சனி, ஏப்ரல் 16, 2022

பட்டு டாக்டரும் பத்து ரூபாயும் (இன்று கிழமை சனி -1)


பட்டு டாக்டரும் பத்து ரூபாயும்

(இன்று கிழமை சனி -1)

(இப்படியும் மனிதர்கள்) 

16-4-2022

அமெரிக்காவில் ஐந்தாவது நாள்


நியூஜெர்ஸியில் இன்று குளிர் சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் 5:30 மணிக்கு எழ வேண்டிய நான் 6.30க்குத்தான் எழுந்தேன்.


ஏப்ரல் மாதத்து  'பூபாளம்' அச்சு இதழின் ஃபிளிப் காப்பி வாட்ஸ் அப்பில் இறங்கியிருந்தது. மிக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். ஏராளமான கவிதைகள், கதைகள் கட்டுரைகள், துணுக்குகள் இடம் பெற்றுள்ளன.  போதாததற்கு வவேசு அவர்களின் சங்கத் தமிழ்க் கட்டுரையும், என்னுடைய ஒரு பேய்க் கதையும் வந்திருக்கின்றன. கௌரி கிருபானந்தனின் தெலுங்கு மொழிபெயர்ப்பு  கதையும் உண்டு. நம் அனைவராலும் ஆதரிக்கப்பட வேண்டிய இதழ் பூபாளம்


அடுத்து நான் பார்த்தது குவிகம் மின்னிதழ்-ஏப்ரல் இதழ். இந்த முறையாவது முந்திக்கொள்ள வேண்டும் என்று  மின்-குறுக்கெழுத்தை அவசரம் அவசரமாகப் பூர்த்தி செய்து அனுப்பி இருக்கிறேன். பார்க்கலாம் இந்த மாதம் ஆயிரம் பொன் யாருக்குக் கிடைக்கும் என்று! (மற்ற கதை கட்டுரைகளை இரவு தான் படிக்கவேண்டும்.)


*** 

அமெரிக்காவில் டாக்டர்களைப் பார்ப்பது என்பது உடனடியாக நடக்கும் விஷயம் அல்ல. பல்வலி என்றாலும் பத்து நாள் கழித்து வரச் சொல்வார்கள். இன்ஷூரன்ஸைக் காட்டு என்பார்கள். இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவிலும் இந்த நிலைமை வந்துவிடும் என்று நினைக்கிறேன். நல்ல டாக்டர்கள் இப்போதெல்லாம் ரொம்பவும் பிகு செய்து கொள்கிறார்கள்.


ஆனால் நான் தேன்கனிக்கோட்டையில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது டாக்டர்கள் நோயாளியின் வீடு தேடி வரும் வழக்கம் இருந்தது. ஊருக்கு ஒன்றிரண்டு தொலைபேசி மட்டுமே இருந்த காலம். நேரில் போய் டாக்டர் வீட்டில் சொல்லிவிட்டு வந்தால், தன்னுடைய பழைய மோட்டார் பைக்கில் ஒரு கனமான தோல் பையோடு கிளம்பிவருவார் டாக்டர். (எந்த டாக்டரும் புதிய பைக் வாங்காதது ஏனோ?) 


எங்கள் தெருவில் யாருக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்தாலும் உடனடியாக பைக்கில் வந்து விடுவார் டாக்டர் பட். (Dr. Bhat). உடுப்பியில் இருக்கும் துளுவோ,  கொங்க்கணியோ பேசும் Bhat அல்ல இவர். சுத்தமான கன்னடர். கன்னடத்தில் BHA என்ற எழுத்து இருப்பதால், அவர்கள் இவர் பெயரை bhatடு டாக்டர் என்று சரியாக உச்சரிப்பார்கள். நம் தமிழில் அது இல்லாததால்,  என் பாட்டி இவரை பட்டு (pat-tu) டாக்டர் என்றே அழைப்பார். 


பட்டு டாக்டர் கம்பீரமாக இருப்பார். சிரித்த முகத்தோடு ஜொலிப்பார்.  அவருடைய வீட்டிற்கும் எங்கள் தெருவுக்கும் ஒரு கிலோ மீட்டர் இருந்தாலும், அவர் பைக்கை ஸ்டார்ட் செய்யும் ஓசை  குளியலறையில் இருந்தாலும் தெளிவாகக் கேட்கும். 


என் தாத்தா பாட்டி குடியிருந்தது, மங்களூர் ஓடு வேய்ந்த ஒரு தனி வீடு. வீட்டின் உரிமையாளரான முனிசிபல் காண்ட்ராக்டர், அதற்கடுத்த வீட்டில்தான் இருந்தார். அவருடைய மாடி வீடு தான் தெருவிலேயே பெரிய வீடு. அவருடைய மனைவி சற்றே உயரமாக, செக்கச்செவேல் என்று இருப்பார். பி சுசீலா மாதிரி அழகாகத் தமிழ் பேசுவார். அவருக்கு மூன்று நான்கு குழந்தைகள். ஒரு குழந்தை என் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது. மூர்த்தி என்று அழைக்கலாமே!


பணக்காரர் என்பதால், காண்ட்ராக்டர் வீட்டில் யாருக்காவது தும்மல் வந்தாலும் உடனே மூர்த்தி சைக்கிளில் போய் பட்டு டாக்டரை அழைத்து வந்து விடுவான். அவரை வரவேற்கத்  தெருவே கூடி நிற்கும். எல்லோருடைய பெயரும் இனிஷியலோடு  டாக்டருக்குத் தெரியும். அப்போது ஊரில் இருந்தது இரண்டு டாக்டர்கள் தான். அதில் இரண்டாவது டாக்டரைப் பெரும்பாலும் எங்கள் தெரு தவிர்த்துவிடும்.  அவர் வந்து போனால் அடுத்த நாளே வீட்டில் சங்கு ஊதும் என்பார்கள்.


மூர்த்தி வீட்டுக்குப் பட்டு டாக்டர் வரும் போதெல்லாம் அவர்கள் வீட்டின் கிணற்றடியில் இருந்து எங்கள் வீட்டிற்குள் நுழைந்து என் பாட்டியையும் அவர் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 


பாட்டிக்கு என்ன நோய் என்று யாருக்கும் தெரியாது. அவருக்கும் டாக்டருக்குமே  கூடத் தெரியாது என்றுதான் எல்லாரும் நம்பினார்கள். சற்றே கூன் போட்டபடி, எப்போதும் சுவரில் பாதியும், அருகிலிருந்த ஜாதிக்காய் பெட்டிமீது பாதியும் சாய்ந்தபடிதான் பாட்டி யிருப்பார். 


தன் விலை உயர்ந்த நகைகளை அந்தப் பெட்டியில் வைத்து இருப்பதால் தான் அதன் மீது சாய்ந்து இருக்கிறார் என்பது மூர்த்தியின் தாயாரின் எண்ணம்.  ஆனால் முந்திரி, திராட்சை, பாதாம் போன்றவைகளை ஹார்லிக்ஸ் பாட்டில்களில் போட்டு என் கண்களுக்குத் தெரியாதபடி அந்தப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்தார் பாட்டி என்பது தான் உண்மை. 


பட்டு டாக்டர் வந்து பாட்டியின் அருகில் நின்று, "அஜ்ஜீ! சௌக்கியமா?" என்பார். மிகுந்த சிரமப்பட்டு முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு "ஏதோ இருக்கேன். இந்த முறையாவது கொஞ்சம் நல்ல மருந்தாகக் கொடுங்கள்" என்பார் பாட்டி மிக இயல்பாக.


பட்டு டாக்டரும் அதற்குச் சளைக்காமல், "இப்போதே நல்ல மருந்து கொடுத்து விட்டால் நோய் குணமாகிவிடுமே! அப்புறம் வருமானத்துக்கு நான் என்ன செய்வது?" என்று மாயா பஜார் சிரிப்பு சிரிப்பார். 


ஆனால் அவர் மருந்துக்குப் பணம் கேட்டதாகவோ,  பாட்டி அவருக்குப் பணம் கொடுத்ததாகவோ எனக்கு நினைவில்லை. ஆனாலும் மூர்த்தி வீட்டுக்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கும் வரத் தவறவில்லை பட்டு டாக்டர்.


ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து நானும் மூர்த்தியும் திரும்பி இருந்தோம். அவன் சைக்கிளில் வருவான். நான்  நடந்தே அவனை விட வேகமாக வந்து விடுவேன். வந்தவுடன் காப்பி குடித்துவிட்டு அவன் டியூஷனுக்குப் போய்விடுவான். நான் நேராக அவன் வீட்டிற்குப் போய் அந்த வாரத்து குமுதம், கல்கண்டு,  விகடனை அவன் வருவதற்குள் படித்து முடித்து விடுவேன். சில சமயம் கலைமகளும் கிடைக்கும். 'பவுன்ஸ் ஜர்ன'லும் ராஜாஜியின் 'ஸ்வராஜ்யா'வும் நிச்சயம் இருக்கும். அதை வீட்டுக்குக் கொண்டு வந்து எழுத்துக் கூட்டிப் படிப்பேன். இந்தச் சலுகைக்காகவே மூர்த்தியின் அம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை நான் மறுக்காமல் செய்வேன். 


அன்றும் அப்படித்தான். "ஓடிப்போய் பட்டு டாக்டரை அழைத்துக் கொண்டு வா" என்றார் மூர்த்தியின் அம்மா.  "பாட்டிக்குத் தெரிய வேண்டாம். ஏனென்றால் இனிமேல் ஓசியில் யாருக்கும் மருந்து கொடுக்க மாட்டேன் என்று டாக்டர் என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்றார். எனக்கு என்னவோ போலிருந்தது.


டாக்டர் வந்தார். மூர்த்தி வீட்டில் நிறைய நேரம் செலவிட்டார். வழக்கமாகக் கிணற்றடிக்கு வந்து பாட்டியைப் பார்க்க வருபவர், அன்று வரவில்லை. மோட்டார் பைக்கின் ஓசை அடங்கும் வரையில் பாட்டி நம்பிக்கையோடு இருந்தார். தாத்தா வெளியூர் போய் இருந்தார். "தாத்தா வந்தவுடன் டாக்டருக்கு என்று ஐந்து ரூபாய் வாங்கி வைத்துக்கொள். அடுத்த முறை வரும்போது கொடுத்துவிடலாம்" என்றார் பாட்டி. அவர் மனம் மிகவும் வருந்தியிருக்கவேண்டும்.


சில மாதங்கள் கழிந்த பிறகு ஒருமுறை பாட்டிக்கு மிகவும் அதிகமாக முதுகு வலி ஏற்பட்டது. அதைப் பார்த்த எனக்கே பொறுக்க முடியவில்லை. நானாகவே ஓடினேன். "டாக்டர் தயவு செய்து வாருங்கள்" என்றேன்.


கிளினிக்கில் அப்பொழுது வேறு நோயாளிகள் யாரும் இல்லை என்றாலும் பட்டு டாக்டர் அவசரம் காட்டவில்லை. "இல்லி நோடு, பையா! இதுவரை உன் பாட்டிக்கு கொடுத்த மருந்துக்கு ஒரு பைசாவும்  வரவில்லை. நீயே சொல், எத்தனை நாளைக்கு நான் தர்மத்துக்கு வைத்தியம் பார்ப்பது?" என்றார். 


"உன் பாட்டிக்கு இலவசமாக மருந்து கொடுப்பதால் தெருவில் உள்ள எல்லோரும் என்னிடம் இலவசமாகவே எதிர்பார்க்கிறார்கள். அதனால் என் பெயரே பாழாய்ப் போகிறது. இனிமேல் உங்கள்  தெருவுக்கே  நான் வரப் போவதில்லை. நீ போகலாம்" என்று கத்தினார்.


அவர் அம்மாதிரி கத்துபவர் அல்ல. மிகவும் கனிவானவர் என்று எனக்குத் தெரியும். ஆகவே நகராமல் அங்கேயே நின்றேன். நான் முடிக்க வேண்டிய வீட்டுப் பாடங்கள் நிறைய இருந்தன. 


பட்டு டாக்டர் எழுந்தார். கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை வேகமாகக் குடித்தார். "பையா! ஒன்று செய். நான் போய் உன் பாட்டியைப் பார்த்துவிட்டு வருகிறேன். அதுவரை கிளினிக்கைப் பார்த்துக் கொண்டிரு. வேலைக்காரப்  பையன் ன்று வரவில்லை. எங்கெல்லாம் அழுக்கு இருக்கிறதோ அதையெல்லாம் நன்றாகத் துடைத்து வை. நோயாளிகள் வந்தால் டாக்டர் இதோ வந்து விடுவார் என்று உட்கார வை. அவர்களின் பெயரையும் வயதையும் இந்த நோட்டில் எழுதி வை. யாரையும் போக விடாதே. செய்வாயா?" என்றார்.


அப்பாடா என்றிருந்தது எனக்கு. பாட்டியின் வலிதீர்வது தான் எனக்கு முக்கியம். அதற்காக எந்த வேலை செய்யவும் நான் தயார்.


டாக்டர் எங்கள் வீட்டுக்கு கிளம்பினார். நான் அவர் கொடுத்த வேலையில் இறங்கினேன். அன்று ஆறு நோயாளிகள் வந்து இருந்தார்கள். அவர்களை இனிமையாகப் பேசி உட்கார வைத்தேன். டாக்டர் திரும்பி வந்தபோது அவருக்கு ஆச்சரியம். எப்போதும் 3 பேருக்கு மேல் இருக்க மாட்டார்களாம். "உனக்கு முகராசி இருக்கிறது" என்று மகிழ்ச்சியோடு சொன்னவர், "பாட்டிக்கு ஒரு வாரம் மருந்து தருகிறேன், எடுத்துக் கொண்டு போ. அத்துடன் நீ செய்த வேலைக்காக இதோ பத்து ரூபாய்" என்றார். 


நான் மருந்தைப் பெற்றுக் கொண்டு, பணத்தை வேண்டாம் என்றேன். "முட்டாள் பையா! இந்தப் பணம் உனக்கு இல்லையடா! அடுத்த வாரம் நான் பாட்டியைப்  பார்க்க வரும்போது உன் பாக்கெட்டிலிருந்து கம்பீரமாக எடுத்து இந்தப் பத்து  ரூபாயை எனக்குத் தர வேண்டும். புரிந்ததா?" என்றார்.


புரிந்தது. தன் தொழில் மீதான அவருடைய மரியாதை புரிந்தது. ஏழைகளுக்குத்  அவர் செய்ய விரும்பிய கடமை புரிந்தது. ஏழைகளின் தன்மானத்தை அவமதித்து விடக்கூடாது என்ற அக்கறை புரிந்தது.


பட்டு டாக்டர் 75 வயது வரையில் உயிரோடு இருந்தார் என்று கேள்வி. இன்றும் ஒவ்வொரு ஊரிலும் ஒரே ஒரு பட்டு டாக்டர் ஆவது நிச்சயமாக இருப்பார் என்றுதான் நம்புகிறேன். இருக்க வேண்டும்.

 • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து


25 கருத்துகள்:

 1. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லையென்றால் அடுத்த தெருவில் உள்ள உறவினர் வீட்டில் உள்ள தொலைபேசி வழியாக டாக்டர் எம்.கே.எஸ்.அவர்களுக்கு அழைப்பு விடுப்போம். அவர் எங்கள் இல்லத்திற்கு வந்து தாத்தாவைப் பார்த்துவிட்டு மருந்து எழுதிவிட்டுத் தருவார். அவரை குடும்ப டாக்டராகவே கருதினர். அவருடைய மருத்துவமனை கும்பகோணம் விஜயலட்சுமி தியேட்டர் எதிரில் எம்.கே.எஸ்.ஆஸ்பிடல் என்றிருந்தது. என்றும் புன்னகை. அவரைப் பார்த்தாலே நோய் ஓடிவிடும். நான் சொல்வது 1970க்குள் நடந்த நிகழ்வுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! அந்த நாட்களில் சேவை மனப்பான்மைக்கு டாக்டர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதுடன், மக்களிடமும் பணப்புழக்கம் குறைவு.

   நீக்கு
 2. என் சிறு வயதில் இதே போல ஒரு டாக்டர் இருந்தார் .எப்போதும் ஒயிட் ட்ரஸ். அவரை வெள்ளை டாக்டர் என்போம். வீட்டுக்கே வருவார். பழைய மோட்டார் சைகில். என் நினைவுகளைப் பின்னோக்கித் தள்ளிய உங்கள் கட்டுரை அருமை

  பதிலளிநீக்கு
 3. பட்டு டாக்டர், மூர்த்தி, பாட்டி என அனைத்து கதை மாந்தர்களும் கண் முன் உலவுவது போன்று ஒரு எண்ணம் உங்கள் எழுத்தை படித்த போது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் பிசியான வெங்கட் என்னுடைய வலைத்தளத்திற்கு வருவது என் பாக்கியமே!

   நீக்கு
 4. மிக நல்ல பதிவு ஐயா! மிக்க நன்றி , தொடர்ந்து இது போன்ற கடந்த கால வாழ்வியல் நிகழ்வுகளை எழுத வேண்துகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறதி நோய் போன்றவை வருவதற்கு முன்பே எழுதிவிடவேண்டும் என்று பார்க்கிறேன்!

   நீக்கு
 5. அப்படியும் ஒரு காலம் இருந்தது; இப்படியும் சில டாக்டர்கள் இருந்தனர்!

  பதிலளிநீக்கு
 6. Bhaட் டாக்டர் ஏதோ எங்களுக்கும் ரெம்ப தெரிந்த டாக்டராக நெருங்கியவராக்கிவிட்டீர்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 7. பட்டு டாக்டர் பட்டு டாக்டர்தான். இப்படியான எளிமையான மருத்துவர்கள் இப்போதும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

  10 ரூபாய் என்றாலும் அந்தக் காலகட்டத்தில் அந்த 10 ரூபாயின் மதிப்பு அதிகம்.

  இப்போதும் அதே 10 ரூபாய் டாக்டர், ஏன் 1 ரூபாய் டாக்டர் கூட இருப்பதாக எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்தியில் வந்த நினைவு.

  பாட்டிக்காக நீங்கள் செய்தது மனதை நெகிழ்த்தியது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக பட்டு டாக்டர்கள் பல ஊர்களில் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க!

   நீக்கு
 8. எழுதுவது இருக்கட்டும், இப்படி நினைவுகளை கோர்வையாக, சுவையாக சொல்வது கூட எம்மில் பலருக்கு கடினமான காரியம்.ஆனால், நீங்கள் அனாயாசயமாய் , சுவை குறையாமல், கச்சிதமாக எழுதுகிறீர்கள்.இன்றும் அது போல பட்டு டாக்டரைப் பார்க்க வேண்டும் என ஆசை வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 500 முதல் 700 சொற்களுக்குள் எழுதினால் வாசிப்பது சுலபம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!

   நீக்கு
 9. ஆஹா.. அடுத்த அறிமுகம் யாருக்கோ? சிறு வயதில் நான் உங்கள் ஊரில் இருக்கவில்லையே என வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது வருந்தி என்ன பயன்? போன பிறவியில் வருந்தியிருக்கக்கூடாதா? நீங்கள் யார் என்பதையாவது தெரிந்துகொண்டிருப்பேனே!

   நீக்கு
 10. 70 களில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர் பட் இருந்தார். ஆர் எம் ஓ குடியிருப்பில் வசித்தார். அவர்தானா இவர் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. But, this Bhat is different from your Bhat! இவர் அந்த ஊரைவிட்டு வேறெங்கும் போனவரில்லை!

   நீக்கு
 11. இன்றைக்கு அரிது... ஆனாலும் சில தெய்வங்கள் உள்ளனர்...

  பதிலளிநீக்கு
 12. அவர் வந்து போனால் அடுத்த நாளே வீட்டில் சங்கு ஊதும் என்பார்கள்.

  இதை படித்து விட்டு நன்றாக சிர்த்தேன்.

  இதைப் படித்து மனம் நெகிழ்ந்தது.:

  தன் தொழில் மீதான அவருடைய மரியாதை புரிந்தது. ஏழைகளுக்குத் அவர் செய்ய விரும்பிய கடமை புரிந்தது. ஏழைகளின் தன்மானத்தை அவமதித்து விடக்கூடாது என்ற அக்கறை புரிந்தது.


  பதிலளிநீக்கு
 13. கடந்த காலத்தை கண் முன் கொண்டுவந்து விட்டீர். ஊருக்கொரு பட்டு டாக்டர் வெவ்வேறு பெயரில்.

  பதிலளிநீக்கு