இன்று கிழமை வெள்ளி -1
15-4-2022
அமெரிக்காவில் நான்காவது நாள்
(இப்படியும் மனிதர்கள்)பூக்காரிகள் பொய் சொல்வதில்லை
நம் ஊரில் கிடைக்கும் முல்லை, மல்லிகை போன்ற அர்ச்சனைப் பூக்கள் அமெரிக்காவில் அதிகம் கிடைப்பதில்லை. ரோஜா வகையும் மற்ற பூக்களும் கிடைக்கின்றன. பலநாள் வாடுவதில்லை.
ஒருமுறை எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு சவால் எழுந்தது. (பூ…இவ்வளவுதானா! மணிக்கொருமுறை சவால் விடுகிறாளே என் மனைவி என்கிறீர்களா? நீங்கள் அதிர்ஷ்டசாலி!)
அதாவது யாருடைய செருப்பு அதிக நாள் உழைக்கிறது என்பதுதான் சவால்.
இந்தச் சவாலை அறிவியல்பூர்வமாக அணுகுவது நல்லது என்பதால் இருவருக்கும் ஒரு டிசம்பர் 31-ஆம் தேதி புது செருப்புகள் வாங்கிக் கொண்டோம். அவற்றை ஓராண்டு முழுவதும் பயன்படுத்திவிட்டு அடுத்த டிசம்பர் 31இல் அவற்றின் தேய்மானத்தைக் கணக்கிடுவது என்று முடிவு செய்தோம்.
எந்த சவாலிலும் பொதுவாகவே கணவனை விட மனைவி தானே வெற்றி பெறுவது அதிகம்! இந்த முறை நான் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானித்தேன். 'துணை நாடி தூக்கிச் செயல்' என்று வள்ளுவர் சொன்னார் அல்லவா, அதனால் என்னுடைய வெற்றிக்கு இறைவன் என்கிற மாபெரும் துணையை நாடுவது என்று முடிவு செய்தேன். ஆனால் அதை என் மனைவியிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை!
ஜனவரி 1 புத்தாண்டு புலர்ந்தபோது காலை 5:30 மணிக்கு ஸ்கூட்டரில் இருவரும் கிளம்பினோம். ஆலய தரிசனத்தோடு புத்தாண்டை ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை என் மனைவி ஏற்றுக்கொண்டாள். ஆனால் இதுவரை போகாத ஒரு கோவிலுக்குப் போகலாம் என்றாள்.
அப்போது சென்னை அடையாரில் "மத்திய கைலாஷ்" என்ற பெயரில் இருந்த புதிய கோவில் நினைவுக்கு வந்தது. நாங்கள் போகாத கோவில். அதை நோக்கிக் கிளம்பினோம்.
ஜனவரி மாதத்துக்குப் புலர் காலையில் பனிபோல் குளுமையான தென்றல் எங்களை அந்தக் கோவிலுக்கு வரவேற்றது. கிண்டி சாலையில் இன்னும் அதிக போக்குவரத்து ஆரம்பிக்கவில்லை. கோவில் அப்போதுதான் திறந்திருந்தது. அர்ச்சகர் உள்ளே இருந்தார்.
எங்கள் இருவரையும், வாசலில் பூக்கடை வைத்திருந்த நடுத்தர வயது பெண்மணியையும் தவிர அங்கு யாரும் இல்லை.
கால் உடைந்த ஒரு பிளாஸ்டிக் டீப்பாயின் மீது சாக்குத் துணியைப் பரப்பி, அதன்மீது வட்டமான இரண்டு மரத்தட்டுகளில் மலர்களை வைத்திருந்தாள் அப்பெண்மணி.
"புதுவருஷம்; நீங்க தாம்மா முதல் போணி! நிறைய வாங்குங்கம்மா! வருஷம் முழுக்க பணம் காசு கொழிக்கும் அம்மா!" என்று மனம் நிறைந்த புன்னகையோடு என் மனைவியின் கையில் 4 முழம் பூவைத் திணித்தாள் பூக்காரி.
பிறகு "செருப்பை இங்கேயே விட்டுவிடுங்கள் அம்மா" என்றாள். பூ வாங்குமிடத்தில் செருப்பை விட்டுப் போவது தானே வழக்கம்! இருவருடைய செருப்புகளும் அந்த இடத்தில் தஞ்சம் புகுந்தன.
அப்போதுதான் என்னுடைய புதிய செருப்புகளைப் பார்த்த மனைவி, "கோவிலுக்கு வரும் போது ஏன் புது செருப்பு போட்டுக் கொண்டு வந்தீர்கள்? தொலைந்து போனால் என்ன செய்வது?" என்று கடிந்து கொண்டாள்.
பூக்காரி கலகலவென்று சிரித்தாள். "இங்கே செருப்புகளைப் பாதுகாக்கவென்று தனியாக ஆள் கிடையாது. அந்த வேலையையும் நான்தான் செய்கிறேன். கவலைப்படாமல் போய் வாருங்கள்!" என்றாள்.
சில ஆண்டுகள் முன்பு தான் அமைத்த கோவில் என்பதால் அழுக்கு படியாமல், வண்ணம் சிதையாமல், தூய்மை குறையாமல் இருந்தது. இந்தக் கோவிலை அமைத்ததின் நோக்கமே, 'இறந்து போன முன்னோர்களின் திதி விட்டு போய் இருந்தால் இங்கு வந்து செய்து கொள்ளலாம் என்பதுதான்' என்று அர்ச்சகர் கூறினார். தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
வினைதீர்க்கும் விநாயகனுக்கு மலர்மாலை சார்த்தி, அர்ச்சனை நடத்தி, விபூதி குங்குமம் கொடுத்தார். தட்டில் காணிக்கை செலுத்திவிட்டு, ஆறங்க வணக்கம் செய்துவிட்டுக் கிளம்பினோம். என் செருப்பு அவளுடையதை விட அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டேன். மனம் நிறைவாக இருந்தது.
ஆனால் வாசலில் வந்தால் என்ன இது, என் ஸ்கூட்டர் மட்டுமே அனாதையாக நிற்கிறது! அந்த பூக்காரியைக் காணோம்! அதுமட்டுமன்றி அங்கு பூக்கடை இருந்த அடையாளமே காணோம்!
எனக்கு அதிர்ச்சி. என் மனைவிக்கோ மகிழ்ச்சி! "கோவிலுக்கும் கல்யாணத்திற்கும் புது செருப்பு வேண்டாம் என்று எவ்வளவு முறை கூறி இருக்கிறேன், கேட்டீர்களா?" என்று கடுகடுத்தாள். சவால் ஆரம்பிப்பதற்கு முன்பே நான் தோற்றுப் போய் விட்டேனே!
அர்ச்சகரிடம் திரும்பிப் போனேன். "சேச்சே! பூக்காரிகள் பொய் சொல்லமாட்டார்கள், திருட மாட்டார்களே!" என்றார். "மறுபடி வந்தால் கேட்டு வைக்கிறேன், எதற்கும் நாளை இதே நேரத்தில் வாருங்கள்" என்றார்.
"இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு இனிமேல் பழைய செருப்பு தான்!" என்று விஷயத்தை முடித்து வைத்தாள் மனைவி. (செயல்படுத்தவும் செய்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ?)
புத்தாண்டு - புது செருப்பு - பூக்காரி…. என்ன ஒற்றுமை போங்கள்!
***
பின்பொருநாள், கும்பகோணம் அருகில் உள்ள கோவில்களை தரிசிக்க வேண்டும் என்று கிளம்பிய போதும் இதேபோல் ஒரு பூக்காரியிடம் தோல்வியடைய நேரிட்டது.
பொதுவாகவே கோவில்களுக்குச் செல்வதை நான் முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை. திட்டமிட்டால் அது நடப்பதில்லை. ஆனால் எந்தக் கோவிலுக்குப் போக வேண்டுமோ அதைப் பற்றித் தீவிரமாக நினைத்துக் கொண்டால் போதும், எங்கிருந்தாவது அழைப்போ உத்தரவோ வரும். அப்படித்தான் இந்த கும்பகோணம் விசிட்டும்.
ஐயங்கார் லாட்ஜில் தங்கிப் பயணத்தை ஆரம்பித்தோம். முதல் கோவில் தேப்பெருமாநல்லூர். பழம்பெரும் கோவில். ருத்ராட்ச ஈஸ்வரர் என்னும் "நாகவிஸ்வநாத சுவாமி" திருக்கோவில். ராகு கேது தோஷங்களைப் போக்கும் என்றார்கள். இதுவரை நாங்கள் தரிசித்திராத கோவில் என்பதால் ஆர்வத்துடன் வந்தோம்.
கோவில் அப்போது மூடி இருந்தது. ஆனால் வாசலில் இருந்த பூக்காரியின் மகள் "குருக்கள் இங்குதான் குடியிருக்கிறார் நான் கூட்டிவருகிறேன்" என்று கிளம்பினாள். "கும்பகோணத்திலிருந்து இன்னும் பஸ் வரலீங்க. வந்தா தான் பூவும் வரும். இப்ப இருக்கிறது நாலே மொழம்!" என்றாள் பூக்காரி. அதை வாங்குவதற்கு ஏழெட்டு கைகள் நீண்டன. என் மனைவி போட்டி போட்டுக்கொண்டு 100 ரூபாய்க்கு வாங்கினாள்.
அர்ச்சகர் சிறிது நேரத்தில் வந்தார். அவர் வருவதற்கும் இந்தப் பூக்காரி கடையைச் சாத்திக்கொண்டு கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. அவள் போவதை கோபத்துடன் பார்த்த அர்ச்சகர், தருமியைப் பார்த்த முக்கண்ணன் மாதிரி எங்களையும் சுட்டு எரிப்பது போல் பார்த்தார்.
"ஏனய்யா உங்களுக்கு எல்லாம் புத்தி இருக்கிறதா?" என்றார். திருதிருவென விழித்தோம். பல வருடங்களாக நமக்கு நாமே எழுப்பிக் கொண்ட சந்தேகம்தானே இது!
பிறகு கோவிலின் வெளிப்புறச்சுவரில் பெரிய எழுத்துக்களில் எழுதி இருந்ததைச் சுட்டிக்காட்டினார். "இங்கு ருத்ராட்சத்தினால் மட்டுமே அர்ச்சனை செய்யப்படும். பூக்களால் செய்யப்படாது" என்று எழுதப்பட்டிருந்தது.
ஓஹோ, அதனால்தான் அர்ச்சகரைக் கண்டதும் பூக்காரி ஓடினாளோ?
எங்கள் கையில் இருந்த பூமாலையைப் பார்த்து ஏளனமாகச் சொன்னார்: "இதை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போங்கள், இங்கு பயன்படாது!" என்றார்.
கோவிலினுள் நுழைந்தோம். தலபுராணத்தில் ருத்ராட்ச அர்ச்சனை வந்த கதை கூறப்பட்டு இருந்தது.
தன் வசமிருந்த ருத்திராட்சங்களால் அர்ச்சனை செய்தார் அர்ச்சகர். மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் வாங்கிய பூவை ராகு கேதுவுக்கு சமர்ப்பித்தார்.
"இந்தப் பூக்காரிகள் இப்படித்தான் வெளியூரில் இருந்து வருபவர்களை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் மீது கேஸ் போட்டு கோர்ட்டில் தீர்ப்பாகி இருக்கிறது. என்றாலும் அரசியல் செல்வாக்கால் திரும்பவும் கடை வைத்து விடுகிறார்கள். பக்தர்களாகிய நீங்களும் ஒரு கோவிலுக்கு வருவதற்கு முன்பு அதன் வரலாற்றைப் படித்து விட்டு வர வேண்டாமா? ஆளுக்கு ஒரு மொபைல் வைத்திருக்கிறீர்களே, அதில் கூகுள் இல்லையா?" என்றார்.
அர்ச்சனைப் பொருட்களை ஆலயத்துக்கு அருகில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா என்று நாங்கள் கேட்கவில்லை.
ஆனால் அவர் கேள்வியில் ஒர் அடிப்படை நியாயம் இருந்தது. கண்காட்சியைப் பார்ப்பதுபோல் தானே நாம் கடவுளையும் பார்க்கிறோம்! ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து வந்தாலும் ஐந்து நிமிடம் தானே சன்னதியில் இருக்கிறோம்! தல வரலாற்றை மனம் செலுத்திப் படிக்கிறோமா?
மனித வாழ்க்கையில் 25 விதமான ஆசிரியர்களை நாம் சந்திப்பதாக மகாபாரதம் கூறுகிறது. நாராயணீயத்திலும் வருகிறது (93ஆம் தசகம்). எங்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுத்த இந்தப் பூக்காரிகளையும் அந்தப் பட்டியலில் 26ஆவதாகச் சேர்க்க வேண்டியது தான் என்று தோன்றியது. சொல்லிவிட்டேன், இனி உங்கள் பாடு!
-
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
யாருடைய செருப்பு அதிக நாள் உழைக்கிறது என்பதுதான் சவால். //
பதிலளிநீக்குஹாஹாஹா ரொம்ப ஈசியாச்சே. யார் செருப்பு அதிகம் தேஞ்சுருந்தா ..சொல்லிக்கலாமே மார்தட்டி, 'நான் செருப்பா எவ்வளவு உழைச்சிருக்கேன் என்று!!!'
கீதா
கீதா
என் செருப்பு அவளுடையதை விட அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டேன். மனம் நிறைவாக இருந்தது. //
பதிலளிநீக்குஹாஹாஹா ஆனால் கடைசியில் பு பு பூ என்று ஆகிவிட்டதே! வினை தீர்க்கும் பிள்ளையார்!!
கீதா
ஆளுக்கு ஒரு மொபைல் வைத்திருக்கிறீர்களே, அதில் கூகுள் இல்லையா?" என்றார்.//
பதிலளிநீக்குஹாஹா அர்ச்சகர்களும் ஹைடெக். சில கோயில்களில் அர்ச்சகர்கள் (புதியவர்கள் போலும்-) மொபைல் கூகுள் பார்த்து அர்ச்சனை செய்வதும், வீட்டிற்குத் திதி செய்து வைக்க வரும் வாத்தியார்கள், ஆவணிஅவிட்டம் அன்று கூட மொபைல் பார்த்துதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதையும் பார்க்கிறேன். கேள்விகள் வருவது வியப்பே இல்லை!
நாங்கள் கோயில் பூக்காரிகளிடம் பூ வாங்கியதில்லை!
கீதா
நீங்கள் சொல்வது தவறு .இதுவரையில் எந்த குருக்களையும் ,வாத்தியாரையும் நான் அப்படி பார்த்ததில்லை .
நீக்குநம் மத குருமாராகளை நாமே கிண்டல் செய்யலாமா ?
பாதிரியார்கள் சர்ச்சில் பைபிளை பார்த்துதானே படிக்கிறார் .யாராவது குறை கூறி பார்த்ததுண்டா ?
பூக்காரிகளைப் பற்றி எழுதுவதற்கான ப்ராயத்தை அடைந்து விட்டீர்கள் என்பதை விட வேறென்ன சந்தோஷம் வேண்டும்?
பதிலளிநீக்குசமயங்களில் வீட்டு வேலை செய்கிற பெண்மணிகளின் பெயரில் புழங்கும் பாடல்களை அகஸ்மாத்தாக முணுமுணுக்கும் போது மனைவிகள் (பொதுவாக எல்லோருக்காகவும் பன்மையில் சொன்னது) சிகே சரஸ்வதிகளாக அவதாரம் எடுப்பதை சந்திக்காதவர் யார்?
தேப்பெருமாநல்லூர் தரிசனம் லேசில் கிட்டாது. நிஜமாகவே அவனருளாள் தான் அவன் தாள் வணங்க முடியும்.
சிவபெருமான் கூப்பிடாமல் அந்தக் கோவிலின் வாசலைக் கூட மிதிக்க முடியாது.
சிறிய கோவில் தான். ஆனாலும் மிஸ்டிக்காக ஏதோவொன்று புழங்கும் இடம் அது.
பந்தி வஞ்சனை செய்யப்பட்ட ஒரு பெரியவர் சிவபெருமான் சந்நிதியில் இனி ஜென்மத்திற்கும் பாயசம் சாப்பிடுவதில்லை என்று சபதம் மேற்கொண்டு, அன்றிரவே காலமாகிவிடும் கதை படித்ததில் இருந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் ஏங்கி அப்புறம் தான் அந்த பாக்கியம் கிடைத்தது.
நான் முதல் தடவை போனபோது சந்நிதிக்கு வெளியே ருத்ராட்ச பந்தலின் கீழே இருக்கும் சிவன் மீது பாம்பின் உரித்த சட்டை கிடந்தது பெரிதாகப் பேசப்பட்டது.
இந்தக் கோவிலின் அருகாமையில் இருக்கும் சரபசூலினி கோயிலும், ஐயாவாடி ப்ரத்யங்கரி கோயிலும், புதிதாக எழும்பி இருக்கும் ஐயாவாடி செம்பியவரம்பல் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் (பேரழகு) கோயிலும் தற்போது தேப்பெருமாநல்லூர் பக்தர்களை வெகுவாகக் குறைத்து உள்ளன.
ஆனாலும், திருவிடைமருதூரும் தேப்பெருமாநல்லூரும் தனிதான்.
இதுவரை பூக்காரிகளை கவனித்தது இல்லை. அமெரிக்க பதிவை சாக்கிட்டு அடுத்த முறை கவனித்து விட வேண்டும்.
எதற்கும் பூக்காரிகள் உங்களிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
நீக்குஎங்கள் கோயில்உலாவின்போது இவ்வாறாகப் பல அனுபவங்களை எதிர்கொண்டுள்ளோம்.
பதிலளிநீக்குநிச்சயமாக! இந்தியா மட்டுமின்றி, ஆசியா முழுவதும் கோயில் உலா சென்ற நீங்கள் பார்க்காத அனுபவமா?
நீக்குமனைவியிடம் செருக்கை காண்பித்தால் செருப்பு கூட மிஞ்சாது போல 😉😂
பதிலளிநீக்குஇளம் வயதிலேயே இந்த வாழ்வியல் உண்மையைப் புரிந்துகொண்டுவிட்டீர்களே! சபாஷ்!
நீக்குநான் நினைத்தேன் அமெரிக்காவில் உள்ள பூகாரி பற்றி எழுதுகிறீர்கள் என்று
பதிலளிநீக்குபொன்
இங்கு பூக்காரிகளைப் பார்க்க முடியவில்லை. சூப்பர் மார்க்கெட்டிலும் கோவில்களிலும்தான் பூக்களை வாங்க முடிகிறது.
நீக்குமனித வாழ்க்கையில் 25 விதமான ஆசிரியர்களை நாம் சந்திப்பதாக மகாபாரதம் கூறுகிறது. நாராயணீயத்திலும் வருகிறது (93ஆம் தசகம்).
பதிலளிநீக்குதங்களுக்கு தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாது ஆன்மீகத்திலும் எவ்வளவு உயர்ந்த ஞானம் என்பது புலப்படுகிறது .
மூன்றாவது வரியில் வரும் 'உயர்ந்த' என்ற சொல்லை நீக்கிவிடலாம். இன்னும் நான் உயரவில்லை என்று பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நீக்குஎத்தனையோ பெரிய விஷயங்களிலும், பெரிய ஆட்களிடமும் நித்தம் ஏமாறுகிறோம். பூக்காரியிடம் ஏமாந்தால் தப்பில்லை. எல்லோருக்கும் சமஉரிமை கொடுக்க வேண்டும். பதிவில் என்னைக் கவர்ந்த விஷயம் தேப்பெருமாநல்லூர் கோவில் விவரம். இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. கேள்விப்பட்ட உடனேதான் என்ன செய்யப் போகிறேன். ஏனென்றால் நீங்கள் சொன்ன மத்யாகைலாஷே நான் இன்னும் பார்க்கவில்லை. ஆயினும், த்வனியின் பின்னூட்டமும் படித்த பிறகு தேப்பெருமாநல்லூர் கோவில் செல்லும் ஆசை வருகிறது.
பதிலளிநீக்குஆம், நம்மிடம் ஏமாற்றிப் பூக்காரிகள் மாளிகையா கட்டிவிடப் போகிறார்கள்! ஆனால் உண்மை என்ற ஒன்று உறுத்துகிறதே! மேலும், மறுபிறவி இல்லாதவர்கள் தான் அந்தக் கோவிலைச் சென்று பார்க்க முடியுமாம்! எனவே உங்கள் சோதிடரை ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்!
நீக்குஎன்ன இருந்தாலும் நீங்கள் மனைவியோடு பந்தயம் வைத்திருக்க வேண்டாம். கும்பகோண பூக்காரி பலே கைகாரிதான்.
பதிலளிநீக்குஇல்லை நண்பரே! நான் பந்தயம் வைப்பதில்லை. அவள் பந்தயம் வைக்கும்போது நான் எதிர்க்க முடிவதில்லையே என்ன செய்வது!
நீக்குவினையை தீர்க்கவில்லை விநாயகர்...?
பதிலளிநீக்குவிநாயகரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது நண்பரே! அவர் கொஞ்சம் 'ஸ்லோ'வாகத்தான் செயலாற்றுவார்!
நீக்குபூ விற்பனை செய்யும் பெண்மணிகள் உங்களுக்கு இப்படி ஒரு பாடம் கற்பித்து இருக்கிறார்கள்! பதிவு நன்று.
பதிலளிநீக்குபோட்டியில் செருப்பு தேயாமலிருக்க பெட்டிக்குள் வருடம் முழுதும் செருப்பை வைத்து காத்தவரும் உண்டு. அப்படியொரு கதையென முத்லில் நினைத்தேன். ருத்ராட்சனத்துக்கு பதிலாக பூ வாங்கிய கதை சுவையாக இருந்தது. தொடருங்கள்
பதிலளிநீக்குதங்கள் வரவு நல்வரவாகுக நண்பரே!
நீக்கு