைய அணுக்கத் தொண்டர்களை எல்லாம் ஆசிரமத்திலிருந்து வெளியேறி, தான் ஆரம்பித்துவைத்திருந்த “ஆரோ-வில்” (‘அரவிந்தரின் வில்லேஜ்’) என்ற புதிய நகரின் கட்டமைப்பில் பங்குகொள்ளுமாறு ஆணையிட்டார். 


அவ்வாறு வெளிவந்த கர்மயோகி அவர்கள், அன்னையின் அனுமதி பெற்று, தனது இல்லத்திலிருந்தே தியான மார்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் அன்னையின் தியான மார்க்கமானது, மக்களுக்குப் பயன்படக்கூடிய செயல்பாட்டுக்குத் தான் முக்கியத்துவம் அளித்தது என்பதால், அன்னையின் ஆன்மிகக் கோட்பாடுகளை வர்த்தக நிறுவனங்களுக்குப் பயன்படவல்ல பொருளாதாரக் கோட்பாடுகளாக மாற்றி அமைத்து, நிறுவனங்களின் தொழில்திறனைப் பல மடங்கு அதிகரிக்க ஆலோசனை கூறும் ‘மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 


நிர்வாகவியல், வங்கித்துறை, கணக்கீட்டியல், பத்திரிகைத் துறை, கலைத்துறை என்று பல்துறைகளைச் சேர்ந்த இந்தியர், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர் சிலரைத் தன் உதவியாளர்களாக வைத்துக்கொண்டார். தனது இல்லத்திலிருந்து வெளிவராமலேயே, அவர்கள் மூலம் இந்தியாவின் மிகச்சிறந்த கம்பெனிகளுக்கு வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். 


பின்னர் விவசாயத்துறையில் சில முக்கியப் புரட்சிகளையும் நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர், சில ஆண்டுகளிலேயே தமிழில் பக்திச்சுவை சொட்டும் அரவிந்த இலக்கியங்களைப் படைத்தார். எளிய தமிழில் ஸ்ரீ அன்னையின் பெருமையை ஏராளமான புத்தகங்களாக வெளியிட்டார். அரவிந்தரின் ‘லைஃப் டிவைன்’ என்ற புரிந்துகொள்ள மிகவும் கடினமான ஆங்கில நூலை வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு நூல்களாகத் தமிழில் வெளியிட்டார்.


கர்மயோகி அவர்களைக் குருவாக ஏற்றவர்களில் நானும் ஒருவன். 1986இல் அவரது கட்டளைக்கிணங்க சென்னையில் ‘ஸ்ரீ அன்னை தியான மையம்’ என்ற அமைப்பை  ஏற்படுத்தி அதன் பொருளாளராக இருந்தேன். அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் அதன் தலைவராக இருந்தார். வாசவன் செயலாளர். ஆனால் இதெல்லாம் வெறும் பேருக்குத்தான். கர்மயோகி அவர்கள் தன்  சொஸைட்டியிலிருந்து அறிஞர் பெருமக்களை மையத்திற்கு அனுப்பித் தனது கட்டுரைகளை அங்கு படிப்பிக்கச் செய்வார். அவர்கள் சொற்படியே நிகழ்வுகள் இருக்கும்.


1989இல் நான் டில்லிக்கு மாற்றலாகிப் போனபோது, சென்னை நந்தனம் ஹவுசிங் போர்டு அதிகாரியும், ‘தீபம்’ பத்திரிகையில் நா.பார்த்தசாரதி அவர்களின் நெருங்கிய உதவியாளராக இருந்தவருமான திரு ஆர். பாலசுப்ரமணியன் அவர்கள் மையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முதலில் அடையாறு இந்திராநகர் ஹிந்து உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும், பின்னர் கிண்டி காந்தி மண்டபத்திலும், அதன் பிறகு ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியிலுமாகப் பல ஞாயிற்றுக்கிழமைகள் அவர் தியானக் கூடல்களை நடத்தினார். தான் இயற்கை எய்தும்வரை அதனைச் சிறப்பாக நடத்திக்காட்டிய தன்னலமற்ற  அன்னையின் தொண்டர் அவர்.


ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஜனவரி முதல்தேதி சிறப்பாகக் கொண்டாடப்படும். அரவிந்தருக்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்கும் பிறந்த நாளான ஆகஸ்ட் 15, அரவிந்தர் மறைந்த நாளான  டிசம்பர் 5, ஸ்ரீ அன்னையின் பிறந்த நாளான பிப்ரவரி 21, மற்றும் அவரது மறைவு தினமான நவம்பர் 17 - ஆகியவை புனிதமான  நாட்களாகக் கருதப்படுகின்றன. மேற்படி நாட்களில் வருடம் ஒருமுறையாவது ஆசிரமத்திற்குச் சென்று ஒரே பெட்டியில் அடித்தளத்தில் அரவிந்தர் பொன்னுடலும், மேல்தளத்தில் ஸ்ரீ அன்னையின் திருஉடலும் வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள புனிதமான சமாதியைத் தொட்டு வணங்கினால் ஆன்மிக சக்தியைப் பெறலாம் என்று கர்மயோகி அவர்கள் எங்களுக்கு விளக்கியிருக்கிறார்கள். அதன்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த நாட்களில் பாண்டிச்சேரிக்குச் சென்றுவருகிறார்கள்.


நானும் என் குடும்பமும் இந்த யாத்திரையைப் பெரும்பாலும் தவறவிடமாட்டோம். நான் மறந்தாலும் என் மனைவி மறக்கமாட்டார். தாய் வீட்டை யார் மறப்பார்கள்!  அவளுடைய தந்தை திரு ஆர்.சீதாராமன் அவர்கள் பாண்டிச்சேரி அருகில் கடலூரில் கர்மயோகி பணியாற்றிய அதே பள்ளியில் ஆசிரியராக இருந்து பின்னர் துணைமுதல்வரானவர். (ஆனால் அந்த நடராசன் தான் பின்னாளில் கர்மயோகி ஆனார் என்பது அவருக்குத் தெரியாது!) ஆகவே பாண்டிச்சேரி செல்லும்போதெல்லாம் என் மனைவி கடலூருக்கும் சென்று பெற்றோரைச் சந்தித்துவருவார். 


பணிமாறுதல் காரணமாக வெளியூரில் இருக்க நேர்ந்தால் மேற்சொன்ன ஏதாவது ஒரு  நாளில் ஸ்ரீ அன்னைக்குக் காணிக்கையாக என்னால் இயன்ற சிறுதொகையை டிராப்ட் எடுத்து அனுப்பிவிடுவது வழக்கம். ஆசிரமத்தில் கணக்கு வழக்குகள் மிகத் துல்லியமாக இருக்கும். நாம் அனுப்பிய தொகைக்கு ரசீதும், அன்னை அல்லது அரவிந்தரின் புகைப்படம் ஒட்டிய,  அழகிய காகிதப் பொட்டலத்தில், சமாதியில் வைத்து எடுத்து உலர்விக்கப்பட்ட ரோஜா இதழ் ஒன்றும் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் வந்து சேர்ந்துவிடும். இந்த முப்பத்தாறு ஆண்டுகளில் (1986-2022) ஒருமுறை கூட இதில் தவறு நடந்ததில்லை. 


ஆனால் ஒரு முறை மட்டும்  ரசீது வரவில்லை!  அதுதான் இன்று நான் எழுதப் போகும் விஷயம்.

**** நான் டில்லியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒருமுறை ஆசிரமத்துக்கு ஆயிரம் ரூபாய் காணிக்கை அனுப்ப விரும்பினேன்.  அப்போது எங்கள் வங்கிக்கு பாண்டிச்சேரியில் கிளை திறக்கப்படவில்லை என்பதால் ஆரிய சமாஜ ரோடில் இயங்கிக்கொண்டிருந்த இன்னொரு வங்கியில் டிராப்ட் வாங்கி வருமாறு செலானைப்  பூர்த்திசெய்து பணத்தோடு என் அலுவலக ஊழியர் ‘க’விடம்  கொடுத்தேன்.  


அது ஒரு சனிக்கிழமை.  பொதுவாகவே சனிக்கிழமைகளில் எனக்கு வேலை அதிகம் இருக்கும். ஆறு மணி வரை இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது. அதனால் தான்  இன்னொருவரிடம் இந்த வேலையைக் கொடுக்க வேண்டி வந்தது. 


வங்கிகளுக்கு சனிக்கிழமை அரைநாள் தான் வேலைநேரம். ஆகவே மதிய உணவு முடிந்தவுடன் எல்லோரும் வெளியேறி விடுவார்கள். எனவே அதற்கு முன்பே ‘க’  பக்கத்து வங்கிக்குச் சென்று நான் கேட்டபடி  ஆசிரமத்தின் பெயரில் டிராப்ட் வாங்கி வந்து கொடுத்து விட்டார். உடனே அவசரமாக அதற்கு ஒரு கவரிங் லெட்டர் எழுதி,   டிராப்டை இணைத்து, ஒரு கவரில் போட்டு முகவரியும் எழுதி நானே ஒட்டியும் வைத்தேன்.  அதை அவர் எடுத்துக்கொண்டு,  தான் போகும் வழியில் அஞ்சல் பெட்டியில் போட்டு விடுவதாகச் சொல்லிவிட்டுக்  கிளம்பினார். 


அப்போது டில்லியில் வேறு ஒரு கிளையில் பியூனாகப்  பணியாற்றுபவர் அங்கு வந்தார். அஞ்சலில் போடவேண்டிய அலுவலக  தபால்கள் அவரிடமும் இருந்ததால் என்னுடைய தபாலையும் சேர்த்துப் போடுவதாக இவரிடமிருந்து வாங்கி எடுத்துக்கொண்டு போனார். 

   

அத்துடன் அந்த விஷயத்தை நான் மறந்து போனேன்.  ஆனால் பதினைந்து நாள் ஆகியும் பாண்டிச்சேரியிலிருந்து ரசீது வரவில்லை. 


குறிப்பிட்ட பியூனுக்கு போன் செய்தேன்.  சனிக்கிழமையே தபாலில் போட்டு விட்டேனே என்றார் அவர்.  சரி, வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டேன். 


ஆனால் ஒரு மாதமாகியும் ரசீது வரவில்லை.  எனவே ஆசிரமத்திற்கு கடிதம் எழுதினேன். வங்கியின் பெயர் தேதி தொகை குறிப்பிட்டிருந்தேன்.  டில்லியில் இருந்து அந்த மாதிரி ஒரு டிராப்ட் நாளதுவரை வரவில்லை என்று அவர்கள் எழுதினார்கள். டிராஃப்ட் நம்பரை நான் குறிப்பிடாததைச் சுட்டிக் காட்டியிருந்தார்கள். 


அப்போதுதான் எனக்கு உறைத்தது.  அவசர அவசரமாகக் கவரை ஒட்டியபோது டிராப்ட்  நம்பரை என் டைரியில் குறித்துக் கொள்ள மறந்து விட்டேன்.  எனவே அந்த வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்றேன். 


தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஊரைத்  தலைமையகமாகக் கொண்ட வங்கி அது.  பெயர் நீளமாக இருக்கும். (அடுத்த சில ஆண்டுகளில் வேறொரு வங்கியோடு  இணைக்கப்பட்டு விட்டது). ஊழியர்கள் அனைவரும் தமிழர்களே. 


கிளை மேலாளர் அன்போடு வரவேற்றார்.  குறிப்பிட்ட தேதியின்  வவுச்சர் பண்டலைத் தானே எடுத்து வந்து ஒவ்வொன்றாகப்  பரிசீலித்தார். என்னே வியப்பு,  அன்றைய தேதியில் ஆயிரம் ரூபாய்க்கு டிராஃப்ட் எதுவுமே எடுக்கப்படவில்லை!


பிறகு ‘கேஷ் புக்’ எனப்படும் காசாளரின் பதிவேட்டை டிக் அடித்தார். அதிலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து டிராஃப்ட் யாரும் அன்று வாங்கியதாகத் தெரியவில்லை! 


“உங்களிடம் கௌண்டர்ஃபாயில் இல்லையா?” என்றார் அவர். இல்லை என்றேன். 


வேறு எப்படிக் கண்டுபிடிப்பது? அந்த பியூன் என்னிடம் அந்த வங்கியின் டிராஃப்டைக் கொண்டு வந்து கொடுத்தது உண்மையில்லையா, அல்லது அதை நான் கவரில் போட்டு ஒட்டி அவரிடம் கொடுத்தது உண்மையில்லையா? 


வங்கியில் பல்வேறு சிக்கலான கணக்குகளை நான் கண்டுபிடித்து சரிசெய்திருக்கிறேன். இது புதுவிதமாக இருக்கிறது. நிச்சயம் யாரோ மோசடிதான் செய்திருக்கிறார்கள் போலும். 


மேலாளரிடம் வங்கியின் டிராஃப்ட் புக்கைக் கொண்டுவரச் சொன்னேன். குறிப்பிட்ட தேதியின் கௌண்டர்ஃபாயில்களைப் புரட்டிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். இரகசியம் வெளிப்பட்டுவிட்டது!


அதாவது அன்றையத் தேதியில் ஆசிரமம் பெயரில் ஆயிரம் ரூபாய்க்கு டிராஃப்ட் கொடுக்கப்பட்டது உண்மையே! ஆனால் அன்றே அது கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது!


அதாவது, என்னிடமிருந்து கவரைப் பெற்றுக்கொண்டு தபாலில் போடுவதாகச் சொன்ன நபரோ, அல்லது வேறு யாரோ, அந்தக் கவரைப் பிரித்து, டிராஃப்ட்டை வங்கியில் கொடுத்து கேன்சல் செய்து பணம் பெற்றிருக்கிறார்!


ஆனால் வங்கியின் விதியின்படி,  டிராஃப்ட் வாங்கிய நபர்தான் அதை கேன்சல் செய்யுமாறு கோரமுடியும். ஆகவே, ‘க’ தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கவேண்டும் என்று புரிந்தது. பாவிப் பயல்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் புரிபவன்!


“அப்படியானால், டிராஃப்ட்டை கேன்சல் செய்யக்கோரி  எழுதிக் கொடுத்த கடிதம் இருக்கவேண்டுமே, அதை நான் பார்க்கலாமா?” என்றேன். அப்படி ஒரு ரிக்வெஸ்ட் லெட்டர் இல்லாமல் கேன்சல் செய்யமுடியாது. 


அதை வேறொரு ஃபைலில் பத்திரப்படுத்துவார்களாம். அதையும் தேடிக்கொண்டுவந்து காட்டினார். நான் தேடிய கடிதம் இல்லை!


ஆகவே ஒரு விஷயம் தெளிவானது. என் வங்கியின் ‘க’வும்  அந்த வங்கியின் அதிகாரியோ அல்லது யாரோ  ஒருவருமோ  சேர்ந்து செய்த மோசடியாக இருக்கவேண்டும் இது. இது பெரிய பனிமலையின் சிறு சிகரமாகவும் இருக்கலாம்.

(தொடரும்)


6 கருத்துகள்:

 1. இப்படியும் மோசடியா?  கூட இருப்பவர்களே மோசடி செய்கிறார்களே..

  பதிலளிநீக்கு
 2. யாரைத்தான் நம்புவதோ
  பேதை நெஞ்சம்
  அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

  பதிலளிநீக்கு
 3. எதையும் சுவாரசியமாக மாற்றக் கூடிய எழுத்து சித்தர் நீங்கள்!

  பதிலளிநீக்கு
 4. பழைய அம்புலிமாமா விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல் கதை சுவாரஸ்யமாகவும், கேள்வி கடினமாகவும் இருக்கிறது.

  உதட்டைப் பிதுக்கி, விரல்களை விரித்து, சிவாஜி பாணியில், "தெரியலேயேம்மா" என்று லொகுவாக சொல்லி விடலாம்.

  ஆனாலும், விவகாரம் அன்னை சம்பந்தப்பட்டது என்பதால் விலகியோட முடியவில்லை.

  அன்னையின் வீச்சு அப்படிப்பட்டது. பல மாநிலங்களில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில், முதல் காரியமாக அன்னையின் சென்டர் இருக்கிறதா என்று தான் விசாரிப்பது.

  அது எப்படியோ அமைந்து விடும். புனேயில் கிடைக்கவில்லை. அன்னையின் பிரத்யேக நாட்களில், நாங்கள் தவறாமல் புஷ்பாஞ்சலி செய்வதுண்டு. புனேயில் நாங்கள் வாங்கி இருந்த அபார்ட்மெண்ட்டின் வாயிற்படியில் முதல் காரியமாக அன்னையின் விழிகளைத் தான் மாட்டி இருந்தோம். அதைப் பார்த்து விட்டு, எங்கள் மேல்தளத்தில் இருந்து வந்த ஒருவர், அன்னையைப் பற்றி நெடுநேரம் கேட்டு விசாரித்துப் போனார். அவர் ஒரு மாஜிக் நிபுணர். தன்னால் யாரையும் வசியப்படுத்த முடியும் என்று கூறியவர், உங்கள் வீட்டு வாசலில் இருந்த கண்களை இரண்டு நிமிடங்கள் உற்று நோக்கினேன்‌. என்னால் தாங்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென்று பெருகி விட்டது. இது மஹா சக்தி. மிகப் பெரிய தீட்சண்யம் இந்தக் கண்களில் நிரந்தரமாக இருக்கிறது. அதைத் தங்களிடம் தெரிவித்துப் போக வந்தேன் என்றார்.

  நான் பிலாயில் இருந்த போது, பொழுது போகாமல் உலாத்தியதில், ஒரு தெருவில் அன்னை சின்னங்களைக் கண்டு உள்ளே போனேன். ஆச்சரியமாக அது ஒரு மதர் சென்டர்.

  புதுதில்லியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்மணி என்னிடம் தானாகவே அன்னை பற்றிப் பேசினார். அவர் மகளின் வாழ்வில் நடந்த மிகக் கொடுமையான நிகழ்வை விவரிக்கும் போது, அன்னையால் அவர்கள் எப்படி மீண்டு வந்தனர் என்று கூறியது வியப்பாக இருந்தது. அதைவிட ஆச்சரியம், அவர் தில்லியில் நாங்கள் இருந்த க்ரீன் பார்க் ஏரியாவிலேயே, அன்னையின் ஆசிரமம் இருப்பதும், அவரும் அவர் மகளும் நிரந்தரமாக அதிலேயே குடியிருப்பதாகக் கூறியதும்.
  அதன் பின்னர் தில்லியில் இருந்தவரை நாங்கள் ஆசிரமம் போகத் தவறியதே இல்லை.

  இது ஏன், சென்னையில், அண்ணாநகரில் உள்ள ஒரு பெரிய பள்ளியில் எங்கள் மகளை சேர்த்து விட்டு, அருகில் வீடு கிடைக்காமல், எங்கள் மாமனார் வீட்டுக்கருகில் குடிபோன வீடு, பலகாலம் மதர் சென்டராக இருந்தது தான்.

  தினம் மூன்று ரூபாய்க்கு ஒரு மரிக்கொழுந்து கற்றை வாங்கி வந்த என்னை, வருடாவருடம் புஷ்பாஞ்சலி செய்ய வைத்தது அன்னை தான்.

  இது அவர் புகழ் பாடும் இடமல்ல. என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி புழங்கிய இடம் என்பதால் இவ்வளவு எழுத நேர்ந்தது.

  என் பதில் இது தான்.

  அன்னை ஆயிரத்தை இழக்கவில்லை. யாருக்கோ உங்கள் மூலமாக உதவி செய்து இருக்கிறார்கள்‌ என்று திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும்.
  கணேஷ்ராம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே! அன்னை என்பது ஒரு சக்தி என்பதை தங்கள் வாழ்வில் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வண்ணம் இவ்வளவு நிகழ்வுகளா? மெய்சிலிர்த்துப் போகிறேன்.

   நீக்கு