வியாழன், மே 12, 2022

அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கிறது?


அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கிறது?

(இன்று கிழமை புதன்-5)

அமெரிக்காவில் 30ஆவது நாள்

(விட்டுப் போன கட்டுரைகள்)

“அமெரிக்காவின் எதிர்காலத்தை நினைத்தால் ரொம்பக் கவலையாக இருக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்த இரு மேலாண்மை அறிஞர்கள்.
அமெரிக்கா இன்று வேகமாகத் திவால் ஆகிக் கொண்டிருக்கிறது. ட்ரில்லியன் கணக்கில் வாங்கியிருக்கும் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி தான், அமெரிக்க பட்ஜெட்டில் மிகப் பெரிய செலவினமாக உள்ளது. சமூகநலம் என்ற பெயரால் நாடு ஏழ்மையானதொரு தலைமுறையை உருவாக்கி விட்டிருக்கிறது. சுயமரியாதை என்பதே பெரும்பாலும் தொலைந்துபோய் விட்டது. நாட்டின் கடன்மதிப்பீடு கீழிறக்கப்பட்டு விட்டது. உலகில் யார் எங்கு சண்டையிட்டாலும் ஓடிப்போய்க் காவலுக்கு நிற்கிற போலீஸ்காரனின் நிலைமை தான் இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தாங்கள் ஏதோ ஒரு மாற்றத்தைக் கொணர்ந்துவிட்டதாக அமெரிக்கர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் ஆள் மாறினாலும் ஆட்சி மாறினாலும் நாடென்னவோ தவறான திசையில் மட்டுமே பயணித்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஆதாரசுருதியான சுதந்திரமானது, தவறான தலைவர்களின்  அக்கறையின்மையால் இழக்கப்படுமேயானால், தனியொரு அமெரிக்கனுக்கு வாய்த்திருக்கக்கூடிய அழகான வீடும் இளமையான மனைவியும், இனிய குழந்தைகளும் எந்தவகையில்  பொருட்படுத்தப்பட வேண்டியனவாகும்?
சரியான தலைவர்கள் என் தலைமுறையில் தோன்றாமல் போனால், என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழும்நாட்களில் இந்த நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும்?
இது தான் ஒவ்வொரு அமெரிக்கனின் முன்னுள்ள கேள்வி. அவனுக்கு வேண்டியன கார்களோ, விலை உயர்ந்த கைகடிகாரங்களோ, அல்ல. பணக்கார்களுக்கு அதிக வரி விதிப்பதோ, எதற்கெடுத்தாலும் புதுப்புது கட்டுப்பாடுகளை விதிப்பதோ அல்ல. அவனுக்குத் தேவை, தலைவர்கள். தலைமை தாங்கும் தகுதி உடைய சாதாரண மானிடர்கள்.
-இது அவ்விரு அறிஞர்களின் வேதனைக்குரல்.
******* 

ஒவ்வொரு தலைமுறையிலும் அமெரிக்காவில் “தலைவர்-மாற்றம்” (Leader-Shift) ஏற்பட்டு வந்திருக்கிறது என்கின்றனர், அவர்கள். (“தலைமை மாற்றம்” “Change in Leadership” என்பது வேறு.)

ஆரம்பத்தில் அரசர்களும் குறுநிலமன்னர்களும், சேனாதிபதிகளும் தலைவர்களாக இருந்தனர். இது மாறி, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் போன்ற சமுதாய முன்னோடிகள் தலைவர்களாயினர். இது முதலாவது “தலைவர்-மாற்றம்.”
1880-1920 காலகட்டத்தில் இவர்களுக்குப் பதில் ஆண்டிரூ கார்னிகி (Andrew Carnegie), மோர்கன் (Morgan), ராக்கஃபெல்லர் (Rockefeller) போன்ற மாபெரும் தொழிலதிபர்கள் (Titans of Industry)  வழிகாட்டிகளாயினர். இது இரண்டாவது “தலைவர்-மாற்றம்.”

1940-1970 காலகட்டத்தில் தொழிலதிபர்களிடமிருந்து மேலாளர்களுக்கு (Managers)  மாறியது, வழிகாட்டும் பணி. எட்வர்டு டெமிங் (Edward Deming), ஜாக் வெல்ஷ் (Jack Welsh), சாம் வால்ட்டன் (Sam Walton) போன்றோர் தோன்றினர். இது மூன்றாவது “தலைவர்-மாற்றம்.”
1980-1990 வாக்கில் மேலாளர்களிடமிருந்து வழிகாட்டும்  தலைவர்களிடம் (Leaders)  போய்ச் சேர்ந்தது தலைமை. இவர்களுக்கு பக்மின்ஸ்ட்டர் ஃபுல்லர் (Buckminster Fuller), எர்ள் நைட்டிங்கேல் (Earl Nightingale), ஸ்டீபன் கோவே (Stephen Covey) போன்ற ஞானிகள் பக்கபலமாக இருந்தனர். இது நான்காவது “தலைவர்-மாற்றம்.”

இதே ரீதியில் பார்ப்போமானால், இப்போதைய நம் தலைமுறையில் அடுத்த “தலைவர்-மாற்றம்” நிகழ்ந்தாக வேண்டும். அப்படி நிகழ்வதாக இருந்தால் அமெரிக்காவின் புதிய “தலைவர்”களாக மாறப் போவது எவ்வகையினர்?
-இது தான் அவ்விரு மேலாண்மை அறிஞர்கள் நம் முன் வைக்கும் கேள்வி.

அந்த இருவர் யாரென்றால்(1) ஆரின் உட்வர்டு (Orrin Woodward), (2) ஆலிவர் டிமில் (Oliver DeMille). தமது “லீடர்ஷ்ஃப்ட்” (LEADERSHIFT) என்ற புதிய நூலில் இக்கேள்வியை எழுப்பி அதற்கு விடை காணவும் முயன்றுள்ளனர் அவர்கள்.
அமெரிக்காவில் பல கம்பெனிகளுக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் இவர்கள். தங்கள் வழிகாட்டுதலில் அக்கம்பெனிகள் நஷ்டத்திலிருந்து லாபத்திற்கும், லாபத்திலிருந்து அதிக லாபத்திற்கும் மேல்நகர்ந்து செல்வதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். தங்கள் அறிவுத்திறனால் தங்கள் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதகத்தை மாற்றிப் புதிய தலைமை உருவாக வழிகாட்ட முடியுமா என்று ஆலோசிக்கும் விதமாக இப்புத்தகத்தை எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
****
குறிப்பிட்ட ஐந்து விதிகளைக் கடைப்பிடிக்காத கம்பெனிகளுக்கு வியாபாரத்திலும் லாபத்திலும் சரிவு ஏற்படுவதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அவ்விதிகளை “வீழ்ச்சியின் விதிகள் ஐந்து” (FIVE LAWS OF DECLINE) என்று பெயரிடுகிறார்கள். அவ்விதிகளாவன:

வீழ்ச்சியின் முதல் விதி (STURGEON’S LAW):
இது தலைவர்களை அவர்களது மயக்க நிலையிலிருந்து எழுப்புவதாகும்.
இன்றுள்ள நமது ஜனநாயகத்தில் ‘தலைவர்கள்’ பெரும்பாலும் அவர்களது தலைமைப் பண்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பெரும்பான்மையான மக்களுக்கு ‘நல்லவர்களாக’ இருப்பவர் என்று கருதப்படுபவர்  யாரோ அவரே தலைவராகக் கொள்ளப்பட்டிருப்பார். இதன் அடுத்த கட்டம் என்னவென்றால், அப்படித் தலைவரானவர், தான் உண்மையிலேயே தலைமைப் பண்புகளைக் கொண்டவர் போலும் என்று தன்னைப் பெருமிதமாகக் கருதிக் கொண்டு வழிகாட்ட ஆரம்பித்துவிடுவது தான். அது மட்டுமன்று, தான் காட்டும் வழி தான் சிறந்தது என்று நம்பிவிடுவார். எதிர்ப்பவரைப் பொருட்டாகவே எண்ணமாட்டார். இத்தகைய சுய பெருமிதம் அவரை மயக்கநிலையில் ஆழ்த்திவிடுகிறது. அந்த மயக்க நிலையை உடைத்தெறிந்து யதார்த்த நிலைக்குக் கொண்டுவருவது தான் இந்த முதல் விதியின் நோக்கம்.

இந்த ‘ஸ்டர்கன் விதி’யும் இதைத்தான் சொல்கிறது: “எந்த நிறுவனத்திலும் 10 சதம் பேர் தான் உண்மையிலேயே உழைப்பவர்கள், சிந்தனையாளர்கள். மற்ற 90 சதம், வெறும் தண்டச் சோறு தான்.”
நாடு பெரும்பாலும் இந்த 90 சதம் தண்டச்சோறுகளிலிருந்து தான் தனது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது, இது மாற வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள். இதற்குத் தேவை, இந்த 10 சதம் பேரை எப்படிப் பிரித்தறிவது என்ற சூட்சுமம்.
வீழ்ச்சியின் இரண்டாவது விதி (FREDERIC BASTIAT’S LAW):

மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமானால் இடையறாது உழைத்து (Labour) அதன் பயனைத் தொகுத்து அனுபவிக்க வேண்டும். இதைப் பொருளீட்டலின் ஆரம்பம் (Origin of Property) எனலாம்.
ஆனால் மனிதன் எப்போதுமே குறைவாக உழைத்து அதிகமான பலனை அனுபவிக்கவே முயலுவான். இதைச் சுரண்டலின் ஆரம்பம் (Origin of Plunder) எனலாம்.

இச்சுரண்டலைத் தடுத்து நிறுத்துவதே இரண்டாவது விதியின் நோக்கம். அது எப்போது சாத்தியமாகும்? சுரண்டல் என்பது உழைப்பை விடவும் வலி தரக்கூடியதாகும் போது (When Plunder is more painful than Labour). நம் தலைவர்கள் இந்த வலியை உணரும்படி நாம் செய்யவேண்டும் என்கிறார் ஃப்ரடரிக் பாஸ்ட்டியாட்.

வீழ்ச்சியின் மூன்றாவது விதி (GRESHAM’S LAW):
க்ரெஷாம் விதியானது, பணம் பற்றியது. “அரசாங்கம், இரண்டு நாணயங்களுள் (currency) ஒன்றை ஆதரித்தும் மற்றொன்றை விலக்கியும் நடவடிக்கை எடுக்குமானால்,  எது மோசமான நாணயமோ அது, நல்ல நாணயத்தை வீழ்த்தி ஒடுக்கிவிடும்”  என்பது இவ்விதி.

இது நாணயங்களுக்கு மட்டும் பொருந்தும் விதியல்ல. அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். எந்தக் கொள்கையை எடுத்துக் கொண்டாலும், அரசோ அல்லது தலைமையோ தீவிரமாக எந்த ஒன்றை ஆதரிக்கிறதோ அது, நாளடைவில் மக்களுக்குத் தீங்கு பயக்கும் கொள்கையாக மாறி விடுகிறது. மாற்றுக்கருத்துக்களில் உள்ள நல்லவை மக்களைச் சென்றடையாவண்ணம் மறைக்கப்பட்டுவிடுகின்றன.  ஆபத்து என்னவென்றால், தீய கருத்தையே தமக்கு நன்மை பயக்கும் கருத்தாக மக்கள் நம்பிவிடுகின்ற மனப்பாங்கு உருவாக்கப்பட்டுவிடுவது.
எளிமையாகச் சொல்வதென்றால், வேலை செய்யாமல், மேலிடத்தைத் துதிபாடுவதன் மூலம் ஒருவன் முன்னுக்கு வருவதை ஒரு தலைமை அனுமதிக்குமானால், நாளடைவில் அப்படித் துதிபாடுவோரே அதிக எண்ணிக்கையில் உருவாகிவிடுவர். வேலை செய்ய ஆள் இருக்காது. இத்தகைய நிலைமை தான் இன்று அமெரிக்காவில் நிலவுகிறது என்று கூறுகிறார்கள் ஆசிரியர்கள்.

வீழ்ச்சியின் நான்காவது விதி (THE LAW OF DIMINISHING RETURNS):
இது பொருளாதாரம் படித்த அனைவருக்குமே தெரிந்த விதி தான். உதாரணமாக, சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால், ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கிறோம். அப்படியும் குறைவு என்றால் இன்னொரு சிட்டிகையைச் சேர்க்கிறோம். அப்படிச் சேர்த்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? எவ்வளவு பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், மற்றவகையில் எவ்வளவு செம்மையாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சாம்பார் யாருக்கும் பயனற்றதாகிவிடும் அல்லவா? தன்னைப் போல் பல மடங்கு பெரிய அளவுள்ள திரவத்தைப் பயனற்றதாக்கும் திறன் அந்தக் கடைசிச் சிட்டிகை உப்புக்கு இருக்கிறதல்லவா?

அந்தக் ‘கடைசிச் சிட்டிகை உப்பு’ எதுவென்று கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருப்பவன் தான் தலைவன் என்பது ஆசிரியர்களின் கருத்து.
வீழ்ச்சியின் ஐந்தாவது விதி (THE LAW OF INERTIA):

இயற்பியல்/கணக்கியல் படித்த அனைவருக்கும் தெரிந்த விதி இது. எந்த ஒரு பொருளும் தான் இருக்கும் நிலையிலேயே இருக்கும். எதுவரை? வேறொரு ஆற்றல் அப்பொருளைத் தாக்கி அதனை நகர்விக்கும் வரை.

சரியான தலைவன் என்றால் அவன் என்ன செய்யவேண்டும்?  தான் இயங்காமல் அசைவற்று நின்றுவிடும் நிலைமை வந்துவிடாமல் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எப்போதும் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி விழிப்பான தலைமையே அமெரிக்காவின் இன்றைய தேவை என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
****
“என் உணவைப் பறித்துக்கொண்டது யார்?” (“WHO MOVED MY CHEESE?”) என்ற நூலை உங்களில் பலர் படித்திருக்கக்கூடும். தொழில்/வணிக நிறுவனங்கள், போதுமான விழிப்புணர்வோடு இல்லை என்றால், அவர்களது வாடிக்கையாளர்கள் நழுவிப் போய், போட்டியாளர்களிடம் சேர்ந்துவிடுவார்கள் என்னும் மேலாண்மைத் தத்துவத்தைக் கதை மாதிரி கூறும் சிறிய ஆனால் புகழ் பெற்ற புத்தகம் அது. அதைப் பின்பற்றி அதே மாதிரியில் கடந்த பதினைந்தாண்டுகளில் எவ்வளவோ மேலாண்மைப் புத்தகங்கள் வந்துவிட்டன.

இப்போது நம் கையில் இருக்கும் “LEADERSHIFT” டும் அதே போல் கதை வடிவில் மேலாண்மைத் தத்துவத்தைக் கூறும் நூலாகும். ஆனால் இது வணிக நிறுவனங்களையன்றி அரசியலை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளதாகும். அவ்வகையில் இது முதல் நூலாகவும் இருக்கலாம். எளிய ஆங்கிலத்தில் சுவையாக எழுதப்பட்டுள்ளது. 
‘LEADERSHIFT’ : A call for Americans to finally stand up and lead: by Orrin Woodward & Oliver DeMille (2013) Business Plus Publication, New York. $25.99

(2013இல் நான் எழுதிய கட்டுரையின் சுருக்கிய மறுபதிவு) 

-இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து

24 கருத்துகள்:

  1. பெயரில்லா12 மே, 2022 அன்று AM 9:33

    பைடனுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா! மலைக்க வைக்கிறது உங்கள் அரசியல் அறிவுத்திறன். சும்மா புட்டு புட்டு வைத்து இருக்கிறீர்கள். எனக்கெல்லாம் இதெல்லாம் ஒன்றும் தெரியாது. முன்றைய அதிபர்கள் யார் யார் என்பது எல்லோரையும் போல எனக்கும் தெரியும்.

    இதுமாதிரி விஷயங்களைப் படிக்க பொறுமையும் நேரமும் வேண்டும். அசத்திவிட்டீர்கள்.

    ஆனால் இன்று ஒரு நகைச்சுவை கூட இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகள் எல்லாம் அந்த நூலில் இருந்து எடுத்தவை. என் பணி அவற்றைத் தமிழில் தந்தது மட்டுமே. தங்கள் அன்புக்கு நன்றி!

      நீக்கு
  3. பெயரில்லா12 மே, 2022 அன்று AM 10:25

    Very relevent and applicable to present
    political/ economic situation in Srilanka.
    USA ,of course is worrisome!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது 2013 இல் எழுதிய பதிவு. இன்று ஸ்ரீலங்காவுக்கும் பொருந்துகிறது. ஆச்சரியத்தை விட வருத்தமே உண்டாகிறது.

      நீக்கு
  4. பெயரில்லா12 மே, 2022 அன்று AM 10:50

    You are the right candidate for American President.

    பதிலளிநீக்கு
  5. அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! இந்த ஐந்து விதிகள் பல நாடுகளில் இன்றைய நிலைமையை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.

      நீக்கு
  6. தங்களது அரசியல் அலசல் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகள் எல்லாம் அந்த நூலில் இருந்து எடுத்தவை. என் பணி அவற்றைத் தமிழில் தந்தது மட்டுமே. தங்கள் அன்புக்கு நன்றி!

      நீக்கு
  7. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் பேசப்படுவது இதுதான் இல்லையா நம் நாடு உட்பட! அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதிகள் 2, 3 தமிழ்நாட்டுக்கு மிகவும் பொருந்துவதாக ஓர் அறிஞர் தெரிவித்தார்.

      நீக்கு
  8. ஒருநாள் எல்லா நாடுகளும் ஒரு திண்ணையில் உட்கார்ந்து உன்னிடம் எவ்வளவு இருக்கு, என்னிடம் இவ்வளவு இருக்கு என்று பேசி, சமமாகப் பிரித்துக் கொண்டு பழைய கடன்களை மறந்துடுவோம் என்று சொல்லும் நாள் வரலாம்!

    பதிலளிநீக்கு
  9. மூன்று இங்கு அதிகம் - அதுவும் சிலர் (இனம்) மட்டுமே...

    அப்புறம் இங்கு அதிகம் உள்ளது - மத வெறி...!

    பதிலளிநீக்கு
  10. இறை - இறைவன் கணக்கியலை செய்து பாருங்கள்... தாங்கள் தொகுத்தவை ஒரு சிறு துளி என்பதை உணர்வீர்கள்...! நன்றி...

    பதிலளிநீக்கு
  11. நேற்று நான்கு முறை முயற்சித்து விட்டேன்.  பப்ளிஷ் கொடுத்த உடனே உட்காருகிறது.  ரெஃப்ரஷ் செய்து உறுதி படுத்திக்க கொள்ளும்போது காணாமல் போகிறது.  இன்றாவது நிலைக்கிறதா என்று பார்க்கிறேன்!

    அட...  வந்து பார்த்தால் நேற்றைய கமெண்ட் இன்று கண்ணில் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய blogger.com இல் 'கமெண்ட்ஸ்' பகுதியில் போனால் உங்கள் கமெண்ட் எனது ஒப்புதலுக்காகக் காத்திருந்தது! சரியென்று தட்டியதும் உரிய இடத்தில் வந்து விழுந்தது! மற்றவர்கள் கமெண்ட் எல்லாம் எனது ஒப்புதல் இன்றியே காட்சிக்கு வரும்போது, உங்களதை மட்டும் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்?

      நீக்கு
  12. பணக்கார அமெரிக்கா என்று சொல்லப்படும் அங்கும் பிரச்சனையா? நல்ல தகவல்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. அனைத்து நாடுகளிலும் அரசியல்வாதிகள் தான் பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார்கள்… விரிவான அலசல்.

    பதிலளிநீக்கு
  14. மிக மிக மிக அருமையான பதிவு! தமிழ்ப் பதிவுலகமே வெறிச்சோடிப் போயிருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும் இவ்வளவு கனமான, பொருண்மை மிக்க ஒரு பதிவைப் பார்க்க முடிவது மிகுந்த மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு