இருந்தும் இல்லாத அமெரிக்கா
இன்று கிழமை வியாழன்-3
அமெரிக்காவில் 17ஆவது நாள்
(அட்லாண்டிக் கடலோரம்)
முதல்முறையாக சுதந்திரதேவி சிலையைப் பார்ப்பதற்காக நியூயார்க் லிபர்ட்டி ஐலண்டுக்குப் போனபோது விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது.
சுற்றுப்பயணிகள் ஏராளமாகக் குழுமியிருந்தனர். கப்பலுக்கான டிக்கட் வேகமாக விற்றுக்கொண்டிருந்தது. இணையத்தில் முன்பதிவுசெய்தவர்களும் இருந்தார்கள். நூற்றுக்கு எழுபத்தைந்துபேர் வெளிநாட்டவர்களே. அவர்களிலும் அமெரிக்காவுக்குப் புதியவர்கள் அதிகம்பேர் இருக்கக்கூடும்.
தூரத்திலிருந்தே பச்சைவண்ணத்தில் காட்சியளித்த சிலையை ஆர்வத்தோடு பார்த்தேன் நான். நியூஜெர்சியிலிருந்து ரயிலும் பஸ்சும் நடையுமாக நானும் மனைவியும் மகளும் அந்த இடத்தை நெருங்கிக்கொண்டிருந்தோம். சிட்டிபேங்க் அதிகாரி என்பதால் அவளுக்கு டிக்கட் கட்டணத்தில் முப்பது சதம் தள்ளுபடி இருந்தது. (குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும்). அங்கு மட்டுமல்ல, அமெரிக்காவில் பல மியூசியங்களிலும் பூங்காக்களிலும் கூட அத்தகைய தள்ளுபடி உண்டு. சிட்டிபேங்க் அங்கெல்லாம் பெரிய அளவில் நன்கொடை வழங்கியிருந்ததாம்.
மகள் பெற்றோருக்கு ஆற்றிய உதவி- மாடிக்கு லிப்ட் |
இன்னும் இரண்டு கப்பல்கள் புறப்பட்டபிறகுதான் எங்களுடைய கப்பல் கிளம்பவேண்டும். அதற்கு அரைமணியாவது ஆகும். எனவே சற்று நிதானமாக நடந்தோம். சாலையில் நாங்கள் பார்த்த காட்சிகள் திகைப்பையே அளித்தன.
நடைபாதையின்மீது ஆளுக்கொரு அட்டைப் பெட்டிக்குள் நபர்கள் -பெரும்பாலும் ஆண்களே- அமர்ந்துகொண்டு கிடார், கிளாரினெட், டிரம்பெட் போன்ற இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் சாக்பீஸால் எழுதப்பட்ட அட்டைகள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. “ஹெல்ப்” என்றும் “கிவ் மீ 10 டாலர்” என்றும் எழுதப்பட்டிருந்தன.
அவர்களைச் சற்றுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அமெரிக்காவிலும் பிச்சைக்காரர்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வந்தேறிகள் என்பதை அவர்களின் நிறமும் குணமும் தெளிவாகக் காட்டியது. பார்வையாளர்கள் போடும் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் தங்கள் தொப்பிகளை அவர்கள் பரப்பி வைத்திருந்தார்கள். சிலருடைய தொப்பிகளில் பண நோட்டுகள் நிரம்பி வழிந்தன. சிலரதில் மிகவும் குறைவு.
நான் ஒரு டாலர் போடலாமா என்று மகளை பார்த்தேன். அவள் வேண்டாம் என்றாள். பத்து டாலருக்கு குறைவாகப் போட்டால் கோபம் வருமாம். நமக்குத் புரியாத மொழியில் திட்டுவார்களாம். சிலபேர் நம்முடைய பர்ஸைப் பிடுங்கிக்கொள்வதும் உண்டாம்.
எங்களது விவாதத்தை எப்படியோ புரிந்துகொண்டுவிட்ட ஒரு பிச்சைக்காரர், அமர்ந்த கோலத்திலிருந்து எழுந்தார். “டுவெண்ட்டி டாலர்?” என்றார். இல்லையென்று தலையாட்டினேன். “டென் டாலர்?” என்றார். இல்லையென்றேன். “ஃபைவ் டாலர்?” என்றார். சரியென்று கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.
வேடிக்கை பார்ப்பவர்களில் பத்தில் ஒருவராவது ஏதாவது உதவி செய்யத் தவறவில்லை. நாங்கள் கப்பலில் ஏறும்வரை அவர்களின் வாத்திய இசை கேட்டுக்கொண்டிருந்தது.
நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க் எதிரே இருந்த ஒரு சர்ச் வாசலில் பகல் பன்னிரண்டு மணிக்கு சில பிச்சைக்காரர்கள் படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். ஆனால் இவர்களை ‘வீடிழந்தவர்கள்’ -’ஹோம்லெஸ்’ என்கிறார்கள். இவர்கள் தொப்பியை வைத்து பிச்சை கேட்கவில்லை. யாரும் இவர்களுக்கு உதவிசெய்யவும் இல்லை.
பின்னர் ஒரு பயணத்தின்போது பாஸ்டன் நகருக்குச் சென்றபோது, ஹார்வர்டு பல்கலைக்கழகம் அருகிலிருந்த ஹார்வர்டு ஸ்கொயரில் பூங்காவின் திட்டுக்களில் சூட்கேஸ் சகிதம் வசதியான இரவலர்கள் பலர் காலை நீட்டி வசதியாகப் படுத்துக்கொண்டிருந்ததைக் கண்டோம். இவர்களில் பலர் நல்ல வேலைகளில் இருந்து அவற்றை இழந்தவர்களாம். நாள்கணக்கில் அங்கேயே படுத்திருப்பார்களாம். சில சமயம் அவர்களாகவே வந்து சிலரிடம் காபி வாங்கித்தருமாறு கேட்பதைக் கண்டோம். பொதுவாகவே பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவலர்கள் தங்கிக்கொள்ள அனுமதி உண்டாம். சிலர் தங்கள் கார்களையே வீடாக்கித் தங்குவதும் உண்டாம்.
நியூஜெர்சியில் நான் தினமும் நூலகத்திற்குச் செல்லும் வழியில் பணிப்பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி இருந்தது. அருகிலிருந்த உழவர் சந்தையில் பணிசெய்பவர்களாக இருக்கலாம். ஒருநாள் எதிர்பாராத ஒரு திருப்பத்தில் ஒரு முதிய பெண்மணி வேகமாக என்னைத் தடுத்து நிறுத்தினாள். ஆங்கிலம் தெரியாதவள் என்று முகத்தில் எழுதியிருந்தது. “டாலர்?” என்றாள்.
நான் ஒன்றும் புரியாமல் “வாட்?” என்றேன். அவள் மீண்டும் “டாலர்?” என்றாள். அப்போதுதான் புரிந்தது, அவள் உதவி கேட்கிறாள் என்று. என்னிடம் உண்மையில் டாலர்கள் இல்லை. இந்தியாவிலிருந்து கிளம்பும்போது தாமஸ் குக்கில் ஆயிரம் டாலர்கள் வாங்கி வந்திருந்தேன். அதில் ஏர்போர்ட்டில் டிராலிக்கு ஆறு டாலர் செலவானது போக மீதியை பாஸ்போர்ட்டுடன் பத்திரமாக வீட்டில் வைத்திருந்தேன். பேண்ட் பையில் பர்ஸ் இருந்தாலும் அதில் கிரெடிட் கார்டு தான் இருந்தது. இந்திய ரூபாய்கள் கொஞ்சம் இருந்தன. இரண்டாலும் அவளுக்குப் பயனில்லை.
அதற்குள் அவள் அச்சமூட்டும் அளவுக்கு என்னை நெருங்கிவிட்டாள். இப்போது அழகான ஆங்கிலம் பேசினாள். “யூ ..வித்தவுட் டாலர்?” என்றாள் கோபமாக. (“யூ..ட்டு ப்ரூட்டஸ் ?” மாதிரி). அப்போது சாலையில் நான்கைந்துபேர் நடந்து வந்துகொண்டிருந்ததைக் கவனித்த அந்தப் பெண்மணி தனக்குள் ஏதோ முனகியபடி நகர்ந்துவிட்டாள். ஒருவேளை “இன்றுபோய் நாளை வா” என்கிறாளோ?
நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிலநாட்கள் பிரெஞ்சுத் திருநாள் கொண்டாட்டத்தின்போது தங்கியிருந்தோம். கடல்போல் பரந்திருந்த மிஸிஸிப்பி நதியின் கரைகளில் அழகாய்ப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த செவ்வரளி, வெள்ளை அரளிப் பூக்களைக் கைகளால் தடவியபடி நதியிலிருந்து எங்களை நோக்கி வீசிய மெல்லிய காற்றை அனுபவித்தபடி நடந்துகொண்டிருந்தோம். அப்போது சில இளைஞர்கள் நாங்கள் ஏதாவது தருவோமா என்பதுபோல் நின்று எங்களையே உற்றுப் பார்த்தார்கள். பரிதாபமாக இருந்தது. இரவு உணவுக்காக நாங்கள் வாங்கியிருந்த இந்திய உணவுகள் ஒரு பையில் இருந்தன. அதை வாங்கிக்கொள்வார்களா என்று கேட்டறிந்தோம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் முன்னாலேயே அதை பிரித்துப் பகிர்ந்து உண்டார்கள். அவர்களின் பசி கொஞ்சம் தணிந்திருக்கும். பார்க்க நிம்மதியாக இருந்தது.
உலகம் எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இந்தியாவானால் என்ன, அமெரிக்காவானால் என்ன? மனிதர்கள் வாழும் இடம் எதுவானாலும் இல்லாமை என்னும் ஆமை இல்லாத இடமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதனால் தானோ அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதினார், “MILES TO GO BEFORE I SLEEP” என்று?
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
Facts are prevailing everywhere, No exceptions.
பதிலளிநீக்குஅங்கெல்லாமும் யாசகர்கள் இருக்கிறார்கள் என்பது சற்று சந்தோஷமாக இருக்கிறது! நல்லவேளை நம்மூரில் இப்படி மிரட்டி பிச்சை கேட்பதில்லை!
பதிலளிநீக்குஉண்மை ஸம்பவத்தை அழகுடன்
பதிலளிநீக்குகூறியுள்ளீர்கள்.
நன்றி!
மகள் தந்தைக்காற்றும் உதவி .. மனம் களிக்கும் ஏற்றம்.
பதிலளிநீக்குபிச்சைக்காரர்கள் இல்லாத நாடு எது ?
பதிலளிநீக்குஅமெரிக்காவிலும் கையேந்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஆங்கிலபடங்களின் மூலம் தெரிந்துகொண்ட போது வியப்பாக இருந்தது. ஆனால் அது உண்மை எனத் தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
மனிதர்கள் வாழும் பூமியில் யாசகர்கள் இல்லாமலா?! எல்லா இடங்களிலும் சகஜம் தான். அமெரிக்கா உட்பட. அமெரிக்காவில் இப்படிப் பூங்காக்களில் படுக்கவேனும் விடுகிறார்களே. யாசிக்கவும் விடுகிறார்களே.
பதிலளிநீக்குசிங்கப்பூரில் இரவலர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிந்ததுண்டு. பிடிபட்டால் மிகப் பெரிய தொகை அபராதம் கட்ட வேண்டிவரும் மட்டுமல்ல சிறைவாசமும். சட்டப்படிக் குற்றம். இருக்க இடம் இல்லாதவர்கள் அரசாங்கத்திடம் மனு கொடுக்கலாம் அரசாங்கம் வகைப்படுத்தி உதவி செய்வதுண்டு என்று அறிந்திருக்கிறேன்.
கீதா
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
பதிலளிநீக்குஇல்லெனினும் ஈதலே நன்று
அமெரிக்காவில் எடுப்பது கவுரவ பிச்சை. டிராபிக் சிகனல்களில் கையில் ஒரு அட்டையை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதை பல இடங்களில் காணலாம். இவ்வாறிருக்க அமெரிக்கா நம்மை பார்த்து மனித உரிமை பற்றி பேசுவது என்ன நியாயம்?
பதிலளிநீக்குவேறு எதைப் பற்றிப் பேசுவதாம்? இந்தியா நன்றாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றா பேசுவார்கள்? அதிலும் ஒரு விஷயம் கவனித்தீர்களா, அமெரிக்கா சார்பில் அவ்வாறு நம்மைக் குற்றம் சாட்டுவதற்கென்றே நம்மவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்!
நீக்குஇசை தந்து பிச்சை கோருதல் கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது சார்
பதிலளிநீக்கு