பொன்னித்தீவு (திடீர் தொடர்கதை)
(1)செம்பகமே செம்பகமே
கொரோனாவுக்காகத் தன் கைக்குட்டையைக் குறுக்காக மடித்து முகமூடியாகக் கட்டிக்கொண்டு வீதிக்கு வந்தான்
செல்வம்.
“சார் நில்லுங்க” என்று பின்னாலிருந்து ஒரு குரல்.
குரலுக்குரியவன் சைக்கிளில் இருந்து வேகமாக இறங்கி, “நீங்க செய்றது நல்லா இல்லை” என்றபடி செல்வத்தின் முகத்தை உற்று நோக்கினான். இளைஞன். இருபத்தைந்து
வயது.
அவன் யாரென்று செல்வத்திற்குத் தெரியவில்லை. குழப்பத்துடன், “நீங்க யாருங்க?” என்றான்.
அவன் கபடத்துடன் சிரித்தான். “பேரைச் சொல்லிவிட்டால்
கண்டுபிடித்து விடுவீர்கள். அதனால் மாட்டேன். இனிமேலாவது ஒழுங்காக இருங்கள்.
இல்லாவிட்டால் நடப்பதே வேறு” என்று குரலை உயர்த்தியவன், வந்த வேகத்தில் சைக்கிளைக்
கிளப்பிக்கொண்டு மறைந்தான்.
தரைத் தளத்தில் நடந்த இந்த உரையாடலை நான்காவது தளத்தில் இருந்த வம்பு
ஆச்சி ஒருவர் கூர்ந்து கவனித்துவிட்டார் என்பது செல்வத்திற்கு மறுநாள் காலைதான்
தெரியவந்தது.
ஆச்சி அவனிடம் நெருங்கி, “செல்வம் தம்பி, நேத்து அந்த ஆள் உன்னிடம் சத்தம்
போட்டானே, என்ன விஷயம்?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“ஒண்ணுமே புரியலை ஆச்சிம்மா! நான்
செய்யறது சரியில்லையாம்! மிரட்டிவிட்டுப் போனான். ஆனால் அவன் யாரென்றே எனக்குத்
தெரியாது” என்றான் செல்வம்.
“நிஜமாவா? அவன் தான் செம்பகத்தின் வீட்டுக்காரன் ராஜா. இதுவரைக்கும் நீ பார்த்ததே இல்லையா?” என்றார் ஆச்சி வியப்புடன். “ஆள் ரொம்ப முரடன்!”
“எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகவே
இரு. அழகான பொண்டாட்டி ஆச்சே! அதான் யாராவது கொத்திண்டு போயிடுவாங்களோன்னு தவிக்கிறான். அந்தப்
பொண்ணு கிட்டேருந்து கொஞ்சம் விலகியே இருந்துக்கோ! நான் வர்றேன், பூப் பறிக்கணும்” என்று அறிவுரை கூறிவிட்டு
தோட்டத்துப்பக்கம் சென்றுவிட்டார் ஆச்சி.
அப்போதுதான் செல்வத்திற்கு உரைத்தது. அட, பூ!
ஆமாம், நேற்று காலை செம்பகம் கொடுத்ததாக ஒரு காகிதப் பொட்டலத்தை மாமி கொடுத்தார். “தொடுத்த மல்லிகைப்பூ. ஒரு முழம். பணம் எதுவும் வேண்டாமாம். அவங்க வீட்டில் நிறைய பூக்குதாம். சாமிக்கு வைக்கலாம் இல்லையா?”
அதே சமயம் அவனைப் பார்த்து அழகானதொரு புன்முறுவலுடன் படியிறங்கிப் போனாள் செம்பகம்.
கடைசிப் படியில் ஒரு கணம் நின்று மீண்டும் அவள் புன்னகைத்ததைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட சந்திரன் - அடுத்த பிளாக்கில் வசிக்கும் இஞ்சினீரிங் இரண்டாவது வருடம் படிக்கும் மாணவன் - செம்பகத்துடன் ஏதோ பேச்சுக்கொடுத்தவாறே சற்றுதூரம் நடந்துபோனது செல்வத்திற்கு நினைவுக்கு வந்தது.
இளம்வயதுப் பணிப்பெண்கள் மீது சந்திரனுக்கு ஒரு கண் என்று அந்த
அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லாருக்குமே தெரியும். துரதிர்ஷ்டவசமாக, அவன் அதுவரை ‘சைட்’ அடித்த பெண்கள் யாரும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. செம்பகம், அவனுடைய அண்மைக்காலக் கண்டுபிடிப்பு. செல்வத்தின் பிளாக்கில்
ஒரு வக்கீல் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவள்.
அவளுக்கும் சந்திரனைக் கண்டால் பிடிக்கவில்லை என்றுதான் வக்கீல் மாமி
கூறியிருக்கிறார். ஆனால் செம்பகம் கொஞ்சம் பயந்த சுபாவம். அதனால் அவனைச் சட்டென்று
கண்டிக்க முடியாமல் இருக்கிறாளாம்.
ஓஹோ, இந்தச் சந்திரன்தான் செம்பகத்தின்
கணவனுக்குத் தன்னைப் பற்றிப் ‘போட்டுக் கொடுத்து’ இருக்கவேண்டும் என்று
செல்வத்துக்குப் புரிந்துவிட்டது.
உண்மையில் செல்வத்திற்கு அவள்மீது எந்தப் பற்றுதலும் இல்லை. அதற்கு முதல்
காரணம், செல்வத்தின் மனைவி யமுனா. கணவனை விட
உடல் வலிமையும் பிறந்தவீட்டுப் பொருளாதார வலிமையும் அதிகம் கொண்டவள். வேறு
பெண்கள்மீது இவனுக்கு நாட்டம் என்று சின்ன சந்தேகம் வந்தாலும் பந்தாடிவிடுவாள்.
இரண்டாவது காரணம், வாங்கும் சம்பளத்தை யமுனாவிடம்
கொடுத்துவிட்டு தினந்தோறும் அவள் கொடுக்கும் ஐம்பது ரூபாயில்தான் வாழ்க்கை
நடத்தியாகவேண்டும். காதலுக்குச் செலவிட செல்வத்திடம் காசு எது?
ஆனால் இப்போது செல்வத்தைப் புதிய பயம் பிடித்துக்கொண்டது. தன்னிடம் செம்பகத்தின் கணவன் தகராறு செய்ததைப்
பார்த்த ஆச்சியம்மா, தன் வழக்கப்படி மற்றப் பெண்களிடம் வத்தி
வைத்துவிட்டால்…? அதை யமுனாவும் நம்பி விட்டால்...? வக்கீல் மாமியும் தன்னைத் தவறாகப்
புரிந்துகொண்டு விட்டால்….?
அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். செல்வத்தின் மனதில்
கொந்தளிப்பு அடங்கவில்லை. ஒன்று ராஜாவை உதைக்கவேண்டும். அல்லது சந்திரனை
உதைக்கவேண்டும்.
ஆனால் அவனால் முடிந்ததெல்லாம் தன்னுடைய மோட்டார்சைக்கிளை உதைப்பது
மட்டுமே.
மாலையில் வீடு திரும்புவதற்குள் பிரச்சினை எப்படித் திரும்புமோ என்ற
அச்சத்துடனேயே அன்றைய பொழுதைக் கழித்தான் செல்வம்.
அலுவலகம் முடிவதற்குச் சில மணித்துளிகள் இருந்தபோது அவனுடைய அலைபேசி
ஒலித்தது.
“நேராக இங்கு வந்துவிடுங்கள். உங்களை
விசாரிக்க வேண்டி இருக்கிறது” என்று காவல்துறையில்
இருந்து அழைப்பு.
பதறிப்போனான் செல்வம். கையிலிருந்த மோட்டார்சைக்கிள் சாவி நழுவிக் கீழே விழுந்தது.
உடம்பெல்லாம் வியர்த்துப் போனது. “மன்னிக்க வேண்டும்.
யாராவது புகார் செய்திருக்கிறார்களா?” என்றான் நடுங்கிய
குரலில்.
“ஆமாம், அவர் பெயர் யமுனா.”
(தொடரும்) (கன்னித் தீவு போலவா?)
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஆஹா.... மனைவியே கணவன் மீது புகார் கொடுத்திருக்கிறாரா....
பதிலளிநீக்குமேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கத்தான் வேண்டும் - வேறு வழியில்லை!
தொடர்கிறேன்.
ஆஹா...அற்புதமானத் துவக்கம்...மழை நேரத்தில் மிளகாய் பஜ்ஜி போல இந்த கொரோனா ஓய்வுக்கு இந்தத் தொடர்...
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குபூப்போல அங்கங்கே நிறைய விஷயங்களைத் தூவி வைத்திருக்கிறீர்கள். தொடுத்துக் கொள்வது எங்கள் பாடு. இல்லையா?..
பதிலளிநீக்குகன்னித் தீவில் காலடி எடுத்து வைத்து விட்டீர்கள். கன்னி, பாட்டி ஆகும் வரை எழுதினாலும் சலிக்காத சப்ஜெக்ட். தொடருங்கள்.
நகைச்சுவையாக எழுதுகிறவர்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறையை தீர்க்க வந்திருக்கும் பொன்னித்தீவை இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்.
பதிலளிநீக்கு"ஆனால் அவனால் முடிந்ததெல்லாம் தன்னுடைய மோட்டார்சைக்கிளை உதைப்பது மட்டுமே."
பதிலளிநீக்குசெல்வத்தின் இயலாமையை எவ்வளவு அழகான காட்டுகிறார் ஆசிரியர்!
S.PARASURAMAN, ANNA NAGAR, CHENNAI-40.
நல்ல சுறுசுறுப்பான தொடக்கம்!
பதிலளிநீக்குஅட் லாஸ்ட் ஒரு கதை செல்லப்பாவிடமிருந்து ஆனால் தொடரை ரசித்துப்ப்ழக்கமில்லை
பதிலளிநீக்குதொடரின் தொடக்கம் அருமை.well begun is half done...good
பதிலளிநீக்குகோதை
பதிலளிநீக்குதொடக்கம்
அருமை.தொடர்கிறேன்
Waiting eagerly.
பதிலளிநீக்குThe start is good, certainly going also is likely to be interesting. V M Pandurangan
பதிலளிநீக்கு