ஞாயிறு, மே 10, 2020

பொன்னித்தீவு -5

பொன்னித்தீவு -5
  
  -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(5) ராஜா ராஜா

மூன்று மாதங்களுக்கு முன்பு.

“வணக்கம் சார்” என்றான்  ராஜா.

அவனைப் பார்த்தும் பாராததுபோல நெற்றியைச் சுருக்கினார் ஹரிகோபால். “யார், என்ன வேணும்?” என்றார். “உள்ளே வாங்க.”

வந்தான்.

அந்தக் குடியிருப்பின் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஹரிகோபாலை பிசினஸ் விஷயமாகப் பார்க்கவந்தானாம். பிளாஸ்டிக் குப்பைகளை வாரம் ஒருமுறை அகற்றி எடுத்துக் போகும் பிசினஸ்.

“இங்க பாருப்பா! எங்க குடியிருப்புல இதுவரை குப்பைகளைத் தரம் பிரித்துப் போடுவது கிடையாது. நூறுக்கும் மேல குடும்பங்கள் இருக்கும். நாலு மதம், பத்து மொழி, இருபது ஜாதி. யாரும் அடுத்தவன் சொல்றதைக் கேக்கிறவங்க இல்லை. எல்லாரும் வசதியானவங்க. அதனால யாருக்கும் கட்டுப்படறதில்ல. இங்க ஒனக்கு என்ன பிசினஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறே?” என்றார் ஹரிகோபால்.

“அதனால் தான் வந்திருக்கேன் சார்! எங்க கம்பெனியே சொந்த செலவில் தனித்தனிக் குப்பைக் கூண்டுகளைக் கொண்டுவந்து வைப்போம். மூணு விதமான கூண்டுகள். மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் என்று. நாங்களே வீடு வீடாகப் போய் பிட் நோட்டீசும் கொடுப்போம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸை வச்சி ஒவ்வொரு பிளாக்கிலும்  அறிமுகக் கூட்டம் போடுவோம். எல் கே ஜி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி வைப்போம்.  எல்லாம் எங்கள் செலவில்தான்….” என்றான் ராஜா.

பரவாயில்லையே, யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். அவனவனும்  தனக்கு டி.ஏ. அரியர்ஸ் ஆயிரக்கணக்கில் வரவேண்டுமென்று ஆசைப்படுவானே ஒழிய, அசோஸியேஷனுக்கு நூறு ரூபாய் கொடுப்பதென்றால் ஆயிரம் சட்டம் பேசுவான். அதனால்தான் மற்ற குடியிருப்புகளில் எளிதாகச்  செயல்படுத்தும் குப்பை பிரிப்புத் திட்டம்  ஐந்து ஆண்டுகளாகியும் இங்கு கொண்டுவரமுடியவில்லை.

“மிஸ்டர் ராஜா, உங்கள் திட்டம் நல்லதாகத் தோன்றுகிறது. முழுமையான விவரங்களை எடுத்துக்கொண்டு உங்கள் மேலதிகாரியை என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள். இலாபகரமாக இருந்தால் நிச்சயம் எடுத்துக்கொள்வோம்” என்று எழுந்தார் ஹரிகோபால்.  
 
பிறகு, “இந்தக் குடியிருப்பில் உங்களைத் தெரிந்தவர்கள் யாராவது  இருக்கிறார்களா?” என்றார்.

ராஜா முகமலர்ச்சியுடன், “வக்கீல் சார் வீட்டில்தான் என் மனைவி செம்பகம் வேலை செய்கிறாள். மற்றப்படி  எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் உங்களைச் சுற்றியுள்ள ஐந்து குடியிருப்புகளில் நாங்கள் ஒப்பந்தம் செய்து ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொழில் நடக்கிறது. அவர்களிடமும் விசாரித்துக் கொள்ளலாம்” என்றான். 

ஹரிகோபாலுக்கு முகத்தில் பெரிதாகப் புன்னகை எழுந்தது. “ஓ செம்பகத்தின் புருஷனா நீ? ரொம்ப நல்ல பெண். எங்கள் வீட்டுக்கும் எப்பவாவது கூப்பிட்டனுப்பினால் வந்து செய்வாள். அவளுக்காவே உனக்கு உதவி செய்யலாம்” என்றார்.

“ரொம்ப நன்றி சார்!” என்று அவருடைய அலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு கிளம்பினான் ராஜா.

அப்புறம் எல்லா வேலைகளும் வேகமாக நடந்தேறின. ராஜாவின் கம்பெனி அதிகாரிகள் வந்து ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.  வாரம் இரண்டுமுறை பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படும். பிற குப்பைகளை அசோசியேஷன் சொல்லும் இடத்தில் ஒவ்வொருநாளும் கொண்டுபோய்க் கொட்டப்படும். அதைச் சார்ந்த பணவிவகாரங்களும் திருப்திகரமாகப்  பேசி  முடிக்கப்பட்டது.

ராஜா அந்தக் கம்பெனியில் கீழ்மட்ட ஊழியன் தான். ஆனால் மார்க்கெட்டிங் திறமையால் கம்பெனிக்கு புதிய குடியிருப்புகளைத் தொடர்ந்து ஒப்பந்தம் செய்துகொடுத்ததால் அவனுக்கு அதிகாரியாகப்  பொறுப்பளிக்கப்போவதாகக்  கடிதம் வந்தது.

அதன்படி ராஜா ஒரு ஜே.ஈ -அதாவது ஜுனியர் எக்சிக்யூட்டிவ் ஆனான். சம்பளமும் அதிகரித்தது.  

தாய் தந்தை இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோய்விட, மனைவி ஒருத்திதான் அவனுக்குப் புகலிடம். அன்பான மனைவி. கோபம் என்பதே கிடையாது அவளிடம். தாயில்லாத பெண். ஏழைக் குடும்பம். எதிர்வீட்டில் அவள் வேலை செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட காதல், இவனுடன் திருமணத்தில் முடிந்திருந்தது.

திருமணத்திற்குப் பிறகு மூன்று வீடுகளில் வீட்டு வேலை செய்துவந்தாள். இனி ஒரே ஒரு வீட்டில் செய்தால் போதும். அல்லது அறவே நிறுத்திவிடலாம். அவனுடைய சம்பளத்தில் சிக்கனமாகக் குடும்பம் நடத்த முடியும்தான்.

“ஆனால் மாட்டேன்!” என்று தலையசைத்தாள் செம்பகம்.  “வக்கீல் மாமி ரொம்ப நல்லவர். அவர்கள் வீட்டில் தொடர்ந்து வேலை செய்யப்போகிறேன்” என்று பேப்பரில் எழுதிக் காட்டினாள். இரண்டாம் வகுப்புவரை படித்திருந்தவள், ராஜாவின் வற்புறுத்தலாலும் வக்கீல் மாமியின் ஊக்கத்தினாலும் தமிழில் நன்றாக எழுதத் தெரிந்துகொண்டிருந்தாள். அதன் வெளிப்பாடு!

ராஜா மறுக்கவில்லை.  தினமும் காலையில் அவளைக் கொண்டுவந்து விட்டு விட்டு, மாலையில் அழைத்துச் செல்வான்.

காலையில் போகும்போதே தன் வீட்டில் பூத்திருக்கும் குண்டுமல்லிப் பூக்களைக் கையோடு கொண்டுபோய், முதல் வேலையாகத் தொடுத்து வக்கீல் மாமிக்கு ஒரு முழமும், யமுனாவுக்கு ஒரு முழமும் கொடுப்பாள் செம்பகம். ஆனால் காசு வாங்கமாட்டாள்.

“ஏண்டி இப்படி காசு மேல ஆசையில்லாம இருக்கே! அப்படீன்னா ஒனக்கு எந்த  ஆசையுமே  இல்லையா?” என்று கண்டித்தார் வக்கீல் மாமி.

சிரித்துக்கொண்டே, “உண்டு! எனக்கு ஒரு நெக்லஸ் வேண்டும் என்று மட்டும்தான் ஆசை!” என்று பேப்பரில் எழுதிக் காட்டினாள் செம்பகம்.

“கள்ளி! அதானே பார்த்தேன். பொம்பளைன்னா ஆசை இல்லாம இருக்கக் கூடாதுடீ!   நாம்ப ஆசைப்பட்டாத்தான் ஆம்பளைங்க நெறய சம்பாதிக்கணும்னு முயற்சி பண்ணுவாங்க. இல்லாட்டி சோம்பேறியாத்தான் இருப்பாங்க. சரி, ராஜா கிட்ட ஒன்  ஆசைய சொன்னியா?” என்கிறார் வக்கீல் மாமி.     

வெட்கத்துடன் முகம் சிவந்தாள் செம்பகம். “போங்க மாமி!” என்று பேப்பரில் எழுதினாள்.

ராஜா முதல் சம்பளம் வாங்கிய சிலநாட்களில் ஒரு அழகான நெக்லஸுடன் வந்தான். அதை வக்கீல் மாமியிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கியபிறகே 
அணிந்துகொள்வதாக அவள் சொல்லிவிட்டாள். மறுநாள்  காலையில் அதை அணிவித்துக்கொண்டு மாமியுடன் இருவரும் படம் எடுத்துக்கொண்டனர். அதை ராஜா தன் அலைபேசியின் முகப்புப் படமாக வைத்துக்கொண்டான்.

நெக்லஸைப் பார்த்த மாமிக்கு அது பழைய டிசைன் போலத் தெரிந்தது. பாவம், மார்வாடிக் கடையிலிருந்து பழைய நகையைக் குறைந்த விலையில் வாங்கியிருப்பான் ராஜா என்று எண்ணிக்கொண்டாள். செம்பகத்தின் முகத்திலோ ஆனந்தமோ ஆனந்தம். “என் ஆசை நிறைவேறிவிட்டது” என்று பேப்பரில் எழுதிக் காட்டினாள்.

“உன் கையெழுத்து நாளுக்கு நாள் அற்புதமாக இருக்கிறது” என்றார் மாமி.

இவ்வளவு அழகையும் அடக்கத்தையும் கொடுத்த ஆண்டவன், இவளுக்குப்  பேசும் சக்தியை மட்டும் கொடுக்க மறந்துவிட்டானே என்று தனக்குள்ளாகவே புலம்பிக்கொண்டார் மாமி.

(தொடரும்)  (கன்னித்தீவு போலவா?)    
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

11 கருத்துகள்:

 1. கதையின் போக்கு ஒரு மாதிரி புரிகிறது. பார்க்கலாம் நான் நினைத்தபடி இருகிறதா என.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசை, ஆசை! அவ்வளவு சீக்கிரம் உங்களிடம் அகப்பட்டுவிடுவேன் என்று நினைக்கிறீர்களா?

   நீக்கு
 2. இன்னிக்குதான் படிச்சேன் . நல்லா இருக்கு தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 3. ஒரு வழியாக நெக்லெஸை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு கோலப்புள்ளி குத்தியாச்சு.
  இனி புள்ளிகளை இணைக்க வேண்டியது தான் பாக்கி.. இதற்கு மேலும் இன்னொரு வரிசை புள்ளி குத்தினாலும் அதற்கேற்ற மாதிரி புள்ளிகளை இணைத்து கோலத்தை பெரிசு பண்ணலாம் என்றும் தோன்றுகிறது. யதா செளகர்யம்..

  பதிலளிநீக்கு
 4. கோதை
  கதை எப்படி போகப் போகிறது என்று
  அறிய ஆவலாக உள்ளது
  இன்னும் ஒரு நாள் காத்திரூக்க
  வே. ண். டு. மே.

  பதிலளிநீக்கு
 5. அவனவனும் தனக்கு டி.ஏ. அரியர்ஸ் ஆயிரக்கணக்கில் வரவேண்டுமென்று ஆசைப்படுவானே ஒழிய, அசோஸியேஷனுக்கு நூறு ரூபாய் கொடுப்பதென்றால் ஆயிரம் சட்டம் பேசுவான்.//

  ஊடே ஊடே நகைச்சுவை பிட்கள் பளிச்சிடுகின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. பாவம் செண்பகம். பேச முடியாதவள். ��

  பதிலளிநீக்கு
 7. கொரோனாக்காலக் கதையின் முடிவுக்கு இன்னும் பல மாதங்கள்காத்திருக்க வேண்டு போல

  பதிலளிநீக்கு