ஞாயிறு, ஜூலை 03, 2022

அன்னை இழந்தது ஆயிரம்! (தொடர்ச்சி)

அன்னை இழந்தது ஆயிரம்! (தொடர்ச்சி) 

(இப்படியும் மனிதர்கள்-3 )

அமெரிக்காவில் 77  ஆவது நாள் (27-6-2022)



பாவம், அந்த மேலாளர் என்னைவிட மிகவும் இளையவர். இந்தக் கிளையில் இன்னும் என்னவெல்லாம் மோசடிகள் வெளிவருமோ என்று நடுங்கிவிட்டார். 

நான் அவருக்கு தைரியம் சொன்னேன். வங்கிகளில் சிஸ்டம்ஸ் & ப்ரொஸீஜர்ஸ் என்ற நடைமுறை விதிகள் கடுமையானவை. அது சட்டப்புத்தகம் மாதிரி. மீறினால் ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள்.  எந்த விதிகள் மீறப்பட்டன என்பதை இந்தச் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டே நிர்ணயிப்பார்கள். 


மேலாளருக்கு இப்போது நடந்திருக்கும் விதிமீறல்கள் என்னென்ன என்று தெளிவாகிவிட்டது. உடனே தன் தலைமையகத்துக்கு போன் செய்ய முனைந்தார். 


“கொஞ்சம் பொறுங்கள்” என்று சொன்னேன். அன்றைய வவுச்சர் பண்டலை இன்னொருமுறை என்னிடம் காட்டச் சொன்னேன். 


ஆயிரம் ரூபாயும் அதற்குக் குறைவானதுமான செலான்களை எடுக்கச் சொன்னேன். மூன்று செலான்கள் இருந்தன. 200 ரூபாய், 300 ரூபாய், மற்றும் 1000 ரூபாய். மூன்றுமே சேவிங்க்ஸ் அக்கவுண்ட் செலான்கள். அந்த ஆயிரம் ரூபாய் யாருடைய கணக்குக்குப் போயிருக்கிறது என்று பார்த்தால், எங்கள் வங்கியின் இன்னொரு கிளையின் ஊழியர் கணக்கிற்கு!


மேலாளர் எழுந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார். “இதுதான் சார் எனக்கு மேனேஜராக முதல் போஸ்டிங்! நாளைக்குள் அவனை வந்து உங்கள் காலில் விழச்செய்கிறேன். தயவுசெய்து எழுத்துமூலம் புகார் கொடுத்துவிடாதீர்கள்! வங்கிக்கும் பேர் கெட்டுவிடும்! அத்துடன் உங்களுக்குத்தான் பேங்க் யூனியன்களைப் பற்றித் தெரியுமே! கிளார்க், பியூன் போன்றவர்கள் தப்பிவிடுவார்கள். ஆபீசர்கள் தான் மாட்டுவார்கள்” என்று தழுதழுத்த குரலில் கூறினார். 

 

அவரை ஆறுதல் படுத்தினேன். “என் பணம் வரட்டும். பெரிய விஷயமில்லை. ஆனால் இது மோசடியா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இரண்டு வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து செய்த காரியம் என்பதால் நாம் அஞ்சவேண்டியிருக்கிறது” என்றேன். 


அது ஹர்ஷத் மேத்தா என்ற ஸ்டாக்புரோக்கர் நாட்டிலிருந்த ஏராளமான வங்கிகளை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக விசாரணை வளையத்துக்குள் வந்திருந்த நேரம்.  இப்படிச் சிறிதுசிறிதாக பணத்தைக் கையாடி ஷேர் மார்க்கெட்டில் போட்ட வங்கி ஊழியர்களை எனக்குத் தெரியும்.   


டில்லி என்பது ஊரே அல்ல, அது ஒரு சதிக்கூடம் என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதுவார்கள். மொகலாய மன்னர்களின் நடவடிக்கைகளில் இருந்து உருவான சரித்திர உண்மை அது. நாளாவட்டத்தில் மொகலாயர்  அல்லாதவர்களும் அதை உண்மையாக்க முனைந்துவிட்டார்கள் போலும். 


பேசிக்கொண்டே இருந்ததில் வெகுநேரம் ஆகிவிட்டதால் வங்கியின் கதவைப் பூட்டிக்கொண்டு வெளிவந்தார் அந்த மேலாளர். இருவரும் அருகில் இருந்த சௌத் இண்டியன் ஓட்டலில் உணவருந்திவிட்டு அவரவர் திசையில் கிளம்பினோம். 

*** 

மறுநாள் காலை பதினொரு மணிக்கு அந்த மேலாளரே  என்னைத் தேடிக்கொண்டு வந்தார். அவருடன் அவரது காசாளரும் வந்திருந்தார். 


“மன்னிக்கவேண்டும் சார்! அன்று மாலை, உங்கள் பியூன் வந்து டிராஃப்ட்டை கேன்சல் செய்து பணம் தருமாறு கேட்டார். வங்கி நேரம் முடிந்துவிட்டதால் நான் பணம் தரமுடியாது, நாளை வாருங்கள் என்றேன். அவரோ பரவாயில்லை, பணம் தரவேண்டாம், என் கணக்கில் வரவு வைத்துவிடுங்கள் என்று செலான் எழுதிக்கொடுத்தார். அன்று காலையில்தான் தன் கையெழுத்தில் டிராஃப்ட் செலானை அவர் பூர்த்திசெய்து கொடுத்து டிராஃப்ட் வாங்கியிருந்தார் என்பதால், பணம் அவருடையது என்பது உறுதியானது. ஆகவே அவருடைய கணக்கில் வரவு வைத்தேன். நான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை சார்!” என்றார். என்றாலும் குரலில் அச்சம் இருந்தது. 


அவர் சொன்னதை கவனமாக ஆராய்ந்தேன். அவர் மீது எந்தத் தவறும் இல்லை. யார் வங்கியில் வந்து கையெழுத்திட்டு பணம் செலுத்தி டிராஃப்ட் வாங்கினாரோ, அவரே வந்து டிராஃப்ட்டைத் திருப்பிக்கொடுத்து  கேன்சல் செய்யுமாறு கோரினால் அவருக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டியதுதான் வங்கியின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். 


“நல்லது நண்பர்களே! உங்கள் மீது தவறில்லை. என்னுடைய பியூன் ஏன் இப்படிச் செய்தார் என்று நான் விசாரித்துக் கொள்கிறேன். விஷயத்தை இத்துடன் விட்டுவிடுங்கள். அடிப்படையில் தவறு என்னுடையதுதான்” என்றேன். நிம்மதியான மனத்தோடு வெளியேறினார் அந்த மேலாளர்.   


‘க’ வை அழைத்து விசாரித்தேன். தான் நேரடியாக வங்கிக்குப் போகவில்லை என்றும், அப்போது எங்கள் இன்னொரு கிளையின் முன் குறிப்பிட்ட ஊழியர் நின்றுகொண்டிருந்ததால் அவரிடம் பணத்தைக்கொடுத்து டிராஃப்ட் வாங்கிவரச் சொன்னதாகவும் கூறினார். ‘அவர் டிராஃப்ட்டை உங்களிடம் கொடுத்ததைக் கூட நான் பார்த்தேனே!” என்றார் ‘க’. 


அவர் சொன்னதும் உண்மையே. அவர்மீது எந்தத் தவறும் இல்லை. அப்படியானால் யார்மீதுதான் தவறு? என்  பணத்திற்கு யார்தான் பொறுப்பு?


சத்தியமாக என்மீதுதான் தவறு. ஒருவேளை நானே செலானை பூர்த்திசெய்து கொடுத்தனுப்பி இருந்தால் அந்த ஊழியறாள் அதை கேன்சல் செய்திருக்க முடியாது. எனவே contributory negligence என்னுடையதே. 


ஆனால், என்னுடைய பணத்தை முறையின்றிக் கையாண்டு மோசடி செய்த குற்றம் அந்த ஊழியருடையதே. ஆனால் அதற்காக என் வங்கியில் நான் யாரிடமும் புகார் செய்யமுடியாது. ஒரு தனிமனிதனின் பணத்தை இன்னொரு தனிமனிதன் திருடிவிட்டான். அவ்வளவே!


குறிப்பிட்ட ஊழியரை அவரது அலுவலகத்தில் சென்று ஒரு பிடிபிடித்தேன். காலில் விழுந்துவிட்டார். பிள்ளை குட்டிக்காரன். விசாரணையில் அவரைப் பற்றிய முக்கிய விஷயம் தெரியவந்தது. எல்லாம் ஷேர் மார்க்கெட் தான் காரணம்!


சின்னச் சின்னதாக நிறைய பேரிடம் கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் அன்றாடம் முதலீடு செய்திருக்கிறார். முதலில் சில லட்சங்களை சம்பாதித்திருக்கிறார். அதன் பிறகு ஹர்ஷத் மேத்தாவின் திருவிளையாடல் ஆரம்பித்துவிட்டதால் எல்லாப் பங்குகளும் வானளாவிய விலைக்கு உயர்ந்துவிட்டதால் அவரால் மேற்கொண்டு டிரேடிங் செய்ய முடியவில்லை. இருக்கிற ஷேர்களை உடனடியாக விற்கவும் மனமில்லை. விலை இன்னும் ஏறும், இன்னும் ஏறும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் வாங்கிய கடன்களை அடைக்க முடியவில்லை. போலியான ஷேர் சர்டிபிகேட்டுகள் மார்க்கெட்டில் வெகுவாக நடமாடியதால் இவரிடம் இருந்த ஷேர்  சர்டிபிகேட்டுகளை நம்பி வாங்க எல்லாரும் பயந்தார்கள். 


ஆகவே அன்றாடச் செலவுகளுக்கு இம்மாதிரி மோசடிகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.   


ஆசாமியிடம் ஐம்பது நூறு கூட இல்லாத வறுமை. அதற்கு முன்புவரை அவர் நல்லவர்தான். யாரையும் ஏமாற்றியதில்லை. நான்தான் அவருக்கு முதல் இரை! 


கிளை மேலாளர் மிகவும் நல்லவர். “ஆயிரம் ரூபாய் தானே, நான் கொடுத்துவிடுகிறேன். இதற்காக நீங்கள் இங்கு வரவேண்டாமே” என்றார். 


விஷயம் அதுவல்ல, மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றேன். மோசடி செய்வதில் இது புதுமாதிரியான உத்தி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றேன்.  


இது நடந்து ஒரு மாதம் இருக்கும். அந்த நபர் என் வீட்டுக்கு வந்தார். “சார் மிகவும் அவசரம், உங்களிடம் சிமெண்ட் கம்பெனி ஷேர்கள் இருக்கிறதா? உடனே விற்றுக்கொடுக்கிறேன். ஒருநாள் தாமதம் ஆனாலும் நஷ்டமாகிவிடும். அதற்காகத்தான் ஓடிவந்தேன்” என்றார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவிலும் ஆந்திரத்திலும் ஐந்தாறு சிமெண்ட் கம்பெனிகள் புதிதாகத் தோன்றி IPO என்னும் புது ஷேர் வெளியீட்டில் ஏராளமான ஷேர்களை வெளியிட்டிருந்தன. அவ்வாறு எனக்கும் பிரியதர்ஷினி சிமெண்ட், மோதி சிமெண்ட், குஜராத் அம்புஜா சிமெண்ட் போன்ற கம்பெனிகளின் தலா நூறு ஷேர்கள் பத்து ரூபாய் விலையில் கிடைத்திருந்தன. ஆனால் சிமெண்ட் கம்பெனி கட்டிமுடித்து உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் என்பதால் ஹர்ஷத் மேத்தாவின் களேபரத்தின் நடுவிலும் கூட அந்த ஷேர்கள் ஏழு அல்லது எட்டு ரூபாயைத் தாண்டவில்லை. எனவே இவர் வந்து கேட்டபோது எதற்கும் லாயக்கில்லாத அந்த சர்டிபிகேட்களை  இந்தா என்று கொடுத்துவிட்டேன். 


மூன்று நாளைக்குப் பிறகு என்னிடம் நாலாயிரம் ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தார் அவர். அதாவது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷேர்களை நாலாயிரத்துக்கு விற்று எனக்கு மூவாயிரம் ரூபாய் இலாபம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்!


அடுத்த நாளே ஷேர் மார்க்கெட் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அது மீட்சி அடையவில்லை. இவர் மட்டும் எனக்கு உதவியிராவிட்டால் எனக்கு மூவாயிரம் இலாபம் எப்படி வந்திருக்கும்?


நீங்களே நீதிபதியாக இருந்து விடை சொல்லுங்கள்: இவர் எனக்குச் செய்த ஆயிரம் ரூபாய் மோசடிக்குத்  தண்டனை கொடுப்பதா? அல்லது மூவாயிரம் இலாபத்தில் இவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுப்பதா?

          

      -இராய செல்லப்பா  நியூ ஜெர்சியில் இருந்து 


10 கருத்துகள்:

  1. வட்டியோடு கணக்கு சரி என்றாகி விட்டது என்று சொல்லலாமா?  ஆயினும் புனிதமான காரியத்துக்கு அனுப்பும் பணத்தில் கைவைத்ததை மன்னிக்க முடியுமா?  ரெகுலர் வசனம்தான்...  மன்னித்து விடலாம், மறக்கவேண்டாம்!

    பதிலளிநீக்கு
  2. அடுத்ததாக அதிகமாக கிடைத்ததையும் நற்காரியங்களுக்கு, நாமே நேரில் செயலில் ஈடுபட்டிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து சரியானதே. நல்ல காரியங்களில் நாமே நேரில் சென்று ஈடுபடுவதுதான் பொருத்தமானது. இப்போதெல்லாம் அப்படித்தான் செய்துவருகிறேன்.

      நீக்கு
  3. இரு பகுதிகளையும் வாசித்துவிட்டேன். எந்தப் பணத்திலும் கைவைப்பது என்பது மிக மிக மோசமான செயல். வங்கியில் இப்படியும் மோசடிகள் நடக்கிறது என்பது பின்னால் ஹர்ஷத் மேத்தா விவகாரத்தின் போது தெரிந்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. (வீட்டில் என் அத்தையின் கணவர் யூனியன்வங்கியின் ஒரு கிளையின் மேலாளராக அப்போது இருந்தார்.) இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள்தானே ஊழலுக்கு வித்திடுகிறது. அந்த ஆள் செய்தது மிகவும் தவறு அதுவும் உயர்ந்த எண்ணத்தில் அனுப்பப் பட்ட பணம்.
    நான் நினைத்தேன் கிடைத்த லாபத்தில் கொஞ்சம் அன்னைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது என் ஊகம். அவரையும் ஒரு சிறு தொகையேனும் அனுப்பச் சொல்லி அன்னையிடமே மன்னிப்பும் கேட்கச் சொல்லியிருக்கலாமோ?
    அவர் ஆயிரத்தில் தவறு செய்திருந்த போதும் நீங்கள் அவரை நம்பி ஷேர்களைக் கொடுத்திருக்கிறீர்களே சார்.

    எதுவாக இருந்தாலும் நாமே நேரில் செய்வதுதான் நல்லது.
    க்ஷமா ஹி சத்ய ஹை! மேலிடத்திலிருந்து (உலகிற்கே) அவருக்கு மன்னிப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. "எனவே இவர் வந்து கேட்டபோது எதற்கும் லாயக்கில்லாத அந்த சர்டிபிகேட்களை இந்தா என்று கொடுத்துவிட்டேன்"

    என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்களே கீழ்கண்டவாறு சொல்லி இருக்கிறீர்கள்:-

    சத்தியமாக என்மீதுதான் தவறு. ஒருவேளை நானே செலானை பூர்த்திசெய்து கொடுத்தனுப்பி இருந்தால் அந்த ஊழியறாள் அதை கேன்சல் செய்திருக்க முடியாது. எனவே contributory negligence என்னுடையதே.

    அந்த ஊழியர் விற்ற பணத்தை உங்களிடம் கொடுக்காமல் போயிருந்தால் என்ன செய்வீர்கள்?


    பதிலளிநீக்கு
  5. ஷேர் Certificate களை அந்த ஊழியரைக் கொண்டு விற்க சொல்வது மறுபடியும் Contributory Negligence ஆகாதா ?

    பதிலளிநீக்கு
  6. Dr J Bhaskaran (on WhatsApp):
    உங்கள் அன்னை இழந்த ஆயிரம் மற்றும் ‘கண்ணகி’ கட்டுரைகள் வாசித்தேன். அருமை. உங்கள் அனுபவங்களும், நட்பு வட்டங்களும், வாசிப்பும் வியக்க வைக்கின்றன... சிறப்பாக எழுதுகிறீர்கள் சார்… 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டாக்டர் அவர்களே! தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி உடையவனாகிறேன்.

      நீக்கு
  7. கட்டுரை வழக்கம் போல சுவாரஸ்யம். ஆனால் அன்னை இழந்தது ஆயிரம் என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டாம். அன்னைக்கு ஏது இழப்பு?

    பதிலளிநீக்கு