maid of the mist லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
maid of the mist லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 10, 2022

நயாகராவில் நான் (2022) - 2

நயாகராவில் நான் (2022) - 2

(அட்லாண்டிக் கடலோரம் )

அமெரிக்காவில் 86ஆவது நாள் (06-7-2022)


இதன் முதல்    பகுதி -" நயாகராவில் நான் (2022) -1 " படிக்க இங்கே சொடுக்கவும்.


நேற்றைய இறுதிப்பகுதி:

சாவி இல்லாமல் எப்படித் திறக்கமுடியும்? அதுதான் மூடிய காருக்குள் பளபளத்துக்கொண்டிருந்ததே! முன்பின் பழக்கமில்லாத புதிய கார். சேதமில்லாமல் எப்படித் திறப்பது?  யார் யாருக்கோ போன் செய்தாலும்  இரவு ஒன்றரை மணிக்கு யார் உதவிக்கு வருவார்கள்? திகைத்து நின்றோம்.


காரை யாரிடமிருந்து வாடகைக்கு  எடுத்தோமோ அந்த நிறுவனத்திற்குப் போன் செய்தோம். "கவலைப்படாதீர்கள் - இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் உதவிக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்றார்கள். எங்கள் சொந்தக் காருக்கான  இன்சூரன்ஸ்  கம்பெனி - 'கெய்க்கோ' விற்கு போன் செய்தால் உதவி இன்னும் சீக்கிரமாகக் கிடைக்குமே என்று அவர்களுக்கும் போன் செய்தோம். 


நீலக் கப்பலில் நாங்கள் 

உள்ளே என்ஜின் ஓடிக்கொண்டே இருந்தது வேறு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சிக்னலில் வண்டி சிறிது நேரம் கூடுதலாக நின்றாலே என்ஜின் 'ஆஃப்' ஆகிவிடும் அமைப்புள்ள கார் அது. அதேபோல் இமைக்கும் நேரத்தில் 'ஆன்' ஆகவும் செய்யும். அதை வழிநெடுகிலும் அனுபவித்து மகிழ்ந்தோம். இப்போதோ தொடர்ந்து ஒரே இடத்தில் அரை மணிக்கும் மேல் ஓடியும் என்ஜின் ஆஃப் ஆகாதது ஏன்? புரியவில்லை.


ஹோட்டலில் இம்மாதிரி உதவிகள் செய்வதற்கான தொழில்நுட்ப நிபுணர்கள் யாரும் இல்லை. எதிர்பார்ப்பதற்கும் இல்லை. எனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்.


ஒன்றரை மணி நேரம் என்றார்களே, சொன்ன இருபது நிமிடத்திலேயே வந்துவிட்டார்கள். சுறுசுறுப்பான ஓர் இளைஞர் இறங்கினார். காரின் சன்னலின்  'பிளீடிங்கி'ல் ஒரு சிறிய கருவியைச் செருகினார். 'பாம் பாம்' என்று ஹாரன் அடிக்குமே அம்மாதிரி ஒன்று அதில் இருந்தது. அதை அழுத்தி உள்ளே காற்றைச் செலுத்தினார். அதனால் பிளீடிங்கின் ஒரு பகுதி சற்றே அசைந்து விலகியது. அந்த இடைவெளியில் ஒரு நீண்ட கம்பியைச் உள்ளே அனுப்பினார். அதன் முனை  சதுரமாக மடிக்கப்பட்டு சற்றே கூர்மையாக நீட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கூர் முனை, கார் சன்னலின் கைப்பிடியை ஒரு நொடி தொட்டு விலகியது. அவ்வளவுதான்! சன்னல் திறந்துகொண்டது! 


இடது புறம் அமெரிக்க அருவி, தூரத்தில் இருப்பது கனடிய அருவி

எல்லோருக்கும் மிகப்பெரிய நிம்மதி! உதவிக்கு வந்தவர் ஒரு புன்முறுவலை மாத்திரம் கொடுத்துவிட்டு, தன் காரில் விரைந்துவிட்டார். டிப்ஸ் வாங்காத ஒரு சேவையை அமெரிக்காவில் பார்க்க முடிந்தது அனைவருக்கும் வியப்பை அளித்தது. 


பழக்க தோஷம் என்பார்களே, அதனால், எனக்குக் கம்பராமாயணம் நினைவுக்கு வந்தது. ஜனகரின் சபையில் சீதையை  மணப்பதற்காக வந்த ராமன், சிவதனுசு என்னும் வில்லைக் கையில் எடுப்பதைக் கம்பன் வர்ணித்த சொற்கள்- "எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்" - கண் முன்னால் வந்தது.   


அதே அருவியின் இன்னொரு பார்வை


அதை விடுங்கள், தேவர் படங்களில் பாடல் காட்சிகளில் கோட் சூட்டில் வரும் எம்ஜிஆர், டூயட் பாடியபடியே சரோஜாதேவியை ஒரே நொடியில் இறுக அணைத்து, அடுத்த நொடியில் விலகி ஓடி, பாடலின் அடுத்த அடியைத் தொடர்வாரே அந்த வேகமுமா  நினைவுக்கு வரவேண்டும்!  

*** 

மறுநாள் புதன்கிழமை காலை ஏழரை மணிக்கு எழுந்து நயாகரா அருவியைப் பார்க்கக் கிளம்பினோம். (06-7-2022) 


எதிரே இருப்பவை கனடியப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் 

ஹோட்டலின் எதிரில் இருந்த பூங்கா தான் அருவிக்கான நுழைவாயில். அமெரிக்காவில் எங்கிலும் காணக் கிடைக்கும் வழக்கமான மரங்கள், செடிகள், பூக்கள்தான் இங்கும் இருந்தது அலுப்பூட்டியது. அப்படிப்பார்த்தால் நாங்கள் வந்திருப்பதே வானத்திலிருந்து பொழியும் அதே தண்ணீரைப் பார்ப்பதற்குத்தானே! அது மட்டும் ஏன் அலுக்கவில்லை? அருவி என்ற பெயர்தான் ஆர்வத்தையும் மயக்கத்தையும் பிரமிப்பையும் தூண்டுகிறதோ?


அமெரிக்கப் பகுதியில் ஆப்சர்வேஷன் டவர்

அமெரிக்கக் கரையில் நின்று நாங்கள் பார்த்தோம். எதிர்ப்பக்கம் கனடியக் கரையிலிருந்து மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2005 பயணத்தின்போது அந்தப் பக்கம் இருந்தோம். 2022இல் இந்தப் பக்கம் இருக்கிறோம். ஒரே தண்ணீர் தான், ஒரே வெண்மைதான், ஒரே பனிசிதறல்தான்! இருந்தும் இரண்டு பார்வைக்கும் கொஞ்சம் வேறுபாடு இருக்கத்தான் செய்தது.

அருவியில் குளிக்க  நீலக்கப்பல் தயாராக நிற்கிறது

நயாகராவின் முக்கியப் பகுதி, குதிரை லாடம் போன்ற குழிந்த அமைப்பில் அருவி கொட்டுவதாகும். இதை மட்டும் அனுபவிக்கவேண்டுமானால் கனடியப் பகுதியில்தான் முழுமையாகப் பார்க்க முடியும். அதுவும் உயரத்திலிருந்து பார்ப்பதற்கென்றே கோபுரங்கள் உண்டு.  சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமான கரையில் கை பதித்துக்கொண்டே அருவி பொழிவதையும் அது ஆறாக ஓடிச்சென்று மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை அடைவதையும் கண்டு களிக்கலாம். அலங்கரிக்கப்பட்ட குதிரைவண்டிகளில் நகரத்தைச் சுற்றிவரலாம்.           


கப்பலில் பயணிகள் ஏறும் இடம்

அமெரிக்கப் பகுதியில் எப்படி இருக்கும் தெரியுமா?


குதிரை லாட வடிவத்தில் இல்லாவிடினும், இங்கும் அருவி அதே போன்ற அகல ஆழங்களில் பாய்கிறது. அருகில் இருந்து பார்ப்பதனால் தண்ணீர் பச்சை நிறமாகக் காட்சி அளிக்கிறது. கனடிய அருவி தூரத்தில் இருப்பதால் அதன் நீர் வெள்ளையாகவும் பனிமூடியதாகவும் தெரிகிறது. உயரமான காட்சி கோபுரங்கள் அமெரிக்கப் பகுதியில் கிடையாது. அதற்குப் பதில், 'ஆப்சர்வேஷன் டவர்' என்ற பெயரில் நீண்ட பாலம் ஒன்று அமைத்திருக்கிறார்கள்.   அதுவே போதுமான காட்சி அனுபவத்தைத் தருகிறது. அதற்குக் கட்டணம் 1.25 டாலர்கள். 


அமெரிக்கப் பகுதியிலிருந்து நீலக்கப்பல் கிளம்பிவிட்டது- கனடியப் பகுதியில் சிவப்புக் கப்பல் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது

அமெரிக்கப் பகுதியிலிருந்து ஒரு கப்பலும், கனடியப் பகுதியிலிருந்து ஒரு கப்பலும் பயணிகளை அருவியின் மிக நெருக்கத்தில் கொண்டுபோய்க் காட்டுகின்றன. இந்தப் பயணத்திற்கு  “MAID OF THE MIST” -  “மூடுபனிக்  கன்னி”   என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தரைத்தளத்திலிருந்து கப்பலை அடைவதற்கு மின்தூக்கியின் கட்டணம் 1.25 டாலர், கப்பலுக்கான கட்டணம் 24 டாலர், ஆக மொத்தம் 25.25 டாலர் வசூலிக்கிறார்கள்.  (5 முதல் 12 வயதினருக்கு 14.75 டாலர் தான்;  5 க்கு கீழ்-கட்டணம் இல்லை). 


பயணத்தின்போது அருவிநீர் தெளித்து உங்கள் ஆடைகள் நனையாதிருப்பதற்காக பிளாஸ்டிக் மேலுடை தருகிறார்கள். அமெரிக்கப் பயணிகளுக்கு நீலநிற பிளாஸ்டிக்; கனடியப் பயணிகளுக்குச் சிவப்பு நிற பிளாஸ்டிக்.  இதை அணிந்துகொண்டுதான் பயணிக்கவேண்டும்.  எதிர்பாராதவிதமாக  விபத்து நேருமானால், எந்த நாட்டிலிருந்து  வந்தவர் என்பதை எளிதில் அறிவதற்காகவே பிளாஸ்டிக் ஆடைகளில் நிறவேறுபாடு!  பயணம் முடிந்து இறங்கும்போது இந்த ஆடையை நீங்கள் விரும்பினால் நினைவுப் பொருளாக எடுத்துச் செல்லலாம். இல்லையேல் அங்கேயே மறுசுழற்சிப் பெட்டிகளில் போட்டுவிடலாம். 


வானவில் பாலம்

பிறந்து இரண்டே மாதமான புதிய குழந்தைகளில் இருந்து, நூறு வயதை நெருங்கும் மிகவும் பழைய குழந்தைகள் வரை  இந்தப் பிளாஸ்டிக் மேலுடையில்  பார்க்கும்போது நீலப் பறவைகள் கப்பலில் அமர்ந்து பயணிப்பதுபோலவே இருந்தது. எல்லாருக்கும் உற்சாகம். சிறுவர்களோ குதித்து கும்மாளம் இட்டார்கள். கப்பல் பயணித்த நேரம் பதினைந்து நிமிடம்தான் என்று நினைக்கிறேன். மெல்ல நகர்ந்து கரையோரமாகவே சென்று குளிர்காற்று மேனியை வருடச் செய்தபின், விசையோடு அருவியின் நேர் கீழாகச் சென்று, அங்கேயே சிறிதுநேரம் சுழன்று சுழன்று, நயாகராவின் நீர்த்துளிகளைப் பெருமழைபோல் பயணிகள்மீது பொழியவைத்தபின், எல்லோரும் மேனி சிலிர்த்துக்கொண்டபின்,  கப்பல் வானவில் பாலத்தை நோக்கித் திரும்பி, வளைந்து, புறப்பட்ட இடத்திற்கே வந்தது. 


அருவியை நெருங்கியபோதில் முழுமையான வானவில்லை இரண்டுமுறை பார்க்க முடிந்தது. அமெரிக்கப் பகுதியில் ஒன்றும், கனடிய பகுதியில் ஒன்றும்! அற்புதமான காட்சி! 


வானவில்லின் அற்புதக் காட்சி

அமெரிக்க அருவியைக் காட்டிலும் கனடிய அருவியின் வேகமும் உயரமும் அதிகம் என்பதால், கனடியப்  பகுதியில் நீர் விழும் வேகத்தைப் போலவே பனிப்புகை எழும் வேகமும் அதிகமாக இருந்து வெண்மைநிறத்தை  அடர்த்தியாக்கி, புகைப்படம் எடுப்பதைக் கடினமாக்கியது.   


ஒரே சமயத்தில் நீல ஆடைக் கப்பலும் சிவப்பு ஆடைக் கப்பலும்  அருவியை மோதாதபடி இரண்டு பயணங்களுக்கும் இடையே நேர வித்தியாசம் மேற்கொள்ளப்படுகிறது. 


வானவில்லின் இன்னொரு பார்வை


பயணிகள் பலபேருக்கு இதுவே முதல் கப்பல் பயணமாகவும் அமைந்திருக்கலாம். அவர்களின் இன்பம் எல்லையற்றது! 

நயாகரா by Night

காலையில் இருந்தே வெயில் அதிகமாக இருந்ததால், முதலில் ஆப்சர்வேஷன் டவரில் ஏறிப் பார்த்துவிட்டு, பகலுணவை முடித்த பிறகு, மாலை ஆறுமணிக்குத்தான் நாங்கள் ‘மூடுபனிப் பாவை’யில்  கப்பல் பயணம் மேற்கொண்டோம். இதமாக இருந்தது.


கப்பல் பயணத்துக்கு டிக்கட் வழங்கும் கவுண்ட்டரில் அதிர்ச்சியான ஓர் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது: “கனடிய கரன்சிகள் வாங்கப்பட மாட்டாது!” ஒருவேளை, இதேபோல், கனடிய டிக்கட் கவுண்ட்டரில் “அமெரிக்க கரன்சிகள் வாங்கப்பட்ட மாட்டாது” என்று அறிவிப்பு இருக்குமோ!  இல்லையென்றால், இதற்கான காரணம் என்னவென்பதை தேசபக்தியுள்ள கனடியர்கள் தெரிந்துகொள்வது நல்லது.  


நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்

கப்பல் பயண டிக்கட் கவுண்ட்டர் அருகிலேயே நினைவுப் பொருட்கள் விற்கும் கடையும் இருக்கிறது. திரும்பத்திரும்ப சாவிக்கொத்துகளும், குளிர்பெட்டியில் ஓட்டுவதற்கான காந்தம் வைத்த சிறு படங்களும், நயாகராவின் புகைப்படங்களும், அருவியின் படம் போட்ட துணிப்பைகளும், மதுப் பிரியர்களுக்கான சிறுசிறு கண்ணாடி தம்ளர்களும்,  டி-ஷர்ட்டுகளும்தான் எங்கும் கிடந்தன. கனடாவுக்கே உரிய இனிப்புத் திரவமான ‘மேப்பிள் சிரப்’ தாராளமாகக் கிடைத்தது.  நீங்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும் இதே பொருட்களை விற்கும் பகுதி நிச்சயமாக இருக்கும். அதனால் அதிகதூரம் நடக்கவேண்டியதில்லை.

****

அருவியின் அருகில் தான் ‘நயாகரா ஸ்டேட் பார்க்’ இருக்கிறது என்று சொன்னேன். கிட்டத்தட்ட எல்லா உணவகங்களும் அங்கே தான் சூழ்ந்துள்ளன. 

வெள்ளை அருவியின் நினைவாக
எனக்கு வெள்ளை டீஷர்ட்


பகலுணவு தேடிப்  போனபோது,  பார்க்கின் அருகாமையில் “தோசா ஹட்” என்ற வேன் நின்றிருந்ததைக் கண்டோம்.  ஆனால் மாலையில்தான் அது இயங்குமாம். இதேபோல் பல்வேறு உணவுப்பண்டங்களின் பெயர்கொண்ட வேன்கள் பல இருந்தன. சில இயங்கின ஆனால் புலால் உணவு மட்டுமே இருந்தது.  மரக்கறி மட்டுமே வேண்டுமென்று நாங்கள் தேடியதில் சற்று தூரத்தில் ‘விரும்பியதை உண்ணும் பஃப்பே 13 டாலர்’ என்று ஒரு பஞ்சாபி உணவகம் கண்ணில் பட்டது. உணவும் நன்றாகவே இருந்தது. 


இரவு உணவுக்கு அதிலிருந்து இன்னும் சற்று தூரத்தில் இருந்த ஜய்க்கா (Zaika) என்ற உணவகம் கிடைத்தது. அது கொஞ்சம் பெரிய இடம்.   பஃப்பே 20 டாலர் ! சிறுவர்களுக்கு 14 டாலர். ஆனால் தட்டில் எடுத்துக்கொண்ட எல்லாவற்றையும் தின்றுதீர்க்க வேண்டும். மீதம் வைத்தால் அதை எடை போட்டு கிலோ 20 டாலர் என்று அபராதம் வசூலிப்பார்களாம்! இங்கும் உணவு அற்புதமாக இருந்தது. முக்கியமாகக் கழிப்பறை நன்றாக இருந்தது. 


ஹோட்டல் அறைக்குத் திரும்பும் முன் (எச்சரிக்கையாக!) மூடிய காரின் கதவை ஒருமுறை திறந்துபார்த்துக்கொண்டோம். சாவி கையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டோம்.


மூன்றாவது நாள் …… (நாளை முடியும்)


இதன் கடைசி    பகுதி -" நயாகராவில் நான் (2022)- 3 " படிக்க இங்கே சொடுக்கவும்.


                          -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து