வியாழன், ஜூலை 21, 2022

மணிகர்ணிகா (3) இன்று வரமாட்டாள் - தொடர்கதை


மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (3) தொடர்கதை

(அமெரிக்காவில்  100 ஆவது நாள்:  20-7-2022)


இதன் முதல் பகுதி    -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் இரண்டாம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (2)" படிக்க இங்கே சொடுக்கவும்.


மறுநாள் பொழுது சண்முகத்துக்கு நல்லபடியாகத் தான் விடிந்தது. பின்னே? அவர் காலையில் விழித்தது, ஓர் அழகான பெண்மணியின் முகத்தில் அல்லவா!


தலையை நன்கு வாரி முடித்து, நான்கு முழம் மல்லிகை பூச்சூடி,  நெற்றியில் கருப்புத்திலகமும் அதைச் சுற்றி நான்கு வெள்ளைப் பொட்டுகளும்,  மேல் வகிட்டின் நுனியில் குங்குமுமாக, மஞ்சள் பொலிந்த முகத்தோடு காலை ஆறுமணிக்கே அவர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் மீனா குல்கர்னி. அவளுடைய ஒவ்வொரு அசைவும் அவள் ஒரு தேர்ந்த நடனக்காரி என்று சொல்லாமல் சொல்லியது. 


நியூ யார்க் - டைம் ஸ்கொயர்- மோட்டார்பைக்


"வாம்மா வா" என்று சண்முகத்தின் மனைவி அவளை வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள். மீனாவின் நாட்டியம் அவளுக்குப் பிடிக்கும். சிறுவயதில் அவள் நடனம் பயில விரும்பிய பொழுது வீட்டில் யாரும் ஆதரவு தரவில்லை. ஆகவே நடன நிகழ்ச்சிகளையும் நடனக்காரிகளையும் பார்க்க நேர்ந்தால்  அவள் மெய்மறந்து போய் விடுவாள்.


மீனா தன் கிளைக்கு டெபுடேஷனில் அன்று வருவாள் என்று தெரியும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் வந்தது ஏன் என்று சண்முகத்துக்குப் புரியவில்லை. ஒன்பது மணிதான் வங்கி திறக்கும் நேரம். "வாங்க மிஸஸ் குல்கர்னி! காப்பி சாப்பிடுங்கள். என்ன விசேஷம் இன்றைக்கு?" என்றார்.


அவசரமாகக்  காபியைக் குடித்த மீனா, "நீங்கள் என்னுடன் ஓர் இடத்திற்கு வர வேண்டும். முப்பது  லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய ஒருவர் தயாராக இருக்கிறார். ஏழரை மணிக்குள் அவரைச் சந்திக்க வேண்டும்" என்றாள்.


டெபாசிட் என்ற வார்த்தையைக் கேட்டால் வங்கி மேனேஜர்கள் துள்ளிக் குதிக்க மாட்டார்களா? சண்முகம் உடனே தயாரானார். 


பெங்களூரில் பிறந்த தமிழ்ப் பெண்ணான மீனா, மைசூரில் படிக்கும்பொழுது கௌதம் குல்கர்னியைக் காதலித்து மணந்து கொண்டாள். அதன் பிறகே அவருக்கு ஐஏஎஸ் அதிர்ஷ்டம் அடித்தது. அதனால் மனைவி சொல்லே மந்திரம் என்பார் குல்கர்னி. இதைத் தெரிந்து கொண்ட வங்கி மேலாளர்கள் மீனாவிடம் அடிக்கடி பேசிப் பேசி,  பெரிய டெபாசிட்டர்களைத் தங்கள் வங்கிக் கிளைக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள். சில சமயம் மீனாவே முன்வந்து டெபாசிட்டர்களை வங்கிக்கு அறிமுகப்படுத்துவதும் உண்டு. அப்படித்தான் இன்று வந்திருந்தாள். 


மீனா பெரிய இடத்துப் பெண் என்பதால் மற்ற கிளார்க்குகளுக்கு அவள் மீது பொறாமை இருந்தது. எனவே அவளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அவர்கள் ரசிக்கவில்லை. அடிக்கடி அவளைப் பற்றி யூனியனுக்கு புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இது சண்முகத்துக்குத் தெரியும்.  ஆதலால் மீனாவிடம் அவர் சற்று தூரமாகவே நடந்து கொண்டார். அதேபோல் மீனாவும் அவருடைய கிளைக்கு வரும் பொழுது மற்ற கிளார்க்குகளிடம் அதிகம் பந்தா  செய்யாமல், கஸ்டமர்களிடம் மட்டுமே பந்தா காட்டுவாள்.


பெசன்ட் நகரில் ஒரு பெரிய வீட்டின் முன் தன் ‘டொயோட்டா கரோலா’வை  நிறுத்தினாள் மீனா. அவளைக் கண்டதுமே ஒரு பெரியவர்-விரைந்து வந்து வரவேற்றார். அவருக்கு சண்முகத்தை அறிமுகப்படுத்தினாள் மீனா. தான் கொண்டு வந்திருந்த பிக்சட் டெபாசிட் அப்ளிகேஷனை அவரிடம் நீட்டினாள். அவர் எந்தக் கேள்வியும் இன்றிக் கையெழுத்து போட்டார். அதற்கான செக்கையும் அவளிடம் கொடுத்தார். மனைவிக்காக குல்கர்னியின் ஏற்பாடு அது. ஐந்தே நிமிடத்தில் முப்பது லட்ச ரூபாய் டெபாசிட் சண்முகத்தின் வங்கிக்குக் கிடைத்து விட்டது.


"மீனா, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இந்த டெபாசிட்டால் என்னுடைய டார்கெட் பூர்த்தியாகிவிட்டது. இந்த வருடமும் நான் சேர்மன்'ஸ் கிளப்பில் மெம்பராகி விடுவேன். அதற்கு முழுக் காரணம் நீங்கள் தான்!" என்று நெகிழ்ச்சியோடு கூறினார் சண்முகம்.


"யூத் ஹாஸ்டலில் என்னுடைய டான்ஸ் டிராமாவுக்கு ஏற்பாடுசெய்து கொடுத்து விட்டீர்களானால் அடுத்த வருட டார்கெட்டையும் நீங்கள் ரீச் பண்ண முடியும்" என்று புன்முறுவலோடு கூறினாள் மீனா. 


அது சண்முகத்தால் முடியாத காரியம் அல்ல. யூத் ஹாஸ்டல் நிர்வாகி அவருடைய வாடிக்கையாளர் தான். "நிச்சயம் செய்கிறேன்" என்று உறுதி அளித்தார். 

*** 

வங்கி திறந்து சிறிது நேரத்துக்கு எல்லாம் மீனாவுக்கு ஒரு போன் வந்தது. அதைக் கேட்டதும் பரபரப்புடன் சண்முகத்திடம் வந்த மீனா, "மணிகர்ணிகா உங்களுடன் பேச வேண்டுமாம்" என்று தன் மொபைலைக் கொடுத்தாள். 


தன் கேபின் கதவை மூடிக்கொண்டு மணிகர்ணிகாவுடன் பேசி முடித்த சண்முகத்தின் நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்திருந்தன. பம்பாய் கிளையின் பெரிய கடன்தாரர் ஒருவரை காஞ்சிபுரத்தில் சென்று சந்திக்குமாறு சேர்மன் கூறினாராம். ஆனால் இது ரீஜனல் ஆபீசுக்குத் தெரியக் கூடாதாம். 


மொபைலை மீனாவிடம்  திருப்பிக் கொடுத்தபோது, "முக்கியமான ஆட்களைச் சந்திக்கும்போது இத்தனூண்டு மாருதி காரில் போகாதீர்கள் சார்! என் வண்டியை எடுத்துக் கொண்டு போங்கள்" என்று சொன்னாள். "இன்றும் மணிகர்ணிகா ஆன்-டியூட்டியில் தான் இருக்கிறாளாம். அவளை வேண்டுமானாலும் அழைத்துக் கொண்டு போங்கள்" என்றும் சொன்னாள்.

*** 

மீனாவைப் போலவே மணிகர்ணிகாவும் நல்ல திறமையான டிரைவர். எனவே அவளுடன் பயணம் சண்முகத்திற்கு இனிமையாகவே இருந்தது. 


"என்னை ரொம்ப மன்னிக்க வேண்டும் சார்! உங்கள் அனுமதி இல்லாமலே ரீஜனல் ஆபீஸில் எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் தருகிறார்கள். நான் எப்படி மீற முடியும்?" என்றாள். 


“இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? இரகசியமாக இருக்கட்டும். நான் விரைவில் ராஜினாமா செய்யப்போகிறேன்.”


அப்படியா என்பதுபோல் அவள் கண்களை உற்றுப்பார்த்தார் சண்முகம். அவள் சாலையிலிருந்து கண்களை நகர்த்தாமல் ஆமாம் என்று தலையசைத்தாள்.  


அவர்கள் போன இடம் காஞ்சிபுரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடைப்பட்ட கிராமம்.  மும்பையைச்  சேர்ந்த செல்வந்தர்  சந்திரகாந்த் சக்ஸேனா அங்கு இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். அதற்குப் பெரிய தொகை ஒன்றை இந்த வங்கியின் பம்பாய்க்கிளை கடனாக வழங்கி இருந்தது. ஆனால் கடந்த நாலு வருடங்களில் தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் கல்விக்குப்  போதிய ஆதரவு இல்லாததால், கல்லூரியில் 25 சதம்  மாணவர்கள் கூடச் சேரவில்லை. எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டது. அரசியல் செல்வாக்கு மிக்க கல்லூரி நிறுவனரை வங்கி மேலாளரால் நெருங்க முடியவில்லை. சேர்மன் தானாக முயன்று ஏதோ ஒரு வகையில் அவரைக் கணிசமான தொகையைச் செலுத்துமாறு ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். அதை ஒட்டியே இந்தத் திடீர் சந்திப்பு நிகழப் போகிறது என்று தெரிவித்தாள் மணிகர்ணிகா.


இந்தச் சந்திப்பால் ஒருவேளை பலனில்லாமல் போகலாம் என்ற ஐயமும் இருந்ததால், ரீஜினல் மேனேஜருக்குக் கூடத்  தெரியாமல் இந்த முயற்சி நடக்கிறதாம்.  

*** 


“என்ன இது, சக்ஸேனாவைச்ச சந்திக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு ஏதோ  ஒரு ஜவுளிக்கடையில் நுழைகிறீர்கள்?” என்று வியப்பும் திகைப்புமாகக் கேட்டார் சண்முகம்.


“ஆம், சக்ஸேனாவின் உறவினர் கடைதான் இது. இவர்கள்தான் அந்தப் பணத்தைச் செலுத்தப்போகிறார்கள். இதற்காகத்தான் நேற்று நானும் ராஜாவும் வந்திருந்தோம். ஆனால் காரியம் முடியவில்லை. ஆகவே உங்களை அழைத்துக்கொண்டு போகுமாறு சேர்மன் சொன்னார்….”


மணிகர்ணிகாவைப் பார்த்ததுமே மாடிக்கு அழைத்துச் சென்றார் கடை ஊழியர். சண்முகம் அமைதியாகப் பின்தொடர்ந்தார். சக்ஸேனாவின் மைத்துனர்  அங்கிருந்தார். இருவரையும் உட்காரச் சொன்னார். காபி வந்தது.  


“மிஸ்டர் சக்ஸேனா உங்கள் சேர்மனுடன் பேசிவிட்டாராம். 35 லட்ச ரூபாய் உங்களிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். ரெடியாக இருக்கிறது” என்றவர், தன்  உதவியாளரிடம், “பெட்டிகளைக் கொண்டுபோய் இவர்களுடைய காரில் வைத்துவிடுங்கள்”  என்றார்.


சண்முகத்துக்கு திக்கென்றது.  ரொக்கப்பணமாகவா கொடுக்கிறார்? வங்கியின் விதிகளின்படி இரண்டு லட்சத்துக்குமேல் பெறக்கூடாதே! ஆனால் என்ன செய்வது, வராத கடன் திரும்பி வரும்போது, மறுப்பது எப்படி? 


“ரீஜினல் ஆபீசுக்கு போன் செய்து பர்மிஷன் கேட்டுவிடட்டுமா?” என்று மணிகர்ணிகாவிடம் மெதுவாகக் கேட்டார்.


அவள் பதறிப்போனாள். பணம் வங்கியில் கட்டப்படும்வரை விஷயம் வெளிவரக்கூடாது என்று சேர்மன் சொல்லியிருக்கிறாரே என்றாள். 


கார் புறப்பட்டது. காஞ்சிபுரத்தை விட்டு பைபாஸ் ரோடில் கூடுவாஞ்சேரிக்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது சாலையில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. காரை நிறுத்தவேண்டி வந்தது. 


ஒரு போலீஸ்காரர் மணிகர்ணிகாவிடம் வந்து, “காரைச் சோதனையிட வேண்டும்” என்றார். சண்முகத்துக்குத் திகில் பற்றிக்கொண்டது. எந்த ஆதாரமும் இல்லாமல் மூன்று பெட்டிகளில் 35 லட்ச ரூபாய் இருக்கிறது. போலீஸ் என்ன செய்யுமோ? 


மணிகர்ணிகா கொஞ்சமும் பதறவில்லை. “காஞ்சிபுரத்திலிருந்து ஒரு கல்யாணத்திற்காகப் பட்டுப் புடவைகள் வாங்கிவருகிறோம்” என்றாள். அவளுடைய பொய் சொல்லும் தைரியம் சண்முகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெற்றியில் வியர்த்தது. 


அதற்குள் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வந்தார். “டிக்கியைத் திறவுங்கள்” என்றார்.   போலீஸ்காரர் “பட்டுப்புடவைதான் சார்! பணம் எதுவும் இல்லையாம்” என்றார்.  


“எனக்கு புத்தி சொல்கிறாயா?” என்று அவரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர், “பெட்டிகளைத் திறந்து காட்டுங்கள்” என்றார்.


மணிகர்ணிகா டிக்கியைத் திறந்து அதிலிருந்த மூன்று பெட்டிகளையும் இலேசாகத் திறந்தாள். உயர்தரமான பட்டுப்புடவைகள்!  சண்முகம் அதிர்ந்துபோனார். ரொக்கப் பணம் என்றல்லவா சொன்னார்கள்? எப்படிப் புடவையாய் மாறியது? மணிகர்ணிகா உதட்டில் விரலை வைத்து ‘உஷ்’ என்றாள். 


அந்தப் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடக்க இருந்ததால் பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும்பொருட்டு போலீஸ் அங்கங்கே வாகன சோதனை செய்துகொண்டிருந்தார்கள். இவ்வளவு உயர்தரமான சேலைகளை யாரும் ஓட்டுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்போவதில்லை என்று சப்-இன்ஸ்பெக்டருக்குப் புரிந்தது. “சரி, கதவை மூடுங்கள்” என்றார்.    


சண்முகத்தைத் தன்னிடம் அழைத்தார். “உண்மையைச் சொல்லிவிடுங்கள். நியாயமாக நடந்து கொண்டால் உடனே போய்விடலாம். இல்லையென்றால் பிரச்சினைதான்” என்று சொல்லிவிட்டு வேறொரு வாகனத்தைச் சோதிக்கக் கிளம்பினார். 


மணிகர்ணிகாவை கோபத்துடன் பார்த்தார் சண்முகம். அவளோ எந்தக் கவலையுமின்றி, “நோ பிராப்ளம் சார்!  மீனாவிடம் சொன்னால் ஒரே நிமிடத்தில் கிளியர் ஆகிவிடும். அவள் ஹஸ்பண்ட் ஐஏஎஸ்  அல்லவா! ஆனால் வேண்டாமே என்று பார்க்கிறேன்” என்றவள், போலீஸ்காரரிடம்  ஏதோ கேட்டாள். மெதுவான குரலில் அவர் பதில் கூறிவிட்டு, சற்றுத் தொலைவில் நின்றுகொண்டார். மணிகர்ணிகா ஒரு பெட்டியைத் திறப்பதுபோல் இருந்தது.


சில நிமிடங்களில் அவர்களுடைய கார் சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

(தொடரும்)

-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 


இதன் நான்காம் பகுதி    -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (4)" படிக்க இங்கே சொடுக்கவும்.


9 கருத்துகள்:

  1. நமக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் நம்மை விட திறமையானவர்களாகவும் செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இருந்தால் எப்படி இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் சண்முகம் படுகிற பாட்டில் தெரிகிறதே! பெங்களூரில் எங்கள் வங்கியில் எல்லாருமே இப்படி செல்வாக்கானவர்கள்தான். நானும் போதுமானவரை பட்டாகிவிட்டது.

      நீக்கு
  2. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள் . உங்கள் புத்தகம் அமெரிக்காவில் 100 நாட்கள் இப்போது தயார் . வெகு சுவையான மணி கர்ணிகா கதையின் அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  3. திகிலாக மர்மமாக செல்கிறது

    பதிலளிநீக்கு
  4. HAPPY 100 DAYS STAY IN THE USA.

    மணிகர்ணிகா ஷண்முகத்திற்க்கு அவர் மொமைலில் போன் செய்யாமல் எதற்காக மீனாவுக்கு போன் செய்து ஷண்முகத்திடம் பேச வேண்டும்?
    இப்படி ஒரு Sub ordination Award staff சொல்வதை நம்பி எப்படி ஒரு Bank branch manager செயல் படலாம்?
    அந்த 30 லஷ்ம் ரூபாய் கல்ல நோட்டாக இருந்தால் என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? கடைநிலை ஊழியர்கள் எப்போதுமே நம்பிக்கைக்கு உரியவர்கள். கடமையைச் செய்வதில் கொஞ்சம் தாமதம் செய்யலாமே ஒழிய, மிகுந்த நேர்மை உடையவர்கள்.

      நீக்கு