புதன், ஏப்ரல் 13, 2022

இன்று கிழமை செவ்வாய்-1

(நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் வலைப்பதிவு!)

ன்று கிழமை செவ்வாய்-1

(அட்லாண்டிக் கடலோரம்)

12-4-2022 செவ்வாய்


திங்கள் இரவு 12 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தோம் நானும் என் மனைவியும்.


சென்னை விமான நிலையம் 


வெளியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சென்னையிலிருந்து வந்த விமானம் 9 மணிக்கு முன்பே டில்லியை வந்தடைந்துவிட்டது. ஆனால் டெல்லி விமான நிலையத்தின்  நீளமான அகலமான உயரமான பரிமாணங்களை அனுபவித்த பிறகுதான் அமெரிக்கா செல்லும் விமானத்தை அடைய முடிந்தது. அதற்கு இரண்டரை மணி நேரம் ஆகிவிட்டது. (எதிர்கால அமெரிக்கப் பயணிகள் கவனிக்கவும்.) இமிக்ரேஷனில் நீண்ட க்யூ. கோவிட் 19 காரணமாக பன்னாட்டு விமான சேவை பெரிதும் குறைக்கப்பட்டு விட்டதால் 'பப்பிள்' விமான சேவைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நல்லவேளையாக நண்பர் ஒருவரின் ஆலோசனையால் வீல்சேர் சேவையைப் பயன்படுத்திக் கொண்டோம். இல்லையென்றால் 12 மணி விமானத்தைப் பிடிப்பதற்குப்  பதினொன்றே முக்கால் ஆகி இருக்கும். 


யுனைட்டட் ஏர்லைன்ஸ் சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் ஊரில் இருந்த டெக்கான் ஏர்லைன்ஸ் மாதிரிதான். புளி மூட்டை மாதிரி அடைத்துக்கொண்டு காலை அப்படி இப்படி அசைக்க முடியாமல் உட்கார வேண்டி இருந்தது. மொத்த விமானத்திற்கும் மூன்றே மூன்று பணியாளர்கள். மூவரின் வயதையும் கூட்டினால் நிச்சயம் இருநூறைத் தொடும். இருந்தும் நல்ல சேவையை வழங்கினார்கள். குடிக்கத் தண்ணீர் கேட்டால், டிபன் கொடுத்த பிறகுதான் வரும் என்றார்கள். 12 மணிக்குக் கிளம்பிய விமானத்தில் ஒன்றேகால் மணிக்குத்தான் ஏதோ கொடுத்தார்கள். அதன்பிறகு கொடுக்கப்பட்ட தண்ணீரோ வெறும் கிணற்று நீர் மாதிரி உப்பாக இருந்தது. சென்னை டில்லி விஸ்தாரா வில் சிறிய தண்ணீர் பாட்டில் கொடுத்தார்கள். இங்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டிலிருந்து பிளாஸ்டிக் குவளைகளில் மட்டுமே ஊற்றிக் கொடுத்தார்கள். குடித்துவிட்டுக் குவளையை நீட்டினால் இரண்டாம் முறை கொடுப்பதற்கு மிகவும் யோசித்தார்கள். அதனால் என் மனைவி மூன்றாவது முறையும் கேட்டு அவர்களை வெறுப்பேற்றினார். அதே உப்புத் தண்ணீர் தான்!


(அதனால் தானோ என்னவோ விடியற்காலையில் எங்கள் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பருவமங்கை  தனக்கு "பிராண்டட் வாட்டர்" வேண்டும் என்று கேட்டார். உடனே வந்தது. அவர் தயவால் எங்களுக்கும் அதே சுவையான - ஆனால் அதே பிளாஸ்டிக் குவளையில் தான்- தண்ணீர் கிடைத்தது! இதைத்தான் அன்றே ஒரு கவிஞர் 'பருவத்தால் அன்றிப் பழா' என்றாரோ?)


அமெரிக்கப் பயணத்தின்போது அரிசிச்சோறே கண்ணில் காணாத அநுபவம் இம்முறை தான் ஏற்பட்டது. ஆனால் விடியற்காலை வழங்கிய உணவுத் தட்டில் வெந்த பைத்தம்பருப்புடன் ஊடுபயிராகச் சில  சோற்றுப் பருக்கைகள் இருந்ததை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். 


முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கைகளில் அமர முடிந்தது. அதாவது நம் முட்டியை முன் சீட்டில் மோதிக் கொண்டுதான்.  அதாகப்பட்ட அவசரத் தேவைக்கு எழும்போது மீண்டும் முட்டி முட்டும் அனுபவம். சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயிலில் மேலடுக்கில் பயணிப்பது போன்ற நிலைமைதான்!


மேற்படி விமான விதிப்படி, எம்மைப் போன்ற சாமானியர்கள்  ஆளுக்கு ஒரே ஒரு சரக்குப்பெட்டி தான் -23 கிலோ- கொண்டு போகலாம். அத்துடன் கைப்பெட்டி ஆக ஏழு கிலோ கொண்டு போகலாம். சரக்குப் பெட்டி அவர்கள் வசமும் கைப்பெட்டி  நம் வசமும் இருக்கும். நாம் விரும்பினால் கைப் பெட்டியையும் சரக்குப் பெட்டியுடன் கொடுத்துவிட்டுக் கை வீசிக் கொண்டு விமானத்தில் ஏறிக் கொள்ளலாம். இங்குதான் ஒரு வேடிக்கை நடந்தது. 


குள்ளமான, ஒல்லியான, வயதான ஒருவரிடம் இதுபோல, சரக்குப்பெட்டியுடன் அவருடைய கைப்பெட்டியையும் வாங்கிக்கொண்டு இரண்டு ரசீதுகள் கொடுத்தார்கள். சரி என்று போனவர் சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்து அவர்களிடம் கெஞ்சினார். "அய்யோ, என் மகன் கைப்பெட்டியைப் பத்திரமாக என்னிடமே வைத்துக் கொள்ளச் சொன்னாரே! நீங்கள் எடுத்துக் கொண்டு விட்டீர்களே! தயவுசெய்து திருப்பிக் கொடுங்கள்! அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?"  என்று அரை மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அடம் பிடித்தார். இந்தி பேசும் நான்கைந்து   அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்த, பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் இரண்டில் ஒன்று மட்டுமே கொண்ட,  ஆங்கிலத்தில் பலவாறாக விஷயத்தை விளக்கிய பின்னும் நிம்மதி இல்லாமல் தான் அவர் வண்டியில் ஏறினார். 


இன்னொரு அம்மையார் அமெரிக்காவில் 'எந்த முகவரிக்குச் செல்கிறீர்கள்' என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார். அமெரிக்காவுக்கு பயணமாவோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய கேள்வி இது. நம் மகனும் மகளும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருந்தாலும்கூட அவர்களின் வீட்டு முகவரி நமக்கு மனப்பாடமாக இருக்காது அல்லவா? எனவே ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. அவர்கள் கேட்கும் போது காட்டிவிடலாம். இல்லையென்றால் விமானத்தில் ஏற விடமாட்டார்கள். வீட்டு எண் தெரியாவிட்டாலும் தெருப் பெயரையாவது, அடுக்குமாடிக் கட்டிடத்தின் பெயரையாவது கூறியாக வேண்டும். நல்லவேளையாக இந்த அம்மையாரிடம் மொபைல் போன் இருந்தது. சென்னைக்கு போன் செய்து, தான் போக வேண்டிய முகவரியைக் குறுந்தகவலாகப் பெற்று அவர்களிடம் கொடுத்தார்.


யுனைடெட் ஏர்லைன்ஸ்-இல் இன்னொரு அதிருப்தியான விஷயம் அதன் குளிர் சாதனம். பாதி நேரம் வியர்த்து வழிந்து கொண்டுதான் இருந்தோம். 


ஒருவழியாக நுவார்க் (Newark) விமான நிலையத்தில் சரியான நேரமான காலை 6:30 க்கு இறங்கிய போது மிகவும் குளிர் எடுத்தது. பெட்டியினுள் இருந்து ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டேன். லேசாக மழையும் பொழிந்தது.


                                                 நுவார்க் விமான நிலையம்                     

   

என் மகனும் மருமகளும் மற்றும் யாரை முதல்முறையாக, முக்கியமாகப் பார்ப்பதற்காக இந்த முறை பயணம் செய்தேனோ அந்தப் பேரக்குழந்தை தியானும் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். இன்னொரு இடத்தில் குடியிருக்கும் என் மகளும் மருமகனும் பத்து வயதுப் பேரன் வினயனும் அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள். இரண்டு பேரக் குழந்தைகளையும் ஒருசேரப் பார்த்ததில் என் மனைவிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.  எனக்கு மட்டும் இல்லாமலா? 


ஆனால் பதினைந்து மாதக் குழந்தையான தியானுக்கு எங்களைப் பார்த்ததில் ஒரு நிமிடம் தான் மகிழ்ச்சி. அடுத்த நிமிடம் அம்மாவை இறுக்கிக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான். ஆனால் அவனுக்கு நான் வழக்கமாகப் பாடும் 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா' பாடியவுடன் எங்களை யார் என்று புரிந்து கொண்டதன் அடையாளமாகப் புன்னகைத்தான்.  ஆனாலும் அம்மாவை விட்டு   இறங்க மறுத்து விட்டான். 


கோவிட் முன்னெச்சரிக்கை வசதியாக, சில  நாட்கள் மகள் வீட்டில் கழித்த பிறகு தியான் வீட்டுக்குப் போகலாம் என்ற ஒருமித்த கருத்து உருவானதையொட்டி, மகளுடன் ஹேக்கன்ஸாக்கை அடைந்தோம்.


சில மாதம் முன்பு தான் வாங்கிக் குடியேறிய புது வீடு. புத்தாக்க வேலைகள் சில இன்னும் பாக்கி இருந்தன. அழகான வீடு. தோட்டம் போடுவதற்கான பெரிய இடம். எழுத்தாளர்கள் அமர்ந்து சிந்திக்கும் படியான சூழலை உண்டாக்கும் வெளிச்சமான புல்வெளி. என்னுடைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு என் மருமகன் வாங்கி வைத்திருந்த சில பொருட்கள்… ….அதை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.


(தொடரும்.)

****


29 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான நகைச்சுவையான பயணக் கட்டுரை .சுவையாக இருந்தது Donut போல .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! உங்கள் பயணக் கதையையும் எழுதுங்களேன்!

      நீக்கு
  2. நினைத்தேன் சார். அமெரிக்கா போனதும் எழுதத் தொடங்கிவிடுவீர்கள் என்று!!!!!!!!!!! ஹாஹாஹா..

    //மூவரின் வயதையும் கூட்டினால் நிச்சயம் இருநூறைத் தொடும்.//

    ஹாஹாஹாஹா குறும்புதான் சார் உங்களுக்கு!!!

    என்ன இது விமான சேவை இப்படியாகிவிட்டது? கொரோனா சாப்பாடு, தண்ணீரையுமா கொண்டு போய்விட்டது?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எல்லாம் கொரொனாவின் பங்களிப்புதான்! மற்ற நாட்களில் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லையாம்!

      நீக்கு
  3. சரக்குப் பெட்டியில் எடை அளவு மாறி ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதே...

    பேரன்களோடு எஞ்சாய் மாடி! சார்!!

    மருமகன் வாழ்க! வழக்கம் போல இடையிடையே நகைச்சுவை ஊடுருவலுடன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடங்கள் என்று தவறுதலாக வந்துவிட்டது. கொரோனா நேரத்தில் பபிள் ஃப்ளைட் விட்ட போது வந்துவிட்டது என்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டதே என்று சொல்ல வந்தது..

      கீதா

      நீக்கு
  4. அமெிக்காவிலிருந்து தமிழ்......
    AR Rahman சொன்னதைபோல தமிழ் தான் இணைப்பு மொழி.... சிரமமான நகைச்சுவை குறிப்பு....

    பதிலளிநீக்கு
  5. அமெிக்காவிலிருந்து தமிழ்......
    AR Rahman சொன்னதைபோல தமிழ் தான் இணைப்பு மொழி.... சிரமமான நகைச்சுவை குறிப்பு....

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  7. கலக்கி விட்டீர்கள். அமெரிக்காவில் செல்லப்பா என்ற உங்கள் அனுபவத்தை வாசிங்டனில் திருமணம் என்ற நூலை போல் தொடர்ந்து எழுதுங்கள். மறக்காமல் தமிழிச்சி கமலா ஹரிசை சந்தித்து ஊருக்கு வந்து போகும் படி சொல்லுங்கள் . தமிழ்’ நாட்டுக்கு அது பெருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உக்ரைன் போர் முடிவுக்கு வந்தவுடன் அவர்களைச் சந்திக்கிறேன். சரியா?

      நீக்கு
  8. அருமையான பயணக் கட்டுரை உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் . உங்களுடன் சேர்ந்தே பயணித்த உணர்வு ஏற்பட்டது . மதுரைக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்தமான நியூயார்க் நகருக்குக் கூட்டிச் செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் .

    பதிலளிநீக்கு
  9. அந்த விமானத்தில் பயணம் செய்யாமலேயே அந்த சிரமங்களை உணர வைத்து விட்டது உங்கள் எழுத்து. நகைச்சுவை நடை நனி நன்று. நியூ ஜெர்சி போக வாய்ப்பிருந்தால் அழகிய ஹட்சன் நதியையும், இரட்டைக் கோபுர நினைவையும் அவசியம் அனுபவித்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நேயர் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றப்படும்!

      நீக்கு
  10. 23கிலோவில் 2 பெட்டி என்பது மாறிவிட்டதா...நான் மே இரண்டாம் வாரத்தில் வருகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிட் காரணமாக ஒவ்வொரு ஏர்லைனும் ஒவ்வொரு விதியைப் பின்பற்றுகிறது. Vistara + United Airlines இல், எகானமி கிளாசில் ஒரே ஒரு பெட்டி, அதுவும் 23 கிலோதான். பிஸினஸ் கிளாசில் 30 கிலோ. இரண்டாவ்து பெட்டி கொண்டுவந்தால் 100 டாலர் கட்டவேண்டும். நீங்கள் பயணம் செய்வதற்கு முதல் நாள் என்ன விதியோ அதுவே உங்கள் அப்போதைய தலைவிதியாக இருக்கும்!

      நீக்கு
  11. ஆரம்பமே களை கட்டுகிறது..Air India வை சகட்டுமேனிக்குச் சாடிக்கொண்டிருந்தவர்களுக்கு வீட்டுக்கு வீடு
    வாசல்படி என்பது புரிந்திருக்கும்..
    அடிக்கடி எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏர் இந்தியாவும் நாமும் கணவன் மனைவி மாதிரி. ஒருவரையொருவர் சாடிக்கொண்டாலும் இல்லற சேவையில் குறை வராது. மற்ற ஏர்லைன்கள் வரைவின் மகளிரைப் போல. பிஸினஸ் கிளாசுக்கு மட்டுமே சேவை!

      நீக்கு
  12. சார் அமெரிக்கா பயணமா? பதிவை ரசித்து வாசித்தேன்.

    விமானத்தில் இவ்வளவு சங்கடங்களா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் உக்ரேனும் ரஷ்யாவும் விமானப்பயணத்தையே நிறுத்திவிட்டார்களோ?

      நீக்கு
  13. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி. பயண அனுபவத்தைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா! எழுதியதைப் புத்தகமாக வெளியிடுவதிலும், சில மொழிபெயர்ப்புகளிலும் நேரம் போய்விட்டதால் வலைப்பதிவுகளைத் தவிர்த்துவந்தேன். இன்றுமுதல் சில மாதங்கள் தொடர்ந்து வலையில் எழுதுவேன். நான் எழுதாவிட்டாலும் நமது நண்பர்களின் பதிவுகளைப் படித்துக்கொண்டுதான் இருந்தேன். வாட்ஸப் என்னும் அரக்கி நமது நேரத்தைப் பெரிதும் விழுங்கிவிடுவது நீங்கள் அறியாததா? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சினிமா, அரசியல், கிளுகிளுப்பு என்று பல கருத்துக்களை நம்மீது திணிக்கிறாள். இந்தச் சூர்ப்பணகையின் மூக்கை அறுக்கும் இலக்குவத்தனம் நம்மிடம் இல்லையே!

      நீக்கு
  14. பதில்கள்
    1. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே! நலமா? தொடர்ந்து எழுதவேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களையும் மீண்டும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
  15. முதல் பந்திலேயே சிக்சர் மாதிரி , சில வருடங்கள் கழித்து ஆரம்பித்தாலும், தூள் பரத்தும் ஆரம்பம் !!!. என்ன மூஞ்சி பூரா சிரிப்பா இருக்கு அப்பட்டினு துணைவியார் கேட்க்குமளவு வாசித்து முடியும் வரை, முடித்த பின்னும் சிரித்தபடியே இருந்தேன். தினமும் ஒரு பதிவு . தொடருங்கள் !!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன, என் பதிவை நீங்கள் படித்து, அதை உங்கள் தேவியார் ரசித்தாரா! இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? தொடர்ந்து எழுதுவேன். நன்றி.

      நீக்கு
  16. நகைச்சுவை ததும்பும் பதிவு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல துவக்கம்... விமானப்பயண அனுபவம் என்றே ஒரு கட்டுரை எழுதலாம் நீங்கள்

    பதிலளிநீக்கு