(அட்லாண்டிக் கடலோரம் )
அமெரிக்காவில் 86ஆவது நாள் (06-7-2022)
இதன் முதல் பகுதி -" நயாகராவில் நான் (2022) -1 " படிக்க இங்கே சொடுக்கவும்.
நேற்றைய இறுதிப்பகுதி:
சாவி இல்லாமல் எப்படித் திறக்கமுடியும்? அதுதான் மூடிய காருக்குள் பளபளத்துக்கொண்டிருந்ததே! முன்பின் பழக்கமில்லாத புதிய கார். சேதமில்லாமல் எப்படித் திறப்பது? யார் யாருக்கோ போன் செய்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு யார் உதவிக்கு வருவார்கள்? திகைத்து நின்றோம்.
காரை யாரிடமிருந்து வாடகைக்கு எடுத்தோமோ அந்த நிறுவனத்திற்குப் போன் செய்தோம். "கவலைப்படாதீர்கள் - இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் உதவிக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்றார்கள். எங்கள் சொந்தக் காருக்கான இன்சூரன்ஸ் கம்பெனி - 'கெய்க்கோ' விற்கு போன் செய்தால் உதவி இன்னும் சீக்கிரமாகக் கிடைக்குமே என்று அவர்களுக்கும் போன் செய்தோம்.
நீலக் கப்பலில் நாங்கள் |
உள்ளே என்ஜின் ஓடிக்கொண்டே இருந்தது வேறு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சிக்னலில் வண்டி சிறிது நேரம் கூடுதலாக நின்றாலே என்ஜின் 'ஆஃப்' ஆகிவிடும் அமைப்புள்ள கார் அது. அதேபோல் இமைக்கும் நேரத்தில் 'ஆன்' ஆகவும் செய்யும். அதை வழிநெடுகிலும் அனுபவித்து மகிழ்ந்தோம். இப்போதோ தொடர்ந்து ஒரே இடத்தில் அரை மணிக்கும் மேல் ஓடியும் என்ஜின் ஆஃப் ஆகாதது ஏன்? புரியவில்லை.
ஹோட்டலில் இம்மாதிரி உதவிகள் செய்வதற்கான தொழில்நுட்ப நிபுணர்கள் யாரும் இல்லை. எதிர்பார்ப்பதற்கும் இல்லை. எனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்.
ஒன்றரை மணி நேரம் என்றார்களே, சொன்ன இருபது நிமிடத்திலேயே வந்துவிட்டார்கள். சுறுசுறுப்பான ஓர் இளைஞர் இறங்கினார். காரின் சன்னலின் 'பிளீடிங்கி'ல் ஒரு சிறிய கருவியைச் செருகினார். 'பாம் பாம்' என்று ஹாரன் அடிக்குமே அம்மாதிரி ஒன்று அதில் இருந்தது. அதை அழுத்தி உள்ளே காற்றைச் செலுத்தினார். அதனால் பிளீடிங்கின் ஒரு பகுதி சற்றே அசைந்து விலகியது. அந்த இடைவெளியில் ஒரு நீண்ட கம்பியைச் உள்ளே அனுப்பினார். அதன் முனை சதுரமாக மடிக்கப்பட்டு சற்றே கூர்மையாக நீட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கூர் முனை, கார் சன்னலின் கைப்பிடியை ஒரு நொடி தொட்டு விலகியது. அவ்வளவுதான்! சன்னல் திறந்துகொண்டது!
எல்லோருக்கும் மிகப்பெரிய நிம்மதி! உதவிக்கு வந்தவர் ஒரு புன்முறுவலை மாத்திரம் கொடுத்துவிட்டு, தன் காரில் விரைந்துவிட்டார். டிப்ஸ் வாங்காத ஒரு சேவையை அமெரிக்காவில் பார்க்க முடிந்தது அனைவருக்கும் வியப்பை அளித்தது.
பழக்க தோஷம் என்பார்களே, அதனால், எனக்குக் கம்பராமாயணம் நினைவுக்கு வந்தது. ஜனகரின் சபையில் சீதையை மணப்பதற்காக வந்த ராமன், சிவதனுசு என்னும் வில்லைக் கையில் எடுப்பதைக் கம்பன் வர்ணித்த சொற்கள்- "எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்" - கண் முன்னால் வந்தது.
அதே அருவியின் இன்னொரு பார்வை |
அதை விடுங்கள், தேவர் படங்களில் பாடல் காட்சிகளில் கோட் சூட்டில் வரும் எம்ஜிஆர், டூயட் பாடியபடியே சரோஜாதேவியை ஒரே நொடியில் இறுக அணைத்து, அடுத்த நொடியில் விலகி ஓடி, பாடலின் அடுத்த அடியைத் தொடர்வாரே அந்த வேகமுமா நினைவுக்கு வரவேண்டும்!
***
மறுநாள் புதன்கிழமை காலை ஏழரை மணிக்கு எழுந்து நயாகரா அருவியைப் பார்க்கக் கிளம்பினோம். (06-7-2022)
ஹோட்டலின் எதிரில் இருந்த பூங்கா தான் அருவிக்கான நுழைவாயில். அமெரிக்காவில் எங்கிலும் காணக் கிடைக்கும் வழக்கமான மரங்கள், செடிகள், பூக்கள்தான் இங்கும் இருந்தது அலுப்பூட்டியது. அப்படிப்பார்த்தால் நாங்கள் வந்திருப்பதே வானத்திலிருந்து பொழியும் அதே தண்ணீரைப் பார்ப்பதற்குத்தானே! அது மட்டும் ஏன் அலுக்கவில்லை? அருவி என்ற பெயர்தான் ஆர்வத்தையும் மயக்கத்தையும் பிரமிப்பையும் தூண்டுகிறதோ?
அமெரிக்கப் பகுதியில் ஆப்சர்வேஷன் டவர் |
அமெரிக்கக் கரையில் நின்று நாங்கள் பார்த்தோம். எதிர்ப்பக்கம் கனடியக் கரையிலிருந்து மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2005 பயணத்தின்போது அந்தப் பக்கம் இருந்தோம். 2022இல் இந்தப் பக்கம் இருக்கிறோம். ஒரே தண்ணீர் தான், ஒரே வெண்மைதான், ஒரே பனிசிதறல்தான்! இருந்தும் இரண்டு பார்வைக்கும் கொஞ்சம் வேறுபாடு இருக்கத்தான் செய்தது.
அருவியில் குளிக்க நீலக்கப்பல் தயாராக நிற்கிறது |
நயாகராவின் முக்கியப் பகுதி, குதிரை லாடம் போன்ற குழிந்த அமைப்பில் அருவி கொட்டுவதாகும். இதை மட்டும் அனுபவிக்கவேண்டுமானால் கனடியப் பகுதியில்தான் முழுமையாகப் பார்க்க முடியும். அதுவும் உயரத்திலிருந்து பார்ப்பதற்கென்றே கோபுரங்கள் உண்டு. சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமான கரையில் கை பதித்துக்கொண்டே அருவி பொழிவதையும் அது ஆறாக ஓடிச்சென்று மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை அடைவதையும் கண்டு களிக்கலாம். அலங்கரிக்கப்பட்ட குதிரைவண்டிகளில் நகரத்தைச் சுற்றிவரலாம்.
கப்பலில் பயணிகள் ஏறும் இடம் |
அமெரிக்கப் பகுதியில் எப்படி இருக்கும் தெரியுமா?
குதிரை லாட வடிவத்தில் இல்லாவிடினும், இங்கும் அருவி அதே போன்ற அகல ஆழங்களில் பாய்கிறது. அருகில் இருந்து பார்ப்பதனால் தண்ணீர் பச்சை நிறமாகக் காட்சி அளிக்கிறது. கனடிய அருவி தூரத்தில் இருப்பதால் அதன் நீர் வெள்ளையாகவும் பனிமூடியதாகவும் தெரிகிறது. உயரமான காட்சி கோபுரங்கள் அமெரிக்கப் பகுதியில் கிடையாது. அதற்குப் பதில், 'ஆப்சர்வேஷன் டவர்' என்ற பெயரில் நீண்ட பாலம் ஒன்று அமைத்திருக்கிறார்கள். அதுவே போதுமான காட்சி அனுபவத்தைத் தருகிறது. அதற்குக் கட்டணம் 1.25 டாலர்கள்.
அமெரிக்கப் பகுதியிலிருந்து நீலக்கப்பல் கிளம்பிவிட்டது- கனடியப் பகுதியில் சிவப்புக் கப்பல் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது |
அமெரிக்கப் பகுதியிலிருந்து ஒரு கப்பலும், கனடியப் பகுதியிலிருந்து ஒரு கப்பலும் பயணிகளை அருவியின் மிக நெருக்கத்தில் கொண்டுபோய்க் காட்டுகின்றன. இந்தப் பயணத்திற்கு “MAID OF THE MIST” - “மூடுபனிக் கன்னி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தரைத்தளத்திலிருந்து கப்பலை அடைவதற்கு மின்தூக்கியின் கட்டணம் 1.25 டாலர், கப்பலுக்கான கட்டணம் 24 டாலர், ஆக மொத்தம் 25.25 டாலர் வசூலிக்கிறார்கள். (5 முதல் 12 வயதினருக்கு 14.75 டாலர் தான்; 5 க்கு கீழ்-கட்டணம் இல்லை).
பயணத்தின்போது அருவிநீர் தெளித்து உங்கள் ஆடைகள் நனையாதிருப்பதற்காக பிளாஸ்டிக் மேலுடை தருகிறார்கள். அமெரிக்கப் பயணிகளுக்கு நீலநிற பிளாஸ்டிக்; கனடியப் பயணிகளுக்குச் சிவப்பு நிற பிளாஸ்டிக். இதை அணிந்துகொண்டுதான் பயணிக்கவேண்டும். எதிர்பாராதவிதமாக விபத்து நேருமானால், எந்த நாட்டிலிருந்து வந்தவர் என்பதை எளிதில் அறிவதற்காகவே பிளாஸ்டிக் ஆடைகளில் நிறவேறுபாடு! பயணம் முடிந்து இறங்கும்போது இந்த ஆடையை நீங்கள் விரும்பினால் நினைவுப் பொருளாக எடுத்துச் செல்லலாம். இல்லையேல் அங்கேயே மறுசுழற்சிப் பெட்டிகளில் போட்டுவிடலாம்.
வானவில் பாலம் |
பிறந்து இரண்டே மாதமான புதிய குழந்தைகளில் இருந்து, நூறு வயதை நெருங்கும் மிகவும் பழைய குழந்தைகள் வரை இந்தப் பிளாஸ்டிக் மேலுடையில் பார்க்கும்போது நீலப் பறவைகள் கப்பலில் அமர்ந்து பயணிப்பதுபோலவே இருந்தது. எல்லாருக்கும் உற்சாகம். சிறுவர்களோ குதித்து கும்மாளம் இட்டார்கள். கப்பல் பயணித்த நேரம் பதினைந்து நிமிடம்தான் என்று நினைக்கிறேன். மெல்ல நகர்ந்து கரையோரமாகவே சென்று குளிர்காற்று மேனியை வருடச் செய்தபின், விசையோடு அருவியின் நேர் கீழாகச் சென்று, அங்கேயே சிறிதுநேரம் சுழன்று சுழன்று, நயாகராவின் நீர்த்துளிகளைப் பெருமழைபோல் பயணிகள்மீது பொழியவைத்தபின், எல்லோரும் மேனி சிலிர்த்துக்கொண்டபின், கப்பல் வானவில் பாலத்தை நோக்கித் திரும்பி, வளைந்து, புறப்பட்ட இடத்திற்கே வந்தது.
அருவியை நெருங்கியபோதில் முழுமையான வானவில்லை இரண்டுமுறை பார்க்க முடிந்தது. அமெரிக்கப் பகுதியில் ஒன்றும், கனடிய பகுதியில் ஒன்றும்! அற்புதமான காட்சி!
அமெரிக்க அருவியைக் காட்டிலும் கனடிய அருவியின் வேகமும் உயரமும் அதிகம் என்பதால், கனடியப் பகுதியில் நீர் விழும் வேகத்தைப் போலவே பனிப்புகை எழும் வேகமும் அதிகமாக இருந்து வெண்மைநிறத்தை அடர்த்தியாக்கி, புகைப்படம் எடுப்பதைக் கடினமாக்கியது.
ஒரே சமயத்தில் நீல ஆடைக் கப்பலும் சிவப்பு ஆடைக் கப்பலும் அருவியை மோதாதபடி இரண்டு பயணங்களுக்கும் இடையே நேர வித்தியாசம் மேற்கொள்ளப்படுகிறது.
வானவில்லின் இன்னொரு பார்வை பயணிகள் பலபேருக்கு இதுவே முதல் கப்பல் பயணமாகவும் அமைந்திருக்கலாம். அவர்களின் இன்பம் எல்லையற்றது! |
நயாகரா by Night |
காலையில் இருந்தே வெயில் அதிகமாக இருந்ததால், முதலில் ஆப்சர்வேஷன் டவரில் ஏறிப் பார்த்துவிட்டு, பகலுணவை முடித்த பிறகு, மாலை ஆறுமணிக்குத்தான் நாங்கள் ‘மூடுபனிப் பாவை’யில் கப்பல் பயணம் மேற்கொண்டோம். இதமாக இருந்தது.
கப்பல் பயணத்துக்கு டிக்கட் வழங்கும் கவுண்ட்டரில் அதிர்ச்சியான ஓர் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது: “கனடிய கரன்சிகள் வாங்கப்பட மாட்டாது!” ஒருவேளை, இதேபோல், கனடிய டிக்கட் கவுண்ட்டரில் “அமெரிக்க கரன்சிகள் வாங்கப்பட்ட மாட்டாது” என்று அறிவிப்பு இருக்குமோ! இல்லையென்றால், இதற்கான காரணம் என்னவென்பதை தேசபக்தியுள்ள கனடியர்கள் தெரிந்துகொள்வது நல்லது.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் |
****
அருவியின் அருகில் தான் ‘நயாகரா ஸ்டேட் பார்க்’ இருக்கிறது என்று சொன்னேன். கிட்டத்தட்ட எல்லா உணவகங்களும் அங்கே தான் சூழ்ந்துள்ளன.
வெள்ளை அருவியின் நினைவாக எனக்கு வெள்ளை டீஷர்ட் |
பகலுணவு தேடிப் போனபோது, பார்க்கின் அருகாமையில் “தோசா ஹட்” என்ற வேன் நின்றிருந்ததைக் கண்டோம். ஆனால் மாலையில்தான் அது இயங்குமாம். இதேபோல் பல்வேறு உணவுப்பண்டங்களின் பெயர்கொண்ட வேன்கள் பல இருந்தன. சில இயங்கின ஆனால் புலால் உணவு மட்டுமே இருந்தது. மரக்கறி மட்டுமே வேண்டுமென்று நாங்கள் தேடியதில் சற்று தூரத்தில் ‘விரும்பியதை உண்ணும் பஃப்பே 13 டாலர்’ என்று ஒரு பஞ்சாபி உணவகம் கண்ணில் பட்டது. உணவும் நன்றாகவே இருந்தது.
இரவு உணவுக்கு அதிலிருந்து இன்னும் சற்று தூரத்தில் இருந்த ஜய்க்கா (Zaika) என்ற உணவகம் கிடைத்தது. அது கொஞ்சம் பெரிய இடம். பஃப்பே 20 டாலர் ! சிறுவர்களுக்கு 14 டாலர். ஆனால் தட்டில் எடுத்துக்கொண்ட எல்லாவற்றையும் தின்றுதீர்க்க வேண்டும். மீதம் வைத்தால் அதை எடை போட்டு கிலோ 20 டாலர் என்று அபராதம் வசூலிப்பார்களாம்! இங்கும் உணவு அற்புதமாக இருந்தது. முக்கியமாகக் கழிப்பறை நன்றாக இருந்தது.
ஹோட்டல் அறைக்குத் திரும்பும் முன் (எச்சரிக்கையாக!) மூடிய காரின் கதவை ஒருமுறை திறந்துபார்த்துக்கொண்டோம். சாவி கையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டோம்.
மூன்றாவது நாள் …… (நாளை முடியும்)
இதன் கடைசி பகுதி -" நயாகராவில் நான் (2022)- 3 " படிக்க இங்கே சொடுக்கவும்.
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
நாங்கள் நேரில் பார்க்காத ஏக்கத்தை உங்கள் வர்ணனை தீர்த்தது
பதிலளிநீக்குஅழகான சுவையான எழுத்தாளுமை👏
பதிலளிநீக்குநயாகராவின் அழகை விட தங்களது தமிழ் நடை அழகு.
பதிலளிநீக்குநாங்கள் ஓசியில் நயாகராவை பார்த்து ரசித்தோம் .
நயாகராவின் நீர் வீழ்ச்சி அழகா அல்லது தங்களது சொல் வீச்சு அழகா என்றால் நயாகரா தோற்றுப் போகும்.
புகழ்ச்சி அல்ல. உண்மை!
Excellent writing!🙋♂️
பதிலளிநீக்குஉணவு மீதம் வைத்தால் அபராதம் வரவேற்க கூடியது.
பதிலளிநீக்குஅபார விவரிப்பு ஐயா... நினைவுக்கு வந்த சில நிகழ்வும் தங்களுக்கே உரித்தான ரசனை...
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குவிவரமான விவரங்கள்...!
பதிலளிநீக்குசொல் வீழ்ச்சி அருமை. !!!!!
பதிலளிநீக்குவண்டிக்குள் சிக்கிக்கொண்ட கார் சாவியை எடுக்க எந்தக் கட்டணமும் வசூலிக்காமல், இதுபோன்ற இறுக்கமான சூழலில் இன்முகத்துடன் சேவையாற்றிட பரந்த மனத்துடன் உதவ முன்வருபவர்கள் அமெரிக்கர்கள் தான். கப்பலில் சுற்றி வருகையில் முன் முனைப் பகுதியில் நின்று கொண்டால், காட்சிகளின் பிரமிப்பை கண்டு ரசிக்கலாம். நீர்த்துளிகள் சிதறி நனைத்துவிடும். 🌈 வானவில் காட்சி மிக அழகு. நல்ல பதிவு.
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே!
நீக்குதங்களால் நானும் பயணித்த உணர்வு. நன்றி ஐயா
பதிலளிநீக்குபடங்கள் ரொம்பத் தெளிவாகவே இருக்கு சார். இடத்தைப்பற்றி நுண்ணிய விவரங்கள். ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
எல்லா ஷாட்ஸும் வானவில் படம், அதைத் தொடுவது போன்று ஒருவர் (உங்கள் மருமகன்?) நிற்கும் அழகனா ஷாட்ஸ் . அந்த ஏரியல் ஷாட் மிக அழகு. (கப்பலில் பயணிகள் ஏறும் இடம்) நயாகரா இரவில் படம் ஏதோ ஆங்கில இதழ்களில் வரும் வழ வழப்பான படங்கள் போன்று அட்டகாசமாக இருக்கிறது.
நீக்குகீதா
வழக்கமான உங்கள் அழகான எழுத்து நயாகராவுக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
நயாகரா ஒரு உலக அதிசயம் தான். நம் ஊரிலும் நிறைய அருவிகளைப் பார்த்து இருக்கிறோம் என்றாலும் அவ்வளவு தண்ணீர் ஒரே இடத்தில் டன் கணக்கில் கொட்டுவது தான் எவ்வளவு அழகாக இருக்கிறது உங்கள் தமிழ் நடையைப் போலவே?
பதிலளிநீக்குஒருவேளை சென்னைக்காரனாக இருப்பதால் தண்ணீரைக் கண்டதும் பித்தம் தலைக்கேறியதோ என்று கூட நினைப்பதுண்டு.
நயாகரா நகரில் பத்தடிக்கு பெரிதாகப்பட்ட சோன்பப்டி வண்டி மாதிரி தோசை கடை அலைகிறது நாம் மாம்பலத்தில் இருக்கிறோமோ என்று தோன்றவைக்கிறது.
நீங்கள் சொன்ன ஜய்க்கா (zaikha) விடுதிக்கு நாங்களும் சென்றோம். அதன் விதவிதமான பதார்த்தங்களைப் பார்த்து, வடிவேலு மாதிரி ரவ்வண்டு போட்டு எடுத்து, உருளை ஃப்ரையை ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்த போதுதான் என் மகள் அலறினாள் "என்னப்பா இது? கண்டபடி எடுத்துண்டு வந்துருக்க? இவ்வளவையும் எப்படிப்பா சாப்டுவே?"
மனைவியும் கடுமையான முகத்தைக் காண்பித்து (அது ஒன்றும் புதுசில்லை என்றாலும்) "பரக்காவட்டி மாதிரி இவ்வளவா எடுத்துண்டு வரது? எல்லாரும் உங்களையே பாக்கறாங்க.."
நானும் சுற்றும்முற்றும் பார்த்தேன். உண்மையில் என்னைத் தான் பார்ப்பதாகத் தோன்றியது. ஒரு சில நிமிடங்களில் நான் நயாகராவிலேயே நயாகராவை விட ப்ராபல்யம் அடைந்து விட்டேன்.
"எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பண்ணலாம்னு கொண்டு வந்தேன்.. அளவு தெரியலை... அதுனால என்ன? முடிஞ்ச வரை சாப்டறேன்.. இல்லேன்னா பார்சல் பண்ணி எடுத்துண்டு போயிடலாம்.."
"கண்ணு என்ன குதிகால்லயா இருக்கு.. எங்கயாவது பராக்கு பாத்துண்டே வரது... சரியான கிராமத்தான்.. வாசல்ல தான் போர்டு எழுதி வச்சுருந்தானே... பாக்கலே?"
"இல்லயே" என்றேன் அப்பாவியாக
"அது எப்படி கண்ணுல படும்..அப்பத்தான அரையும் குறையுமா ஒரு பஞ்சாபிக் கெழவி தாண்டிப் போனா... ஙேன்னு வாய்ல ஈ போனது கூடத் தெரியாம தலை ஆஸிலேஷன்ஃபேன் போலத் திரும்பும் போதே தெரியும்"
அடடா என்று நினைத்துக் கொண்டேன்.. வடை போச்சே... நமக்கே தெரியாமல் என்னமோ இவள் கண்ணில் மட்டும் தென்படுகிறதே?
"அதுக்கென்ன இப்போ? போர்டுல என்ன போட்டுருந்தான்?"
"பஃபேல எடுத்துண்டு வர ஐட்டம் எல்லாத்தையும் மிச்சமில்லாமல் திங்கணும்... இல்லேன்னா வெயிட் போட்டு தீட்டிப்புடுவான்"
"நம்மள வெயிட் போட்டு எவ்வளவு தின்னுருக்கோம்னு கண்டு பிடிப்பானா.. அப்டீன்னா சாப்டறதுக்கு முன்னாடி நம்பளை வெயிட் போடலியே? வாசல்படில ஏதாவது மெஷின் வச்சுருப்பானா இருக்கும்? இதுதான் சாப்புட்டவேர் போல இருக்கு"
மனைவியையும் மகளையும் அதிமிஞ்சிய வாஞ்சையுடனும் பாசத்துடனும் பார்த்து "ஆளுக்கொரு வாய் கொடுத்தா ஆராம்சே ப்ளேட்டைக் காலி பண்ணிடலாம்.. பர்ஸூக்கு பங்கம் வராம இருக்கும்.. ப்ளீஸ்"
"நோ சான்ஸ்" என்றாள் மனைவி நிர்தாட்சண்யமாக.. அதனால் தானே அவள் மனைவி?
"குட்டிம்மா.. ப்ளீஸ்டா" என்றேன் மகளிடம்..
"பிச்சுப்புடுவேன் பிச்சு.. ஒழுங்கு மரியாதையா அவுக்கு அவுக்குன்னு எல்லாத்தையும் முழுங்கு"
நான் என் தட்டைப் பார்த்தேன்.. எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால் பாதி தட்டைக் காலி பண்ணலாம்.. இப்போ து விஷயம் கேட்டபின் வயிறு சட்டென்று நிரம்பி எதுக்களிக்கிற மாதிரி தோன்றுகிறது. நம் வயிறே நமக்கு சதி செய்யுமானால் மற்றவர்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
நைஸாக பண்டங்களைத் திரும்பவும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வந்தால் என்ன என்று தோன்றியதை எப்படியோ புரிந்து கொண்ட மனைவி "கையை ஒடிச்சுடுவான்" என்றாள். இவளுக்கே புரிகிறது என்றால் ஹோட்டல் காரனுக்குப் புரியாதா என்ன?
ஒரேயடியாக க்ரேவியாகத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் ஈரப்பசையாக இல்லாமல் எடுத்து இருந்திருக்கலாம். சத்தம் போடாமல் கோட்டு பாக்கெட்டுக்குள் போட்டு எடுத்து வந்திருக்கலாம். ஒரே ஒரு தந்தூரி ரொட்டி தான் எடுத்து வந்து இருக்கிறேன். அந்த மாதிரி நாலைந்து ஐட்டம் இருந்து இருந்தால், கர்சீப்பை நழுவ விட்டு விட்டு ரொட்டியை கர்சீப் மாதிரி மடித்து வியர்வையை ஒற்றுகிற சாக்கில் வெளியேறி விடலாம்.
ஒரு பருக்கை கூட உள்ளே போக மாட்டேன் என்கிறது.
ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் மாதிரி இந்த ஹோட்டலை விட்டு சேதாரம் இல்லாமல் வெளியேறுவது எப்படி என்று சதித்திட்டம் தீட்டிப் பார்த்தேன். எல்லாத் திட்டங்களும் எனக்கே குழந்தைத் தனமாகத் தோன்றின.
வேறு வழியில்லாமல் முடிந்தவரைத் தின்று விடுவது, மீந்ததுக்கு பணம் கட்டுவது என்று துணிந்து முக்கால் ப்ளேட் தின்று தீர்த்தேன். என் மனைவியும் மகளும் கூட அவர்கள் தட்டுகளை முடிக்க சிரமப் பட்டுக் கொண்டிருந்த நிலையில், நான் வெயிட்டரைக் கூப்பிட்டு சரணாகதி அடைந்து, என் ஏழ்மை நிலையை அவனிடம் கண்ணீரும் கம்பலையுமாக விஷயகுமாரி, சௌகார் ஜானகி ரேஞ்சுக்கு சொல்ல, அவர் "இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே" என்று பெரிய மனிதத் தோரணையில் என்னை விடுவித்தார். நயாகரா விட்டுக் கிளம்புகிற வரை அந்தத் திக்குக்கே எட்டிப் பார்க்கவில்லை.
கணேஷ்ராம்
வணக்கம் பாக்கியம் ராமசாமி சார்! மன்னிக்கவும் கடுகு சார்! மன்னிக்கவும் நாடோடி சார்! மன்னிக்கவும் கணேஷ்ராமன் சார்! அந்த உணவு விடுதியைப் பற்றி நான் ரெண்டு வரி எழுதியதற்கே இவ்வளவு பின்னூட்டமா! ஜய்க்கா ஓட்டலை ஒரே நாளில் நயாகராவை விடப் பிரபலப்படுத்திவிட்டீர்களே!
பதிலளிநீக்குசீக்கிரம் வெளியே வாருங்கள். கிரேசிமோகன் இடம் காலியாக இருக்கிறது. நல்ல நகைச்சுவை எழுத்தாளர்களை கமல் தேடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி!
படங்களும் விளக்கங்களும் மனதை அந்த இடத்தோடு ஒன்றச்செய்கிறது. நன்றி!
பதிலளிநீக்கு