(அமெரிக்காவில் 99ஆவது நாள்: 19-7-2022)
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.
மணிகர்ணிகாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் அவளுக்குத் தெரிந்தவை தான். ஆனால் சேர்மனிடம் அவளுக்கு ஏதோ ஒரு செல்வாக்கு இருப்பதை எல்லோரையும் போலவே அவளும் தெரிந்து வைத்திருந்தாள். அதை மேற்கொண்டு ஆராய அவள் விரும்பவில்லை.
நியூயார்க் - டைம் ஸ்கொயர்- ரிக்ஷா |
அவியலுக்குள் கரண்டியை விட்டால் வருவது உருளைக்கிழங்காகவும் இருக்கலாம், வாழைக்காயாகவும் இருக்கலாம், அல்லது முழுதும் மசிந்து போய் வெறும் குச்சியாகச் சிதைந்த முருங்கைக்காயாகவும் இருக்கலாம். தானாக அவள் ஏன் கற்பனை செய்து கொள்ள வேண்டும்?
அவளும் தன்னைப்போல் திருமணம் ஆகாதவள் என்பதால், மாலினி மணிகர்ணிகாவின் நடவடிக்கை பற்றி மனதில் சந்தேகம் கொள்ள விரும்பவில்லை. ஆனாலும் சந்தேகம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்தது. அந்த விஷயமாகத்தான் இப்போது சண்முகத்திடம் பேச அழைத்தாள்.
"வணக்கம் சண்முகம் சார்! இன்று மணிகர்ணிகா ஆபீசுக்கு வந்தாளா?"
"இல்லை மாலினி மேடம்! எனக்கு எந்தத் தகவலும் இல்லை! உங்களிடம் ஏதாவது கூறினாளா?"
சிரித்தாள் மாலினி. "தெரிந்து கொண்டே கிண்டல் செய்கிறீர்களா சார்? எனக்குத் தெரிந்ததெல்லாம் நாளை மறுநாள் சேர்மன் சென்னைக்கு வருகிறார் என்பதுதான். அதைச் சொல்லத் தான் போன் செய்தேன். டெபாசிட் -அட்வான்ஸ்- டார்கெட்- அச்சீவ்மென்ட்-என்பிஏ கலெக்ஷன்- எல்லா ஃபிகரும் அப்டுடேட் ஆக வைத்திருங்கள். அனேகமாக உங்கள் பிராஞ்சுக்கு விசிட் வந்தாலும் வரலாம்" என்றாள் மாலினி.
சேர்மன் நகருக்கு விசிட் வருவதாக இருந்தால் அதிக பிசினஸ் உள்ள முக்கியமான ஐந்து கிளைகளின் மேலாளர்களை மட்டும் ரீஜினல் ஆபீசுக்கு வரவழைத்து 'டார்கெட் - அச்சீவ்மெண்ட்' எப்படி இருக்கிறது என்று விவாதிப்பது வழக்கம். தானாக எந்த ஒரு கிளைக்கும் அவர் விசிட் வந்தது கிடையாது. இப்போது மட்டும் என்ன ஸ்பெஷல்?
"அதெல்லாம் ஒன்றும் தெரியாது சார்! ஆர்.எம். (ரீஜினல் மேனேஜர்) சொன்னதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அவ்வளவுதான்…." என்று முடிக்காமல் இழுத்தாள் மாலினி.
சண்முகத்துக்குப் புரிந்தது. குரலைத் தாழ்த்திக் கொண்டு, "சொல்ல வந்ததைச் சொல்லிவிடுங்கள் மாலினி. கேபினுக்குள் இருந்து தான் பேசுகிறேன். இங்கு யாரும் இல்லை" என்றார்.
“ராஜா இருக்கிறாரா?"
"கிளியரிங்க் ஹௌஸ் போனவன் இன்னும் வரவில்லை.."
கலகலவென்று சிரித்தாள் மாலினி. "அவர் வருவார் என்று நினைக்கிறீர்களா?"
சண்முகத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது அவள் அப்படிக் கேட்டது. "வராமல் போனால், கிளியரிங் செக்குகள் என்ன ஆவதாம்? கட்டாயம் வருவான்" என்றார்.
"கட்டாயம் வரமாட்டார்! உங்கள் பிராஞ்ச்சுக்கு வரவேண்டிய செக்குகளை எல்லாம் எங்கள் ஆபீஸில் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் ராஜா! எங்கள் பியூன் ராஜேஸ்வரி அதை எடுத்துக்கொண்டு உங்கள் பிராஞ்சுக்குக் கிளம்பிவிட்டாள்" என்றாள் மாலினி.
சண்முகத்துக்குக் கோபம் வந்தது. "மன்னிக்கவேண்டும் மாலினி மேடம்! எனக்குத் தெரியாமல் என் பிராஞ்சு பியூனுக்கு வேறு வேலை கொடுத்தது யார்? ராஜேஸ்வரியை அனுப்புவது என்று முடிவெடுத்தது யார்?" என்று கத்தித் தள்ளிவிட்டார்.
"இதெல்லாம் ஆர்எம் எடுத்த முடிவு. கேட்டால் பெரிய இடத்து விஷயம் என்கிறார். எனக்கென்னவோ மணிகர்ணிகா தலையிட்டிருப்பாளோ என்று தோன்றுகிறது..."
"ஏன் அப்படித் தோன்றவேண்டும்?"
"ஏனென்றால், ராஜாவும் மணிகர்ணிகாவும் டாக்சி எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் போயிருக்கிறார்கள். ஒரு கல்யாணத்திற்குப் பட்டுப்புடவைகள் வாங்கவேண்டுமாம்."
"மாலினி, நீங்க ஹெச் ஆரில் இருக்கிறீர்கள். இப்படியெல்லாம் நடக்க விடலாமா? அவள் என்னடாவென்றால் இஷ்டம் போல ஆப்சென்ட் ஆகிறாள். இவன் என்னடாவென்றால் கிளியரிங்க் செக்குகளை என் அனுமதியில்லாமல் ரீஜினல் ஆபீஸில் கொண்டுபோய்க் கொடுக்கிறான். என்ன தான் நடக்கிறது இங்கே?"
மீண்டும் மாலினியின் கலகல சிரிப்பு. "சண்முகம் சார்! ராஜா செய்ததில் தப்பு எதுவும் இல்லையே! ஆர்எம் சொன்னபடி அவன் செய்தான். அவ்வளவுதானே! மணிகர்ணிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் எங்களுக்கு ரிப்போர்ட் செய்ய அதிகாரமுள்ளவர் மேலாளராகிய நீங்கள் தானே! ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்கள், அவளுக்கு மெமோ அனுப்பிவிடுகிறேன். ஆனால் அதன் பின்விளைவுகளை நீங்கள்தான் சமாளிக்கவேண்டும். சரியா? லூதியானா பிராஞ்ச்சும் பாட்னா பிராஞ்ச்சும் காலியாகத்தான் இருக்கின்றன. இல்லை, மேகாலயாவுக்கு வேண்டுமானாலும் போகலாம். எது உங்களுக்கு வசதி?"
சண்முகத்துக்கு வியர்த்தது. சாதாரணமாக இப்படியெல்லாம் பேசுபவள் இல்லை மாலினி. இன்று பேசுகிறாள் என்றால் காரணம் இருக்கவேண்டும்.
"மாலினி, விளையாடாதீர்கள். உண்மையில் யாருக்குக் கல்யாணம்? பட்டுப்புடவை வேண்டுமென்றால் என்னிடம் சொல்லவேண்டியதுதானே! நம்முடைய பெஸ்ட் கஸ்டமர் 'ரவீந்திரன் கம்பெனி' யிடம் சொன்னால் இருபது பர்சண்ட் டிஸ்கவுண்டில் கிடைக்குமே! இவள் எதற்குப் போகவேண்டும்? அதுவும் ராஜாவுடன்?"
"ஒருவேளை ராஜாவும் பேச்சிலர் என்பதாலோ?" என்று சிரித்தாள் மாலினி. "சும்மா ஒரு இதுக்காகச் சொன்னேன். சீரியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நிச்சயம் ஒரு கல்யாணம் நடக்கத்தான் போகிறது. உங்களுக்கு அழைப்பிதழ் வராமல் போகாது. நான் கேரண்ட்டி!"
சண்முகம் அலுத்துக்கொண்டார். "இப்போது விஷயத்துக்கு வருவோம். நாளை எனக்கு ஒரு சப்ஸ்டியூட் கிளார்க் வேண்டும். ஸ்கூல் பீஸ் வசூல் சமயம். கூட்டம் அதிகமிருக்கும்" என்றார்.
"ஏற்பாடு செய்துவிட்டேன். மீனா குல்கர்னி வருவாள்" என்று போனை வைத்தாள் மாலினி.
மீனா குல்கர்னியா?
தாம் தூம் என்று ஆடுவாள். கஸ்டமர்களை மதிக்கவே மாட்டாள். போதாக்குறைக்கு அவளுடைய கணவர் ஒரு ஐஏஎஸ் ஆபீசர். தமிழ்நாட்டில் பணியில் இல்லை என்றாலும், அவர் மூலம் பல பிராஞ்சுகளுக்குப் பெரிய அளவில் டெபாசிட்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட, அவள் ஒரு டான்சர். ஆபீஸில் பாதிநேரம் சங்கீத சபாக்களுடன் தான் பேசிக்கொண்டிருப்பாள். இந்தக் கிளைக்கு அவள் வரவிருப்பதே அருகிலுள்ள யூத் ஹாஸ்டலில் கோடை விழாவில் தனது நடனத்துக்கு சான்ஸ் பிடிக்கத்தான் இருக்கும்.
இராத்திரி சாப்பாட்டின்போதும் இதையே நினைத்துக்கொண்டிருந்த சண்முகம், தன்னை மறந்து “ஹஹ்ஹஹ்ஹா” என்று சிரித்துவிட்டார்.
மறுநாள்அதிசயமாகப் பார்த்த மனைவியிடம், “இடுக்கண் வரும்போது என்ன செய்யவேண்டுமென்று வள்ளுவர் சொன்னார் தெரியுமா?” என்று மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.
(தொடரும்)
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (3)" படிக்க இங்கே சொடுக்கவும்.
'கஷ்டம் மேல கஷ்டம் வந்து கொட்டுகிற நேரம் இது' என்று சண்முகம் பாடாத குறை! அது சரி, அந்த மணிகர்ணிகா என்ட்ரி மூன்றாவதிலா? இதோ படிக்கப் போறேன்..
பதிலளிநீக்குபடம் ஆரம்பிச்ச உடனே கதாநாயகி வந்துவிடுவாளா?
பதிலளிநீக்குஇடுக்கண் எப்படி இருக்கப் போகிறது....? தொடர்கிறேன்...
பதிலளிநீக்குபிரமாதமாக இருக்கு. ரொம்ப அழகாக போர் அடிக்காமல் செல்கிறது
பதிலளிநீக்குஎந்த பேங்க், எந்த பிரான்ஞ் என்று எதுவுமே சொல்லவில்லையே?
பதிலளிநீக்குபாத்திரங்களின் பெயர்கள் வேறு , Surname கலந்து இருக்கின்றதே.டில்லியா ?
ஓர் அகில இந்திய வங்கி என்று வைத்துக்கொண்டால் போதுமே!
நீக்குவங்கியில் கிசுகிசு... வரிகளில் கிச்சுக் கிச்சு :)
பதிலளிநீக்கு