பிரின்ஸ்டனில் ஒரு சிட்டுக்குருவி (சிறுகதை)
- இராய செல்லப்பா
நியூஜெர்சியில், பிரின்ஸ்டன்
பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த ஸ்டார்பக்ஸ் காஃபி ஷாப்பின் கிளைமேலாளர் ரிஷி. வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்கும் புன்சிரிப்பும்
சுறுசுறுப்பும் கொண்ட இந்திய வம்சாவளி இளைஞன்.
காலை ஐந்துமணிக்கே வந்துவிடுவான்.
அடுத்த சில நிமிடங்களில் கம்பெனியின் சப்ளை வேன் வந்துவிடும். ஆர்டர் செய்தவை
எல்லாம் வந்தாயிற்றா என்று முதல் பார்வை பார்த்துவிட்டு, அவற்றை இறக்கி உரிய அலமாரிகளில் கொண்டுபோய் வைப்பான்.
சற்று நேரத்தில் அவனுடைய உதவியாள் வந்துவிடுவார். அவர் ஒரு வியட்நாம் போரில்
காயம்பட்ட படைவீரர். வயது அறுபது இருக்கும். இருவருமாகக் கடையை உட்புறமாகப்
பூட்டிவிட்டு, முதலில் கழிப்பறையையும் பிறகு கடை
முழுவதையும் பெருக்கிச் சுத்தம்
செய்வார்கள். அதற்குக் கம்பெனி அனுமதித்த நேரம் பதினைந்து நிமிடம்தான். ஆனால்
ரிஷிக்கு அதுவே அதிகம். பத்தே நிமிடத்தில் கதவைத் திறந்து முதல் வாடிக்கையாளரை
வரவேற்கத் தயாராகி விடுவான்.
அனேகமாக
அந்த முதல் வாடிக்கையாளர் மிருதுளாவாகத்தான்
இருக்கும். பள்ளி இறுதியாண்டு மாணவி. வாய்நிறையப் புன்னகையுடன் ஃப்ரெஷ்லி
ப்ரூவ்டு காஃபி ஆர்டர் செய்துவிட்டு, மடிக்கணினியைத்
திறந்து பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விட்டால் காஃபி
குடிப்பதையும் சிலநேரம் மறந்துவிடுவாள். ஆனால் அன்றோ ஒரே மூச்சில் குடித்து
முடித்துவிட்டாள்.
சாலையின்
எதிர்ப்பக்கம் தெரிந்த பழமையான மரம் ஒன்றைத் திடீரென்று வெறித்துப் பார்த்த
மிருதுளா, மடிக்கணினியை அங்கேயே விட்டுவிட்டு வேகமாக வெளியேறினாள்.
ரிஷிக்கு
அவளுடைய நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களில் தெளிவாகத் தெரிந்திருந்தன. பறவைகளைப்
பற்றிய படிப்பில்தான் தனக்கு ஆர்வம் என்று அவள் கூறுவதுண்டு. நியூஜெர்சி மாநிலம்
அபூர்வமான பறவைகளுக்குத் தாய்வீடாக இருந்தது. அதிலும் பிரின்ஸ்டன் நகரம் பல்வகை
மரங்களையும் கொண்டிருந்ததால், விதவிதமான பறவைகளை அவள் ஆராய முடிந்தது.
நீண்ட
நாட்களாக அவள் தேடிக்கொண்டிருந்த பறவை ஒன்று அவள் கண்ணில் பட்டிருக்கவேண்டும். ஆகவேதான்
இப்படி எழுந்து ஓடியிருக்கிறாள்.
மிருதுளாவின்
மடிக்கணினியையும் மற்ற பொருட்களையும் எடுத்து உயரத்தில் இருந்த அலமாரி யொன்றில்
பத்திரப்படுத்தினான் ரிஷி.
பிரின்ஸ்டன் வளாகத்தின் உள்ளிருந்த
பட்டுப்போன மரமொன்றின் அருகே
வந்ததும் மிருதுளா நின்றாள். அண்ணாந்து பார்த்தாள். சுமார் ஆறடி உயரத்தில் இருந்த
பொந்தில் தலைகாட்டிக் கொண்டிருந்தது, சிட்டுக்குருவி போன்ற ஒரு பறவை.
கறுத்த தலையும், கழுத்தில் ஒரு கரும்பட்டையும், சாம்பல் நிறச் சிறகுகளும், வெண்ணிறக்
கன்னங்களும், கூர்மையான மூக்கும் கொண்ட கொழுகொழுப்பான
அப்பறவையைப் பலகோணங்களில்
படமெடுத்துக்கொண்டாள். குறிப்புப்
புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டாள். அதற்குள் அப்பறவை விர்ரென்று
பறக்கத் தொடங்கியது. மிருதுளாவும் அதைத் துரத்திக்கொண்டு வேகமாக நடந்தாள்.
ரிஷியின் மாலை நேர வாடிக்கையாளர்கள்
லூலியும் மீராவும்.
லூலிக்கு பிரின்ஸ்டனில் இது மூன்றாவது
செமெஸ்டர். சீனாவில் தையல் தொழிலில் இருந்த, தகப்பனாரில்லாத, ஏழைக் குடும்பத்திலிருந்து மிகுந்த
சிரமங்களுக்கு நடுவே பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவின் ஐவிலீக்
பல்கலைக்கழகமான பிரின்ஸ்டனில்
மின்னணுத்துறையில் எம்.எஸ். படிக்க வந்தவள். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். ஏழ்மையில்
உழன்றதால் வந்த தாழ்வு மனப்பான்மையும், சரளமாக அமெரிக்க
ஆங்கிலம் பேசவராத தயக்கமும் அவளை அதிகம் பேருடன் பழகமுடியாமல் செய்துவிட்டன. எனவே
தன்னுடைய அறையைப் பகிர்ந்துகொள்ளத் தகுதியான தோழியை அவளால் உடனே கண்டுபிடிக்க
முடியாமல் இருந்தாள்.
மீராவும் அதே எம்.எஸ். வகுப்பு தான். ஆனால்
முதல் செமஸ்டர். சென்னைவாசி. ஸ்காலர்ஷிப்பில் வந்தவள். கிட்டத்தட்ட லூலியின் உயரமே
என்றாலும் அசாத்திய தைரியசாலி. ஆகவே அவளைப் பார்த்தவுடனே லூலிக்கு ஓர்
ஈர்ப்பு ஏற்பட்டதுடன்,
தனது சுய முன்னேற்றத்திற்கும் அவள் துணையாக இருப்பாள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்து. ஆகவே மீராவைத் தன்னுடைய
அறைத் தோழியாகத் தங்க அவளுக்கு இடம்கொடுத்தாள்.
நியூஜெர்சி தீயணைப்புத்துறையில் அதிகாரியாக இருந்து 9/11 இல் பணியின்போது மரணமடைந்த தந்தையின் ஒரே பெண் மிருதுளா.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வசதியான குடும்பம். சென்னைதான் பூர்விகம். பங்களாவைச் சுற்றி இருந்த மரங்களில் ஏராளமான சிட்டுக்குருவிகள்
சிறகடித்துப் பிறந்ததால் சிறுவயது முதலே மிருதுளாவுக்குச் சிட்டுக்குருவிகள்மீது
அதீதக் காதல் ஏற்பட்டுவிட்டது.
பிரின்ஸ்டனில் அன்று அவள் பார்த்த
கறுப்புக்குருவியின் பெயர் ‘சிக்கடீ’.
வழக்கமான சிட்டுக்குருவியை விடவும் சிறியது. உரித்த வேர்க்கடலையும், சூரியகாந்தி விதைகளும் முக்கிய உணவுகள். விசில்
அடிப்பதுபோல் பாடும் இயல்புடையது. மனித நடமாட்டம் உள்ள இடங்களில்தான் வருமாம்.
தன் பள்ளியிறுதி வகுப்பின் ப்ராஜெக்ட்டாக
அதையே தேர்ந்தெடுத்தாள் மிருதுளா.
அதனால் பிரின்ஸ்டன் வளாகத்திற்கு
அடிக்கடி வர நேர்ந்தது. சிக்கடீயின்
குரலைத் தானே கேட்டுப் பதிவும் செய்தாள். அதற்கு மிகவும் உதவியவன் ரிஷி.
ஒரு சனிக்கிழமை மாலை. மளிகைப் பொருட்களைத் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு செக்-அவுட் கவுண்ட்டரின் நீண்ட வரிசையில் லூலியும்
மீராவும் காத்திருந்தனர்.
மிகவும் பார்த்துப் பார்த்து தான் செலழிப்பாள் லூலி.
மீராவும் அப்படித்தான் என்றாலும் வாய்ருசிக்குச் செல்வழிக்கத் தயங்க மாட்டாள். அன்றும் அப்படித்தான். இருவருக்குமாக. நிறைய வாங்கியிருந்தாள். வேண்டிய பணம் அவளது கடன் அட்டையில் இருந்தது.
சிலநேரம் கடன் அட்டைகள் படுத்தும் என்பதால் இருநூறு டாலர் ரொக்கமாகவும்
வைத்திருப்பாள்.
அப்போது திடீரென்று மீராவின் கைப்பேசி
ஒலித்தது. சென்னையில் இருந்து குரல். பொதுவாக அந்த நேரத்தில் வீட்டிலிருந்து அவளை
அழைக்க மாட்டார்கள். என்ன அவசரமோ? பதிலளிப்பதற்காக வெளியில்
ஓடினாள் மீரா.
அப்போதுதானா அந்த விபரீதம் நிகழவேண்டும்?
தள்ளுவண்டியில் இருந்த எல்லாப் பொருட்களையும்
ஸ்கேன் செய்து பில்லிங் முடித்த கவுண்ட்டர் பெண்மணி, வண்டியின்
கீழ்த்தளத்தில் இன்னும் ஏதோ ஒரு பொருள் இருப்பதைக் கண்டாள். கையில் எடுத்தவள், தன் விரல்கள் பிசுபிசுப்பதைக் கண்டு அருவருப்பானாள். அடிப்பகுதி நொறுங்கி ஒழுகிக்கொண்டிருந்த, விலை உயர்ந்த
பெர்ஃப்யூம் பாட்டிலை எடுத்துக்காட்டி, முகத்தில்
கடுகடுப்புடன், "ஏன் உடைத்தீர்கள்? இதன் விலை 150 டாலர். இதை உங்கள் பில்லில் தான்
சேர்க்க வேண்டும்!" என்றாள். பின்னர் அடுத்த கவுண்ட்டர்
பெண்மணியிடம் “இவர்கள் ஏன் இங்கு வந்து உயிரை
வாங்குகிறார்கள்?” என்று குசுகுசுத்தாள். கொரோனா
ஆரம்பித்தது முதலே சீனர்கள் மீது ஏற்பட்டிருந்த உலகளாவிய வெறுப்பின் வெளிப்பாடு.
லூலிக்கு உடலே வியர்த்து விட்டது. எல்லோரும் தன்னையே விசித்திரமாகப் பார்ப்பது போலிருந்தது.
“அந்த பெர்ஃப்யூமை நான் எடுக்கவுமில்லை, உடைக்கவுமில்லை” என்று அவள் பயத்துடன் முனகியது யாருக்கும் கேட்கவுமில்லை. யாரோ எடுத்து, கைதவறி உடைத்துவிட்டு, நைசாக இவளுடைய வண்டியின் கீழ்த்தளத்தில் வைத்திருக்கவேண்டும்.
“ஆங்கிலத்தில் பேசு” என்று ஆடட்டும் விதமாகக் குரலை உயர்த்தினாள் கவுண்ட்டர் பெண்மணி.
அச்சத்தில் பேச்சு வரவில்லை லூலிக்கு.
தேம்பியபடியே, “சாரி,
சாரி...” என்றாள். “ஐ ஆம் நாட் ரெஸ்பான்சிபிள் ஃபார் திஸ்” என்று தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு சொல்லி முடித்தாள்.
இப்போது என்ன செய்வது? அவளுடைய கடன்அட்டையில் அவ்வளவு பணமும் கிடையாது. கையிலும்
ரொக்கம் கிடையாது. மீராவை நம்பித்தான் வந்தாள். அவள் எங்குதான் போனாளோ? அவசரத்தில் தன் கைப்பேசியையும் அறையிலேயே விட்டுவிட்டாள் லூலி.
கவுண்ட்டர் பெண்மணி மீண்டும் இவளைக்
கடுமையாகப் பார்த்தாள். அதற்குள், கியூவில்
இருந்தவர்கள் சத்தம் போடவே, உடைந்த பெர்ஃப்யூமுக்கும்
சேர்த்து பில் போட்டுத் தான் கடமையை முடித்தாள். பிறகு இவளுடைய கடன் அட்டையைப்
பலவந்தமாகப் பிடுங்கித் தேய்த்தாள். லூலி பயந்தபடியே அட்டை திரும்பிவிட்டது.
கடையின் கண்காணிப்பாளர் விரைந்து
வந்தார். கியூவில் இருந்தவர்களை மற்றொரு கவுண்ட்டருக்கு மாற்றிவிட்டார்.
லூலியின் அடையாள அட்டையைப்
பார்த்தார். கல்லூரி
மாணவர், அதிலும் வெளிநாட்டவர் என்பதால் கடை மூடும்
வரையில் அவளுக்குப் பணத்தைச் செலுத்த வாய்ப்பளிப்பதாகவும்,
வேறு யாராக இருந்தாலும் ஷாப் லிஃப்டிங் குற்றத்துக்காக இதற்குள்ளேயே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பார்கள்
என்றும் சொன்னார். அவளைத் தனியறையில்
உட்கார வைத்தார்.
நியூஜெர்சி முழுவதும் தன்னையே பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியது
லூலிக்கு. மீரா வந்துவிட மாட்டாளா என்று சுழல்கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கைபேசி இருந்தாலாவது வேறு யாராவது நண்பர்களை உதவி கேட்கலாம். யாருடைய நம்பரும்
மனப்பாடமாக இல்லையே!
பத்துமணிக்குக் கடை மூடப்பட்டது. மீரா வருவதாகத் தெரியவில்லை.
கண்காணிப்பாளருக்கு அவள்மேல் இரக்கமாகத்தான் இருந்தது. குறைந்த பட்சம், அவள் உடைத்ததாகக் கூறப்பட்ட பெர்ப்யூமின் விலையையாவது
அவள் செலுத்திவிட்டால் போதும். ஆனால் அந்த 150 டாலர் அவளிடம் இல்லை. வேறு
வழியின்றி அழுது சிவந்த முகத்தோடு லூலி காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டாள். மீராவால்
கைவிடப்பட்ட ஏமாற்றம் அவளைக் கொதிக்கும் எரிமலையாக்கி விட்டிருந்தது.
நியூஜெர்சியின் குளிரிலும் அவளுக்கு உடல்முழுதும் வியர்த்துவிட்டது.
கடையைப் பூட்டிவிட்டு
ரிஷி காரை எடுக்கும்போது ஒரு புதிய
எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “ஹை,
ரிஷி ஹியர். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றான்.
“மன்னிக்கவேண்டும் ரிஷி! நான் தான்
மீரா! எனக்கொரு உதவி செய்வீர்களா? என் தோழி லூலியைக்
காணோம்….” என்றாள் மீரா பதற்றத்துடன். அவனுக்கு
நன்றாக நினைவிருக்கிறது. எப்போதும் மாலை நேரத்தில் வரும் வாடிக்கையாளர்கள்.
“நாங்கள் இருவரும்தான்
சூப்பர்மார்க்கெட் போனோம். ஆனால் பில்லிங்
முடிவதற்குள் வெளியே வந்துவிட்டேன். திரும்பிவந்து பார்த்தால் கடை மூடியிருந்ததது. அறையிலும்
அவள் இல்லை. அவளுடைய
கைப்பேசியும் இங்குதான் இருக்கிறது.
ப்ளீஸ், எனக்குப் பயமாயிருக்கிறது. கைண்ட்லி ஹெல்ப் மீ!” என்றாள்.
அவள் குரலில் இருந்த அதிர்ச்சியும்
பயமும் ரிஷிக்குப் புரிந்தது. “மீரா! சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் விசாரித்துவிட்டுப் பிறகு பேசுகிறேன். அதுவரை பொறுப்பீர்களா?” என்றான்.
“ப்ளீஸ்,
சீக்கிரம் செய்யுங்கள். உங்கள் போனுக்காகக் காத்திருப்பேன்” என்று கூறியவள், உடை மாற்றாமலே அயர்வுடன் படுக்கையில் சாய்ந்தாள். உடனே தூங்கிவிட்டாள்.
யாரோ கடத்திச் சென்று லூலியைக் கொல்வதுபோலவும், தன்னைச்
சிறையில் அடைப்பதுபோலவும், தூக்கு தண்டனை கிடைப்பது போலவும் விட்டுவிட்டுக் கனவுகள் வந்துகொண்டே
இருந்தன.
விடியற்காலையில் அறைக்கதவு தட்டப்படவும் ஓடிப்போய்த் திறந்தாள் மீரா. இன்னும்
வெளிச்சம் வரவில்லை. மரநிழல்களுக்கு நடுவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு தெரு விளக்குகள்
மினுமினுத்துக் கொண்டிருந்தன.
அவமானத்தால் குறுகிப்போன முகத்தோடு
லூலியும், அவளை ஆதரவாக அணைத்தபடி ரிஷியும் உள்ளே நுழைந்தனர்.
லூலிக்கு என்னதான் ஆகியிருக்கும்
என்று மீராவால் அனுமானிக்க முடியவில்லை. நிச்சயம் பெரியதொரு இக்கட்டில் அவள்
இருந்திருக்கவேண்டும் என்று மட்டும் புரிந்தது. “ஹேப்பி டு ஸீ யூ பேக்” என்று அவளை
நோக்கிக் கைநீட்டினாள்.
ஆனால் மீராவைப் பார்த்த நிமிடமே
உலகிலுள்ள ஆத்திரம் முழுவதையும் தன் குரலில் சேர்த்துக்கொண்டு கத்தினாள் லூலி:
"டோன்ட் டச் மீ! நீ எல்லாம் ஒரு தோழியா! இனிமேல் உனக்கு இங்கு இடம் இல்லை. போ
வெளியே!" என்றபடி பரபரப்புடன் மீராவின் உடைகள், புத்தகங்கள், மடிக்கணினி, அழகுசாதனப்
பொருட்கள் எல்லாவற்றையும் தூக்கி வெளியில் எறிந்தாள்.
"லூலி! லெட் மீ
எக்ஸ்ப்ளெய்ன்…" என்று தன்னை நெருங்கிய
மீராவைப் பேசவிடாமல் முதுகில் கைவைத்து
வெளியே தள்ளினாள் லூலி. அதிர்ச்சியில் கண்கலங்கி நின்றாள் மீரா.
நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷி, லூலியைச் சமாதானப்படுத்த முயன்றான். அவளோ எதையும்
பொருட்படுத்தாமல், சம்பிரதாயமாகக் கூட அவனுக்கு நன்றி கூறாமல்
அறைக்கதவை ஓங்கிச் சாத்தினாள். அதற்குள் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அவசரமாகக்
கதவைத் திறந்து எட்டிப்பார்த்தனர். விஷயம் தெரியாமல் அவர்கள் 911க்குப் பொன்
செய்துவிடவும் கூடும் என்று அதிர்ச்சி அடைந்தான் ரிஷி.
எனவே, மீராவை ஒரு கையால் பற்றிக்கொண்டு அவளுடைய பொருட்களை இன்னொரு கையிலும்
மார்பிலுமாக அணைத்துக்கொண்டு, காரை நோக்கி நடந்தான்.
கலவரத்தோடு அவனைத் தொடர்ந்தாள் மீரா.
"ரிஷி, ஐ யாம் வெரி ஸாரி…" என்றவளின் தோள்களை அன்போடு அழுத்தினான் ரிஷி. “நீங்கள் அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் கடையிலிருந்து
வெளியேறிவிட்டீர்களாம். அவள் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாள். சரியான நேரத்தில் நான் அங்கு போனதால் அவள் சிறைக்குப்
போகாமல் தப்பினாள். எல்லாம் வெறும் 150 டாலர் விஷயம் என்று நினைத்தால் வெறுப்பாக
இருக்கிறது” என்றான் ரிஷி.
சூப்பர்மார்க்கெட்டில் லூலிக்கு ஏற்பட்ட அவமானத்தை அவன் விவரித்தபோது, லூலியின் கோபம் நியாயமானதே என்று தோன்றியது
மீராவுக்கு. தான் மட்டும் அன்று வெளியே
போகாமல் இருந்திருந்தால் அப்படி
நடந்திருக்குமா?
"மாற்று ஏற்பாடு
செய்யும்வரையில் நீங்கள் என் வீட்டில் தங்கிக்கொள்ளலாம். அதுவரையில் நான் நண்பர்
ஒருவரின் அறைக்குப் போகிறேன்" என்று மென்மையாக அவன் கூறியபோது நெகிழ்ந்துவிட்டாள்
மீரா.
நேற்று சூப்பர்மார்க்கெட்டில்
இருந்தபோது, தன் ஒரே தம்பி கார் விபத்தில்
சிக்கியதாகக் கைப்பேசியில் குறுஞ்செய்தி
வந்ததைப் பார்த்து மீரா அந்தக் கடை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டதையும், அவளை 911 ஜீப் வந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதையும், தான் எங்கிருக்கிறேன் என்பதே தெரியாத நிலையில் சிலமணி நேரம்
கழிந்துவிட்டதையும், அதற்குள் இரவு பதினொரு மணிக்குமேல்
ஆகிவிட்டதால் நேரடியாக அறைக்கு வந்துவிட்டதாகவும் அவள் ரிஷியிடம் சொன்னதை லூலிக்கு
யார் சொல்லப்போகிறார்கள்?
மறுநாள் காலை மிருதுளா அழைத்தாள். “ஒரு குட் நியூஸ் மீரா! நீங்கள்
ரிஷியின் அறையிலேயே தொடர்ந்து தங்கலாம். ஏனென்றால், அவருக்கு பி.எச்டி.க்கு
ஸ்காலர்ஷிப் கிடைத்துவிட்டது. விரைவில்
பெய்ஜிங் செல்லப்போகிறார். அதுவரை என் வீட்டிலேயே பேயிங் கெஸ்ட் ஆக
இருப்பார்!” என்றாள். “ரிஷி என் நீண்டநாள் நண்பர்!” என்று
புன்னகைத்தாள்.
மீராவின் கண்களில் ரிஷியின் மலர்ந்த
புன்னகை பளிச்சென்று மின்னலடித்தது. அவன் ஆராய்ச்சி மாணவனா? வெறும் காஃபிக் கடை ஊழியன் என்று நினைத்தது எவ்வளவு
அறியாமை!
“இன்னொன்றும் சொல்லவா?
உங்கள் தோழி லூலி மருத்துவ விடுமுறை பெற்றுக்கொண்டு
எங்கோ போய்விட்டாளாம். எனவே அந்த அறையை உங்கள் பெயருக்கே மாற்றிவிட்டார்களாம். இனி
வேறொரு அறைத்தோழியை நீங்கள் தேட வேண்டியதுதான்!” என்று கலகலவென்று சிரித்தாள்
மிருதுளா.
ரிஷியை வழியனுப்ப மீராவும் மிருதுளாவும் விமான நிலையம் போனார்கள்.
“உங்கள் உயர்கல்வி வெற்றிபெற
வாழ்த்துகிறேன்” என்றாள் மீரா. “உங்களைப் பற்றி ஒன்றுமே
கூறாமல் இருந்துவிட்டீர்களே! எப்போதாவது உங்களை நான் மதிப்புக் குறைவாகப்
பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றாள்.
வாய் நிறையச் சிரித்தான் ரிஷி.
“என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒரு ஏழை மாணவன். அவ்வளவுதான்!” என்றான்.
பிறகு, “இதற்கெல்லாம் காரணம், மிருதுளாவும் அவள் தாயாரும் கொடுத்த ஊக்கமே. அவர்களுக்கு என் நன்றி!”
என்றான் ரிஷி.
அதை அங்கீகரிப்பவள்போல் அவனை அன்போடு
இறுக அணைத்து வாயில் நீண்ட முத்தமிட்டாள்
மிருதுளா.
அதை வியப்போடும் திகைப்போடும்
பார்த்தாள் மீரா. ‘அப்படியானால் இவள் ரிஷியைக் காதலிக்கிறாளா?’
விமானம் கிளம்பியது.
வீடு திரும்பும்போது “உங்களிடம் ஓர்
இரகசியம் சொல்லட்டுமா?” என்றாள் மிருதுளா.
“தெரியும், ரிஷியும்
நீங்களும் காதலர்கள். அதானே?”
“அது மட்டுமில்லை...” என்று
மிருதுளா சொல்வதற்குள் பிரின்ஸ்டன் வளாகம் வந்துவிட்டது. இருவரும் நடந்துபோய் ஐன்ஸ்ட்டின் ஒருகாலத்தில் அமர்ந்ததாகச்
சொல்லப்படும் பெஞ்ச்சில் அமர்ந்தார்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. அப்போது
மரத்தின் மேலிருந்து ஒரு விசில் ஓசை கேட்டது. மிருதுளா அண்ணாந்து பார்த்தாள். ஒரு சிக்கடீ தான் பொந்திலிருந்து
பாடுகிறது!
“என்னுடைய சிக்கடீதான் அது!”
என்றாள் பரவசத்துடன்.
“எங்கள் காதலுக்கான ஒரே சாட்சி! இதே
பெஞ்ச்சில்தான் ரிஷியும் நானும்... “ என்ற மிருதுளா, தன்னை மறந்தவளாய், மீராவை இறுகக் கட்டிக்கொண்டாள். “யூ
நோ, ஐ ஆம் ப்ரெக்னண்ட் வித் ரிஷி’ஸ் சன்!” என்றாள் குதூகாலத்துடன்..
நம்பமுடியாத திகைப்பில் உறைந்துபோனாள்
மீரா. பள்ளிப்படிப்பு முடியாத நிலையில் கர்ப்பமா? திருமணத்திற்கு முன்பாகவே? அதையும் குதூகலத்துடன்
சொல்கிறாளே? காதுகள்
கூசின.
அதைப் புரிந்துகொண்டவள்
போல, “என்ன ஆயிற்று மீரா?
கல்ச்சர் ஷாக்கா? கர்ப்பம் என்பது
குற்றமா? அதெல்லாம் இந்த நாட்டில் இல்லை. குழந்தை
பெறுவதற்குக் கல்யாணம் போன்ற முன்நிபந்தனைகள் கட்டாயமில்லை” என்றாள் மிருதுளா மிகச் சாதாரணமாக.
“அதில்லை மிருதுளா! நீ சிறுமி.
ஒருவேளை எதிர்காலத்தில் ரிஷி உன்னை மணக்க விரும்பாமல் புறக்கணிக்கும் நிலை
ஏற்பட்டால்...?”
கலகலவென்று சிரித்தாள் மிருதுளா.
“அப்போதும் இது என் குழந்தைதானே! நானே விரும்பி ஏற்றுக்கொண்ட பொறுப்புதானே! அம்மா எனக்கு ஆதரவாக இருப்பார். ரிஷி ஈஸ் அ
கிரேட் மேன்! ஒருவேளை அவர் என்னை மணந்துகொள்ளாமல் போனாலும் கலங்கமாட்டேன். எங்கள்
காதலின் சாட்சியாக இந்தச் சிக்கடீ இங்குதான் பறந்துகொண்டிருக்கும். என்
குழந்தைக்கும் அது பாட்டுப் பாடும்” என்றாள்.
உணர்ச்சிவசப்பட்டவளாய், "உன் உறுதியைப் பாராட்டுகிறேன் மிருதுளா! ஐ
சப்போர்ட் யூ!” என்று அவளைக் கட்டி அணைத்துக்கொண்டாள் மீரா.
மிருதுளாவின் கண்கள் கசிந்தன. அது
நிம்மதியின் கண்ணீர். அன்று மட்டும் அந்தச் சிக்கடீ நெடுநேரம் அங்கேயே
கூவிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது அவளுக்கு.
(இக்கதைக்குத் தூண்டுகோல், கபிலரின் குறுந்தொகைப்பாடல்:
“யாரும்
இல்லைத் தானே கள்வன்,
தான்
அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள்
அன்ன சிறு பசுங்கால
ஒழுகு
நீர் ஆரல் பார்க்கும்
குருகும்
உண்டு, தான் மணந்த ஞான்றே.”)
******
('சிறகு' அச்சிதழின் “சிறுகதைக் கொத்து” ஏப்ரல் 2022 இதழில் வெளியான சிறுகதை)
வாசித்து விட்டேன், சார். எது பற்றியும் நிறைய தகவல்களை வைத்துக் கொண்டு அவற்றை உருத்தாமல் கதைகளில் ஆங்காங்கே தூவுவது எப்படி என்பது உங்களுக்குக் கைவந்த கலை. இந்தக் கதையிலும் அந்தக் கலையை ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குதங்களுடைய அன்புமிக்க பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!
நீக்குபுதிய காலம், புதிய சம்பிரதாயங்கள், வழக்கங்கள்... இல்லை, இல்லை முன்பே கூட இருந்ததுதான்!
பதிலளிநீக்குநிறைய தகவல்கள் பொருந்திய சிறுகதை. ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள், கூடவே சுதந்திரத்தைப் பற்றியும்.
பதிலளிநீக்குகதை கொஞ்சம் நீளம். இந்திய வம்சாவளியினர் ஆயினும் அமெரிக்க கலாசாரத்தில் எப்படி ஒன்றிப் போகின்றனர் என்பதை சுட்டுகிறது. லூலி மீரா பாத்திரங்களின் முக்கியத்துவம் புரியவில்லை. அவர்கள் இல்லாமலே கதையைக் கொண்டு செல்ல முடியும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் கதையை சுருக்கி எடிட் செய்தால் வணிக பத்திரிகை பிரசுரம் ஆக்கலாம்.
பதிலளிநீக்குமணிகர்ணிகா கதை அவ்வளவுதானா?
பிரின்ஸ்டன் பலகலையைப் பின்னணியாக வைத்து ஒரு குறுநாவல் எழுத ஆரம்பித்தேன். பின்னர் நண்பர்கள் கேட்டதால் அதைச் சிறுகதையாகச் சுருக்கினேன். அவ்வளவே. மீண்டும் அதை நாவலாக்கத்தான் போகிறேன். அப்போது சரியாகிவிடும்.
நீக்குமணிகர்ணிகா தொடருவாள்.
கதை அங்குமிங்குமாக தாவுகிறது. அதில் கதையின் முக்கியத்துவம் தளர்ந்து விட்டது என தோன்றுகிறது. உங்களை வருத்துவதற்கல்ல இந்த கருத்து.
பதிலளிநீக்குகானப்ரியன்
ஒரு குறுநாவலைச் சுருக்கிச் சிறுகதை ஆக்கிய முயற்சி இது என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களே! இது அமெரிக்க வாழ்க்கைச் சூழலில் எழுதப்பட்டது. புரிந்துகொள்ளக் கொஞ்சம் சிரமப்படவேண்டும்போல் தெரிகிறது.
நீக்குகதை நன்றாக இருக்கிறது சார்.
பதிலளிநீக்குமணிகர்ணிக்கா வங்கிக்கு லீவு இங்கு வருவாள் என்று நினைத்தேன்!!!!! வங்கிக்கு மெடிக்கல் லீவு சொல்லி நெடும் விடுமுறை சொல்லியது போல் இங்கும் சொல்லமாட்டாள் என்று நினைக்கிறேன்!!!!
கீதா
சில சமயம் கதாசிரியருக்கே, வாசகர்கள் எவ்வளவு ஆர்வமாகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்துவிடும். அப்போது கதைக்கு இடைவேளை விட்டுப் பார்ப்பார்கள். அதுபோலத்தான் இது என்று நினைக்கிறேன்
நீக்குசரியாகச் சொன்னீர்கள்! சில தொடர்களை, எழுதிய எழுதத்தான் கதையில் தெளிவு பிறக்கிறது. மணிகர்ணிகாவும் அப்படித்தான். நாளை முதல் மீண்டும் அவள் தொடர்ந்து வருவாள்.
நீக்குநெல்லை, நீங்க சொல்றது ராயசெல்லப்பா சார் போன்ற எழுத்தாளர்களுக்குப் பொருந்தும்தான்...
நீக்குகீதா
மணிகர்ணிகா எங்கே ?
பதிலளிநீக்குதுபாய் பயணத்தையும் சேர்மன் கேன்ஸல் செய்ய சொன்னாரா?
பதிலளிநீக்குரொம்ப அருமையான கதை
பதிலளிநீக்குஇந்த கதையை டைரக்டர் மணி ரத்னம் சாரிடம் கொடுங்கள். அருமையான படமாக எடுப்பார்...OK கண்மணி போல, காற்று வெளியிடை போல, Trending movies எடுத்தவர் ஆயிற்றே..! Living together, pregnancy before marriage எல்லாம் அவர் படங்களில் சர்வ சாதாரணம்.
பதிலளிநீக்குநாவலாக எழுத முயற்சி செய்தீர்களோ?
பதிலளிநீக்குஅமெரிக்காச் சூழலில் நடக்கும் கதை அதற்கேற்ப கதை நன்றாக இருக்கிறது.
ஆனால் இப்படியான கலாச்சாரம் பழைய காலத்தில் இங்கும் இருந்ததுதானே. சமூக அமைப்புகள் வந்த பிறகு கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் எல்லாம் வந்தது என்று சொல்லலாம்.
துளசிதரன்
அந்த நாட்டிற்கேற்ற கதை...
பதிலளிநீக்கு