வியாழன், ஏப்ரல் 14, 2022

இன்று கிழமை வியாழன் -1

இன்று கிழமை வியாழன்-1    

 14-4-2022 தமிழ்ப் புத்தாண்டு நாள்





அமெரிக்காவில் மூன்றாவது நாள் 

(இப்படியும் மனிதர்கள்)

வாசகப் பெருமக்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

"நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் மட்டுமே உன்னால் என்னைச் சந்திக்க முடியும்" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை கூறுவார். 

இந்தக் கருத்தை விரிவுபடுத்தினால், சந்திக்க வேண்டிய நபர்கள் நம்மைச் சந்திக்குமாறு  சில சூழ்நிலைகள்,  நமக்குத் தெரியாத ஒரு சக்தியால் முன்கூட்டியே உருவாக்கப்பட்டிருப்பதாக உணரலாம். அதற்கான காரணங்கள் நமக்கு தெரியாமலேயே  போகலாம்.

சென்னையில் நான் ஒரு சிறிய அடுக்கு மாடிக் குடியிருப்பை வாங்கி அதில் குடியேறிய சில நாட்கள் கழித்து, காலையில் கீரை வாங்குவதற்காக நடந்து செல்லும்போது தற்செயலாக ஒருவரைப் பார்த்தேன்.

அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. வாழ்க்கையில் பலமுறை தவறான முடிவுகளை எடுத்ததால் வாழ்க்கையையே நழுவவிட்டவர் அவர். கல்லூரி படிக்கும் காலத்தில் என் ஸ்காலர்ஷிப் தொகையில் வாங்கிய சிறு கடனைத் திருப்பித் தரவே அவருக்கு நேரமில்லை. பின்னால் ஊரைவிட்டும் போய்விட்டார். தொடர்பு அறுந்து இருபது வருடங்கள் இருக்கும்.

அந்த நபர் இப்போது என் கண்ணில் ஏன் பட வேண்டும்?

என்னை விடப் பத்து வயது பெரியவர், அதைவிடவும் 10 வயது அதிகமான தோற்றத்தில் இருந்தார். வளமே இல்லாத வாழ்வின் அடையாளங்கள் அவர் முகத்தில் தெரிந்தன. ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டார். 

என் முகவரியைக் கேட்டுக் கொண்டவர், கட்டாயம் தன்னுடன் வர வேண்டும் என்று இரண்டு சந்துகளுக்கு அப்பால் இருந்த தன் குடித்தனப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். 

பழுத்த பழமாக அவருடைய தாயார் தன் கண்களில் மீதம் இருந்த சிறிது பார்வையை என் மீது செலுத்தி, என்னை எப்படியோ அடையாளம் கண்டு கொண்டார். என் பெயரைச் சொல்லி நான் தானே என்று உறுதிப்படுத்தியபின்,  என் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் நலனை விசாரித்தார்.

வீட்டில் அந்த இருவரைத்  தவிர வேறு யாருமில்லை. நண்பரின்  மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்ன ஆனார்கள்? 

வீட்டில் ஒரே ஓர் அறைதான் இருந்தது. சமையலறை மேடையில் அடுப்பே இல்லை. ஓட்டலில் இருந்து வாங்கிவந்த உணவுகள் காகிதப் பொட்டலங்களில் மீந்து கிடந்தன. பக்கத்துத் தேநீர்க் கடையில் இருந்து வாங்கி வந்த ஒரு குவளைத் தேனீர் ஆறிப்போய் ஏடு படிந்திருந்தது.

சென்னை வெம்மையில் மின்விசிறி இல்லாமல் அவ்வளவு சிறிய அறையில் எப்படி அமர முடியும்? ஆனால் துரதிஷ்டவசமாக, தலைக்கு மேலிருந்த மின்விசிறி கழற்றப்பட்டிருந்தது. 

 அதைப் பார்த்த நண்பர் மிகுந்த சோகத்துடன் கூறினார்,  "நேற்றுதான் மின்விசிறியை 100 ரூபாய்க்கு விற்றேன், இரண்டுநாள் சாப்பாட்டிற்கு ஆகும் என்பதற்காக!"

எனக்கு நிலைமை புரிந்துவிட்டது. இவருடைய குழந்தைகள் பெரியவர்களாகி வேலை கிடைத்து, தம் தாயோடு வெளியூர் போய்விட்டிருக்க வேண்டும். வறுமையைத் தவிர வேறு எதையும் இவரால் அவர்களுக்குக் கொடுத்திருக்க முடியாது. அநேகமாக இவர்கள் மத்தியில் தொடர்பு அறுந்து போயிருக்க வேண்டும்.

அந்த அம்மையாரின் கண்களில் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அடக்கமாட்டாமல் அவர் குளியல் அறைக்குச் சென்றார். அதுதான் சமயம் என்று நானும் எழுந்து கொண்டேன். நண்பர் என் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு வெளியில் வந்தார்.

துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் அத் துயரம் எப்படி வந்தது என்று விளக்கம் கேட்பது அவரை மேலும் அவமானப்படுத்துவதாகும் என்பதால் நான் ஏதும் பேசவில்லை. கையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன்.  அவர் கண்களில் சோகம் மிகுந்த நன்றியுணர்வு  தென்பட்டது. லேசாகக் கண்ணீர் துளிர்த்தது.

"கீரை வாங்கிப் போக வேண்டும் மனைவி காத்திருப்பாள், அலுவலகத்திற்கு லேட் ஆகி விடும்" என்று என் முகவரி அட்டையை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.  எதிர்பார்த்தபடியே அவர் அருகிலிருந்த சிறு ஹோட்டலுக்குள் நுழைந்தார்.

அவருடைய அண்ணன் அரசுத் துறையில் பெரிய பதவியில் இருந்தார். அண்ணனின்  கீழ்ப் பணியாற்றிய ஒரு குமாஸ்தா, அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ ஆகி, அவருடைய துறைக்கே அமைச்சராகவும் இருந்தார். விரும்பியிருந்தால் தன் தம்பிக்கு அவரும் உதவியிருக்க முடியும். குறைந்தபட்சம் பெற்ற தாயாரையாவது தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கலாம். ஏனோ நடக்கவில்லை. 

அதன் பிறகு சில நாட்கள் கடந்துவிட்டன. அவர் மேற்கொண்டு உதவி கேட்டு என்னிடம் வரவில்லை. சுய இரக்கம் காரணமாக இருக்கலாம்.

திடீரென்று ஒருநாள் என் அலுவலகத்திற்கு போன் வந்தது. அந்த நண்பர்தான் பேசினார். பேசினார் என்பதை விட அழுதார் என்றுதான் சொல்ல வேண்டும். "உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். தயவுசெய்து உடனே வீட்டிற்கு வாருங்கள். எனக்கு வேறு நாதியில்லை" என்று புலம்பியபடியே போனை வைத்துவிட்டார்.

அவருடைய அழுகையில் இருந்து ஒருவேளை அவருடைய தாயார் மறைந்துவிட்டாரோ என்று தோன்றியது. அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு அவர் வீட்டை அடைந்தேன் . அந்தச் சிறிய வீட்டின் நடுப் பகுதியில் ஒரு கிழிந்த துணியின் மீது இன்னொரு கிழிந்த துணியாகக் கிடந்தது அவருடைய தாயார் சடலம். பக்கத்தில் சிறிய அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  சில  ஊதுபத்திகள் புகைந்து கொண்டிருந்தன. 

நண்பரைத் தவிர மனிதர்கள் யாரும் இல்லை. அக்கம்பக்கத்துப் பெண்மணிகள் சற்று தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். நண்பரின் தம்பியும் தங்கையும் உள்ளூரில் இருந்து கொண்டே வர மறுத்து விட்டார்களாம். எல்லாவற்றுக்கும் காரணம் கடன் கடன் கடன் தான். நிலையான உத்தியோகம் இல்லாமல், கிடைக்கும் பணிகளிலும் நிரந்தரமாக இல்லாமல், வாழ்நாள் முழுவதையும் தான் வீணாக்கி விட்டதை அப்போதுதான் அவர் புரிந்து கொண்டார். அக்கம்பக்கத்து கடன்கள் எதையும் அவர் திருப்பிக் கொடுத்ததில்லை. கீழ் நடுத்தரப்பகுதி மக்கள் வாழ்ந்த இடம் அது. இரக்கத்தை முன்னிட்டு அவர்கள் செய்த உதவிகளுக்கு நண்பரிடமிருந்து பணம் திரும்பி வராமல் போனாலும்,  நாணயமான நன்றியறிதல்கூட வரவில்லை. அந்த வெஞ்சினத்தை இப்போது காட்டினார்கள். பெண்மணியின் சடலத்தைக் குளிப்பாட்டுவது உட்பட எந்தச் சடங்கையும் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. திகைத்துப்போய் நின்றார் நண்பர். 

நான் கையோடு கொண்டுபோயிருந்த ஒரு தொகையை அவரிடம் கொடுத்தேன். என் கால்களைத் தொட்டு வணங்காத குறையாக அதைப் பெற்றுக் கொண்டவர், உடனடியாக அக்கம்பக்கத்துப் பெண்மணிகளுக்குத் தர வேண்டிய கடன்களை பைசல் செய்தார். அதன் பிறகே அவர்கள் தங்கள் முகத்தில் செயற்கையாக வருத்தத்தை வரவழைத்துக்கொண்டு அப்பெண்மணியின் மரணச் சடங்குகளுக்குத் துணை செய்தனர். 

ஈமச்சடங்கிற்குப்  பண உதவி செய்ய ஒருவர் வந்து விட்டார் என்று தெரிந்ததும்  அந்த இடமே பரபரப்பானது. நண்பரின் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதற்குரிய இடுகாட்டில் போய்  பதிவு செய்துவிட்டு, பச்சை தென்னை ஓலைகளுடன்  தாரை தப்பட்டை ஆட்களையும் அழைத்து வந்தார்.

கடைசியில் ஒரு சிக்கல் எழுந்தது. சடலத்தை நாலுபேர் பாடையில் தூக்கிக்கொண்டு, சற்று தூரத்தில் இருந்த வண்டியில் வைக்க வேண்டும். நண்பர் கொள்ளிச் சட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு நிற்க, வேண்டா வெறுப்பாக அங்கு உதவிக்கு வந்தது மூன்றே மூன்று ஆண்கள்தாம்!  நான்காவது ஆணுக்கு எங்கு போவது?

நண்பர் என்னிடம் கண்களால் கெஞ்சினார். நானோ அதுவரையில் எந்தச் சடலத்தையும் தூக்கியது இல்லை. அத்துடன் என் தாயும் தந்தையும் அப்போது உயிரோடு இருந்தனர். ஆகவே என்னால் தூக்கப்படும் முதல் சடலம் அவர்களுடையதாகத் தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி அல்லவா?

எனவே தயங்கினேன். ஆனால் சூழ்நிலையின் உண்மை தெரிந்தால் என்னுடைய தந்தை கோபிக்கமாட்டார் என்பதால் நான்வேறு வழியின்றி  நான்காவது தூக்கியாகச் சடலத்தை ஏந்திக்கொண்டேன்.

அதன் பிறகு அந்த நண்பரை நான் பார்க்கவில்லை. அல்லது அவரும் என்னைப் பார்க்க முன்வரவில்லை. வீடு காலி செய்யப்பட்டதாக மட்டும் தகவல் தெரிந்தது. அவருடைய இயல்பு தெரிந்திருந்ததால் எனக்கு அதில் வியப்பில்லை.

மாலையில் என் தந்தையிடம் விஷயத்தைக் கூறினேன். முதலில் கடிந்து கொண்டாலும் என் இரக்க குணத்தை அவர் புரிந்து கொண்டார். மேலும் அந்த நண்பரின் குடும்பமும் அவருக்குத்  தெரிந்ததுதான். "அரசாங்க உத்தியோகத்தை விட்டுவிட்டு சுய தொழிலில் இறங்காதே என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வேறொரு மாநிலத்திற்கு சென்று தொழில் தொடங்கினான். அதன் பலனை  அனுபவித்து விட்டான்" என்றார் அவர்.

என் கல்லூரிப் பருவத்தில் அவர்கள் வீட்டில் சிலமுறை நான் இறந்த பெண்மணியின் கரத்தால் காபி அருந்தியதுண்டு. அதை நினைவுபடுத்திய என் தந்தை, "அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகத் தான் அவருடைய பிணத்தை நீ சுமந்து இருக்கிறாய். முற்பிறவியின் விட்ட குறை தொட்ட குறையாக இருக்க வேண்டும். அவருடைய ஆன்மா சாந்தி அடைந்துவிடும்" என்றார்.

அந்த நண்பரின் முகம்  இப்போது மறந்துவிட்டது. அவருடைய தாயாரின் முகமும்தான். ஆனால் அந்த நினைவு மட்டும் மறக்காமல் எங்கிருந்தோ வந்து தன்னை இன்று எழுதிக்கொண்டு விட்டது!

-இராய செல்லப்பா, நியூஜெர்சி 

11 கருத்துகள்:

  1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    இந்த மகிழ்ச்சியான நாளில் ஒரு சோக கதையை கூறி எங்களுடைய கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டீர்கள்.

    அந்த நாலு பேருக்கு நன்றி !
    கடன் உறவைக் கொல்லும் என்பதற்கு இந்த கதையை சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  2. 12-04-22 அன்றுதான் அமெரிக்கா வந்து இருக்கிறீர்கள். இன்று தேதி 14-04-22. வந்த அன்றிலிருந்து எழுத ஆரம்பித்து விட்டீர்கள். நாங்க எல்லாம் ஒரு வாரம் ஜெட் லேக் என்று தூங்கி வழிந்தோமே..! உங்களால் தூங்காமல் எப்படி எழுத முடிகிறது ?

    " தமிழோடு பிறந்தோம்" என்ற Tag உம்மோடு ஒட்டிக் கொண்டு இருப்பதன் அர்த்தம் இபாபோதுதான் புரிகிறது .

    சூ.பரசுராமன் .அண்ணாநகர் , சென்னை -40.

    பதிலளிநீக்கு
  3. சிலருக்கு வாழ்க்கை உவப்பாக, உயிர்ப்பாக இருக்கிறது.  இவர் போன்றவர்களுக்கு துவர்ப்பாக அமைந்து விடுகிறது.  தத்தம் கருமமே கட்டளைக்கல்.

    பதிலளிநீக்கு
  4. சில கேள்விகளுக்குத் தோதான பதில்கள் கிடைப்பதில்லை. அல்லது பதில்களைத்தான் பிழையாகக் கேள்விகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ என்னமோ?
    ஒவ்வொரு மணித்துளியும் வாழ்க்கை நேர்மையாக ஏதோவொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. சிலர் அதில் பாடம் கற்றுக் கொண்டு சிறப்படைகிறார்கள். சிலர் அதை உதாசீனப்படுத்தி உருப்படாமல் போகிறார்கள். பதில்கள் இல்லாத கேள்விகளை அல்லது கேள்விகள் தேவைப்படாத பதில்களுக்கு அழகாக விதி என்று பெயரிட்டு வழக்கம் போல நாம் ஒதுக்கி விடுகிறோம்.
    பேதங்கள் இல்லாத ஏற்ற இறக்கங்கள் இல்லாத வாழ்க்கையை அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அத்தகைய வாழ்க்கை கிட்டுமானால் அதை விரும்பி ஏற்றுக் கொள்வோமா அல்லது உப்புச்சப்பு இல்லாதது என்று அலுத்துக் கொள்வோமா என்று தெரியவில்லை.
    கதையின் நாயகன் (வாழ்க்கையைத் தொலைத்தவர் தானே நாயகன்? இல்லை, கதைசொல்லியா?) எல்லாத் தெருக்களிலும் உயிரோடு உலவுகிறவர் தான். சிறிய எளிய மனிதர்கள் இல்லாத உலகில் வலிமையை எவ்வாறு நிரூபிப்பது?
    இந்தக் கதையும் ஒரு பாடம் தான். இந்தக் கணம் இந்தப் பாடத்தை வாழ்க்கை நடத்தி இருக்கிறது. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டீர்கள். நம் வாழ்வில் நடந்தவற்றைச் சற்றே கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையின் விதிகள் என்ன என்று தெரிந்துவிடும். தெரிந்துகொண்டதை அவரவர் வாழ்வில் செயல்படுத்துவதற்குள் பலருடைய வாழ்க்கையின் எல்லை முடிந்துவிடுகிறது....

      நீக்கு
    2. உங்கள் கடன் கொடுத்த நெஞ்சத்தின் வருத்தமும் , அதை மீறிய மனித நேயமும் மனதில் நிற்கிறது. த்வனியின் கருத்துக்களும் , அதற்கு உங்கள் பதிலும் சிந்தனையைத் தூண்டுபவை. அமெரிக்காவில் நூறு நாட்கள் என அடுத்த புத்தகத் தலைப்பு தெரிகிறது இப்போதே.

      நீக்கு
  5. இப்படியும் சிலர் வாழ்க்கை அமைகிறதுதான். கதையாய் எழுதிய ஆசிரியரின் அனுபவம் (ஸார் உங்கள் அனுபவம் தானே?) உதவும் நல்ல உள்ளத்தைச் சொல்கிறது. நமக்கு வாழ்க்கை பல பாடங்களை அனுபவங்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறது. அனுபவங்களை விடச் சிறந்த ஆசிரியர் யாரும் இருக்கமுடியாது என்று சொல்லப்படுவதுதானே. அந்த அனுபவங்களில் இருந்தும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையில் தவறான முடிவுகள் எடுப்பவர்கள் இப்படித்தான் இந்தக் கதையில் வரும் கதாபத்திரம் போலத்தான். ஆனால் அப்படி அவர்களால் எடுக்க முடியவில்லை எனும் போது ஏன் எனும் கேள்விக்கு விடை இல்லை...நாம் சொல்லலாம் சரியாகச் சிந்திக்கவில்லை என்று ஆனால் அதையும் மீறியது தான் வாழ்க்கை. அந்த நிமிடத்தில் மனம் என்ன முடிவு எடுக்கும் என்பது முடிவு எடுப்பவருக்கே கூடத் தெரியாது. எனவே அது விதி, முன் ஜென்மத்துப் பாவம் என்ற கட்டத்துக்குள் வந்துவிடுகிற்துதான் மனதை எப்படியேனும் சமாதானப்படுத்த வேண்டுமே. ஒவ்வொரு அனுபவத்திலும் கற்கும் பாடத்தை அடுத்த முறை செயல்படுத்தும் போது அதுவே பிழையாகி வேறொரு பாடமும் கூடக் கிடைக்கும். இப்படி வாழ் நாள் முழுவதும் ..ஒரு சிலருக்கு இப்படி ஒரு சிலருக்கு நல்ல விதமாய். இந்த மனிதருக்கு கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்...

    படைப்பில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நெகிழ்ச்சியான நிகழ்வு...

    உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து

    பதிலளிநீக்கு
  7. இந்த சம்பவத்தை இப்போது நினைவுகூற வேண்டும் என்று ஏன் தோன்றியது?



    பதிலளிநீக்கு
  8. நெகிழ்வு.... இப்படியும் சிலர். நல்லபடியாக கரை சேர்க்க நான்கு பேர்....

    பதிலளிநீக்கு
  9. மிக நெகிழ்ச்சியான அனுபவம். உங்கள் நல்ல மனதுக்கு முருகன் அருள் கிடைக்கும் நண்பரே.

    பதிலளிநீக்கு