சனி, ஏப்ரல் 23, 2022

வடை சுட்டால் போலீஸ் வருமா அமெரிக்காவில்? (இன்று கிழமை வெள்ளி-2)

வடை சுட்டால் போலீஸ் வருமா அமெரிக்காவில்? (இன்று கிழமை வெள்ளி-2)

(அட்லாண்டிக் கடலோரம்)

அமெரிக்காவில் 11ஆவது நாள்


எங்கள் முதல் அமெரிக்க பயணத்தின் போது நடந்த நிகழ்ச்சி இது…


நியூஜெர்ஸியில் நதிவிளிம்பு (ரிவர் எட்ஜ்) என்ற பகுதியில் என் மகளின் வீடு இருந்தது. ஹேக்கன்ஸாக் நதியின் ஒரு முனையில், புதிய பாலம் (நியூ பிரிட்ஜ் லேண்டிங்)  அருகில் அமைந்திருந்த வரிசை வரிசையான அடுக்கு வீடுகளில் ஒன்றின் தரைத் தளத்தில் அவள் குடியிருந்தாள். 


அமெரிக்கச் சுதந்திரப் போரின்போது, பிரிட்டிஷ் படைகளிடமிருந்து தப்புவதற்காக ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படையினர் இந்த பாலத்தின் கரையில் தான் பின் வாங்கினார்களாம். (1776 நவம்பர் 20). அதைக் குறிக்கும் ஒரு நினைவுப் பலகை பாலத்தின் அருகில் உள்ளது. 





மிகவும் அமைதியான இடம். நதிக்கரை என்பதால் நதியில் நீந்திக் கொண்டிருக்கும் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கரையேறி இந்தக் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடும். அதைத் தவிர்க்கும் பொருட்டு, வாத்துக்களுக்கு யாரும் உணவளிக்கக் கூடாது என்று  பெரிய எழுத்தில் எழுதப்பட்ட பலகை ஒன்று கார் நிறுத்தப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வாத்துக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் இந்தப் பலகையின் அருகிலேயே அவை சுதந்திரமாக நடமாடும்.

அடிக்கடி அழகான வரிசையில் வந்து, 'க்வேக்', 'க்வேக்' என்ற ஓசையோடு நதியின் ஒரு கரையில் இருந்து பாலத்தின் மீது ஏறி, மறு கரையில் சென்று, அதே நீரில் கலந்து கொள்ளும். தரைத்தளம் என்பதால் வாயில் கதவைத் திறந்து வெளியில் வந்து நாங்கள் அக்காட்சியை இரசிப்பதுண்டு. 


ஒரு நாள் என் மகள் அலுவலகத்திற்குச் சென்று விட்ட பிறகு காலை சுமார் 9 மணி இருக்கும், நதியோரம் பெருத்த கூச்சல் எழுந்தது. வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையிலிருந்து எல்லா விளக்குகளையும் எரிய விட்டபடி இரண்டு மூன்று போலீஸ் கார்களும், சில மினி டிரக்குகளும் எங்கள் நதிமுனை குடியிருப்பை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தன. பின்னாலேயே ஆறேழு காவலர்கள் தங்கள் கனத்த பூட்ஸின் 'தடக் தடக்' ஓசையோடு  பாலத்தை நோக்கி ஓடினார்கள். பாலத்தின் எதிர்ப்புறத்தில் இருந்து அதேபோல் இன்னொரு போலீஸ் அணி எங்கள் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இறுகச் சாத்திக்கொண்டு ஜன்னல் வழியாக என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தோம்.


போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒரு திருடன் அவர்களால் பிடிக்கப்படும் கடைசி நேரத்தில் இந்த வழியாகத் தப்பித்து விட்டானாம். அவனைத் தேடிக் கொண்டுதான் எல்லா பக்கங்களிலும் போலீஸ் வேட்டை நடக்கிறது என்று தெரிந்தது. 


சில வீடுகளின் முன்பு போலீசார் நின்று கொண்டு ஜன்னல் வழியே உள்ளே இருந்தவர்களிடம்  ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டிற்கும் வந்து விசாரிப்பார்களோ என்ற காரணமில்லாத அச்சம் எழுந்தது. 


சிறிது நேரத்தில் 'டப்' என்ற சத்தம் கேட்டது. அதாவது சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியின் வெடிச் சத்தம்! வெடித்தது திருடனின் துப்பாக்கியா, போலீஸ்காரர் துப்பாக்கியா என்று தெரியவில்லை. 


(மறுநாள் செய்தித்தாளில் பார்த்தபோதுதான் அது போலீஸ்காரின் வெடி என்று தெரிந்தது. எப்படியோ திருடனின் உயிருக்கு பாதகம் இல்லாமல் அவனைப் பிடித்துவிட்டார்கள்.)


இதற்குள் பல குடியிருப்புகளில் இருந்தது மக்கள் வெளியே வந்து தங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள்.  திருடர்கள் அம்மாதிரி நதிமுனை  வழியே ஓடி வந்து தப்புவது   முன்பெல்லாம் அதிகம் என்றும் தற்போது குறைந்து விட்டதாகவும் பேசிக்கொண்டார்கள்.  அதைக் கேட்டதும் எங்களுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எல்லோரும் வீடு திரும்பித் தத்தம் கதவுகளைச் சாத்திக் கொண்டார்கள்.


அன்று வடை செய்யவேண்டும் என்று என் மனைவி (தன் மனதில் திட்டமிட்டு) அதற்கான மாவை அரைத்து வைத்திருந்தாள். மாலையில் வீடு திரும்பும் பெண்ணுக்கு வியப்பூட்ட  வேண்டும் என்பது அவளுடைய திட்டமாக இருக்கவேண்டும். 


அடுப்பை மூட்டி, அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, அது நன்கு கொதித்த பிறகு, வடைகளைத் தட்டி அதில் போட்டு கரண்டியை ஏந்தியபடி கலக்கிக் கொண்டிருந்தாள். முதல் இரண்டு வடைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து, கணவன் என்ற முறையில் என்னுடைய கடமையை நிறைவேற்றச் சொன்னாள். அதாவது ருசி பார்க்கச் சொன்னாள்!


சூடு குறையாத வடையை நான் உஷ் உஷ் என்று வாயினால் ஊதிக் கொண்டிருந்தபோது, அண்ட சராசரங்களையும் பிளக்கும் வகையில் ஒரு பெரிய ஓசை வீட்டின் நடுக்கூடத்தில் இருந்து எழுந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என் மனைவி வடை அடுப்பை அதோடு நிறுத்திக் கொண்டாள். அவசரம் அவசரமாகத் தன் பெண்ணுக்கு போன் செய்தாள். (கையில் பாதியும், வாயில் பாதியுமாக ஒரு சூடான வடை இருந்ததால்  அந்தப் பணியை நான் செய்ய முடியாமல் போனதை அறிக.) 


தான் ஏதும் தவறு செய்து விட்டதாக மகள் சொல்லி விடுவாளோ என்ற அச்சம் வேறு அவள் மனதில் கிலியை எழுப்பியது. 


நல்லவேளை, மகள் உடனடியாக போனை எடுத்தாள். விஷயத்தைப் புரிந்து கொண்டு தாயிடம் எந்த கோபமும் இல்லாமல் பேசினாள். அது "ஸ்மோக் அலாரம்" என்றும், வடை செய்யும் பொழுது எண்ணெய்ப் புகை எழுந்ததால் அலாரம் 'ட்ரிகர்' ஆகி அந்தச் சத்தம் உண்டாகி இருக்கும் என்றும் விளக்கினாள். அதை 'ஆஃப்' செய்வதற்கான வழியையும் சொன்னாள்.


எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் உடனடியாகத் திறந்து,  சற்று நேரம் கழித்து மூடச் சொன்னாள். 


அதன்படி நான் வாசல் கதவைத் திறப்பதற்கும் வாசலில் ஒரு போலீஸ் அதிகாரி நிற்பதற்கும் சரியாக இருந்தது. 


அலாரம் ஓசையைக் கேட்ட அடுத்த வீட்டுக்காரர்கள் யாராவது 911க்கு போன் செய்திருப்பார்களோ? ஒருவேளை,  போலீசில் அனுமதி பெறாமல் வடை செய்வது இந்த ஊரில் குற்றமாகக் கருதப்படுமோ என்ற கவலை  என் மனைவியின் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் எதுவும் பேசவில்லை.


போலீஸ் அதிகாரி மிகுந்த மரியாதையோடு, வீட்டில் யார் யார் இருக்கிறோம் என்று கேட்டார். சொன்னோம். மகளைப் பார்க்க, இந்தியாவிலிருந்து பெற்றோர்கள் வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம்.  


அன்று காலை ஒரு திருடன் அந்த வழியாக ஓடி வந்ததைச் சொல்லி, குடியிருப்பாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று எச்சரிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்து அவர் விடைபெற்றார். 


வடைக்கும் போலீசுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிந்தவுடன்  நிம்மதியோடு என் மனைவி தன் வடை சுடுதலை மீண்டும் தொடங்கினாள். 


அன்று சுட்ட வடைகள் வழக்கத்தை விடவும்சுவையாக இருந்ததாகத்
தோன்றியது.


(இந்தக் கடைசி வரிக்கு நான் பிரபல எழுத்தாளர் அமரர் மணியனுக்கு நன்றி சொல்ல வேண்டும். "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று திரைப்படமாக வந்த அவருடைய குறுநாவல் "இலவு காத்த கிளி யோ?"வின் கடைசி வரி இது: 'அன்று வேப்பம்பூப் பச்சடி, மற்ற எல்லாரையும் விட மங்களத்துக்கு அதிகம் இனித்தது.')


-இராய செல்லப்பா நியூஜெர்சி யில் இருந்து. 

*************************************************************************************

22 கருத்துகள்:

  1. எங்கள் முதல் அமெரிக்க பயணத்தின் போது நடந்த நிகழ்ச்சி இது…

    என்று குறிப்பிட்டுவிட்டு எந்த வருடம் என்று சொல்லாமல் விட்டீர்களே??

    நியூ பிரிட்ஜ் லேண்டிங் - படம் , வாத்துகள் நிறைந்த நதியின் படம் - இவை எல்லாம் எப்படி இன்னமும் சேமித்து வைத்து இருக்கிறீர்கள்?

    வந்த போலீஸ்காரருக்கு சூட சூட நாலு வடை கொடுத்து இருக்கலாமே ?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் முதல் பயணம் நிகழ்ந்தது, 2005 இல், நண்பரே! மேலுள்ள புகைப்படங்கள் எல்லாம் இன்றையவை.

      நீக்கு
    2. தங்களுடைய பதிலுக்கு நன்றி ஆசிரியரே !

      நீக்கு
    3. அந்த நிகழ்வுகளை நீங்கள் கூறிய விதத்தால் மிக மிக அறுசுவையும் கலந்த படைப்பாக இருந்தது!

      உங்கள் கல்லூரி காலத்திலிருந்தே எழுத்தாளராக இருந்தவராயிற்றே💐😊

      நீக்கு
  2. என்னமாக எழுதுகிறீர்கள்...ஆஹா... வடை சுடுவதன் முன்னம் போலீஸ் சுடுவது சிறப்பான படத் தொகுப்பு. உங்கள் நடையும் சுவையாக இருக்கிறது, ஆனால் எங்களுக்குத் தான் வட போச்சே

    பதிலளிநீக்கு
  3. ஆமைவடை கீரைவடை போல இதற்கு புகைவடை எனப் பெயரிடலாம். சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹாஹா, அலார்ம் அடிக்காம இருக்க பெரும்பாலும் நம்மவர்கள் அதை ஆஃப் செய்துவிட்டுத்தான் பொரிப்பது சுடுவது எல்லாமே!

    நல்ல காலம் நாம இதுவரை இந்த மாதிரி ஒரு மணம் நுகர்ந்தது இல்லையேன்னு அந்த ஓடிப் போன திருடன் உள்ள நுழையாம இருந்தானே!! உளுந்து வடையா? பருப்பு வடையா சார்? உளுந்து வடைனா அந்த போலீஸ்காரர் பார்த்திருந்தால்...வாவ் டொனட் இப்படியுமான்னு வியந்தூ போய் சாப்பிட்டிருப்பார். அமெரிக்கர்களுக்குக் காரமில்லாத பச்சை மிளகாய் துண்டு துண்டாக இல்லாத உளுந்துவடை பிடிக்குமாக்கும்!

    ரசித்து வாசித்தேன் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நான் முதல் முறை அமெரிக்கா சென்ற போது1982ல் பைங்கன் பர்த்தா செய்யக் கத்தரிக்காயை சுடப் போட்டபோதுவந்த சப்தத்தில் பயந்து போய் அதை அப்படியே போட்டுவிட்டுக் குடியிருப்பை விட்டே ஓடிவிட்டேன் கத்தரிக்காய் இன்னும் பலமிகக் கத்த அக்கம்பக்கத்தவர் அலுவலர்கள் எல்லோரும் கூடி அடுப்பைஅணைத்துவிட்டு எனக்காகக் காத்திருந்தனர் அலுவலர் மாமிசத்தை அடுப்பில் நேரே வைக்கக் கூடாதெனறார் என்னால் பலருடைய நேரம் வீணாகிவிட்டதெனறார் எல்லோரும் என்னை ஒரு ஆதிவாசியைப் பார்ப்பது போல் பார்த்தனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவக் களஞ்சியம் ஆயிற்றே நீங்கள்! தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு தாருங்கள். நீங்கள் சொல்ல மறந்துவிட்ட இதுபோன்ற நிகழ்வுகளை மீள்பார்வை செய்ய முடியலாம்!

      நீக்கு
  6. ஊரெல்லாம் புகழும் வடை எனக்கென்னவோ ஜன்ம விரோதி. ஒன்றோ இரண்டோ தின்ற பின் எப்பவும்‌'வடை போச்சே' தான்.
    அதற்கெல்லாம் ஒரு குடுப்பினை இருக்க வேண்டும் என்று எப்பவும் என் மனைவி கூறுவாள்.
    குடுப்பினைக்கு முன்னால் படிப்பினை முக்கியமல்லவா?

    வடையை முன்னிறுத்தி விருந்து படைத்து இருக்கிறீர்கள்.
    சுடப்பட்ட வடை என்ன ஆகும் என்று தெரிந்தாலும் சுடப்பட்ட திருடன்‌ என்ன ஆனானோ?
    என்னதான் ஆனாலும், நம்மூர் பலகாரத்தை அமெரிக்காவில் செய்து பார்ப்பது சாவி காலத்தில் இருந்தே தொடர்கிறது.

    "என்னடா கலாட்டா"
    "மொட்டை மாடில காய வச்சுருந்த அப்பளாம்லாம் காத்துல பறந்துண்டு இருக்கு.. அமெரிக்கா காரன்லாம் ஏதோ பறக்கும் தட்டு பறக்கறதாக்கும்னு‌ நெனச்சுண்டு துப்பாக்கியால பட்டு பட்டுன்னு சுட்டுண்டு இருக்கான்"
    "அதை ஏண்டா துப்பாக்கியால சுடணும்? என்கிட்ட குடுத்தா குமுட்டிலே சுட்டுத் தரமாட்டேனோ?" என்றாள் திருநெல்வேலி பாட்டி.
    அப்பளம் இன்னமும் நமுக்கவில்லை.‌அதற்குள் வடை நுழைந்து விட்டது வாசனையுடன்.

    கணேஷ்ராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வாஷிங்க்டனில் திருமணம்' பள்ளிப்பருவத்தில் படித்த அற்புதமான நூல். சாவி எங்கள் வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பதாலும் அவர் எழுத்தின்மீது தனிப் பற்றுதல் உண்டு. ஒரு அமெரிக்கப் பயணத்தின்போது வாஷிங்க்டனில் தங்கி அந்த நூலில் சொன்ன இடங்களை எல்லாம் பார்த்து உடனே இதே பிளாகில் பதிவுசெய்துள்ளேன்.

      என்ன இருந்தாலும் அவர் மேதாவி! அவருடைய அப்பளமும் என்னுடைய வடையும் ஒன்றாகிவிடுமா? "ஆசை தோசை அப்பளம் வடை" என்று வேண்டுமானால் பாடிக்கொள்ளலாம்!

      நீக்கு
  7. https://imayathalaivan.blogspot.com/2013/04/4_24.html என்று சொடுக்கினால் வாஷிங்டன் டி.சி.யில் சாவி சொன்ன இடங்களையும் போட்டோமாக் நதியையும் அதன் கரையில் நின்று நான் 'வாஷிங்டனில் திருமணம்' புத்தக்த்தைப் படிப்பதையும் கண்டு மகிழலாமே! உலகப் புத்தக தினத்தன்று சாவியை நினைவு படுத்துவது எவ்வளவு மேலான செயல்!

    பதிலளிநீக்கு
  8. மிகவும் ருசிகரமான அனுபவம். வடை சுட்டது வீட்டில். போலீஸ் சுட்டது வெளியில். இரண்டையும் எழுத்தில் சுட்டது நீங்கள். லைட் ரீடிங் படிக்க வேண்டுமானால் ரா.கி.ரங்கராஜன் ஒரு முன்னோடி.நாலு மூலை என்ற அவரது புத்தகம் நல்ல தொகுப்பு.‌அண்ணா நகர் டைம்ஸ் ஓசியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீடு தேடி வரும். அற்புதமான சம்பவங்கள். அதைப் படித்த ஞாபகம் வந்தது. செல்லப்பா அவர்களின் தமிழ்
    டயரி பல ஆண்டுகள் செல்லுமப்பா! மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. வடையை சுட்டதால் போலிஸ் வந்ததோ என நினைக்க வைத்தது.
    வழி நடுக நையாண்டித்தனம் மிளிர்கிறது. இது வந்த போலீஸுக்கு தெரியாது.

    பதிலளிநீக்கு
  10. வடை சுட்ட கதை விறுவிறுவென்று ... இல்லை, மொறுமொறுமொறுவென்று இருந்தது.
    ஒரே தமாஷ்!
    ராய செல்லப்பாவுக்கு நிகர் ராய செல்லப்பா வேதான்!

    பதிலளிநீக்கு