சனி, ஜூலை 09, 2022

நயாகராவில் நான் (2022) -1

நயாகராவில் நான் (2022) -1

(அட்லாண்டிக் கடலோரம் )

அமெரிக்காவில் 85ஆவது நாள் (05-7-2022)


வட்டவட்டமான, வண்ண வண்ணமான, வேகவைத்து உருட்டி உருவாக்கப்பட்ட, தானியக் கட்டிகளை ஒரு வாயகன்ற கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, இளஞ்சூடான பாலை வேண்டும் அளவுக்கு அதன்மீது ஊற்றி, சிறியதாக அரியப்பட்ட ஆப்பிள், ஸ்டிராபெர்ரி, ப்ளூபெர்ரி, வாழை மற்றும் பப்பாளிப் பழங்களை அதன்மீது தூவி, பாதாம் முந்திரி வால்நட் கொட்டைகளை மிகச் சிறிய துண்டுகளாகவோ அல்லது பொடியாகவோ அதன்மீது பரப்பி, உலர்ந்த திராட்சைகளை மேலாகப் போட்டு, எல்லாவற்றையும்  சில முறை கலக்கி, சிறிது சர்க்கரையைத் தூவி, இன்னும் சிறிது பாலைக் கலந்து, இடது கையில் அக்கிண்ணத்தை வைத்துக்கொண்டு, வலது கையில் ஒரு ஸ்பூனால் சிறிது சிறிதாக அனுபவித்துச் சாப்பிட்டால் அதன் பெயர் தான் "சீரியல்" என்னும் "காலை உணவு சாப்பிடல்" ஆகும். 


நியூஜெர்சியில் காலை 9 மணிக்கு இந்த சீரியலைச் சாப்பிட்டுத் தயாரானோம். 


எஸ்ரா கார்னல் சிலை

2005இல் எங்கள் முதல் நயாகராப் பயணத்தின்போது, ஒரு வாரத்திற்கான  கனடிய விசா பெற்றுக்கொண்டு கிளம்பியதால், நியூஜெர்சியில் இருந்து கிளம்பிய எங்கள் தரைவழிப் பயணம் நேராக டொராண்டோவில் சென்று முடிந்தது. அங்கிருந்து நயாகரா கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கி எல்லாவற்றையும் பார்த்தோம்.


இன்றைய நயாகராப் பயணமும் தரைவழிப் பயணமே என்றாலும், முழுவதும் நியூயார்க் மாநிலத்திற்கள்ளேயே நடந்தது. கடைசி நகரம் எருமைமாடு- அதாவது- Buffalo- பஃபல்லோ. அங்கிருந்து சுமார் 30 கிமி தொலைவில் நயாகரா அருவி ஒரு பெரிய பள்ளத்தில் வந்து கொட்டுகிறது. அந்தப் பள்ளத்தின் மீது ஒரு பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் இந்தப்பக்கம் அமெரிக்கா. அந்தப் பக்கம் கனடா. இந்தப் பாலத்திற்கு 'வானவில் பாலம்' என்று பெயர்.


ஆண்ட்ரூ டிக்கின்சன் ஒயிட் சிலை

நாங்கள் அமெரிக்கப் பகுதியில் இருந்தே நயாகராவைப் பார்த்தால் போதும் என்று முடிவு செய்தோம். அதற்கு ஏற்ப நயாகரா ஸ்டேட் பார்க்  எதிரில்   இருந்த கம்ஃபோர்ட் இன் (Comfort Inn) என்ற ஓட்டலில் அறை எடுத்துக் கொண்டோம். ஆறுமாடிகள்  கொண்ட ஓட்டலில்  ஆறாவது மாடியில் கேட்டு அறை எடுத்துக்கொண்டோம்.


எட்டு பேர் பயணம் செய்வதற்கு வசதியாக ‘செவர்லே -சபர்பன்’    என்ற காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். யானையை விடக் கொஞ்சம்தான் சிறியது. உள்ளே இருந்த வசதிகளோ ஏராளம். புத்தம் புதுக் கார். கணினித் தொழில்நுட்பம் ஏராளமாக விளையாடி இருந்தது. பலவகையான கார்களை ஓட்டி அனுபவப்படாதவர்களால் இந்த வண்டியை உடனே புரிந்து கொள்வது சற்று சிரமமே. எனது அமெரிக்க மருமகன் சில நிமிடங்களில் இதைப் புரிந்து கொண்டார். அற்புதமான வண்டி என்று பாராட்டினார். 


கிட்டத்தட்ட 700 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பகல் ஒன்றரை மணிக்குக் கிளம்பினோம். இரவு ஒன்றரை மணிக்குத் தான் ஓட்டலை அடைந்தோம். இடையில் அங்கங்கே பலமுறை நிறுத்தி வழக்கமான (!) காரியங்களைச் செய்தோம், அல்லது சில புதிய இடங்களைப் பார்த்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.


கார்னல் மணிக்கூண்டு

அப்படி அதிக நேரம் எடுத்துக் கொண்ட ஓர் இடம் இ(த்)தா(க்)கா. (Ithaca). இது ஒரு மிகப்பெரிய கிராமம். கிராமத்தின் மொத்த பரப்பளவையும் கார்னல் பல்கலைக்கழகம் (CORNELL UNIVERSITY) எடுத்துக் கொண்டதுபோல் தெரிகிறது. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இன்னும் அறியாமை விலகாத நான், கார்னல் என்பதை ஓர் ஊரின் பெயர் என்றுதான்  நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் 'எஸ்ரா கார்னல்' (EZRA CORNELL)என்ற நன்கொடையாளரின் பெயரில்தான் கார்னல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.  


நான் இதுவரை அமெரிக்காவில் பார்த்த ஏழெட்டுப் பல்கலைக்கழகங்களை விட இது பரப்பளவில் பெரியது. ஒரு ‘இது’க்காகச் சொல்வதானால், நம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைப் போல 25 மடங்கு பெரியது என்று வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள். எந்த இரண்டு கட்டிடங்களுக்கு இடையேயும் மலையும்  மடுவுமாய் மிகப்பெரிய தூரம். இரவு ஏழரை மணிக்கு நாங்கள் பார்த்தபோது, பத்து மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்த ஸ்டார்பக்ஸ் காபி கடையில்  ஐம்பது அறுபது மாணவர்கள்- மாணவிகள் -  ஆசிரியர்கள் தங்கள் கணினிகளை வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.


அமெரிக்காவில் யாரும் யாரைப் பார்த்தாலும் ‘ஹை’ என்பது வழக்கம் அல்லவா? வானத்தைப் பார்த்தபடி வேகவேகமாக நடந்துகொண்டிருந்த ஒரு மாணவரை- இந்தியர் போலத் தோன்றினார்- பார்த்து “ஹை” என்றேன். “நீங்கள் இங்கு படிக்கிறீர்களா? என்ன படிப்பு?” என்று கேட்டதுதான் தாமதம், தன் பெயர் ஏதோ ஒரு கோஷ் என்றும் வங்காளத்தில் இருந்து வந்திருப்பதாகவும் சொன்னார். எங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார்.  


பிறகு தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி வானத்தை மீண்டும் பார்த்துக்கொண்டே,  நீளமாக ஏதோ உரையாற்றி நிறுத்தினார். அவர் படிக்கும் படிப்பின் பெயராம் அது!   அமெரிக்கா என்றாலே எல்லாம்  நீளமாகத் தானே இருக்கும்! பிறகு மீண்டும் ஆரம்பித்து இன்னொரு சிற்றுரை நிகழ்த்த அவர் முயன்றபோது அவரை அமைதிப்படுத்தினோம்.   

“பொருளாதாரத்தின் மூலம் கணக்கீட்டியலைப் புரிந்துகொண்டு மக்கள் வாழ்வில் சூழலியல் மாறுபாட்டை ஏற்படுத்தும் தனிமனித சுதந்திரம்  அண்டார்டிகா மக்களுக்கு ஆயுதம் வழங்கி யுக்ரைன் போரை எதிர்கொள்ளுதல் ......” என்பதுபோல அவர் சொன்னது, ஆராய்ச்சிக்கு அவர் எடுத்துக்கொண்ட தலைப்பாம். விட்டால் மூன்றுபக்க அளவில் ஆராய்ச்சியின் ஸினாப்சிஸை சொல்லவும் தயார் என்று தோன்றியது. 


'ஏது, உங்கள் ஆராய்ச்சியில் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத நான்கைந்து விஷயங்கள் கலந்திருக்கும்போல் தோன்றுகிறதே' என்றேன். 'எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?' என்று வியப்படைந்தவர், "அது உண்மைதான்! எனக்கு அமைந்த கைடுகள் ஒரு செமிஸ்டருக்குமேல் நீடிப்பதில்லை. இதுவரை நான்கு கைடுகள்! நான்கு ஆய்வுப்பொருள்களையும் ஒன்றாகக் கலந்துவிட்டேன்" என்று தன் வேக நடையைத் தொடர்ந்தார்.  




இந்தக்  கட்டுரையில் நகைச்சுவையாக எழுதுவதற்கு விஷயம் கிடைக்கவில்லை. நியூஜெர்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து கார்னல் வந்திருந்த நாங்கள், உடலில்  சேர்ந்து விட்ட பயனற்ற நீரை வெளியேற்றுவதற்காக ஒவ்வொரு கட்டிடமாக இடம் தேடினோம். கடைசியில் உரிய இடத்தைக் கண்டுபிடித்துச்  செயல்படுத்தி விட்டோம். 


அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியேறி வரும் பொழுது, வளாகத்தில்  நிறைய இளைஞர்களும் இளைஞிகளும் ஓடிக் கொண்டும் நடந்துகொண்டும் உடற்பயிற்சி செய்துகொண்டும் இருப்பதைப்  பார்த்தோம். ஒரு பெண்-மாணவி-  வேர்த்து விறுவிறுக்க எங்களை நோக்கி ஓடி வந்தாள். அவளிடம் புகைப்படம் எடுப்பதற்குச் சரியான சூழலுள்ள இடம் எது என்று கேட்க நினைத்தால், அந்தப் பெண் “எக்ஸ்கியூஸ் மீ, கேன் யூ ஹெல்ப் மீ?" என்றாள். கீழை ஆசியப் பெண்ணாக இருக்கலாம். ஸ்போர்ட்ஸ் உடையில்  இருந்தாள். இருபதுக்குக் குறையாதவள். தாமிரப் பெண்.   


"ப்ளீஸ்,  இங்கு பாத்ரூம் எங்கு இருக்கிறது என்று சொல்வீர்களா?" என்றாள் அயர்ச்சியுடன்.  பாவம், அதற்காகத்தான் வளாகம் முழுவதும் ஓடிவந்திருக்கிறாள். உடனே தாமதமின்றி அவளுக்கு உதவினோம். அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் அவள் படிக்கிறாளாம். நன்றியில் அவள் கண்கள் மின்னியபோது மூன்று சந்தேகங்கள் எழுந்தன.  


ஒன்று, பாத்ரூம்கள் எந்தக் கட்டிடத்தில் எங்கு இருக்கும் என்ற விஷயம் இங்குள்ள மாணவர்களுக்கே சரியாகத் தெரியவில்லை. இரண்டு,   மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாத்ரூம்கள்  போதுமானதாக இல்லை. மூன்று, தத்தம் துறைகளில் உள்ள பாத்ரூமைத்  தவிர வேறு பாத்ரூமைப்  பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. 


இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் (ரத்தன் டாடா, சுதா மூர்த்தி, கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி போன்றோர்) முயற்சிக்கலாமே!


(தன்னுடைய  ஐஐடி மற்றும் கார்னல் பல்கலை அனுபவங்களைக் குறித்து பத்ரி சேஷாத்ரி கொடுத்த பேட்டியின் பாட்காஸ்ட் லிங்க் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்கள் நிச்சயம் கேட்கவேண்டும்).

ஜெயலலிதாவுக்கு சசிகலா மாதிரி, கல்லூரியை ஆரம்பித்த எஸ்ரா கார்னலுக்கு அவருடைய உதவியாளர் ஆண்ட்ரூ டிக்சன் ஒயிட் இருந்தாராம். எனவே ஒயிட்டுக்கும் ஒரு பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கார்னல் பல்கலையில் ஒரு கரடிக்குட்டிக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அதன் பெயர் "டச்டௌன்" (touchdown). 1915, 1916, 1919, 1939 ஆகிய நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு கரடிக்குட்டிகள் இங்கு வ(வா?)சித்தனவாம். இவை ஒவ்வொன்றையும் கார்னலில் ஆரம்பகாலத்தில் வசித்த கரடியான டச்டௌனின் ஞாபகார்த்தமாக அதே பெயரில் அழைத்தார்களாம். 1915 ஆம் ஆண்டு வரை கார்னல் பல்கலையின் கால்பந்து டீம் தேசீய அளவில் தோற்றதேயில்லை என்பதை கௌரவப்படுத்தும்வகையில் வளாகத்தில் 1915 என்ற கதவிலக்கம் கொண்ட பிளாசாவில் இந்தச் சிலையை நிறுவியிருக்கிறார்கள். நான் கரடி விடுவதாக நினைக்கவேண்டாம். விக்கிபீடியாவில் சரிபார்க்கலாம்.


டச்டௌன் கரடிக்குட்டி 

மற்றபடி நெடுஞ்சாலையில் பெரிய, பார்க்கத் தகுந்த காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் வழியங்கும் திராட்சை தோட்டங்களும்,  திராட்சை மது தயாரிக்கும் தொழிற்சாலைகளும், நெடுஞ்சாலைக்கு இணையாக ஆறு போல ஓடியும் ஓடாமலும்  இருந்த பெரிய பெரிய ஏரிகளும் இருட்டில் மின்மினித்துக் கொண்டிருந்தன. பெரும்பாலும் கிராமப்புறச் சாலைகளாக இருந்தாலும் ரப்பர் மாதிரி வழுவழுப்பாகவே இருந்தன. ஏரிகளில் இருந்து மென்காற்று வீசிக்கொண்டே இருந்தது. இரவு ஒன்றரை மணிக்கு ஓட்டலை அடைந்தோம். 


எல்லோரும் இறங்கினோம். முதலில் செக்-இன் செய்துவிட்டு அறைகளை ஒதுக்கியபின் காருக்கு வந்து சாமான்களை எடுத்துக்கொள்ளலாம் என்று அனைவரும் உள்ளே நுழைந்தோம். ஆறாவது மாடியில்  அறைகள்  ஒதுக்கினார்கள். கதவு திறக்கும் கார்டுகளைப் பெற்றுக்கொண்டு வெளியில்வந்து கார்க்கதவைத் திறக்க முயன்றோம். முடியவில்லை. 


எப்படித் திறக்கமுடியும்? காரின் சாவிதான் மூடிய காருக்குள் பளபளத்துக்கொண்டிருந்ததே!


முன்பின் பழக்கமில்லாத புதிய கார். சேதமில்லாமல் எப்படித் திறப்பது?  யார் யாருக்கோ போன் செய்தாலும்  இரவு ஒன்றரை மணிக்கு யார் உதவிக்கு வருவார்கள்? திகைத்து நின்றோம்.


சுற்றிலும் நயாகரா நகரம் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. நயாகரா ஏரியும் ஓசையின்றி அடங்கிவிட்டிருந்தது. அருகில் இருந்த கஸினோக்கள் (சூதாட்ட விடுதிகள்) தான்  விழித்துக்கொண்டிருந்தன. 


(தொடரும்)


இதன் அடுத்த    பகுதி -" நயாகராவில் நான் (2022)-2 " படிக்க இங்கே சொடுக்கவும்





11 கருத்துகள்:

  1. மலைத்துவிட்டேன் சார் தங்கள் பதிவை படித்துவிட்டு.

    நாங்கள் எல்லாம் இது மாதிரி TRIP சென்றால் சும்மா ஜாலியாக பார்த்துவிட்டு சில வாரங்களுக்கு பிறகு மறந்து விடுவோம்.

    நீங்கள் என்னடா என்றால் அந்த ஊரினைப் பற்றி அலசி ஆராய்ந்து விடுகிறீர்கள்.

    நீங்கள் ஒரு நடமாடும் GOOGLE SEARCH ENGINE Sir. உங்களிடம் கேட்டால் எல்லா தகவலும் வந்து விடும் போல் இருக்கிறது.

    இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் (ரத்தன் டாடா, சுதா மூர்த்தி, கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி போன்றோர்) முயற்சிக்கலாமே!

    என்று சொல்லி இருக்கிறீர்களே , இந்த விவரங்கள் எல்லாம் எப்படி உங்களுக்கு தெரிந்தது?

    நாங்கள் எல்லாம் உங்களிடம் அருகில் கூட நெருங்க முடியாது சார்.

    எழுத்தில் இமயம் நீங்கள்!!

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! இன்று இமயத்தில் தூக்கி வைப்பீர்கள். நாளை உங்களுக்கு வேண்டாதவர்கள் அங்கிருந்து கீழே தள்ளிவிடுவார்கள். இந்த வம்பெல்லாம் எதற்கு? தமிழில் ஏதோ கொஞ்சம் எழுத வருகிறது. அதை மட்டும் தொடர்ந்து செய்கிறேன். மற்றபடி உங்களுக்கும் எனக்கும் பொதுவான அறிவுக் களஞ்சியம் கூகுளும் விக்கிபீடியாவும்தான்!

    பதிலளிநீக்கு
  3. "பாத்ரூம்" செல்லக்கூட விதிகளா...? ம்...

    முடிவில் பரபரப்பு...

    பதிலளிநீக்கு
  4. சரளமான நடை நயாகரா போல் தமிழ் கொட்டுகிறது! சாண்டில்யன் பாணியில் சஸ்பென்ஸ் வேறு!! கலக்குங்கள்! - சுந்தரராஜன் !

    பதிலளிநீக்கு
  5. "முன்பின் பழக்கமில்லாத புதிய கார். சேதமில்லாமல் எப்படித் திறப்பது? யார் யாருக்கோ போன் செய்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு யார் உதவிக்கு வருவார்கள்? திகைத்து நின்றோம்."////

    ஒரு பயணக் கட்டுரையைக் கூட ஒரு சீரியல் ரேஞ்சுக்கு திகிலுடன் எழுத உங்களால்தான் சார் முடியும்.

    அடுத்த பதிவு வரும் வரை நீங்கள் ரூமுக்கு சென்றீர்களா...தூங்கினீர்களா...கார் கதவு திறந்ததா...எல்லாம் சஸ்பென்ஸ்..

    பதிலளிநீக்கு
  6. கு.மா.பா.திருநாவுக்கரசு10 ஜூலை, 2022 அன்று 8:05 PM

    நயாகரா சீசன் முடியும் தருவாயில், கடுங்குளிரில் நாங்களும் அந்தப் பிரமாண்டமான இயற்கை நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்டு களித்து, படங்களும் எடுத்தோம். தங்கள் வர்ணனையுடன் கட்டுரையைப் படித்ததும் பல தகவல்களை நன்கு விளங்கிக்கொள்ள உதவியாக இருந்தது. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  7. அடடா!! அழகான் 'சீரியல்' உடன் தொடங்கிய பயணம், கடைசியில் சீரியலில் சஸ்பென்ஸ் வைத்துத் தொடரும் போல!!!! அடுத்த பதிவை வாசித்தால் தெரிந்துவிடாதா என்ன!!

    படங்கள் அழகாக இருக்கின்றன (நிறைவுப் பகுதி திறந்ததும் தெரிந்த படங்கள் அட்டகாசம் சார் )

    கார்னெல் பல்கலைக்கழகம் பழம் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம். மகனுக்காகச் சில விஷயங்கள் பார்த்தட் போது தெரிந்தது என்றாலும் உங்கள் தகவல்கள் உள் கதையைச் சொல்கிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று சொல்ல விட்டுப் போனது.....நீங்கள் சாப்பிட்ட சீரியல் எனக்கு மிகவும் பிடித்த உணவு. அதுவும் நீங்கள் அதில் தூவியதைப் பற்றி ஒரு வர்ணனை கொடுத்திருக்கீங்க பாருங்க....Tempting!

      கீதா

      நீக்கு
  8. நயாகராவுக்குச் சென்ற பயணத்தைப் பற்றிய உங்கள் பயணக் குறிப்புகள் மிகவும் 'சுவை'யாக சுவாரசியமாகத் தொடங்கியிருக்கின்றது. தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. நகைச்சுவை இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். வானைப்பார்த்துக்கொண்டு நடந்த மாணவன் எனக்கு நகையைப் பூசிவிட்டான் ;)

    பதிலளிநீக்கு