பிரின்ஸ்டன் முருகன் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரின்ஸ்டன் முருகன் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 22, 2022

நியூஜெர்சியில் முருகனுக்குப் புதிய ஆலயம்

நியூஜெர்சியில் முருகனுக்குப் புதிய ஆலயம் 

அமெரிக்காவில் 69 ஆவது நாள் (19-6-2022)

(விட்டுப்போன கட்டுரைகள்)

சிங்கப்பூரிலிருந்து வாரந்தோறும் கம்பராமாயண வகுப்புகள் நடத்தும் திரு ஏ கே வரதராஜன் அவர்கள் தனது நூறாவது நிகழ்வின்போது (02-06-2022 வியாழன்)தான் பேசாமல் இருந்துவிட்டார்.  காரணம், அவரது மதிப்பிற்குரிய பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்  அவர்கள் பேச முன்வந்ததே. கம்பராமாயணத்தில் எனக்குப் பிடித்த தம்பி என்ற தலைப்பில் அவர் பேசியது யாரைப் பற்றித் தெரியுமா

 இலக்குவனோ, பரதனோ அல்ல. கும்பகர்ணன் பற்றி!  ஆம், இராவணன் தம்பியாகிய கும்பகர்ணனைப் பற்றித்தான்!

பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்  அவர்கள் மதுரை சௌராஷ்டிரக் கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றியவர். காரைக்குடி கம்பன் கழக அறிஞர்கள் ஊக்குவிப்பால் தமிழ் பயின்று சொற்பொழிவாற்றலும் கவிதை யாற்றலும் கைவரப்பெற்றவர். 1981இல்  நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில்  408 கவிஞர்கள் கலந்துகொண்ட பொற்கிழிக் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர். (பொற்கிழியில் இருந்தது எத்தனை பொன் என்று அவர் கூறவில்லை!)

 பேராசிரியர் தன் சொற்பொழிவின்போதுஇராவணன்என்றால்அதிகம் அழுபவன்என்று ஒரு பொருள் உண்டு என்றார்.

 'விதி' யைப் பற்றிப் பேசுகையில், "இழைக்கின்ற விதி முன் செல்ல// தருமம் பின் இரங்கி ஏக // குழைக்கின்ற கவரியும் கொற்ற வெண் குடையும் இன்றி " இராமன் கானகம் சென்றதைக் குறிப்பிட்டார்.  

அதேபோல்,வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன் விதி// நின்றது, பிடர் பிடித்து உந்த நின்றது என்று தன்  செஞ்சோற்றுக் கடன் கழிக்கப் போர்முனைக்குச் செல்லும் கும்பகர்ணனையும்  அவர் உருக்கமாகப் படம்பிடித்துக் காட்டினார்.

அத்துடன், திரு ஏகே வரதராஜன் அவர்களை விரைவில் கும்பகர்ணனைப் பற்றி ஒரு நூல் எழுதுமாறும் கட்டளையிட்டார். அதற்குத் தலைப்பையும் அவரே தந்தார்: "ஆசை அண்ணன், அன்புத் தம்பி" என்று.  (விபீஷணனுக்கு அவன் ஆசை அண்ணன்; இராவணனுக்கு அவன் அன்புத் தம்பி).

இலந்தையாரின் அறிமுகவுரை

அன்றைய கூட்டத்தின் முடிவில் பேராசிரியரும் திரு ஏகேவி அவர்களும் நியூஜெர்சி வரப்போவதாகச் சொன்னார்கள். பிரின்ஸ்டன் நகரில் புதிதாகத் தொடங்கவுள்ள தெண்டாயுதபாணி திருக்கோயிலில் "தமிழ் கடவுள் முருகன்" என்ற தலைப்பில் பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்கள். அவர்களை நேரில் சந்திப்பதற்காக ஆவலோடு காத்திருந்தேன். 

 நியூஜெர்சியில் இந்துக் கடவுளரின் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரர் ஆலயம், மார்க்கன்வீல் குருவாயூரப்பன் ஆலயம், ஃபிளஷிங் விநாயகர் ஆலயம், பொமோனா லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், மற்றும் பிரம்மாண்டமான சுவாமிநாராயணர்  ஆலயம் ஆகியவை பெரிதும் புகழ்பெற்றவை. ஆனால் முருகனுக்கென்று தனியாகக் கோயில் எதுவும் இதுவரை உண்டாகவில்லை.  

இலந்தை இராமசாமி, சொ.சொ.மீ.சுந்தரம், நான்

அந்தக் குறை தங்களால் தீரவேண்டும் என்று, சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டுசெய்யவே தோன்றிய குலமாகக் கருதப்படும்  நகரத்தார் குலத்து இளைஞர்களும் பெரியவர்களும் அவர்கள் வீட்டுப் பெண்டிரும் பிரின்ஸ்டன் நகரில் ஓர் இடம் வாங்கி ஆலயம் அமைப்பதற்கான பணியில் இறங்கினார்கள். இடையில் கொரோனா பேரிடர் குறுக்கிட்டதால் பல தடைகள் எழுந்தன. என்றாலும் ஆலயத்தை எப்படியும் ஒரு நல்ல நாளில் தொடங்கிவிடுவதென்று இறைவன் கொடுத்த ஆணையால் 2019 பிப்ரவரி 11 ஆம் நாள் அதே நகரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் தெண்டாயுதபாணியை எழுந்தருள வைத்தார்கள். (3490, US Highway 1 North, Suite 16, Princeton, NJ-08540 ) அந்த இடத்தில்தான் அதே தமிழ்க்கடவுளின் சந்நிதி முன்புதான் பேராசிரியரின் சொற்பொழிவு நடைபெற்றது. இரண்டுமணி நேரம் அற்புதமான தமிழருவி பொழிந்தது என்றால் மிகையாகாது.  

சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா இயற்றிய பிள்ளைத்தமிழ் 

முருகன் எப்படித் தமிழ்க் கடவுள்  ஆவான் என்பதற்கு ஐந்து காரணங்களை விளக்கினார் அவர்.  நகைச்சுவையும் அனுபவச்சுவையும் மதுரைக்காரர்களுக்கே உரிய நையாண்டியும் அவர் பேச்சில் தெறித்து விழுந்தன. 

 கம்பராமாயணக் கூட்டங்களில் வெளுத்துக்கட்டும் ஐயா ஏகேவி  அவர்கள் ஒன்றுமே பேசாமல், ராமன் முன்பு குகன் போல, பேராசிரியருக்கு நேர் எதிரே தன் துணைவியாரோடு அமர்ந்துவிட்டார். பேச்சில் அவர் லயித்திருக்க அவர் தலை மட்டும் அந்த உணர்வுக்கேற்ப பெண்டுலம் மாதிரி அசைந்து கொண்டிருந்ததை ஓரத்தில் அமர்ந்திருந்த நான் கண்டு ரசித்தேன்.    

ஏகேவி அவர்களும் நானும் துணைவியருடன்

பெருமை மிக்க பேராசிரியரைத் தகுதியுள்ள ஒருவர் அல்லவா அறிமுகப்படுத்தவேண்டும்! அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தார் பழம்பெரும் மரபுக் கவிஞரும்  எழுத்தாளருமான இலந்தை இராமசாமி அவர்கள்!  முகநூலில் நன்கு அறிமுகமானவர்.சந்தவசந்தம்என்ற கூகுள் குழுவில் ஆளுமை செலுத்துபவர்.  எடிசனில் தன் மகன் வீட்டுக்கு வந்தவரை இறைவன் மடக்கிப்போட்டுவிட்டான் போலும். மனிதர் வெளுத்துவாங்கிவிட்டார். அவர் கைவசம் எப்போதும் ஒரு விநாயகர் பாடல் உண்டு.யானை’ ‘யானைஎன்று இருபது முப்பது தடவை முடியும் சொற்றொடர்களால் பின்னப்பட்டது. எப்படிப்பட்ட அவையையும்  கட்டிப்போட வல்லது. இங்கும் கட்டிப்போட்டது. 

இலந்தை இராமசாமி அவர்களுடன் நான்

ப்ரின்ஸ்டனில் தன்னை யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்ற அறியாமையில் இருந்த தில்லை கங்காநகர் கவிஞரை, அவருடைய இலச்சினையான வெண்தாடி  எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது! தான் எழுதிய அறியவேண்டிய ஆன்மிகக்கதைகள் என்ற நூலை எனக்குக் கொடுத்தார். என்னிடம் கைவசம் இருந்ததுஅனிதா-யமுனா-மஞ்சரிஎன்ற நாவல்தான். கொடுத்தேன். 

திருமதி தென்றல் அவர்களுடன்
பேராசிரியருடன் மதுரை நினைவுகளைப் பங்குபோட்டுக் கொண்டேன். அப்போது தன்னைத்  தமிழின் பக்கம் கொண்டுவரக் காரணமாக இருந்தகம்பனடிப்பொடிசா.கணேசன் அவர்களையும்மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அமரர் வ.சுப. மாணிக்கம் அவர்களையும்  அவர் நன்றியோடு நினைவு கூர்ந்தார். அதற்குப் பொருத்தமாக, வ.சுப.மாணிக்கனாரின் மகள், திருமதி தென்றல் அவர்கள் (பிலடெல்பியாவில் வசிப்பவர்) நிகழ்ச்சிக்கு வந்திருந்து தன்  தகப்பனார் பெயர் சொல்லப்பட்டபோதெல்லாம் கண்ணீர் சொரிந்தார். 

அமெரிக்காவில் வாழும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பலரும் குடும்பத்துடன் வந்திருந்து பங்கேற்றது மட்டுமன்றி, வீட்டிலிருந்தே ஆளுக்கொரு பலகாரம் தயாரித்துவந்து, அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறினர். பத்துப் பன்னிரண்டு வகைப் பண்டங்கள். நமக்கோ ஒரே ஒரு வயிறு! விருந்தோம்பல் அன்றோ அந்தச் சமூகத்தின் இன்னொரு பண்பட்ட இலக்கணம்! 

ஸ்ரீ தெண்டாயுதபாணி டெம்பிள் சொசைட்டிஎன்ற பதிவுபெற்ற நிறுவனத்தின்  நிர்வாகக் குழுவில் இருப்பவர்களைக் கீழே காணலாம்.  (sttsnj.org)  

ஓர் இனிய செய்தி என்னவென்றால் இன்னும் நான்கைந்து மாதங்களில் தமிழ்முருகன் தனக்குச் சொந்தமான குடிலில் அமர்ந்துவிடுவானாம்! கட்டிட வேலைகள் மும்முரமாக நடக்கிறதாம்.  நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! முடியாதவர்கள் மாதம் 25 டாலர் வீதம் சந்தா போலத்  தொடர்ந்து வழங்க உறுதியளிக்கலாம் என்று குழுவினர் தெரிவித்தனர். அப்படி 120 பேர் சேர்ந்தாலே மாதச் செலவான 3000 டாலரைத் திரட்டி விடலாம் என்று கருகிறார்கள். நம் சிறிய மனது எப்போதும் சிறியதாகத்தானே சிந்திக்கும்! ஏனென்றால் சிறுதுளி பெருவெள்ளம் அன்றோ! எல்லாம் வல்ல முருகன் நினைத்தால் இதைப்போலப்  பலமடங்கு யாரோ ஒரு வள்ளல் தந்துவிட மாட்டாரா!  அதற்கும் அவன் அருளையே வேண்டுவோம்.

இரண்டு மாதங்களாக ஆலயங்களுக்குச் சென்றுவர முடியாத நேர நெருக்கடியில் என் மக்கள் இருந்ததால், பிரின்ஸ்டன் திருமுருகன் தெண்டாயுதபாணி ஆலயத்திற்குச் சென்றுவர முடிந்ததைப் பெரும் பேறாகவே கருதுகிறேன். 

இதற்குக் காரணமாயிருந்த திரு ஏகேவி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிங்கப்பூரில் டெப்போ சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு ருத்திரகாளியம்மன் பெயரால் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார் பேராசிரியரும் பொற்கிழிக்கவிஞருமான சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள். வழுவழுப்பான தாளில் காலிக்கோ பைண்டிங்கில் அழகான 16 தேவியரின் வண்ணப்படங்களோடு மிகுந்த பொருட்செலவில் வெளியிடப்பட்ட இந்த நூலில் இலக்கண ஒழுங்கோ இலக்கியச் சுவையோ குறையாமல்  இயற்றப்பட்ட 100 பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஓர் அற்புதமான உலகுக்கே நம்மை அழைத்துச் செல்பவை! 

உதாரணத்துக்கு ஒரு பாடல்:

மாயையாம் மணல்கொண்டு வையமாம் சிறுவீட்டை 

வடித்தவள் நீயல்லவோ

மானிடப் பிறவியில் மனக்குரங்காடவே 

வைத்தவள் நீயல்லவோ

தாயாக வந்தருளிச் சிவனுக்கும் ஒரு வடிவம்

தந்தவள் நீயல்லவோ

தமிழுக் கிரங்கியே கடவூரில் அன்றுவரும்

சந்திரன் நீயல்லவோ

காயான என் மனம் கல்லாகி நிற்குதே

கனிவிக்க வேண்டுமம்மா!

கால்பிடித்தேன் அன்று பால்கொடுத் தாண்டவள்

கருணையோ டிங்கு வாராய்

சேயாகி வந்தவன் மழலைமொழி கேட்கிறோம்

செங்கீரை ஆடியருளே!

சிங்கப்பூர் வாழவரு மங்கை ருத் திரகாளி

செங்கீரை ஆடியருளே!           (12)

-    இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.