வியாழன், ஜூலை 28, 2022

மணிகர்ணிகா (7) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா இன்று   வர மாட்டாள் (7) தொடர்கதை

(அமெரிக்காவில்  104 வது நாள்:  24-7-2022)



இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (6) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.



மறுநாள் ஆபீஸ் வந்தவுடன் செக் புத்தகத்தையும் பாஸ் புத்தகத்தையும் மயூரியிடம் கொடுத்தாள் திலகா.  "அவர் கொடுத்தாரடி.  உனக்குத் தெரியும் என்று சொன்னார்" என்றாள்.


"ஆமாம், யாருடையதோ பாவம், சாலையில் கிடந்ததாம்.  ஒரு பெண் கொண்டுவந்து கொடுத்தாள்" என்றபடியே மயூரி அது எந்த பேங்கின் பாஸ்புக் என்று பார்த்தாள். கனரா பேங்க், மந்தைவெளி! பக்கங்களைப் புரட்டியதில் அந்த அக்கவுண்டில் ஒரு லட்சத்து  60 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது.


துபாய் விமான நிலையம் 

செக் புக்கின் முதல் பக்கம்  வாடிக்கையாளரின் பெயரும் முகவரியும் இருந்தது: "வினோதா, 45/2, காமதேனு வீதி, திருவான்மியூர்". போன் நம்பர் இல்லை.


"அதனால் என்ன, லஞ்ச் டைமில் நேரில் போய்ப் பார்த்துக் கொடுத்து விடலாம். திருவான்மியூர் இங்கிருந்து பக்கம் தானே" என்றாள் மயூரி. "அத்துடன் என்னுடைய என்ஃபீல்ட் வண்டிக்காக இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் போக வேண்டும். அதுவும் அந்தப் பக்கம் தான்."


"வினோதா என்ற பெயர் ரொம்ப மாடர்னாக இல்லை?" என்றாள் திலகா. 


"ஆமாம் காலேஜ் கர்ளாக இருக்கலாம்" என்றாள் மயூரி. "அல்லது நம்மைப் போல பேங்க் அல்லது ஐ டி எம்ப்ளாயியாகவும் இருக்கலாம்."


இருவரும் தங்கள் உணவு டப்பாக்களைக் காலி செய்து விட்டு மயூரியின் என்ஃபீல்டு பைக்கில் தங்களுக்குத் தெரியாத வினோதாவைத் தேடிக்கொண்டு கிளம்பினார்கள்.


45/1 என்ற எண்ணில் ஒரு தனி வீடு இருந்தது. ஆனால் 45/2 என்று எதுவும் இல்லை. வலதுபுறம் 44ம் இடதுபுறம் 46ம் தான் இருந்தன. அப்படியானால் 45/2 எங்கே?


காம்பவுண்டு கேட் திறந்திருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு மயூரியும் திலகாவும் உள்ளே நுழைந்தார்கள். தரைத்தளத்தில் இருந்து சுமார் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி வெளியே வந்தார். 


"இந்தாம்மா யார் நீங்க? எனக்கு கிரெடிட் கார்டு வேண்டாம், ஹெல்த் பாலிசி வேண்டாம், நகை சேமிப்பு திட்டம் வேண்டாம். போங்க வெளியே" என்று மிரட்டினார்.


மயூரி  சிரித்து விட்டாள். "பாட்டி! நாங்க வந்தது 45/2 ஆம் நம்பர் வீட்டைக் தேடி!" என்றாள். 


"இருக்கா போங்க, மாடில, கல்லாட்டம் குந்திக்கிட்டு இருப்பா! கோவில்பட்டி கோமளா! கொழுப்பெடுத்த குஞ்சலா!" என்று நெருப்பை உமிழ்ந்துவிட்டு  உள்ளே போய்விட்டார் பாட்டி. என்ன விரோதமோ!


மாடி போர்ஷன் மீது 45/2 என்ற எண் இருந்தது. இங்குதான் வினோதா இருக்கவேண்டும். கோமளா,  குஞ்சலா என்பது வினோதாவின் பாட்டியாக இருக்கலாம். 


கிரில் கதவின் வழியாக ஒரு பாட்டி உள்ளே இருப்பது தெரிந்தது. வேறு யாரும் இல்லை.


"பாட்டி! வணக்கம்!" என்றாள் திலகா.


எப்படியும் எண்பது வயதிருக்கும். பாட்டி சிங்கம் போல் சீறிக்கொண்டு எழுந்தார். 


"யாருடி என்னை பாட்டின்னு சொன்னது?" 


கதவைத் திறந்த வேகம் இருவரையும் திகைக்க வைத்தது. திலகா மௌனமானாள். மயூரி நிலைமையைப் சமாளிப்பதாக எண்ணிக்கொண்டு "மன்னிக்க வேண்டும் மாமி! நாங்கள் யாரென்றால்…" என்றபோது பாட்டி இடைமறித்தார்.


"யாருக்குடி நான் மாமி? மேனர்ஸே கிடையாதா உங்களுக்கு? நான் யார் தெரியுமா?" 


"தெரியாது… மேடம்" என்று சரணடைந்தாள் மயூரி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.


"மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. கீழ்வீட்டுக்காரி உங்க கிட்ட ஏதாவது பேசினாளா?"


"ஒண்ணும் பேசலையே…" என்று திலகாவின் முகத்தைப் பார்த்தாள் மயூரி. இருவரும் திருதிருவென்று விழித்தார்கள்.


"உண்மையைப் பேசினா ஒங்கள விட்டுடுவேன். இல்லைன்னா …" என்ற பாட்டி, "வாடகை பாக்கியைக் கொடுக்காம ஏமாத்தறா! சென்ட்ரல் கவர்மெண்ட் பென்ஷன் கைநெறைய வாங்கறா! என்னைப் பார்க்க யார் வந்தாலும் கோமளா குஞ்சலானு ஏளனம் பண்றா! அதான் கேட்கிறேன், என்னைப் பத்தி என்னதான் சொன்னா?..."


உணவு இடைவேளை அரைமணி நேரம்தான். இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வேறு போகவேண்டும். இவர்களுடைய சண்டையில் நாம் அகப்பட்டுக்கொள்ள முடியாது. மௌனமாக இருப்பதே உத்தமம்.


"இப்படி இவ என் பேரைக் கெடுக்கிறான்னு தான் மாடர்னா இருக்கணும்னு என் பேர 'வினோதா'ன்னு மாத்திக்கிட்டேன். கெஜட்டுலயே  வந்தாச்சு! ஆதார் கார்டு, வோட்டர் கார்டு எல்லாத்துலயும் அப்டேட் பண்ணிட்டேன். இனிமே எப்ப வந்தாலும் என்ன மேடம் வினோதான்னு தான் கூப்பிடணும், தெரிஞ்சுதா?"


"எஸ் மேடம்" என்று ஒரே குரலில் கூறினார்கள். மயூரியும் திலகாவும். தாங்கள் வந்த விஷயத்தைச் சொல்லி, செக் புத்தகம் பாஸ் புத்தகம் இரண்டையும் அவரிடம் கொடுத்தார்கள்.


"நீங்க எந்த பேங்க்?" என்று கேட்டார் வினோதா. சொன்னார்கள்.


"ஓ, இப்போது புரிந்தது. கோபால்சாமி உங்க கஸ்டமர் தானே! அவரிடம் தான் இதெல்லாம் கொடுத்து வைத்திருந்தேன். தூரத்து சொந்தம்.  பாவம் வயசானவர். தொலைத்து விட்டிருக்கிறார். நல்ல வேளை,  நீங்கள் கொண்டு வந்தீர்கள். ரொம்ப நன்றிம்மா!" என்றார். 


65 வயது கோபால்சாமியை 80 வயது மேடம் 'வயசானவர்' என்கிறார்! என்ன 'வினோதம்'! 


'இந்த மேடத்திடம் ஏராளமாகப் பணம் இருக்கும் போல் தெரிகிறது. இன்னொரு நாள் வந்து நம் பேங்கிற்கு டெபாசிட் கேட்கவேண்டும்' என்று இருவரும் எண்ணிக்கொண்டு இறங்கினார்கள். 

***

மயூரியின் கணவன் பெரும்பாலும் காரைத் தான் பயன்படுத்துவான். எனவே தன் ராயல் என்ஃபீல்டு பைக்கை அவ்வளவாக கவனம் செலுத்திப்  பராமரிக்க மாட்டான். சின்னச் சின்னக் கோளாறுகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் வண்டியின் ஓட்டம் நிற்காது. வரும் சனிக்கிழமை மெக்கானிக்கிடம் கொடுக்கவேண்டும் என்ற முடிவில் இருந்தாள் மயூரி. 


இன்சூரன்ஸ் அலுவலகம் இரண்டாம் மாடியில் இருந்தது. ஒரு சில அலுவலர்கள்தான் இருந்தார்கள். ஆனாலும் உடனே பதில் சொன்னார்கள். 


வண்டி பெங்களூரில் பதிவானது. இன்னும் முகவரி மாற்றவில்லை. மாற்றினால்தான் இன்சூரன்ஸ் ரின்யுவல் செய்யமுடியும் என்றார்கள். அல்லது பழைய இன்சூரன்ஸ் கம்பனிக்கே போய் செய்துகொள்ளுங்கள் என்றார்கள்.


கணவனிடம் போனில் தகவலைக் கூறினாள் மயூரி. “சரி நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். 


"இன்று யார் முகத்தில் முழித்தேனோ ஒரு விஷயமும் நடக்கமாட்டேன் என்கிறது" என்று  திலகாவிடம் அலுத்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள், மயூரி வங்கியை நோக்கி.

***


தன் கணவனுக்குச் சரியான உத்தியோகம் இல்லை என்றும், தன்  ஒருத்தியின் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது என்றும், மயூரியிடம் அன்று அவன் கூறியதெல்லாம் பொய் என்றும் திலகா மனமுடைந்து கூறியபோது அதிர்ந்துபோனாள் மயூரி. 


“கவலைப்படாதே திலகா. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள். நான் தருகிறேன். அவரை ஒன்றும் சொல்லாதே. தொடர்ந்து வேலை இல்லாமல், வருவாய் இல்லாமல், இருக்கும் கணவர்கள், தாழ்வு மனப்பான்மையால் தற்கொலைவரை போவதை நாம் பார்க்கிறோம் அல்லவா? எனவே அவருக்கு மனதில் உறுதியை  நீதான் ஏற்படுத்தவேண்டும். எப்படியும் அவருடைய பர்சனாலிட்டிக்கு நல்ல வேலை கிடைக்காமல் போகாது. கொஞ்சம் பொறுமையாக இரு. இப்போது உன் முழு கவனமும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை மீதுதான் இருக்கவேண்டும்” என்று அவளைத் தேற்றினாள். 


“அது மட்டுமல்ல, இனிமேல் தினமும் நீ பஸ்சில் பயணம் செய்யவேண்டாம். காலையில் நானே வந்து உன்னை பிக் அப் செய்து மாலையில் டிராப்பும் செய்கிறேன்” என்று வாக்குறுதியளித்தாள்  மயூரி. அதன்படியே அவர்களின் தினசரி நடவடிக்கை அமைந்தது.      


தன்  பெயரில் ஸ்டாஃப் லோன் போட்டு ஒரு லட்ச ரூபாய் வாங்கிக்கொடுத்தாள்  மயூரி. அதைக்கொண்டு நீண்டநாள் கடன்கள் சிலவற்றை அடைத்தாள் திலகா. அது கிரீஷுக்குக் கூடத்  தெரியாது.  

**** 


சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக வந்த  ஜான் நாயுடு,  ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டியின் சன்னலைப் பிடித்துக்கொண்டு நின்றார். அவரது சென்னை வாசம் திடீர் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் சில மாதங்கள் சென்னையில் இருப்பதற்கு பர்மிஷன் கேட்கலாம்தான். ஆனால் அதற்குள் மேலிடத்தில் வேறு ஏதாவது மாற்றம் செய்து மீண்டும் பஞ்சாப் அல்லது ஒடிஸ்ஸா என்று போகவேண்டிவந்தால் என்ன செய்வது? 

மனம் குழம்பிப்போயிருந்தது அவருக்கு. 


மணிகர்ணிகா எவ்வளவு நல்லவள்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிறாள்! அவளைப் போய் வங்கியில் சிலர் அவதூறாகப் பேசுகிறார்களே என்று எண்ணியபோது கவலையாக இருந்தது. எவ்வளவு பெரிய மூடுபனியும் சூரியன் வந்தால் விலகிவிடுவதுபோல, இவளைச் சூழ்ந்திருக்கும் அவதூறுகளும் ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பினார். 


‘காப்பி காப்பி’ என்று கூவிக்கொண்டே ரயில்வே ஊழியர் வந்தபோது நிறுத்தினார். ரயிலில் எப்போதும் ப்ரூ காப்பி தான் அவருக்குப் பிடிக்கும். குடித்தபின்னும் சில நிமிடங்கள் அதன் அடர்த்தி நாக்கில் படிந்திருக்கும். 


காகிதக்  கோப்பையைத் தூக்கி வாயருகில் கொண்டுபோகும்போதுதான் பார்த்தார், மணிகர்ணிகா தன்னை நோக்கி வந்துகொண்டிருப்பதை! “வாங்க, வாங்க, என்ன திடீர்ப் பயணம்? காப்பி குடிக்கிறீர்களா?” என்றார். அவள் கையில் பயணத்துக்கேற்ற பெரிய பைகளோ பெட்டிகளோ இல்லாமல் வெறும் சிறிய தோல் பை  மட்டுமே இருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை. 


“மன்னிக்கவேண்டும் சார்! சேர்மன் ஒரு முக்கிய தகவலை உங்களிடம் சொல்வதற்காக என்னை அனுப்பினார்” என்றாள். வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிடம் இருந்தது. என்ன தகவலாக இருக்கும்?


“உங்கள் பயணத்தை ரத்து செய்துவிடுங்கள். நாளை நீங்கள் சென்னையில் இருந்தாகவேண்டுமாம்” என்றாள் அவள். 


“உண்மையில் நானும் இன்று விஜயவாடா செல்வதாக இருந்தது. வேறு காரணத்திற்காக அதுவும் கேன்சல் ஆகிவிட்டது” என்று சிரித்தாள். 


அவசரமாகப்  பெட்டிக்குள் சென்று தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினார் நாயுடு. “சரி வாருங்கள்” என்று ரயில்நிலைய வாயிலுக்கு வந்தார். “நாளை ஆபீஸில் சந்திப்போம்” என்றார் ஓலாவில் ஏறிக்கொண்டே.  


“இல்லை சார், நான் நாளைக்கு வரமாட்டேன். ஒரு மாதம் மெடிக்கல் லீவ் அப்ளை செய்திருக்கிறேன். துபாய் போகிறேன்” என்றாள். 


அதைக் கேட்டதும் மனதிற்கு சற்றே இதமாக இருந்தது நாயுடுவுக்கு. காரணம் புரியவில்லை. அவரை அறியாமலேயே வாயிலிருந்து “வாழ்த்துகள்” என்ற வார்த்தை எழுந்தது. மணிகர்ணிகாவின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. 

(தொடரும்)

   - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து  

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (8) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

6 கருத்துகள்:

  1. பாஸ்புக் முடிச்சு நல்லபடியாக அவிழ்க்கப்பட்டதென்றால், இன்னும் வேறு முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றனவே. எதற்காக மணிகர்ணிகாவுக்கு திடீரென்று சேர்மேன் ரயிலில் டிக்கெட் பதிவு செய்து ரத்து செய்து.....ஜான் பயணம் ரத்து...அடுத்ததில் இதன் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்...என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கதையை எழுதவிடாமல் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் நான் பாதியில் நிறுத்திவிட்டு துபாய்க்கு ஓடிவிடுவேன்! ஜாக்கிரதை! வாசகர்கள் உங்களை சும்மாவிடமாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...நீங்க தான் மணகர்ணிகாவுடன் துபாய் சென்ற வாலிபனா ?

      நீக்கு
  3. ஒரே பின்னல் மேல் பின்னலாக கதை செல்கிறது...முடிச்சு எப்போது அவிழும் ?

    பதிலளிநீக்கு
  4. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு