ஆவின் பாலும் ஆரியகவுடர் சாலை அங்காடியும்
(இன்று கிழமை திங்கள்-2)
அமெரிக்காவில் 14ஆவது நாள்
(இப்படியும் மனிதர்கள்)
(இன்று முழுவதும் பேரனோடு விளையாடிக்கொண்டு இருந்ததில் புதிய பதிவு எழுதமுடியவில்லை. எனவே அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' இதழில் வெளிவந்த ஓர் கவர்ச்சிகரமான அனுபவத்தை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.)
மாமபலத்திற்குக் குடிவந்த புதிதில் விடியற்காலை நாலரைக்கு
மேல் ஐந்து மணிக்குளாலான சுப முகூர்த்த வேளையில் நான் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது.
இல்லையென்றால் ஆவின் பால் கிடைக்காது. தினமும் மூன்று
பாக்கெட் ஆவின் பால் இல்லையென்றால் எங்களுக்குக் கட்டுப்படியாகாது. மொத்தம்
ஆறுபேர் கொண்ட குடும்பம். (எனக்கு அப்போது மணமாகவில்லை என்பதை அறிக).
முதலில் கோவிந்தன் ரோடு 9ஆம் நம்பரில் குடிவந்தோம். சில மாதங்களிலேயே மூர்த்தி தெருவில் எண்பதோ எண்பத்தொன்றோ வீட்டின் நடு போர்ஷனுக்குப் போகவேண்டியதாயிற்று. காரணம், இரண்டு வருட மின்சார பில் கட்டாததற்காக பீஸ் பிடுங்கிவிட்டார்கள். ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கியாம். இருந்த நான்கு குடித்தனக்காரர்கள் கவலைப்படாமல் சிம்னி விளக்கில் குடித்தனம் செய்யப் பழகிக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு வருட வாடகையைப் பாக்கி வைத்திருந்தால், பாவம், வீட்டு உரிமையாளர்தான் என்ன செய்வார்? இருட்டிலேயே இருங்கள் என்று விட்டுவிட்டார். நாங்கள் அப்படி இருக்க முடியாததால் வீடு மாறினோம்.
அக்காலத்தில் ஆரியகவுடர் தெருவில் இருந்த ஆவின் அங்காடி தான் மாம்பலத்தில் பாதி ஜனத்தொகைக்குப் பால் வழங்கும் உரிமம் பெற்றிருந்தது. ஆகவே விடியற்காலையில் நான் அங்கே ஆஜராகிவிடுவேன். (இப்போதும் அதே இடத்தில் அந்த அங்காடி உள்ளது. சாரதா ஸ்டோர்ஸ் எதிரில்).
ஆனால் எனக்கு முன்னால் இருபது ஆயாக்களாவது அலுமினிய அண்டாக்களுடன் பிரசன்னமாகி இருப்பர். வீட்டில் தூங்கவே மாட்டார்களோ! பூஞ்சையான உடம்பாக இருந்தாலும் இருபத்தைந்து கிலோ எடையுள்ள ஐம்பது பாக்கெட்டுகளை அனாயாசமாகத் தூக்குவதை ஆச்சரியத்துடன் பார்ப்பேன்.
அங்காடியின் மங்கலான விளக்கொளியில், விடியற்காலத்திற்கே உரிய மென்னிருளில், சிறிது நேரத்திற்குள் கியூ வரிசை உருவாகிவிடும். முன்னால் வந்த நான் எப்படியோ ஐந்தாவது ஆறாவது ஆகியிருப்பேன். வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என் வழக்கம் ஆயிற்றே!
அங்காடி குத்தகைதாரர் ஓர் அடாவடிப் பேர்வழியாக இருந்தார். ஒரு ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்பார். ஐந்து ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்பார். நாளை வந்து மீதியை வாங்கிக்கொள்ளுங்கள் என்பார். மறுநாள் வந்தால், உங்களை இதற்குமுன் பார்த்ததே இல்லையே என்பார். யாராவது ஒரு ஆயாவை அழைத்து, ‘ஏம்மா, இவர் நேத்து வந்தாரா? பாத்தியா?’ என்பார். பாவம் அந்த ஆயாவுக்குப் பகலிலேயே பார்வை சற்றுக் குறைவு. இருட்டில் என்னைப் பார்த்ததாக எப்படிச் சொல்வார்? எட்டணா சில்லறைக்காக சுய மரியாதையை இழக்கமுடியாமல், ஒரு கோபப்பார்வையை அந்த ஆள்மீது வீசிவிட்டு, மூன்று பாக்கெட் பாலுடன் கிளம்பிவிடுவேன்.
சிலநாள் கழித்து எனக்கு ஆதரவாக ஒரு குரல் கேட்டது. பெயர் ஜானகியாம். வேறு எந்தப் பெயரானாலும் ஆட்சேபித்திருக்க மாட்டேன். அழகாக இருந்தாள். அழகியாகவும் இருந்தாள். ‘வெண்ணிற ஆடை ஜெயலலிதா மாதிரி இருக்கியே, இன்னுமா ஒனக்கு மாப்ள பாக்கலே?’ என்று ஓர் ஆயா அவளிடம் பேசியபோதுதான், அவளைப் பார்க்காமலேயே அவளைப் பற்றிய கனவுகள் எனக்குள் தூண்டப்பட்டன.
தினமும் நான் நிற்கும் வரிசையில் இரண்டு ஆள்விட்டு நிற்பாளாம். அவளும் தினம் மூன்று பாக்கெட்தான் வாங்குவாளாம். அங்காடிக்காரனிடம் எதற்கு அக்கப்போர் என்று சரியான சில்லறை கொண்டுவருவாளாம். நானும் அவளைப் பின்பற்றக்கூடாதா என்று ஓர் ஆயா மூலம் அறிவுரைத்தாள். ஏற்கெனவே நானும் அதே முடிவில் இருந்ததால் சரியென்று தலையாட்டினேன்.
அவள் முகத்தைச் சரியாகப் பார்க்கும் அளவுக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் நிழலோவியமாக நின்றிருந்தாள். குரல் நிச்சயம் இனிமையாகத்தான் இருந்தது. தம்பையா ரோட்டில் சங்கீதம் கற்றுக்கொள்கிறாளா என்றெல்லாம் கேட்கும் அளவுக்கு அவளும் மாம்பலமும் எனக்கு அப்போது பழக்கமாகவில்லை.
அடை மழை பெய்தாலும், அல்லது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் நூறு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தாலும், அவளும் நானும் ஆவின் அங்காடிக்கு வராமல் இருக்கமாட்டோம். ஆனால் இருவருக்கும் இடையில் இரண்டு ஆள் இடைவெளி இருந்துகொண்டே இருந்தது. எனக்குத் தன்னம்பிக்கை குறைவா, அவளுக்கு நாணம் அதிகமா, தெரியவில்லை.
அன்றும் அப்படித்தான். உரிய சில்லறை கொடுத்தேன். பால் கிடைத்தது. அவளும் அதே சில்லறை கொடுத்தாள். பாலைப் பெற்றுக்கொண்டாள். ஆனால் போகும்போது மெதுவாக என்னை நெருங்கி, தணிவான குரலில் ஏதோ சொல்ல வந்தாள். முதல் நாள் கனவில் அதே போன்ற ஒரு காட்சி அரங்கேறியிருந்தது. கனவு நிஜமாகிறதோ?
அதற்குள் இருவருக்கும் இடையில் ஓர் ஆயா ஓடிவந்தார். ‘என்னம்மா, ஜானகி, எக்ஸ்டிரா பால் வேண்டுமா? நான் தாரேன், அவர் கிட்ட ஏன் கேக்குறே?’ என்று அவளைக் கையோடு இழுத்துக்கொண்டுபோய், தன் அலுமினிய அண்டாவிற்குள் கைவிட்டார். (அப்போதெல்லாம் ஆவின் பால் மிகவும் கிராக்கி!)
அதன் பிறகு ஜானகியை நான் பார்க்கவில்லை. இரண்டு காரணங்கள்.
ஒன்று, நான் ஆவின் அங்காடிக்குப் போவது நின்றுவிட்டது. யாரோ ஓர் ஆயா என் அம்மாவின் மனத்தைத் திருப்பி, என் வீட்டுக்குப் பால் சப்ளை செய்யும் குத்தகையைப் பெற்றுவிட்டார்.
இரண்டு, என்னிடம் இரு சக்கர வாகனம் இல்லை. வேலையில் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தது! வண்டியில்லாத ‘நடை’ராஜா மீது வனிதையர் கவனம் செலுத்துவாரோ!
சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்குப் பால் சப்ளை செய்யும் ஆயா, முகத்தில் மிகுந்த சோகத்தை வரவழைத்துக்கொண்டு என்னிடம் கேட்டார்: “ஏம்ப்பா, அந்த ஜானகிப்பொண்ணு பாவம், உன்னைப் பாக்காம எவ்ளோ வருத்தப்பட்டா தெரியுமா? எப்பவாச்சும் என்கிட்ட கேக்கும், நீ எப்டி இருக்கேன்னு! பாவம், தாயில்லாத பொண்ணு! உனக்குத்தான் குடுத்து வைக்கலே! கல்கத்தாவுல கட்டிக்குடுத்துட்டாங்க!” என்றாள்.
சில மாதங்களில் எனக்கும் வெளியூருக்கு மாற்றலாகிவிட்டது! அவளுடைய ஞாபகார்த்தமாக ஓர் உறுதி எடுத்துக்கொண்டேன்: இனிமேல் எக்காரணத்தை முன்னிட்டும் ஆவின் அங்காடிக்குப் போய் கியூவில் நிற்பதில்லை என்று!
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
அப்படியே அசோகமித்திரன் எழுதியது போல் உள்ளது. பிரசுரத்திற்கு ஏற்ற கதை.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅதுக்கு பதிலா ஆயா சொல் கேட்டு வனிதையைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்திருக்கலாம். வெண்ணிற ஆடை மாதிரின்னு சொன்னது கண் தெரிந்த ஆயாவா இல்லை பகலில் பசுமாடு தெரியாத ஆயாவா
பதிலளிநீக்குஜெயலலிதா இன்று இல்லை என்பதால் இப்படிக் கூறுகிறீர்கள். வெண்ணிற ஆடை படத்தில் அவர் வரும்போதெல்லாம் முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு கிளுகிளுத்தவர்கள் உங்கள் நண்பர்கள் என்று எனக்குத் தெரியாதா!
நீக்குநான் சொல்லவந்தது, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற அழகி அந்தப் பெண் என்று சொல்லியவர் சரியாகத்தான் சொன்னாரா? வெண்ணிற ஆடை அழகானவர். பாவம்..ஜெ வுக்கு எதிராக அரசியலில் இறங்கிப் பெயரைக் கெடுத்துக்கொண்டார்
நீக்குஇவ்வளவு அழகான பெண்ணை கல்கத்தா மாப்பிள்ளைக்கு கோட்டை விட்டீர்களே ?
நீக்குபால்கார ஆயா வேலைக்குச் சேர்ந்தால் என்ன நீங்கள் அப்படியே ஒரு வாக்கிங்க் போவது போல அவங்களை கரெக்ட் பண்ணி இருக்கலாம் அல்லவா?
நீங்கள் சுத்த வேஸ்ட் சார் !
நிழலில் கரைந்த காதல்!
பதிலளிநீக்குஅந்த ஆயா அந்த ஜானகியிடம் உங்களை எம்ஜிஆர் மாதிரி தகதகன்னு இருக்கீங்கன்னு சொல்லியிருக்கும். ஆவின் பூத் அனுபவங்கள் அருமை.
பதிலளிநீக்குஅடடே...!
பதிலளிநீக்குகாகிதம், நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதுபோல் பயனற்ற பழைய துணிமணிகளையும் மறுசுழற்சியில் உபயோகிக்க வழிவகை காணலாம். சிங்காரச் சென்னையை குப்பைகளற்ற மாநகராக மாற்ற அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி திட்டம் வெற்றியடைவது சிரமமே.
பதிலளிநீக்குஎல்லாக் கனவுகளும் பலிப்பதில்லை. பால் புளித்து விட்டதே. ! தெளிவான நடை. சுருக்கமாக சொன்ன விதம் நன்று.
பதிலளிநீக்கு