செவ்வாய், ஜூலை 05, 2022

புறமுதுகு காட்டினாள் சுதந்திர தேவி

புறமுதுகு காட்டினாள் சுதந்திர தேவி

(அட்லாண்டிக் கடலோரம் )

அமெரிக்காவில் 84ஆவது நாள் (04-7-2022)


17 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பரைப் பார்க்க வெளிநாடு செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள்,  உங்களுக்கு முகத்தைக் காட்டாமல் அந்த நண்பர் புறமுதுகு காட்டினால் என்ன  நினைப்பீர்கள்?


உடனே திரும்பிப் போய்விடலாம் - இப்படிப்பட்டவரை நண்பர் என்று கருதியதே தவறு- என்றுதானே? 


அதுதான் முடியாது. நீங்கள் பார்க்கப் போன நண்பர் ஒரு உயிரற்ற சிலை என்றால்- அதுவும் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நாடு பரிசாகக் கொடுத்த பெண் சிலை என்றால்- அதன் பெயர் 'சுதந்திரதேவி' என்றால்- அதுவும் 351 அடி உயரத்தில் நிற்பவள் என்றால்- தானாக அவளால் திரும்பி உங்களை வரவேற்க முடியாது என்றால்-எந்தக் கப்பலில் ஏறி 'லிபர்ட்டி ஐலண்ட்' வந்தீர்களோ அதே கப்பல் மீண்டும் கிளம்பினால்தான் நீங்கள் நியூ ஜெர்சிக்குத் திரும்பிப்போக முடியும் என்றால்- கப்பலுக்கான டிக்கட் மட்டுமின்றி, அவளைப் பார்ப்பதற்காகவென்றே 25 டாலர் கட்டணமும் செலுத்தியிருந்தீர்கள் என்றால் - என்ன செய்வீர்கள்?

படத்தில் இருப்பது நாங்களல்ல 

சரி, தொலையட்டும், நாமே சென்று  அந்தச் சிலையை எதிர்வலமாக வந்து முகத்தைப் பார்த்துவிடலாம் என்றுதானே முடிவுசெய்வீர்கள்?  அதைத்தான் நானும் செய்தேன். 



நானும் என்றால் ஏதோ தனியாக வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டதாக எண்ணவேண்டாம். எட்டுப் பேராக நாங்கள் சென்றிருந்தோம் என்று அறிக. (நானும் மனைவியும், மூத்த மகள்+மருமகன்+பேரன், விடுமுறைக்காக சென்னையிலிருந்து வந்த இளைய மகள்+பேரன்+பேத்தி). 


நில்லுங்கள். 


இப்போது மணி காலை 7.30. (செவ்வாய்க்கிழமை - 05-7-2022). காலை  பத்து மணி வாக்கில் நாங்கள் நயாகரா அருவியைப் பார்ப்பதற்காக காரில் கிளம்ப இருப்பதால் -ஆறு மணி நேரப் பயணம் - எழுதும் வேலையைக் குறைத்துக்கொண்டு சில படங்களை மட்டும் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.  


சுதந்திரதேவி உறங்குகிறாள்= இந்தச் சிலையைப் பலர்
பார்த்திருக்க மாட்டார்கள்

“ரிக்லைனிங் லிபர்ட்டி” - “தூங்குவது போல் சாய்ந்திருக்கும் சுதந்திரதேவி”  என்பது 25 அடி நீளமான சிற்பம், நின்று கொண்டிருக்கும் சுதந்திர தேவி சிலையின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலைஞர் ஜாக் லாண்ட்ஸ்பெர்க் 2021 இல் மன்ஹாட்டனில் உள்ள மார்னிங்சைட் பூங்காவிற்குள் இந்தச் சிலையை உருவாக்கினார். இப்போது (28-6-2022 முதல்) அச்சிலையை ஜெர்சி சிட்டியிலுள்ள லிபர்ட்டி ஸ்டேட் பூங்காவிற்கு மாற்றியுள்ளார்.

நயாகராவில் நாங்கள் தங்கும் ஓட்டலில் சரியான வைஃபை கிடைப்பதைப் பொறுத்து அடுத்த பதிவை எதிர்பாருங்கள். இல்லையென்றால் இன்னும் நான்கு நாள் நீங்கள் பொறுக்கவேண்டும். ('அப்பாடா, நிம்மதி!' என்கிறீர்களா?)


  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து




கீழுள்ள பகுதி 08-7-2022 அன்று  சேர்க்கப்பட்டது:

1905இல் சுதந்திரதேவி சிலை இருந்த நிலையைக் காட்டும் படம்- (US Library of Congress) - அம்போ என்று நிற்கிறாள், பாவம்!



நாங்கள் 5-7-2022 முதல் 7-7-2022 வரை மூன்று நாட்கள் நயாகரா நீர்வீழ்ச்சியைக் காணச் சென்றிருந்தபோது,  நயாகரா நகரின் மையப்பகுதியில் ஒரு பூங்காவில், அமெரிக்க சுதந்திர தேவியின் டூப்ளிகேட் சிலை ஒன்று நிற்கவைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்.  அந்தப் படத்தை இங்கே காணலாம்: 

 


அடுத்த    கட்டுரை -" நயாகராவில் நான் (2022) -1 " படிக்க இங்கே சொடுக்கவும்



10 கருத்துகள்:

  1. இளைய மகன்+பேரன்+பேத்தி). //
    ????????
    நயாகராவுக்குக் கிளம்பும் உற்சாகத்தில் இளைய மகள் இளைய மகனாகி!!!! ஹாஹாஹா

    சயனக்கோலத்தில் காட்சி தரும் சுதந்திரா தேவியைப் பார்த்ததில்லை!!!

    நியூஜெர்சி - கடல் படம் - சூப்பர் சார்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சுதந்திரத்தைப் படுக்கவைத்துவிட்டார்களா அல்லது சுதந்திரம் சுதந்திரமாகத் தூங்குகிறதா?
    தேவி கிடந்த கோலம் அருமை! - சுந்தரராஜன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ரிக்லைனிங் லிபர்ட்டி” - “தூங்குவது போல் சாய்ந்திருக்கும் சுதந்திரதேவி” என்பது 25 அடி நீளமான சிற்பம், நின்று கொண்டிருக்கும் சுதந்திர தேவி சிலையின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலைஞர் ஜாக் லாண்ட்ஸ்பெர்க் 2021 இல் மன்ஹாட்டனில் உள்ள மார்னிங்சைட் பூங்காவிற்குள் இந்தச் சிலையை உருவாக்கினார். இப்போது (28-6-2022 முதல்) அச்சிலையை ஜெர்சி சிட்டியிலுள்ள லிபர்ட்டி ஸ்டேட் பூங்காவிற்கு மாற்றியுள்ளார்.

      நீக்கு
  3. அறியாத தகவல்களை அள்ளித் தந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. உறங்கம் சுதந்திரதேவி அறியாத தகவல் மற்றும் படம். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. கிரேஸி தீவ்ஸ் படத்தில் ஏதோ ஒரு சிலை உடைந்து அதைச் சரி செய்யும்போது அது சுதந்திர தேவி சிலையாகி விடும்.  அது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  6. சுதந்திர தேவி உறங்குகிறாள்// அமெரிக்காவிலுமா?

    நல்ல தகவல்கள்.

    நயாகரா அருவிக்குச் செல்லும் பயணம் சிறக்க வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையாக இருக்கிறது தங்கள் பதிவு.

    புதிய விவரங்கள் அறிந்தோம்.

    உங்களின் New York & Niagara பயணத்தைப் பற்றியும் எழுதுங்கள். குடும்ப புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழுங்கள் ( if you can )

    நயாகரா என்பது நீர்வீழ்ச்சி அல்ல ! நீரின் எழுச்சி!! - கவிபேரரசு வைரமுத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தடுத்த பதிவுகளைப் படியுங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன். நன்றி.

      நீக்கு