செவ்வாய், ஆகஸ்ட் 02, 2022

மணிகர்ணிகா (9) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

 மணிகர்ணிகா (9) இன்று   வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  106  வது நாள்:  26 -7-2022)

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (8) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

         

ஞாயிற்றுக்கிழமைகளில் மயூரி விழித்தெழுவதற்கு ஏழுமணியாகிவிடும். காம்பவுண்டு கதவை இரவில் பூட்டிவைப்பதால் காலிங்பெல்லை யாராவது அழுத்தினாலும் அவளுக்குக் காதில் விழாது. அப்படித்தான் அன்று திலகா வந்து வாசலில் நின்று ஏழெட்டு நிமிடங்கள் கழிந்தபிறகே மயூரி கதவைத் திறந்தாள். “ஸாரிடி” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள்.


அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் -
இதற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை! 

திலகா வந்து நின்ற கோலத்தைப் பார்த்தால் உடம்பு சரியில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. இரவில் தூக்கமில்லை போலும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வழக்கமான அசௌகரியங்கள்.


அவளை உட்காரச் சொல்லிவிட்டு அவசரம் அவசரமாகப் பல் தேய்த்து, காபி தயாரித்தாள் மயூரி.


“ரொம்பத் தலை சுற்றுது மயூரி! காபி வேண்டாம்” என்ற திலகா, “ப்ளீஸ், எனக்காக உடனே பைக் எடுத்துக்கொண்டு வருகிறாயா? டாக்டரம்மாவைப் பார்த்துவிட்டு வரலாம்?” என்றாள்.


இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட மயூரி,  “உண்மையைச் சொல்லுடி! உடம்புதான் சரியில்லையா, அல்லது  உன் கணவர் ஏதாவது புதுப் பிரச்சினையில் மாட்டிக்கொண்டாரா? பணப் பிரச்சினையா?” என்றாள். அவளை ஆதரவாகத் தொட்டாள்.  


“அய்யய்யோ அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ கொடுத்த ஒரு லட்சத்தில் முக்கியக் கடனெல்லாம் பைசல் ஆகிவிட்டது. நிஜமாகவே டாக்டரம்மாவைத்தான் பார்க்கவேண்டும். சீக்கிரம் வருகிறாயா? பத்து நிமிடம் போதுமா கிளம்புவதற்கு?”


தன்  என்பீல்டு பைக்கை எளிதாக வெளியில் எடுத்த மயூரி, இரண்டு ஹெல்மெட்களையும் எடுத்துக்கொண்டாள். தனக்கு ஒன்றும் அவளுக்கு ஒன்றும். “பத்திரமாக உட்கார்ந்துகொள்” என்று திலகாவை எச்சரித்தவள், வழக்கத்துக்கு மாறாகக் குறைந்த வேகத்தில் வண்டியைச் செலுத்தினாள். கோட்டூர்புரத்தில் டாக்டர் வசந்தாவின் கிளினிக்கை அடைந்தபோது அவளது டோக்கன் எண் ஐந்து என்றது. 


டாக்டர் வசந்தாவுக்கு  சுமார் ஐம்பது வயதிருக்கும். அவருடைய உற்சாகமிக்க முகத்தையும், உடலசைவுகளின் சுறுசுறுப்பையும் பார்த்தாலே நோயாளிகளுக்குப் பாதி நோய் நீங்கிவிடும் என்பார்கள். அது உண்மைதான் என்று திலகாவுக்குப் புரிந்தது. அவளுக்காக அரைமணிநேரம் ஒதுக்கி விவரமாகக் கேட்ட வசந்தா, சில சோதனைகளுக்குப் பிறகு, “எல்லாம் நலமாக இருக்கிறது. உங்களுக்கு மனதில்தான் ஏதோ பிரச்சினை இருக்கவேண்டும். அதை நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசினாலே போதும். மூன்று நாளைக்கு மருந்து எழுதித்தருகிறேன். அதன் பிறகு தேவையிருந்தால் போன்செய்து விட்டு வாருங்கள்” என்றார் டாக்டர்.


திலகாவை விடவும் மயூரிக்கு மிகவும் திருப்தி. இந்தக் குழந்தைதான் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். எனவே டாக்டரின் உறுதிமொழி அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அந்த மகிழ்ச்சியில் பைக்கைக் கிளப்பிய மயூரியும் சரி, பின்னால் அமர்ந்த திலகாவும் சரி, ஹெல்மெட்டை எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டார்களே  அன்றி, அதன் பட்டையைக் கழுத்தோடு ‘லாக்’ செய்ய முற்படவில்லை.


டாக்டரின் கிளினிக் எதிரே ஒரு அரசியல்வாதியின் வீடு. அதற்கு அடுத்தாற்போல் ஓர் சிறு ஹோட்டல் இருந்தது. அங்கு டிபன் சாப்பிடலாம் என்று திலகா சொன்னதும் சட்டென்று பிரேக் அடிக்க முயன்றாள் மயூரி. அதே சமயம் மிக அருகாமையில் அதே திசையில் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஒன்று அவளுடைய பைக்கை உராய்ந்து தள்ளியது. இருவரும் பறந்துபோய் பிளாட்பாரத்து சுவரில் முட்டிக்கொள்ள, ஹெல்மெட்டுகள் கழன்று தொலை தூரத்தில் விழுந்தன. தலையில் காயத்துடன் திலகா ‘அம்மா அம்மா’ என்று கதறினாள். அவளுக்கு எதிர்பக்கம் மயூரியின் தலை மண்ணில் பட்டுக் கண்களில் புழுதி ஏறி, பார்வை இருண்டுவிட்டது. அப்படியும் அவள் கத்தினாள், “ப்ளீஸ் ஹெல்ப் ! ப்ளீஸ் ஹெல்ப்! அவளை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கள்!” என்று.


அரசியல்வாதியின் வீட்டுக்குக் காவலிருந்த ஒரு போலீஸ் அதிகாரி ஓடிவந்து ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு  அனுப்பிவைத்தார். மோட்டார்பைக்கிற்கு அதிகச் சேதமில்லை. அதை அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு நகர்த்திக்கொண்டுபோய் ஒப்படைத்தார். 


அதற்கு முன், விபத்து நடந்த இடத்தில் விழுந்திருந்த இரு பெண்களின் கைப்பைகளையும் பத்திரமாக எடுத்துக்கொண்டார். ஒரு பை மட்டும் ‘ஜிப்’ விரிந்து உள்ளிருந்த ரூபாய்க் கட்டு சற்று தூரத்தில் கிடந்ததைக் கண்டார். ரப்பர் வளையத்தில் சுற்றப்பட்ட ஐந்நூறு ரூபாய்க் கட்டு. எதற்கும் இருக்கட்டுமே என்று எண்ணினார். 40 நோட்டுகள் இருந்தன. அதாவது 20,000 ரூபாய்! 


இரண்டு பேரின் மொபைல்களும்  பத்திரமாக இருந்தன. ஒன்றில் எமர்ஜென்சி நம்பர் என்ற பெயரில் இரண்டு நம்பர்கள் இருந்தன. முதல் நம்பரை அழைத்தார். “என்ன திலகா, என்ன விஷயம்? டாக்டர் என்ன சொன்னார்?” என்று கிரீஷின் குரல் கேட்டது. ஆகவே அது திலகா என்பவரின் போன் என்று தெரிந்தது. மேற்கொண்டு பேசியதில் விபத்தில் சிக்கியவர்களின் அடையாளம் தெரிந்துவிட்டதால் அவர்களுடைய எல்லையான அடையாறு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொன்னார் அந்த அதிகாரி. சிறிது நேரத்தில் ஏசிபி கருணாமூர்த்தி வந்து எல்லாப் பொருட்களையும் பெற்றுக்கொண்டார். கிரீஷை நேராக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.            


தண்ணீர் லாரி அந்த அரசியல்வாதியின் நண்பருக்குச் சொந்தமானது. அது அலட்டிக்கொள்ளாமல் தன் பயணத்தைத்  தொடர்ந்தது.

****


ஆஸ்பத்திரி வாசலில் வங்கி நண்பர்கள் திரண்டுவிட்டனர். தங்கள் வாட்ஸ்அப் குழுவில் விபத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதி, இரத்தம் தர விரும்புவோர் உடனே வரவும் என்று கேட்டுக்கொண்டதால் மேலும் ஒரு பத்துபேர் அங்கு வந்திருந்தனர்.


கிரீஷை எதிர்பார்த்து கருணாவும் காத்திருந்தார். அதற்குள் அவசரச் சிகிச்சை பிரிவில் சென்று விசாரித்தார். மயூரிக்குச் சிறிய சிராய்ப்புகள்தான் என்றும், திலகாவுக்கு மட்டும் காயங்கள் ஆற இரண்டு மூன்று தினங்கள் ஆகலாம் என்றும் கவலைப்படும்படி பெரிய ஆபத்து ஏதுமில்லை என்றும் டாக்டர் தெரிவித்தார். 


மயூரியிடம் போலீஸ் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பிறகு அன்றே டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று முடிவானது. திலகா மட்டும் மூன்று நாள் சிகிச்சையில் இருக்கவேண்டும் என்றும், பெண்கள்நல  மருத்துவர்தான் அவளை டிஸ்சார்ஜ் செய்வதுபற்றி முடிவெடுக்கவேண்டும் என்றும் தெரிந்தது. அதற்குள் போலீஸ் தங்களுக்கான வாக்குமூலத்தை அவளிடம் பெற்றுக்கொள்ளவேண்டும். 


கிரீஷ் மிகவும் துயரம்தோய்ந்த முகத்தவனாக அங்குவந்து சேர்ந்தான். மயூரியின் கணவன் அலுவலக விஷயமாக வெளியூரில் இருந்ததால் அவனுக்குத் தகவல் சொன்னான். பிறகு மயூரியே தன் கணவனிடம் பேசினாள். 


ஏசிபி கருணாவுக்கு இப்போது இன்னொரு தலைவலியும் சேர்ந்துகொண்டது. இந்தப் பெண்களின் மீது விபத்தை உண்டாக்கிய தண்ணீர் லாரி ஆளும்கட்சி அரசியல்வாதிக்குச் சொந்தமானது. எனவே இவர்களிடம் வாக்குமூலம் வாங்கினால் அந்த லாரி உரிமையாளர் மீது கேஸ் பதிந்தாகவேண்டும். அதை போலீஸிலுள்ள மேலதிகாரிகளே அனுமதிக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கான இடத்தில் இருந்து அழுத்தம் வரும். ஆகவே வாக்குமூலம் பெறுவதுபோல நடித்து ஏதாவது எழுதி வாங்கவேண்டியதுதான். மறைமுகமாக இந்தப் பெண்கள் மீதே குற்றம் இருப்பதுபோல  எழுதிவாங்கிவிட்டால் போயிற்று. 


அவர் இப்படி எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவருடைய மேலதிகாரியிடம் இருந்து  போன் வந்தது. “லாரி ஓனர் நமக்கு வேண்டியவர். ஆகவே கேஸ் எதுவும் பதியவேண்டாம். ரொம்ப முரண்டு பிடித்தால் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ கொடுத்து முடியுங்கள். அதற்குமேல் போகவேண்டாம்” என்று உத்தரவு வந்தது.          

 

சண்முகத்தின் வங்கியிலிருந்து இரண்டு பெண்கள் வந்து செக் புத்தகம், பாஸ் புத்தகம் கொடுத்ததாக வினோதா மேடம்  சொன்னது கருணாவுக்கு நினைவு வந்தது. அவர் இழந்த தொகை 20,000 ரூபாய் என்பதும் இப்போது திலகாவின் கைப்பையில் இருப்பதும் அதே 20,000 என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதா என்று அவருடைய போலீஸ் மூளை சிந்தித்தது. அப்படி இல்லாவிட்டாலும் இருப்பதுபோல ஜோடிக்க அவரால் முடியும். அதன்பிறகு லாரி ஓனரை வழக்கில் கொண்டுவராமல் காப்பாற்றிவிடலாம்.   


அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுதாக மீளாமல் இருந்த மயூரியிடம் தனக்கு வேண்டிய வகையில் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கொண்டார் கருணா. அவளை டிஸ்சார்ஜ் செய்து அதற்கான டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்டும் பெற்றுக்கொண்டார். மயூரியை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அடுத்தநாள் காலை தன்னை போலீஸ் ஸ்டேஷனில் சந்திக்குமாறு கிரீஷிடம் கூறினார் கருணா. 


*** 

கிரீஷ் மிகவும் பயத்துடனேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தான். எதற்காக பயம் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லையே!


“பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டலாம், என்பீல்டு ஓட்டலாமா சார்? எவ்வளவு வெயிட்டான வண்டி அது! அந்தப் பெண் அந்த வண்டியை ஓட்டி அனுபவப்பட்டவளாக இருக்கலாம், ஆனால் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து போகலாமா? ஏன், ஆட்டோவிலோ, டாக்சியிலோ போக உங்களிடம் காசில்லையா? இப்பொழுது கஷ்டம் யாருக்கு, சொல்லுங்கள்” என்று அதட்டினார் கருணா. கிரீஷ் மௌனமாக இருந்தான்.


“உங்கள் மனைவியை நீங்கள் அல்லவா டாக்டரிடம் கூட்டிப் போயிருக்கவேண்டும்? நீங்கள் போகாததற்கு என்ன காரணம்?”  

அவன் மௌனத்தைப் பார்த்து தைரியம் அடைந்தவராக மேலும் அதட்டினார்.


கிரீஷ் உடைந்துபோனான். தான் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதால் தனக்கும் மனைவிக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்படுவதாகவும் முதல்நாள் இரவு நண்பன் ஒருவனின் வீட்டில் தங்கிவிட்டதாகவும் கூறினான். “அதனால்தான் மயூரியுடன் அவள் போயிருக்கிறாள்” என்றான். 


கருணா எதிர்பார்த்த ‘லீட்’ அவருக்கு கிடைத்துவிட்டது. வேலை வெட்டி இல்லாதவன் மனைவியிடம் 20,000 ரூபாய் எப்படி வந்தது? 


அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை கிரீஷால். “அது வந்து…” என்று இழுத்தான். அது போதாதா கருணாவுக்கு?


“கெட் அப் மேன்!” என்று கத்தினார். அதிர்ந்துபோய் எழுந்து நின்றான் கிரீஷ். “அந்தப் பணம் எப்படி உங்களுக்கு வந்தது என்று எனக்குத் தெரியும். வினோதா அம்மாளின் செக்கைத் திருடியது நீங்கள் தானே?”


“அய்யய்யோ இல்லவே இல்லை சார்! இதுவரை யாருடைய பணத்துக்கோ சொத்துக்கோ நான் ஆசைப்பட்டதில்லை சார் ! தொழிலில் பதினைந்து லட்சம் நஷ்டம் ஆனதில் என்மீது எனக்கே வெறுப்பாக இருக்கிறது. வினோதா அம்மாள் யார் என்று எனக்குத் தெரியாது சார்!”


உள்ளேயிருந்த போலீஸ்காரர் ஒருவரை அழைத்தார் கருணா. “ராஜேஷ், இந்த ஆசாமியிடம் உண்மையை வரவழைக்கவேண்டும். உன் ரூமுக்குக் கொண்டுபோகிறாயா?” என்றார்.


அவ்வளவுதான் கிரீஷின் கண்களில் தண்ணீர் ஆறாகப் பெருக ஆரம்பித்துவிட்டது. “வேண்டாம் சார்! என்னை அடிக்காதீர்கள். உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அந்தப் பணம் 20,000 ஒரு பெண்மணியிடம் இரண்டு வட்டிக்குக் கடன் வாங்கியது” என்று கதறினான். 


அவள் பெயர் பரமேஸ்வரி என்றும், ரெடிமேட் ஆடைகளைத்  தயாரிக்கும் கம்பெனியில் தையல்காரியாக இருக்கிறாள் என்றும், அவளைத் தன் மனைவியின் வங்கியில் அடிக்கடி பார்த்திருப்பதாகவும், இதற்கு முன்பும் அவளிடம் கடன் வாங்கித் திருப்பிக் கொடுத்திருப்பதாகவும் கூறினான் கிரீஷ்.


அந்த விவரங்களை நேரில்போய்ச் சரிபார்த்துவருமாறு ராஜேஷை அனுப்பினார் கருணா. அரைமணி நேரத்தில் அவர் திரும்பிவந்தார். கிரீஷ் சொன்னது எல்லாம் உண்மை என்று தெரிந்தது. அந்தப் பெண்மணி, பரமேஸ்வரி, வட்டிக்குப் பணம் கொடுப்பவள்தான் என்று அவள் கம்பெனியில் பலரும் கூறியதாக அவர் சொன்னார்.


வினோதா அம்மாளிடமிருந்து எழுத்துமூலமான புகார் இன்னும் வரவில்லை. எனவே கருணாவுக்கு அந்த விஷயத்தில் இருந்த ஈடுபாடு போய்விட்டது. 


அடுத்து மயூரியை விசாரிக்கவேண்டும்.  மோட்டார்பைக்கின் ஆர்சி புக், இன்சூரன்ஸ் இரண்டையும், மயூரியின் டிரைவிங் லைசென்ஸையும் எடுத்துக்கொண்டு இன்னும் ஒருமணி நேரத்தில் ஸ்டேஷனுக்கு வருமாறு அவரே அவளுக்கு போன்செய்தார்.

**** 

மயூரியுடன் அவளது வக்கீலும் வந்தார். விபத்திலிருந்து மீண்ட அதிர்ச்சி இன்னும் நீங்காததாலும்,  கணவர் ஊரில் இல்லாததாலும்,  சண்முகத்தின் ஆலோசனையின்பேரில் வக்கீலைத் துணையாக அழைத்துவந்தாள்.


ஆர் சி புத்தகம் சரியாக இருந்தது. ஆனால் இன்சூரன்ஸ்?  அது காலாவதியாகி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. டிரைவிங் லைசென்ஸ்? பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்த லைசென்ஸ். அதுவும் ஒருமாதம் முன்பு காலாவதியாகி இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக எல்லா லைசென்ஸ்களுக்கும் புதுப்பிக்கும் காலத்தை மூன்று மாத அளவுக்கு நீட்டித்திருந்ததால் அது குற்றமில்லை. ஆனால் இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டியை எடுத்தது மாபெரும் தவறு. அதிலும் பில்லியனில் ஒரு பெண்ணை உட்காரவைத்து, விபத்தில் சிக்கி, அவள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போனது மயூரியைப் பெரிய ஆபத்தில் கொண்டுபோகப் போகிறது என்று கருணாவுக்குப் புரிந்தது. அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். லாரி ஓனரைக் காப்பாற்றிவிடலாம். ரொம்ப சுலபம்.


மயூரியைப் பார்த்து கருணா சொன்னார்: “மயூரி, இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டியதற்காக உங்களையும், இன்சூரன்ஸ் இல்லாத வண்டியை ஓட்ட உங்களை அனுமதித்ததற்காக உங்கள் கணவரையும் நான் கைது செய்யவேண்டியவனாகிறேன். உங்கள் வக்கீலும் இங்கு தானே இருக்கிறார்! அவரையும் கேட்டுக்கொள்ளுங்கள். நான் சொல்வதில் தவறு இருக்கிறதா என்று!”      


பிறகு கிரீஷைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார். ஏதோ பேசினார். அவன் உடனே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.  திலகாவை அவசரமாக டிஸ்சார்ஜ் செய்துகொண்டு ‘அப்போல்லோ’ மருத்துவமனையில் சேர்த்தான். மயூரிக்கு போன் செய்தான்: “என் தலைவிதி இப்படியா ஆகவேண்டும்? திலகா குணமாவதற்கு இன்னும் ஆறுமாதம் ஆகுமாம். குழந்தையின் நிலைமை என்ன ஆகுமென்று சொல்ல முடியாதாம். ஆஸ்பத்திரிக்கு எப்படியும் பதினைந்து லட்சம் ஆகும் என்கிறார்கள். நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. இதற்கு காரணம் நீங்கள்தான். ஆகவே இந்த நிலைமையில் என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள்தான் கூறவேண்டும்!”


மயூரி விக்கித்து நின்றாள். அவளுடைய வக்கீலும்தான்.


(தொடரும்)

   -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 

       

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

8 கருத்துகள்:

 1. யம்மாடியோ கதைக்குள் எத்தனை முடிச்சுகள்!!!!!!! ஒரு வேளை இதற்கும் அந்த மணிகர்ணிகா உதவுவாளோ!!! இது ஒரு தனிக்கதை போலப்போகிறதே அதனால் மணிகர்ணிகா இதன் அடுத்த சீனுக்குள் வருவாளோ என்று!!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. கருணாவைப் போன்ற மனிதர்கள் விஷ வித்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நானும் இதைச் சொல்லி எழுதிய கருத்து போகவே இல்லை....கருணா எப்படி விளையாடுகிறார்...ர் எதுக்கு ன் என்றே சொல்லலாம்..

   கீதா

   நீக்கு
 3. பதில்கள்
  1. பழசையெல்லாம் ஃப்ளாஷ்பேக் ஆக மனதிற்குள் இப்போதுதான் கொண்டுவருகிறாளாம். ஒருநாள் பொறுக்கச் சொல்கிறாள்!

   நீக்கு
 4. கதைக்குள் கதைக்குள் கதை.
  அம்மாடியோ..

  பதிலளிநீக்கு
 5. வேலியில் போகிற ஒணானை தூக்கி மடியில் கட்டிக்கொண்டது போல ஆகி விட்டதே, மயூரின் கதி.

  பதிலளிநீக்கு