சனி, ஜூலை 23, 2022

மணிகர்ணிகா (4) இன்று வர மாட்டாள் - தொடர்கதை



மணிகர்ணிகா இன்று வர மாட்டாள் (4) தொடர்கதை
(அமெரிக்காவில்  101ஆவது நாள்:  21-7-2022)

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் இரண்டாம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (2)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் மூன்றாம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (3)" படிக்க இங்கே சொடுக்கவும்.


(அமெரிக்காவில்  101 வது நாள்:  21-7-2022)


மணிகர்ணிகாவும் சண்முகமும் தங்கள் வங்கிக் கிளையை அடைந்தபோது மாலை மூன்று மணி.


அன்றைய ரொக்க நடவடிக்கைகள் பகல் 2 மணிக்கு முடிந்துவிடும்.  ஆனால் அதிக தொகை செலுத்தும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்காக 3 மணி வரை பணப்பெட்டி திறந்திருக்கும்.


உறங்கும் சுதந்திர தேவி (நியூ ஜெர்சி) 


ராஜா கார் அருகில் ஓடிவந்து ஒவ்வொரு பெட்டியாக கொண்டுபோய் பாதுகாப்புப்  பெட்டகத்தின் உள்ளே வைத்தான்.  சண்முகம்  திடுக்கிட்டு மணிகர்ணிகாவை நோக்கினார். அவளோ விர்ரென்று பெட்டகத்தின் பக்கத்தில் சென்று நின்று கொண்டாள்.


பணப்பெட்டியை பார்த்தவுடன் அசிஸ்டண்ட் மேனேஜரும்  பெட்டகத்தின் இரும்புக் கதவருகில் நின்று கொண்டார். “எத்தனை லட்சம் ?” என்று  சண்முகத்தைப் பார்த்தார். “35  லட்சம்” என்றாள் மணிகர்ணிகா.


ஒவ்வொரு பெட்டியாகத் திறந்தாள்.  பெட்டியின் மேல் பகுதியில் பட்டுப்புடவைகளும் அடிப்பகுதியில் ரூபாய் நோட்டுகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  சொன்னபடியே 35 லட்ச ரூபாய் சரியாக இருந்தது. அதைப்  பணம் எண்ணும் மெஷினில் வைத்துச்  சரி பார்த்த பிறகு, அந்த எஞ்சினியரிங் கல்லூரியின் மும்பை கிளைக்கு வரவு வைத்தார்கள்.


பட்டுப்புடவைகள்  மொத்தம் இருபது இருந்தன. “இதெல்லாம் எனக்குத்தான்!”  என்று ஒரு பெட்டியில் வைத்து, தன் காரில் கொண்டுபோய் வைத்தாள் மணிகர்ணிகா. சண்முகத்துக்கு ஒன்றும் புரியவில்லை.


“சார் உங்கள் வீட்டில்தான் எனக்கு இன்று சாப்பாடு!” என்று மணிகர்ணிகா சண்முகத்தை ஏற்றிக்கொண்டு அவருடைய வீட்டை அடைந்தாள். “சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு சேர்மனைப் பார்த்து நேரில் விஷயத்தைச் சொன்னால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்றாள். 


“சேர்மன் நாளை வருவதாகத்தானே இருந்தது?” என்றார் சண்முகம்.


“அது அஃபீஷியல் விசிட். இன்று காலையே சென்னை வந்துவிட்டார், சொந்த விஷயமாக. தாஜில் தங்கியிருக்கிறார்.”


“மணிகர்ணிகா, உன்னுடைய நடவடிக்கைகள் எல்லாமே மர்மமாக இருக்கிறது. பெட்டியில் பணம் என்றாய். பிறகு புடவை என்றாய். ஏதோ நல்லபடியாக முடிந்தது. இல்லையென்றால் என் தலையல்லவா உருண்டிருக்கும்? என்ன ஆனாலும் நீ கிளார்க் என்பதால் யூனியன் உன்னைக் காப்பாற்றும்.  என் எதிர்காலம் அல்லவா கேள்விக்குறியாகி இருக்கும்?”


“கவலைப்படாதீர்கள் சார்! நான் கொஞ்ச நாளில் ரிசைன் செய்யப் போகிறேன். சில ஆண்டுகளாக வராமல் இருந்த கல்லூரியின் கடனை நீங்கள் மிகவும் பாடுபட்டு வசூலித்ததாக சேர்மன் உங்களுக்குப்  பாராட்டுக் கடிதம் வழங்கப்போகிறார். சீக்கிரம் இதே ஊரில் ரீஜினல் மேனேஜராக ஆகப்போகிறீர்கள். போதுமா?” என்றாள் மணிகர்ணிகா.


“ரீஜினல் மேனேஜரா?” வாய்பிளந்தார் சண்முகம். அவருடைய வங்கியின் மேலிடத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரின் ஆதிக்கம் இருந்தது. அந்த மொழியாளர்களே ரீஜினல் மேனேஜராவது வழக்கம். மற்றவர்கள் இன்டர்வியூ வரை போகலாம். செலக்ஷன் ஆகாது. தமிழ் பேசும் தனக்கு ஆர்.எம். போஸ்ட் வருமா? ஆனால் மணிகர்ணிகா ஆதாரம் இல்லாமல் பேசமாட்டாள். நெருப்பில்லாமல் புகையாது. பரபரப்பில் சண்முகம் ஏதோ சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிவிட்டு எழுந்தார். 


கொத்தவரங்காய் பருப்பு உசிலியும், வெண்டைக்காய் மோர்க்குழம்பும் ஜவ்வரிசி வடாமும் மணிகர்ணிகாவை ஒரு பிடி பிடிக்கவைத்தன.  “அருமையான மீல்ஸ் ஆண்ட்டி!” என்று சண்முகத்தின் மனைவியைப் பாராட்டிவிட்டு எழுந்தாள்.   சேர்மனைச் சந்திக்க இருவரும் புறப்பட்டார்கள். 


*** 

இன்றும் மணிகர்ணிகா வேலைக்கு வரவில்லை என்பதில் கோபால்சாமிக்கு அளவுகடந்த கோபம் வந்தது. மேனேஜரும் கேபினில் இல்லை. என்ன பேங்க் நடத்துகிறார்கள்? பாஸ்புத்தகங்கள் அப்டேட் செய்யவேண்டும். மணிகர்ணிகாவைத் தவிர வேறு யார்மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை. தன குடும்ப உறுப்பினர்களிடம்  தன்னுடைய பிக்ஸட் டெபாசிட் விவரங்களைக் கூறிவிடுவார்கள் என்று பயந்தார். அல்லது தன் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் சில லட்சங்களைப் பார்த்து சில ஊழியர்களே அவரிடம் கைமாத்து கேட்கவும் கூடும். 


“வணக்கம் சார்! என்ன வேண்டும்? நான் மீனா குல்கர்னி!” என்று அவரை அழைத்து அருகில் உட்காரவைத்துக் கொண்டாள் மீனா. அவரிடம் கேட்காமலேயே அவருடைய மஞ்சப்பையை வாங்கி, பாஸ்புத்தகங்களை எடுத்தாள். அவர் சொல்லாமலேயே எல்லாவற்றையும் அப்டேட் செய்தாள். மின்னல் வேகத்தில் காரியம் நடந்தது. 


“வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா சார்?” என்றாள். 


வழக்கமாக வங்கியில் அவருக்கு ஒருமணி நேரம் தேவைப்படும்.  மணிகர்ணிகாவுடன் குசலம் விசாரித்துக்கொண்டே ஒவ்வொரு பாஸ்புத்தகமாக எடுத்துக் கொடுப்பார். அவள் என்ட்ரி போட்டுக்கொடுத்தபின் ஒவ்வொரு எழுத்தையும் எண்ணி எண்ணிப் படிப்பதுபோல் நேரத்தைக் கடத்துவார். சாதாரண விஷயத்திற்கே நூறு கேள்வி கேட்பார். அங்குமிங்கும் நடந்துகொண்டே அவற்றுக்கு பதில் கூறுவாள் மணிகர்ணிகா. அவள் முகத்திலும் வார்த்தையிலும் அவ்வளவு நளினம் இருக்கும். இவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையவேண்டும் என்று மனதிற்குள் வாழ்த்துவார். இன்றோ  வேலை சீக்கிரம் முடிந்ததில் மகிழ்ச்சி தான். மீனாவும் மணிகர்ணிகாவைப் போன்றே மலர்ந்த முகத்துடன் சேவை செய்தது பிடித்திருந்தது. ஆனால் உடனே வீட்டுக்குப் போனால் மருமகளின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆட்படவேண்டுமே என்ற கவலை எழுந்தது. எனவே எப்படி இன்னும் முக்கால் மணிநேரம் வங்கியில் செலவிடுவது என்று யோசித்தார். 


ஹாலில் ஒட்டியிருந்த சில போஸ்டர்கள் அவர் கவனத்தை ஈர்த்தன. எழுந்தார். எந்த கிளார்க்குக்கு நேராக எந்த போஸ்டர் இருந்ததோ அதைப்  பற்றி அங்கிருந்தவரிடம் விசாரித்தார்.  ஆனால் யாரும் அவரைச் சட்டை செய்யவில்லை. “மேனேஜர் கேபினில் அமருங்கள். இதோ வந்துவிடுவார்” என்ற பதிலே கிடைத்தது. ஹாலில் ஏசி இல்லை. கேபினில் இருந்தது. எனவே போய் அமர்ந்துகொண்டார். கேபினில் விளக்கு போடவில்லை. அவருக்கு வெளிச்சமா முக்கியம்? மருமகளிடம் இருந்து கொஞ்ச நேரம் விடுதலை-அவ்வளவு தான். கேபினில் ஒருபுறம் சன்னல், மற்ற மூன்று புறங்களிலும் கண்ணாடிச் சுவருக்குமேல் திரைச்சீலை மூடியிருந்தது. கோபால்சாமி உள்ளே சென்று அமர்ந்ததை யாரும் பார்க்கவில்லை. ஏசியின் குளிர்ச்சியில் அவருக்கு இலேசாக உறக்கம் வந்தது. சோபாவில் சாய்ந்தவர் சிறிது நேரத்தில் முழுதாக உறங்கிவிட்டார்.    


மீனா அந்த வங்கிக்கு அன்று வந்திருக்கும் தகவலை சண்முகத்தின் மூலம் அறிந்து எஸ்எம்கே விரைந்துவந்தார்.  எஸ்எம்கே தான் அந்த யூத் ஹாஸ்டல் என்ற அரங்கத்தின் செயலாளர். நல்ல கலாரசிகர். எல்லோருடனும் தன்மையாகப் பழகுபவர். அரங்கத்தில் இசை, நடனம், நாடகம் எல்லாவற்றிற்கும் அவர்தான் பொறுப்பு. செயற்குழு என்று ஒன்று இருந்தாலும் அது கூடும்பொழுது நெய்வழியும் மைசூர்பாக்கும், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பும், வெண்ணெய் மிதக்கும் இனிப்பு லஸ்ஸியும்  அளவின்றி வழங்குவதன்மூலம் அவர் காட்டிய இடத்தில் குழுவின் கையொப்பம் கிடைத்துவிடும். எனவே அந்தப் பகுதியில் செல்வாக்கான பிரமுகராக  இருந்தார் எஸ்எம்கே. 


இன்று அவர் மீனாவைப் பார்க்க வந்த காரணம் நிச்சயம் கலைத்துறையோடு சம்பந்தப்பட்டதல்ல. அவருடைய மருமகனின் தம்பி கல்கத்தாவில் மாநில அரசின் வணிகவரித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு இன்னொரு இடத்திற்கு இடமாறுதல் தேவைப்பட்டது. ஆனால் மாநில அரசில் இம்மாதிரியான பதவிகளுக்கு இடமாறுதல் வேண்டுமென்றால் குறிப்பிட்ட சில ‘வழிமுறைகள்’ உண்டல்லவா? அதற்கு அத்துறையின் உயர் அதிகாரியான ஐஏஎஸ் அதிகாரியின் தயவு தேவைப்பட்டது. அவரும் மீனாவின் கணவர் குல்கர்னியும் ஐஏஎஸ்-சில் ஒரே பேட்ச் என்ற தகவல் எஸ்எம்கே-க்குக் கிடைக்கவே தான் வந்திருக்கிறார். ‘எப்படியாவது இடமாற்றம் வாங்கித்தந்து விடுகிறேன்’ என்று சம்பந்திக்கு வாக்களித்திருந்தார். அதை நிறைவேற்ற வேண்டுமல்லவா?


மீனாவும் இதேபோல் எஸ்எம்கே-யின் தயவை எதிர்பார்த்திருந்தாள். யூத் ஹாஸ்டல் அரங்கில் இந்த ஆண்டு டிசம்பர் சீசனில் தன்னுடைய நடனம் எப்படியும் நடந்தேறவேண்டும் என்று தீவிரமாக இருந்தாள். அது நடந்துவிட்டால் அடுத்த சீசனில் மியூசிக் அகடெமியில் அவர்களாகவே வந்து நேரம் கேட்பார்கள். அது எவ்வளவு பெரிய வாய்ப்பு!


“வணக்கம் மீனா! உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல டான்சர் என்று. ஆனால் இவ்வளவு இளம்பெண் என்று நினைக்கவேயில்லை” என்று ஆரம்பித்தார் எஸ்எம்கே.    


முகத்தில் இயற்கையான வெட்கத்தைக் காட்டியபடி, ”வணக்கம் சார்! உங்களைப் பார்க்கவேண்டும் என்று நானும் ரொம்பநாளாக நினைத்துக்கொண்டிருந்தேன். வாருங்கள். கேபினில் உட்காருங்கள்” என்று கேபின் கதவைத் திறந்தாள். வெளிச்சம் உள்ளே பாய்ந்ததும் பாதி உறக்கத்தில் இருந்த கோபால்சாமி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார். “ஐ யாம் வெரி சாரி” என்று தன்  மஞ்சப்பையை எடுத்துக்கொண்டார். சில பாஸ்புத்தகங்கள் தரையில் இறைந்துகிடந்தன. 


மீனாவுக்குப் பரிதாபமாக இருந்தது. வயதானவர். எல்லா பாஸ்புத்தகங்களையும் எடுத்து, ஒருமுறை சரிபார்த்து, மஞ்சப்பையில் வைத்து, வாசல்வரை சென்று அவரை அனுப்பிவைத்தாள். 


“இந்த எக்ஸ்டிரா சர்வீஸுக்கு பேங்கில் சம்பளம் கொடுக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்” என்று சிரித்தார் எஸ்எம்கே.   


“பை கொஞ்சம் கிழிந்திருக்கிறது. உடனே மாற்றிவிடுங்கள்” என்று கோபால்சாமியை எச்சரித்தாள் மீனா. ஓர் ஆட்டோவில் ஏறி அவர் அமர்ந்தபோது, அவருடைய பையிலிருந்து ஒரு பாஸ்புத்தகமும் சில செக் புத்தகங்களும் தரையில் விழுந்ததை யாரும் கவனிக்க முடியாதபடி இருபுறமும் நிறைய வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. 

   

மாலை நேரம். வங்கிக்கதவுகள் மூடவேண்டிய நேரம். எஸ்எம்கே தான் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லமுடியாமல் தயங்கினார். ஐந்தாறு ஊழியர்கள்  இருந்தார்கள். மீனாவும்  தானாக அவரிடம் வாய்ப்புக்காகக் கெஞ்சுவதுபோல் இருக்கவேண்டாம் என்று சுற்றிவளைத்தே பேசிக்கொண்டிருந்தாள்.


முடிவாக, “நான் யூத் ஹாஸ்டல் அரங்கத்தைப் பார்த்ததில்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் இப்போது போய்ப் பார்க்கலாமா?” என்றாள்.  


அவரும் அந்த சந்தர்ப்பத்தைத்தானே எதிர்பார்த்தார்! வங்கியிலிருந்து நூறு மீட்டரில் இருந்தது அரங்கம். ஆனால் அவளை இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மூன்று தாரகை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கேயே எல்லா விஷயத்தையும் பேசிமுடித்து, குல்கர்னியுடனும் போனில் பேசி, அன்று இரவே  மருமகனின் தம்பிக்கு இடமாற்ற உத்தரவையும் பெற்றுவிட்டார் எஸ்எம்கே. 


மீனா கேட்டது டிசம்பர் சீசனில் நடன வாய்ப்பு. எஸ்எம்கே கொடுத்ததோ, இன்னும் மூன்றே வாரத்தில் உதவி ஜனாதிபதி வரும் விழாவில் நடனமாடும் மிகப்பெரிய வாய்ப்பு!


**** 

“வாங்க மிஸ்டர் சண்முகம்!  ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து என்னைக் காப்பாற்றினீர்கள்! அந்த எஞ்சினீரிங் காலேஜ் ஆசாமி,  பொலிட்டிகல்  இன்ஃப்ப்ளூயன்ஸ் உள்ளவர். நீங்கள் மட்டும் இந்தப் பணத்தை வசூல்செய்திராவிட்டால் போர்டில் என்னை வறுத்தெடுப்பார்கள்!” என்று கைகுலுக்கி வரவேற்றார் சேர்மன்.


உள்ளே விரைந்து சென்ற மணிகர்ணிகா, இருவருக்கும் காபி தயார்செய்து எடுத்து வந்தாள். அவர்களுக்கிடையில் என்ன மாதிரியான ஒரு ‘இது’ இருக்கும் என்று சண்முகத்தால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் தன் கண்களை நேருக்குநேர் பார்ப்பதை மணிகர்ணிகா தவிர்ப்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. 


வங்கிக்கிளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பேசிமுடித்தபின், “உங்களுக்கு இன்னும் சில அதிகப்படியான பொறுப்புகளைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் தயாரா?” என்றார் சேர்மன்.  


“நீங்கள் எது செய்தாலும் அது என் நன்மைக்கே என்று நம்புகிறேன் சார்!” என்று பவ்யமாகச் சொன்னார் சண்முகம். 


மணிகர்ணிகா சொன்ன தகவல்தான் அது. இப்போது சேர்மன் வாயாலேயே உறுதிப்படுத்தப்பட்டது. “இதை யாருக்கும் வெளியிடவேண்டாம். இன்னும் ஒரு வாரம் பொறுக்கவேண்டும். போர்டில் வைக்கவேண்டும்” என்றார் சேர்மன். அத்துடன் மணிகர்ணிகாவை அழைத்து “இரண்டு” என்றார். 


தான் எடுத்துவைத்திருந்த புடவைகளில் விலை உயர்ந்த இரண்டைக் கொண்டுவந்து சண்முகத்திடம் கொடுத்தாள் மணிகர்ணிகா. “நிச்சயம் மேடத்திற்குப் பிடிக்கும்” என்றாள்.   


“ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தானே ஒரு நிறுவனம் முன்னேறமுடியும். சென்று வாருங்கள் சண்முகம்” என்றார் சேர்மன். 


(தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (5)" படிக்க இங்கே சொடுக்கவும்.


  

9 கருத்துகள்:

  1. கோபால்சாமி தவறவிட்ட பாஸ்புக் தவிர மற்றவை யாவும் சுபம்தான் - இதுவரை!

    பதிலளிநீக்கு
  2. // ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரின் ஆதிக்கம் இருந்தது //

    தற்போது வெங்கோலன் ஆட்சியில்...? ம்... மருமகளின் கொடுங்கோல் ஆட்சியை சிந்திப்பது பேதைமை...

    பதிலளிநீக்கு
  3. ஐயா கோபித்துக் கொள்ளாதீர்கள். இக்கதை கற்பனை கலந்த நிஜமா? அல்லது நிஜம் கலந்த கற்பனையா என்று ஒரு சிறு பொறி தட்டுகிறது. சில சம்பவங்கள் அப்படி தோன்ற வைக்கிறது!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜத்திலிருந்து பிறப்பதுதானே கற்பனை! கற்பனைகளும் சில நேரம் உண்மையாகும்தானே! இரண்டையும் அளவோடு கலந்து தருவதுதானே ஆரம்பநிலை எழுத்தாளர்களின் இயல்பு! குழப்புகிறேனா?

      நீக்கு
  4. பேங்கில் பேங்க் வேலைய செய்யாம "முறைவாசல்" வேலைய தான் செய்வார்கள் போல .

    பதிலளிநீக்கு
  5. //நீங்கள் மட்டும் இந்தப் பணத்தை வசூல்செய்திராவிட்டால் போர்டில் என்னை வறுத்தெடுப்பார்கள்!” என்று கைகுலுக்கி வரவேற்றார் சேர்மன்.//

    சேர்மன் முயற்ச்சியால் தானே பணம் வசூல் ஆனது.என்ன கதை விடுகிறார் சேர்மன்?
    முதல்நாள் ப்யூன் ராஜாவோடு மணிகர்ணிகா சென்றாளே, அன்று பணம் வசூல் ஆகி இருந்தால், ராஜா விடமும் சேர்மன் அப்படி பேசி இருப்பாரா?
    Promotion கொடுத்து இருப்பாரா..?

    பதிலளிநீக்கு
  6. பேங்க் வரும் சாக்கில் அங்கு TELLER கவுண்டரில் இருக்கும் பெண் ஊழியர்களை சைட் அடிக்க கோபால்சாமி மாதிரி சில பேர் வருவதுண்டு .

    பதிலளிநீக்கு