சனி, மே 30, 2020

பொன்னித் தீவு-15

 பொன்னித் தீவு-15

    -இராய செல்லப்பா

             இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

             முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(15) அகிலா அகிலா

 ‘வாட்டர் டிவைனர்’ என்று சிலபேர் இருப்பார்கள். புதிய வீடு கட்டுபவர்கள் இவர்களை அணுகினால் எந்த இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளை தோண்டினால் நல்ல நீர் கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்கள். கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு மனை முழுவதும் சுற்றிவந்து  திடீரென்று ஓரிடத்தில் குச்சியை வைப்பார்கள். அது வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். எந்த இடத்தில் ஊற்று அதிகம் இருக்குமோ அங்கு அதிகமாகச் சுழலும். இவ்வாறு ஊற்றைக் கண்டுபிடிக்கும் சக்தி அவர்களுக்கு இயற்கையில் வந்ததாகும்.

 அபிநவ்விற்கும் அதேபோன்ற இயற்கையான சக்தி இருந்தது. அதுதான், தான் எதிர்பார்க்கும் வேலையை மறுக்காமல் செய்துதருபவர்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல்.

 பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியைக் கண்டுபிடித்து அதில் தங்கள் ஊழியர்களைத் தங்கவைக்க விரும்பினான். அவன் சந்தித்த முதல் கல்லூரியே ஆர்வத்துடன் உதவ முன்வந்தது.  அதற்கு மிகவும் துணையாக இருந்தவன் ராஜா. உண்மையில் ராஜாவின் வீட்டுக்கு அருகில்தான் அந்தக் கல்லூரி இருந்தது.

 அன்று இரவே சுமார் பதினைந்து அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடம் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விளக்குகள் போடப்பட்டன. தங்கள் அறைகளை இவர்களே தூய்மைப்படுத்திக்கொண்டார்கள். கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொசுத்தொல்லை மிகுதி என்பதால் ஜன்னல்களுக்கு அவசரமாகக் கொசுவலையும் அடித்தார்கள். எல்லாம் அபிநவ்வின் சொந்தக் செலவில். கழிப்பறைகளுக்குத் தண்ணீர் வருமென்பதை உறுதிசெய்துகொண்டார்கள்.

 கம்பெனியின் மற்ற ஊழியர்கள் தத்தம் இருப்பிடத்திலேயே இருப்பதாக ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும் ‘இன்னல் படி’ -ஹார்ட்ஷிப் அலவன்ஸ்-ஆக  மாதம் ஐந்நூறு ரூபாய் கொரோனா முடியும்வரை தருவதாக அபினவ் சொன்னபோது அவர்கள் நெகிழ்ந்துதான் போனார்கள்.

 ராஜாவும் அபிநவ்வும் அன்று இரவுபோல வேறெந்த இரவிலும் அவ்வளவு நிம்மதியாகி உறங்கியிருப்பார்களா என்பது ஐயமே.

****

 விடியற்காலையில் ராஜா எழுந்திருக்கத் தயாராகும் வேளையில் கதவை யாரோ தட்டுவது கேட்டது.

 வாசலில் நின்றிருந்தவன் கணேஷ் பிராதார். கம்பெனி ஊழியன். அவன் தோற்றத்திலும் முகத்திலும் பதற்றம் தெரிந்தது.

 “ராஜா சார், நீங்க தான் ஹெல்ப் செய்யணும். என் மனைவிக்கு உடனே ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டுமாம்” என்றான்.

 அவனுடைய மனைவி மீராபாயும் கம்பெனியில் ஊழியரே. அவள் கர்ப்பமாக இருந்தது தெரியும். “என்ன, இப்பொழுதேவா வலி எடுத்துவிட்டது? இன்னும் ஒருமாதம் ஆகலாம் என்று கேள்விப்பட்டேனே!” என்று அவசரமாகக் கேட்ட ராஜா, செம்பகத்தை எழுப்பினான்.

 “சீக்கிரம் முகம் கழுவிக்கொண்டு வா. மீராபாய்க்கு வலி எடுக்கிறதாம். ஆஸ்பத்திரிக்குப்  போகவேண்டும்” என்றான். அப்படியே அவளும் தயாரானாள்.

 கொரோனா காரணத்தால் ஆட்டோக்கள் கிடைக்கவில்லை. பழக்கதோஷத்தால் கல்லூரியருகே நின்றிருந்த ஷேர்-ஆட்டோ ஒன்று உதவிக்கு வந்தது.

 ராஜாவை அந்த ஆஸ்பத்திரியில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.  ஆஸ்பத்திரியின் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கும் அவனுடைய கம்பெனிதான் ஒப்பந்ததாரராக இருந்தது.

 ஆனால் அங்கு சிகிச்சைக் கட்டணங்கள் அதிகம். மருத்துவக் கடவுளான தன்வந்திரியே நோயாளியாக வந்தாலும் முதலில் அட்வான்ஸ் தொகை இருபத்தையாயிரம் கட்டினால்தான் மருத்துவர் வந்து பார்ப்பார். அதுவரை வரவேற்பறையில் காற்றுவாங்க வேண்டியதுதான்.

 ராஜாவிடமும் இத்தகவல் கூறப்பட்டது. பிரசவ கேஸ் என்பதால் லேபர் வார்டுக்கு மீராபாய் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் ஒருமணி நேரத்திற்குள் ஐம்பதாயிரம் கட்டவேண்டும்.

 உள்ளே போய்வந்த செம்பகம், “இன்னும் அரை மணியில் பிறந்துவிடுமாம்” என்று சைகையில் சொன்னாள்.    

 ராஜாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆஸ்பத்திரியின் தலைவரிடம் பேசலாமென்றால் அவர் பத்து மணிக்குத்தான் வருவார். இந்தக் காலைப்பொழுதில் டியூட்டி டாக்டர் என்ற பெயரில் ஓர் இளம்பெண்தான் இருந்தாள். அவளோடு இவனுக்குப் பரிச்சயமில்லை.

அபிநவ்வுக்கு போன் செய்தான். அவர் எடுக்கவில்லை. அவருடைய இன்னொரு எண்ணில்  அழைத்தான். அதற்கும் பதில் இல்லை. எப்படியும் அவராகத் திரும்ப  அழைப்பார். நிச்சயம் பணம் தருவார். அதற்குள் வேறு எங்காவது புரட்டியாகவேண்டும்.

ஒருமணி நேரத்திற்குள் ஐம்பதாயிரத்திற்கு அவன் எங்குப் போவான்? வங்கிக்  கணக்கில் ஆயிரம்தான் இருக்கும். அதுவும் மினிமம் பேலன்ஸ் என்று வங்கியால் கட்டாயப்படுத்தப்பட்ட தொகை என்பதால்.          

வரவேற்பறையில் கூட்டமில்லை. பிராதார் காற்றாடிக்கு நேர்கீழாகப் பார்த்து உட்கார்ந்தான்.

இருப்புக்கொள்ளாமல் தவித்த கணவனைப் பார்த்து செம்பகம், ‘என்ன கவலை?’ என்பதுபோல் கண்களாலேயே கேட்டாள். எழுதிக்காட்டுவதற்கு ஒரு பேனாவும் சிறிய கையடக்க நோட்டும் கொண்டுவர மறந்துவிட்டிருந்தாள்.

“ஒன்றுமில்லை” என்றவன், சைக்கிளில் காப்பி கொண்டுவந்த வியாபாரியை நிறுத்தி மூன்று பேருக்கும் பேப்பர் தம்ளரில் சூடான காப்பி வாங்கினான்.

“பிராதார்! நீ இங்கேயே இரு. செம்பகமும் இங்கேயே இருப்பாள். நான் போய்ப் பணத்துக்கு ஏற்பாடுசெய்து வருகிறேன்” என்று கிளம்பினான் ராஜா. பிரதாரின் மொபைல் எண்ணைக் கேட்டுச் சேமித்துக்கொண்டான்.

அவன் கிளம்ப எத்தனித்தபோது செம்பகம்  தானும் வருவதாக அவனுடைய ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டாள். தன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போவதாக பிராதார் கவலையோடு அருகில் வந்தான்.

செம்பகம் தனது சைகை மொழியில் அவனுக்கு உறுதியளித்தாள். போய்விட்டு உடனே வந்துவிடுவோம் என்றாள்.

***

ராஜாவின் மனதில் ஹரிகோபாலின் முகம்தான் நினைவுக்கு வந்தது. பொறுப்பான பதவியில் இருப்பவர். ராஜாவின் தொழில்பக்தியில் அவருக்குப் பூரணமான திருப்தி உண்டு. அசோஸியேஷனில் செயலாளராக இருப்பதால் எப்படியும் கைவசம் ஐம்பதாயிரமாவது இருக்கும். ஓர் ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்காக என்றால் நிச்சயம் கொடுப்பார்.  அவரிடம் கைமாற்றாக வாங்கி ஆஸ்பத்திரியில் கட்டிவிட்டால் இன்று மாலைக்குள் அபிநவ்விடம் இருந்து பணம் வந்துவிடும். திருப்பிக்  கொடுத்துவிடலாம்.

 செம்பகமும் ராஜாவும் ஹரிகோபால் வீட்டை அடைந்தபோது கதவில் பூட்டு தொங்கியது!

 அதே சமயம் வக்கீல் மாமி செம்பகத்தைப் பார்த்து “என்னடி, சீக்கிரமாக வந்துவிட்டாய்?” என்று ஆச்சரியப்பட்டார்.

ராஜாவுக்கு இவரிடம் கேட்டுப்பார்க்கலாமா என்று தோன்றியது. ஆனால் செம்பகம் அவன் கையைப் பிடித்துப்  பின்னால் இழுத்தாள். எச்சில் கையால் காக்கையை மட்டுமல்ல, புறா, மைனாவையும் கூட ஓட்டாதவர் அந்த அம்மையார்.

அப்போதுதான் கடவுளே நேரில் வந்ததுபோல் அங்குத் தோன்றினாள்  அகிலா. செம்பகத்தை அவளுக்குத் தெரியும்.

“செம்பகம்! ரொம்ப நல்லதாகப் போயிற்று. உன் கணவரிடம் சொல்லி எனக்கு அவசரமாக ஓர் உதவி செய்வாயா?” என்றாள் அகிலா.

 மீராபாயைச் சேர்த்திருந்த ஆஸ்பத்திரியின் பெயரைச் சொல்லி, “என்னை அங்கு விடச் சொல்கிறாயா? என்னுடைய வண்டியில் பெட்ரோல் இல்லை. ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் நர்ஸ்கள் இல்லையாம். அங்கு வேலை செய்யும் என் தோழி உதவிக்கு அழைக்கிறாள். ப்ளீஸ்! சீக்கிரம்!” என்றாள்.

 செம்பகத்திற்கு அவளுடைய அவசரம் புரிந்தது. அவளிடம் காகிதமும் பேனாவும் வாங்கி, தான் வக்கீல் மாமி வீட்டிற்குப்  போவதாகவும், ராஜா அகிலாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகுமாறும்  எழுதிக்காட்டினாள். செம்பகத்திற்குப் பேச்சு வராது என்ற செய்தி அகிலாவுக்கு அப்போதுதான் தெரிந்தது.      

 புன்முறுவலோடு அகிலாவை ஏற்றிக்கொண்டு கிளம்பினான் ராஜா. மருத்துவக் கல்லூரி மாணவி என்பதால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளாகத்தான் இருக்கவேண்டும். இவளிடம் உதவி கேட்கலாமா? ஆனால் ஓரிருமுறை அந்தக் குடியிருப்பில் பார்த்ததைத்தவிர பரிச்சயம் இல்லையே!

 கனத்த மனத்தோடு அவளை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுப் பணம் தேடும் முயற்சியில் வேறெங்கோ புறப்பட்டான் ராஜா.

****

மீராபாய்க்கு சிசேரியன்தான் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.  

மொத்தச் செலவு எண்பதாயிரத்தைத் தாண்டும். நர்ஸ் இல்லாததால் அகிலாவே வெளியில் வந்தாள். பிராதாரின் தோற்றத்தில் இருந்தே அவன்தான் மீராபாயின் கணவனாக இருக்கலாம் என்பதை ஊகிக்க முடிந்தது. இவனிடம் அவ்வளவு பணம் இருக்குமா?

 “இன்னும் அட்வான்ஸ் ஐம்பதாயிரமே அவங்க கட்டலை” என்றாள் வரவேற்பில் இருந்த காசாளர்.

 அவனுக்காகத்தான் ராஜா பணம் தேடிக்கொண்டிருப்பது அகிலாவுக்கு எப்படித்தெரியும்?  

 ஆனால் காரியம் கைமீறிக்கொண்டிருந்தது. உடனே ஆப்பரேஷன் நடந்தாகவேண்டும். இல்லையெனில் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று டாக்டர் விமலா சொன்னார். அகிலாவுக்கும் அது புரிந்தது. கல்லூரியில் பிரசவ கேஸ்களில்  தானாகவே முன்வந்து உதவிசெய்து விஷயங்களைக் கற்றுக்கொண்டிருந்தாள் அவள்.

 ஆனால் வைட்டமின் ‘ப’ அல்லவா வேண்டியிருக்கிறது?

 ஆஸ்பத்திரியின் தலைவருக்கு அகிலாவைத் தெரியும். சில செமினார்களில் அவள் வழங்கிய பேச்சுகளும்,  கேள்வி-பதிலின்போது வெளிப்பட்ட  புத்திக்கூர்மையும் அவரைக்  கவர்ந்திருந்ததாகத் தனது பேராசிரியர் ஒருவர் கூறியது அவள் நினைவுக்கு வந்தது.

 உடனே தலைவரிடம் பேசினாள்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்குள் பணம் கட்டினால் போதும் என்றும், அகிலாவுக்காக மொத்தக் கட்டணத்தில் பதினைந்து சதம் தள்ளுபடி செய்வதாகவும், ஆனால் பணத்திற்கு அவள்தான் பொறுப்பு என்றும் தலைவர் கூறினார். அன்றுபோலவே எதிர்காலத்திலும் அவசர உதவிக்கு அவளை எதிர்பார்ப்பதாகவும் அந்த நம்பிக்கையை அவள் காப்பாற்றவேண்டும் என்றும் நினைவுபடுத்தினார்.

 அடுத்த அரைமணி நேரத்தில் ‘குவா, குவா’ சத்தம் கேட்டது. அகிலா ஓடிவந்து பிராதாரிடம் ‘ஆண் குழந்தை’ என்று சந்தோஷமாகக் கூறிவிட்டு உள்ளே போனாள்.

 சிறிது நேரத்தில் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு வந்தவள், வேகமாக ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேறினாள்.  

 ராஜாவுக்கு உடனே தகவல் சொன்னான் பிராதார். ஓடிவந்தான் ராஜா. ‘யார் பணம் கட்டியிருப்பார்கள்?’

 ***

“எனக்கு உடனே பணம் வேண்டும்” என்றாள் அகிலா. “பிரசவ ஆஸ்பத்திரிக்குக்  கட்டவேண்டும்.”

 பாரஸ்மல் இம்மாதிரி அவசரங்களைப் பார்த்தவர். உண்மையில் மனிதர்களின்  தேவைகளைப் புரிந்துகொண்டு தாமதமின்றிப் பண உதவி செய்வதால் மட்டுமே அதிக வட்டியையும் பொருட்படுத்தாமல் மக்கள் மார்வாடிக் கடையைத் தேடி வருகிறார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?  

 கைப்பையில் இருந்து நெக்லஸை எடுத்தாள் அகிலா.

 சந்திரன் கொண்டுவந்து கொடுத்தது. செல்வத்திற்குச் சொந்தமானது. ஆச்சியிடம் ஏமாற்றி எடுத்துவந்தது. இப்போது அவசரத்திற்கு உதவுகிறது. அப்பாவிடம் சொன்னால் அடுத்த மாதமே மீட்டுக்கொடுத்துவிடுவார். இதெல்லாம் அவருக்குச் சின்னத் தொகை.

 “ஆனால் என்னிடம் இப்போது நாற்பதாயிரம்தான் ரொக்கம் இருக்கிறது” என்றார் பாரஸ்மல். “பேங்க் பத்துமணிக்குத்தானே திறக்கும்?”

 “இருப்பதைக் கொடுங்கள்” என்று பெற்றுக்கொண்டாள். “ஆஸ்பத்திரிக்கு உடனே கட்டவேண்டும்” என்று கிளம்பினாள். 

 “ஆதார் கார்டு ஜெராக்ஸ் வேண்டும்” என்றார் பாரஸ்மல். சரியென்று தலையசைத்தாள். பிறகு, “என்னுடைய பெயரில் வேண்டாம். செல்வம் என்ற பெயரில் இருக்கட்டும். ஆதார் கார்டுடன் அவரை அனுப்பிவைக்கிறேன்” என்றாள்.

 அகிலாவின் அப்பாவை பாரஸ்மல்லுக்கு நன்றாகத் தெரியும்.

 பத்துமணி சுமாருக்குச் சந்திரன் வந்தான். “அகிலா மேடம் அனுப்பினார்கள். என் பெயர் செல்வம்” என்றான். செல்வத்தின் ஆதார்கார்டு பிரதியைக் கொடுத்தான். தான் ஒரு சமயம் தங்கியிருந்த செம்பரம்பாக்கம் முகவரியைக் கொடுத்தான். வேண்டிய இடங்களில் அவனுடைய கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தார் பாரஸ்மல். அவரைப் பொறுத்தவரையில் அகிலாதான் செல்வம். தனக்கு வேண்டியவர்களுக்கு உதவிசெய்கிறாள் போல.

 செல்வத்தின் நெக்லஸை செல்வத்தின் பெயரிலேயே அடகுவைத்ததில் தன்னுடைய குற்ற உணர்வில் இருந்து விடுபட்டதாகத் தோன்றியது சந்திரனுக்கு.

***

ராஜாவின் கால்களில் விழுந்து கும்பிட்டான் பிராதார். “உங்களால்தான் என் குழந்தை உயிரோடு வெளிவந்திருக்கிறது. நீங்கள்தான் என் தெய்வம். அதனால் குழந்தைக்கு ‘ராஜா’ என்று உங்கள் பெயரையே வைக்கப் போகிறேன்” என்றான்.

 (தொடரும்)     

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

15 கருத்துகள்:

  1. மருத்துவக் கடவுளான தன்வந்திரியே நோயாளியாக வந்தாலும் முதலில் அட்வான்ஸ் தொகை இருபத்தையாயிரம் கட்டினால்தான் மருத்துவர் வந்து பார்ப்பார்.

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ஒருசில நாட்கள் அதிகம் எடுத்துக்கொண்டால்தான் என்ன என்றும் தோன்றுகிறது. பார்க்கலாம். எல்லாம் கொரொனாவின் தயவு!

      நீக்கு
  3. நன்றாகத்தான் கதைக்கிறார் ஆசிரியர்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. கோர்ட் டவாலி சேவகர் ஒவ்வொருவர் பெயரையும் இரண்டு முறை கூப்பிடுவது போல கதைப்பகுதியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு பெயரும் இரண்டு முறை எழுதப்படுவதன் காரணம் என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்தான் தெரியவில்லை! தலைப்பில் வருபவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கட்டுமே என்பதாலோ!

      நீக்கு
  6. இன்னும் எப்படியெல்லாம் கதையின் போக்கு இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அந்தமான் பயணம்போல வளைந்து வளைந்து போகிறதா?

      நீக்கு
  7. குற்றவாளி பட்டத்திலிருந்து ஒவ்வொருவராக நழுவி வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. S.PARASURAMAN , ANNA NAGAR .31 மே, 2020 அன்று 8:26 PM

    நீங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட்க்கு நீங்கள்தான் செகரட்டரியா? குப்பை களைவதைப்பற்றியும், அசோசியேஷன் செயல்படும் விதம் பற்றியும் அருமையாகச் சொல்லுகிறார்கள்.

    புலம்பெயர் தொழிலாளர் பெயரை அழகாக ச் சொல்லுகிறீகள். அருமை. பாராட்டுக்கள்.


    கீழே உதாரணம் கொடுத்துள்ளேன்:-

    வாசலில் நின்றிருந்தவன் கணேஷ் பிராதார். கம்பெனி ஊழியன். அவன் தோற்றத்திலும் முகத்திலும் பதற்றம் தெரிந்தது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஆச்சரியமென்ன நண்பரே? அகில இந்திய அளவில் பணியாற்றியதால் பிற மாநிலத் தொழிலாளர்களின் பெயர்களும் இயல்புகளும் இந்த ஆசிரியருக்குப் பழக்கமானவையே. தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.

      நீக்கு