புதன், ஜூலை 27, 2022

மணிகர்ணிகா (6) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா இன்று   வர மாட்டாள் (6) தொடர்கதை

(அமெரிக்காவில்  103 வது நாள்:  23-7-2022)

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (1)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் இரண்டாம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (2)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் மூன்றாம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (3)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் நான்காம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (4)" படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் ஐந்தாம் பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (5)"  படிக்க இங்கே சொடுக்கவும்.


சண்முகம் ஓட்டலில் இருந்து வெளியேறியபின் சேர்மன் “மணிக்கா” என்று அழைத்தார். மணிகர்ணிகா  அருகில் வந்து நின்றாள். 

“உட்கார்” என்றார். பரவாயில்லை என்று அவள் நின்றுகொண்டே இருந்தாள். 


“தயவு செய்து உட்கார். இந்த விஷயத்தை இனிமேலும் தள்ளிப்போட முடியாது என்று தோன்றுகிறது.”


மணிகர்ணிகா உட்கார்ந்தாள். “நானும் அதையேதான் சொல்கிறேன். பிரச்சினை பெரிதாகும் முன்பு நான் ரிசைன் செய்துவிடுவது நல்லது அல்லவா?”


“நீ ரிசைன் செய்தால் அதன் பின்விளைவுகள் இன்னும் மோசமாகத்தான் இருக்கும். ஏதோ தவறு நடந்துவிட்டது, அதனால்தான் நீ பேங்கை விட்டுப் போய்விட்டாய் என்று பேச்சு வரும்.”


“இப்போதே அப்படித்தானே மாலினி நினைத்துக்கொண்டு இருக்கிறாள்? அவள்மூலம் எல்லா பிராஞ்சுகளுக்கும் விஷயம் பரவுகிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது.”


“மணிக்கா! உன்னை தைரியசாலி என்று நினைத்தேன். இல்லையென்றால் எனக்கு வேறு யாரும் கிடைத்திருக்க மாட்டார்களா?”


“இப்போதும் ஒன்றும் முழுகிப்போய் விடவில்லை. என்னை விடுவித்துவிடுங்கள். நிம்மதியாக இருக்கும்.”


“முட்டாள் மாதிரி பேசக்கூடாது. வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் பானையை உடைக்கலாமா? பொறுமையாக இரு” என்று எழுந்தார் சேர்மன். “ஒரு வாரம் துபாய் போய்விட்டு வா. எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு ஜிஎம் அழைத்தார். சில முக்கியத் தகவல்களைக் கூறினார். 


அடுத்த அழைப்பு ரிசப்ஷனில் இருந்து. சென்னை ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடு  சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். “சரி அனுப்புங்கள்” என்றார். மணிகர்ணிகா அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டாள்.   

*** 

ஜான் நாயுடு என்ற பெயரைக் கேட்டதும் அவர் மதம் மாறியவரோ என்ற ஐயம் எழலாம். ஜனார்தன் என்ற பெயரைத்தான் ‘ஜான்’ என்று சுருக்கிவைத்துக் கொண்டிருந்தார் நாயுடு. விடுமுறை நாட்களில் அவரை ஏதாவது பெருமாள் கோயிலில்தான் பார்க்கமுடியும். நல்ல பக்திமான். 


அவரது சொந்த ஊர் விஜயவாடா. அங்கும் இதே வங்கியின் ரீஜினல் ஆபீஸ் இருந்தது. முதலில் சூரத், பிறகு பாட்னா, பிறகு சென்னை என்று மூன்று மண்டலங்களில் அவர் ஆட்சி செய்தாயிற்று. எப்பொழுது வேண்டுமானாலும் டிஜிஎம் பிரமோஷன் வந்துவிடும். அதற்குள் ஒருமுறையாவது சொந்த ஊரில் ரீஜினல் மேனேஜராக வந்து உறவினர்கள் மத்தியில் பந்தா காட்டவேண்டும் என்று விரும்பினார். இதுவரை நடக்கவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு ஜிஎம் கள் மேலிடத்தில் இருந்ததால் அவர்கள் தங்களுக்கு உகந்த ஆளாக விஜயவாடாவுக்குத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். இவர் தங்களை மீறி வளர்ந்துவிடுவார் என்ற பயத்தினால் தூரமாகவே வைக்க விரும்பினார்கள். மிளகாயும் புகையிலையும் விளைவிக்கும் ஜமீந்தார்கள் ஜான் நாயுடுவுக்கு மிகவும் பழக்கமானவர்கள் ஆயிற்றே! 


கடைசி முயற்சியாக மாலினி மூலம் மணிகர்ணிகாவைத் தனக்காக சிபாரிசு செய்யவைத்தார். அது 'கிளிக்' ஆகவேண்டும். அதையொட்டியே சேர்மனைப் பார்க்க வந்திருக்கிறார்.

*** 

நாயுடு வணக்கம் சொல்வதற்குள் சேர்மன் தானே முந்திக்கொண்டு வணக்கம் சொன்னார். அவருக்குப் பல மொழிகள் தெரியும். “ரண்டி, நாயுடுகாரு! பாகுன்னாரா?”


நாயுடு புன்முறுவலுடன், “நமஸ்காரம் சார்!" என்றார் அதிகப்படியான பணிவுடன். 


"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?"


நாயுடுவுக்குத்  தயக்கமாக இருந்தது. "விஜயவாடா"என்று ஆரம்பித்தார்.


உடனே "வெயிட், வெயிட்" என்றார் சேர்மன். "இப்போதுதான் ஹெச்ஆர் ஜிஎம் பேசினார். உங்களுக்கு விஜயவாடா போஸ்டிங் ஆகி இருக்கிறதாமே!..."

           

"அப்படியா சார்? வெரி க்ரேட் ஃபுல் டு யூ!" என்று சேர்மனுடைய கைகளைப் பிடித்துக்கொண்டார் ஜான்.


"ஆனால் ரீஜினல் மேனேஜராக  அல்ல" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் சேர்மன்.


அதிர்ச்சியுடன் கைகளை இழுத்துக்கொண்டார் ஜான். 


கொல்லென்று சிரித்தார் சேர்மன். “டோண்ட் வொரி நாயுடுகாரு! ஆந்திரா நேட்டிவ் ஜிஎம் ரெண்டு பேர் ஹெட் ஆபீஸ்ல இருக்கும்போது  வெறும் ஏஜிஎம் ரேங்ல   நீங்க போனா மேனேஜ் பண்ணமுடியாது. அவங்க இன்ஃப்ளூயன்ஸை மீறி உங்களால ஃபங்க்ஷன் பண்ண முடியாது.  அதனால உங்களை ‘ஆக்டிங் டிஜிஎம்’ ஆ போடறதா போர்டு முடிவு பண்ணியிருக்கு. அடுத்த புரொமோஷன்ல அதே போஸ்ட் உங்களுக்கு கன்பர்மாயிடும். ஆர் யூ ஹாப்பி?”    


இப்பொழுது சேர்மனின் கைகளைப் பிடித்த ஜான் நெடுநேரம் அதை விடவில்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. அதைப்  புரிந்துகொண்ட சேர்மன் அவரை மெல்ல அணைத்து  முதுகில் தட்டிக்கொடுத்தார்.


“நாங்கள் ஒன்றும் அதிகப்படியான பரிசை உங்களுக்குக் கொடுக்கவில்லை. நீங்கள் மூன்று ரீஜியன்களில் நல்ல டெவலப்மெண்ட் காட்டினீர்கள். அதனால் யூ டிசர்வ் திஸ் ப்ரொமோஷன்! ஆல் தி பெஸ்ட்!” 


மணிகர்ணிகா எவ்வளவு செல்வாக்குள்ளவள் என்று நாயுடுவுக்குப் புரிந்தது. 


“மன்னிக்கவேண்டும் சார்! நான் உடனே போய் சார்ஜ் எடுக்கவேண்டுமா அல்லது இந்த அகடெமிக்  இயர் முடிந்தபின் போகலாமா என்று பற்றித்  தங்கள் கருத்து…” என்று நாயுடு கேட்டார்.


“அது எனக்கு எப்படித் தெரியும்? மிஸ்டர் சண்முகத்தைக் கேட்டு முடிவு செய்யுங்கள்” என்று சொன்னவர், “ஓ மை காட்! இதை வேறு யாருக்கும் சொல்லி விடாதீர்கள். அவர்தான் உங்கள் சக்ஸஸர்” என்று முடித்தார் சேர்மன்.


ஜான் நாயுடு தன் நீண்டநாள் ஆசை நிறைவேறிய திருப்தியோடு விடைபெற்றார். சண்முகத்துக்கு இரகசியமாக இந்தச் செய்தியைச் சொல்லிவிடவேண்டும். 


அவர் போன பின் வெளியில் வந்தாள் மணிகர்ணிகா. “சரி எனக்கு துபாய்க்கு டிக்கட் ஏற்பாடு செய்துவிடுங்கள். எதற்கும் நான் மெடிக்கல் லீவ் அப்ளிகேஷன் கொடுத்துவிடுகிறேன். பிறகு யாரும் குறை சொல்ல முடியாதல்லவா?” என்றாள்.  


“குட்” என்றார் சேர்மன். அவள் போன பின் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார். மனதில் ஏதோ குழப்பம் நிலவியது. அப்போது அவர் மனைவியிடமிருந்து போன் வந்தது. காரசாரமான உரையாடல்போல் இருந்தது. முடிவாக “உங்களைத் திருத்தவே முடியாது. வேண்டுமானால் நீங்களும் துபாய் போகவேண்டியதுதானே!” என்று போனை வைத்தார் மனைவி. 


தன் எரிச்சலை யாரிடம் காட்டுவதென்று தெரியாமல் மொபைலை வீசிப் படுக்கையில் எறிந்தார். திடீரென்று ஏதோ யோசனை தோன்றியவராக,  ராஜாவை அழைத்தார். மணிகர்ணிகா பெயரில் 

விஜயவாடாவுக்கு ஒரு ஏசி செகண்ட் கிளாஸ் ரயில் டிக்கட் -நாளை தேதியில்- பதிவு செய்யும்படி கூறிவிட்டு உறங்கப் போனார். 

*** 


தனக்கு விஜயவாடாவுக்கு டிரானஸ்பர் ஆகிவிட்டதை ஜான் நாயுடு மனைவிக்கு போன் மூலம் தெரிவித்தபோது அவளுடைய மகிழ்ச்சியை வார்த்தையில் வர்ணிக்கமுடியவில்லை. ‘உடனே ரிலீவ் ஆகிவிடுங்கள்’ என்று வற்புறுத்தினாள். அதெப்படி முடியும்? குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். அதனால் ஒருநாள் கேஷுவல் லீவ் எடுத்துக்கொண்டு நாளை இரவு கிளம்பி, பூட்டியிருக்கும் தன் வீட்டைச் சுத்தம்செய்வதற்கு ஏற்பாடுசெய்துவிட்டுத் திரும்ப முடிவுசெய்தார் ஜான். 


காரிலேயே போய்வருவதுதான் எளிது. ஆனால், மகள் கல்லூரிக்குப் போய் வருவதற்கு வேண்டுமென்பதால் காரை எடுக்க விரும்பவில்லை. ரயில் டிக்கட் முன்பதிவுசெய்தார். அதே ரயிலில் அதே செகண்ட் ஏசி பெட்டியில் அவருக்கு அடுத்த நம்பரில் மணிகர்ணிகாவுக்கும் முன்பதிவு ஆகியிருந்தது அவருக்குத் தெரியாது. 

(தொடரும்)

             -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து   

    

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் (7)" படிக்க இங்கே சொடுக்கவும்.


8 கருத்துகள்:

 1. ரொம்ப சஸ்பென்ஸாக செல்கிறது

  பதிலளிநீக்கு
 2. அடுத்து இது என்ன விளையாட்டோ? வெளியில் சென்று இப்படியான வேலை பார்த்த அனுபவம் எதுவுமே இல்லாததால் சேர்மான், மணிகர்ணிகா பதவி உயர்வு, துபாய்க்கு அனுப்புவது விஷயங்கள் எல்லாம் வியப்பூட்டுகின்றன. ஏன் இப்படி, எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது என்று புரிபடவில்லை என்றாலும் சேர்மேன், மணிகர்ணிகா எல்லோர் பின்னிலும்...ஏதோ தவறு இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஜான், மணிகர்ணிகா ஒரே ரயிலில்....அடுத்தடுத்த இருக்கை. என்ன என்பதை அறிய ஆர்வம்,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையில் எவ்வளவோ சஸ்பென்ஸ்கள் வந்துபோய்க் கொண்டுதான் இருக்கின்றன. கவனித்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். உண்மையைவிட வியப்பானது அல்ல, கற்பனை!

   நீக்கு
 3. Where is my comment? ஸ்பாம்க்கு போயிடுச்சா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கமெண்ட்ஸ் மட்டும் எங்கு போகிறது? தமிழ் சினிமாவில் வடிவேலுவுக்கு மட்டும் அடி விழுவதுபோல..?

   நீக்கு
 4. இன்னும் மர்மம் கூடிக் கொண்டே போகிறதே. இருவரும் ரயிலில் சந்தித்துக் கொள்ளும் போது என்ன என்பது சஸ்பென்ஸ்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு