வெள்ளி, மே 15, 2020

பொன்னித்தீவு -8


பொன்னித்தீவு -8

     -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(8) ராஜா ராஜா

பரமசிவமும் ராஜாவும் அந்த மார்வாடிக் கடையை அடைந்தபோது அங்கு கூட்டமே இல்லை. கம்மலை அடகுவைக்க ஒரு பெண்மணியும், அடகுவைத்த கொலுசை மீட்டுக்கொள்ள இன்னொரு பெண்மணியாக இரண்டே பேர்தான் இருந்தனர். மார்வாடியின் பெயர் நீளமாக இருந்தது. அதன் பாதி பாரஸ்மல் என்றது.

பாரஸ்மல்  அழகான தமிழில் பேசினார். “தங்கசாலைத் தெருவில்தான் மூன்று தலைமுறையாக வசிக்கிறோம். என் தகப்பனார் மு.வ.விடம் தமிழ் படித்தவர். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. நான் பொற்கோவிடம் படித்தவன். நானும் பட்டம் வாங்கவேண்டுமென்று கவலைப்படவில்லை. ஆனால் நன்றாகத் தமிழ் பேச வந்திருப்பதே பெரிய இலாபம் தானே!” என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர்களை உட்காரச் சொன்னார்.

அதிக எடையில்லாத அலுமினிய ஸ்டூலில் சற்றே பயத்துடன் அமர்ந்தார் பரமசிவம். ராஜா மட்டும் நின்றுகொண்டான்.

அந்தப் பெண்கள் இருவரையும் அவசர அவசரமாக முடித்து அனுப்பிவிட்டு,  ராஜாவின் பக்கம் திரும்பி, “வணக்கம் தம்பி! என்ன விசேஷம்? திரும்பவும் பழைய நகை ஏதாவது வேண்டியிருக்கிறதா? கவலை வேண்டாம். எல்லாம் கிடைக்கும்” என்றார் பாரஸ்மல். “நாலு ஜோடி வளையல் வந்திருக்கிறது. பார்க்கிறீர்களா?”

ராஜா புன்முறுவல் பூத்தான். பரமசிவத்திடம், “சார் வசிக்கும் குடியிருப்பில் எங்கள் கம்பெனிதான் பிளாஸ்டிக் அகற்றும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ரொம்ப நல்ல குடியிருப்பு” என்றான்.

“உங்கள் சந்தேகம் என்ன என்பதைத் தெரிவித்தால் பாரஸ்மால் சார் உதவி செய்யாமல் இருக்கமாட்டார்” என்று அவர்பக்கம் திரும்பினான்.

பாரஸ்மல் தன் இருக்கையிலிருந்து விசுக்கென்று எழுந்தார். “சந்தேகமா? போலீசில் இருந்து வந்திருக்கீர்களா? ராஜா, இவர் யார்?” என்றார். “பதினைந்து வருஷமாகத் தொழில்செய்கிறேன். என்மீது ஒரு கரும்புள்ளி கிடையாது தெரியுமா?” 

திருட்டு நகைகளை போலீசுக்குத் தெரிந்தும்  தெரியாமலும் வாங்கி விற்றுக்கொண்டிருந்தவர்தான் அவர். அது விஷயமாக விசாரணை செய்கிறார்களோ என்று கவலைப்பட்டார். அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ள முடியுமா!

ராஜா அவர் கைகளை விரைந்து பற்றிக்கொண்டான். “சந்தேகம் உங்கள்மீது அல்ல சார், என் மீது! அந்த நெக்லஸை வாங்கினேனே, அதைப் பற்றித்தான் பரமசிவம் சார் பேச வந்திருக்கிறார்!”

பாரஸ்மல்லுக்கு அப்போதுதான் மூச்சுவந்தது.

பரமசிவத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் பணிவாகக்  கேட்டுத்தெரிந்து கொண்டார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் தன்  மைத்துனரின்  பிள்ளைக்கு  வட்டிக்கடை வைக்க நல்ல இடம் கிடைக்குமா என்றும் விசாரித்தார். யாருக்கோ போன் செய்து இரண்டு ஸ்டிராங் காப்பி கொண்டுவரச் சொன்னார். பிறகு உள்ளே போனவர் “கேன்சல்டு டாக்குமெண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டிருந்த குண்டான பாக்ஸ்ஃபைல் ஒன்றை எடுத்துவந்து மேஜையில் வைத்தார்.

“தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டக்கென்று சொல்லமுடியும் சார். அவ்வளவு ஞாபகசக்தி எனக்கு! அதிலும் ராஜா மாதிரி நல்ல ஆசாமிங்க விஷயம்னா இன்னும் நல்லாவே நினைவிருக்கும்!” என்றார், ஃபைலுக்குள்ளிருந்து சில பேப்பர்களை வெளியே எடுத்துக் காட்டினார்.

“இதோ பாருங்கள்.  இந்தத் தேதியில் ...ராஜாவுக்கு ...இத்தனை கிராம்  எடையுள்ள ஒரு தங்க நெக்லஸை ..இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ததற்கான எங்கள் கடையின் பில்! ராஜாவின் கையெழுத்தையும் பாருங்கள்!” என்றார்.

பரமசிவம் அந்தப்  பேப்பர்களைப் புரட்டினார். பாரஸ்மல்  சொன்னது  உண்மையே. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாகச் செலுத்தி ஒரு நெக்லஸை ராஜா வாங்கியிருக்கிறான். சந்தேகமில்லை.

“மிஸ்டர் பாரஸ்மல்! என்னுடைய ஒரே கேள்வி, இந்த நெக்லஸ் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான். யாரோ திருடிவந்து உங்களிடம் விற்றிருக்கலாம் அல்லவா?” என்று அமைதியாகக் கேட்டார் பரமசிவம்.

கலகலவென்று சிரித்தார் பாரஸ்மல். “அவ்வளவு சுலபமாகத் திருட்டு நகையை வாங்கிவிடுவோமா சார்? ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே அவன் யோக்கியனா  இல்லை  திருடனா என்பதை எங்களால் கணித்துவிடமுடியும். எங்கள் பரம்பரை இரத்தத்தில் கலந்திருக்கும் சக்தி!” என்றார் பெருமிதத்துடன்.  
   
பிறகு சற்றே யோசித்தவராக, “ ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்த நெக்லஸை ஒருவர் அடகுவைத்தார். அவருடைய ஆதார் கார்டு ஜெராக்ஸ் கூட இருக்கிறது. அக்காவின் நகை என்று சொன்னார். அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் பணம் வேண்டியிருப்பதாகச் சொன்னார். கொடுத்தேன். ஒருவாரம் கழித்து, மேலும் பணம் வேண்டியிருப்பதால் நகையை நானே வாங்கிக்கொண்டு மீதிப்பணம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு நிறைய செலவாகிவிட்டதாக வருத்தப்பட்டார். ரொம்பநேரம் யோசனைசெய்த பிறகுதான் அடகுபோக மீதி பணத்தைக்கொடுத்து செட்டில் செய்தேன். அதற்கான ரசீதுகளை வேண்டுமானாலும் காட்டுகிறேன்” என்றார்.

பிறகு உள்ளேபோய் பெரிய ரிஜிஸ்தர் ஒன்றைக் கொண்டுவந்தார். தேதிவாரியாக அடகு பிடித்த நகைகளின் கணக்குப் புத்தகம் அது. குறிப்பிட்ட தேதியில் அந்த நபர் அடகுவைத்துப் பணம் பெற்றுக்கொண்டதற்குக்  கையொப்பம் இருந்தது. ஆதார் நம்பரும் இருந்தது. அதன் கீழ்ப்பகுதியில் மேற்படி நகையை இன்று மீட்டுக்கொண்டேன்  என்று அவரே ஒரு வாரத்திற்குப் பிறகு கையொப்பம் இட்டிருந்தார். அதன் அருகே குறுக்குவெட்டாக, சிவப்பு மசியில், நகையின் அன்றைய மதிப்பும், அதில் கடனும் வட்டியும் போக மீதி எவ்வளவு என்றும் பாரஸ்மல் குறித்திருந்தார். அந்த மீதிப்பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கு அதே நபர் மீண்டும் கையொப்பம் இட்டிருந்தார்.

ஆக, நடந்தது இதுதான்: யாரோ ஒரு நபர் நெக்லஸை பாரஸ்மல் கடையில் விற்றுப் பணமாக்கியிருக்கிறார். அந்த நெக்லஸைத்தான் பிறகு ராஜா முழுப்பணமும் கொடுத்து வாங்கியிருக்கிறார். ராஜாமீதும் தவறில்லை. பாரஸ்மல் மீதும் தவறில்லை.

நகையை அடகுவைத்தவன் மீதுதான் தவறு. அவனைக் கண்டுபிடித்தாகவேண்டும். அவன்தான் யமுனாவின் வீட்டிலிருந்து திருடியிருக்கிறான்.

ரிஜிஸ்டரில் இருந்த அந்நபருடைய முகவரி, சென்னையில் வெகுதூரத்தில் இருந்தது. அதைக் குறித்துக்கொண்டார். பிறகு ஆதார் நம்பரையும் பார்த்து எழுதிக்கொண்டார். “இந்த ஆளைக் கொண்டுவந்தால் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?” என்றார்.

“கட்டாயம் முடியும். ஒருமுறை பார்த்தவனை நான் மறக்கவே மாட்டேன்!” என்றார். “போலீஸ் கீலீஸ் என்று போக மாட்டீர்களே?” என்று தயக்கத்துடன் கேட்டார்.         

“சேச்சே! எங்களுக்கு நகைதான் வேண்டும். அதைத்தான் ராஜா வாங்கிக்கொண்டு விட்டாரே! இருந்தாலும் இது எங்கள் வீட்டு நகைதான் என்பதை  அந்த நபர்தானே உறுதிசெய்ய வேண்டும்?  உங்கள் உதவிக்கு நன்றி!”  
என்று கிளம்பினார் பரமசிவம். அதுவரையில் பாரஸ்மல் ஆர்டர் செய்த ஸ்டிராங் காப்பி வந்துசேரவில்லை. 

“நல்லது ராஜா, உங்களை வீட்டில் இறக்கிவிட்டு நான் போகிறேன். உங்களைப்  பொறுத்தவரை தப்பு ஒன்றும் செய்யவில்லை. நிம்மதியாக இருங்கள். அந்த ஆசாமியை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்” என்றார்.

ராஜாவோ தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தான்.

வீட்டிற்கு வந்த பரமசிவம், “பார்வதி, சூடாக ஒரு காப்பி கொடு” என்று காற்றாடியை முழுதாக ஓடவிட்டார்.

“போன வேலை என்ன ஆயிற்று அப்பா?” என்றாள் யமுனா, சோபாவில் சாய்ந்தபடியே.

அதைக் கவனிக்காதவராய்,  “யமுனா, நீங்களெல்லாம் ஆதார் கார்டு வாங்கிவிட்டீர்களா?” என்று தெரியாதவர்போல் கேட்டார்.

“என்னப்பா இப்போது கேட்கிறீர்கள்? அதெல்லாம் மூன்று வருஷம் முன்பே வாங்கியாயிற்றே!” என்று தன் கைப்பையில் இருந்து இரண்டு ஆதார் கார்டுகளை எடுத்தாள்.               

அந்த இரண்டில் ஒன்று, அடகுவைத்தவனின் கார்டு நம்பருடன் ஒத்துப்போவதைக் கண்டு பரமசிவம் திகைத்துப்போனார்.

அதாவது அவருடைய மருமகன் செல்வம்தான் அந்த நகையை அடகுவைத்திருக்கிறான்! பிறகு முழுதுமாக விற்றுவிட்டிருக்கிறான்!அப்படியும் நடந்திருக்குமா? செல்வம் அப்படிச் செய்யக்கூடியவனா?
குழப்பத்துடன் யமுனாவைப் பார்த்தார் பரமசிவம். “உடனே மாப்பிள்ளையைக் கூப்பிடு!” என்றார்.

“என்னப்பா, ஏதாவது பிரச்சினையா?” என்றாள் யமுனா.

(தொடரும்). (கன்னித்தீவு போலவா?)   

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

15 கருத்துகள்:

  1. அடகு வைத்தது யார்? ஒரு வேளை ஆதார் எண் திருடு போனதோ? பார்க்கலாம்! கன்னித்தீவு போல பொன்னித்தீவு:) தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆகா...! துப்பறியும் வேலையும் கதையில் வரும் என்று நினைக்கவேயில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொதெல்லாம் மாய மந்திரம், துப்பறிதல், வெளி நாட்டுப் பயணம் - இவை தமிழ்க் கதைகளின் இன்றியமையாத பகுதியாகிவிட்டனவே நண்பரே! எனவே இந்தக் கதையிலும் வரும்...!

      நீக்கு
  3. நானும் காத்திருகிக்
    கிரேன்

    பதிலளிநீக்கு
  4. தொடருங்கள்
    காத்திருக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  5. அடுத்த முடிச்சு போட்டாகி விட்டது!

    பதிலளிநீக்கு
  6. முன் பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன், சார்.

    பதிலளிநீக்கு
  7. முடியும்போது ஒட்டு மொத்தமாக சேர்த்து படிக்க வேண்டும்ஒவ்வொரு பகுதிக்கககாத்திருக்க கடினம்

    பதிலளிநீக்கு
  8. முந்தையப் பகுதிகளையும் வாசித்தாயிற்று சார். இப்போது செல்வம் மாட்டிக் கொண்டுவிட்டானா. தொடர்கிறோம்.

    துளசிதரன்

    சார் நான் செல்வமாகத்தான் இருக்கும்னு இரண்டு பகுதிக்கு முன்னரே ஊகித்தேன். இப்ப செல்வமுக்குச் செக் வைச்சாச்சு போல. ஆனால் இங்கும் திருப்பம் ஏற்படலாமோன்னு தோன்றுகிறது. தொடர்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வத்தைப் பற்றி உங்களுக்கு மட்டுமல்ல எனக்கேயும் கூட எதுவும் தெரியாது! பொறுத்திருந்து பார்க்கலாமே அவன் நல்லவனா கெட்டவனா என்று!

      நீக்கு
  9. பாரஸ்மல் வரவு நல்வரவு. ஸ்வாரஸ்யமும், சஸ்பென்ஸும் ஏறுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. //“தங்கசாலைத் தெருவில்தான் மூன்று தலைமுறையாக வசிக்கிறோம். என் தகப்பனார் மு.வ.விடம் தமிழ் படித்தவர். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. நான் பொற்கோவிடம் படித்தவன். நானும் பட்டம் வாங்கவேண்டுமென்று கவலைப்படவில்லை. ஆனால் நன்றாகத் தமிழ் பேச வந்திருப்பதே பெரிய இலாபம் தானே!” என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர்களை உட்காரச் சொன்னார்.//

    மனதைக் கவரும் வரிகள். எனக்கு என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக கதை முக்கியமில்லாது போய் கதை நடுவே இந்த மாதிரி இடையிட்ட செருகல்களை ரசிக்கும் ஆர்வம் கூடியிருக்கிறது. 'புதையல் தேடி அலையுக் உலகில் இதயம் தேடும்' என்ற மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்குத் தெரியாததா? கதை என்பது ஜன்னல் வைத்த ரவிக்கை மாதிரி. சிலர் ரவிக்கையை ரசிக்கலாம். சிலர் ஜன்னலை ரசிக்கலாம். சிலர் இரண்டையுமே. எப்படியோ ரசித்தால் சரி. அதுதானே எழுத்தாளன் வேண்டுவது?

      நீக்கு
  11. பெயரில்லா23 மே, 2020 அன்று 2:09 PM

    வேலியே பயிரை மேஞ்சிதா?
    செல்வம் நல்லவன் சார்...அவனைக் குற்றவாளி ஆக்காதீர்கள்.

    S.PARASURAMAN
    ANNA NAGAR.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கலாம். ஆனால் அவன் எனக்குத் தெரியாமல் ஏதாவது செய்திருந்தால் அதற்கான பலனை அனுபவிக்கத்தானே வேண்டும்!

      நீக்கு