திங்கள், ஏப்ரல் 25, 2022

மூட்டுவலிக்கு மில்லியன் டாலர்! (இன்று கிழமை ஞாயிறு-2)

 
மூட்டுவலிக்கு மில்லியன் டாலர்!

(இன்று கிழமை ஞாயிறு-2)


அமெரிக்காவில் 13ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)

நியூஜெர்சியில் எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்ததாக இருந்த குடியிருப்பின் வாசலில் ஒரு சக்கர நாற்காலியில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை ஒன்பது மணிக்கு வந்து அமர்வார். நான் வழக்கமாக நூலகத்திற்குச் செல்லும் நேரம் அது.  மூன்று மணி நேரம் கழித்து நான் திரும்பி வருவேன். அப்போதும் அவர் அங்கேயே அமர்ந்திருப்பார். உயரமான மரங்கள் அருகில் இருந்ததால் வெயிலின்  சூடு தெரியாது. 


முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது 'ஹாய்' சொல்லிக் கொள்வது அமெரிக்கர்களின் பழக்கம். ஆனால் வெளிநாட்டுக்காரர்களிடம்  அவ்வாறு நடந்து  கொள்வதில்லை. நாம் ஹாய் சொன்னாலும் அவர்கள் கவனிக்காத மாதிரி சென்று விடுவார்கள். இதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம்.


ஆனால் இந்த நண்பரோ என்னை தினமும் பார்த்துக் கொண்டிருப்பதால், அதுவும் அடுத்த குடியிருப்பில் இருந்து நான் இறங்கி வருவதையும் திரும்பிச் செல்வதையும் தெரிந்து கொண்டதால், ஒரு நாள் காலையில் நான் அவரை கடந்து செல்லும் போது என் கண்களை அவர் கண்களால் சந்தித்து ஹாய் என்றார். மலர்ச்சியோடு கைகளை ஆட்டினார்.


நான் நின்று அவருக்கு குட் மார்னிங் சொன்னேன். இருவரும் பெயர்களைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால் இருவர் மனதிலும் அது நிற்கவில்லை. "இண்டியன் நேம்ஸ் ஆர் டிஃபிகல்ட் டு புரோநௌன்ஸ்" என்றார் சிரித்துக்கொண்டே.


"தினமும் இதே நேரத்திற்கு எங்கே போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் தாமஸ். 


மெயின் ஸ்ட்ரீட்டில்  உள்ள லைப்ரரிக்குச் செல்வதைக் கூறினேன். 


"மிகவும் அழகான கட்டிடம். உள்புற கட்டமைப்பும் கவர்ச்சியாக இருக்கும். புதிய  புத்தகங்களை அவர்கள் வகைப்படுத்திக் அடுக்கி வைத்திருக்கும் அழகே தனி. தலைமை லைப்ரரியன் லூசி மிகவும் திறமையானவர்" என்றார் தாமஸ். "இப்போதும் அவர் இருக்கிறாரா?"


அந்தக் கேள்வியில் இருந்து அவர் லைப்ரரிக்குச் சென்று பல நாட்கள் ஆகிறது என்று தெரிந்தது. "லூசிதான் இப்போதும் இருக்கிறார். வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்" என்றேன்.


பிறகு அவரே  கூற ஆரம்பித்தார். அந்தக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் சொந்தக் குடியிருப்பில் வசித்து வருபவர்தான் தாமஸ். ஐக்கியா போன்ற மரப்பொருட்கள் விற்பனைசெய்யும் நிறுவனங்களுக்குத் துணைப்பொருட்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். அதிக இலாபம் இல்லாவிடினும், போதுமான வருமானம் வந்தது. இரண்டு பிள்ளைகள். அமெரிக்கப் பண்பாட்டை ஒட்டி,  அந்த இருவரும் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனியாகக் கிளம்பிப்போய்விட்டார்கள்.  அப்போதுதான் தாமஸ் தன்னைத் தனியாளாக உணரத் தொடங்கினார். ஏனென்றால் அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய இரண்டாவது மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டு இவருடைய உறவினர் ஒருவரையே திருமணம்  செய்துகொண்டுவிட்டார். 

பாதிக்கப்பட்ட மூட்டு 


மனைவி போனதால் அவருக்குப் பொருளாதார நஷ்டம் ஏதுமில்லை. ஏனென்றால் அவள் வேலை செய்து சம்பாதித்தவள் அல்ல. அதே சமயம் ஊதாரியும் அல்ல. முடிந்தவரையில் அவள் நல்ல மனைவியாகத்தான் வாழ்ந்தாள். ஆனால் உடல்ரீதியாக அவளுக்கு வேட்கை அதிகம் இருந்தது. அதற்கு தாமஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவே மணமுறிவுக்குக் காரணமானது.


இந்த மாதிரியான  விஷயங்களை மூன்றாமவரிடம் சொல்வதற்கு அவர் கூச்சப்பட்டிருக்க வேண்டாமோ? இல்லவே இல்லை. அதுதான் அமெரிக்கர்களின் குணம். உடலியல் சங்கதிகளில் அவர்கள் மனவிகாரத்தைக் காட்டுவதில்லை.


தந்தைக்கு இருந்த ஒரு நோய்க்கூறு தாமஸுக்கும் இருந்தது.  அதுதான் மூட்டு வலி! இரண்டு கால்களிலும் நடக்கும்போது விண்ணென்று தெறிக்கும். முட்டிகள்  இரண்டும் வீங்கினாற்போல் ஆகிவிடும். குனிந்து இரண்டு கிலோ எடையுள்ள பொருளைக்கூட தூக்கமுடியாது. நடந்தால் கால்கள் சற்றே வளைந்தாற்போல் பார்ப்பவர்களுக்கு  விநோதமாகப் படும்.

மூட்டு மாற்றப்பட்ட பிறகு


அவருடைய தொழிற்சாலையில் மொத்தம் ஏழுபேர்தான் தொழிலாளர்கள். அவர்களோடு இவரும் சேர்ந்து எட்டாவதாக உழைத்தால்தான் வேலை நடக்கும். மரம் சார்ந்த தொழில் என்பதால் பொருட்களைத் தூக்கிவைக்கவும் இடம் மாற்றவும் ஆரோக்கியமான உடல் தேவைப்பட்டது. இவரது கால்கள் இப்போது மூட்டுவலியால் சோர்ந்து போய்விட்டதால் வேலையில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே சில ஆண்டுகளாக ஒத்திவைத்திருந்த ‘மூட்டு மாற்று அறுவைசிகிச்சை’யை உடனடியாக மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


மனைவி குழந்தைகள் எல்லாருமே பிரிந்துவிட்ட நிலையில் மனமும் பலவீனப்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சையின்போது அவருக்குத் தெம்பூட்ட யாரும் இல்லை. ஒருவார சிகிச்சை வெற்றியடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இரண்டு மாதங்கள் இயன்முறை சிகிச்சை (பிசியோதெரப்பி) எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். 


இங்கு ஆஸ்பத்திரியில் சேரும்போது, இன்ஷுரன்ஸ் இருக்கிறதா என்று கேட்டுத்தான் உள்ளே அனுமதிப்பார்கள். (இவரிடம் இருந்தது.) ஒருவேளை, இன்சூரன்ஸ் கொடுக்கும் தொகையையும் மீறி  அதிகம் கொடுக்கவேண்டி இருந்தால், தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்தோ அல்லது, கடன் அட்டையிலிருந்தோ  அதை எடுத்துக்கொள்ளுமாறு   அனுமதிக் கடிதம்  கொடுத்தால்தான் சிகிச்சையைத் தொடங்குவார்கள். (இவரும் கொடுத்தார்.) முழுச்செலவின் விவரம் தெரிய சில மாதங்களாகும்.


அப்படித்தான் மூன்று மாதங்களுக்குப் பிறகு தன் வங்கிக்கணக்கைப்  பார்த்தவருக்கு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இன்சூரன்ஸ் கொடுத்ததற்கு மேல் எட்டு லட்சம் டாலர் அவருடைய கணக்கில் இருந்து ஆஸ்பத்திரி எடுத்துக்கொண்டிருந்தது. ஒரு லட்சம் டாலர்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் அவரால் தட்டிக்கேட்க முடியாது. ஆஸ்பத்திரி விதிகளில் அதற்கு இடமில்லை. அத்துடன் இன்சூரன்ஸ் கம்பெனிமீது வழக்குத் தொடுத்து வெற்றியடைந்தவர்கள் குறைவு. 



இரண்டு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு, கையிலிருந்து ஆன செலவு  எட்டு லட்சம் டாலர் என்பது அவரை ஏழையாக்கி விட்டது. அவருடைய ஊழியர்கள் அந்த நேரத்தில் வாடிக்கையாளர்களைச் சரிவர கவனிக்காமல் இருந்ததால் ஒரு பெரிய ஆர்டர் ரத்தாகிவிட்டது. இனி அவரோடிருந்தால் முன்னேறமுடியாது என்று அனுமானித்த ஊழியர்கள் ஒருவர்பின் ஒருவராக விலகிப்போனார்கள். மிச்சம் மீதி இருந்தவற்றை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு, தனது சக்கர நாற்காலியே துணையாக, தன்னை விடச் சிறிய தொழில்முனைவர் ஒருவரிடம் கிடைத்த சம்பளத்திற்கு ஆலோசகராகச் சேர்ந்துவிட்டார் தாமஸ். 



“இந்தியாவில் இதுபோன்ற சிகிச்சைகள் குறைந்த செலவில் கிடைப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா?” என்று கேட்டார்.


சரியான ஆளாகப் பார்த்துத்தான் கேட்டார் போங்கள்! பத்து வருடங்களுக்கு முன்பே என் இரண்டு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்துகொண்டிருந்தேன். சென்னையில் இதற்கென்றே உள்ள பிரபலமான ‘மியாட்’ மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றேன். ஒருவார ஆஸ்பத்திரி வாசம். அப்புறம் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வு. வலி இருந்தால்   அன்றுமட்டும் ஒரே ஒரு ‘டோலோ 650’ மாத்திரை. அதிக வலி இருந்தால் மட்டும் பிசியோதெரபி. வேறு மருந்துகளோ வைட்டமின்களோ தேவையில்லை. தினமும் மொத்தம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரும் அளவுக்கு, விட்டு விட்டு, தரையில் நடக்கவேண்டும். மாடிப்படிகளில் ஒரு நாளைக்கு நான்குமுறை ஏறி இறங்கவேண்டும். (ஒரு தடவைக்கு இருபது படிகளாவது.) வழக்கமான சாப்பாடு. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிவுரை. 


இன்னொரு முக்கிய அறிவுரை, எக்காரணம் கொண்டும் ‘வாக்கர்’ அல்லது கைத்தடி பயன்படுத்தக்கூடாது. அது சுயமாக நாம் இயங்குவதைத் தாமதப்படுத்திவிடும் என்றார் ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் மோகன்தாஸ். (எனது அறுவை சிகிச்சை நிபுணர் பெயர் டாக்டர் ரொசாரியோ. மங்களூர்க்காரர்.)


மூன்றாவது வாரம் நான் பழையபடி வேலைக்குத் திரும்பிவிட்டேன். இந்தப் பத்தாண்டுகளில் ஒரு சிறிய வலியோ, வேதனையோ கிடையாது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை இரண்டும் இந்த சிகிச்சையால் கிடைத்தது. என்னைப் பார்த்து என்னுடைய நண்பர்கள் நிறையப்பேர் அதே ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சையை மேற்கொண்டு நலமாக இருக்கிறார்கள்.

இந்த விவரங்களை அவரிடம் சொன்னேன். 


அவர் அசந்துபோனார். அவருடைய நைஜீரிய நண்பர் ஒருவர் அப்போதே சொன்னாராம் இந்தியாவுக்குப் போ என்று. ஆனால் அமெரிக்க மருத்துவத்தைவிட இன்னொரு நாட்டில் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்பதை அவரால் அப்போது நம்பமுடியவில்லை. ஆகவே நியூயார்க்கில் ஒரு மிகச் சிறந்த மருத்துவமனைக்கே போனார். இன்சூரன்ஸ் கம்பெனியிடமிருந்து ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் சேர்த்துக்கொண்டால் மொத்தத் செலவு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டிவிட்டதாம்! அன்றைய டாலர்-ரூபாய் பரிவர்த்தனை விகிதப்படி இது சுமார் ஏழு கோடி ரூபாய்!


எனக்கு ஆன செலவு எவ்வளவு என்று கேட்டார். ஒரு காலுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் ஐந்து லட்சம் ரூபாய் என்றேன். அதாவது எட்டாயிரம் டாலருக்கும் குறைவு!


அதிர்ச்சியோடு என்னைப் பார்த்த தாமஸ், மனதிற்குள் ஏதோ கணக்கு போட்டபடி “ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு நான் மேற்கொண்ட பிஸியோதெரபிக்கும் இந்த வீல்சேருக்கும் ஆன தொகையே அதைவிட அதிகம்!” என்றவர், “உங்கள் நாட்டில் எப்படி முடிகிறது இவ்வளவு குறைந்த செலவில்?” என்று ஆர்வத்தோடும் மரியாதையோடும் கேட்டார். 


பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்துறை நிறுவனங்களும் ஒருவர்மீது ஒருவர் போதுமான கண்காணிப்பைச் செலுத்துவதால்தான் இது சாத்தியம் என்பதைச் சொன்னேன். அதே சமயம் இந்தியர்களைப் பொறுத்தவரையில் இதுவே அதிகமான செலவாகத்தான் கருதப்படுகிறது என்பதையும், பெரிய தனியார்துறை ஆஸ்பத்திரிகள் தங்களைக் கொள்ளையடிப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள் என்பதையும் சொன்னேன். 


“உங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி” என்ற தாமஸ், காலை உணவிற்காகக் கிளம்பினார்.  நானும் ‘பை’ சொல்லிவிட்டு நூலகத்திற்குப் புறப்பட்டேன்.  


ஒன்றரை ஆண்டு கழித்து நான் மீண்டும் நியூஜெர்சி வந்தபோது, அந்தக் குடியிருப்பில் அவர் இல்லை. வீட்டை விற்றுவிட்டு வேறொரு மாநிலத்திற்குப் போய்விட்டதாகக் குடியிருப்பின் கண்காணிப்பாளர் கூறினார்.


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  

8 கருத்துகள்:

  1. நண்பருடனான உரையாடல் பகிர்வல் சிலபல பயனுள்ள தகவல்கள் எங்களுக்கும் கிடைத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. நாம் ஹாய் சொன்னாலும் அவர்கள் கவனிக்காத மாதிரி சென்று விடுவார்கள். இதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம்.//

    கிழக்குப் பக்கம் அப்படியோ? மேற்கில் அப்படி இல்லையே! அவர்களாகவே புன்சிரித்து ஹாய் சொல்வது வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் சார் இந்திய மருத்துவம் போன்று சிறந்தது எதுவும் இல்லை எனலாம். அலோபதியாக இருந்தாலும் சரி, மாற்று மருத்துவமும் இங்கு இருப்பதால் ஆகச் சிறந்த மருத்துவத்திற்கான உலகளாவிய தலைநகரம் என்றே சொல்லலாம்.

    ஆனால் என்னவென்றால் சரியான மருத்துவரை நாட வேண்டும். நமக்கு அமையவும் வேண்டும். அதற்கானச் செலவைச் செலவழிக்க விட்டமின் எம் மும் வேண்டும். நம்ம ஊர் தனிமனித சராசரி வருமானத்தைக் கணக்கில் கொண்டால் மத்தியதர, அதற்கும் கீழான மக்களுக்கு நம்மூரிலும் மருத்துவச் செலவு அதிகம்தான்...எல்லாராலும் செலவழிக்க முடியாதே சார். அதனால்தான் அமெரிக்காவில் வாழும் நம்மூர் மக்கள் இங்கு வந்து சிகிச்சை மேற்கொள்கிறார்கள். பெரும்பான்மையோர்.

    கீதா



    பதிலளிநீக்கு
  4. பாவம் உங்கள் நண்பர் தாமஸ். இந்தியவைப் பற்றி இன்னும் கொஞ்சம் அவர் ஆராய்ந்திருந்தால் நம்பிக்கை இருந்திருந்தால் இங்கு வந்து அவர் சிகிச்சைப் பெற்றிருந்திருக்கலாம். வெளிநாட்டவர்கள் பலர் இங்கு வந்து சிகிச்சைப் பெற்றுக் கொண்டு செல்கிறார்களே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு சந்திப்பு. வெளிநாட்டை ஒப்பீடு செய்யும் போது இந்தியாவில் செலவு குறைவு தான். தற்போது வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சில சிறப்பு வசதிகளும் இங்கே செய்து தருகிறார்கள் - Medical Visa போன்றவை பெறுவதும் சுலபமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் இந்த பதிவில் இருந்து மூட்டு வலி பற்றியும், அதற்கான அறுவைச் சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிந்து கொண்டோம் .
    நன்றி.

    பதிலளிநீக்கு