புதன், ஜூன் 15, 2022

ஹைதராபாத்தில் ஊரடங்கு (நேற்றைய தொடர்ச்சி)

ஹைதராபாத்தில் ஊரடங்கு (நேற்றைய தொடர்ச்சி)

(நான்கு தூண்கள் நகரம்-11)

அமெரிக்காவில் 63 ஆவது நாள் (13-6-2022)


வாசற்படியை அடைத்துக் கொண்டு அந்தப் பெண்மணி நகராமல் நின்றது எனக்கு மிகுந்த திகிலை ஏற்படுத்தியது. அறை நண்பர்கள் இருவரில் ஒருவராவது உடனே வர மாட்டார்களா என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். வரவில்லை.


ஐந்தாறு நிமிடங்கள் ஆகியிருக்கும். "இவ்வண்டி ஸார்!" என்று கெஞ்ச ஆரம்பித்தாள் அப்பெண். இருந்தால்தானே கொடுப்பதற்கு? கையில் இருந்த 20 ரூபாய் அடுத்த இரண்டு வேளை உணவுக்குத் தானே காணும்! 

ஹைதராபாத் படம் இல்லாததால் 
நியூயார்க் படம்!


ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த பேண்டில் கை விட்டுத் துழாவுவதைப் போல சில நிமிடங்கள் கடத்தினேன். பிறகு முகத்தை வருத்தப்படுவது போல் வைத்துக்கொண்டு வேகமாக அவளை நோக்கி முன்னேறி அவளைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தேன். விழப்போனவள் சமாளித்துக்கொண்டு மீண்டும் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள். 


"நாயுடுகாரு! நாயுடுகாரு!" என்று மேல்மாடியை நோக்கி பலமாகச் சத்தமிட்டேன். அது மட்டுமல்ல, என்னை அறியாமலே "போலீஸ் போலீஸ்" என்றும் கத்தினேன்.


என் கத்தலைக் கேட்டு மூன்றாம் நம்பர் அறைவாசி  என்னவோ ஏதோ என்று அலறிக்கொண்டு கதவைத் திறந்தார். அதே சமயம் மேல்மாடியில் இருந்து நாயுடு நாலுகால் பாய்ச்சலில் கீழே இறங்கினார்.


இந்த இருவரையும் கண்ட அந்தப் பெண்மணி விட்டால் போதும் என்பதுபோல் விர்ரென்று  இறங்கி, சந்துக்குள் மறைந்து போனாள். 


நாயுடு அனுபவஸ்தர் அல்லவா,  ஒரே நிமிடத்தில் விஷயத்தைப் புரிந்து கொண்டார்.


"ஐந்து நிமிடம் முன்னால் நீங்கள் சத்தம் போட்டு இருந்தால் அவளைக் கையும் களவுமாகப் பிடித்து இருப்பேனே! சரியான பேமானி அவள்! சபல புத்தி உள்ள ஆண்களாகப் பார்த்து பிளாக்மெயில் செய்து ஐநூறு ஆயிரம் என்று கறந்து விடுவாள்!"

என்று வழக்கத்தைவிட உச்சமான குரலில் பேசினார் நாயுடு.


"ஏதாவது கொடுத்தீர்களா?"


இல்லை என்று தலையாட்டினேன்.


"எல்லாம் இந்த இஸ்திரி போடும் பொம்பள செய்யற விஷமம். அவள் தான் தனியாக இருக்கும் ஆண்களைக் பற்றி இவளுக்குத் தகவல் சொல்லி இப்படி வேலைகாட்டுகிறாள். வரட்டும், அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறேன்"  என்று கோபமாகப் பேசிய நாயுடு, "காலை டிபன் ஆகிவிட்டதா?" என்று கனிவோடு கேட்டார். 


நடந்ததைச் சொன்னேன். "சரி, நீங்கள் குளித்துவிட்டு டிபன்  சாப்பிடுங்கள். இன்று பகல் உணவுக்கு வக்கீல் சார் உங்களை வரச் சொன்னார். உங்கள் வங்கியின் சர்வீஸ் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்" என்று நாயுடு மாடிக்குத் திரும்பினார். 


இப்படியாக அந்த ஹோலிப் பண்டிகை  கடந்துபோய்விட்டது. ஆனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்தபோது நிலைமை வேறுமாதிரி இருந்தது. 


ஒவ்வொரு சந்தில் இருந்தும் ஒரு விநாயகர் சிலையை ஊர்வலமாகச் கொண்டு வருவார்கள்.  சந்துச் சிறுவர்கள் பெருத்த ஆரவாரத்துடன் திரண்டு நடப்பார்கள். ஒரு சாலைக்குப் பதினைந்து சந்துகள் என்று வைத்துக்கொண்டால் நகரம் முழுவதும் எவ்வளவு சந்துகள் இருக்கும்! அத்தனை யிலிருந்தும் ஒரு சிலை ஊர்வலத்தில் பங்கெடுக்கும். ஆயிரக்கணக்கில் மக்கள் தெருவில் நடந்து கொண்டே இருப்பார்கள். 


சில சந்துகளில் முஸ்லிம்கள் பெருவாரியாக இருப்பார்கள். அந்த சந்துகளை ஒட்டிய சாலையில் இந்த ஊர்வலம் போகும்போது சந்துக்குள் இருந்து பட்டாசுகளைக் கொளுத்தி ஊர்வலத்தின் மீது எறிவார்கள். எந்தெந்த சந்திலிருந்து பட்டாசு வரும் என்று இவர்களுக்கும் அனுபவத்திலிருந்து தெரியுமாதலால், இங்கிருந்தும் பட்டாசுகள் அச்சந்துகளுக்குள் போகும். இப்படி நடக்கும் என்று போலீசுக்கும் தெரியும்.  ஆகவே ஒன்றும் செய்ய மாட்டார்கள். இரண்டுபேருக்கும் கைகலப்பு நிகழட்டும் என்று காத்திருப்பார்கள். சற்று நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். அடுத்த ஒரு மணி நேரத்தில் கட்சிப் என்று அமைதி திரும்பி விடும்.


ஹைதராபாதில் நாங்கள் இருந்த மூன்று வருடங்களில் ஆண்டுக்கு மூன்று நான்கு தடவையாவது இம்மாதிரி ஊரடங்கு உத்தரவைச் சந்தித்திருக்கிறோம். மிகச்சிறிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இருந்தாலும் கூட இரண்டு சமுதாயங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் போலீசார் ரிஸ்க் எடுக்க துணியாமல் ஊரடங்கை அமல்படுத்தி விடுவார்கள். 


ஒருமுறை என் வங்கிக்  கிளையிலிருந்து, வழக்கம்போல, அதிகப்படியாக உள்ள பணத்தை  (excess cash balance) இரும்புப் பெட்டியில் எடுத்துக் கொண்டு, மாலை ஐந்தரை மணிக்கு,  ஆட்டோவில் (the prescribed mode of transport)  சித்தியம்பர் பஜார் (pooling branch) கிளையில்  செலுத்துவதற்காக, நானும் இன்னொரு சக ஊழியரும் சென்று கொண்டிருந்தபோது, அபீட்ஸ் (Abids) அருகே  எங்களை நிறுத்திவிட்டார்கள். ஊரடங்கு அறிவித்துவிட்டார்களாம்! அடுத்த நிமிடம் எல்லாக்  கடைகளும் கதவை இழுத்து மூடின. பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நடந்து கொண்டிருந்தவர்களை ‘சலோ சலோ’ என்று போலீசார் விரட்டினார்கள். 25 லட்ச ரூபாய் பணத்துடன் கனமான இரும்பு பெட்டியை நானும் சக ஊழியரும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீதி ஓரமாக  நின்றோம். 


சித்தியம்பர் பஜார் போக வேண்டுமானால் இன்னும் ஒன்றரை கிலோமீட்டர் இருந்தது. என்னுடைய வங்கிக்கே திரும்பிப் போக வேண்டுமானாலும் அதே தூரம்தான். இரண்டு பக்கமும் சென்சிட்டிவ் ஏரியா என்று போலீசார்  அறிவித்தார்கள். அன்று எந்த இந்துப் பண்டிகையோ முஸ்லீம் பண்டிகையோ  கூட இல்லை. என்ன காரணத்திற்காக ஊரடங்கு என்றே தெரியவில்லை. 


வேறு வழியில்லாமல் நான் ஒரு முடிவு எடுத்தேன். அந்தச் சூழ்நிலையில் அதை விடப்  பாதுகாப்பான முடிவு இன்னொன்று இருக்க முடியாது. வங்கியின் பணம் 25 லட்சத்தைக் காப்பாற்றியாக வேண்டும். 


இருவரும் கனத்த பெட்டியை ஆளுக்கொரு பக்கமாகத் தூக்கிக்கொண்டு அரை கிலோ மீட்டர் நடந்தே சென்று அங்கிருந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்தோம். "இது வங்கியின் பணம் பத்திரமாக வைக்க வேண்டும். உதவி செய்யுங்கள்" என்று வேண்டினோம்.


காவல் நிலையத்தில் அப்போது இரண்டே இரண்டு கான்ஸ்டபிள்கள் தான் இருந்தார்கள். மற்ற எல்லாரும் ஊரடங்கு அமல்படுத்தச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் எங்களைப் பார்த்து கவலையோடும் ஏளனத்துடன் சிரித்தார்கள். 


"இம்மாதிரி ஊரடங்குக் காலத்தில் ரவுடிகள் முதலில் குறிவைப்பது போலீஸ் ஸ்டேஷனைத்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா? திடீரென்று பெட்ரோல் குண்டுகளை வீசுவார்கள் என்று கேள்விப்பட்டதில்லையா? ஓடிப்போய்ப்  பக்கத்து வீடுகளில் எங்காவது புகுந்து கொள்ளுங்கள். இங்கு நிற்பது ஆபத்து. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எப்படியும் இரண்டு மணி நேரத்தில் இந்தப் பகுதியில்  ஊரடங்கு வாபஸ் ஆகிவிடும்" என்றார்கள் அந்தக் காவலர்கள்.


ஆனால் நான் ஏற்கவில்லை. “இது வங்கியின் பணம். இதைத் தனியார் வீடுகளில் கொண்டு வைத்தால் தவறாகிவிடும். அத்துடன் பணம் தொலைந்தால் இன்ஷுரன்ஸ் கிடைக்காது. ஆகவே என்ன ஆனாலும் சரி போலீஸ் ஸ்டேஷனிலேயே நாங்களும் பணப்பெட்டியோடு தங்கி விடுகிறோம்”  என்று சொன்னேன்.


அதற்குள் ஓர் அவசர போன்கால் வரவே, ஒரு கான்ஸ்டபிள் பைக்கில் கிளம்பி வெளியே சென்றார். மீதமிருந்தது ஒரே ஒரு கான்ஸ்டபிள் தான். அவர் எங்களைப் பார்த்து முழிக்க, நாங்கள் அவரைப் பார்த்து அசடு வழிய, பேச ஏதுமின்றி, சுவரில் தொங்கிய கிரிமினல்களின் படங்களை பார்க்க,  இப்படியே அரை மணி நேரம் கழிந்தது.


அப்போது ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஓர் உயரதிகாரி வந்திறங்கினார். இரும்புப் பெட்டியோடு எங்களைப்  பார்த்ததும் கையும் களவுமாகப் பிடிபட்ட திருடர்களோ என்று நோட்டமிட்டது அவர் பார்வை. கான்ஸ்டபிள் விஷயத்தைத் தெளிவுபடுத்தியதும், எங்கள் ஐடி கார்டுகளைக் கேட்டார். பணம் கொண்டுபோவதற்கான ஆவணம் காட்டச் சொன்னார். நாங்கள் போகவேண்டிய சித்தியம்பர் பஜார் கிளைக்கு அவரே ஜீப்பை ஓட்டிவந்து எங்களைக்  கொண்டுவிட்டார்.  கடமை உணர்ச்சியோடு அவர் செயல்பட்டது எங்களை நெகிழவைத்தது.


தரைத் தளத்தில் அவர் எங்களை இறக்கிவிட்டார். அங்கொரு புதிய பிரச்சினை எங்களுக்குக்  காத்திருந்தது. எங்கள் வங்கி இருந்தது முதல் தளத்தில். ஆனால் அதற்குச் செல்லும் பாதையில் பெரிய இரும்பு ஷட்டர் உள்ளிருந்து மூடப்பட்டிருந்தது. உள்ளே இருப்பவர்களைத் தொடர்பு கொள்ள  வழியில்லை. (அப்போது அலைபேசிகள் வரவில்லை). ஒரே இருட்டு. 


இரண்டாவது தளத்தில் இருந்து சிறிது வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. எதோ ஒரு கூரியர் கம்பெனியோ என்னவோ அங்கு இருந்த ஞாபகம். வீட்டிற்குப் போவதானால் எப்படியும் அவர்கள் இறங்கிவந்துதானே ஆகவேண்டும்! ஊரடங்கு இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினேன்.


நம்பியது வீண்போகவில்லை. இரண்டுபேர் ஷட்டரைத் தூக்கிவிட்டு கீழே வந்தார்கள். அந்த இடைவெளியில் நாங்கள் உள்ளே நுழைந்துகொண்டோம். மறுபடியும் ஷட்டரைச் சாத்தினோம். எதிர்பார்த்தபடியே வங்கிக்கிளையில் பூட்டு தொங்கியது!


ஆனால், வங்கியின் மேலாளர் அப்போது அதே கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் குடியிருந்தது நினைவுக்குவரவே, பெட்டியோடு அங்கே போனோம். நல்ல வேளையாக அவர் இருந்தார். பெட்டியை உள்ளே வைத்துவிட்டு விஷயத்தைச் சொன்னோம். அவர் சிரித்துக்கொண்டே, “நல்ல காரியம் செய்தீர்கள்! இரவு இங்கேயே இருவரும் தங்கிவிடுங்கள்” என்று உணவளித்தார். மறுநாள் அதிகாரபூர்வமாகப் பணத்தை வங்கியில் ஒப்படைத்துவிட்டு அதன் பிறகே அறைக்குத் திரும்பித் தலை முழுகினேன். (அதாவது குளித்தேன்!)

 இதேபோன்று ஊரடங்கைச் சந்தித்த அனுபவங்கள் பல ஏற்பட்டன ஹைதராபாதில். இன்னும் பல சுவையான அனுபவங்களும் உண்டு. அதை பின்னொரு சமயம் பார்ப்போம். இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.


(அடுத்து வரப்போவது ‘புதுடில்லிப் புராணம்’)

- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 












10 கருத்துகள்:

  1. 80களின் சிகந்தி ராபாத், ஹைதராபாத் சூழலை மிக சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டு வந்தது அருமை. இன்னும் வேண்டும் என த் தோன்றும் போது, அடுததபடியாக புது தில்லி புராணம் என அறிவிப்பு ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் டில்லி ஓடிவந்து 'என்னைப் பற்றி எழுத ஏன் இந்தத் தாமதமோ' என்று கேட்கிறதே! டில்லியைப் பகைத்துக் கொள்ள முடியுமா?

      நீக்கு
  2. திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள்!

    பதிலளிநீக்கு
  3. அநுபவம் அருமை!👌😬

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு நிகழ்வையும் அருமையாக சிந்தித்து செயல்பட்டு உள்ளீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. திக் திக் திகில் நிறைந்த கதை போல சம்பவம் இருக்கு - அந்த சமயத்தில படபடப்பு கூடவே இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த சமயத்தில் நீங்கள் என்ன அவஸ்தை பட்டீர்களோ??

    பதிலளிநீக்கு
  7. இப்போது படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் , அந்த காலத்தில்,25 லட்சம் ரூபாயை வைத்து கொண்டு அதை பேங்கில் செலுத்தம் வரை நீங்கள் பட்ட அவஸ்தை,Tension...அப்பப்பா...எவனாவது , எந்த கும்பலாவது உங்களை மிரட்டி பணத்தை பறித்து சென்று இருந்தால் என்ன ஆவது ?

    பணப்பெட்டியுடன் நீங்கள் அலைந்தது ஒரு " திருவரங்கன் உலா."

    பதிலளிநீக்கு
  8. திகில் அனுபவங்கள்.. அப்போது 25 லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை...!

    பதிலளிநீக்கு