புதன், ஏப்ரல் 20, 2022

"ஜெ.பா." என்னும் சிறுகதைத் திலகம் (இன்று கிழமை புதன்-2)


 "ஜெ.பா." என்னும் சிறுகதைத் திலகம்

(இன்று கிழமை புதன்-2)

அமெரிக்காவில் ஒன்பதாவது நாள்

நான் நியூஜெர்சி வந்து சேர்வதற்கும், அவர் கலிபோர்னியாவில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. 

நல்ல மனிதர். எப்போதும் சிரித்த முகம். முகத்தில் ஒரு வசீகரம். குறிப்பாகப் பத்திரிக்கை யாசிரியர்களைத்  தன்பால் கவனம் கொள்ள வைக்கும் வசீகரம். மருத்துவத்தில் மட்டுமின்றி, தான் கலந்து கொள்ளும் எல்லா இலக்கியப் போட்டிகளிலும் பரிசு பெற்றுவிடும் கைராசி. 

அவர் தான், மு.வ., நா.பா., இ.பா., மாதிரி இரண்டு எழுத்தால் அறியப்படும் மிகச் சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர், அண்மைக்காலமாக நிறைய சிறுகதைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் நண்பர் 'ஜெ.பா.' என்னும் ஜெ. பாஸ்கரன்.

சிறு வயதிலிருந்தே டாக்டர் என்றால் உங்களைப் போலவே  எனக்கும் பயம்தான்.  நாக்கை நீட்டச் சொல்வார். குறுக்கும் நெடுக்குமாகக் கேள்வி கேட்பார். கசப்பு மருந்து கொடுப்பார். தனியாக கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் என்றால் டெட்டால் நெடியையும் மீறி சதா சிகரெட் வாசம் இருக்கும். 

ஆனால் நமது ஜெ. பாஸ்கரன் உண்மையில் நல்ல டாக்டர். யாரிடமும் எரிந்து விழுவது இல்லை. தேவையில்லாத மருந்துகளை எழுதிக் கொடுப்பதில்லை. அதேபோல தேவையில்லாத எழுத்துக்களை எழுதுவதும் இல்லை.

'துட்டு' டாக்டர்களுக்கு மத்தியில் இவர் ஒரு 'பட்டு' டாக்டர். (பட்டு டாக்டர் பற்றி: https://chellappatamildiary.blogspot.com/2022/04/1_16.html)

ஜெ.பா. ஒவ்வொரு 'குவிகம்' ஜூம் நிகழ்விலும் தவறாமல் கலந்து கொள்வார். 'விருட்சம்' அழகியசிங்கர் கேட்டுக் கொண்டால் அவருடைய ஜூம் நிகழ்வுகளிலும் மறக்காமல் கலந்து கொண்டு சிறப்பாகக் கதை விமர்சனம் செய்வார். புத்தக வெளியீடுகளிலும், நடன அரங்கேற்றங்களிலும், நகரின் பெரிய மனிதர்கள் கலந்து கொள்ளும் எல்லா விழாக்களிலும் முதல் வரிசையில் இவருக்கு ஓர் இடம் உண்டு.  காலைத் தூக்கி நின்றாடும் சபாபதியின் நகரத்தில் பிறந்தவர் என்பதால் இயற்கையாகவே கலாரசனை அவரின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கிறது போலும்.  நாம் பொறாமைப்பட்டு என்ன பயன்?

ஜெ.பா.வின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "கிணற்றுக்குள் காவிரி". சூட்சுமம் கலந்த  இத் தலைப்பு வாசகனின் மனதில் எளிதாக நுழைந்து விடுகிறது என்றால், தெளிவான, அழகான, பொருத்தமான,  நடைச் சித்திரங்களால் உள்ளிருக்கும் கதைகள் வாசகனை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கின்றன.

சிதம்பரம் தாண்டி, கொள்ளிடம் பாலத்தின் மேல் மெதுவாகச் செல்லும் ரயிலில், ஜன்னல் கம்பிகளில் கன்னம் பிதுங்க, கீழே கரை புரண்டோடும் காவிரியை, விழிகள் அகலப் பார்த்துச் சென்றிருக்கிறேன். சமீபத்தில், காவிரி புஷ்கரத்திற்குச் சென்ற போது, ஆற்று மணலில் ஆழ்துளையிட்டு, நீர் இறைத்து, தொட்டி போல் கட்டிய துலாக் கட்டத்தில் முதுகு நனையாமல் மூழ்கி எழுந்தபோது, கண்களில் மட்டும் நீர் வழிந்தோடியது. ஐம்பது வருடங்களில், நல்லவற்றையெல்லாம் விட்டு வெகுதூரம் வந்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு - - அப்போது தோன்றியதுதான், 'கிணற்றுக்குள் காவிரி'” என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர். 

ஆனால் இது இழந்தவற்றைப் பற்றி  நொந்த உள்ளத்தவன்  பாடும் சோகக் கனவுகளின்  தொகுதி அல்ல. மாறாக இன்றைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் பிரதிபலித்துக் காட்டும் சுருக்கமான எழுத்தோவியங்களின் தொகுப்பே ஆகும்.

இத்தொகுப்பில் 22 கதைகள் உள்ளன. ஆனால் ஆசிரியரோ 21 கதைகள் என்று கூறுகிறார். அவருக்கே தெரியாமல், வாசகர்களுக்கு போனசாக,  22வது கதையை இத்தொகுப்பில் சேர்த்தவர் யாரோ அவருக்கு நம் வாழ்த்துகள்.

நம் காலத்து இலக்கியப் பிதாமகரானஅமுதசுரபியின் திருப்பூர் கிருஷ்ணன் (thiruppurkrishnan@hotmail.com) (9282234525) இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். "தேர்ந்த கலைத் திறனோடு எழுதப்பட்ட ஒரு சிறந்த சிறுகதை, அதன் இறுதி முடிவை நோக்கியே நகர்கிறது. இறுதியில் எப்படி முடியும் என ஊகிக்கவே இயலாமல், அந்த முடிவைப் படித்ததும் அடடா என பிரமிக்க வைக்குமானால், அந்தக் கதை சிறந்த கதைதான் என்பதில் சந்தேகமில்லை" என்கிறார். இந்த இலக்கணப்படி பார்த்தால் இத்தொகுப்பிலுள்ள 17 கதைகள் சிறந்த கதைகள் தாம். அப்படியானால் மீதமுள்ள ஐந்து? அவை "மிகச் சிறந்த" கதைகள் எனலாம்!  (அந்த ஐந்தையும் நீங்களே கண்டுபிடிக்கவேண்டும். நான் சொல்லப்போவதில்லை!)

நூலின் தலைப்பாக அமைந்திருக்கும்கிணற்றுக்குள் காவிரிஎன்ற கதையைக் காலையில் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் காலை உணவாகப் படிக்கவேண்டும். காரணம் கதையில் வரும் சுந்தராம்பாள் பாட்டி, 

பிள்ளையோட படிப்புக்கும், கண்ணியமான வாழ்க்கைக்கும் தனக்குத் தெரிந்த சமையல் வேலையையே நம்பினாள். பெரிய படிக்கு இரண்டுபடி அரிசியும், நாலு ஆழாக்கு உளுந்தும் போட்டு அரைத்து வைத்தால், வீட்டிலிருந்தபடியே காலையில இருநூறு இட்டிலி வியாபாரம்! பெரிய சைஸ் அலுமினிய இட்டிலிப் பானையில், ஐந்து இட்டிலித் தட்டு மூன்று வைக்கலாம்! தேங்காயும், கொஞ்சம் பொட்டுக்கடலையும் சேர்த்து, இரண்டு காய்ந்த மிளகாயுடன் அரைத்த கெட்டிச் சட்டினி. பார்சலுக்கும், இலையில் ஓட ஓடச் சட்டினி. உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கும் காலை டிபன் ரெடி! எப்போதாவது மெது வடையும் உண்டு!

ஆம், கணவனையும் இழந்து, பெற்ற மகனும் படிப்பு வராமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ ஓடிவிட்ட பிறகு, தன்  வாழ்வுக்கு ஆதாரமாக இட்டிலி வியாபாரத்தை மேற்கொண்டார் சுந்தராம்பாள்.

சுழல் சுழலாக ஆர்ப்பரித்து, பொங்கிப் புரண்டு வரும் காவிரியாற்றில் கணவனோடு புது மனைவியாக அன்று  தான் அனுபவித்த இன்பத்தின் நினைவுகள் பாட்டியின் மனதைவிட்டு அகலவேயில்லை. ஆனால் காவிரி ஸ்நான வாய்ப்பு அவருக்கு மறுபடி வாய்க்கவில்லை. இப்போதுதான் காவிரியில் தண்ணீரே வருவதில்லையே! இருந்தாலும் 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகம் அண்மையில் நடக்க இருப்பதை அறிந்து ஆர்வத்தோடு செல்கிறார்.    

எல்லாமே மாறி, ஏதோ புது உலகத்திற்கு வந்தாற்போல் இருந்தது பாட்டிக்கு! காவேரியில் இன்னும் தண்ணீர் விடவில்லை. ஆற்றுப் படுகையில் கட்டமாகக் கட்டி, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் விட்டிருந்தார்கள். காவேரிக் கரையே தெரியாமல் எங்கும் கட்டிடங்களும், கடைகளும், கட்சிக் கொடிகளும். அந்த மண் தெரு, இரு கரைகளிலும் இருந்த கோரைப் புற்கள், விரிந்திருந்த வயல்வெளிகள் எதுவும் காணவில்லை! மனதுக்கு துக்கமாயிருந்தது. அவரோடு வந்தபோது இருந்த காவிரி எங்கே போனது? -என்று அங்கலாய்க்கிறார் பாட்டி.

மைக்கில் காணாமல் போனவர்களைப் பற்றி அறிவித்தவண்ணம் இருந்தார்கள். காவிரி ஆற்றுக்கும் ஓர் அறிவிப்பைச் செய்திருக்கலாம்!என்று ஆற்றாமையால் எழுதுகிறார் ஜெ.பா. 

அவரும் நானும் -நூல் பரிமாற்றம்

உணவுக்கூடத்தில் சாப்பிட அமர்கிறார் பாட்டி. அப்போது சாப்பிட வந்த, குடிகாரனைப் போல் தோற்றமளித்த ஒருவனை அமர விடாமல் விரட்டுகிறார்கள்.நான் குடிக்கவில்லைஎன்கிறான் அவன்.  இனிமேலும் குடிக்க மாட்டேன்என்கிறான். அதற்குள் அவனை அடையாளம் கண்டுகொள்கிறார் பாட்டி. அவன்தான் ஓடிப்போன அவருடைய ஒரே மகன்!

பாட்டி மயங்கிச் சாய்கிறார். யாரோ தெளித்த தண்ணீரால் எழுகிறார். சாப்பாட்டைப் புறக்கணித்து, அடுத்த பஸ் ஏறி, தன்  ஊருக்கு வந்துவிடுகிறார்.  

கிணற்றடிக்குச் சென்று, ஒரு குடம் நீர் மொண்டு தலையில் ஊற்றிக்கொண்டார்.நம்ம ஊர் கிணற்றுக்குள்ள கங்கையே வரும்போது, காவிரி வர மாட்டாளா என்ன?” என்று தனக்குள் எண்ணிச் சிரித்துக்கொண்டார். 

இன்னொரு குடம் தண்ணீர் மொண்டு தலையில் கொட்டிக்கொண்டார், அந்த மகனைப் பெற்ற கடனுக்காக! ஈரப்புடவையுடன், ஆளோடிக்கு வந்து, தூணுக்கடியில் அமர்ந்துவென்று அழுதாள், சுந்தராம்பாள் பாட்டி - என்று முடிகிறது கதை.

ஓர்  எழுத்தாளனைச் சிறந்த எழுத்தாளனாக்குவது, சிறந்த கருப்பொருளும், அதை வெளிக்காட்டும் சிறந்த சொல்லாக்கமும்தான்.  இந்த இரண்டும் பாட்டியின் கிணற்றுக்குள் காவிரியாய்க் கலந்துவிட்டன.

இதுவும், தன்னைத் தொலைத்தவன் என்ற கதையும் போதும், சிறுகதைத் திலகம்என்ற பட்டப்பெயருக்கு ஜெ.பாஸ்கரன் முழுத் தகுதியுள்ளவர் என்பதற்கு!

*** 

ஏராளமான சிறுகதைகள் எழுதிவிட்டார் ஜெ.பா. என்றாலும் எனக்கொரு மனக்குறை உண்டு. அவர் எழுதியவை எல்லாமே நாலு முதல் ஆறு பக்கம் உள்ள கதைகள்தாம். அதிலும் வணிகப் பத்திரிகைகள் என்றால் அவை நீளம் குறைந்த கதைகளையே விரும்புவதால், நாளடைவில் எழுத்தாளரின் கருத்தும் களமும் சுருங்கிப்போகும் அபாயம் உண்டு. அந்த அபாயத்திலிருந்து ஜெ.பா. தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக நாவல் எழுதும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நாவலின் வீச்சு அபாரமானது, அதன் வாழ்நாளும் சிறுகதையை விட அதிகமாக இருக்கும்.  

வாழ்க்கை  ஓயாமல் நமக்கு எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. - கற்றுக்கொள்ளும் மனதும், ஆர்வமும்தான் வேண்டியிருக்கிறது…. என்று முன்னுரையில் சொல்லும் டாக்டர் நாம் சொல்வதைக் கற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

==========================================================

டாக்டர் ஜெ. பாஸ்கரன் -  யார் இவர் ?

சென்னை இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி- அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மத்திய அரசின் 'நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப்' பெற்றவர்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், மற்றும் டிப்ளமா இன் டெர்மடாலஜி (தோல் மருத்துவம்) லண்ட ன் நேஷனல் ஹாஸ்பிடல் (QUEENS SQUARE), டிப்ளமா இன் கிளினிகல் நியூராலஜி (DIP IN CLINICAL NEUROLOGY).

1982 முதல் தோல் சிறப்பு மருத்துவம் (இன்று வரை), 1992 முதல்

நரம்பியல் சிறப்பு மருத்துவம் (இன்று வரை)

2002 முதல் மேற்கு மாம்பலம் சுகாதார மையத்தின் மெடிகல் சூப்பரிண்டெண்டெண்ட், சென்னையில் தனியார் இயன்முறை (PHYSIOTHERAPY) கல்லூரிகளில் கடந்த 15 வருடங்களாக நரம்பியல் துறை வருகைப் பேராசிரியர் மற்றும் தேர்வாளர் (examiner).

தமிழில் எழுதுவது மனதிற்குப் பிடித்தமானது. முகநூல், இணையம், வார, மாதப் பத்திரிகைகள் அவ்வப்போது கதை, கட்டுரைகள் எழுதி வருவது. இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

சரும நோய்கள் (2008), வலிப்பு நோய்கள் (2010), தலைவலியும் பாதிப்புகளும் (2014), அப்பாவின் டைப்ரைட்டர் (2016), 'தேடல்' சிறுகதைத் தொகுப்பு (2017), 'அது ஒரு கனாக்காலம்- கட்டுரைத் தொகுதி,  'குவிகம்' கடைசிப் பக்கம் - கட்டுரைத் தொகுப்பு.

அப்பாவின் டைப்ரைட்டர் - வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள் கொண்டது. அவ்வப்போது முகநூல், இணைய தளம், மாதப் பத்திரிகைகள், சிற்றிதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இப்புத்தகத்தை அமெரிக்காவின் 'உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சிறப்பு விருது வழங்கிக் கவுரவித்தது. 

சிறுகதைகள் - கலைமகள், தினமணிக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், உரத்த சிந்தனை இதழ்களில் வெளியாகின. கலைமகளின் கி.வா.ஜ நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) இவரது 'காப்பு' முதற்பரிசு பெற்றது. லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டியில் (2018) ‘நப்பின்னையாகிய நான்ஆறுதல் பரிசு பெற்றது.

இவர் சின்னத்திரை நட்சத்திரமும் கூட.

சின்னத் திரையில் ..... ராஜ் டிவி / ராஜ் டிவி ப்ளஸ்- ல் - மக்கள் மேடை, மருத்துவக் கேள்வி பதில் நிகழ்ச்சி (நேரடி ஒளிபரப்பு), சங்கரா டிவியில் - டயல் எ டாக்டர் (நேரடி ஒளிபரப்பு), ஜெயா டிவியில் - ஹலோ டாக்டர் (நேரடி ஒளிபரப்பு) மற்றும் சிறப்புத் தேன்கிண்ணம் (2016), கலைஞர் டிவியில் - சந்தித்த வேளையிலே, இன்றைய விருந்தினர் (விடியலே வா நிகழ்ச்சியில்).

பெப்பர்ஸ் டிவியில் - படித்ததில் பிடித்தது (2014), வேந்தர் டிவியில் -உணவும் உணர்வுகளும், நியூஸ் 7 சானல் - நேர்காணல், பொதிகை

டிவியில் - எந்தையும் தாயும்- பேச்சு (2017). நூல் நயம் - 'தேடல்' புத்தகம் பற்றி உரையாடல் (2018).



12 கருத்துகள்:

  1. சிறந்த மனிதரைப் பற்றி சிறந்த அறிமுகம்.  இவரைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.   அவரது சிறுகதைகளைப் படிக்க ஆர்வமாயிருக்கிறேன். 

    பதிலளிநீக்கு
  2. ஒருவர் சிறந்த டாக்டராகவும் சிறந்த எழுத்தாளராகவும் எல்லோராலும் போற்றப்படும் சீறும் சிறப்பும் பெற்றவர் ஜெ.பா.

    பதிலளிநீக்கு
  3. சார் இவரை நான் சின்னத்திரையிலும் யுட்யூப் சானலிலும் பார்த்திருக்கிறென் சார். ஆனால் உங்கள் பதிவிலுருந்து அவர் சிறந்த கதாசிரியர் என்பதும் தெரிகிறது. மிகவும் சிறப்பான அறிமுகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஒரு மருத்துவர் இலக்கிய ஆர்வம் கொண்டு படைப்பாளியாகவும் விளங்குவது மிகச் சிறந்த விஷயம். அவரை இங்கு எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. தெரியாத பல செய்திகளை அறியக் கொடுக்கிறீர்கள் . இவரின் புத்தகம் கிடைத்தால் வாங்கிப் பயன் பெறுவேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புத்தகம் கிடைக்குமிடம்: பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் (அஞ்சல்), கோவை-38. தொடர்புக்கு ஜி ஆர் பிரகாஷ்: 8778924880/ 9940985920.

      siruvanisagar@gmail.com விலை 140.

      நீக்கு
  6. "ஒருகதையால் சொன்னீர் உயர்வு."
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான அறிமுகம். அவரது முகநூல் பக்கத்தில் சில இடுகைகளை வாசித்தது உண்டு. நூல் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது உங்கள் பதிவினால்!

    பதிலளிநீக்கு