ஞாயிறு, ஏப்ரல் 17, 2022

தாசில்தார் இல்லாத அமெரிக்கா (இன்று கிழமை ஞாயிறு -1)

தாசில்தார் இல்லாத அமெரிக்கா

(இப்படியும் மனிதர்கள்) 

17-4-2022

அமெரிக்காவில் ஆறாவது நாள்



இந்த மனம் இருக்கிறதே அது நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்று தோன்றுகிறது. பின்னே, அமெரிக்காவைப் பற்றி எழுத வேண்டும் என்று உட்கார்ந்தால் ராக்கெட் வேகத்தில் பின்னோக்கிப் பறந்து போய் வாலாஜாப் பேட்டை என்ற ஊரில் தாசில்தார் ஆபீசில் போய் அது ஏன் நிற்கவேண்டும்?


அப்போது நான் இராணிப்பேட்டையில் போர்டு ஹைஸ்கூலில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளியிலும் அதன்பிறகு ஹைஸ்கூலிலும் படிப்பதுதான் அப்போதெல்லாம் வழக்கம். 

நான் எழுதிய நூல்! அமேசானில் கிடைக்கும்



சேர்ந்தவுடன் ஏழு ரூபாயோ எட்டு ரூபாயோ  கட்ட வேண்டியிருந்தது. அது மிகப்பெரிய தொகை என் தந்தைக்கு. மொத்தம் ஆறு பேர் கொண்ட குடும்பம். அப்போது அரிசி விலை பட்டணம் படி பத்தணா- அதாவது ஒரு கிலோ முப்பது பைசா தான்!  தங்கம் விலை ஒரு கிராம் 10 ரூபாய்க்கும் குறைவு! ஆகவே கல்விக்கட்டணம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப் பெரிய சுமையாக இருந்தது. வறட்டுக் கல்வி முக்கியமா,  வயிற்றுக்குச் சோறு முக்கியமா என்பதே பெரிய சவாலாக இருந்தது. எப்படியோ பணம் கட்டிச் சேர்ந்து விட்டேன். 


சில மாதங்கள் கழித்து டெர்ம் பீஸ் 15 ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. தந்தை என்ன செய்யப் போகிறாரோ என்ற கவலை என்னைப் பெரிதும் வாட்டியது. அப்போதுதான் மின்னல் போல ஒரு நம்பிக்கை தரும் செய்தி வந்தது.


அதாவது ஏழை மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமல் இருப்பதற்கு உதவும் வகையில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. ஆண்டு வருமானம் ரூபாய் 200-க்கும் குறைவாக உள்ள பெற்றோர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட தாசில்தாரிடம் இருந்து உரிய சான்றிதழ் பெற்று அனுப்பினால், பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதுதான் அந்த ஆணை.


ஆனால் அதற்கான படிவங்கள் உடனே வெளியிடப்படவில்லை. தாசில்தார் ஆபீஸ்ல போய் மூன்று மணி நேரம் நின்ற பிறகு ஒரு குமாஸ்தா அந்த படிவத்தை 'ரோனியோ' போட்டுக் கொடுத்தார். (அதுதான் அந்தக் காலத்து ஜெராக்ஸ்!) அதற்கு ஒரு ரூபாய் சிலரிடம் வாங்கிக் கொண்டார். என்னிடம் 25 காசு மட்டுமே கேட்டார். ஏழைக்கு இரங்கும் மனசு!


"இதைப் பூர்த்தி செய்து உங்கள் தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் தாசில்தாரின் கையொப்பமும் பெற்று என்னிடம் கொண்டுவந்து கொடுங்கள்" என்று வழிகாட்டினார் அந்த குமாஸ்தா. 


ஆனால் அவர் காட்டிய வழி அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. முதலில் விண்ணப்பத்தைத் தலைமையாசிரியர் வரை பூர்த்தி செய்துகொண்டேன். அடுத்ததாக கிராமக் கர்ணத்திடம் கையெழுத்து வாங்க வேண்டுமாம். அதுவரையில் கர்ணம் என்பவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. தாலுகா ஆபீசில் கேளுங்கள் என்றார்கள். எங்கள் இராணிப்பேட்டை ஒரு நகரசபை என்பதால் கர்ணம் என்பவர் கிடையாது, பதிலுக்கு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்பவரிடம் போகச் சொன்னார்கள். 


ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கென்று தனி அலுவலகம் கிடையாதாம். அவரும் தாசில்தார் ஆபிஸில் ஏதோ ஓர் அறையில்தான் அமர்ந்து கொள்வாராம். அங்கு போய் அவரைத் தேடியபோது அவர்  பதினைந்து நாள் லீவில் சொந்த கிராமத்திற்கு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். ஒரு மணி நேர பஸ் பயணத்தில் அந்த கிராமத்தை அடைந்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். விடுமுறையில் இருக்கும்போது கையெழுத்துப் போடக் கூடாதாம். ஒரு தேதியைச் சொல்லி அன்று தாலூகா ஆபீஸ் வரச் சொன்னார்.


போனோம்.


ரெவின்யூ இன்ஸ்பெக்டர் முன்னால் ஒரு பத்து பேர் நின்றிருந்தார்கள். அதில் ஒன்பது பேருக்கு என்னை விட முக்கியமான விஷயம் இருந்ததால் அவர்களை முதலில் கவனித்தார். ஒவ்வொருவரும் அவருக்கு மிக அருகில் வந்து ஏதோ சிறிது பணம் கொடுப்பதையும் அதை மிகுந்த அதிருப்தியுடன் -ஆனால் மறுக்காமல்-அவர் ஏற்றுக் கொண்டதையும் கண்டேன். அதற்குள் உணவு இடைவேளை வந்தது. என்னைக் கூர்ந்து நோக்கினார். அருகில் வரச் சொன்னார். 


"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை/ மனச் சிறையில் கரந்த காதல்/ உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து/ தடவியதோ ஒருவன் வாளி?"


என்று கம்பன் எழுதியது இப்போது நினைவுக்கு வருகிறது. (அப்போது கம்பராமாயணம் எனக்குத் தெரியாது.)


அதாவது என் பாக்கெட்டில் ஏதாவது பணம் இருக்கிறதா என்று தன் கண்களால் சோதித்திருக்கிறார். இல்லை என்று தெரிந்து விட்டதால், குறைந்த பட்சத் தொகைக்குச் சம்மதித்தவராக, "போய் ஒரு தயிர் சாதம் வாங்கி வா, அதற்குள் கையெழுத்துப் போட்டு வைக்கிறேன்" என்றார்.


எனக்கு அந்த ஊரே புதிது. தயிர்சாதம் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. விலை எவ்வளவு என்றும் தெரியாது. என்னிடம் பணமும் கிடையாது. ஆகவே திருதிருவென்று விழிக்கலாமா என்று யோசித்தபோது, நல்லவேளையாக பின்னால் இருந்த ஒரு பையன் ஓடி வந்து அவரிடம் தயிர்சாத பாக்கெட்டைக் கொடுத்தான். 


அவன் வேறு யாரும் இல்லை, என்னுடன் படிக்கும் ஹரி என்ற மாணவன் தான்! அவனுக்கும் என்னை அங்குப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் இருந்த அதே படிவம் அவன் கையிலும் இருந்தது. அப்படியானால் அவனும் ஏழ்மைக்கான சர்டிபிகேட் வாங்கத்தான் வந்திருக்கிறானா?


அவன் எப்படி ஏழையாக இருக்க முடியும்? அவனுடைய தந்தைக்கு ஒரு ஹார்டுவேர் கடை இருந்தது. மாடி வீடு, ஒரு பெரிய கார் இருந்தது. அவன் ஒரே பிள்ளை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.


ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சாப்பிட்டு முடிந்ததும் அவனுடைய படிவத்தில் முதலில் கையெழுத்திட்டார். எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பிறகு என்னுடையதைப் பார்த்தார். ஆண்டு வருமானம் 200 ரூபாய் என்பதை பென்சிலால் அடிக்கோடிட்டார். "வீட்டில் எவ்வளவு குழந்தைகள்?" என்றார். சொன்னேன். "அதற்கு இந்த வருமானம் போதுமா?" என்றார். எனக்கு பதில் தெரியவில்லை. 


பேச்சு வளர்வதைக் கண்டு என் நண்பன் ஹரி, "சார்,  நேரமாகிறது. அப்பா தாசில்தார் அறையில் இருக்கிறார். அவரை அழைத்து வர வேண்டுமா?" என்றான். 


சடார் என்று எழுந்தார் அவர். "முதலிலேயே சொல்ல கூடாதா? உங்கள் வேலையை முடித்து விட்டுச்  சாப்பிடப் போயிருப்பேனே" என்றவர் எங்கள் இருவரின் படிவங்களையும் எடுத்துக்கொண்டு தாசில்தாரிடம் போய் அவரே கையொப்பமும் வாங்கி ஹரியிடம்  கொடுத்தார். ஹரியின் தகப்பனாருக்கு வணக்கம் சொன்னார். 


"கொஞ்ச நாளா உன் பிஹேவியரே சரியில்லை. சின்ன மனுஷன் பெரிய மனுஷன் என்று தராதரம் இல்லாமல் எல்லாரையும் காக்க வைக்கிறாய்" என்று ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கடிந்து கொண்டார் தாசில்தார்.


ஹரியின் கையிலிருந்த படிவத்தைப் பார்த்தேன். அதில் ஆண்டு வருமானம் 180 ரூபாய் என்று இருந்தது. அதற்கடியில் தாசில்தார் பச்சை எழுத்தில் கையொப்பம் இட்டு இருந்தார்!


ஆக, மாடி வீடும் காரும் ஹார்டுவேர் கடையும் இருந்தாலும் ஆண்டு வருமானம் எங்களை விட குறைவு என்று தெரிந்ததும் என்னை அறியாமலே பெருமிதம்  ஏற்பட்டது. நான் ஏழை தான், ஆனால் ஏழை இல்லை. என்னையும் விட ஏழையாக ஒருவன் இருக்கிறானே!


ஹரியின் அப்பா என்னையும் தன் காரில் ஏற்றிக்கொண்டார். "கவர்மெண்ட் ஆபீஸ் எல்லாம் ஒரு மாதிரிடா கண்ணா! அங்கெல்லாம் வேலை நடப்பதற்கு வெவ்வேறு சூட்சுமம் உண்டு. அடுத்த வருஷம் சர்டிபிகேட் வாங்குவதற்கு நீ தனியாகப் போகாதே. ஹரியும் நீயும் ஒன்றாகப் போங்கள். உடனே வேலை முடிந்துவிடும். தாசில்தார் நான் சொல்கிறபடி கேட்பார்" என்றார்.


அடுத்த வருடமும் அவருடைய வருமானம் 180 ரூபாயாகவே இருக்க வேண்டுமே என்ற கவலையோடு நான் காரில் ஏறிக் கொண்டேன்.


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.


14 கருத்துகள்:

  1. கையெழுத்து வாங்க நீங்கள் அடைந்த கஷ்டங்கள்....... இன்றைக்கும் பல இடங்களில் இதே நிலை தான் என்பது வேதனையான உண்மை. நம் ஊரில் இறப்புச் சான்றிதழ் பெறக் கூட கையூட்டு தர வேண்டியிருக்கிறதே! நினைவுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கத் தரவுகள் கணினிமயமாகிவிட்டதால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுவது எளிதாக உள்ளது. எனினும் முதல் முறையாகப் பெறும் எந்தச் சான்றிதழுக்கும் சிறிது செலவழிக்கும் நடைமுறை எப்போது மாறும் என்று தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க, தனி மனித நாணயமின்மையும் இந்த நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. நாம் மாறினால்தான் அமைப்புமுறைகளும் மாறத் தொடங்கும். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்

    தெரிந்து வினையாடல்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், வள்ளுவர் சொல்லாத நீதியா? மனிதர்கள் தங்கள் சுயநலனை முன்னிட்டு வள்ளுவரை மறந்து போய்விடுகிறார்களே!

      நீக்கு
  3. அப்பாவின் சுமையைக் குறைக்க நீங்களாக எடுத்த முயற்சி கவனிக்க வைக்கிறது.  சட்டென உதவும் எண்ணம் கொண்ட ஹரியையும் சொல்ல வேண்டும்.  அவர் அப்பாவையும் சொல்ல வேண்டும்!  இன்றைக்கும் ரேஷன் கடைகளில் காரில் வந்து இறங்கி பொருள் வாங்கிச் செல்லும் ஏழைகளையும் காணமுடிகிறது.  ரேஷன் கார்டை லைவில் வைக்கிறார்களாம்.

    பதிலளிநீக்கு
  4. அனுபவம் நன்றாக இருக்கிறது.

    நம் அளவில் மாற ஆரம்பித்தால்தான் சிஸ்டம் மாறும்.

    பதிலளிநீக்கு
  5. எப்படிதான் பால பருவ நிகழ்ச்சிகளை நினைவில் வைத்து இருக்கிறீரோ ?

    பதிலளிநீக்கு
  6. முதல் வரி பார்த்ததும் அட! நமக்கும் சில சமயம் இப்படித்தானே...மனம் தாவிக் கொண்டே ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அதன் கிளையாக மகாபாரதம் போன்று போய்க்கொண்டே இருக்குமே என்று.

    அந்த வயதில் உங்களுக்கான மனப்பக்குவம், சிந்தித்திச் செயல்படும் பக்குவம் எல்லாம் அருமை சார். உங்கள் அனுபவம் நிறைய கற்றுத் தந்திருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உங்கள் நண்பர் ஹரி மற்றும் அவர் அப்பா பரவாயில்லை வசதிபடைத்தவர்கள் என்றாலும் கூட உங்களுக்கு உதவ முன்வந்தது அடுத்த வருடமும் தங்களோடு வரச் சொன்னது என்பதெல்லாம் நல்ல உதவும் குணத்தைக் காட்டுகிறது. அந்த ஹரி இப்போது தொடர்பில் இருக்கிறாரா சார்?

    இப்போது ஆன்லைன் வசதி வந்துவிட்டாலும் பல ஆன்லைனில் நடப்பதில்லை. நேரடியாகச்செல்ல வேண்டியுள்ளது அப்போது கைநீட்டம் கையூட்டு இருக்கத்தான் செய்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நான் கல்லூரியில் படித்த போதும் , சில பணக்கார மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட சாதிக்கான கல்வி உதவித் தொகை பெற்று அதை பெற்றோருக்கு தெரியாமல் கெட்ட வழிகளில் செலவு செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  9. System சரியில்லை என்று ரஜினிகாந்த் அவர்கள் கூறியது.... அந்தக் காலத்துக்கும் பொருந்தும் போல... தங்கள் நினைவாற்றல் வியப்பளிக்கிறது...

    பதிலளிநீக்கு
  10. அந்தச் சிறிய வயதில் உங்கள் அனுபவங்கள் வியக்க வைக்கிறது. குடும்பச் சூழல் புரிந்துகொண்டு அதற்கேற்ப நீங்கள் செய்தது உட்பட. உங்கள் நண்பரும் அவர் அப்பாவும் நல்ல உள்ளங்கள்.

    ஆள்பவர்களும் மக்களுமே மாறினால்தான் மாற்றங்கள் நிகழும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. எள்ளல் கூடிய எழுத்து எளிதாகிறது
    உங்களுக்கு...அமெரிக்காவில்
    இருந்தபடி மனம் திரும்பிப்பார்க்கிறது

    பதிலளிநீக்கு
  12. கோபுரம் சீலை யார் இட்டார்கள்?சொல்ல மறந்தீரோ!

    பதிலளிநீக்கு