இன்று கிழமை புதன் -1
(அட்லாண்டிக் கடலோரம்)
13-4-2022
அமெரிக்காவில் இரண்டாவது நாள்
'ஜெட் லேக்' ஏதுமின்றி காலை ஐந்தரை மணிக்கே வழக்கம்போல் விழிப்பு வந்துவிட்டது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். வானில் வெண் பனி மூட்டம். லேசான குளிர். சாலையில் நியூயார்க் செல்லும் பஸ்கள் விரைந்து கொண்டிருந்தன.
மனைவியும் மகளும் எழுவதற்கு நேரம் ஆகலாம். காப்பி இன்று தாமதம்தான். நானே சென்று போட்டுக்கொள்ளலாம்தான். ஆனால் எது எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமே!
விடுங்கள், ஒருநாள் தாமதமாகத்தான் காபி அருந்தலாமே, உக்ரைன் போரா நின்று விடப் போகிறது! இல்லை ஏ ஆர் ரகுமான் தன்னுடைய தமிழ்த்தாய் படத்தின் பேய்விரிகூந்தலுக்கு எண்ணெய் தேய்த்துப் பின்னிவிடப் போகிறாரா?
ஏனோ தெரியவில்லை தூக்கத்தில் கஜேந்திர பாபுவின் நினைவு வந்தது.
கஜேந்திர பாபு, இராணிப்பேட்டை போர்டு ஹைஸ்கூலில் என்னுடன் 11 வரை படித்தவர். கல்லூரிக் காலத்தில் பிரிந்து விட்டோம். ஒல்லியாக உயரமாக இருப்பார். கலைத் திறன் மிக்க விரல்களை உடையவர். ஒருநாள், என்னுடைய தபால் தலை சேகரிப்பை மொத்தமாக எடுத்துக் கொண்டு, தன்னுடைய மிகப்பழைய தான ஒரு டென்னிஸ் பந்தை எனக்குக் கொடுத்தவர். பழையதாக இருந்தாலும் மழமழப்பாக இருந்ததால் அந்தப் பந்தின் மீது எனக்கு ஒரு காதல். ஆனால் அது நிலைக்கவில்லை. காலணா பொறாத பழைய ஸ்டாம்புகளைக் கொடுத்து விட்டுத் தன் பையனின் 'விலை உயர்ந்த' டென்னிஸ் பந்தை நான் அபகரித்துக் கொண்டு விட்டதாக அவருடைய பெற்றோர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டதால், பந்து மீண்டும் பாபுவிடமே போய்விட்டது. விரக்தியோடு நான் ஸ்டாம்புகளைத் தூக்கிச் சாக்கடையில் எறிந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பின், இராணிப்பேட்டை எவரெஸ்ட் தியேட்டரில் ஒரு படம் பார்த்துக்கொண்டிருந்த இடைவேளையில் கஜேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பேசப்பட்டது. என் சக மாணவர்கள் தான். "லாயருக்கு லாயக்கில்லை" என்ற அவரது சிறுகதை குமுதத்தில் வெளியாகி 75 ரூபாய் சன்மானமும் கிடைத்ததாம்.
கதைச் சுருக்கமும் அவர்கள் சொன்னார்கள்:
சேகரோ சுந்தரோ ராமுவோ யாரோ ஒரு கதாநாயகன். இலட்சியவாதி. வக்கீல் தொழில் செய்கிறான். நியாயமான வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். ஆகவே பெரும்பாலும் தோல்வி தான். வருமானமும் தேங்காய் மூடிக் கச்சேரி போலத்தான்.
அன்றும் அப்படித்தான் வருமானமின்றி வழக்கமான சோகத்துடன் உள்ளே நுழைகிறான். மனைவியோ ஆசையோடு வரவேற்று ஆவி பறக்கும் காபி கொடுக்கிறாள். (அமெரிக்காவில் மட்டும் ஆவி பறப்பதில்லையே, ஏன்?) கையில் ஒரு கவரை நீட்டுகிறாள். தமிழ்நாடு அரசின் இலச்சினையுள்ள கவர். "உங்களை நீதிபதியாக நியமிக்க இருக்கிறோம், சம்மதமா?" என்று கடிதம் கேட்டது.
அந்த கஜேந்திர பாபு, தன் பெயரை மாற்றிக் கொண்டு பெரிய எழுத்தாளராகவும், மனநல ஆலோசகராகவும், இயற்கை மருத்துவராகவும் வசதியுள்ள வக்கீலாகவும் 'பொதிகை டிவி' யில் சமையல் நுட்பங்களை வெளியிடும் துறையிலும் சிறந்து விளங்குகிறார் என்று கேள்விப்படுகிறேன்.
அதுசரி, திடீரென்று அவருடைய பெயர் ஏன் நினைவுக்கு வரவேண்டும்? சில நிமிட யோசனைக்குப் பிறகு புரிந்து விட்டது.
நான் இருந்த வங்கியில் ஒரு பேச்சு உண்டு, மேலதிகாரிகள் பின்பற்றும் ஒரு வழக்கத்தைப் பற்றி. "வேலை செய்ய விரும்புபவனுக்கு வேலையைக் கொடு. வேலை செய்யத் தயங்குபவனுக்கு புரொமோஷனைக் கொடு" என்பார்களாம். அந்த நினைவோடு இரவில் படுத்ததால் தான் கஜேந்திரபாபு வந்திருக்கிறார். லாயருக்குத் தானே லாயக்கில்லை, நீதிபதியாகிவிடவில்லையா கதாநாயகன்!
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது இந்த அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார்களா என்ன?
**
சாலையில் வண்டிகள் வலது புறமாகச் செல்கின்றன. வலதுசாரிக் கொள்கை உடைய நாடு என்பதாலும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் எல்லா ஊர்களிலும் பஸ்வசதி கிடையாது. சொந்தக்கார் இல்லையென்றால் துந்தனா போட வேண்டியதுதான். அதிலும் பெரு நகரங்களுக்கு வெளியே நம்மூர் ஐடி இளைஞர்களை 'லோ காஸ்ட் சென்டர்' எனப்படும் சிற்றூர்களில் வேரில்லாத செடியாக நட்டு வைத்திருக்கிறார்களே, அந்த இளைஞர்கள் அலுவலகம் செல்வதற்கும் கடைகளுக்குச் செல்வதற்கும் போக்குவரத்து க்குப் படும்பாடு சொல்லி மாளாது!
அதையெல்லாம் பிறகு சொல்கிறேன். இப்போது குருவிகளிடம் வருவோம்.
அதில் பறவைகளுக்காக விசேஷ உணவு காலையில் வைக்கப்படுகிறது. பறவைகளின் உணவை அணில் கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக, தரையில் அணில்களுக்கு என்று தனியாக உணவு வைக்கப்படுகிறது. இங்கு அணில்கள் முயல் குட்டிகளை விடப் பெரிதாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன். மாதம் 200 டாலர் ஆகும் என்றாள். அதாவது 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல்!
நான்கு வருட இன்ஜினியரிங் படிப்பிற்குப் பிறகு நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்கும் தொகை 15 ஆயிரம் ரூபாய்! அது, இன்ஜினியரிங் படிக்காமலேயே இந்தக் குருவிகளுக்குக் கிடைத்துவிடுகிறது!
வேண்டாம், தத்துவங்கள் இதோடு நிற்கட்டும். இல்லையென்றால் சம்பந்தா சம்பந்தமில்லாத வேறு நண்பர்களின் நினைவு இன்று
தூங்கும்போது வந்து விடக்கூடும்!
-இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து.
***
கருத்த தமிழ்தாய் தன் கூந்தலை எண்ணையிட்டு நாளையாவது முடிந்து கொள்வாளா ?
பதிலளிநீக்குகுருவிகள் வருகின்றனவா.
பதிலளிநீக்குஇங்கும் கூட அதற்கென்று உணவு வைக்கும் பெட்டிகள் குடும்பம் நடத்த கூடு போன்றவை வீடுகளில் வைக்கிறார்கள்.
காக்கை குருவி எங்கள் சாதின்னும், விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே ன்னு எட்டையபுரத்து மீசைக்கவிஞன் பாடியிருக்கிறாரே. பரவாயில்லை சார், குருவிகள், அணில்கள் மகிழ்வாக இருக்கட்டும்!
இங்கும் வீட்டில் குருவிகள் கறிவேப்பிலை மரத்துப் பழங்களைச் சாப்பிட வருகின்றன. குயிலும்.
//வேண்டாம், தத்துவங்கள் இதோடு நிற்கட்டும். இல்லையென்றால் சம்பந்தா சம்பந்தமில்லாத வேறு நண்பர்களின் நினைவு இன்று
தூங்கும்போது வந்து விடக்கூடும்!//
ஹாஹாஹா
கீதா
நினைவுகூர்ந்த விதம் சிறப்பு. குருவிக்கூண்டு அருமை.
பதிலளிநீக்குஎங்கேயாவது காலையில் சேவல் கூவுவதையும் . குயில் பாடுவதையும் கோவில் மணிஓசையும் கேட்டீரா?
பதிலளிநீக்குசேவலாவது கோழியாவது! குயில்? ஹூஹூம்! ஆலய மணியோசை? சில சமயம் சர்ச்சுகளில் இருந்து கேட்பதுண்டு. காலை நேரத்தில் சத்தியமாக இல்லை!
நீக்குகாஃபி.... உக்ரைன் போர் 😂😂😂😂.....
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐
குருவி... ஆகா...!
பதிலளிநீக்குஇந்த ஊர் குருவிகள் என்னை மதிப்பதில்லை. புழக்கடைக் கதவைத் திறக்கும் ஓசை கேட்டதும் பறந்துவிடுகின்றன. பார்க்கலாம், இரண்டு மூன்று நாட்களில் நம்மோடு பழகுமா என்று. இல்லையென்றால் கமலா அம்மையாரிடம் சொல்லவேண்டியதுதான்....!
நீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. அனைத்தும் ரசித்தேன். குறுவிகளுக்கான ஏற்பாடுகள் நன்று.
பதிலளிநீக்குகுருவிகளுக்கான....
பதிலளிநீக்குஅணில்கள் முயல்குட்டிளை விட பெரிதாக... ஆஹா
பதிலளிநீக்கு