புதன், ஏப்ரல் 27, 2022

அமெரிக்காவில் குப்பை கொட்டுவது எப்படி?

அமெரிக்காவில் குப்பை கொட்டுவது எப்படி?

இன்று கிழமை செவ்வாய்-3

அமெரிக்காவில் 15ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)


திருமணமான தமிழ்ப் பெண்களுக்கு மிகவும் பிடித்த சொற்றொடர்களில் ஒன்று "குப்பை கொட்டுதல்" ஆகும். அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும், கணவனின் பிறந்த நாளன்றோ, அல்லது, தங்கள் திருமண நாளன்றோ "இத்தனை வருடம் உங்களோடு  குப்பைகொட்டி என்ன பயன்?" என்ற கேள்வி தவறாமல் எழுப்பப்படுவதும், அதற்கு கணவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் (அல்லது பதில் சொல்லி மேலும் இக்கட்டில் சிக்கிக் கொள்ளாமல்) திருதிருவென்று விழிப்பதும் வழக்கமான நிகழ்ச்சிகள். ஆறுமுகம் முதல் அம்பானி வரை இதில் மாற்றமில்லை.


(ஒரு மாறுதலுக்காகக்கூட எந்தக் கணவரும் தன் மனைவியைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டதாகத் தகவல் இல்லையே ஏன்?)


அது மட்டுமல்ல, சங்கத் தமிழிலிருந்த எவ்வளவோ  சொற்கள் வழக்கொழிந்து போனாலும், 'குப்பை கொட்டுதல்' போன்ற குப்பையான சொற்கள் அழியாமல் நிரந்திரமாக இருக்கின்றன என்றால் அந்தக் குப்பையில் ஏதோ பொக்கிஷம் இருக்கத்தானே வேண்டும்!

இதைப்பற்றி நன்கு சிந்தித்து வையுங்கள். ஏதாவது தமிழ்த் தொலைக்காட்சியில் இரவுநேர விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ளுது உங்களைச் சிறப்பு விருந்தினராக  அழைக்க சிபாரிசு செய்கிறேன்!  

இப்போது நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குள் போகலாம்.


அன்றாடம் நம் வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைகளைக் கொண்டு காம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம்; பிளாஸ்டிக் உறைகளையும் பொருட்களையும் தனிமைப்படுத்தினால்  மறுசுழற்சி செய்வோருக்கு விற்பனை செய்யலாம். வீணாகிப் போன மின்னணுப் பொருட்களை அவற்றை வாங்குவதற்கென்றே விளம்பரப்படுத்தும் நபர்களை போனில் அழைத்து விற்பனை செய்யலாம். வந்த வரை இலாபம் தானே! குப்பையில் மாணிக்கம்!


ஆனால் அமெரிக்காவில் குப்பையை விற்க முடியாது. கண்ட இடத்தில் குப்பையைப் போடவும் முடியாது, அதேபோல் நினைத்த நேரத்தில் மூட்டை கட்டி வாசலில் வைக்கவும் முடியாது.


ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு குப்பையில் என்று சம்பந்தப்பட்ட நகர சபை முடிவு செய்கிறது. உதாரணமாக நியூ ஜெர்சியில் பல ஊர்களில் திங்கட்கிழமைகளில் காகிதங்கள் மற்றும் அட்டையிலான பொருட்கள் மட்டுமே தெருக்களில் கொண்டு வந்து வைக்க வேண்டும். நகர சபை வண்டி அவற்றை எடுத்துச் செல்லும். ஆனால் அவற்றை அலங்காரமாகக் கட்டிவைக்கவேண்டும். டிவி, பிரிட்ஜ் பேக்கிங்கில் வரும் பெட்டிகளைத் தட்டையாக மடிக்கவேண்டும். அவற்றுடன் வரும் தெர்மகோல்களைத் தனியாக எடுத்து செவ்வாய்க்கிழமையன்று தான் போட வேண்டும் (பிற பிளாஸ்டிக் பொருட்களுடன்).


சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் நடந்து கொண்டிருந்தபோது, அதிகாலை நேரத்தில் மாணவர்கள் தெருத்தெருவாகப் போய், வீட்டு வாசல்களில் குவிக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்களை நோண்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அவற்றுடன் பழைய கம்ப்யூட்டர்கள் ஏராளமாகக் கிடந்தன. அவற்றை ஸ்குரூடிரைவர் கொண்டு கழற்றி, தங்களுக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்!


ஒரு மணிநேரம் கழித்து அதே தெருவுக்குத் திரும்ப வந்தபோது நடைபாதைகள்
துடைத்து வைத்தது போல் சுத்தமாக இருந்தன. நகராட்சி குப்பை வண்டி அவற்றைக் கொண்டு போய்விட்டது!


வீடு காலி செய்பவர்கள்,  பெரும்பாலும் தங்களிடம் இருக்கும் மரச்சாமான்களை வீதியிலேயே எறிந்து விடுவதுதான் வழக்கம். தேவையானவர்கள் தேவையானதை அங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு கிராக்கி இல்லை.


ஆனால் நியூஜெர்ஸியில் இம்மாதிரி வீதியில் எறியப்பட்ட சாமான்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனம் இதற்கான விளம்பரத்தை சில வருடங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் பெரிதாக வெளியிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, குப்பையில் இருந்து ஒரு பிரிண்ட்டரை  எடுக்க முயன்ற மாணவனுக்கு  அபராதமும் விதிக்கப்பட்டது!


கிழிந்து போன மற்றும் பழையதான துணிகளை என்ன செய்வது என்பதுதான் இங்குள்ள பெரிய பிரச்சினை. முதியோர் இல்லம் போன்ற உதவியேற்கும்  நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம்தான். ஆனால் துணிமணிகள் சுத்தம் செய்யப்பட்டு இஸ்திரி போடப்பட்டு, முன் அனுமதி பெற்று, நாமே அங்கு நேரடியாகச் சென்று கொடுத்தால்தான் பெற்றுக் கொள்வார்கள். அதிலும் பாதிப் பொருட்களை ஏற்பதற்குத் தகுதியில்லை என்று திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.


இந்தியாவிலும் இதே போன்ற நிலைமை தான். குறிப்பாகத் தமிழ்நாட்டில். பழைய துணிகளை வாங்கிக்கொள்ளும் ஏழைகள்  யாரும் இல்லை. 'உதவும் கரங்கள்' போன்ற பெரிய அளவிலான அற நிறுவனங்கள் கூட, பழைய துணிகளை ஏற்பதில்லை. உணவுப் பொருள் அல்லது பணம் இரண்டை மட்டுமே ஏற்கிறார்கள். இலவசங்களின் தயவாலும், தேர்தல் நேரத்தில் பொழியும் பணமழையாலும் ஏழைகளே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகிக் கொண்டு வருகிறது. தெருவெங்கும் கோலோச்சும் மதுக்கடைகளை அகற்றிவிட்டால் தனிநபர் வருமானம் மேலும் அதிகரிப்பது உறுதி.


மூன்றாண்டுகளுக்கு முன்னால் நான் வைத்துவிட்டுப் போன மெல்லிய ஈரிழைத்துண்டு, மேலும் சிதிலமடைந்து கிடப்பதை மகள் வீட்டில் கண்டேன். ஒரு பனியனும் வேட்டியும் மஞ்சளும் பழுப்புமாகிப் பயன்படுத்த முடியாமல் போயிருந்தன. இம்முறை நாடு திரும்பும் போது அவற்றை எடுத்துச் சென்று இந்தியக் குப்பையில் எறிய வேண்டும்.   அமெரிக்காவில் நம்மால் குப்பை கொட்ட முடியாது!


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

14 கருத்துகள்:

  1. இதுபோன்ற துணிகுப்பைகளை எரித்து விடலாம்.  ஆனால் அமெரிக்காவில் அதுவும் கடினம்!

    பதிலளிநீக்கு
  2. இந்த அமெரிக்க அனுபவங்கள் ஒரு புத்தகமாக பின் நாளில் வெளி வருமோ ?

    இந்த Blog ல் போடுவதற்கு என்று வித விதமாக T Shirts வாங்கி வைத்து இருக்கிறீர்கள் போல் இருக்கிறது. அழகாக இருக்கிறீர்கள்.

    T Shirt இல்லாமல் Formal shirt ல் ஒரு புகைப்படம் போடுங்களேன் .எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வயதுதான் உங்களுக்குத் தெரியுமே, பிறகும் என் இந்த சோதனை முயற்சி?

      நீக்கு
  3. கு.மா.பா.திருநாவுக்கரசு27 ஏப்ரல், 2022 அன்று AM 5:36

    காகிதம், நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதுபோல் பயனற்ற பழைய துணிமணிகளையும் மறுசுழற்சியில் உபயோகிக்க வழிவகை காணலாம். சிங்காரச் சென்னையை குப்பைகளற்ற மாநகராக மாற்ற அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி திட்டம் வெற்றியடைவது சிரமமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பாக இல்லத்தரசிகள் முழுமனதைச் செலுத்தினால் மட்டுமே இம்மாதிரி திட்டங்கள் வெற்றியடைய முடியும்.

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் அமெரிக்காவில் குப்பை கொட்ட முடியாது. குண்டி கழுவ முடியாது. எச்சில் துப்ப முடியாது. பொது இடங்களில் சிகரெட் பிடிக்க முடியாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள். கார் இல்லாமல் வாழ முடியாது. அதற்கும் மேலே HOA காரர்கள் மாத வசூல், மற்றும் inspection.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிருக்கும் சில நல்லவைகளை நம்நாட்டிலும் பின்பற்றவேண்டும். அகற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் தீவிரமாகவேண்டும் என்பதே நாம் ஆசை.

      நீக்கு
  6. அங்கே பலதும் சிரமம் தான்... ஆனாலும் நல்லது...

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அழகாக, தெளிவாக, நயமாக இப்படி எல்லா ஆகவிலும் எழுதப்பட்ட பதிவு. இன்று காலை அலுவலகம் வரும்போது, ஒரு பிரதான சாலையில், ஒரு விடுதியைத் துப்புரவாகக் கூட்டிய பெண்மணி, குப்பைகளைத் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பையில் நிரப்பி, அங்கிருந்தே சாலையில் விட்டெறிந்தார். சிக்னலில் நின்று கொண்டு இருந்த எங்கள் வண்டிக்கு சில அங்குலங்கள் முன்னால் சொத்தென்று விழுந்தது அது.
    சொச்சபிரத்தெல்லாம் சொத்தபாரத்துதான் பெரும்பாலும்.

    நிற்க, கவிஞர் திருநா கூறியது போல துணிகளின் மறுசுழற்சி ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிவிட்டன.

    திருப்பூர் உள்ளிட்ட டெக்ஸ்டைல் நகரங்களில் இரண்டாயிரம் மூவாயிரம் கோடிகளுக்கு வர்த்தகம் போடு போடென்று போடுகிறது.

    வேஸ்ட் காட்டனை நிறம் வாரியாகப் பிரித்து, நூலாக மாற்றி, அதை மறுபடியும் பஞ்சாக மாற்றும் எந்திரங்களில் அநேகமாக எல்லா பெரிய கம்பெனிகளும் பலகோடி முதலீடு செய்து வருகின்றன. அடுத்த சில வருடங்களில் பஸ் ஸ்டாப்புகளில் நின்று சுவாரஸ்யமாக தொலைபேசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேட்டியை உருவிக் கொண்டு போய்விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் முன்னெச்சரிக்கையாக நான் வெளியில் போகும்போது வேட்டியைத் தவிர்த்து விடுகிறேன். பேண்ட் மட்டுமே அணிகிறேன்.

      நீக்கு
  8. குப்பை கொட்டுவது அங்கு சிரமம் என்று நாம் நினைப்பது இங்கு நாம் அதீதமான சுதந்திரத்தை அனுபவிப்பதால். நாம் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்பதால்.

    அங்கு தரம் பிரித்துக் குப்பையை அகற்றுகிறார்களே. இங்கு அப்படித் தரம் பிரித்து எடுப்பதே இல்லையே அதனால் ஆறுகளிலும் ஏரிகளிலும் எவ்வளவு நெகிழிக் குப்பைகள் மிதக்கின்றன. இதோ இங்கும் நான் தினமும் பார்த்து வருகிறேன்.

    பழைய துணிகளை ஏற்கிறார்கள் சார், இங்கு வீடுகளுக்கு வரும் எழைப் பெண்மணிகள் எடுத்து வைக்கச் சொல்கிறார்கள். அது போல் குப்பை அள்ள வருபவரிடம் கொடுத்துவிட்டால் எடுத்துக் கொள்கிறார். சென்னையிலும் கூட ஆவடியில் ஒரு அனாதை இல்லத்தில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் வந்து எடுத்துச் செல்வார்.

    இங்கு மற்றொரு குடும்பம் உள்ளது. அவர்கள் பழைய துணிகளை எடுத்துக் கொள்வார்கள். அணிய முடிந்ததை பயன்படுத்துகிறார்கள் இல்லை என்றால் அவர்கள் வட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள்.

    அமெரிக்காவில் உள்ளவர்கள் தாங்கள் வரும் போது எடுத்துக் கொண்டு வந்து இங்கு அனாதை இல்லங்களில் கொடுக்கிறார்கள் கூடவே பணமும் கொடுப்பதால் துணிகளையும் ஏற்கிறார்கள். நன்றாகத் துவைத்து இஸ்திரி போட்டு வைத்துக் கொடுக்க வேண்டும் கிட்டத்தட்ட பார்க்க புதியதாய்தான் இருக்கிறது அமெரிக்க இந்தியர்கள் பழைய துணி என்று சொல்லிக் கொண்டுவருவது!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. 1. முப்பது வருடங்களுக்கு முன்பு Electronic wasteஐ அமெரிக்காவில் என்ன செய்வதென்று தெரியாது, இமயமலை அடிவாரத்தில் காட்டப்பட்டது தனிக்கதை.
    இந்திய அரசாங்க அப்போது அனுமதித்தது.

    பதிலளிநீக்கு
  10. 2. உடைகள் துணிமணிக்கும் வயது இருக்கிறது. ரொம்ப பழைய துணிகள் எதிர்மறை கதிர்வீச்சு கொடுக்கும். அதனால் பழைய துணிகளை தானம் கொடுப்பது தவறு.

    பதிலளிநீக்கு