செவ்வாய், ஏப்ரல் 19, 2022

அமெரிக்காவில் திருடர்கள் உண்டா? (இன்று கிழமை செவ்வாய் -2)

அமெரிக்காவில் திருடர்கள் உண்டா? 

(இன்று கிழமை செவ்வாய் -2)

அமெரிக்காவில் எட்டாவது நாள் 

(அட்லாண்டிக் கடலோரம்)

அமெரிக்காவிலும் திருடர்கள் உண்டுதான். நான் சொல்வது வீடு புகுந்து அல்லது அலுவலகத்தில் புகுந்து திருடுபவர்களைப் பற்றி மட்டுமே. 

2019இல் நாடு முழுவதும் 267,988 கொள்ளைகள் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது, 2018 மதிப்பீட்டை விட 4.7 சதவீதம் குறைவு, 2015 மதிப்பீட்டை விட 18.3 சதவீதம் குறைவு.  குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், 2010 மதிப்பீட்டை விட 2019 மதிப்பீடு 27.4 சதவீதம் குறைந்துள்ளது. முன்பெல்லாம் காரில் பயணிப்பவர்களைக் குறிவைத்து ‘Mugging’ எனப்படும் வழிப்பறி கொள்ளைகள் அமெரிக்காவில் அதிகம் நடக்குமாம். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. 

Quebec Task Force on Armed Robbery இன் ஆய்வின்படி, ஆயுதமேந்திய கொள்ளை என்பது பெரும்பாலும் நகர்ப்புற நிகழ்வு என்று தெரிய வந்துள்ளது. இவற்றில்  சுமார் 25 சதவீதம் வங்கிகளுக்கு எதிராகவும்,  மூன்றில் இரண்டு பங்கு, சிறு வணிகங்களுக்கு எதிராகவும் நடக்கிறது.  பெரும்பாலான கொள்ளையர்கள் ஜோடிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள். (வங்கிக்கொள்ளைகளில் 90 சதவீதம், வணிகங்களில்  60 சதவீதம்). கொள்ளையின்போது அச்சுறுத்தலுக்கு ஆயுதம் பயன்படுத்தப்பட்டாலும், வன்முறையின் உண்மையான பயன்பாடு 10 சதம் அளவே.  நான்கில் ஒரு திருட்டு மட்டுமே சந்தேகத்திற்குரிய நபரைக் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் தீர்க்கப்படுகிறது…… 

எதையோ படிக்கப்போனால், எதையோ எழுதவேண்டுமென்று போனால்  கூகுள் சனியன் எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. சரி, தொலையட்டும், இன்று அதன் வழியிலேயே போய், நம் இந்தியத் திருட்டு ஒன்றைப்பற்றி எழுதலாமா?

திருட்டு நடந்தது கர்நாடகாவில்  குல்பர்கா என்ற ஊர். நடந்த இடம் ஒரு ஏழை வங்கி அதிகாரியின் வீடு.  வருடம் முக்கியமில்லை. நிகழ்ச்சிதான் முக்கியம்.

அதற்கு முன்பு சில பூகோள உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் உள்ள குல்பர்கா, பீதர், ராய்ச்சூர் என்ற மூன்று மாவட்டங்களும் ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்ததால் ‘ஹைதராபாத்-கர்நாடகா பிரதேசம்’ என்றே அடையாளப்படுத்தப்படும். அதற்கேற்ப, இவை, ஹைதராபாத் நகருக்குப் பக்கமாகவும், பெங்களூரிலிருந்து மிக தூரத்திலும் இருக்கும். மூன்றுமே மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள். ஆகவே பஸ் வசதி குறைவு. 

குல்பர்கா கோட்டை

உதாரணமாக, குல்பர்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒருநாளில் ஒரே ஒரு பஸ் தான் உண்டு. அங்கிருந்து இங்கும் அதே போல் ஒரு பஸ்தான். பம்பாய் செல்லும் அல்லது பம்பாயிலிருந்து திரும்பும் ரயில்களில் ஆட்டுக்கூட்டம் போல -முன்பதிவு பெட்டிகளிலும் கூட - செல்வதுதான் ஒரே மாற்றுவழி. ஆனால் பொதுமக்களில் பலர் பஸ்மூலம் செல்வதே சிக்கனம் என்று கண்டுகொண்டிருந்தார்கள். ஏனென்றால், பஸ்களில் டிக்கட் வழங்கும் வழக்கம் கிடையாது. (இப்போது மாறியிருக்கலாம்). பயணிகளிடம் முரண்டுபிடித்து முழு டிக்கட் கேட்பார் கண்டக்டர். ‘உனக்கு பிள்ளை குட்டி இல்லையா? அரசாங்கத்துக்குச்  சொத்து சேர்த்துக் கொடுத்து உனக்கு என்ன ஆகப்போகிறது?’ என்ற எதிர்வாதத்துக்குப் பிறகு, தொலையட்டும் என்று பாதித்தொகையை ஏற்றுக்கொள்வார் கண்டக்டர். அதை கண்டக்டரின் தோள்பைக்குள் வைப்பதைத் தவிர்த்துவிடுவார். ‘செக்கிங் வந்தால் நீதான் பொறுப்பு. இறக்கிவிட்டுவிடுவேன்’ என்பார். அப்படி யாரும் வருவதில்லை என்று பயணிகளுக்குத் தெரியுமாதலால் பஸ் முழுதும் சிரிப்பலை எழும். 

குல்பர்கா என்பது கன்னடத்தில் ‘கல்புருகி’ என்பதன் திரிபு. அதாவது ‘கல் நிறைந்த ஊர்’ என்று பொருள். ஆகவே தண்ணீர் கிடைப்பது அரிது. கடுகும் சோளமும் துவரம்பருப்பும் தான் அங்கு அதிகம் விளையும். 

முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த ஊர். 

அந்த ஊரில்  ஓராண்டு பணிசெய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கார்ப்பொரேஷன் வங்கியின் மேலாளராக. குடும்பம் சென்னையில், நான் மட்டும் இங்கு. ஒரு தனிவீட்டை நடுச்சுவர் எழுப்பி இரண்டாக்கி, எனக்கு ஒன்றும், கர்நாடகா வங்கியின் மேலாளருக்கு ஒன்றுமாக வாடகைக்குக் கொடுத்திருந்தார் உரிமையாளர். தட்டினால் பெயர்ந்துவிடும் சுவர்தான். ஆனால் நாங்கள் ‘ஜென்டில்மேன்’ ஆயிற்றே! அவர் குடும்பத்துடன் இருந்தார்.

ஒரு நவராத்திரி விடுமுறையின்போது நான் ஹைதராபாத் சென்றிருந்தேன். நான் போன சில மணிகளில் அவரும் எங்கோ கிளம்பிவிட்டார் என்று பின்னால் தெரிந்தது.

நகரின் மையப்பகுதியில்தான் இருந்தது எங்கள் வீடு. தனியான ஒரு நகர். அதில் சுமார் நாற்பது தனிவீடுகள். மிக அருகில் ‘சரண பசவர்’ ஆலயம். அதுதான் வீரசைவர்களின் தலைமையகம். ‘சரண பசவப்பா அப்பா’ என்ற பெயரில் அவர்களின் தலைமை குரு அங்கு அமர்ந்திருந்தார். அவர் நடத்திய சிபிஎஸ்சி உயர்நிலைப்பள்ளி அதே வளாகத்தில் இருந்தது. அதில் நாலில் ஒரு பங்கு ஆசிரியர்கள் சென்னையர்கள்.  

நான் அதற்கு முன்பு ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘மரோ சரித்ரா’வும், ‘சங்கராபரணமும்’ வெளியாகி ஓடிக்கொண்டிருந்த காலம். மூன்று வருடம் ‘கோட்டி’ என்னும் ‘சுல்தான் பஜார்’ பகுதியில் குடியிருந்தேன். அங்கிருந்து குல்பர்காவுக்கு அனுப்பப்பட்டேன். எனவே, மூன்றுநாள் விடுமுறை கிடைத்தபோது ஹைதராபாத் வந்து பழைய நண்பர்களோடு நேரத்தைச் செலவிட்டேன். 

பஸ்ஸில் ஏறி குல்பர்காவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். பஸ் நிலையத்திலேயே எனது பியூன் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். “சார் அவசரம், உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வாருங்கள், போகலாம்” என்றார். 

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் எந்தத் தவறும் செய்யவில்லையே! அல்லது வங்கி இருந்த பெரிய கட்டிடத்தில் ஏதேனும் தீவிபத்து நடந்திருக்குமா? அதன் தரைத்தளத்தில் ஒரு ‘ஜனதா’ ஓட்டல் இருந்தது. அங்கு சிறுசிறு விபத்துக்கள் நடப்பது சகஜம். 

“பன்றி, ஸ்வாமி” என்று வரவேற்றார் இன்ஸ்பெக்டர். (‘பன்றி’ என்பதை pig என்று கொள்ளவேண்டாம். ‘Baன்றி’ என்றால் கன்னடத்தில் ‘வாருங்கள்’ என்று பொருள்).

“இதைச் சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் திருடு போயிருக்கிறது. போலீஸ் பெட்ரோலில் கண்டுபிடித்தோம். ஒரு காவலரை அங்கே நிறுத்தி வைத்திருக்கிறோம். நீங்கள் போய்ப் பார்த்து என்னென்ன திருடு போனதென்று தெரிவித்தால் கேஸைப் பதிவு செய்ய வசதியாக இருக்கும்” என்றார் அவர். 

நான் பரபரப்புடன் பியூனின் பைக்கில்  ஏறிக்கொண்டேன். திருடன் குளியலறையின் கண்ணாடியை -வென்ட்டிலேட்டரை- உடைத்து உள்ளே வந்திருக்கிறான். மொத்தம் இரண்டே அறைகள். எளிதாகக் காரியத்தை முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டான். 

காணாமல் போன பொருட்கள் என்னென்ன? 

பத்து கிலோ பச்சரிசி, இரண்டு கிலோ கோதுமை மாவு, ‘அமுல்’ நிறுவனம் விற்பனை செய்த கடலைஎண்ணெய் ஒரு கிலோ, இரண்டு மார்கோ சோப்புகள், தேங்காயெண்ணெய் கால் கிலோ பாட்டில்… முகம் பார்க்கும் கண்ணாடி, ஷேவிங் செட், டூத் பிரஷ், கோல்கேட் பேஸ்ட்…

 ஆஹா, புத்தம் புதிதாக நான் வாங்கியிருந்த டிரான்சிஸ்டர் ரேடியோ!

அத்துடன் இரண்டு புதிய தலையணை உறைகள்! ஆம், எல்லாப் பொருட்களையும் தலையணை உறைகளில் திணித்து எடுத்துச் சென்றிருக்கிறான். 

கெரசின் ஸ்டவ் மட்டும் இருந்தது. ஐந்து லிட்டர் கெரசின் காணோம்! நான்கு டம்பளர்கள் உள்பட சமையல் பாத்திரங்கள் எல்லாம் அவுட்! 

நல்ல வேளை,  வங்கிக்குச் சொந்தமான டேபிள் சேர் ஸ்டூல் எதையும் அவன் எடுக்கவில்லை.  அதே போல் என்னுடைய மேலாடை, உள்ளாடை எதையும் எடுக்கவில்லை. ஆனால் அவை கலைந்திருந்தன. ‘டிரையல்’ பார்த்துச் சரியில்லை என்றோ, தரமில்லை என்றோ ஒதுக்கியிருக்கலாம்.

திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பீடு எவ்வளவு என்றார் இன்ஸ்பெக்டர். அதிகமில்லை, வெறும் 740 ரூபாய்தான் என்றேன். உடனே கன்னடத்தில் அவருக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை வீசத்  தொடங்கினார், என் மீதல்ல, அவருடைய கான்ஸ்டபிள் மீது!   “இந்த பிஸாத்து சமாச்சாரத்திற்கா நான்குநாள் அந்த வீட்டிற்குக் காவல் இருந்தாய்?” என்பது அதன் சாராம்சம்.

என் பியூனுக்குத் தான் உண்மையான கவலை. “இன்ஸ்பெக்டர் ரொம்பக் கோவமாயிருக்கிறார். குறைந்தது ஒரு லட்சம் அளவுக்கு நகைகள் திருட்டுப் போயிருக்கலாம் என்று அவர் தலைமை அதிகாரிகளிடம் கூறியிருந்தாராம். இப்போது அவருக்கு மிகவும் தலைகுனிவாகிவிட்டது” என்று விளக்கினார்.

“எதற்கும் ஒரு நூறு ரூபாய் கொடுத்துவிடலாம்” என்று அந்தக் காவலரிடம் கொடுக்கவைத்தார். அவர் வாங்குவதாயில்லை. “சரி சரி, பேங்கில் வந்து ஐயாவைப் பார்” என்று விஷயத்தை முடித்தார் பியூன்.

இதற்குள் போலீஸ் மூலம் தலைமை அலுவலகத்திற்கு செய்தி போய்விட்டிருந்தபடியால், வேறெங்கோ கேம்ப்பில்  இருந்த ஓர் விசாரணை அதிகாரி, பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து குளுகுளு காரில் குல்பர்கா வந்தடைந்து இரண்டுநாள் தங்கி விசாரணை செய்து முடிவில், ‘மேனேஜர்கள் இன்னும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக’ அறிக்கை எழுதிவிட்டுக் கிளம்பினார். அவருக்கான மொத்தச் செலவு சுமார் பத்தாயிரம் ரூபாய் இருக்கலாம்!

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வெளியூரில் இருந்து குல்பர்காவில் பணிபுரியும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் யாரும் திருடுவதில்லையாம்!

 - இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து  

17 கருத்துகள்:

 1. பாம்பு பிடிக்கவும், எலி பிடிக்கவும் அரசாங்க அலுவலகங்களில் நடைமுறைச் செலவே ஏகப்பட்டது ஆகுமே!  திருடனைப் பிடிக்க, அல்லது அதுபற்றி விசாரிக்க பத்தாயிரம் கம்மிதான்!

  பதிலளிநீக்கு
 2. இதமான உரை நடை மெல்லிய நையாண்டி கலந்த இதழ் ஓரங்களில் புன்னகையை வரவழைக்கக்கூடிய கருத்துக்கள்.நன்றாக எழுதப்பட்டிருக்கும் சிறு கதை.

  பதிலளிநீக்கு
 3. சராசரி வங்கி அதிகாரியின் உண்மை நிலையை பிரதபலிக்கும் விதமாக இருக்கும் உண்மை நிகழ்வை சுவைபட கதையாக பதிந்த விதம் அருமை. இதற்குபபின் நிச்சயம் அந்த திருடன் திருந்தியிருப்பான்....வங்கி அதிகாரி வீடுகளில் திருடுவது வீண் என்று.

  பதிலளிநீக்கு
 4. *‘டிரையல்’ பார்த்துச் சரியில்லை என்றோ, தரமில்லை என்றோ ஒதுக்கியிருக்கலாம்.* செம்ம... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... ம்ம்ம் அருமை.

  பதிலளிநீக்கு
 5. கூகுள் சனியனா......சுந்தர் பிச்சை கோச்சிக்க போறார்.....😂😂

  பதிலளிநீக்கு
 6. சார் சங்கராபரணம், மரோசரித்ரா ஓடிய காலத்தில் வெறும் 740 ரூ? என்பது என்ன சார் வெறும் என்று!! அதுவே அதிகமில்லையா அப்போது.

  கல்புர்கி, ராய்ச்சூர், பீதர் எல்லாம் ஒரு மாற்றமும் இல்லை சார் இப்பவும் வறட்சி. அதே புளிமூட்டைக் கூட்டம். முன்னேற்றம் இல்லை என்பதே அறிகிறேன். இங்கு எங்கள் வீட்டுப் பக்கத்தில் இரு குடும்பங்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கு விவசாயம் செய்ய முடியலை என்று இங்கு வந்து வீடுகளில் வேலை செய்கிறார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. அம்மடியோவ் அந்த ஆஃபீஸர் வந்து ஜஸ்ட் வங்கி மேலாளர் பொறுப்பு என்று எழுதிக் கொடுக்க 10000ரூ செலவா. மக்கள் செலவு செய்வதை விட அரசாங்க அதிகாரிகளுக்கான செலவு ரொம்பவே அதிகம் போல! அப்ப பட்ஜெட்டில் துண்டு விழுவதில் ஆச்சரியமே இல்லை!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. எவ்வளவு நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு கதம்பம் போல கட்டி, தன் நையாண்டித் தனத்தை முன்னிறுத்தி பல செய்திகளை தொடுத்திருக்கிறார்/ கொடுத்திருக்கிறார். அருமை.

  பதிலளிநீக்கு
 9. திருடனை தவிர சுற்றிலும் நிறைய திருடர்கள்...

  பதிலளிநீக்கு
 10. எதிர்கொண்ட அனுபவத்தை எழுத்தில் கொணர்வது சற்று சிரமமே. இருப்பினும் அதனைச் சிறப்பாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. எழுத்தாளர் சுஜாதா உம்மில் புகுந்து விட்டாரோ என்று தோன்றுகிறது நீங்கள் எழுதும் Style ஐ
  பார்த்து .

  எப்படி தனியாக காலம் கழித்தீர்கள் அந்த முன்னேறாத ஊர்களில். ?

  பதிலளிநீக்கு
 12. தங்கு தடையில்லாமல் வழுக்கிக் கொண்டு போகும் தமிழ் எழுத்து நடை சார், உங்களது

  பதிலளிநீக்கு
 13. துன்பம் வரும் வேளையில் பிரிக்கப் சொன்னார்களா. நீங்கள் சிரிப்பு மூட்டுகிறீர்கள். அதற்குப் பிறகும் அந்த வீட்டில் தைரியமாக தங்கினீர்களா?

  பதிலளிநீக்கு
 14. வேறு வழி? தலையணைக்கு உறைபோடுவதை நிறுத்திவிட்டேன். மற்றபடி, ஏழைத் திருடன் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்....

  பதிலளிநீக்கு
 15. தமாஷோ தமாஷ் சார்!
  வாழ்த்துகள்!
  விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்தவர் ராய செல்லப்பா!

  பதிலளிநீக்கு
 16. மிக பெரிய திருபான் டோனலட் ட்ரம்ப் , இலங்கையில் கொள்ளை அப்டித்த அரசியல்வாதிகளின் சொத்துகள் இருக்கும் இடம் அமெரிக்கா

  பதிலளிநீக்கு