ஞாயிறு, ஜூலை 31, 2022

மணிகர்ணிகா (8) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

மணிகர்ணிகா (8) இன்று   வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  105  வது நாள்:  25-7-2022)

 

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (7) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


ஜான் நாயுடுவுக்கு விஜயவாடா போஸ்டிங் வரப் போவது ரீஜினல் ஆபீசில் அனேகமாக எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. சில நாட்களில்  அதிகாரபூர்வமான உத்தரவும் வந்துவிட்டது. 'ஆக்டிங் டிஜிஎம்' என்ற பதவிப் பெயரும் கிடைத்துவிட்டது. ஆனால் சேர்மன் தலையிட்டு நாயுடுவிடம் "இப்போது போக வேண்டாம்; வாரங்கல் கிளையில் பெரிய 'என் பி ஏ' அக்கவுண்ட் ஒன்று செட்டில் மெண்ட்டுக்கு வருகிறது. அந்த ஆர்எம் தான் பாடுபட்டு அதை ஒரு வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்தக் கிரெடிட் அவருக்குத் தான் போக வேண்டும். நீங்கள் இரண்டு மாதம் கழித்து ரிலீவ் ஆனால் போதும்"  என்று கூறிவிட்டார்.  அதில் நாயுடுக்கும் திருப்தி தான். 


இதனால் சண்முகம் ரீஜினல் மேனேஜர் ஆவது கொஞ்சம் தள்ளிப் போனது.   ஆகவே அவர் தன்னுடைய கிளையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த முனைந்தார். முதல் காரியமாகச் சிலநாள் டெபுடேஷனில் வந்த மீனா குல்கர்னியை மேலும் இரண்டு மாதங்களுக்கு

  நீடித்துக்கொள்ள உத்தரவு பெற்றுக்கொண்டார். அவளுடைய செல்வாக்கினால் மேலும் டெபாசிட்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.  


சென்னை மியூசிக் அகாடமியில் சுதா ரகுநாதன் 


மீனாவுக்கும் அது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. 'யூத் ஹாஸ்டல்' அரங்கத்தில் அடிக்கடி நடைபெறும்  கலை நிகழ்ச்சிகளை  ஒன்று விடாமல் பார்க்கும்  நல்வாய்ப்பு இனிமேல்  கிடைக்கும் என்று அவள் குதூகலித்தாள். அந்தக் கலைஞர்கள் தன்னை மேலும் அறிந்து கொள்ளவும் அவர்களுடன்  இணைந்து புதிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவும் வசதி ஏற்படும் என்று நம்பினாள்.  


முதல் காரியமாகத் துணை ஜனாதிபதி வரும் நாளன்று தான் ஆடப்போகும் நடனத்திற்கு எஸ்எம்கே அனுமதியுடன் அரங்கத்திலேயே பலமுறை ஒத்திகை பார்த்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாள். 


குல்கர்னி அடிக்கடி அவளுக்கு போன் செய்து உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி நாளன்று தான் வர முயற்சிப்பதாகவும் கூறினார்.

***

அது ஓர் இரண்டாம் சனிக்கிழமை. வங்கி விடுமுறை. அன்று மாலை தான் யூத் ஹாஸ்டலில் ஆண்டுவிழா நிகழ்ச்சி.


நகரின் முக்கியப் பிரமுகர்களும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களும்   அழைக்கப்பட்டிருந்தார்கள். ஜான் நாயுடுவும் சண்முகமும் காலையில் இருந்தே வங்கியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். தனக்குப் பிறகு ரீஜனல் மேனேஜராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்பதால் சண்முகத்துக்கு மிக முக்கிய ஆலோசனைகளை ஜான் சொல்லிக் கொண்டிருந்தார். 


பிரச்சினைக்குரிய ஊழியர்கள் பற்றியும் பேச்சு வந்தது. மணிகர்ணிகா விரைவில் ரிசைன் செய்து விடுவாள் என்றும் அவள் துபாய் செல்ல இருப்பது ஒரு முக்கியமான விஷயத்திற்காகவே என்றும் சண்முகம் கூறினார்.


நாலு மணி சுமாருக்கு இருவரும் அரங்கத்தில் நுழைந்து தங்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். ஐந்து


மணிக்கு துணை ஜனாதிபதி வருவார். வரவேற்பு மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரம் நடைபெறும். அதன் பிறகு சுதா ரகுநாதன் கச்சேரி. அதை அடுத்து மீனா குல்கர்னியின் நடனம்.


பட்டுத்துணியாலான பதாகையில் ஸ்பான்சர்கள் என்ற வகையில் வங்கியின் பெயரும் இருந்ததை ஜானிடம் காட்டினார் சண்முகம். இருவரும் அதன் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்,  வங்கி வெளியிடும் ஊழியர்களுக்கான  மாத இதழில்  இடம் பெறுவதற்காக. அருகில் நடன உடையில் மீனா குல்கர்னியின் ஆளுயர 'ப்ளோ-அப்' பளபளப்புடன் மிளிர்ந்தது. அதையும் படம் பிடித்துக் கொண்டனர்.

*** 

அப்போது ராஜா வந்து சண்முகத்தை அவசரமாக வெளியில் வருமாறு அழைத்தான்.


"என்னப்பா, என்ன விஷயம்?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் சண்முகம்.


"சார், மீனா மேடத்தை போலீஸ் அழைத்துக் கொண்டு போயிருக்கிறது. அடையார் ஸ்டேஷனில் இருக்கிறார்.  நீங்கள் உடனே வாருங்கள்!" என்றான் ராஜா.


சண்முகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக மீனாவின் நிகழ்ச்சிக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. பிரச்சினை எதுவானாலும் அதற்குள் பேசித் தீர்த்துவிட்டு அவளை அரங்கத்திற்கு அழைத்து வந்துவிடலாம் என்று போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார் சண்முகம். அங்கு........


தான் பல நாள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதல் அளவற்ற உற்சாகத்தோடு இருந்த மீனா, முகமெல்லாம் வியர்த்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் வங்கியின் வாடிக்கையாளர் கோபால்சாமியும் இருந்தார்.  அச்சத்தால் அவர் உடம்பு வியர்த்திருந்தது. ஒரு மூலையில் வினோதா மேடம் என்னும் 80 வயது பெண்மணி, சிலப்பதிகாரக் கண்ணகி போன்ற ஆவேசமான முகபாவத்துடன் அமர்ந்திருந்தாள்.  


நகரின் முக்கியமான பகுதி என்பதால் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஏசிபி தலைவராக இருந்தார். பெயர் கருணாமூர்த்தி. பார்ப்பதற்கு அவ்வளவு கருணையுள்ளவராகத்   

தெரியவில்லை. சண்முகத்துக்கு முன்பே அறிமுகமானவர். 


"மிஸ்டர் கோபால்சாமி, இந்த விஷயத்தில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்றார் கருணா.


சண்முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் தைரியம் அடைந்தார் கோபால்சாமி. "இந்த வினோதா மேடம் அவருடைய கனரா பேங்க் பாஸ்புத்தகம், செக் புத்தகம் இரண்டையும் என்னிடம்தான் கொடுத்துவைப்பார். அவசரத்துக்கு இருக்கட்டுமே என்று ஒரு 'பிளாங்க்' செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார். அதை என்னுடைய மஞ்சப்பையில் வைத்திருந்தேன். ஒருநாள் சண்முகம் சார் பேங்கில் நான் இருந்தபோது பை கிழிந்து அதிலிருந்ததெல்லாம் தரையில் விழுந்துவிட்டது. இந்த மீனா மேடம்தான் அதை எடுத்துப் பையில் மீண்டும் போட்டுக்கொடுத்தார். அந்த செக்கில் யாரோ இருபதாயிரம் என்று எழுதிப் பணம் எடுத்திருப்பதாக நேற்று மாலை வினோதா மேடத்தின் மொபைலுக்கு  எஸ்எம்எஸ் வந்திருக்கிறது. அவர் என்னைத் துளைத்தெடுத்துவிட்டார். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது" என்று முடித்தார்.


"வினோதா மேடம், இந்த ஒரு செக் தவிர வேறு ஏதாவது செக் மூலம் உங்கள் அக்கௌண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறதா?" என்று கேட்டார் கருணா.


"நோ இன்ஸ்பெக்டர்! இந்த இருபதாயிரம் ரூபாய் மட்டும் தான் காணாமல் போயிருக்கிறது. இதை நீங்கள் கண்டுபிடித்தாகவேண்டும். எனக்கு வயது 80. நான் சூப்பர் சீனியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று ஆங்கிலத்தில் விளாசினார் வினோதா. 


"உங்களுக்கு யார் மீதாவது டவுட் இருக்கிறதா?" 


"எனக்குத் தெரியாது."


"இங்க பாருங்க மேடம்! இந்த கோபால்சாமியே அந்தப் பணத்தை எடுத்திருந்தால்? ..."


"அய்யய்யோ" என்று அலறினார் கோபால்சாமி. நாலைந்து வருஷமாக இந்தம்மாவின் செக்புக், பாஸ்புக் என்னிடம்தான் இருக்கிறது. எப்போதாவது தவறு நடந்திருக்கிறதா என்று கேளுங்கள். அத்துடன் இவர் எனக்குத் தூரத்து உறவுக்காரியும் கூட" என்று வினோதாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தார் கோபால்சாமி. "மேலும், எனக்குப் பணத் தேவை ஏதுமில்லை. எப்பொழுதும் என் அக்கௌண்ட்டில் ஒரு லட்சம் இருக்கும். நீங்களே பாருங்கள்" என்று தன் பாஸ்புத்தகத்தைக் காட்டினார்.


"அப்படி என்றால்  இந்த மீனா மேடம் மீது சந்தேகப்படுகிறீர்களா?" என்று கேட்டபடி மீனாவின் முகத்தை உற்றுப் பார்த்தார் கருணா.

நடன நிகழ்ச்சிக்கான பாதி மேக்-அப்பில் இருந்த மீனா அதிர்ச்சியடைந்தவளாக  எழுந்தாள். 


"இந்த வயதானவர் அன்று மேனேஜர் கேபினில் படுத்துத் தன்னையறியாமல்  தூங்கிவிட்டார். அவசரமாக விழித்து எழுந்தபோது அவருடைய பை தவறி அதில் இருந்ததெல்லாம் கீழே சிதறிவிட்டன. ஒன்றுவிடாமல் எடுத்து அதே பையில் போட்டுக் கொடுத்தேன். எனக்குத் தெரிந்து பிளாங்க் செக் லீஃப் எதுவும் கீழே விழவில்லை. உறுதியாகச் சொல்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்" என்று விளக்கினாள் மீனா. 


"வினோதா மேடம், கோபால்சாமியிடமிருந்த பாஸ்புக்கும் மற்ற செக் புத்தகமும்  இன்னும் அவரிடம்தான் இருக்கிறதா?" என்றார் கருணா.


சண்முகத்தின் வங்கியிலிருந்து இரண்டு பெண்கள் தன் வீட்டுக்கு வந்து அவற்றைத் திருப்பிக் கொடுத்த விவரம் சொன்னார் வினோதா. 


"அப்படியானால், வங்கியை விட்டு வந்த பிறகு வெளியில் எங்கோ அவற்றை கோபால்சாமி தொலைத்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்? என்ன சொல்கிறீர்கள் கோபால்சாமி?" என்று அதட்டினார் கருணா.


கோபால்சாமிக்கு இந்த மிரட்டல் புதிது. அவர் வாழ்நாளில் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. அதற்கான அவசியம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தக் கிழவியால் ஏற்பட்டிருக்கிறது. "அப்படித்தான் இருக்கவேண்டும் சார்! ஆனால் நான் வங்கியிலிருந்து ஆட்டோவில் ஏறி நேராக என் வீட்டிற்குத்தான் போனேன். வேறு எங்கும் போகவில்லையே!" என்றார் குழப்பத்துடன். 


"சரி வினோதா மேடம், நீங்கள் எழுத்து மூலம் புகார் கொடுங்கள். மேற்கொண்டு விசாரிக்கிறேன். நிச்சயம் வங்கி ஊழியர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. . ஆனால் என்னைப் பொறுத்தவரை முக்கியமான சந்தேகம் கோபால்சாமி மீதுதான் விழுகிறது.  இப்போது நீங்கள் போகலாம்..." என்று அனைவரையும் அப்புறப்படுத்தினார் கருணாமூர்த்தி. 


"துணை ஜனாதிபதி வருவதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது" என்று தன் ஜீப்பில் கிளம்பினார்.  சண்முகமும் மீனாவும் அப்பாடா என்று எழுந்தார்கள். "மீனா, வங்கி ஊழியர் வாழ்வில் இப்படித்தான் ஒன்றுமில்லாததற்கு போலீஸ் ஸ்டேஷன் போகும் அவசியம் ஏற்படும். நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்குத் தெரிவிக்காமல் இங்கு வந்தது தவறு. எதற்கும் உங்கள் கணவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். நீங்கள் யாரென்பதை இங்குள்ள போலீஸ் தெரிந்துகொள்ளட்டும்" என்று அறிவுரை சொன்னார் சண்முகம்.


அரங்கில் ஆண்டுவிழா களைகட்டியது. துணை ஜனாதிபதியின் அன்றைய அடுத்த நிகழ்ச்சி கான்சல் ஆகிவிட்டதால் அவர் அரங்கத்திலேயே இருந்து மீனாவின் நடனத்தை முழுமையாகக் கண்டு ரசித்தார். அவளுடைய நடனம் அன்று மிகவும் சிறப்பாக இருந்தது என்று இசைவிமர்சகர் சுப்பையன் மறுநாள் ஹிந்துவில் எழுதினார். 


"சூப்பரா ஆடினியாமே! கங்கிராட்ஸ்" என்று மணிகர்ணிகாவிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. சண்முகமும் ஜான் நாயுடுவும் அவள் வீடு திரும்பும்வரை இருந்து பாராட்டினார்கள். 


அவள் வீட்டை அடைந்தபோது அவளுடைய வங்கி நண்பர்களின்  வாட்ஸ்அப் குழுவிலிருந்து செய்தி ஒன்று வந்தது. "மயூரியும் திலகாவும் ஒரு மோட்டார்பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு உடனே வரவும். இரத்தம் தேவைப்படலாம்."

(தொடரும்)


          -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (9) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


7 கருத்துகள்:

  1. அந்த ப்ளாங்க் செக் எல்லாம் ரோட்டில் விழுந்திருக்கும்....மயூரி பைக்கில் தானே கிரீஷ் சென்றான். அவன் கையில்தானே கிடைத்தன அவை. அவன் திலகாவிடம் அவற்றை ஒப்படைத்த போது அந்த ப்ளாங்க் செக் அவனிடம் மாட்டிக் கொண்டதா? அலல்து ரோட்டிலேயே பறந்து சென்று வேறு யார் கையிலேயும் சிக்கியய்தா? கனரா வங்கியின் அந்தக் கிளைக்குச் சென்று விசாரித்தால் தெரிந்துவிடுமே....வினோதா பாட்டிக்கு??!!! செக் லீஃப் நம்பர் தெரிந்திருக்கும்....அதை வைத்துக் கண்டுபிடிக்கலாமே...பணம் எப்போது எடுக்கப்பட்டது என்று பார்த்தால்...

    மீனா, திலகாவையும் மயூரியையும் ஆஸ்பத்திரிக்குச் சென்று சந்தித்தால் விஷயம் தெரியவரும் என்று நினைக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டம் எதிர்பார்த்தால் பின்கதைச்சுருக்கமே எழுதிவிடுவீர்கள் போலிருக்கிறதே! ஆனால் முடிவு வேறுவிதமாகத்தான் இருக்கும்! பரவாயில்லையா?

      நீக்கு
  2. யார் மேலும் சந்தேகப்பட முடையவில்லை, வாய்ப்பில்லை.  ஆனால் எல்லோர் மீதும் சந்தேகம் வர பின்னர் ஒரு சம்பவம் காரணமாகலாம்!  பார்ப்போம்.  பொறுமை சாலப் பெரிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பொறுமைதான் உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு அழகு! வாசகர்களுக்கு lead கொடுத்துவிடாமல் பின்னூட்டம் இடுகிறீர்கள், வாழ்த்துகள்!

      நீக்கு
  3. சந்தேகம் கூட சஸ்பென்ஸ் ஆக இருக்கு...!

    பதிலளிநீக்கு
  4. //அவளுடைய நடனம் அன்று மிகவும் சிறப்பாக இருந்தது என்று இசைவிமர்சகர் சுப்பையன் மறுநாள் ஹிந்துவில் எழுதினார்//

    விமர்சகர் சுப்புடுவுக்கு பதிலாக சுப்பையனா ?

    கிரீஷ் தானே வேலையில்லா பட்டதாரி ?.மற்றும் கல்யாண பரிசு தங்கவேலு மாதிரி மன்னார்&கம்பெனியில் வேலை செய்வதாக பொய் சொல்பவர்.?
    அவர்தான் ஸ்வாஹா செய்து இருப்பார் .

    பதிலளிநீக்கு
  5. நல்ல திருப்பம்

    பதிலளிநீக்கு