செவ்வாய், மே 19, 2020

பொன்னித்தீவு -10


பொன்னித்தீவு -10
  
    -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(10) ஆச்சி ஆச்சி 

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியதும், ஆதார் கார்டின் எண்களை ஒப்பிட்டுப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமசிவம், செல்வத்தை அழைக்கும்படி யமுனாவிடம் சொன்னார்.

அவன் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ செய்துகொண்டிருந்தான். குறிப்பாக, அந்த நிமிடம்தான் லேப்டாப் மூலம் ஒரு வெளிநாட்டு கான்ஃபரன்ஸ் காலில் இணைந்திருந்தான். ஆகவே எழுந்து கதவைத் திறக்கமுடியவில்லை.

யமுனா மிக லேசாகக் கதவைத் தட்டினாள். அதிகம் தட்டினால் அவனுடைய வேலை தடைப்படுமோ என்று பயந்தாள். ஆனால் அடுத்த ஒருமணி நேரம் அவன் திறக்கவேயில்லை. பிறகு அவனாகவே வெளிவந்தான்.

அதுவரை யமுனா பொறுமையிழந்தவளாகக் கதவருகிலேயே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தாள். பரமசிவமோ இன்னொரு சூடான காப்பியைக் குடித்துவிட்டுத் தயாராக இருந்தார், அவனை  எதிர்கொள்வதற்கு.  

“சாரி யமுனா! கான்ஃபரன்ஸ் காலில் இருந்தேன். ஒரு நல்ல செய்தி தெரியுமா? எனக்கு புரொமோஷன் கொடுத்திருக்கிறார்கள்” என்றான்.

பரமசிவம் மகிழ்ச்சியோடு அவனருகில் வந்தார். “அப்படித்தான் நடக்கும். குழந்தைச் செல்வம் என்பது எப்போதும் தனியாக வராது. கூடவே பெற்றோர்களுக்குச் சீரும் சிறப்பையும் கொண்டுவரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்” என்று யமுனாவைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.

செல்வம் அவனுடைய கம்பெனியின் அம்பத்தூர் கிளைக்கு மேலாளராகப்  போகவேண்டுமாம். கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சாதாரணமான பின் போய் ‘சார்ஜ்’ எடுக்கவேண்டும்.  பதவி உயர்வு என்பதால் சில ஆயிரங்கள் சம்பள உயர்வும் கிடைக்கும். கார் அலவன்ஸ் என்று ஆறாயிரமும் உண்டாம். சில வியாபார நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு நாள் விடுமுறையாகத் தெற்காசிய நாடுகளுக்கு மனைவியுடன் சென்றுவரும் சலுகையும் கிட்டுமாம்.  செல்வம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்துகொண்டிருந்தான்.

இந்த நேரம் பார்த்து நெக்லஸ் விஷயம் பேசுவதா என்று யோசித்தார் பரமசிவம். சரி, மாலையில் பேசலாம் என்று ஒத்திப்போட்டார்.

“பதவி உயர்வு என்றால் சுகமான சுமை என்று உன் தாத்தா சொல்வார். முதலில் சுமக்கத் தயாராகவேண்டும். அதுவே பழகிப்போய் சுகமாக முடியும். ஆனால் எல்லாரிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருங்கிய நண்பர்களே ஆனாலும் ஆராயாமல் நம்பிவிடக் கூடாது. அதே சமயம் கண்மூடித்தனமாக மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவும் கூடாது. ஏனென்றால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள்  நம்மை ஆபத்தில் சிக்கவைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று தன் அனுபவ அறிவைச் செல்வத்துடன் பரிமாறிக்கொண்டார்.

செல்வம் அவரை நன்றியுடன் பார்த்தான். யமுனா அதற்குள் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்தவள், கையில் இரண்டு தம்ளர்களில் சேமியா பாயசத்துடன் வந்தாள். “இது புரொமோஷன் பாயசம் -அட்வான்ஸாக!” என்றாள்.

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆச்சியம்மாவுக்கு எப்படியாவது மூக்கில் வேர்த்துவிடும். இலேசாகத் திறந்திருந்த வாசற்கதவின்மேல் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளேவந்தார். அவர் கையில் ஒரு கடித உறை இருந்தது. இருவரும் பாயசம் குடிப்பதைக்கண்டு வியப்போடு பார்த்தார். யமுனா அவருக்கும் ஒரு தம்ளரில்  கொடுத்தாள்.

“மாப்பிள்ளைக்கு புரொமோஷன் வரப்போகிறது!” என்றார் பரமசிவம் புன்சிரிப்புடன்.

“வாழ்த்துக்கள்” என்று செல்வத்தைக் கைகுலுக்கப் போன ஆச்சி, கொரோனாவை நினைத்துப் பின்வாங்கினார்.

அதற்குள் செல்வத்திற்கு மீண்டும் ‘கால்’ வரவே, உள்ளே நுழைந்து கதவைச்  சாத்திக்கொண்டான்.

அங்கிருந்த நாற்காலியில் சுதந்திரமாக அமர்ந்து கொண்டார் ஆச்சி. “யமுனா வா, உட்காரும்மா” என்று கனிவுடன் அவளைத் தன் அருகில் இருத்திக்கொண்டார். “உங்க அம்மா செங்கல்பட்டில் என்ன செய்கிறார்? இப்படிப்பட்ட சமயத்தில் பொண்ணைத் தனியாக விடலாமா? பார்த்துப்  பார்த்துச் செய்யவேண்டாமா? ஆசைப்பட்டதைச் சமைத்துப் போடவேண்டாமா? பாவம், உனக்கு மாமியாரும் இல்லையே ….” என்றார்.

“நீங்கள் சொல்வது நியாயம்தான். இன்னும் சில வாரங்களுக்குப் பார்வதி இங்கேயே இருந்து பார்த்துக்கொள்வாள்” என்றார் பரமசிவம்.

“அதுதான் நல்லது” என்ற ஆச்சி, “யமுனா, எனக்கொரு உதவி செய்கிறாயா? நான் 72 பிளாக்கில் ஒரு துக்கம் விசாரிக்கப் போகவேண்டும். ரொம்ப வேண்டியவர்கள். திரும்புவதற்கு இராத்திரி ஆகிவிடும். அதனால் இந்த லெட்டரை சந்திரன் வந்து கேட்டால் கொடுத்துவிடுகிறாயா?” என்று கடித உறையை அவளிடம் கொடுத்தார். “அவனுடைய பழைய முகவரிக்கு வந்ததை யாரோ ரீ-டைரக்ட் செய்திருக்கிறார்கள்!”

அதை வாங்கிக்கொண்ட பரமசிவம், “யார், அந்த செகண்ட் இயர்  எஞ்சினீரிங் பையனா? தெரியுமே! வந்தால் கொடுத்துவிடுகிறேன்” என்றார். 

ஆச்சி கிளம்பியவுடன் ஏனோ அதன் மேலிருந்த முகவரியைப் பார்க்கவேண்டும்போல் தோன்றியது. செம்பரம்பாக்கம் முகவரி. அதைச் சிவப்பு மசியால் அடித்துவிட்டு, இந்த முகவரியை எழுதியிருந்தார்கள்.  

துணுக்குற்ற பரமசிவம், பாரஸ்மல் இடமிருந்து எழுதிக்கொண்டுவந்த முகவரியை எடுத்துப் பார்த்தார். அதே முகவரிதான்! வீட்டு எண்ணும் அதே, தெருப்பெயரும் அதே, பின்கோடும் அதே!  

அப்படியானால்…நெக்லஸை பாரஸ்மல் கடையில் அடகுவைத்தவன் சந்திரனா?  வேண்டுமென்றே பெயரை மட்டும் மாற்றிக் கொடுத்திருக்கிறானா? அவனுக்கு எப்படி நெக்லஸ் கிடைத்தது?

ஒருவேளை செல்வமே இவனிடம் கொடுத்து அடகுவைக்கச் சொல்லியிருப்பானோ? அந்த அளவுக்குச் செல்வம் துணிய மாட்டான் என்பதுடன், யமுனாவுக்குத் தெரியாமல் அவனுக்கு எந்தப் பெரிய செலவும் ஏற்பட்டிருக்கமுடியாது என்றும் பரமசிவத்துக்குப் புரிந்தது.

அப்படியானால், ஒரே வழி, சந்திரனே இந்த நகையைத் திருடியிருக்கவேண்டும்.

பரமசிவத்திற்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. சந்திரனை ஓரிருமுறை பார்த்திருக்கிறார். பெற்றோர்கள் கிராமத்தில் இருப்பதாகவும், இவனும் சில நண்பர்களும் ஓர் அறை எடுத்துக்கொண்டு இதே குடியிருப்பில் இன்னொரு பிளாக்கில் இருப்பதாகவும் கேள்விப்பட்டதுண்டு.

மாலை ஆறுமணி ஆயிற்று. அதுவரை சந்திரன் வரவில்லை. பரமசிவத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. அந்தக் கடிதத்தை எடுத்துச் சட்டை பாக்கெட்டில் மடித்துவைத்துக்கொண்டு அவனுடைய அறையை நோக்கி நடந்தார்.

***
பரமசிவம் அந்த அறையைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவில்லை. நான்காம் மாடியில் இரண்டோ மூன்றோ அல்லது நான்கோ மாணவர்கள் வாடகைக்குத் தங்கி இருப்பதாகவும், இரவில் அவர்கள் அடிக்கும் கொட்டத்திற்கு அளவில்லை என்றும், பலமுறை எச்சரித்தும் பயனில்லை என்றும் அவர்களின் கல்லூரிக்கே புகார் எழுதியிருப்பதாகவும் ஒரு பெரியவர் சொன்னார்.

சந்திரன் மட்டுமே எஞ்சினீரிங் மாணவன் என்றும், மற்றவர்கள் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் என்றும் தெரிந்தது. இரவு டியூட்டி முடிந்து வரும்பொழுது சில மாணவிகளையும் அவர்கள் அழைத்துக்கொண்டுவருவதாக இன்னொரு பெண்மணி கூறினார். அவர்கள் சிலமணி நேரம் இருந்துவிட்டுப் போய்விடுவார்களாம்.

பரமசிவம் திடுக்கிட்டார். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைப் பற்றியே அவர்களின் கவனம் இருந்ததால் சந்திரனைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. 

கொரோனா ஊரடங்கின் காரணமாக மருத்துவக் கல்லூரி மூடப்பட்டுவிட்டதால், மாணவர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்களாம். சந்திரன் மட்டும்தான் தற்போது இருக்கிறானாம்.

அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்திரன் எப்போதுவருவான் என்று யாரிடம் கேட்பது?  எனவே ஒரு காகிதத்துண்டில் ‘சந்திரன், ப்ளீஸ் காண்டாக்ட் மீ’ என்று தன் அலைபேசி எண்ணை எழுதித் தாழ்ப்பாளில் செருகிவைத்துவிட்டுக் கிளம்பினார், பரமசிவம்.

அவர் வீடு திரும்பியபோது, இன்ஸ்பெக்டர்  கண்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து ராஜாவும் இறங்கினான்.

பரமசிவத்தைக் கண்டதும், ஆச்சரியத்துடன், “குட் ஈவினிங் பரமசிவம் சார்! என்ன இது திடீர் விசிட்?” என்றார் கண்ணன்.

“அதை நானல்லவா கேட்கவேண்டும்? இதுதான் என் மகள் வீடு! உள்ளே வாருங்கள்” என்று அழைத்துப்போனார் பரமசிவம்.

செல்வம் இன்னும் ‘காலில்’ இருந்தான். அறைக்கதவு திறக்கப்படவில்லை. யமுனா சதியோடு உறங்கிக்கொண்டிருந்தாள்.

முள்மேல் நிற்பதுபோல் அமைதியற்ற மனநிலையில் ராஜா இருந்ததை  அவன் முகம் தெளிவாகக் காட்டியது.   

(தொடரும்) 


இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

19 கருத்துகள்:

 1. பதவி உயர்வு விளக்கம் அருமை...

  நெக்லஸ் விசயம் மர்மமாய் தொடர்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையே மர்ம அனுபவங்களால் நிறைந்ததுதானே நண்பரே!

   நீக்கு
 2. கொரோநாவை விட அதிக மன அழுத்தத்தை தருகிறது.

  பதிலளிநீக்கு
 3. சுவாரஸ்யம் தொய்வின்றித் தொடர்கிறது..ஆவலுடன் தொடர்கிறோம்..

  பதிலளிநீக்கு
 4. பதவி உயர்வு என்றால் சுகமான சுமை என்று உன் தாத்தா சொல்வார். முதலில் சுமக்கத் தயாராகவேண்டும். அதுவே பழகிப்போய் சுகமாக முடியும். ஆனால் எல்லாரிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருங்கிய நண்பர்களே ஆனாலும் ஆராயாமல் நம்பிவிடக் கூடாது. அதே சமயம் கண்மூடித்தனமாக மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவும் கூடாது. ஏனென்றால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நம்மை ஆபத்தில் சிக்கவைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று தன் அனுபவ அறிவைச் செல்வத்துடன் பரிமாறிக்கொண்டார்.//

  அருமையான அனுபவத்தில் தோய்ந்த வரிகள். சந்திரன் உதித்ததும் புதுத் திருப்பங்களுக்கான எதிர்பார்ப்புகளும் உதிக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 5. ஓ அப்ப செல்வம் இல்லையா ? ...நெக்லஸ் மர்மம் தொடர்கிறதே..

  அதை அறிய நாங்களும் தொடர்கிறோம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதாம்மா அவர்களே! கொஞ்ச நாளைக்கு மர்மம் தொடரட்டுமே!

   நீக்கு
 6. ஒரு கதையை நிஜமாகவே நடந்த மாதிரி நம்ப வைக்கிற திறமை உங்களிடம் எக்கச்சக்கமாக மண்டிக் கிடக்கிறது.. எந்த ஓட்டையும் விழாமல் பார்த்துக் கொள்வது ஒருபக்கம், அப்படியே ஓட்டை இயல்பாகவே ஏற்படும் பட்சத்தில் சமத்காரமாக அதை அடைத்து விடுவது இன்னொரு பக்கம் என்று கதை கொடி கட்டிப் பறக்கிறது.

  இப்பொழுதும் சொல்கிறேன். கதை என்ற ஒன்று பொருட்டாகவே தெரியவில்லை. இப்படின்னா இப்படி அப்படின்னா அப்படி என்று எப்படியாவது புனைந்து கொள்ளலாம். ஆக அதுவல்ல விஷயம். அதை எப்படி சமத்காரமாகச் சொல்கிறீர்கள் என்பது விஷயமாகிப் போகிறது. வெல்டன்! தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர் கருத்து சொல்வதே எனக்குக் கிடைத்த பரிசாகக் கொள்கிறேன். வாரப் பத்திரிகைகளில் எழுதும் கதைகளுக்கும் வலைப்பதிவில் எழுதும் கதைகளுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை இந்தத் தொடரை எழுதும்போதுதான் நான் உண்ர்கிறேன்.
   அதைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி!

   நீக்கு
 7. Well written. You have shared your experience as a banker. Well done.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! நீங்கள் தமிழிலேயே எழுத முயற்சிக்கலாமே!

   நீக்கு
 8. இவ்வளவு சிறப்பான நடையில் எங்களை அழைத்துச் செல்கின்ற நீங்கள் அவ்வப்போது காணாமல் போய்விடுவதுதான் எங்களுக்குக் குறையாக உள்ளது. இது தொடரட்டும்.......

  பதிலளிநீக்கு
 9. "யமுனா அதற்குள் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்தவள், கையில் இரண்டு தம்ளர்களில் சேமியா பாயசத்துடன் வந்தாள். “இது புரொமோஷன் பாயசம் -அட்வான்ஸாக!” என்றாள்."

  யமுனாவிற்க்கு எப்படி தெரியும், அவள் கணவருக்கு பிரயோஜனம் கிடைத்தது விட்டது என்று? எப்படி அட்வான்சாக பாயசம் செய்தாள்?


  S.PARASURAMAN
  ANNA NAGAR

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி, மனைவிகளின் உள்ளுணர்வு முக்கியமான சமயங்களில் வேகமாகச் செயல்படுவதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் தங்கள் துணைவியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! ஆனால் பின்விளைவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும்.

   நீக்கு
 10. "இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆச்சியம்மாவுக்கு எப்படியாவது மூக்கில் வேர்த்துவிடும். இலேசாகத் திறந்திருந்த வாசற்கதவின்மேல் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளேவந்தார். அவர் கையில் ஒரு கடித உறை இருந்தது. இருவரும் பாயசம் குடிப்பதைக்கண்டு வியப்போடு பார்த்தார். யமுனா அவருக்கும் ஒரு தம்ளரில் கொடுத்தாள்."

  கொரோனா வின் போது வெளி ஆட்களை வீட்டின் உள்ளே விடலாமா?

  இதில் பாயசம் வேறா?������

  S.PARASURAMAN ANNA NAGAR.

  பதிலளிநீக்கு
 11. கதையை நகர்த்த நெக்லஸ் ஒரு கருவிதான் இல்ல்சையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை வேறு திசையில் போயிருக்கவேண்டியது, பாழாய்ப்போன நெக்லஸ் வந்து உயிரை வாங்குகிறது! எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது!

   நீக்கு