சனி, ஜூன் 18, 2022

ஆண்டாளா? அப்படி யாரும் இல்லையே!

ஆண்டாளா? அப்படி யாரும் இல்லையே!  

(புதுடில்லிப் புராணம்-4)

அமெரிக்காவில் 67 ஆவது நாள் (17-6-2022)

நேற்றைய கடைசி வரிகள்:: அவள் மெதுவாக நெருங்கிவந்து.... மெல்லிய குரலில் கேட்டாள்: "சாருக்குத் திருமணம் ஆகிவிட்டதா?"

*** 

ஆனால் நான் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் ஆண்டாள் விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டாள். வெளியே சென்றிருந்த அவளுடைய அறைத்தோழியர் சிலர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். அவளையும் என்னையும் தொடர்புபடுத்தி அவர்கள் கிசுகிசுக்கலாம் என்ற பயமோ?

ஆனால் அவளுடைய எதிர்பாராத சந்திப்பு எனக்கு மிகவும் இனித்தது. (காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல). 

*** 

அலுவலகத்தில் அன்று அதிக வேலை. ஒரு முக்கிய ஏற்றுமதியாளருக்கு அவசரக் கடனாக ஐந்து கோடி வேண்டுமாம். நல்ல வாடிக்கையாளர். இளைஞர்.  அவர் கேட்பது எல்லாம்  குறுகிய காலக் கடன்களே.எல் ஸிஎன்னும் வகையைச் சார்ந்தவை. 90 முதல் 180 நாட்களில் திரும்பிச் செலுத்தப்பட்டுவிடும். ஜெர்மனியிலிருந்து பெரிய ஆர்டர் வந்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் அவருக்குப் பணம் வேண்டும்.

இது நான் அல்ல, இவள் ஆண்டாள் அல்ல (ஓவியம்: தமிழ்)

அவருடைய பழைய கோப்புகளை எல்லாம் புரட்டிப் பார்த்து, சென்ற சில ஆண்டுகளின் பற்று-வரவு மற்றும் ஐந்தெழுத்து கணக்குகளைத் திரட்டி எழுதி, தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை தயாரிக்கும் பணியில் அன்று முழுதும் ஈடுபட்டிருந்தேன். மறுநாள் சனிக்கிழமை. எனக்கு அரை நாள்தான் அலுவலகம். எப்படியும் ஆண்டாளைச்  சந்தித்துவிடவேண்டும் என்று இருந்தேன். (காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல).

***

மாதவன் எப்போதும் சொல்லிக்கொள்ளாமல்தான் வருவான். இருபத்திரண்டு வயது இளைஞன். இன்னொரு வங்கியில் அதிகாரியாக இருந்தான். சரோஜினி நகரில் குடியிருந்தான். தந்தை கொஞ்சம் முரட்டுப் பேர்வழி. அடிக்கவெல்லாம் மாட்டார். வார்த்தைகளாலேயே ஊசி குத்துவார். இவன் எதிர்த்துப் பேசமாட்டான். அம்மாவின் குணம் அவனுக்கு.

 சார், நீங்கள் தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு சொல்லவேண்டும்என்றான் மாதவன்.

 அவன் பணியாற்றியது ஒரு தென்னிந்திய வங்கி. டில்லியில்  அதன் கிளை துவங்கியபோது பெருத்த சிபாரிசில் இவனுக்கு கிளார்க் வேலை கொடுத்தார்கள். இப்போது அதிகாரியாகப்  பதவி உயர்வு கிடைத்து ஆறுமாதம் ஆகிறது.  கல்வியாண்டுத் தொடக்கத்தில் இடமாற்றம் என்பது வங்கிகளில் பொதுவான பழக்கமே. இவனுக்கும் அதுபோல மாறுதல் உத்தரவு வந்திருந்தது. பெங்களூருக்கு.

 ஐம்பது ஆண்டுகளாக டில்லியில் இருந்தாயிற்று. பெங்களூரும்  வேண்டாம் மண்ணும் வேண்டாம். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சர்வீஸ் கமிஷன் எழுது. இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டர் போஸ்ட் எளிதில் கிடைக்கும்என்று அடுத்த வருடம் ரிட்டையர் ஆகவிருந்த அப்பா சொல்லிவிட்டார். அரசாங்க குவார்ட்டர்ஸைக் காலிசெய்தாகவேண்டுமே என்ற கவலை அவருக்கு. வாடகைக்குப் போவதாக இருந்தால் ரோகிணி போன்ற வளர்ச்சியடையாத கிராமப்புறத்துக்குத்தான் போகவேண்டும். போக்குவரத்து பிரச்சினை, மற்றும்  தெரிந்தவர்கள் யாரும் இல்லாத இடம். நாற்றைப்  பிடுங்கி நடலாம், மரத்தை வேரோடு பிடுங்கி நட முடியுமா? மாதவனுக்கு அரசாங்க வேலை ஏதேனும் கிடைத்துவிட்டால் காலி செய்ய வேண்டாம். அதிலேயே நீடிக்கலாம்.  

எனக்கு அரசாங்க வேலை பிடிக்கவில்லை சார்! மனிதர்களையே பார்க்க முடியாது. எப்போதும் பழைய பேப்பர், கிழிந்த பைல்கள், ஆபீஸ் நோட்ஸ், கமிட்டி மீட்டிங்…..இவைதான். அப்பா படும் பாட்டைத்தான் பார்க்கிறேனே! எனக்கு அந்த நிலைமை வேண்டாம்! வங்கிப் பணியில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் தான் அப்பாவிடம் சொல்லவேண்டும்!

நானா? நடுங்கிவிட்டேன். மாதவனிடம் வெறும் வாய் வார்த்தையோடு நிற்பார். நான் யாரோ! என்னை இரண்டாகக் கிழிக்கவும் தயங்கமாட்டாரே! அவர் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதை மாற்றிக்கொள்ள மாட்டாரே!

அவசரப்படாதே மாதவன்! அப்பா சொன்னதிலும் அர்த்தம் இருக்கிறது. டில்லியில் வீடு கிடைப்பது, தமிழ்நாட்டில் ரேஷனில் நல்ல பச்சரிசி கிடைப்பதுபோல அபூர்வமானதல்லவா!   எதற்கும் சர்வீஸ் கமிஷனை எழுதிவிடு. முடிவு வருவதற்கு ஏழெட்டு மாதம் ஆகுமல்லவா? அப்போது பேசி முடிவெடுக்கலாம்!என்று அவனை ஆறுதல்படுத்தினேன். ஆனால் எனக்குள் வேறொரு திட்டம் உருவாகிக்கொண்டு இருந்ததை அவன் அறியமாட்டான். 

*** 

கடுமையான முயற்சிக்குப் பிறகு ஆண்டாள் இருந்த விடுதியின் போன் நம்பரைக் கண்டுபிடித்துவிட்டேன்.மே ஐ டாக் டு மிஸ் ஆண்டாள் ப்ளீஸ்?” என்றேன். 

வெயிட் கீஜியேஎன்று பதில் வந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “உங்கள் போன் நம்பரைக் கொடுங்கள்என்று வாங்கிக்கொண்டார். இன்னும் சில நிமிடங்களுக்குப் பிறகு, “சாரி சார்! பெர்மிஷன் நஹி ஹை!என்றார்.

அந்த விடுதியின் விதிப்படி, அறையில் ஒருவர் தங்க வரும்போதே, தனக்கு இன்னின்ன நம்பர்களிலிருந்துதான் போன் வரும் என்று தெரிவித்திருந்தால் மட்டுமே போன் இணைப்பு கொடுக்கப்படுமாம். ஆண்டாள், என்னுடைய நம்பரைக் கொடுக்காததால் நான் பேசமுடியாதாம்!

சரி, இதெல்லாம் வேலைக்கு ஆகாது. நேரிலேயே போய்விடலாம் என்று கிளம்பினேன். மாலை ஆறுமணிக்கு விடுதியில் இருந்தேன். மிஸ். ஆண்டாளுடன் பேசவேண்டும் என்றேன்.

 ரிசப்ஷனில் இருந்த பெரியவர், தன் போர்வையைச் சரிசெய்தபடி,  “நீங்கள் அவருக்கு என்ன ஆகவேண்டும்?” என்றார் என் முகத்தைப் பார்க்காமலேயே. என்னவேண்டுமானாலும் ஆகலாம்தான். அவசரத்துக்குஅங்கிள்என்றேன்.   

 ரிஜிஸ்டரைப் புரட்டிவிட்டு ஆண்டாள் என்ற பெயரில்கோயீ  நஹி  ஹைஎன்றார். 

 அப்படி யாரும் இல்லையா? “போனவாரம் இங்குதான் பார்த்தேன். மோனிகா என்று கூட சொல்வார்கள். ரஷ்ய மொழி படிக்கிறார்”  என்று க்ளூ கொடுத்தேன். உடனே முகம் பிரகாசமாகி உள்ளே போனார். 

சற்று நேரத்தில்ஐ ஆம் மோனிகாஎன்று ஒரு பெண் வந்து நின்றாள். ஆனால் அவள் ஆண்டாள் அல்ல. யாரோ ஒரு வங்காளிப்பெண். 

மன்னிக்கவேண்டும்என்று குழம்பினேன்.போன வாரம் சப்தார்ஜங்கில் ஒரு ரஷியக் குழுவில் அவரைப் பார்த்தேன்….ஆனால் அது நீங்கள் அல்லஎன்று தயங்கியபடியே சொன்னேன். 

மோனிகா சிரித்தாள்.புரிந்துவிட்டது. நான் ஐந்து வருடமாக ரஷிய மொழியில் பயிற்சி பெற்றவள். நான் விடுமுறையில் இருந்தால் எனக்குப் பதில் வேறொரு பெண்ணை கைடாக அனுப்புவார்கள். அவளும் தன பெயர் மோனிகா என்றுதான் கூறவேண்டும். இல்லையென்றால் எனக்கு வரும் எதிர்கால வாய்ப்பு அவளுக்குப் போய்விடும் அல்லவா? இருக்கட்டும், அவளுடைய இயற்பெயர் என்னவென்று சொன்னாளா?”   

ஆண்டாள்என்றேன் பளிச்சென்று. 

அப்படியெல்லாம் யாரும் இல்லையே! அவளுடைய தாய்மொழி என்னவென்றாவது தெரியுமா?”

தெரியும். அவள் ஒரு தமிழ்ப்பெண். மதுரைக்காரிஎன்றேன் ஆர்வத்துடன். 

அதற்குள் இன்னும் சில பெண்கள் உள்ளிருந்து வந்தார்கள், உதவும் நோக்கத்துடன். எல்லோருமாகச் சேர்ந்து அந்தத் தமிழ்ப்பெண்ணின் பெயர் கவிதா என்று முடிவுக்கு வந்தார்கள். கவிதாவா? இது என்ன புதுக் குழப்பம்

ரிசப்ஷனில் இருந்த இண்ட்டர்க்காமை எடுத்து.கவிதாஜி! ஆயியே! யு ஹேவ் எ விசிட்டர்என்றாள் மோனிகா. 

ஐ டோன்ட் எக்ஸ்பெக்ட் எனி விசிட்டர் டுடேஎன்றபடி வந்தாள் கவிதா. அதாவது நம்முடைய ஆண்டாள்! 

ஆடு திருடிய கள்ளன் மாதிரிஎன்பார்களே அந்த பாவத்தை அவளிடம் கண்டேன். அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். மற்ற பெண்கள் நான் யார் என்பதுபோல் அவளை ஊடுருவிப் பார்த்தார்கள்.உன் அங்கிளா?’ என்று கேட்டது அவர்கள் பார்வை.

மை அங்கிள்என்று சிரித்தாள் கவிதா என்கிற ஆண்டாள்.என் பாய் ஃபிரண்டுக்கும் அங்கிள்னு தான் பேர்என்று சிரித்தாள் அவர்களில் ஒருத்தி.இல்லாவிட்டால் இந்த விடுதிக்குள் விடமாட்டார்களே!’ 

***

என்ன பித்தலாட்டம் இது? நீங்கள் உண்மையில் யார்? மோனிகா தான் இல்லைஆண்டாளா, கவிதாவா? இன்னும் எத்தனை பெயர் உங்களுக்கு?”   

அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு அருகிலிருந்த புல்தரையின் ஜில்லிப்பை அனுபவித்துக்கொண்டே கேட்டேன். 

 சபல புத்தியுள்ள ஆண்களிடமிருந்து வேறு எப்படித் தப்புவதாம்?” என்று நாணத்தோடு  சிரித்தாள் கவிதா. அதுதான் அவளுடைய உண்மைப் பெயராம். ஐடி கார்டைக் காட்டினாள். நானும் சேர்ந்து சிரித்தேன்.

இருவரும் கோன் ஐஸ்கிரீம் வாங்கினோம். குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது டில்லியில் உள்ள பழக்கம். உடம்பைச்  சூடாக வைக்கும். 

 முன்னறிவிப்பாமல் வந்திருக்கிறீர்கள், என்ன காரணம்?” என்றாள் கவிதா எதிர்பார்ப்புடன்.  “ஒருவேளை, அன்று நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வந்தீர்களோ?” என்று குறும்பாகப் பார்த்தாள். 

என்ன பதில் எதிர்பார்க்கிறீர்கள்?’ 

எனக்கு எப்படித் தெரியும்?”

என்ன பதிலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வீர்களா?”

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது…என்று இழுத்தாள்.

அப்படியானால் ஏதோ ஒரு குறிப்பிட்ட பதிலைத்தான் எதிர்பார்க்கிறீர்கள் இல்லையா?”

அப்படியும் சொல்வதற்கில்லை…என்று மீண்டும் குறும்பாகப் பார்த்தாள்.

ஐஸ்கிரீம் முடிந்து கோனையும் தின்றாகிவிட்டது.இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கட்டுமா?” என்றேன்.

வேண்டாம். நாளை என்னுடைய கடைசி ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கிறது. லோதி கார்டனில். இன்னொரு ரஷ்யக் குழு வருகிறது. குரல் முக்கியமில்லையா?”    

 தன் கைப்பையில் இருந்து டக்கென்று ஒரு கவரை எடுத்தாள்.வீட்டில் போய்ப்  படியுங்கள். நான் சில விஷயங்களில் முந்திரிக்கொட்டை மாதிரி”    என்று சிரித்தாள்.

அனுமதித்த நேரம் முடிந்துவிட்டது. அவள் கிளம்பவேண்டும். நானும் என் சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தேன்.நீங்களும் அறைக்குப் போய்ப் படியுங்கள். ஆனால் பதில் நல்லதாக இருக்கவேண்டும்என்றேன்.

அவள் முகம் பவுர்ணமி நிலவை விடப் பெரியதாக மலர்ந்தது.குட் நைட்என்றாள். 

(தொடரும்)

-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.     



17 கருத்துகள்:

  1. சஸ்பென்ஸ் நீள்கிறது.  இரண்டு கடிதங்களிலும் வாசகர்கள் எதிர்பார்க்கும் விஷயம் இருக்காது.  அதுதானே எழுத்தாளத்திறமை!

    பதிலளிநீக்கு
  2. இந்த மாதிரி நிகழ்வுகளில், வாசகர்கள் எதிர்பார்ப்பு வேறு.. எழுத்தாளர் வேறு பாதையில் கதையைக் கொண்டுசென்றால் (எப்படி ரஷ்யமொழி வல்லுநராவது என்று விலாவாரியாக அவளிடம் கேட்பது போன்று) வாசகர்கள் ஏமாற்றமடைவார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களை விரும்பி ஏமாறும்படி செய்வதுதானே நல்ல எழுத்தாளனுக்கு இலக்கணம்? ஆனால் எதிர்பாராத முடிவைத்தானே அவர்கள் விரும்புகிறார்கள்!

      நீக்கு
  3. பெண்: காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்

    ஆண் : சந்திரனும் சூாியனும்
    அஞ்சல்காரா்கள்
    இரவு பகல் எப்பொழுதும்
    அஞ்சல் உன்னைச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பரே, காதல் கதையைப் படித்தால் உங்களுக்கும் காதல் கவிதை பொங்கிக்கொண்டு வருகிறதோ?

      நீக்கு
    2. இது நிஜமா ? இல்லை உடாண்ஸா.??

      நீக்கு
    3. எழுத்தில் உண்மை மிளிர்கிறது... எப்பொதுமே உண்மை புனைகதையைவிட ஆச்சர்யங்களைக் கொண்டது

      நீக்கு
  4. // (காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல...) //

    நினைக்க வைக்கும் வரை விட மாட்டீர்கள் போல...!

    பதிலளிநீக்கு
  5. ரசித்தேன். நல்ல ஓட்டத்தில் சிறப்பாக உள்ளது.
    ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் என்னதான் சஸ்பென்ஸோடு முடித்திருதாலும் வாசகர்கள், இங்கே அவர்களும் எழுத்தாளர்கள் என்பதால் ஏமாறத் தயாராகவில்லை.

    பதிலளிநீக்கு
  7. ஒப்புக்கொள்கிறேன், அம்மையீர்!

    பதிலளிநீக்கு
  8. "காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல" - என்று சொல்லி நினைப்பது போலல்லவா கொண்டுசெல்கிறீர்கள் ;)

    பதிலளிநீக்கு
  9. ஹிஹிஹி என்னதான் சஸ்பென்ஸாக அதை உருவாக்குவது பொல நீங்கள் அடைப்புக் குறிக்குள் கொடுத்தாலும் உரையாடல்கள் அப்படிச் சென்றாலும், கண்டிப்பாக அது இல்லை!!! அடுத்த பகுதிக்குப் போகிறேன். கவரும் கவரும் அப்படி என்னதான் பேசிக் கொண்டன என்று பார்க்க.

    அங்கிள் - முறைப்பையனை 'மாமா' நம்மூர்களில் அழைப்பது உண்டே ! ஹாஹாஹா...

    ரசித்து வாசித்தேன்
    .
    கீதா

    பதிலளிநீக்கு