ஞாயிறு, ஜூலை 17, 2022

மீண்டும் அதே கட்டிடம்!



 மீண்டும் அதே கட்டிடம்!  

(இப்படியும் மனிதர்கள்)

அமெரிக்காவில் 79ஆவது நாள் (29-6-2022)

(தாமதமாகப் பதிவேற்றும் நாள் 16-7-2022)


இதன் முந்தைய    பகுதி -" சினிமா டிக்கட், ரயில் டிக்கட், விமான டிக்கட் " படிக்க இங்கே சொடுக்கவும்.


நேற்றைய கடைசி வரிகள்........

வெளியில் வந்தவுடன் எனது போட்டியாளர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள்..... அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் ஐஓபி கட்டிடத்தை மட்டும் ஆறுமாதம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 



எதிர்பார்த்தபடியே எம்எஸ்சி (கணிதம்) இறுதித் தேர்வில் வெற்றிகரமாக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சேலத்திலிருந்து மீண்டும் இராணிப்பேட்டைக்கு வந்துசேர்ந்தேன். என்னுடைய பிஎஸ்சி நண்பர்கள் அனைவருமே ஏதாவதொரு வேலை கிடைத்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். எனவே என்னைச் சுற்றிலும் நண்பர்களற்ற வெற்றுச் சூழலாக உணர்ந்தேன். நான் இரண்டாண்டுகள் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு வந்ததை என் நண்பர்களின்  பெற்றோர்கள் பெரிய விஷயமாகவே கருதவில்லை. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறேனா இல்லையா என்பதே அவர்களின் கவலையும் எதிர்பார்ப்புமாக இருந்தது.


1970களில் 14 பெரிய வங்கிகள் தேசீயமயமானபிறகு நாடெங்கிலும் அவை ஏராளமான கிளைகளைத் திறக்க ஆரம்பித்ததால், வங்கி ஊழியர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. குறிப்பாக ஒவ்வொரு வங்கியும் அகில இந்திய அளவில் ‘ப்ரொபெஷனரி ஆபீசர்’ என்ற பதவிக்கு ஆளெடுக்கத் தொடங்கியிருந்தன. பட்டதாரி இளைஞர்கள் இதற்கான எழுத்துத் தேர்வுகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்காணலுக்கு நான் அழைக்கப்படுத்தாக ஒரு வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. அந்த வங்கி தான் ஐஓபி என்னும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்.     


ஆகவே ராகுகாலமும் எமகண்டமும் இல்லாத ஒரு வேளையில் அந்த ஐஓபி கட்டிடத்தில் இரண்டாவது முறையாக அடியெடுத்துவைத்தேன். அப்போது ஏர் இந்தியா அலுவலகமும் கண்ணில் பட்டது. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று அதை ஒதுக்கிவிட்டு வங்கியின் ரிசப்ஷன் அறைக்குள் நுழைந்தேன். பெரிய கட்டிடம். சிறப்பாக இயங்கிய வங்கி என்று பெயரும் பெற்றிருந்ததால் அதில்  அதிகாரியாக வேலை கிடைக்குமானால் நல்லது தான் என்று மகிழ்ந்தேன். 


ரிசப்ஷனில் இருந்தவர் எனது அழைப்புக் கடிதத்தைப் பார்த்து அவருடைய பட்டியலில் ‘டிக்’ செய்துவிட்டு, பெயர் முகவரியை ஒப்பிட்டுப் பார்த்தபின், இரண்டாவது, அல்லது மூன்றாவது, அல்லது  நான்காவது மாடிக்குப் போகுமாறு சொன்னார். (சரியாக நினைவில்லை). போனேன். பலர் கூடிப்  பேசுவதற்கான நீண்ட மேஜையும் பல நாற்காலிகளும் கொண்ட பெரிய அரங்கம் அது. தலைவருக்கான சிறப்பு அலங்காரம் கொண்ட நாற்காலி ஒன்றும் அதற்கு முன்னால்  ‘மைக்’ இணைப்பும் இருந்தது. 


பத்து மணிக்கு நேர்காணல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பேட்ச்சில் என்னையும் சேர்த்து ஆறு பேர் அங்கு குழுமியிருந்தோம். பன்னிரண்டு மணிக்கு அடுத்த பேட்ச். ஆனால் ஒன்பதரை வரை அந்த அரங்கம் பெருக்கப்படவில்லை, விளக்குகளும் ஏற்றப்படவில்லை.


ஒரு இளம் அதிகாரி விரைந்து வந்தார். “ஜி.எம். இப்போது வந்துவிடுவார். ஏன் இன்னும் விளக்கே போடவில்லை?’”என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்.  நாங்கள் என்ன பதில் சொல்வது? 


அங்கிருந்த இண்டர்காமில் யாரையோ தொடர்பு கொண்டார். “என்ன சார் இது! ஜி.எம். வர்ற நேரம். லைட் கூடப் போடாமல் இருக்கிறது!” என்றார். அதைச் சொன்ன நேரத்தில் அவரே ஸ்விட்ச்சைத் தட்டியிருக்கலாமே! 


பிறகு இன்னொரு நம்பரைச் சுழற்றி,”ஹாலில் ஃபேன் கூட போடவில்லை சார்! இன்டர்வியூ கேண்டிடேட்ஸ் என்ன நினைப்பார்கள்?” என்றார். அதைச் சொன்ன நேரத்தில் அவரே ஃபேன் போட்டிருக்கலாமே!  


மணி பத்து ஆகிவிட்டது. இந்த இளம் அதிகாரியும் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். சற்று நேரத்தில் இன்னொரு வயதான அதிகாரியை அழைத்துக்கொண்டு திரும்பிவந்தார். “பாருங்கள் கோபாலன் சார்! இன்டர்வியூ சமயத்தில் எப்படி நடந்துகொள்கிறார்கள்! இந்த ஹாலில் டியூப் லைட்டையும்     ஃபேனையும் போட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஏன் போடவில்லை தெரியுமா? ஹெச் ஆர் டிபார்ட்மென்ட் எப்படி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியவேண்டாமா, அதற்குத்தான்!”


மூத்த அதிகாரி அவரை அமைதிப்படுத்தினார். “முரளி, இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டுமா? சுப்பையனுக்கு போன் போட்டீர்களா?” என்றார்.


“போட்டேன் சார், இதோ வருகிறேன் என்று சொன்னார், இன்னும் வரவில்லை சார். ஒன்பது மணி டியூட்டி சார் அவருக்கு!” 


“உஷ்” என்றார் கோபாலன். “அவன் யார்னு உங்களுக்குத் தெரியும்தானே? அவன் பியூன் தான் என்றாலும் கிளரிக்கல் யூனியன் வைஸ் பிரசிடெண்ட் ஆயிற்றே! அவன்கிட்ட நாம் சட்டம் பேசமுடியுமா?” என்றவர், தானே இண்டர்காமில் யாரையோ அழைத்தார்.


“நான்தான் டிஜிஎம் பேசறேன். மிஸ்டர் சுப்பையனை தேர்டு ஃப்ளோருக்கு வரச்  சொல்றீங்களா?” 


சிறிது நேரத்தில் வெள்ளை வெளேர் யூனிபார்மில் கம்பீரமாக ஒரு ஊழியர் வந்தார். அவரைக் கண்டதும், “வாங்க சுப்பையன்!” என்றார் கோபாலன்.


வணக்கம் சொல்வதுபோல்  தலையை மட்டும் இலேசாக அசைத்த சுப்பையன், எங்கள் அனைவரையும் பார்த்து “ஏன் சார்? இன்டர்வியூ நடக்குதா?” என்றார்.


“ஆமாம் சுப்பு! பாருங்க லைட் கூட போடலை, ஃபேனும் போடலை” என்றார். “ஒன்பது மணி டியூட்டி யாருதுன்னு பார்த்து ஒடனே வரச் சொல்லுங்க. கேண்டிடேட்ஸ் வெய்ட் பண்றங்க. ஏசி போடச்சொல்லுங்க” என்றார் கோபாலன்.


உடனே சுப்பையன் தன் பாக்கெட்டிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். பிறகு சிரித்துக்கொண்டே,” ஆமாம் சார்! என்னோட டியூட்டி தான் இன்னைக்கு!   சரி நான் பாத்துக்கறேன். நீங்க போலாம் சார்!” என்று ஃபேன் ஸ்விட்ச்சைப் போட்டார்.  


பிறகு இளம் அதிகாரியைப் பார்த்து, “ஏன் முரளி சார்! இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு நேத்து எங்கிட்ட சொல்லமாட்டீங்களா? சொல்லியிருந்தா இதெல்லாம் நடக்குமா? இத்தனை பேர் எதிர்ல டிஜிஎம் என்னை எப்படிப் பேசினார்னு பார்த்தீங்க இல்லே? நான் இதைச் சும்மா விடமாட்டேன். சேர்மன் செக்ரட்டேரியட் வரை கொண்டுபோவேன்” என்று அதட்டலாகக் கூறியவர், ஹாலுக்குள் நுழையாமல் திரும்பவும் இண்டர்காமில் யாரையோ தொடர்புகொண்டார். 


பிறகு கோபாலனை நோக்கித் திரும்பி, “சார்! ஜிஎம் எப்ப வந்து இன்டர்வியூ தொடங்கறாரோ அப்ப ஏசி யைப் போட்டால் போதும்னு பிரமிஸஸ் டிபார்ட்மென்ட்ல  சொல்றாங்க! எலெக்ட்ரிக் பில் எக்கச்சக்கமா வருதாம். அதனால் நான் லைட்டையும் ஃபேனையும் மட்டும்தான் போட முடியும். அப்புறம் என்னைக் கொறை சொல்லக்கூடாது சார்!” என்று தெளிவாகச் சொல்லிவிட்டு அந்த இரண்டு வேலைகளை மட்டும் முடித்துவிட்டுச் சென்றார் சுப்பையன்.   அந்த இரண்டு அதிகாரிகளும் எங்களை ஹாலுக்கு உள்ளே அமரச் சொன்னார்கள். 


சற்றுநேரம் கழித்து ஒரு துப்புரவுப் பெண்மணி வந்தார். எங்களைப்  பார்த்து,”கொஞ்ச நேரம் வெளியில் இருக்கிறீர்களா? டேபிள் சேர் எல்லாம் டஸ்டிங் செய்யவேண்டும். உங்கள் மீது தூசி விழுமே!” என்றார்.  எல்லோரும் வெளியில் வந்து நின்றுகொண்டோம். 


சரியாகப் பதினோரு மணிக்கு ஜிஎம் வந்தார். கூடவே இரண்டு அதிகாரிகள் கையில் எங்கள் விண்ணப்ப ஃபைல்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். சுப்பையன் பந்தாவாக “குட் மார்னிங் சார்” என்று ஜிஎம் முன்பு சல்யூட் அடிக்காத குறையாகச் சொன்னார். கதவருகில் நின்றுகொண்டு “மொத்தம் ஏழு கேண்டிடேட்ஸ் வந்திருக்கிறார்கள் சார். ஒருவர் ஆப்செண்ட்” என்று ஒரு பட்டியலைப் பார்த்துச் சொன்னார்.


தன் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்ட ஜிஎம்,  அப்போதுதான் ஏசி போடாமல் இருந்ததைக் கண்டு சுப்பையனை ஏறிட்டார். “நீங்க வந்த பிறகு போட்டால் போதும்னுட்டார் டிஜிஎம்” என்று அவசர அவசரமாக ஏசி ஸ்விட்ச்சைப் போட்டார் சுப்பையன். எங்களுக்கெல்லாம் பகீரென்றது. இந்த பேங்க்கில் யார் யாருக்கு எஜமான்?  


“ஓகே ஓகே” என்ற ஜிஎம் தனது இன்டர்வியூ கடமையில் இறங்கினார்.


*** 

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தவேண்டும். மேற்படி இன்டர்வியூ நடைபெற்ற சமயத்தில் BSRB  எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம்  ஏற்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு நியதிப்படி தனக்கு வேண்டிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் எல்லாவற்றிலும் முதலில் எழுத்துத்தேர்வு, அதன் பிறகு இன்டர்வியூ  என்பது மட்டும் தவறாமல் பின்பற்றப்பட்டது. 


மேற்படி நாளன்று எங்கள் நேர்காணல் முடிந்தது. கிரீஸ் நாட்டின் தலைநகரம் எது என்பதுமுதல், இந்த வங்கியின் தற்போதைய சேர்மன் யார் என்பதுவரை, சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கும் கரண்ட் அக்கவுண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதிலிருந்து, சேவிங்ஸ் கணக்கு தொடங்க மினிமம் பேலன்ஸ் எவ்வளவு என்பதுவரை கேட்கப்பட்டது. ஏசி என்பதன் விரிவு என்ன என்ற கேள்வி அனைவரிடமும் கேட்கப்பட்டது. ஏர் கண்டிஷன் என்று பதில் சொன்னோம். இல்லை “ஆல்ட்டர்நேட்டிங் கரண்ட்” என்ற விடையைத்தான் எதிர்பார்த்தோம் என்றார்கள். தொலையட்டும்.


இன்டர்வியூ முடிந்தபிறகும் எங்களை அப்படியே இருக்கச் சொன்னார்கள். பிறகு ஓர் அதிகாரி வந்தார். “இளம் நண்பர்களே, நீங்கள் எல்லாரும் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதவேண்டும்” என்றார். “நான் நிதி மந்திரி ஆனால்…”, அல்லது, சென்னையின் பெருமைகள்”, அல்லது “நான் அண்மையில் படித்த ஆங்கில நாவல்” என்ற தலைப்புகளை கொடுக்கப்பட்டன. நான் கடைசி தலைப்பில் எழுதினேன். 


எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. எழுத்துத் தேர்வு முடிந்தபிறகுதானே  இன்டர்வியூ நடந்தது. அதற்குப் பின்னும் ஒரு கட்டுரை எழுதும் போட்டி வைத்தது ஏன்?  


கடைநிலை ஊழியரைக்  கண்டித்து ஒழுங்குமுறையை நிலைநாட்ட மேலதிகாரிகள் தயங்கியது ஏன்?


இப்படிப்பட்ட வங்கியில் வேலைசெய்வது வேறெந்த வகையிலும் சிபாரிசோ செல்வாக்கோ இல்லாத என் போன்றவனுக்குப் பாதுகாப்பானதா? 


பலநாட்கள் ஆகியும் வங்கியிலிருந்து கடிதம் வரவில்லை. சரியென்று நானாகவே ஒரு கடிதம் எழுதினேன். 


“உங்கள் பெர்பார்மன்ஸ் நன்றாக இருந்தபோதிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே அதிகாரிகள் தேர்வுசெய்யப்பட வேண்டி இருந்ததால் உங்களைப் போன்ற ஆர்வமும்  திறமையும் கொண்ட இளைஞர்கள் சிலர் விடுபட்டுப்போயினர்…” என்ற அழகான வாசகங்களுடன் பதில் வந்தது. “உங்கள் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று மறவாமல் குறிப்பிட்டிருந்தார்கள்.

     

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 


13 கருத்துகள்:

  1. விடயங்களை நேற்று நடந்தது போல் சரியாக பெயர்களை எல்லாம் சொன்னது சிறப்பு.

    அப்பொழுதே... வங்கிகளில் ஏசி இருந்ததா ? ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கியின் தலைமை அலுவலகத்தில் போர்டு மீட்டிங் நடக்கும் அரங்கத்திலும், சேர்மன், ஜிஎம் கேபின்களிலும் அப்போதே ஏசி குளுமை இருந்தது.
      பெயர்கள் அனைத்தும் கற்பனையே. நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையே! உண்மையோடு கற்பனை சேர்ந்தால்தானே காபியில் சர்க்கரை மாதிரி ருசி கிடைக்கிறது!

      நீக்கு
  2. கடைநிலை ஊழியர் காட்டும் பந்தா... நானும் சந்தித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நான் இரண்டாண்டுகள் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு வந்ததை என் நண்பர்களின் பெற்றோர்கள் பெரிய விஷயமாகவே கருதவில்லை. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறேனா இல்லையா என்பதே அவர்களின் கவலையும் எதிர்பார்ப்புமாக இருந்தது.//

    சார் இது நான் பட்ட மேற்படிப்பு முடித்த காலகட்டத்திலும் இருந்தது. இப்போதும் கூட அரசு வேலை என்றால் பலரது புருவங்களும் உயரும் "ஓ" என்று. ஆனால் அந்த ஓ என்பதன் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் கழுதை மேய்த்தாலும் கவர்மெண்ட் கழுதையைத்தான் மேய்க்கவேண்டும் என்று திருநெல்வேலிக்காரர்கள் கூறுவதுண்டு. எனக்குக் கழுதை மேய்க்கத் தெரியாது என்பதால் நான் சர்வீஸ் கமிஷன் எழுதவில்லை!

      நீக்கு
  4. Viswanathan: Till the govt started transferring senior executives from other banks, as it happened in recent years that infused fresh blood, IOB was ‘managed’ and controlled by Union/Association. This fact has been well brought out by you, sir.

    பதிலளிநீக்கு
  5. யூனியன் என்றாலே அப்படித்தான். கேரளத்திலும் அப்படித்தான். அதே யூனியன் காரர்களின் உதவி சில சமயங்களில், இடம் மாற்றம் போன்றவற்றிற்குத் தேவைப்படுவதாகவும்இருக்கத்தான் செய்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. அவரே போட்டிருக்கலாம்//

    பல அலுவலகர்கள் அப்படித்தான் அது யார் வேலையோ அவர்கள்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். இது என் வேலை இல்லை என்றும் தங்களின் பதவிக்கு இதெல்லாம் செய்யக் கூடாது என்றும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

    வங்கி என்றில்லை எல்லா அரசுத் துறை அலுவலகங்களிலும் கடைநிலை ஊழியர்கள் அப்படித்தான் இருப்பதாகத் தெரிகிறது. அது போல நாம் ஏதேனும் விஷ்யாமாகச் சென்றால் எதிர்பார்ப்புகளும் உண்டு,

    கீதா

    பதிலளிநீக்கு
  7. யூனியன் போர்வையில் இப்படித்தான் பல பேர் வேலை செய்வதில்லை. வேலைக்கும் சரியாக வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. ஆக இரண்டு முறையும் அந்தக் கட்டிடம் தங்களுக்கு வேலை தரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இளம் நண்பரே! ஆனால், பணி ஓய்வு பெற்றபின், ஒரு மென்பொருள் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தபோது, அதே வங்கியின் ஏடிஎம் செயல்பாட்டுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் சிறிதுகாலம் அந்தக் கட்டிடத்திற்குச் சென்றுவந்துகொண்டிருந்தேன்.

      நீக்கு