புதன், ஏப்ரல் 27, 2022

நட்சத்திர ஓட்டலும் குஜராத்தி மெஸ்சும் (இன்று கிழமை புதன்-3)

 நட்சத்திர ஓட்டலும் குஜராத்தி மெஸ்சும் 

இன்று கிழமை புதன்-3


அமெரிக்காவில் 16ஆவது நாள் 

(நான்கு தூண்கள் நகரம்)ஒரு மாறுதலுக்காக இன்று ஹைதராபாத் கதை ஒன்றை எழுதட்டுமா?


நாடெங்கிலும் கிளைகள் கொண்ட வங்கிகளுக்கு, மாநிலங்களில் மண்டல அலுவலகங்கள் இருப்பதுண்டு. ரீஜினல் ஆபீஸ், ஜோனல் ஆபீஸ் என்ற பெயர்களில் அவை அழைக்கப்படும். சில வங்கிகளில் ரீஜினல் ஆபீஸ் மட்டும் இருக்கும். சிலவற்றில் ஜோனல் ஆபீஸ் மட்டுமே இருக்கும். இந்த இரண்டுமே இருக்கும் பெரிய வங்கிகளில், ஜோனல் ஆபீசின் கீழ் ரீஜினல் ஆபீஸ் இயங்குவதாக இருக்கும். மண்டலங்களின் தலைமை அதிகாரிக்கு மண்டல மேலாளர் என்று பெயர் இருக்கும்.  


ஒவ்வொரு மண்டல மேலாளரும் தன் கீழுள்ள கிளைகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றசராகவே மதிக்கப்படுவார். (அரசியல் கட்சிகளில் தளபதி என்பார்களே அதுபோல.) மதிக்கப்படவேண்டும் என்று அவரும் எதிர்பார்ப்பார்.


பொதுவாக, ஒரு மண்டலத்திற்குப்  புதிய மேலாளர் நியமிக்கப்படும்போது அல்லது மாற்றலாகிவரும்போது, அவர் பதவியேற்கும் அதே நாளிலோ அல்லது அடுத்துவரும் சனி, ஞாயிறுகளிலோ அவருக்கு ‘பட்டாபிஷேகம்’ நடைபெறும். முதலில் அந்த மண்டலத்தின் முக்கிய கிளைமேலாளர்கள் மட்டும் தங்களுக்குள் கலந்துபேசி மண்டல மேலாளரை  ‘உரிய முறையில்’ வரவேற்று உபசரிப்பார்கள். சிறிய குழுவாக இருப்பதால்  மண்டல மேலாளர் அவர்களுடன் மனம்விட்டுப் பேசித் தன்னுடைய இலக்குகளைத் தெரிவிப்பார். (‘தன்னுடைய’ என்பதைக் கவனிக்கவும்.) ‘மண்டலத்தின் வெற்றிக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்; வங்கியின் தலைவரின் தீர்க்கதரிசனமான திட்டங்களை நாம் முழுமனதோடு நிறைவேற்றுவோம்’ போன்ற சம்பிரதாயமான வாசகங்களோடும், (வங்கியின் செலவில் வாங்கப்படாத) சில வண்ணமயமான திரவப் பொருட்களோடும் கூட்டம் இனிது முடிவடையும். 


அடுத்த கட்டமாக, மண்டலத்திலுள்ள எல்லாக் கிளைமேலாளர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். இது அநேகமாக வேலை நாட்களிலேயே நடைபெறும். மண்டல அலுவலகத்திலேயே நடைபெறும். அநேகமாக ஒரு வார முன்னறிவிப்பில், சுமார் நூறு ஏ-4 தாள்களில் அடங்கும்  அளவுக்குப் புள்ளிவிவரங்களை மண்டல அலுவலகத்தின் அனுபவமிக்க அதிகாரிகள் மாங்குமாங்கென்று தயாரித்து, பளபளக்கும் ஸ்பைரல் பைண்டிங்கில் ஒவ்வொரு கிளைமேலாளரிடமும் தருவார்கள். அவர்களும் வழக்கம்போல அதை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொள்வார்கள். படிப்பதற்கு ஏது நேரம்?   (படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது வேறு விஷயம்.) ஏனென்றால் தங்கள் கிளையின் லட்சணம் ஒவ்வொரு மேலாளருக்கும்  தெரியாதா என்ன? அத்துடன், புதிதாக வந்திருப்பவர் நாகரிகத்தை முன்னிட்டாவது முதல் கூட்டத்தில் தங்களை அவமதிக்கமாட்டார் என்று அவர்களுக்குத் தெரியும். (குறிப்பாக வைப்புநிதி இலக்கை எட்டியிராதவர்களுக்கு.) ஆகவே எல்லாரும் மாமியார் வீட்டுக்கு வந்தமாதிரி குஷியாக இருப்பார்கள். 


இந்தக் கூட்டத்தின்போது, முன்சொன்ன திரவப்  பொருட்களோடு மண்டல மேலாளரைச் சந்தித்து முடித்துவிட்ட  கிளை மேலாளர்கள் சற்றே காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பந்தா காட்டுவார்கள். தங்களுக்குப் பிடிக்காத அல்லது தங்கள் கிளையிலிருந்து டெபாசிட்டை அபகரித்துவிட்ட மேலாளர்கள் மண்டல மேலாளரைச் சந்தித்துவிடாதபடி அவருடைய கண்ணாடிக்கதவின்முன்பு  காவல்செய்வார்கள். அப்படி முதல் நாளில் தனது  கண்ணாடிக்கூண்டுக்குள் நுழைந்து தன்னைச் சந்திக்காத மேலாளர்களைப் பற்றி மண்டல மேலாளர் அன்று பிற்பகல் நடக்கவிருக்கும் கூட்டத்தில் தன் அதிருப்தியைத் தெரிவிப்பது வழக்கம். அத்துடன் அந்த அதிருப்தியாளர்கள் கட்டம் கட்டுப்படுவார்கள். தங்களுடைய தனித்திறமையால் அன்றி அவர்கள் மண்டல மேலாளரின்  ‘நல்ல புத்தகத்தி’ற்குள் நுழையமுடியாது.


இருங்கள், அன்று மண்டல அலுவலகத்தில் மிகச் சாதாரணமான ஓட்டலில் இருந்துதான் உணவு வரவழைக்கப்படும். பெரும்பாலும் நின்றுகொண்டே சாப்பிடும் நிலைதான் இருக்கும். (அலுவலகத்தின்  தளப்பரப்பையும் ஆட்களின் எண்ணிக்கையையும் பொறுத்து.)


சில சமயம் மண்டலம் சார்ந்த வாடிக்கையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யலாமா, முக்கிய வாடிக்கையாளர்களை நான் தெரிந்துகொள்ள வேண்டாமா என்று அந்தப் புது மண்டல மேலாளர் கூறுவார். உடனே எல்லாரும் ஆரவாரத்துடன் ‘As the Regional Manager rightly said..’ என்று ஆமோதிப்பார்கள்.  அந்தக் கூட்டத்தை ஏதேனும் ஒரு ஐந்து நட்சத்திர அல்லது நான்கு நட்சத்திர ஓட்டலில்தான் நடத்தவேண்டும் என்று வங்கியின் தராதரத்தை ஒட்டி முடிவுசெய்யப்படும். அழைக்கப்படவேண்டிய முக்கிய வாடிக்கையாளர்களின்  சிறுபட்டியல் உடனே தயாரிக்கப்படும். வங்கியில் ஏராளமாகக் கடன்வாங்கிவிட்டுத் திருப்பிச்செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஏனென்றால் அவர்களின் திருமுகத்தை வேறு எப்போது பார்க்கமுடியும்? எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தனித்தீவை விலைக்கு வாங்கிக்கொண்டு தலைமறைவாகலாமே! 


மேற்படி கூட்டத்தில் வங்கியின் தலைவர், செயல் இயக்குனர், நிர்வாக இயக்குனர் மற்றும் முக்கிய பொதுமேலாளர்கள் தங்கள் வசதியைப் பொறுத்து கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்திற்கான செலவுகளை வங்கியின் விதிகள் அனுமதிக்குமா, இல்லையென்றால் எப்படி அதைச் சமாளிக்கிறார்கள் போன்ற அற்பமான கேள்விகளுக்கு இந்தப் பதிவில் இடமில்லை என்பதை அறிக.


நான் மேலே சொன்னதெல்லாம் பெரிய பெரிய வங்கிகளுக்குத் தான் பொருந்தும். நான் குறிப்பிடும் காலத்தில் நான் பணியாற்றிய வங்கி அப்படியொன்றும் பெரியதில்லை. எனவே    இம்மாதிரி நடைமுறைகளை நான் சந்திக்கவில்லை.


என்றாலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு கிளைமேலாளர் மாநாட்டைப் பற்றி நான் குறிப்பிட்டாகவேண்டும்.


அப்போது அந்த வங்கிக்கு அந்த மண்டலத்தில் அதிகம் கிளைகள் கிடையாது. சுமார் 25 தான் இருக்கும். மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், மற்றும் டிரைவர்கள் உள்பட சுமார் 55 பேர்கள் அன்றைய கூட்டத்தில் இருந்தார்கள். ஹைதராபாத்தின் சிறப்பான நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள சைவ உணவகம் ஒன்றில் நடந்த கூட்டம் அது. சென்னையில் இருந்து மாற்றலாகி வந்த மண்டல மேலாளருக்கு வரவேற்பளிக்கும் கூட்டம்.


மனிதர் மிகவும் நல்லவர் என்று ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தது. கனிவானவர், அதிர்ந்து பேசாதவர், நாணயமானவர். தலைமை அலுவலகத்திலும் அப்படிப்பட்டவர்களே அதிகம் இருந்த காலம். ஆகவே  இனிமையாக நிர்வாகம் செய்யும் பக்குவம் அவருக்கு இருந்தது.


வழக்கமான அறிமுக உரை, மற்றும்  புகழுரைகளுக்குப் பிறகு, மாலை சுமார் எட்டு மணிக்கு உணவு தொடங்கியது. கிட்டத்தட்ட எல்லாருமே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதால் யார்வேண்டுமானாலும் யாருக்கு அருகிலும் அமர்ந்துகொண்டார்கள். உணவரங்கில் மொத்தம் அறுபது இடங்கள்தான் இருந்தன.  நாங்கள் அமர்ந்தபின்னும் சில இடங்கள் காலியாக இருந்தன. 


மண்டல மேலாளர்  தன்  அறைக்குச் சென்று குளித்துவிட்டு குறைந்தபட்ச அலங்கரிப்புடன் பளிச்சென்று வந்தார். மிலிட்டரிப் பச்சை வண்ண சபாரியில் தான் அவர் வருவார். அன்றும் அப்படித்தான். பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை இராணுவ அதிகாரியாகவே எண்ணிக்கொண்டார்கள்.


சில இடங்கள் காலியாக இருப்பதை பார்த்த மண்டல மேலாளர்,  ‘இந்த இடங்களையும் நிரப்பிவிடலாமே’ என்று கூறியதும் எங்கிருந்தோ வந்து அவ்விடங்களை ஆக்கிரமித்தனர் சில கடைநிலை ஊழியர்கள். மொத்தக் கூடமும் நிரம்பிவிட்டது. 


உள்ளிருந்தே தட்டுக்களில் உணவு வகைகளை  நிரப்பி எடுத்துக்கொண்டு வந்தார்கள். அறுபது தட்டுக்களையும்  வைத்து முடிப்பதற்குள் ஆரம்பித்த தட்டுக்களில் அமர்ந்தவர்கள் பாதிக்குமேல் காலி செய்துவிட்டார்கள். மும்முரமாக விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.


ஆனால் தற்செயலாக, வங்கியின் தலைவரிடமிருந்து  மண்டல மேலாளருக்கு  போன் வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவர் ஓட்டல் ரிஸப்ஷனுக்குச் செல்லவேண்டி வந்தது. (அலைபேசி இல்லாத காலம்!) அவருக்கு உதவியாக நானும் இன்னொரு அதிகாரியும் விரைந்தோம்.


நல்லவேளை, மண்டல மேலாளரும் சரி, நாங்களும் சரி இன்னும் கை நனைக்கவில்லை.  ஆனால் மற்றவர்கள்பாடு தான் திண்டாட்டம்.  அவர்கள் மேற்கொண்டு சாப்பிடலாமா, அல்லது மண்டல மேலாளர் திரும்பிவரும்வரை காத்திருப்பதுதான் நாகரிகமா என்று தெரியவில்லை. 


நானும் அந்த இன்னொரு அதிகாரியும் மிகுந்த பசியோடிருந்தோம். ஆனால் என்ன செய்வது?


வங்கியின் தலைவர் மிக நல்லவர்தான். பாதிச்  சாப்பாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் ‘சரி, நாளை பேசலாம்’ என்று போனை வைத்திருப்பார். ஆனால் நம்மவர் அவரைவிட நல்லவராயிற்றே!


சுமார் கால்மணி நேரம் போனில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. இடையில் இணைப்பு தடைப்படவே, நிலைமையைப் புரிந்துகொண்டமண்டல மேலாளர்  ‘எல்லாரும் சாப்பிடுங்கள். எனக்காகக் காத்திருக்கவேண்டாம். தலைவர் ஒரு முக்கிய விஷயத்திற்காக அழைத்திருக்கிறார். நாங்கள் பிறகு சாப்பிடுகிறோம்’ என்று அனுமதித்தார்.


மீண்டும் இணைப்பு கிடைத்து மண்டல மேலாளர்  பேசிமுடித்துத் திரும்பும்போது  ஒன்பதே முக்கால் ஆகிவிட்டிருந்தது. நாங்கள் இருவரும் பசி மீறிப் போய்விட்டோம்.  எங்களிடம் மிகவும் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார், சாப்பாட்டில் ஏற்பட்ட தாமதத்திற்காக.  அவருக்கும் தான் அசுரப் பசி.                     


அப்போதுதான் ஒரு சுவாரஸ்யமான தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஓட்டல் இரவு ஒன்பதரைக்கு மூடப்படுமாம். ஆகவே, உணவுப்பகுதி ஒன்பதேகாலுக்கே மூடப்பட்டுவிட்டதாம். விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டதாம்.  எங்களுக்குச்  சாப்பிட ஏதுமில்லையாம்!


மண்டல அலுவலகத்தின் மற்ற அதிகாரிகள் சிலர் அதனால்தானோ என்னவோ அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தில் தரமான சைவ உணவகங்கள் அந்த நேரத்தில் ஏதும் திறந்திருக்கவில்லை. 


செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஓடிவந்தார். அலங்கார் தியேட்டர் அருகில் ஒரு குஜராத்தி மெஸ் இப்போதும்  இருக்கும், அங்கு போகலாமா, மண்டல மேலாளர் ஏற்றுக்கொள்வாரா என்று விசாரித்தார். 


அன்று இரவு அருமையான சப்பாத்தியும் பாலக் பன்னீரும் கெட்டித் தயிருமாக எங்கள் மூவரின் உணவு அமைந்துவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் கிளைக்கு மண்டல மேலாளர் வரும்போதெல்லாம் அந்த குஜராத்தி மெஸ்ஸுக்குப் போவது வாடிக்கையாகிவிட்டது.


பாவம், அந்த நான்கு நட்சத்திர ஓட்டல் மீண்டும் எங்கள் உணவுத் திட்டங்களில்   இடம்பெற முடியவில்லை. சகுனம் சரியில்லையே!


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து. 


14 கருத்துகள்:

 1. நட்சத்திர ஓட்டல்களில் ஆடம்பரம் இருக்கும் அளவு சுதை இருக்காது என்பது என் அனுபவம்.  குஜராத்தி மெஸ் நன்றாகவே இருந்திருக்கும்.  அலுவலக நடைமுறைகளும், பந்தாக்களும் எல்லா அலுவலகங்களிலும் பொது போல..   என்ன...   அளவும், ஸ்டைலும் மாறும்!

  பதிலளிநீக்கு
 2. என் வேண்டுகோளை ஏற்று Formal Shirt ல் புகைப்படம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

  சிவாஜி கணேசனுக்கு எந்த உடை போட்டாலும் அழகாக இருப்பார். அதுபோலவே தாங்களும்.

  சென்னை பிராட்வே யில் குஜராத்தி மண்டல் நடத்தும் குணவதி பவன் என்று ஒரு மெஸ் உள்ளது. Unlimited tasty north indian food. அதை அடிக்க எந்த 5 Star Hotel ம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RANGADURAI R
   எனக்கும் அந்த குஜராத்தி மெஸ்ஸில் கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சாப்பிட்ட அநுபவம் உண்டு.
   போட்டி போட்டுக் கொண்டு 20-25 புல்கா சாப்பிட்ட அநுபவம் உண்டு.. கடைசியாக கொஞ்சம் தயிர் சாதம் மட்டும்.
   அருமையிலும் அருமை.

   நீக்கு
 3. பொதுவாக இந்திய பொதுத்துறை அலுவங்களின் அதிகாரிகள் செயல்பாடுகள் ,பழக்க வழக்கங்கள் ஏறத்தாழ (அலுவலகத்திற்குள்ளும் வெளியிலும்)ஒரே மாதிரியாகத்தான் இருக்கிரது.நீங்கள் வங்கிகளில் நடப்பதைப் பற்றி எழுதி இருக்கிரீர்கள்.நான் ஓன் ஜி ஸி இல் பணி புரிந்தவன்.திரவ வஸ்துக்கள் சகிதமாக நட்சத்திர ஓட்டல்களில் கூட்டுச் சந்திப்பு கட்டாயம் உண்டு.திரவ வஸ்த்துக்களுக்கு அநுமதி இல்லை.ஆனால் ஓட்டல் மேலாளருக்கு தெரியும் எப்படி ரஸீதுகளில் கணக்கு காட்ட வேண்டுமென்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரவப்பொருளை திடப்பொருளாக்கி 'பில்' போட்டுவிடுவார்களோ?

   நீக்கு
 4. நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 5. குஜராத்திகளைப் போல் உணவு படைப்பவரை இதுவரை நான் பார்த்ததில்லை. அதாவது இன்னும் இன்னும் என்று வலியுறுத்தி சப்பாத்தி மற்றும் உணவை அளிப்பார்கள் (என் அனுபவம் துபாய் பஹ்ரைன் போன்ற இடங்களில்). பொதுவா அன்லிமிடெட் மீல்ஸ் என்று சொல்லிக்கொண்டு, எதையும் அதிகமாகக் கொண்டுவராமல், கேட்டாலும் அலுத்துக்கொண்டு கொண்டுவருவதுதான் தமிழகத்தின் வழக்கம்.

  பதிலளிநீக்கு
 6. குஜராத்தி உணவு நன்றாகவே இருக்கும் - Dhal-ல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து! :) உங்கள் வங்கி அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. திரவம் இல்லாத சந்திப்புகள் இப்போது அரிதாகிவிட்டது! :(

  பதிலளிநீக்கு
 7. பள்ளிகளிலும் இப்படியான அலட்டல்கள், நிகழ்வுகள், எதிர்பார்ப்புகள் உண்டுதான். கேரளத்தில் கொஞ்சம் குறைவு எனலாம். காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். கேரளம், தமிழ்நாடு உணவைத் தவிர வேறு மாநில உணவுகள் சாப்பிட்ட அனுபவம் வெகு குறைவு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 8. குஜராத்தி உணவு மிக மிக மிக நன்றாக இருக்கும் சார். ரொம்பப் பிடிக்கும். திரவம் இல்லாத கூட்டம், சந்திப்பு என்று சொன்னால்தான் ஆச்சரியப்பட வேண்டும் என்ற சூழலாகி விட்டது.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. // தனித்தீவை விலைக்கு வாங்கிக்கொண்டு தலைமறைவாகலாமே! //

  கவனம் :- நம் வெங்கோலனின் "அருளாட்சி" தனித்தீவு ஈனப் பிறவிக்கு உண்டு...!

  பதிலளிநீக்கு
 11. படிக்க துவங்கி வெகு நேரம் mess பற்றி ஏதும் வராமல் வங்கி ,கூட்டம் ,நடைமுறைகள் ,இத்யாதி ..பற்றி இருந்தது ..கடைசியில் சப்பாத்தி vaவந்தது ..மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 12. நம்மவர் அவரை விட நல்லவர் ஆயிற்றே என்ற வரிகளை இரசித்தேன்

  பதிலளிநீக்கு