திங்கள், மார்ச் 31, 2014

நரேந்திர மோடி எனக்குக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் (சிறப்பு ‘அபுசி-தொபசி’-38)

நரேந்திர மோடி கொடுத்த ஒரு கோடி ரூபாய்

நண்பர் ஜனார்த்தன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். ஒரே நேரத்தில் நகைச்சுவையாகவும் சீரியஸாகவும் பேசக்கூடியவர். ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். எனவே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதைப் பின்பற்றுபவர். அதே சமயம் எளிமையானவர். அனைவருக்கும் உதவவேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்.

நேற்று அவர், திடீரென்று, தனக்கு ஒரு கனவு வந்தது என்றார்.

கனவு எல்லோருக்கும்தான் வருகிறது, அதிலென்ன விசேஷம் என்றேன். ‘இது மாதிரிக் கனவு அடிக்கடி வரமுடியாது’ என்று சத்தியம் செய்தார். அது என்ன கனவு?
****
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், நடிகர்களும், பிறரும்  தங்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக நெடுநாட்களாகவே பேசப்பட்டு வருகிறதல்லவா? அது இப்போது முடிவுக்கு வருகிறது. நரேந்திர மோடி பிரதமராகிறார்.   முதல் காரியமாக சுவிட்சர்லாந்து போகிறார். இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தையெல்லாம் இப்போதே விடுவிக்க வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமரைக் கட்டாயப்படுத்துகிறார்.  அவரோ, ‘ஒபாமாவை ஒருவார்த்தை கேட்டுவிடுகிறேனே’ என்று அசடு வழிந்தபின் வேறு வழியின்றி, நாட்டிலுள்ள வங்கித் தலைவர்களுக்கு உத்தரவிடுகிறார். ஒரே நாளில் மிகப்பெரிய தொகை இந்திய அரசின் வசம் வருகிறது. அதன் பிறகுதான் மோடி அங்கிருந்து டில்லி வருகிறார்.

நியுயார்க் சென்ட்ரல் பார்க்கில் நான்
இதற்கிடையில், அப்படிக்  கறுப்புப்பணம் போட்டு வைத்திருந்தவர்கள் எல்லாரும் அலறிப் புடைத்துக்கொண்டு அவரைக்காண வருகிறார்கள். அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு பணம் போட்டுவைத்திருந்தோம் என்பதே மறந்துவிட்டது. என்ன பெயரில் போட்டோம் என்பதும் மறந்துவிட்டது. “நீங்களாகப் பார்த்து நாலில் ஒரு பங்கு கொடுத்தால் கூடப் போதும்” என்று கெஞ்சுகிறார்கள்.   சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தான் ஏழாயிரம் கோடி ரூபாய் போட்டு வைத்திருந்ததாகவும், மூன்று மனைவிகள் இருப்பதாகவும், அதனால் மூவாயிரம் கோடியாவது திருப்பிக் கொடுக்குமாறும் விண்ணப்பம் செய்துகொண்டார். செங்கல்பட்டு அருகில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர், தமது ஆயுட்கால முதலீடான ஐநூறு கோடியை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்டுக்கொண்டார்.

நரேந்திர மோடிக்கு அதிர்ச்சி. எப்படிப்பட்டவர்களெல்லாம் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள்! உடனே ஓர் உத்தரவு போடுகிறார். ‘யார் யார் எவ்வளவு போட்டிருந்தார்கள் என்று கடிதம் கொடுக்கவேண்டும்; மூத்த அரசியல்வாதியான கலைஞரைக் கலந்துகொண்டு முடிவெடுக்கப்படும்’ என்கிறார். கலைஞரின் ஆலோசனையின்பேரில் ‘மன்னிப்புக் கேட்டால், மன்னித்துவிடலாம்’ 
என்றும், போட்டதில் பாதித்தொகை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் என்றும், மீதியுள்ள தொகை நாட்டு மக்களுக்குச் சரிசமமாகப் பிரித்துக்கொடுக்கப்படும் என்றும்   முடிவாகிறது. இந்த உயரிய ஆலோசனைக்காகக் கலைஞர் டிவி வளர்ச்சி நிதிக்கு 437 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 342 ரூபாய் 40 பைசா வழங்கும்படி மத்திய தணிக்கைக் குழு- சிஏஜி- உத்தரவிடுகிறது.
 
அர்னாப் கோஸ்வாமி
மன்னிப்புக்கடிதம் கொடுப்பவர்கள், தென்னாட்டவராயிருந்தால் டில்லியிலும், வடநாட்டவராயிருந்தால் சென்னையிலும் வந்து கொடுக்கவேண்டும் என்றும், அப்படி வருவதற்குத் தன் பேரன் மாறனின் ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் ‘அன்புச் சகோதரர்’ மோடிக்குக் கலைஞர் வேண்டுகோள் விடுக்கிறார்.  

‘மக்கள் இந்திய வங்கிகள் மூலமாகவா சுவிஸ் வங்கிகளுக்குப் பணம் அனுப்பினார்கள்? இல்லையே! ஆகவே, சுவிஸ் வங்கிகள், கொடுத்த பணத்தை, இந்திய வங்கிகள்மூலம் வரவு வைக்காமல், ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றி புதிய கோணிப்பைகளில் கட்டி, கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்று தேர்தலில் போட்டியிடாத முன்னாள் நிதியமைச்சர் கூறியதை ஆதரித்து அர்னாப் கோஸ்வாமி ‘டைம்ஸ் நவ்’ டிவியில் விவாதம் நடத்தப்போவதாக அறிவித்தார். ‘கோணிப்பையால் பணத்திற்கு மதிப்பா, பணத்தால் கோணிப்பைக்கு மதிப்பா?’ என்ற தலைப்பில் பாலமன் சாப்பையா தலைமையில் நைஜீரியாவில் பட்டிமன்றம் நடத்த ‘மேரேஜ் கார்லண்டு’ குழுவினர் யோசிப்பதாகத் தகவல்.

ஏராளமான கோணிப்பைகள் வரவழைக்கப்பட்டு, பாதித்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. அதை மேற்பார்வையிட, லாலு பிரசாத் யாதவ், ஏ. ராசா, மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டில் உயர்பதவியில் இருந்த ஒருவர் ஆகியவர்களைக் கொண்ட ‘நேர்மையாளர் குழு’ வை உச்சநீதி மன்றம் நியமித்தது.

மீதமுள்ள தொகையைக் கணக்கிடுவது கடினமான பணியாக இருக்கவே, சந்திரபாபு நாயுடுவின்  அறிவுரையின்பேரில், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் காணிக்கைகளைக் கணக்கிடும் பணியிலுள்ள ஆயிரம் பணியாளர்களை வரவழைத்தனர். அவர்களின் இடைவிடாத முயற்சியால்,  எவ்வளவு தொகை மீதமுள்ளது என்று தெரியவந்தவுடன், உலகவங்கியின் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு  ஆலோசனைக் கூட்டம் நடந்தது, இவ்வளவு பெரிய தொகையை எப்படி மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது என்று.
 
அரவிந்த் கேஜ்ரிவால்
எடுக்கப்படும் முடிவு நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்று அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டார். இல்லையெனில் கல்கத்தாவில் ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் மாயாவதியுடன்  உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அந்தக் கூட்டத்திற்குக் குறைந்தது பத்தாயிரம் பேராவது கூடுவதற்கு அரவிந்த கேஜ்ரிவால் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூட்டச் செலவை மேற்கு வங்க அரசே  ஏற்கவேண்டும் என்றும் அவர் விதித்த நிபந்தனைகளை மம்தா பேனர்ஜி ஏற்க மறுத்துவிட்டார். தாம் ராமேஸ்வரம் யாத்திரை போவதால் இந்த விஷயத்தில் ஏதும் செய்வதற்கில்லை என்று கேஜ்ரிவால் கைவிரித்துவிட்டார். மீண்டும் முதலமைச்சரானால் அப்போது இந்தப் பிரச்சினைக்காக துணை ஜனாதிபதி வீட்டுமுன் தர்ணா செய்வதாக வாக்களித்தார். ஆனால் யாரும் முட்டை வீசக்கூடாது என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
 
சோனியாவுடன் நந்தன் நீலகேணி
கடைசியில் இப்படித் தீர்மானம் ஆயிற்று:

 1. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
 2. ஆதார் கார்டு  உள்ளவர்களுக்கு நந்தன் நீலகேணி  மூலம் தரப்படும். அதற்கு  0.0025% சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும்.  (ஆனால் சேவை வரி கிடையாது.)
 3. மற்றவர்களுக்கு  ரேஷன் கடைகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும். (அதற்கு சேவை வரி உண்டு.) இதற்காகப் புதிதாக ஒரு லட்சம் ரேஷன் கடைகள் திறக்கப்படும். ரேஷன் ஊழியர்கள் ஏதேனும் ‘அன்புத்தொகை’ எதிர்பார்த்தால் மறுக்கக்கூடாது.
 இந்த அறிவிப்பு வெளியானவுடனே, உலகிலுள்ள பொருளாதார நிபுணர்கள் எல்லாரும் இந்தியா வந்து, பிரதமர் மோடியைப் பாராட்டி அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கவேண்டுமென்று சிபாரிசு செய்தனர். ‘பரிசுக்கு மயங்குபவரா மோடி? மக்கள் நலமன்றோ அவர் நாடி!‘ என்று கலைஞர், மயிலாப்பூர் மாங்கொல்லைப் பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.  பிறகு இதையே ஒரியா மொழியிலும் அவரே மொழிபெயர்த்துப் பேசினார்.

‘இந்தியாவிலேயே மிகப்பெரிய குடும்பம் என்னுடையது. பிரம்மச்சாரியான அப்துல் கலாமுக்கும் ஒரு கோடி, எனக்கும் ஒரு கோடி தானா?’ என்று முறையிட்டார் லல்லு பிரசாத் யாதவ்.

****
நண்பர் ஜனார்த்தன் சொன்ன இந்தக் கனவை எண்ணியபடியே நான் தூங்கியதில் அதன் தொடர்ச்சியாக ஒரு கனவு எனக்கு வந்தது.

என் வங்கிக் கணக்கில் ஒருகோடி ரூபாய் வரவு வந்ததை ‘நெட்-பாங்கிங்’ மூலம் அறிந்துகொள்கிறேன். அதை எப்படிச் செலவு செய்வது என்று யோசிக்கிறேன். சரி, இன்னொரு வீடு வாங்கிவிடலாம் என்று முடிவு செய்வதற்குள், நரேந்திர மோடி அரசு இன்னொரு புதிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

‘நாட்டில் இனி யாரும் புதிதாக வீடுகள் வாங்கக்கூடாது. ஏனெனில், DLF மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனி பங்களா இலவசமாக வழங்கப்படும்’ என்பதே அந்த அறிவிப்பு. இந்தத் திட்டத்தை பிரியங்க்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்படுகிறது.

சிறிது காலமாக வேலையில்லாமல் இருந்த தன் மருமகனுக்கு மோடி அரசு அளித்த பதவியால் மனம் மகிழ்ந்துபோன சோனியா காந்தி, மோடியால் வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் தன் சொந்த செலவில் இத்தாலியிலிருந்து ஏழு டன் சலவைக்கற்கள் இலவசமாக இறக்குமதி செய்து தரப்படும் என்று அறிவிக்கிறார்.

இந்த அறிவிப்பைக் கேட்டதும் தமிழக முதல்வர், தாம் வீதிதோறும் துவக்கவிருக்கும் ‘புரட்சிக் கழிப்பறை’களுக்கும் இத்தாலியிலிருந்து பளிங்குக்கற்கள் அனுப்பித்தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார். “செய்வீர்களா, செய்வீர்களா?” என்று அலைபேசியில் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘ராங் நம்பர்’ என்று வெட்டிவிடுகிறார் சோனியா. மின்சாரமும் போய்விடுகிறது....
****
என்னடா இது ஏ-சி ஓடிக்கொண்டிருந்தது எப்போது நின்றது என்று திடுக்கிட்டு விழிக்கிறேன். ‘ஃபேனையாவது போடக்கூடாதா’ என்று கோபிக்கிறேன். யாருக்காவது நான் பேசுவது கேட்டால்தானே!

“ஒங்கப்பா இப்பல்லாம் எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்கிறார். அப்படி என்னதான் சொப்பனம் காண்பாரோ” என்று மகளிடம் கூகுள் சாட் செய்துகொண்டிருந்தார் என் நல்-பாதி.(BETTER-HALF.)
****
(‘அபுசிதொபசி’ தன் வழக்கமான பாணியில் வியாழக்கிழமை வெளியாகும்.)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa

23 கருத்துகள்:

 1. கனவு காண்பதற்கும் ஒரு எல்லை வேண்டும் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது நண்பரே! என்னதான் முயன்றாலும் எனக்கு ஒரு கோடிக்குமேல் கனவு வரமாட்டேன் என்கிறதே! பல பூஜ்ஜியங்களுடன் கனவு காண மாறன், ராசா போன்றவர்களால் தானே முடிகிறது!

   நீக்கு
 2. ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வது என்று திட்டம் போடத் தொடங்கிவிட்டேன் ஐயா
  த.ம.1

  பதிலளிநீக்கு
 3. ஹா... ஹா... சுவாரஸ்யமான கனவு தான்... சில பல இடங்களில் திருடர்கள் கையிலேயே சாவி...!

  இனி மேலும் தொடர் கனவு தொடருமா...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருடர்கள் கையில் சாவி கொடுப்பதில் முக்கியமான பலன் உண்டு: சாவி தொலைந்துபோனாலும் எப்படியாவது திறந்து கொடுத்துவிடுவார்களே!

   நீக்கு
 4. இப்படி கனவு காணச் செய்து வோட்டு வாங்கி மக்களை ,படு குழியிலே தள்ளி விடுகிறார்களே அந்த படுபாவிகள் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறு நண்பரே! படுகுழியில் தள்ளப்படுவது நடுத்தர மக்கள் தான்! ஏழைகள் காட்டில் வோட்டுக்கு ஆறாயிரம் விழுகிறதாமே! அதுவும் முதல் தவணையாமே!

   நீக்கு
 5. நல்ல நையாண்டி ! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 6. திரு அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார்.அதற்காக இப்படியா. ?நமோவின் தாக்கமதிகமாகவே தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தக் கோவிலுக்குப் போனாலும் 'நமோ' நாராயணா என்ற கோஷம் கேட்கிறதே!

   நீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. ஹாஅஹஹஹஹாஹ!!!!!!!!!!!! சார்! சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது! பரவாயில்லை அதான் 1 கோடி ரூபாய் கிடைக்கப் போகிறதே! ஆஸ்பத்திரி செலவை அது பார்த்துக் கொள்ளும்! அது சரி இலவசமாக பங்களா....ஆஸ்பத்திரி சேவை இலவசமாக வழங்கப்பட்டால் அதுவும் மிச்சமாகும்! சிவாஜி ரஜனி போல..........

  கடைசியாக சொல்லிருந்தீங்க பாருங்க.....அதான் உங்கள் நல்-பாதி..........“ஒங்கப்பா இப்பல்லாம் எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்கிறார். அப்படி என்னதான் சொப்பனம் காண்பாரோ” என்று மகளிடம் கூகுள் சாட் செய்துகொண்டிருந்தார் என் நல்-பாதி.(BETTER-HALF.)........ஹாஹாஹ்....

  அருமையான நையாண்டி சார்! அதுவும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்தி எல்லாம் உட்புகுத்தி.......நையாண்டி தர்பார் ஹிட் சார்!!!!!

  மோடிக்கல்ல ஓட்டு....எங்கள் ஓட்டு உங்களுக்கே! கனவு மெய்படட்டும்!!!!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது வாக்குச்சீட்டே இன்னும் வந்தபாடில்லை. எனக்கு வோட்டு போட்டு உங்கள் வோட்டை வீணாக்கி விடாதீர்கள்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 9. எனக்கு வேண்டாம் ஒரு கோடி! கனவிலும் வேண்டாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி, ஒரு கோடி வேண்டாம்; மற்றப்படி, வீடு வேண்டுமா வேண்டாமா? இத்தாலியிலிருந்து சலவைக்கற்கள் வேண்டுமா வேண்டாமா? தங்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. ஒரு கோடி வேண்டாம் போங்கனு மோதிக்கு முன்னாலே விழுந்து, புரண்டு அழுதா என்ன செய்வார்? சலவைக்கற்களும் வேண்டாம். அதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் பட்டாலே வழுக்குது. வழுக்காத கற்களாய்க் கொடுக்கச் சொல்லுங்க. பார்த்துட்டு வாங்கிக்கலாமா வேண்டாமானு யோசிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 11. நண்பரே தாங்கள் கண்ட கனவு உண்மையாக இருந்தால் அதன்பின் நடைபெறும் பின்விளைவுகள் பெரிதாகவே இருக்கும்.
  தக்காளி கிலோ ரூ.50.00க்கு குறையாமல் விற்கும்.இதே போல அனைத்து விலைவாசியும் கூடி விடும்.
  கனவு கனவாகவே இருக்கட்டும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவு, கனவாகவே முடிந்துவிட்டது நண்பரே! ஆனால் நான் வருந்தவில்லை. உழைக்காமல் வரும் செல்வம் நம்மை உருப்படவைக்காது என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். வரவுக்கு நன்றி!

   நீக்கு
 12. இதுபோன்ற மேலும் பல கனவுகளை எதிர்பார்க்கிறோம், மகிழ்ச்சியாக நேரம் செலவழிவதால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவு காணுங்கள் என்று ஒருவர் சொல்லிவிட்டுப் போனாலும் போனார், எல்லாரும் கனவுகளை எதிர்பார்க்கிறார்கள். வந்தால் தானே!.. நன்றி ஐயா தங்கள் வருகைக்கு!

   நீக்கு
 13. இனிமே இப்படி 8 மணி வரையிலும்
  "அடிக்கடி" தூங்குங்குங்கள்!

  பதிலளிநீக்கு