பொன்னித்தீவு-13
-இராய செல்லப்பா
இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்
(13) சந்திரன்
சந்திரன்
அகிலாவிடமிருந்து போன் வருமென்று சந்திரனுக்குத் தெரியும்.
உண்மையில் ஆச்சியிடமிருந்து மிஸ்டு கால்கள் இருந்தபோதே அவனுக்குப் புரிந்துவிட்டது,
தன்னைத் தேடுகிறார்கள் என்று.
இது அவனாக விரும்பி மாட்டிக்கொண்ட சிக்கல் அல்ல. அவன்மேல்
திணிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதிலிருந்து காயம்படாமல் வெளிவருவது முடியக்கூடிய காரியமாக
அவனுக்குத் தோன்றவில்லை. தன்னுடைய எதிர்காலமே ஆபத்தில் இருப்பது புரிந்தது.
அப்படி அன்று என்னதான் நடந்தது என்று மனதிற்குள் அசைபோட்டான்.
மார்ச் முதல் வாரத்திலேயே பாடங்களை முடித்துவிட்டார்கள்.
ஏப்ரலில் வரும் செமெஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டுமானால் இப்போதிலிருந்தே
படித்தாகவேண்டும். ஆனால் சில என்ஜினீயரிங் பாடங்கள் எளிதில் புரிகிற மாதிரியில்லை.
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆர்வமில்லாத நிலை. பாவம், அவர்கள் கையெழுத்துப்
போடுவது ஒரு சம்பளம். கணக்கில் கிரெடிட் ஆவதோ அதில் பாதியளவுதானே!
மொட்டை மாடியில் நடந்துகொண்டே படித்தால் கடினமான பாடமும்
மூளையில் நன்றாகப் பதிந்துவிடுமென்று நண்பர்கள்
சொன்னது ஒரு நம்பிக்கைக் கீற்றாக அவன் கண்ணில்
தெரிந்தது.
காலை ஆறுமணிக்கே மெயிண்ட்டனன்ஸ் ஆபீசில் இருந்து சாவியைப்
பெற்றுக்கொண்டு, மொட்டை மாடியின் கதவைத் திறந்தான். தனது நோட்ஸ்களையும், சில தடிமனான என்ஜினியரிங் புத்தகங்களையும் கையிலெடுத்துக்கொண்டு
வந்திருந்தான். முதலில் ‘டெக்ஸ்ட் புக் -பிறகு நோட்ஸ்’ என்ற வரிசைப்படி நடந்துகொண்டே
படிக்கலானான்.
கிழக்கில் உதித்த இளஞ்சூரியன் இன்னும் கடுமை காட்டத் தொடங்கவில்லை. சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த
கொன்றை மரங்கள் இலேசான காற்றைத் தூவிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமமின்றி மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டான்
சந்திரன். நண்பர்கள் சொன்னபடியே பாடங்கள் எளிதாக மனதில் ஏறத் தொடங்கிவிட்டன. அடடா,
இவ்வளவுநாள் இந்த இரகசியம் தெரியாமல் போய்விட்டதே!
ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவனுக்குப் பின்னால்
‘தொப்தொப்’பென்று ஐந்தாறு குரங்குகள் கொன்றை
மரங்களில் இருந்து குதித்தன. ஆண்குரங்கு, பெண்
குரங்கு, குட்டிக்குரங்குகள் என்று ஒரு குடும்பமே அங்கிருந்தது. சந்திரனுக்கு நடுக்கமெடுத்தது.
தனியொருவனாக அந்த வானரப்படையை எப்படிச் சமாளிப்பதென்று அவனுக்கு விளங்கவில்லை.
திடீர் யுக்தியாகத் தன் கையிலிருந்த தடித்த புத்தகத்தைக்
கீழே போட்டான் சந்திரன். அதனால் எழுந்த ஓசையில் அதிர்ச்சியடைந்த குரங்குகள் வேகமாகப்
பின்வாங்கி ஓடின. அவர்கள் பற்றிக்கொண்ட கொன்றை மரத்தின் கிளைகள் ஆவேசமாக அசைந்தன.
அதற்குமேல் மொட்டைமாடியில் நிற்பதற்கு சந்திரனுக்குத்
துணிச்சல் இருக்கவில்லை. மொட்டை மாடியில் படிக்கச்
சொன்ன நண்பர்கள், குரங்குகளைப் பற்றி சொல்லாதது ஏன் என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது.
ஒருவேளை அவர்கள் குடியிருப்புகளை குரங்குகள் ஆதரிப்பதில்லையோ என்னவோ!
விறுவிறுவென்று இறங்கினான். அவசரத்தில் மாடிக்கதவைத்
தாழ்போட மறந்துவிட்டான்.
***
வக்கீல் மாமிக்காக
மொட்டைமாடியில் வடாம் உலர்த்த வந்தாள் செம்பகம். லிஃப்டில்
நான்காம் தளத்தை அடைந்ததுமே மொட்டைமாடிக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து
அதிர்ச்சி அடைந்தாள். யாராவது ஆண்கள் இருக்கக்கூடும். தனியாகப் போவது பாதுகாப்பற்றது.
ஆகவே, வடாம் தட்டுக்களைக் கையிலிருந்து இறக்காமல்,
அதே தளத்தில் இருந்த ஆச்சியின் வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவைத்திறந்த ஆச்சியிடம்
கண்களாலேயே விஷயத்தைச் சொன்னாள்.
“இரு செம்பகம், எனக்கும் மிளகாய் வற்றல் உலர்த்தவேண்டும்.
எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று ஆச்சி தானும் இரண்டு பெரிய தட்டுகளில் மிளகாயுடன்
மொட்டை மாடிக்கு வந்தார்.
மாடியில் அப்போது யாரும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் சந்திரன் பெயர் எழுதப்பட்ட ஒரு நோட்டு அங்கே இருந்ததால் அவன் வந்துபோயிருக்கவேண்டும்
என்று நினைத்தார் ஆச்சி. அதைக் கையில் எடுத்துக்கொண்டார்.
அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த தட்டுகளை நன்றாக
வெயில் வரும் இடமாகப் பார்த்து வைத்தார்கள்.
“சரி, நீ போகலாம் செம்பகம்! நான் கதவைச் சாத்திக்கொண்டு
போகிறேன். நாலு மணிக்கு வா, அதற்குள் இதெல்லாம் நன்றாக உலர்ந்துவிடும்” என்றார் ஆச்சி.
புன்னகையின் மூலம் பதில் சொல்வதுதானே வாய்பேச முடியாத
செம்பகத்தின் வழக்கம்! ஆச்சியைப் பார்த்துப் புன்னகைத்தபடி கதவுப்புறமாகத் திரும்பினாள்.
அப்போது அவள் கண்ணில் பட்டது, சுற்றுத் தொலைவில்
சிதறிக்கிடந்த பல பொருட்கள். குரங்குகளின் வேலை. ஆச்சியிடம் காட்டினாள்.
தேங்காய்மூடிகள், மேகி நூடுல்ஸ் பேக்குகள், சில ஸ்பூன்கள்,
நெய் வைத்த கிண்ணங்கள், ஒரு கிழிந்த துணிப்பையும்
அதிலிருந்து சிதறிக்கிடந்த வேர்க்கடலைகளும்
….. என்று என்னென்னவோ தென்பட்டன. அவற்றைத்தாண்டி அட்டைப்பெட்டி ஒன்றும் கிடந்தது.
அதைக் கொண்டுவந்து ஆச்சியிடம் கொடுத்தாள் செம்பகம். அது ஒரு நகைப்பெட்டி என்பதும்,
நகைக்கடையின் பெயர் அதன்மீது எழுதப்பட்டிருப்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆச்சி விஷயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “பாருடி செம்பகம்,
இந்தக் குரங்குகள் பண்ணும் அட்டகாசத்தை! ஊரில் இருக்கும் குப்பையை எல்லாம் இங்கே கொண்டுவந்து
கொட்டிவிட்டது! நான்தான் இதையெல்லாம் க்ளீன் பண்ணவேண்டும். தலைவிதி!” என்று அலுத்துக்கொண்டார்.
வழக்கம்போல் புன்னகையுடன் செம்பகம் லிஃப்டை நோக்கி
நடந்தாள்.
அந்த அட்டைப் பெட்டியை மட்டும் தூக்கியெறிந்துவிட்டு, உள்ளிருந்த நகையை
-அது ஒரு நெக்லஸ்- புடவைக்குள் மறைத்துக்கொண்டு மாடிக்கதவைச் சாத்தினார் ஆச்சி.
பிறகு சந்திரனுக்கு போன் செய்தார்.
***
“ஆச்சியம்மா, என்னை வம்பு வழக்கில் மாட்டிவிட மாட்டீர்களே?”
என்று தயக்கமும் பயமுமாகக் கேட்டான் சந்திரன்.
ஆச்சியின் கையில் ஒரு நெக்லஸ் இருந்தது. “இதோ பார்
சந்திரா! இந்த நகையை ஒரு குரங்கு எடுத்துவந்து மொட்டை மாடியில் போட்டது என்றால் யாராவது
நம்புவார்களா?”
மாட்டார்கள் என்றுதான் சந்திரனுக்குத் தோன்றியது.
“ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் இது யாருடையது
தெரியுமா?”
“உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும் என்றுதான் நினைக்கிறேன். இதுமாதிரி ஒரு நெக்லஸை யமுனாவிடம் பார்த்திருக்கிறேன்.
அது மட்டுமல்ல, அவள்தான் நகைகள் விஷயத்தில் எப்போதுமே அலட்சியமாக இருப்பாள்!”
சந்திரன் துள்ளிக் குதித்தான். “இப்பவே நான் போய் இந்த
நெக்லஸை யமுனா அக்காவிடம் கொடுத்துவிடுகிறேன். அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா?”
அவனை ஏளனமாகப் பார்த்தார் ஆச்சி. “முட்டாள்தனமாகப்
பேசாதே! இந்த நெக்லஸ் காணாமல் போனதே அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ! அதனால் இதைக் கொண்டுபோய்க்
கொடுத்தால் உன்னைத்தான் திருடன் என்று நினைத்துக்கொள்வாள். அது மட்டுமல்ல, வேறு என்னென்ன
ஐட்டம்களைத் திருடினாய் என்று கேள்விவரும்!
உன்னை போலீஸ் பிடித்துக்கொண்டுபோகும்!”
“ஏன்? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்றான்
சந்திரன் வெகுளியாக. “நீங்கள்தானே சொன்னீர்கள்,
குரங்குதான் தூக்கிக்கொண்டுபோட்டதென்று.”
“ஆனால் குரங்கை ஜெயிலில் போட முடியாதே! ஆகவேதான் உன்னைப்
பிடிப்பார்கள்” என்று சிரித்தார் ஆச்சி.
சந்திரனுக்குப் பயம்போய், பைத்தியம் பிடிக்கும்போல் ஆகிவிட்டது. “ஆச்சியம்மா,
நீங்கள் இதை என்னவாவது செய்துகொள்ளுங்கள். நான் போகிறேன்” என்று கிளம்ப முற்பட்டான்.
“அவ்வளவு எளிதாக உன்னைப் போக விடுவேனா?” என்றார் ஆச்சி.
“நீ போய்விட்டாலும் என்றாவது ஒருநாள் யமுனா நகை காணாமல் போனதைக் கண்டுபிடிக்கும்போது
உன்னைத்தான் பிடிப்பார்கள் என்பதை மறந்துவிடாதே! நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன்!”
என்று கோபத்துடன் கத்தினார்.
“அப்படியானால் நான் என்னதான் செய்யவேண்டும்?” என்று
விரக்தியுடன் கேட்டான் சந்திரன்.
பீரோவில் இருந்து தனது லாக்கர் சாவியை எடுத்தார் ஆச்சி.
“நமது குடியிருப்பிலேயே லாக்கர் சர்வீஸ் இருப்பது
தெரியுமல்லவா? இதோ இந்த நகையை நீயே போய் எனது லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டு சாவியைக் கொடு” என்றார். நெக்லஸை ஒரு புதிய அட்டைப்பெட்டியில்
வைத்துக்கொடுத்தார்.
பிறகு லாக்கர் சர்வீஸ் மேனேஜருக்குப் போன் செய்தார்.
தான் நேரில் வரமுடியாததால் தன் மகனை அனுப்புவதாகவும் அவனை அனுமதிக்கும்படியும் கூறினார்.
அந்தக் குடியிருப்பிலுள்ளவர்களுக்கு மட்டுமேயான லாக்கர் சர்வீஸ் என்பதால் இம்மாதிரி
கோரிக்கைகளை மேனேஜரால் மறுக்கமுடிவதில்லை. சரியென்றார்.
கால்மணி நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு ஆச்சியிடம்
சாவியைத் திருப்பிக்கொடுத்தான் சந்திரன்.
ஆனால் நெக்லஸ் பெட்டியை அவன் உள்ளே வைக்காமல் தன்னிடமே
வைத்துக்கொண்டது ஆச்சிக்குத் தெரியவா போகிறது?
ஆனால் அகிலாவுக்குத் தெரிந்துவிட்டது. நெக்லஸை அவளிடம்தானே
கொடுத்தான் சந்திரன்!
(தொடரும்)
நெக்லஸ்-யை மறைத்தது ஆச்சி-யா...? செம்பகம்-மா...? சிறிது குழப்பம் இருக்கே...!
பதிலளிநீக்குவிரைவில் குழப்பம் தெளிந்துவிடும்!
நீக்குவடாம் என்றால் குரங்குகளுக்கு அலர்ஜி, பக்கத்திலேயே நெருங்காது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்களும் அதை கன்பர்ம் பண்ணியதில் கேள்விப்பட்டது ஊர்ஜிதமாயிற்று.
பதிலளிநீக்குஇந்தத் தடவை லாக்கர் சர்வீஸ் பற்றி. லாக்கர் சர்வீஸ் மேனேஜரிடம் இன்னொரு சாவி இருக்கும் போலிருக்கு. இருந்தாலும் அதற்கான ரிஜிஸ்தரில் கையெழுத்து போட்ட பின் தான் லாக்கரை கையாள அனுமதி என்று நினைக்கிறேன். அடுத்த அத்தியாயத்திற்கு ஏதோ நம்மாலான உதவி.
ஐயா....என்னைத் தயவுசெய்து திசை திருப்பி விடாதீர்கள்! ...நன்றி!
நீக்குஇதுவா, அதுவா என்று பல திசைகளில் வாசகர்களை யூகிக்க வைப்பது தானே துப்பறியும் கதைகளுக்கு அழகு?..
நீக்குஒரே தலையை சுற்றுகிறது. யார்தான் குற்றவாளி? சந்திரனுன் இல்லை போல் இருக்கிறதே? ஓரு வேளை ஆச்சியா? பலே...ஆச்சி..
பதிலளிநீக்குஒரே தலையை சுற்றுகிறது. யார்தான் குற்றவாளி? சந்திரனுன் இல்லை போல் இருக்கிறதே? ஓரு வேளை ஆச்சியா? பலே...ஆச்சி..
பதிலளிநீக்குS.PARASURAMAN ANNA NAGAR
இன்னும் சிலநாள் பொறுங்கள்... பல்னாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போய்விடுவான்?
நீக்குகதை எழுதுவதில் சூரராக இருக்கிறீர்களே ������
பதிலளிநீக்குஅப்படியா? அப்படியா? மிக்க நன்றி நண்பரே!
நீக்குதொடர்கிறேன். வேறு வழியில்லையே! :)
பதிலளிநீக்குஆம், வேறு வழி இல்லைதான்! நன்றி நண்பரே!
நீக்குஒரே தலையை சுற்றுகிறது. யார்தான் குற்றவாளி? சந்திரனுன் இல்லை போல் இருக்கிறதே? ஓரு வேளை ஆச்சியா? பலே...ஆச்சி..
பதிலளிநீக்குS.PARASURAMAN ANNA NAGAR
14 ஆம் பகுதிக்கு காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குS.PARASURAMAN ANNA NAGAR
ஆச்சி ரொம்பவே வில்லங்கமாக இருக்கிறாரே. அவர் சந்திரனை தன் மகன் என்று சொல்லி அனுப்பினால் குடியிருப்பில் உள்ளவர்களுக்குத் தெரியாதா சந்திரன் ஆச்சியின் மகன் இல்லை என்று?! குழப்புதே. பரவாயில்லையே அபார்ட்மென்டில் லாக்கர் வசதி எல்லாம் உண்டா? புதிய விஷயம்.
பதிலளிநீக்குகீதா
இது என்னங்க கேள்வி? ஆச்சிக்குத்தான் அந்தக் குடியிருப்பில் மிகுந்த செல்வாக்கு உண்டு என்று சொல்லியிருந்தேனே! அவங்க ஊர்க்காரர்கள்தான் அங்கே அதிகம்..... நிறைய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லாக்கர் வசதி இருக்கிறதே! (எங்கள் குடியிருப்பிலும் உண்டு. ஆனால் கதை நடப்பது எங்கள் குடியிருப்பில் அல்ல!)
நீக்குஆச்சி வில்லியாவார் என்று எதிர்பார்க்கவில்லை. வில்லிதானா என்றும் சந்தேகமாக இருக்கிறது!
பதிலளிநீக்குதன்னை வில்லியாக்கவேண்டாம் என்றுதான் அவர் என்னிடம் மன்றாடுகிறார். பார்க்கலாம். கதையின் போக்கு என்கையில் இல்லையே! சூழ் நிலைகளின் கையில் அல்லவா இருக்கிறது!
நீக்குஇவ்வளவு யதார்த்தங்களையும், சுறுசுறுப்பையும் வைத்துக்கொண்டு பல நாள்கள் சும்மாவே இருந்துவிட்டீர்களே. எப்படி?
பதிலளிநீக்குசும்மா இருந்துதான் பார்க்கலாமே என்று ஓர் ஆசை! (சும்மா சொன்னேன்!)
நீக்குஎனக்குக் காலையில் ஐந்து மணி முதல் எட்டு மணி வரையும் இரவில் ஒன்பது முதல் பன்னிரண்டு வரையும்தான் எழுத வரும். இந்த இரு பருவகாலங்களும் தொடர்ந்து பல நாட்கள் என்னுடன் இணக்கமில்லாமல் போய்விட்டன. அதுதான் காரணம். (ஏழரை நாட்டு சனி நடக்கிறதாமே தனுசு ராசிக்கு!)
சீரியலுக்கே உரிய அசத்தல் திருப்பங்கள்...அதுவும் ஒப்புக் கொள்ளும்படி யதார்தமாகவே...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குஉண்மையில் ஒரு வெப் சீரிஸுக்காகத்தான் இந்தக் கதை தயாராகி வருகிறது. கொரோனாம்பிகை தடை செய்யாமல் இருக்கவேண்டும். பார்க்கலாம்!
நீக்கு